http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 54

இதழ் 54
[ டிசம்பர் 18 - ஜனவரி 23, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

வல்லறிதல் வேந்தன் தொழில்
பார்க்கவும் படிக்கவும் . . .
ஒரே ஒரு கேள்வி
திரும்பிப்பார்க்கிறோம் - 26
திரிபுவன வீரனே! பாண்டியாரியே! - மூன்றாம் பாகம்
Thirumeyyam - 1
தனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 1
அவர் - ஏழாம் பாகம்
என் துன்பம் நீயும் பெறுவாய்!
கௌடல்யரின் அர்த்தசாஸ்த்ரத்தில் ஒற்றாடல்
இதழ் எண். 54 > கதைநேரம்
ஒரே ஒரு கேள்வி
கோகுல் சேஷாத்ரி
அவனுடைய கண்கள் பஞ்சடைத்துக் காணப்பட்டன. முகத்தில் வார்த்தைகளில் வடிக்கமுடியாத ஒரு கவலையும் சோகமும் நிரந்தரமாய்க் கோடுகளாய்... சுருக்கங்களாய்.. படிந்திருந்தன. கண்களை இடுக்கிக்கொண்டு தன் தலைக்குமேல் விரியும் எல்லையில்லாத வானத்தை இலக்கற்று நோக்குகிறான் அவன். அவனுடைய வாழ்க்கையைப் போலவே அந்த வானமும் ஒன்றுமில்லாத வெறுமையுடன்தான் அவனுக்குத் தெரிகிறது.

உழைத்து உழைத்து அவனது கரங்கள் காப்புக் காய்த்துப் போய்விட்டன. மண்ணிலும் சேற்றிலும் நடந்து நடந்து அவன் பாதங்களில் பாதி நகங்களைக் காணவில்லை. பின் பாதத்தில் நிரந்தர வெடிப்புகள் - அவன் எதிரில் தெரியும் தரிசு நிலத்தைப் போலவே.

அவனுள் ஒரு கேள்வி உறுத்திக்கொண்டிருந்தது.

அவனும்கூட அந்த மண்ணின் மைந்தன்தான். அவ்வாறுதான் சொல்லிக்கொண்டார்கள்.

நகர நாகரீகங்களிலிருந்து பல யுக யுகாந்திரங்களைக் கடந்து நிற்கும் வேறொரு உலகில் மண்ணையும் மழையையும் மட்டும் நம்பித் தனித்து வாழ்கிறான் அவன்.

அவனுக்கு நுனிநாக்கில் ஆங்கிலம் பேசத்தெரியாது. நட்சத்திர விடுதிகளும் ஆடம்பரங்களும் கேளிக்கைகளும் அவன் பார்த்தறியாதவை மட்டுமல்ல - கேட்டும்கூட அறியாதவை. ஒட்டு மொத்த தேசத்தையே புதிய நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்வதாக ஊடங்களாலும் செய்திகளாலும் கொடி கட்டிக் கொண்டாடப்படும் தொழில்நுட்ப "வளர்ச்சிகளும்" தகவல் தொழில் நுட்பப் "புரட்சிகளும்" அவனை இன்னும் சென்றடைவவே இல்லை.

பல காலத்திற்கு முன் அவனுடைய இரு பிள்ளைகளும் நான்கு கிலோமீட்டர் தினமும் நடந்து சென்று "ஆரம்பக் கல்வி" பயின்றுகொண்டிருந்தார்கள். இப்போது அதுவும் இல்லை. "சின்னது" ஒன்று பிறக்கும்போது "பெரியதன்" படிப்பு நின்று போவது அங்கெல்லாம் சர்வ சாதாரணம். ஏனெனில் அதற்கும் பெரியவர்களெல்லாம் வேலைக்குப் போனால்தானே ஒரு வேளை வயிறாவது நிறையும்? இடையில் நின்றுபோய்விட்ட படிப்பைப் பெரியவளால் பின்னாளில் தொடர முடியவில்லை. "அட, இம்புட்டு பெரீசா இருந்துக்கிட்டு எங்களோடயா படிக்கீஹ?" என்று வாண்டுகளெல்லாம் கிண்டல் செய்யுமோ என்று அச்சம். புத்தகங்களை அடுக்கிக்கொண்டிருந்தவள் இப்போது முறங்களையும் தட்டிகளையும் மட்டுமே கட்டிக்கொண்டிருக்கிறாள்.

அவன் உழைக்கத் தயாராகவே இருந்தான். கடுமையான உழைப்பு ஒன்றுதான் அவனது பிதுரார்ஜிதச் சொத்து. யுக யுகாந்திரங்களாய் அவன் பரம்பரையினர் அந்த மண்ணில் உழுதுகொண்டிருந்தார்கள். மண்ணும் பல ஆண்டுகளாய் ஏதோ அவர்களை - குறிப்பாக அவனை - வாழவைத்துக்கொண்டுதான் இருந்தது. ஓஹோ என்று இல்லாவிட்டாலும் ஒரு வேளை கஞ்சிக்காவது வழி இருந்துகொண்டுதான் இருந்தது.

"இருந்தது" என்று இறந்தகாலத்தில் குறிப்பிடுகிறோம். ஏனெனில் இப்போது அந்த ஒருவேளைக் கஞ்சியும் கேள்விக்குறியாகிவிட்டது.

மானாவாரி விதைப்பை நம்பி இருப்பவனின் பிழைப்பை மழை ஒன்று பெய்து கெடுக்கும் - அல்லது பெய்யாமல் கெடுக்கும்

அவனது கிராமத்தின் சுற்றுப்புற இயற்கையை பணம் படைத்தவர்களும் பலம் படைத்தவர்களும் மெல்ல மெல்லச் சூறையாடிக் கற்பழித்த கதை அவனுக்குத் தெரியாது. மரங்கள் அழிந்ததால் இயற்கையின் மரபும் அழிந்தது. அதனால் மழை குறைந்தது. மண் வெடித்தது.

குறைந்த அளவு நீரில் சொட்டு நீர்ப்பாசனம் செய்யும் வித்தையை அவனால் செயல்படுத்த முடியவில்லை. அதன் உபகரணங்களுக்காகவும் "இலவச மின்சாரம்" வழங்கும் மின்வாரியக் கடவுளர்களின் இலஞ்சத்துக்காகவும் அவனால் ஆயிரங்களைப் புரட்ட முடியவில்லை. கடன் கொடுக்க வேண்டிய வங்கியோ "இன்று போய் நாளை வா!" என்று ஒவ்வொரு நாளும் அறிவித்தது. இன்றிலிருந்து நாளைக்குள் நிலைமை எவ்வாறு மாறும்? இன்று கொடுக்கவேண்டிய கடனை நாளை கொடுத்தால் அதனால் என்ன பயன்? என்றெல்லாம் வங்கியதிகாரிகளிடம் அவனுக்கு வாதம் செய்யத் தெரியவில்லை. எப்போதாவது கோபம் மிதமிஞ்சிப்போய் சற்று குரலை உயர்த்தினாலும் "உனக்குக் கடனே கொடுக்க முடியாது போ - உன்னால் என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்துகொள்! எங்கு வேண்டுமானாலும் சென்று முறையிடு. என்னை ஒன்றும் செய்துவிட முடியாது...ஏற்கனவே தண்ணியில்லாக் காட்டில்தானே இருக்கிறேன்?" என்று வங்கியின் "மேலதிகாரி" கூக்குரலிடுவார் என்று பயந்தான் அவன்.

எந்த அரசியல்வாதியும் அந்தக் கிராமத்தின் பக்கம் தலைவைத்துப் படுத்ததில்லை. அவனுடைய தொகுதி என்ன என்பதோ எந்தக் கட்சி அவனது பகுதியை ஆண்டு அனுபவித்துக்கொண்டிருக்கிறது என்பதோ அவனுக்குத் தெரியாது.

நிலைமை மிகவும் மோசமாகிக்கொண்டிருந்ததால் அவனது நண்பன் ஒருவன் தூக்கில் தொங்கினான். கேள்விக்குறி சற்று பெரிதானது.

விவசாயியின் தற்கொலையைப் பற்றி விசாரிக்க ஒரு அதிகாரி வந்தார். ஏதோ ஒரு நோட்டுப்புத்தகத்தில் பல்வேறு எண்களைக் குறித்துக்கொண்டார். அவர் காட்டிய இரண்டு மூன்று பக்கங்களில் கைநாட்டுப் போட்டான் அவன். "நிவாரணம் விரைவில் வரும்" என்று அருள் வாக்கு உரைத்துவிட்டு அரசாங்கக் காண்டாஸாவில் பறந்தார் அவர்.

அப்புறம் இரண்டு பத்திரிக்கையாளர்கள் வந்தார்கள். அவர்களே கேள்வி கேட்டு அவர்களே அதற்கான பதிலையும் எழுதிக்கொண்டார்கள். ஒருநாள் பெரியதொரு கேமராவைத் தூக்கிக்கொண்டு ஜோல்னா பையும் ஜீன்ஸ் பேண்டுமாக இளம்பெண் வந்தது. இடைவிடாமல் ஆங்கிலத்தில் மூச்சு முட்டப் பேசி அவனை நிலத்திற்கெதிரே வெய்யிலில் நிற்கவைத்து நீண்ட நேரம் படப்பிடிப்பு நடத்தியது.

திடீரென்று ஒரு நாள் அவன் தலைக்கு மேல் ஹெலிகாப்டர் பறந்தது. "முதலமைச்சர்" மற்றும் "விவசாயத் துறை அமைச்சர்" அந்த வறட்சிப் பகுதிகளைப் "பார்வையிடுகிறார்களாம்".

அப்புறம் சிவப்புச் சட்டையணிந்த கம்யூனிச சிந்தாந்தவாதிகள் கிராமத்தில் ஒரு ஓரத்தில் மேடையமைத்து "விவசாயப் புரட்சி" துவங்க வேண்டிய அவசியம் குறித்து மூன்று மணி நேரம் உரையாற்றினார்கள். அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. இன்னும் இரண்டே வாரங்களில் மாபெரும் ஊர்வலம் ஒன்று நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அவர்களின் வற்புறுத்தலுக்காக தனது கந்தல் துண்டில் அவர்களின் கட்சிக்கொடியைக் குத்திக்கொண்டான் அவன்.

தன்னார்வத் தொண்டு நிறுவனத்திலிருந்து சிலர் ஒருநாள் அவனைத்தேடி வந்தார்கள். இரண்டு பாக்கெட் அரசி கிராமத்திலிருந்த அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அரிசிச்சோறு உண்டது அவன் குடும்பம்.

நாட்டை ஆளுகின்ற மேன்மக்கள் பான்பீடா வாயுடன் அரசியல் பேசும் நாடாளுமன்றத்தில் அவனது கிராமத்தைப் பற்றிப் பிரச்சனையைக் கிளப்புவதற்காக எதிர்க்கட்சி எம் பிக்களுக்கு முகம் தெரியாத எவரிடமிருந்தோ பணம் வந்தது. அவர்களும் பத்திரிக்கை செய்திகளை வைத்துக்கொண்டு பத்து நிமிடம் வெளுத்து வாங்கினார்கள். பின் சபாநாயகர் அவர்களை வெளியேற்றினார்.

அந்தப் பகுதியில் நடைபெறும் தற்கொலைகளுக்கு ஆளுங்கட்சியினர்தான் காரணம் என்று எதிர்க்கட்சியினரும் எதிர்க்கட்சியினர்தான் காரணம் என்று ஆளுங்கட்சியினரும் அடுத்த அரைமணி நேரத்திற்கு சேற்றை வாறியிறைத்துவிட்டு பாராளுமன்றத்திற்குள் அமைந்திருக்கும் நட்சத்திர கபேயில் காப்பி சாப்பிடச் சென்றனர். சபாநாயகர் நடந்த அத்தனை விஷயங்களையும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கினார்.

நாளுக்கு நாள் நிலைமை மோசமடைய, அவனுக்கு முன்நின்ற கேள்வி பெரிதாகிக்கொண்டே இருந்தது.

"செய்தால் என்ன?"

"செய்தால் என்ன?"

நீண்ட நாட்கள் கழித்து அரசாங்க முத்திரையிட்ட தபால் அவன் நண்பனின் மனைவிக்கு வந்தது. இறந்த விவசாயியின் குடும்பத்தாருக்கு ஒரு லட்ச ரூபாய் நிவாரணத் தொகையாக அனுப்பியிருந்தது அரசாங்கம். அந்தக் காசோலையை எப்படிப் காசாக்குவது என்று நண்பனின் மனைவிக்குத் தெரியவில்லை. விழித்தாள்.

அன்றுதான் அந்தக் கேள்வி பிரம்மாண்டமாக விஸ்வரூபமெடுத்து அவனை விழுங்கியது.

கிராமத்தின் ஓரத்தில் பல காலமாகப் பச்சிலைகளைக் காணாத மொட்டை மரமொன்றில் சாயுங்கால வேளையில் தூக்கில் தொங்கினான் அவன். அவனது மனைவியும் பிள்ளைகளும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதன.

கிராமத்தின் பஞ்சாயத்துக் கட்டிடத்தில் முதல்வரின் பொற்கரங்களால் கொடுக்கப்பட்ட இலவச கலர் டிவியில் அவனது மரணம் வெவ்வேறு விதமாகக் காட்டப்பட்டது. செய்திகளுக்குப் பின் பொருளாதார நிபுணர்கள் இருவர் இந்தியாவில் விவசாயத் தற்கொலைகள் நடப்பதற்கான காரணத்தை காரசாரமாக விவாதித்தனர்.

அவன் தற்கொலை செய்துகொள்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் வங்கியிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அதனை அவன் படிக்கவேயில்லை. அதில் பத்து வருடங்களுக்கு முன் அவன் வாங்கிய பத்தாயிரம் ரூபாய்க் கடனில் ஏழாயிரத்தை அரசாங்கமே தள்ளுபடி செய்துவிட்டதாகச் செய்தியிருந்தது.

அவனுடைய இறுதிக் காரியங்களுக்கு வருகை தந்த கனவான்களெல்லாம் பெரிய பெரிய மலர் வளையங்களை வைத்துவிட்டுப் போனார்கள். கடைசியாக வந்த கட்சித்தலைவர் அழகு தமிழில் "உன் கணவன் மண்ணில் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறான்" என்று கவிதை பாடினார். கூடியிருந்தவர்கள் கைதட்டினார்கள். மறுநாள் காலை தன்னுடைய தினசரியில் இதனைக் குறித்து ஒரு கவிதை எழுதவேண்டுமென்று முடிவு செய்தார் அவர்.

இரவு கவிந்தபின் சந்தடிகள் அடங்கின. கிராமம் வழக்கம்போல தனித்து விடப்பட்டது.

அவனது சடலத்திற்கருகிலிருந்த அவனது மனைவி, அந்திமக் காரியங்களை செய்யக்கூடத் தன் கையில் காசில்லை என்பதை உணர்ந்தாள். தயங்கித் தயங்கி நண்பனின் மனைவியிடம் கையேந்த முடிவு செய்தாள்.

(டிசம்பர் 12, 2008 தேதியிட்ட இந்து நாளிதழ் இந்த வருடம் மட்டும் பதினாரயிரத்து அறுநூற்று சொச்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகச் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக - கடன் தள்ளுபடிகளையெல்லாம் மீறி - இந்த எண்ணிக்கை குறையவேயில்லையென்றும் அது தெரிவிக்கிறது.)
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.