http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 54

இதழ் 54
[ டிசம்பர் 18 - ஜனவரி 23, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

வல்லறிதல் வேந்தன் தொழில்
பார்க்கவும் படிக்கவும் . . .
ஒரே ஒரு கேள்வி
திரும்பிப்பார்க்கிறோம் - 26
திரிபுவன வீரனே! பாண்டியாரியே! - மூன்றாம் பாகம்
Thirumeyyam - 1
தனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 1
அவர் - ஏழாம் பாகம்
என் துன்பம் நீயும் பெறுவாய்!
கௌடல்யரின் அர்த்தசாஸ்த்ரத்தில் ஒற்றாடல்
இதழ் எண். 54 > இதரவை
அவர் - ஏழாம் பாகம்
மு. நளினி
தொடர்: அவர்

திருப்பைஞ்ஞீலி ஆய்வேட்டை 1990 இறுதியில் என் ஆசிரியர் திரு. இராஜகோபாலிடம் ஒப்படைத்தேன். அவர் மிகவும் சிறப்பாக ஆய்வேடு அமைந்திருக்கிறது என்று கூறினார். தமிழ்நாடு தொல்லியல்துறையின் இயக்குநர் திருப்பைஞ்ஞீலி ஆய்வேட்டை அரசே நூலாக வெளியிட முடிவுசெய்திருப்பதாகவும் விரைவில் வெளிவரும் என்றும் கூறியதாக அறிந்தேன். என்னுடைய உழைப்பில் உருவான ஆய்வேடு அரசின் பதிப்பாக வர இருக்கிறதென்றால் அது உண்மையிலேயே ஓரளவிற்குச் சிறப்பாகத்தான் அமைந்திருக்கும் என்று நினைத்தேன். இதற்கெல்லாம் காரணர் அவர்தானே என்று நினைத்துப் பெரிதும் மகிழ்ந்தேன். நான்கு வரிகூடச் சொந்தமாக எழுதத் தெரியாமல் இருந்த என்னை ஓர் ஆய்வேடு எழுதும் அளவிற்குச் செம்மைப்படுத்தியிருக்கிறார் என்றால் அது எவ்வளவு சிறப்பான செயல் என்று வியந்ததோடு, என் தொடர்பாக அவர் எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளையும் நினைத்துப் பார்த்தேன்.

இந்த ஆய்வேடு வரலாற்றுப் புவியியல் தொடர்பான ஆய்வுக்குப் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இக்கல்வெட்டுகளில் பல ஊர்ப் பெயர்கள், அவற்றின் எல்லைகள், ஊரின் அமைப்புகள், ஊர் நிருவாகம், நீர்ப்பாசனம் தொடர்பான செய்திகள் எனப் பலவும் இடம்பெற்றிருக்கின்றன என்று கூறினார். அவர் சொன்னதற்கு ஏற்பவே என்னுடைய முனைவர் பட்ட ஆய்விற்குப் பைஞ்ஞீக் கல்வெட்டுகள் ஓரளவிற்கு உதவின.

அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி வந்தபோது முனைவர் பட்டப் படிப்பு படிக்கலாமா என்று யோசித்தேன். இந்த முறை என் வீட்டார் என்னைக் கட்டாயம் வேலைக்குப் போகவேண்டும் என்று வற்புறுத்தினர். அவரிடம் கூறியபோது, அவர்கள் சொல்வது சரிதானே. ஆனால் ஏதாவது பள்ளிக்கு வேலைக்குச் சென்றால் இவ்வளவு நாட்கள் பட்ட துன்பங்களுக்குப் பயனில்லாமல் போய்விடும். இந்தத் துறையிலேயே ஏதாவது வேலைக்கு வாய்ப்பிருக்கிறதா என்று பார்ப்போம் என்றார். முதலில் தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலக இயக்குநர் எனக்கு நன்கு பழக்கமானவர் நான் கடிதம் தருகிறேன். அவரைப் போய் பார்த்து ஏதாவது வேலைக்கு வாய்ப்பிருக்கிறதா என்று விசாரித்து வா என்று அனுப்பினார்.

நான் இயக்குநர் திரு. சதாசிவத்தைச் சந்தித்தேன். அவர் கடிதத்தைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ந்து, டாக்டரைப் போல் சிறந்த அறிஞரை நான் பார்த்ததில்லை. பழகுவதற்கு இனிமையானர். சிறந்த பண்பாளர். நல்ல இலக்கியப் பின்புலம் உள்ளவர் என்றெல்லாம் அவரைப் பற்றி மகிழ்ந்து கூறினார். உங்களுக்கு என்னால் உதவ முடியாது என்று நினைக்கிறேன். ஏனென்றால், இங்குக் கல்வெட்டுப் படிப்பது போன்ற வேலைக்கு வாய்ப்பில்லை. மோடியில்தான் பல ஒலைச்சுவடிகள் படிக்கப்படாமல் இருக்கின்றன. அதனால் உங்களுக்கு மோடி படிக்கத் தெரிந்திருந்தால் ஓலைச்சுவடிகள் படிக்கலாம். நாம் படிக்கும் சொற்களுக்கு ஏற்ப ஊதியம் கிடைக்கும் என்று விளக்கினார். எனக்கு மோடி படிக்கத் தெரியாததால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் திரும்பினேன்.

தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல்துறைக்குச் சென்று ஏதாவது வாய்ப்பமையுமா என்று பார்த்துவரச் சொன்னார். மீண்டும் அவர் தந்த கடிதத்துடன் தஞ்சாவூர் சென்றேன். முதலில் புலவர் செ. இராசு அவர்களைப் பார்த்தேன். அவர் இங்கு வேலைக்கு வாய்ப்புகள் இல்லை. அப்படி ஏதாவது அமைந்தால் கூறுகிறேன், இப்போது உங்களுக்கு உதவக்கூடவில்லை என்று பதிலுரைத்தார். துறைத்தலைவர் முனைவர் எ. சுப்பராயலு அவர்களைப் பார்த்துப் பேசினேன் . சுப்பராயலு அவர்கள் வேலைக்கு இப்போது வாய்ப்பில்லை. ஆனால், முனைவர் பட்ட ஆய்வு என்னிடமே கூட நீங்கள் செய்யலாம். செலவு பற்றி நீங்கள் அதிகம் கவலைகொள்ளத் தேவையில்லை. டெல்லியிலுள்ள இந்திய வரலாற்றுக் கழகத்திற்கு விண்ணப்பித்தால் உங்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை கிடைக்கும். அதற்குத் தேவையான ஏற்பாடுகளை நான் செய்து தருகிறேன் என்று கூறினார்.

உங்களுக்கு உதவித்தொகை கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. பொதுவாக தென்னிந்தியாவிலிருந்து அதிகம் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிப்பதில்லை. அதனால், நீங்கள் விண்ணப்பித்தாலே உங்களுக்கு கிடைத்துவிடும். மேலும் வரலாற்றுப் புவியியல் தொடர்பாக ஆய்வு செய்பவர்கள் மிகவும் குறைவு. வரலாற்றுப் புவியியல் துறை இப்போதுதான் பரவலாகிக் கொண்டிருக்கிறது. அதில் ஆய்வு செய்பவர்கள் மிகச் சிலரே. அதனாலும் உங்களுக்கு உதவித்தொகை கிடைக்க மிகுந்த அளவில் வாய்ப்புகள் உள்ளது என்று நம்பிக்கை ஊட்டினார்.

ஆய்வுத் தலைப்பாக வரலாற்றுப் புவியியலை தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று பேரா. சுப்பராயலு கூறியபோது, இந்தத் துறை பற்றி எனக்கு ஏதும் தெரியாது என்றேன் பணிவோடு. இந்தத் துறையில் மிகச் சிலரே பங்கு கொண்டுள்ளனர். என்னிடம் திரு. சு. இராஜவேலு வரலாற்றுப் புவியியல் பற்றி ஆய்வு செய்கிறார். அவர் புதுக்கோட்டை மாவட்டம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளதால் நீங்கள் திருச்சிராப்பள்ளியைத் தேர்ந்து கொள்ளலாம். உங்கள் பகுதிக் கல்வெட்டுகளில் புதுக்கோட்டை மாவட்டம் தொடர்பான செய்திகள் இருந்தால் அவருக்கு நீங்கள் தந்து உதவலாம். அதே போல் உங்கள் பகுதி செய்தி கிடைத்தால் அவர் உங்களுக்குத் தந்துதவுவார். அவரிடம் வேண்டுமானாலும் நீங்கள் இது தொடர்பாக விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள் என்று பேரா. சுப்பராயலு கூறினார்.

ஓரளவு நம்பிக்கையோடு வீடு திரும்பினேன். ஆனால், திரும்பும் வழியில் நாம் வேலை கேட்டுத்தானே வந்தோம். அவர் முனைவர் பட்ட ஆய்வு செய்யச் சொல்கிறாரே இது இயலுமா என்ற கவலையோடு அவரைச் சந்தித்தேன். அவரும் சுப்பராயலு சார்தான் உதவித் தொகைக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்கிறாரே பிறகு என்ன முனைவர் பட்டப் படிப்பிற்குரிய விண்ணப்பத்தாளைப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சென்று பெற்று வந்து மேற்கொண்டு செய்யயவேண்டியவற்றை செய் என்றதோடு முனைவர் பட்ட ஆய்விற்கு அரசாங்கமே உதவும் போது நாம் அதைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

நான் வீட்டாரிடம் எப்படி அனுமதி பெறுவது என்றும் அவரிடமே கேட்டேன். முனைவர் பட்டப் படிப்பு மூன்று ஆண்டுகள்தான். மூன்று ஆண்டுகளுக்கும் உதவித் தொகை கிடைத்துவிடும். வேலைக்கு தொடர்ந்து விண்ணப்பித்துக் கொண்டிருந்தால் எப்போது வாய்ப்பு அமைகிறதோ அப்போது முழுநேர படிப்பை பகுதிநேர படிப்பாகக் கூட மாற்றிக்கொண்டுவிடலாம். எல்லாவற்றையும் விட மூன்று ஆண்டுகள் என்பது விரைவில் முடிந்து விடும். முனைவர் பட்டமும் கிடைத்துவிடும். அதைக் கொண்டு நல்ல வேலைக்குப் போகலாம். இதையெல்லாம் வீட்டில் உள்ளவர்களிடம் கூறிப் புரியவையுங்கள் என்று என்னை நெறிப்படுத்தினார்.

அவர் கூறியது போலவே வீட்டிற்குச் சென்று நடந்ததைக் கூறினேன். அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். மூன்று ஆண்டுகள்தானே இந்தப் படிப்பிற்கு ஆகும். அதற்குள் ஏதாவது வேலை கிடைத்தால் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுடன் வீட்டார் ஒப்புக்கொண்டனர். சம்மதம் கிடைத்ததே போதும் என்று மீண்டும் பேரா. சுப்பராயலுவை சந்தித்து நீங்கள் அவசியம் இந்திய வரலாற்றுக் கழகத்திலிருந்து உதவித்தொகை பெற்றுத் தரவேண்டும் என்று வேண்டி, விண்ணப்பத்தாளில் அவர் கையொப்பம் பெற்று விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தேன்.

முனைவர் பட்ட ஆய்வு தொடர்பான நடைமுறைகள் முடிந்து ஆய்வு செய்யப் பல்கலைக்கழகம் அனுமதி அளிப்பதாகக் கடிதம் வந்ததும் திரு. சுப்பராயலு அவர்களைச் சென்று மீண்டும் சந்தித்தேன். அவர் இந்திய வரலாற்றுக் கழக உதவித் தொகை பெறும் விண்ணப்பத்தை வழங்கியதோடு விண்ணப்பத்துடன் இணைப்பதற்கு ஓர் ஆய்வுச் சுருக்கத்தை வழங்கவேண்டும் என்று கூறி அதை எப்படி எழுதுவது என்றும் வழிகாட்டி, அதைத் தட்டச்சு செய்து எடுத்துவருமாறு கூறினார். தட்டச்சு செய்து விண்ணப்பத்தாளை அனுப்பினேன். ஆனால் உதவித்தொகை கிடைக்கும் வரை எனக்கு மிகுந்த கவலையாகவே இருந்தது. ஆறு மாதங்களில் உதவித்தொகை கிடைத்தது.. மேற்படிப்பிற்கு வாய்ப்பமைந்ததற்காக மிகவும் மகிழ்ந்தேன். அதற்காக முதலில் பேரா. சுப்பராயலு அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தேன். எல்லாவற்றையும் விட அதற்காக என்னை வழிப்படுத்திய அவருக்கு மிகுந்த நன்றி கூறினேன்.

வீட்டார் சொல்வது போல் ஏதாவது ஒரு வேலைக்குப் போகலாம் என்று நினைத்திருந்த என்னை, நான் அனுபம் பெற்றிருந்த கல்வெட்டுத்துறை சார்ந்த வேலையில் அமர்த்த முயற்சி செய்து, அது இயலாதபோது முனைவர் பட்ட மேற்படிப்பிற்கு, அதுவும் கல்வெட்டுகளைக் கொண்டே ஆய்வுசெய்யும் வாய்ப்புடன் உதவித்தொகையும் பெறக்கூடிய சூழலை உருவாக்கித் தந்ததுடன், அதைப் பயன்படுத்திக்கொள்ள என்னை ஊக்கப்படுத்தியதோடு என் வீட்டாருக்கும் அதைப் புரியவைத்து என்னைச் சரியான வழியில் அவர்தான் ஆற்றுப்படுத்தினார். அதை நான் என்றுமே மறக்கமுடியாது.

முனைவர் பட்ட ஆய்வு தொடர்பாக உதவித்தொகை பெற்றுத் தந்ததோடு மட்டுமல்லாமல் என் ஆய்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் பேரா. சுப்பராயலு செய்துதந்தமைக்கு வரலாற்று ஆய்வு மையத்துடன் எனக்கிருந்த தொடர்பு முக்கியமான காரணமாகும். என் பணியைப் பற்றி அதுவே அவருக்கு நம்பிக்கை அளித்திருக்கவேண்டும். ஆய்வேட்டின் தலைப்பு வரலாற்றுப் புவியியல் சார்ந்த மழநாடு, வள்ளுவப்பாடி நாடுகள் தொடர்பானதாக அமைந்தது. மழநாடு என்போது தற்போதைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு பகுதியைக் கொண்ட காவிரியாற்றின் வடகரையில் அமைந்த நாட்டுப் பகுதி. அதனால் காவிரியின் இருகரையிலும் உள்ள கோயில்களின் கல்வெட்டுகளைப் படித்துத் தொகுக்கவேண்டியிருந்தது. அக்கோயில்களிலிருந்து ஏற்கனவே கல்வெட்டுகள் படியயெடுக்கப்பட்டிருந்தபோதும் அவற்றின் பாடங்கள் வெளியாகவில்லை. ஆனால், திரு. சுப்பராயலு தம்முடைய ஆய்வுகளுக்காகத் தொகுத்து வைத்திருந்த பல கல்வெட்டுகளின் பாடங்களை எனக்குத் தந்து உதவினார்.

அந்தத் தொகுப்புகளிலிருந்து கல்வெட்டுச் செய்திகளைப் பல்வேறு தலைப்புகளின் கீழ் தொகுத்து மீண்டும் அவற்றைக் கணினியில் பதிவு செய்யவேண்டும். அவ்வாறு பதிசெய்வதற்குத் தம்முடைய கணினியையும் தந்தார். என்னுடைய இந்தப் பணி இரண்டாண்டுகளுக்கு மேல் தொடர்ந்து நடந்தது. ஆய்வில் முழுமையாக ஈடுபட்டபோதுதான் அதன் ஆழம் புரிந்தது. மூன்றாண்டுகளில் முடிப்பதற்கு வாய்ப்பில்லை என்று உணர்ந்தேன். உதவித்தொகையும் உரிய காலத்தில் கிடைக்கவில்லை.

உதவித்தொகை கிடைக்காத காரணத்தினால், ஆய்வுப்பணி தொடங்கிய ஒரு சில மாதங்களிலேயே உன் செலவை நீயே பார்த்துக் கொள் என்று வீட்டில் கூறிவிட்டனர். அவரிடம் வந்து என் நிலையைக் கூறினேன். அப்போது அவர்தான் ஏதாவது ஏற்பாடு செய்வோம் என்றார். அவர் அதிக அளவில் பல்வேறு மாத, வார, நாளிதழ்களுக்குக் கட்டுரை எழுதுவார். அந்தக் கட்டுரைகளை அவருடைய எண்ண ஓட்டத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து விரைவாக எழுதுவதால் அவர் எழுதும் முதல் படியை அப்படியே இதழ்களுக்கு அனுப்பமுடியாது. அதனால் அவற்றைப் படியெடுத்துத் தரும்படி என்னிடம் தருவார்.

அப்போது கணினி இல்லை. தட்டச்சு செய்தவற்கு வாய்ப்பிருந்தது. ஆனால் அதில் பிழைகள் மலிந்திருக்கும். அதைச் சரிசெய்து மீண்டும் தட்டச்சுச் செய்தால் அதிக நேரமாகும் என்பதால் என்னிடம் தந்து எழுதித்தரச் சொல்வார். முதுநிறைஞர், பட்டயப்படிப்புக் காலங்களிலேயே அவ்வாறு பல கட்டுரைகள் எழுதித் தந்திருக்கிறேன். அப்போதெல்லாம் மூன்று, நான்கு கட்டுரைகள்தான் எழுதுவேன். பின்னாளில் அவர் கட்டுரைகள் எழுதுவது எண்ணிக்கையில் அதிகரித்தது. மாதத்திற்குப் பத்து அல்லது பதினைந்து கட்டுரைகள்கூட எழுதவேண்டியிருக்கும்.

திடீரென ஒரு மாதத் தொடக்கத்தில் அவர் மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கும் போது எனக்கும் செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்று பணம் தந்தார். எனக்குக் கண்களில் நீர் வந்துவிட்டது. அதைப் பெற்றுக்கொள்ளத் தயக்கமாக இருந்தது. நான் என்னை எடுத்து வளர்த்த என் மாமாவைத் தவிர வேறு யாரிடமும் பணம் வாங்கியதில்லை. முதல் முறையாக அவர் பணம் தந்தபோது என்னால் மறுக்க முடியவில்லை. பணத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். எனக்குத் தேவைப்படும்போது நானே கேட்டு வாங்கிக்கொள்கிறேன் என்றேன். அவரும் புரிந்து கொண்டு பணத்தை அவரே வைத்திருந்தார். ஒரு நாள் பணம் மிக அவசியமாகத் தேவைப்பட்டபோது தயங்கித் தயங்கி அவரிடம் கேட்டேன். உங்களுடைய பணம்தானே என்னிடம் இருக்கிறது அதைப் பெற்றுக் கொள்வதற்கு என்ன தயக்கம் என்று கடிந்து கொண்டு பணம் தந்தார். அவருடைய அனைத்துக் கட்டுரைகளையுமே என்னிடம் தந்து படியெடுத்துத்தரச் சொன்னதன் காரணம் அப்போதுதான் எனக்குப் புரிந்தது.

பணம் கேட்கத் தயங்குகிறேன் என்பதைப் புரிந்துகொண்ட அவர் எனக்கு மிகவும் அவசியமான பொருட்களை வாங்கித் தர முடிவுசெய்து முதன் முதலாக அவரும் அவர் துணைவியாரும் உடன் வந்து ஒரு கைக்கடிகாரம் வாங்கித் தந்தனர். அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இவ்வளவு பெரிய தொகைக்கு எனக்கு யாரும் பரிசுப் பொருட்கள் அதுநாள் வரை வாங்கித் தந்ததில்லை. அந்த மகிழ்விற்கும் அவரே காரணர்.

கட்டுரைகளைப் படியெடுப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. மிகவும் கவனத்துடன் தவறில்லாமல் எழுதவேண்டும். சிறிய தவறு என்றால்கூட அந்தப் பக்கத்தை மீண்டும் எழுதவேண்டும். ஏனென்றால் இதழ்களுக்கு அனுப்பும் கட்டுரையில் சிறிய தவறுகூட இருக்கக்கூடாது என்பதில் அவர் மிகவும் உறுதியாக இருப்பார். அதே சமயத்தில் எழுதும் போது பேப்பரில் சுருக்கமோ, அழுக்கோ படிந்தாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார். தொடக்கத்தில் ஒரு பக்கத்தை இரண்டு, மூன்று முறைகூட எழுதியிருக்கிறேன். இன்னும் கவனத்துடன் இருந்தால் முதல் படியே சரியாக அமைந்துவிடுமே என்று நினைத்து மிகவும் கவனத்துடன் எழுதத்தொடங்கினேன். தொடக்கத்தில் ஒரு பக்கம் படியெடுப்பதற்கு அரைமணிநேரமாவது ஆகும். ஆனால் பழகப் பழக படியெடுப்பதற்கான காலம் குறைந்தது. மையத்திற்கு கணினி வாங்கும் வரை நானும் அகிலாவும்தான் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறோம்.

எனக்குத் தமிழ் இலக்கியம், கல்வெட்டுகள் இவற்றைப் பற்றி அதிகம் தெரியாததால் அவருடைய கையெழுத்தைப் புரிந்து கொண்டு படியெடுப்பது கடினமாக இருந்தது. அதைப் புரிந்து கொண்ட அவர் ஒருநாள், 'நான் எழுதிய கட்டுரையைப் படித்துக்காட்டுகிறேன் உங்களுக்கு ஏதாவது ஐயம் இருந்தால் கேளுங்கள்' என்றார். நானும் மிகவும் கவனத்துடன் அவர் படிப்பதைக் கேட்டு மிகவும் சாதாரணமாக ஒரு கேள்வி கேட்டேன். வீட்டிற்குப் போய் அந்தக் கட்டுரையை எழுதியபோதுதான் எப்பொழுதும் எழுதுவதைவிட அன்று விரைவாக எழுதிவிட்டோம் என்பதை உணர்ந்தேன். அத்துடன், அவர் கட்டுரையைப் படித்துக் காண்பித்ததன் காரணமும் புரிந்தது. ஒரு முறை அவர் படித்துக் கேட்டதால் கட்டுரையை எழுதுவது எளிதாக அமைந்துவிட்டது.

கல்வெட்டு, இலக்கியம் இவற்றில் சிறிது அனுபவம் பெற்ற பிறகு, அவர் எந்தக் கட்டுரையைப் படித்துக்காட்டினாலும் ஏதாவது ஒரு கேள்வியாவது கேட்பேன். சில சமயங்களில் அவர் சொல்ல வந்த கருத்தைப் புரிந்து கொள்ளாமல் தவறாகக் கேள்வி கேட்டு மாட்டிக்கொள்வேன். கருத்துக்களைக் கேட்பதில் கவனமாக இருக்கவேண்டும். அப்போதுதான் அதை நன்கு விளங்கிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்துவார். ஆனால் இன்று வரை தவறாகக் கேள்வி கேட்டுச் சிக்கிக்கொள்வது தொடரத்தான் செய்கிறது. என்றாலும், அப்படிக்கேட்பதன் வாயிலாக அவரிடமிருந்து நிறையத் தெரிந்துகொள்ள முடிவதையும் குறிப்பிட்டாகவேண்டும். அவர் உணர்ச்சி வயப்பட்டு விளக்க ஆரம்பித்தால் கேட்கச் சுகமாக இருக்கும். அந்தச் சுகத்தை கணக்கற்ற நிலையில் நான் அனுபவித்திருக்கிறேன்.

சில சமயங்களில் சிறப்பான கேள்வி இது என்று பாராட்டி மிக விரிவான அளவில் பதிலிறுப்பார். அவருடைய கட்டுரைகளில் தவறு கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஏனென்றால் ஒரு கட்டுரை எழுதுவதென்றால் அது தொடர்பான அனைத்துச் செய்திகளையும் படித்துச் செய்தி சேகரித்துக் கொள்வார். ஒரு கோயில் பற்றிய கட்டுரை என்றால் அந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் எந்த ஆண்டறிக்கையில் வெளிவந்திருக்கிறது, அதற்குப் பாடங்கள் வெளிவந்துள்ளனவா; அந்தக் கோயில் பற்றி யார் யார் எல்லாம் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள்; தலபுராணம் இருக்கிறா? என்று தேடித்தேடி அனைத்துச் செய்தியையும் குறிப்பெடுத்து வைத்துக் கொள்வார். அடுத்து ஒரு மணிநேரமோ இரண்டு மணிநேரமோ தொடர்ந்து எழுதிக் கட்டுரையை முடிப்பார். குறிப்பெடுத்துக் கொண்டு எழுதுவதால் தவறு வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. யார் யாருடைய நூல்களை அவர் படிக்கிறாரோ அனைவரும் அடிக்குறிப்பில் அவசியம் இடம்பெறுவர். ஏனென்றால் ஒரு சிறு தவறாவது அவர்கள் நூல்களில் இருக்கும். அவரிடம் சிக்காத அறிஞரை இதுவரை நான் கண்டதில்லை. அதற்குக் காரணம் அவ்வறிஞர்கள் அனைத்துச் சான்றுகளையும் முழுமையாகப் பார்க்காமல் ஏதாவது ஒரு சார்புடன் கட்டுரை எழுதுவதுதான்.

கட்டுரைகளைப் படித்துக் கருத்துரைக்கும்போது, கட்டுரையிலுள்ள ஏதாவது ஒரு தரவை சிறிது மாற்றிச் சொன்னால் நன்றாக இருக்குமே என்று நான் கூறினால் உடனே, அவருக்குக் கோபம் வந்துவிடும். நான் அந்தக் கோபத்தைப் பொருட்படுத்தாமல் மேலும் அது பற்றி விவாதிப்பேன். அந்த விவாதம் அவர் கோபத்தைக் குறைக்கும். நான் கூறுவது சரி என்றால் அந்தக் கருத்தை இன்னும் எளிமையாக மாற்றி அமைத்துவிடுவார். அவர் கருத்துச் சரி என்றால் அதை எனக்குப் புரியவைப்பார்.

தொடக்க நிலைகளில் அவருடைய கோபத்திற்கான காரணம் எனக்கு விளங்கியதில்லை. நான் கூறுவது சரி என்றால் அதை ஏற்றுக் கொள்ளலாம். தவறு என்றால் அதைச் சொல்லி விளக்கலாமே. ஏன் தேவையில்லாமல் கோபப்படவேண்டும் என்று அடிக்கடி நினைப்பேன். ஒரு முறை அவரிடமே கேட்டேன். 'என் சினம் நீங்கள் கேட்டதனால் இல்லை. நீங்கள் சொல்லும் இந்த மாற்றத்தை நாம் எழுதும்போதே கருத்தில் கொண்டு செய்திருக்கவேண்டும். செய்யாமல் விட்டது பிழையல்லவா? ஓர் எழுத்தாளன் படிப்பவர்களுக்குப் புரியுமாறு எழுதினால்தான் அவன் கருத்துச் சேரவேண்டியவர்களைச் சேரும். அப்படிச் செய்யாமல், புரிதலற்ற நிலையில் எழுதுவதால் என்ன பயன்? நாம் இப்படிச் செய்திருக்கலாமா என்று என் மீதே எனக்குச் சினம் வரும். அந்தச் சினத்தைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள். நீங்கள் கேட்டதற்கு நன்றி. இந்தச் சினத்தைப் பொருட்படுத்தாதீர்கள். உங்கள் கருத்துக்களைச் சிறிதும் அஞ்சாமல் வெளிப்படுத்துங்கள். உங்களுக்குப் புரியவில்லை என்றால் நான் கட்டுரை எழுதுவதில் பொருளே இல்லை' என்று அவர் கூறியபோது நான் நெகிழ்ந்துபோனேன். இத்தனை நாட்களாக இவரைத் தவறாகப் புரிந்துகொண்டிருந்தோமே என்று வருந்தினேன்.

(வளரும்)
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.