http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 54

இதழ் 54
[ டிசம்பர் 18 - ஜனவரி 23, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

வல்லறிதல் வேந்தன் தொழில்
பார்க்கவும் படிக்கவும் . . .
ஒரே ஒரு கேள்வி
திரும்பிப்பார்க்கிறோம் - 26
திரிபுவன வீரனே! பாண்டியாரியே! - மூன்றாம் பாகம்
Thirumeyyam - 1
தனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 1
அவர் - ஏழாம் பாகம்
என் துன்பம் நீயும் பெறுவாய்!
கௌடல்யரின் அர்த்தசாஸ்த்ரத்தில் ஒற்றாடல்
இதழ் எண். 54 > கலையும் ஆய்வும்
திரிபுவன வீரனே! பாண்டியாரியே! - மூன்றாம் பாகம்
ரிஷியா

"ஜித்வாப்ருத்வீந் த்ரிபுவனவீரச்சதுரந்தாஞ்சக்ரே ஸ்தானந் த்ரிபுவனவீரேச்வரமேதத்
நாநாஹர்ம்ய ப்ரகடிதசோபஹ பஹூரத்யம் ஹைமோத்துங்கப்ரவரவிமானஸ்தகிதார்ஹ"

பூமியின் எல்லா திசைகளையும் வெற்றிகொண்ட "திரிபுவன வீரன்" இந்நகரையே இருப்பிடமாகக் கொண்டு பிரகாரங்கள், பற்பல வீதிகள் அமைத்தான். ஆதித்தனுடைய இயக்கத்தையே தடுக்கும் விதமாக வானவீதியைத் தொடும்படியாக உயர்ந்த விமானத்துடனும் பொன்மயமாக அழகுபெறத் "திரிபுவன வீரேஸ்வரம்" என்னும் திருக்கோவிலை எடுப்பித்தான்.

"ஸ்ரீகண்டசம்புதனயேநபதிர் ந்ருபாணாம் பாண்ட்யாரீரீசரசிவே நமஹ ஸோமேச்வரேண குருணா புவநஸ்ய பித்ரோச்ஸ்ரீஏஷ்டாமகாரயதஸௌ சிவயோ:ப்ரதிஷ்டாம்"

ஸ்ரீகண்ட சம்புவின் புத்திரரான ஈஸ்வரசிவர் என்னும் சோமேஸ்வரரான தன்னுடைய இராஜகுருவைக் கொண்டு, இவ்வுலகத்திற்கே தந்தையும் தாயும் ஆன சிவனையும் சக்தியையும் மிகச்சிறந்த முறையில் "பாண்டியாரி" என்ற இவ்வரசன் பிரதிஷ்டை செய்தான்.

"பாண்டியாரி" என்பது "சோழபாண்டியன்" என்ற பட்டத்தின் வடமொழியாக்கம் ஆகும்.

"வித்யாயேனமனீஷிண நிகஷிதாவிஸ்ப்ருஷ்டமஸ்டாதச ஸ்தாணேய்ர்யேன விவிக்தமோபநிஷிதம் விஷ்வாஸகத்வம்விபோஹ வேதாகாரச சைவதர்சனத்ருசா ஸித்தாந்த ரத்னகரோ ராஜ்ஞோயஸ்ய குருஸ்ஸ ஈச்வரசிவஹகஸ்தன்யம்ருகோ குணஹ"

இராஜகுருவான ஈஸ்வரசிவர் வித்துவான்களில் தலைசிறந்தவர், பதினெட்டு புராணங்களை நன்கு அறிந்தவர், உபநிஷங்களை விரிவாகச் சொல்பவர், சைவதரிசனத்தைக் கண்டு சித்தாந்த ரத்னாகரம் என்னும் நூலை இயற்றியவர். யாரால் அவரின் குணத்தைத் தேடி அடைய இயலும்?

மேற்கண்ட கிரந்தத்தொடர் பரகேசரி மூன்றாம் குலோத்துங்கனைப் புகழ்ந்து பேசுகிறது. சேரனையும் பாண்டியனையும் வென்று வீராபிஷேகம் செய்து, தனது தன்னிகரற்ற வீரத்திற்கும் வெற்றிக்கும் சின்னமாக "திரிபுவனம்" என்னும் ஊரை அமைத்து "திரிபுவன வீரேச்வரம்" என்னும் திருக்கற்றளியைப் பெருமிதத்துடன் எடுப்பித்த செய்தியைப் பறைசாற்றுகிறது. இக்கற்றளிக்குக் கடவுள் மங்கலம் செய்தவர் இராஜகுருவான ஈஸ்வரசிவனார் என்றும், "சித்தாந்த இரத்னகாரம்" என்னும் சைவநூலைப் படைத்தவர் என்றும் கல்வெட்டுத்தொடர் மூலம் அறியப்படுகிறது.

எண்ணற்ற நடன கரணச் சிற்பங்களையும், கண்ணைக் கவரும் நூதன சிற்பங்களையும் கொண்டுள்ள ஏற்றமிகு, கவின்மிகு கலைக்கோயில் இது. சோழ சாம்ராஜ்யத்தின் இறுதிக் காலங்களில் எழுப்பப்பட்ட இக்கோயில் சோழர்களின் நுட்பமான அறிவார்ந்த கட்டடக்கலைக்கும், எழிலார்ந்த சிற்பத்திறனுக்கும் எடுத்துக்காட்டாக இன்றும் விளங்குகிறது.

விஜயாலயனின் நிகரற்ற வீரப்பரம்பரையில் தன்னை மாண்புடன் ஒரு வீரனாக - "திரிபுவன வீரன்" என்று அழைத்துக் கொள்ளும் மாமன்னன் பரகேசரி மூன்றாம் குலோத்துங்கன் ஒருவரே.




திரிபுவனத் திருநாட்கள்

"ஓம் நமோ பகவதே சரபாய ஜ்வல ப்ரஜ்வல ப்ரஜ்வல ஸாத்யம் ஸாதய ஸாதய ரக்ஷரக்ஷ ஸர்வ பூதேவ்யோ ஹூம்பட் ஸ்வாஹா"

என மந்திர உச்சாடனம் ஓங்கி ஒலிக்க யாகம் நடைபெற்றது சரபர் சன்னிதிக்கு அடுத்தமைந்த அர்த்தமண்டபத்தில். அக்னி குண்டத்திலிருந்து புகை கிளம்பி எல்லா இடத்தையும் நீக்கமற நிறைத்தது. மற்றொரு புறம் உக்ராய நம:, வீராய நம: என நாமாவளி ஒலிபெருக்கி வழியே ஒலித்தது.

தூணில் சாய்ந்தபடியே ஒலிப் பிரவாகத்தினூடே, புகை நடுவினில் எல்லோரும் வியர்த்துக் கொட்டி அமர்ந்திருக்க நான் மட்டும் தூங்கித் தூங்கி விழுந்தேன். வேற்று கிரகப் பிறவியைப் பார்ப்பதுபோல் எல்லோரும் என்னைப் பார்க்க, மந்திரத் தாலாட்டு எனக்கு மட்டும் உறக்கத்தைக் கொடுத்தது(அதற்கு நான் என்ன செய்ய?). சரி, வேறு நல்ல இடம் பார்த்து உறங்கலாம் என்று மேற்குப்புறத்தில் இருந்த நெற்களஞ்சியத்திற்குள் நுழைந்து படுத்து உறங்கினேன். சுப்ரமணியர் சன்னதி வெறிச்சோடியிருந்தது. நிம்மதியாய் உறங்கி எழுந்தபின் தான் கோவில்சுவர், விமானம் எல்லாம் நோட்டம் விட்டேன். தெற்குச்சுவரில் ஒரு நீண்ட கிரந்தக் கல்வெட்டுத் தொடர் கண்ணில் பட்டது. அந்தத் தொடரில் ஸ்ரீஇராஜராஜேஸ்வரம் என்ற மந்திரச்சொற்கள் என்னை ஈர்க்க, 'ஓ! நம்மவர் கோயில் பற்றியோ!!' என நினைத்து கிரந்தவரிகளைக் குறிப்பெடுத்துக் கொண்டுவந்து ஒவ்வொரு சொல்லாக மொழிபெயர்த்துப் படித்தேன்.

பிறகு ஒரு நீண்டவெளி, இம்முறை சென்றபோது திரிபுவனேஸ்வரம் குடமுழுக்கு கண்டு புதுப்பொலிவுடன் (?) திகழ்ந்தது. ஒன்று உறுதி. திரிபுவன வீரன் வந்து பார்த்தார் என்றால் நான் எடுப்பித்த திருக்கற்றளியா இது எனக் கதறிவிடுவார். வண்ணவண்ணக் கோலங்கள் காணீரோ.

ஸ்ரீமதுரையும், ஈழமும், கருவூரும், பாண்டியன் முடித்தலையும் கொண்டு வீராபிஷேகமும், விஜயாபிஷேகமும் பண்ணியருளிய திரிபுவனவீரசோழதேவனின் புகழ்போலச் செம்மாந்து உயர்ந்து விளங்குகிறது கருவறை விமானம்.


விமானத்தின் மேற்குப் பகுதி


மழைவில்லின் வண்ணங்கள் எல்லாம் தோற்றுவிடும். வினோத வண்ணக்கலவையாய் விமானம் மற்றும் சுவர்ப் பகுதிகள். தப்பிப்பிழைத்தவர் லிங்கோத்பவர் மட்டுமே. மற்ற தேவர்கள், தேவதைகள் எல்லோரும் வசமாய் மாட்டிக்கொண்டார்கள், திருப்பணியாளர்களிடம். மலைத்துப்போய் நின்றேன். தொலைநோக்கி வழியே கண்டபோது கண்கள் கூசியது. அழகு என்று நினைத்து அள்ளிப் பூசிய செயற்கை வண்ணங்கள் பழங்காலச் சிற்பங்களுக்கு என்னென்ன கேடுகள் விளைவிக்குமோ? விமானத்தின் கம்பீர அழகே குலைந்துவிட்டது. விமானத்தில் வளரும் செடிகளை அகற்றவில்லை. ஆனால், அழகியல் என்று நினைத்து விகாரவியல் செய்துவிட்டார்கள். யாரை நோவது? தொல்பொருள்துறை ஏன் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை?



திரிபுவன வீரனே, விரைந்து வா, எழுந்து வா என்று மனம் கதறியது. குடமுழுக்கு எனப் பல லட்சங்களைச் செலவுசெய்து ஏன் கோயிலின் கம்பீர அழகைக் கெடுக்கவேண்டும்? கோவிலின் சுற்றுப்புறங்கள், மண்டபங்கள் எல்லாவற்றையும் சுத்தம்செய்து, கொடிகளை, செடிகளை அகற்றி உழவாரப்பணி செய்தல்தான் உண்மையான திருப்பணி. இக்கோயிலுக்கு வரும் பக்தகோடிகள் கம்பஹரேஸ்வரரையோ, தர்மசம்வர்த்தினியையோ, மற்ற கடவுள்களையோ கண்டுகொள்வதில்லை. சரபரை மட்டும் அதிகமாக நேசித்துப் போகிறார்கள்.

நேர அவகாசமின்மையால் கல்வெட்டுத் தொடரை மட்டுமே படிக்க முடிந்தது. மேலும் வாய்ப்புகள் அமையும்பொழுது திரிபுவனேஸ்வரத்தை முழுமையாய் ஆராயவேண்டும் என்று மனம் விழைகிறது.

அறம் வளர்த்த நாயகியும், திரிபுவன ஈஸ்வரனும் அருள் புரிய வேண்டும். அவர்கள் மட்டுமில்லாமல், "அரிபிரமர் தொழுமிறைவற்கு அகிலமெல்லாம் தொழுது போற்றத் திரிபுவனவீரேச்வரம் செய்தருளிய" பரகேசரி குலோத்துங்கசோழனும்தான். மீண்டும் மீண்டும் வருவேன் குலோத்துங்கா!!!


this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.