http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 54

இதழ் 54
[ டிசம்பர் 18 - ஜனவரி 23, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

வல்லறிதல் வேந்தன் தொழில்
பார்க்கவும் படிக்கவும் . . .
ஒரே ஒரு கேள்வி
திரும்பிப்பார்க்கிறோம் - 26
திரிபுவன வீரனே! பாண்டியாரியே! - மூன்றாம் பாகம்
Thirumeyyam - 1
தனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 1
அவர் - ஏழாம் பாகம்
என் துன்பம் நீயும் பெறுவாய்!
கௌடல்யரின் அர்த்தசாஸ்த்ரத்தில் ஒற்றாடல்
இதழ் எண். 54 > இலக்கியச் சுவை
கௌடல்யரின் அர்த்தசாஸ்த்ரத்தில் ஒற்றாடல்
க.சங்கரநாராயணன்
கௌடல்யர் இப்படி நிலையொற்றர்களை வரையறுத்தபின் திரிந்து ஒற்றறியும் ஒற்றர்களை விளக்குகிறார்.

ஸத்ரி
அரசனால் அவசியம் ஆதரிக்கப் படவேண்டியவர்களில் (உறவினர், பரிதாபத்துக்குரியவர்கள், ஏதிலிகள் முதலியோர்) ஸாமுத்ரிகா லக்ஷணம், அங்கவித்யை (அங்கங்களைத் தொடுவதன் மூலம் குணங்களை அறிதல்), வசீகரணவித்யை, இந்த்ரஜாலம், ப்ரஹ்மசாரி முதலான ஆச்ரம தர்மங்கள், சகுன சாஸ்த்ரம், அந்தர சக்ரம் (திசைகளின் இயற்கை மாறுபாட்டை அறிவது அல்லது பறவைகளின் ஸங்கேதங்களை அறிவது), ஸம்ஸர்கவித்யை (காம சாஸ்த்ரம் அல்லது மக்களோடு பழகும் விதம்) போன்றவற்றைக் கற்றவர்களை ஸத்ரிகளாக நியமிக்க வேண்டும்.

ஸத்ரி என்னும் ஒற்றன் திரியும் ஒற்றர்களில் முதலானவன். அரசனுக்கு நம்பிக்கைக்குத் தகுந்தவன். அரசனது தினசரி அலுவல்களை ராஜப்ரணிதி என்னும் அத்யாயத்தில் குறிப்பிடும் கௌடல்யர் காலையில் ஸந்தி உபாஸனையை முடித்தவுடன் முதலில் ஒற்றர்களைக் காணவேண்டும் எனக் குறிப்பிடுகிறார். மற்றைய ஒற்றர்களைக் காட்டிலும் அரசனோடு நெருங்கிய ஸத்ரிகளே அங்கு ஒற்றர்கள் என்னும் சொல்லால் குறிப்பிடப் படுகின்றனர் எனக் கொள்ளலாம். மேலும் திரியும் ஒற்றர்களில் பலவிதமான வேடங்களை அணிந்து ஒற்றறிவது ஸத்ரியேயாகும். ஆகவேதான் இத்தனை விதமான கலைகளையும் அவன் அறிந்திருக்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறார். முக்கியமாக ஆச்ரமதர்மங்களை அறிந்து ப்ரஹ்மசாரி அல்லது துறவியின் வேடமணிந்து ஒற்றறிவது பற்றி வடமொழிக் காவியங்கள் குறிப்பிடுகின்றன(கிராதார்ஜுனீயம்). ஆகவே பிற ஒற்றர்களைக் காட்டிலும் முக்கியமானவன் ஸத்ரியே எனலாம்.

தீக்ஷ்ணன்
நகர்ப்புறங்களில் சூரர்களாகவும், தன்னைப் பற்றி எண்ணாமலும், பணத்திற்காக யானையோடும் பாம்போடும் (அல்லது புலியோடும்) மோதுபவர்கள் தீக்ஷ்ணர்கள் எனப் படுவர். தீக்ஷ்ணன் என்றால் (வலிமையில்) கூர்மையானவன் என்று பொருள். இத்தகைய தீக்ஷ்ணர்களைப் பயன்படுத்த வேண்டிய முறை பற்றி ஐந்தாம் அதிகரணத்தில் கௌடல்யர் விளக்குகிறார். அரசருக்கு த்ரோஹம் செய்பவர்களை மறைவில் தண்டிக்க இத்தகைய தீக்ஷ்ணர்கள் பயன்படுத்தப் படுகின்றனர்.

ரஸதன்
உறவினர்களிடத்தும் அன்பற்றவன், க்ரூரமானவன், சோம்பல்தனம் உடையவன் ரஸதன் எனப்படுவான். ரஸதன் என்றால் விஷத்தைக் கொடுப்பவன் என்று பொருள். பெரும்பாலும் இவர்கள் சமையற்கட்டில் சமையற்காரனைப் போல் வேடமிட்டு வேலை செய்வர். மறைமுகமாக தண்டிக்க வேண்டியவர்களை விஷம் கொடுத்துக் கொல்வது முதலானது இவர்களது வேலை.

பிக்ஷுகீ
தொழில் செய்ய ஆசைப் படும் ஏழையும், விதவையும், மனப் பக்குவத்தையும் பெற்ற அந்தணப் பெண் துறவி பிக்ஷுகி எனப் படுவாள். இவள் அந்தப்புரத்தில் மரியாதைக்கு உரியவளாய் முக்கிய ராஜப்ரதானிகளின் இல்லங்களுக்கு ஒற்றறியச் செல்லுவாள். மொட்டையடித்தவளையும்(பௌத்த, ஜைன பெண் துறவிகள்) வ்ருஷலியையும் (அந்தணரற்ற பெண் துறவிகள்) கூட நியமிக்கலாம். வைதிக மதத்திலும் கூட திருமணத்திற்கு முன்பு அல்லது கைம்மைக்குப் பின் பெண்களுக்கும் துறவறம் உண்டு என பூஜ்யஸ்ரீ வித்யாரண்யஸ்வாமிகள் தமது ஜீவன் முக்தி விவேகத்தில் ஸ்ம்ருதிகளை எடுத்துக் காட்டி நிறுவியுள்ளார்.. அத்தகைய பெண் துறவிகளில் தொழில் செய்ய முனைவோரை அரசன் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய பெண் துறவிகள் அரசியோடு இருந்து அவளை நல்வழிப் படுத்துவர். மேலும் மந்த்ரி முதலானவர்களை உளவறிவர். அந்தப்புரத்தில் மிகுந்த மர்யாதையுடன் திகழ்வதால் இவர்களை எளிதில் ஐயுறார் என்பதனால் இத்தகைய கோலமுடையோர்கள் உளவறிய மிகத் தகுந்தவர்களாகின்றனர்.

இவ்வாறு திரியும் ஒற்றர்கள் விளக்கப் படுகின்றனர். அவர்களை அரசன் தன் நாட்டில் முக்கிய மந்த்ரி, புரோஹிதர், ஸேனாபதி, இளவரசன், முக்கிய வாயிற்காப்போன், அந்தப்புர காவலதிகாரி, ப்ரசாஸ்தா (கார்யதர்சி), ஸமாஹர்த்தா (வருவாய் அதிகாரி), ஸன்னிதாதா (கருவூல அதிகாரி), ப்ரதேஷ்டா (சட்ட அதிகாரி), நாயகன் (படையின் அதிகாரி), நகர வழக்குகளை ஆயும் அதிகாரி, தொழில் அதிகாரி, மந்த்ரி சபைத் தலைவன், படைத்தலைவன், கோட்டை அதிகாரி, எல்லை அதிகாரி, கோட்டையை அடுத்துள்ள காட்டின் தலைவன் என்னும் பதினெட்டு பேர்களை ஒற்றறிய மேல் சொன்ன திரியும் ஒற்றர்களை பலவிதமான தேசத்தையும் மொழியையும் பழக்கங்களையும் உடையவராய் வேடமிட்டுக் கொள்ளச் செய்து நியமிக்க வேண்டும்.

அவர்கள் வெளியில் செல்லும் போது உளவறிய தீக்ஷ்ணர்கள் குடை, கெண்டி, விசிறி, பாதுகை முதலியவற்றைக் கொண்டு செல்லும் வேடமிட்டு பின்தொடர்ந்து அறிய வேண்டும். அவற்றை ஸத்ரிகள் நிலையொற்றர்களிடம் தெரிவிப்பர்,
ஸூதன் (சோறு சமைப்பவன்), அராளிகன் (மற்றைய தின்பண்டங்களைச் சமைப்பவன்), குளிப்பாட்டுபவன், கால் பிடிப்பவன், தரைவிரிப்பு விரிப்பவன், சிகை திருத்துபவன், அலங்கரிப்பவன், நீர்கொடுப்பவன் முதலான வேடங்களோடு ரஸதர்கள் வீட்டினுள்ளில் ஒற்ற்றிவர். கூனர், குள்ளர், வேடர், ஊமை, செவிடர், ஜடம் போன்றவர், குருடர் போன்ற வேடங்களிட்டவர்கள் அல்லது பாடுபவர், இசைக்கருவிகள் இசைப்பவர், சொற்பொழிவாற்றுபவர், குசீலவர்களும் (பெண்வேடமிட்டு ஆடுபவர்கள் அல்லது பாடிக்கொண்டே ஆடுபவர்கள்) பெண்களும் வீட்டினுள்ளில் ஒற்றறிவர். இவற்றை பிக்ஷுகிகள் நிலையொற்றரிடம் தெரிவிப்பர்.

நிலையொற்றர்களிடம் சீடர்களாக இருப்பவர்கள் ஸங்கேத எழுத்துக்களில் ஒற்றுச் செய்தியைப் பரிமாறிக் கொள்வர். ஒவ்வொரு நிலையும் பிற நிலைகளை அறியாத வண்ணம் உருவாக்க வேண்டும்.
பிக்ஷுகி ராஜப்ரதானிகளின் வீட்டிற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் வாயில் காப்போர்கள் ஒவ்வொரு வாயிலாக உளவுச் செய்தியைக கடத்த வேண்டும். இல்லது உள்ளிருப்பவர்கள் தாய்தந்தைபோல அவர்களைக் காணச் செல்வது போலவும் கலைஞர்கள், குசீலவர்கள், பணிபெண்கள் முதலியோர் பாடல், வசனம், வாத்யம், முதலியவற்றில் மறைமுகமாகவோ அல்லது பாண்டங்களில் ஸங்கேத எழுத்துக்கள் மூலமாகவோ தெரிவிக்க வேண்டும். அல்லது உள்ளிருப்பவர்கள், நெடுநாள் நோய், பைத்தியம் பிடித்தல், நெருப்பு பட்ட துயர், விஷம் அருந்தியது என்று ஏதேனும் சாக்கிட்டு வெளிவந்து உளவுச் செய்திகளைத் தெரிவிக்க வேண்டும். மூன்று ஒற்றர்கள் ஒரே செய்தியைத் தெரிவித்தால் அதனை நம்ப வேண்டும். (இதனையே வள்ளுவப் பெருந்தகை ஒற்றெற்றுணராமை ஆள்க உடன் மூவர் சொற்றொக்க தேறப் படும் எனக் குறிப்பிடுகிறார்.)

மீண்டும் மீண்டும் தவறிழைத்தால் மறைமுக தண்டனையோ அல்லது நீக்குவதையோ செய்ய வேண்டும்.
மேலும் சில ஒற்றர்களை எதிரிகளிடமும் ஊதியம் பெற்றுக் கொள்ளும் பதவி பெறுமாறு செய்து எதிரிகளின் உளவை அறியச் செய்ய வேண்டும். அவர்கள் இரு இடத்திலும் ஊதியம் பெறுவர். அவர்களின் மனைவி மக்களை தன் கையகப் படுத்திக் கொண்டு அவர்களை எதிரியினிடத்தில் அனுப்ப வேண்டும். அவர்களைக் கொண்டே எதிரிகளால் அனுப்பப் படும் ஒற்றர்களைப் பற்றியும் அறிய வேண்டும். இவ்வாறு எதிரி, நண்பன், நடுநிலைமையிருப்போன், தொடர்பற்ற அரசன் ஆகியோரின் நாட்டில் முன்பு சொன்ன பதினெட்டு பேர்களையொட்டி ஒற்றர்களை நியமிக்க வேண்டும்.
அவர்களின் வீட்டினுள் நடப்பதை கூனர், குள்ளர், நபும்ஸகர், கலைப்பெண்கள், ஊமை முதலான வேடமிட்டும் பலதரப்பட்ட பிரிவைச் சார்ந்த வேடமிட்டும் அறிய வேண்டும்.

கோட்டைகளில் வைதேஹகன் என்னும் நிலையொற்றர்களை நியமிக்க வேண்டும். கோட்டையை அடுத்து துறவிவேடமிட்ட நிலையொற்றர்கள் அமைவர். நாட்டில் உழவுத் தொழில் மற்றும் வாணிபம் செய்யும் நிலையொற்றர்களையும் நாட்டின் புறப் பகுதிகளில் கால்நடைத் தொழில்புரிவோரையும் நியமிக்க வேண்டும்.
காட்டில் வேடர் வடிவு கொண்டவரையும், ஜைனர்கள், காட்டுவாசிகள் முதலானவர்களையும் எதிரிகளின் நடமாட்டத்தை அறிய நியமிக்க வேண்டும். அவர்கள் விரைவில் உளவுச் செய்தியை தெரிவிப்பவர்களாக இருக்க வேண்டும்.
எதிரிகளின் ஒற்றர்களை அதே விதத்தைச் சேர்ந்த ஒற்றர்களைக் கொண்டே அறியவேண்டும். நிலையொற்றர்களைக் கொண்டு எதிரிகளின் நிலையொற்றர்களையும், திரியும் ஒற்றர்களைக் கொண்டு எதிரியின் திரியும் ஒற்றர்களையும் அறிய வேண்டும்.

அரசனின் மீதும் நாட்டின் மீதும் வெறுப்பு கொண்டவர்களைத் தகுந்த காரணத்தோடு இனம் கண்டு எதிரிகளின் ஒற்றர்கள் அவர்களை அண்டக் கூடும் என்பதனால் முக்கிய ஒற்றர்களை அவர்களிடமும் நியமிக்க வேண்டும்.
இவ்விதம் திரியும் ஒற்றர்களையும் கௌடில்யர் விளக்கியுள்ளார்.

அர்த்த சாஸ்த்ரத்துக்கு முற்பட்ட வ்ருத்த ஹாரீதர் முதலியோர் எழுதிய பல ஸ்ம்ருதி நூல்களிலும் மஹாபாரதம் முதலானவற்றிலும் ஒற்றர்களின் இன்றியமையாமை விளக்கப் பட்டுள்ளது. ஒற்றர்படையை சரியாகப் பராமரிக்க முடியாத மன்னவன் அழிந்துபடுவான் என பொருட்பால் நூல்கள் குறிப்பிடுகின்றன. இத்தகைய ஒற்றர்களைக் கொண்டு முதலாம் ஆதித்ய சோழன் உண்மையைக் கண்டுணர்ந்தான் என உதயேந்த்ரம் செப்பேட்டின் ஐந்தாம் வடமொழிச் செய்யுள் குறிப்பிடுகிறது. (தத்வாவேக்ஷீ ஸ்வசாராத் – உதயேந்த்ரம் செப்பேடு). ஆகவே தன்னால் நேரடியாகக் கண்டுணராத பொருட்களை அரசன் ஒற்றுக் கண் கொண்டே உணர வேண்டும்.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.