http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 60
இதழ் 60 [ ஜுன் 15 - ஜுலை 15, 2009 ] இந்த இதழில்.. In this Issue.. |
"தமிழ்ப் படைப்பிலக்கியத்திற்கான களனை அமைப்பதில் சில சிறு பத்திரிகைகள் லாபநோக்கம் கருதாது தம்மை அர்ப்பணித்துப் பணிபுரிந்து வருகின்றன. அவற்றில் திறனாய்வு நோக்கிலான அம்சங்கள் மிகக்குறைவு என்றே சொல்லலாம். எனவே, தமிழ் இலக்கியத்தின் திறனாய்வுத் துறைக்கு ஒரு களனாகத் திகழ்வதையே தமிழ்மணி தன் பிரதான குறிக்கோளாகக் கொண்டு இயங்கும்."
'தமிழ்மணி' என்ற தலைப்பில், 'தமிழால் முடியும்' என்ற நம்பிக்கைத் தொடரோடு 9-ஆகஸ்ட்-1989 தினமணி இதழில் (பக்கம் 6) நெடிய அறிவிப்பு ஒன்று வெளியானது. அந்த அறிவிப்பின் ஒரு பகுதிதான் மேலே தரப்பெற்றுள்ளது. 1934 ஆம் ஆண்டு என்பது இந்திய விடுதலைப் போரில் ஒரு முக்கியமான ஆண்டு. மத்திய சட்டசபைக்குத் தேர்தல் நடந்த ஆண்டு அது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்குப் பிரசாரம் செய்வதையே நோக்கமாகக் கொண்டு சதானந்த் தினமணியை ஆரம்பித்தார். (ஏ.என்.சிவராமன், 'சுதந்திரம் கிட்டுவதற்கு அஸ்திவாரமாக அமைந்த காலம்' தினமணி - சுதந்திரப் பொன்விழா மலர், ஆகஸ்டு 1997, ப. 44) என்னும் திரு. ஏ.என்.சிவராமனின் குறிப்பு, தினமணியின் தொடக்கத்திற்கான நோக்கத்தைத் தெளிவுபடுத்தும். 1934இல் அரசியலை முதன்மையாகக் கொண்டு வெளிவரத் தொடங்கிய தினமணி நாளிதழில் 1989இல் வெளிவந்த தமிழ்மணி பற்றிய அறிவிப்பும் அதன் நோக்கமும் தமிழ் ஆர்வலர்களுக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தின. அரசியலை முதன்மை நோக்கமாகக் கொண்டு தொடங்கிய நாளிதழான தினமணியில் அரை நூற்றாண்டுக்குப்பிறகு வெளிவந்த 'தமிழ்மணி' பற்றிய அறிவிப்பு வாசகர் மனங்களில் ஏற்படுத்திய தாக்கம் அறியவேண்டிய ஒன்றாகும். "தமிழ் வளர்ச்சிக்கும் இலக்கிய மேம்பாட்டிற்கும் உதவும் வகையில் 'தமிழ்மணி' என்ற இணைப்புப் பகுதியைத் தினமணியில் வெளியிடுவதற்கு வாசகர்களின் சார்பாக மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். பழம்பெரும் வல்லுநர்களின் அறிவார்ந்த கருத்துகளை வெளியிடுவது போலவே, இலக்கியத் துறையில் சாதனை படைக்க நம்பிக்கையுடன் இறங்கிவரும் இளம் முயற்சியாளர்களையும் தமிழ்மணி ஊக்குவிக்க வேண்டும் (ஜி.கதிரேசன், 'வருக தமிழ்மணி' - சங்கப்பலகை, தினமணி சுடர், 26-ஆகஸ்டு-1989, ப.4). 'தமிழ்மணி' அறிவிப்புக் கண்டு எல்லையில்லாத மகிழ்வடைந்தேன். 'ஒரு புதிய தமிழ் யுகம்' பிறக்கிறது என்ற பூரிப்பில் எழுதுகின்றேன். தமிழன் தலைநிமிரத் தடம் சமையுங்கள். தமிழன் பார்வை விரியக் கண்ணாடி தாருங்கள். (கு.பச்சைமால், மேலது). என்பன போன்று வெளிவந்திருக்கும் பலவாய வாசகர் கடிதங்கள் தினமணியின் தமிழ்மணி இணைப்பின் வருகையைப் பலவாறு வரவேற்று மகிழ்ந்ததோடு, வாசகர்களின் எதிர்பார்ப்புகளையும் புலப்படுத்தின. ஆழ்ந்த தமிழ் உணர்வோடும் இலக்கிய நோக்கோடும் தொடங்கப் பெற்றதும் வாசகர்களின் மனங்களில் இலக்கியம் சார்ந்த பல்வேறு கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் கிளர்ந்தெழச் செய்ததுமாகிய தமிழ்மணியின் தோற்றமும் வளர்ச்சியும் ஒரு வரலாற்றுப் பதிவாகும். சுருக்கமாகவேனும் அந்த வரலாற்றை அறிந்தாலொழிய தமிழ் இதழியல் வரலாற்றில் தடம்பதித்த தமிழ்மணியின் தனித்தன்மைகளை உணர்தல் இயலாது. தமிழ்மணி - வரலாறும் வளர்ச்சியும் தமிழ் இலக்கியம், திறனாய்வு, புதினம், கவிதை, நாடகம் ஆகிய துறைகளில் புதிய படைப்புகளைப் பற்றிய அறிமுகம், கட்டுரைகள் ஆகியவற்றைப் புதன், சனிக்கிழமைகளில் 'தமிழியல்', 'மதிப்புரை'ப் பகுதிகள் வாயிலாக நாளிதழின் ஒரு பக்கத்தில் வெளியிட்டு வந்த தினமணி, இவற்றுக்காகச் சுடர் போன்று 'தமிழ்மணி' என்ற பெயரில் தனியொரு இணைப்பை வெளியிட வேண்டும் என்னும் தன் விருப்பத்தைப் புலப்படுத்திச் செய்தி வெளியிட்டது. ஆனால், காகிதவிலை உயர்வால் அந்த விருப்பத்தை முழுமையாக நிறைவேற்ற இயலாமல் போனது. என்றாலும், எப்படியும் தமிழ்மணியைத் தொடங்கி விடவேண்டும் என்ற உறுதி இருந்தது. அந்த உறுதியின் வெளிப்பாடாகப் பின்வரும் அறிவிப்பு அமைந்தது. "தமிழ்மணியைக் கைவிடவும் மனம் ஒப்பவில்லை. எனவே, தினமணி சுடரில் நான்கு பக்கங்களைத் தமிழ்மணிக்காகப் பயன்படுத்த முடிவு செய்திருக்கிறோம். வரும் 12-ஆகஸ்ட்-1989 சனிக்கிழமை முதல் தினமணி சுடர், அறிவியலும் தமிழ்மணியும் சேர்ந்தே இரட்டை இணைப்பாக எட்டுப் பக்கங்களில் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம் (தினமணி, 9-ஆகஸ்ட்-1989, ப.6)". அறிவிப்பில் குறிப்பிட்டதைப் போன்றே 12-ஆகஸ்ட்-1989 முதல் சனிக்கிழமைதோறும் 'தினமணி சுடர்' அறிவியலும் தமிழ்மணியும் சேர்ந்த இரட்டை இணைப்பாக எட்டுப் பக்க அளவில் வெளிவரத் தொடங்கியது. நான்கு பக்கங்கள் தமிழ்மணிக்கு ஒதுக்கப்பெற்றன. இது, தமிழ்மணியின் நெடிய வரலாற்றின் தொடக்கமாகும். தினமணி சுடரின் ஒரு பகுதியாக வெளியிடப்பெற்ற தமிழ்மணி 12-ஆகஸ்ட்-1989 முதல் 22-செப்டம்பர்-1990 வரையில் சனிக்கிழமைதோறும் வெளிவந்தது. சுடரைப் போன்றே எட்டுப்பக்க அளவில் தனி இணைப்பாகத் தமிழ்மணியை வெளியிடவேண்டும் என்றும் தினமணி ஆசிரியரின் பெருவிழைவு நிறைவேறும் காலம் வாய்த்தது. 29-செப்டம்பர்-1990 முதல் 12-டிசம்பர்-1991 முடிய தமிழ்மணி, எட்டுப் பக்க அளவில் விரிவான செய்திகளோடு சனிக்கிழமைதோறும் வெளிவந்தது. எல்லாமே மாறுதலுக்குரியது என்னும் வாழ்வியல் அடிப்படை தமிழ்மணியின் வரலாற்றிலும் உண்மையாகியது. எட்டுப்பக்கங்களோடு தனி இணைப்பாகப் பெருமிதத்தோடு வெளிவந்து கொண்டிருந்த தமிழ்மணி, மீண்டும் சுடரின் ஒரு பகுதியாகியது. இது, தமிழ்மணியின் வரலாற்றில் மூன்றாவது கட்டம். இந்தக் கட்டத்தில் வெளிவந்த தினமணி சுடரில், முதல் மூன்று பக்கங்கள் அறிவியலுக்கு ஒதுக்கப்பெற்றன. ஐந்து பக்கங்கள் தமிழ்மணிக்குத் தரப்பெற்றன. மீண்டும் ஒரு மாறுதல்; வடிவத்திலும் பக்க அளவிலுமாக அது அமைந்தது. நாளிதழ் அளவில் வெளிவந்த சுடர், தினமணி கதிர் அளவு வடிவில் சுருங்கி, 32 பக்கம் என்று அளவில் விரிந்து புதிய தோற்றத்தில் காட்சி அளித்தது. 32 பக்க இதழில் தமிழ்மணிக்கு 10 பக்கங்களே ஒதுக்கப்பெற்றன. 16-மே-1992 முதல் 3-ஏப்ரல்-1993 முடிய இந்தச் சூழல் நிலைத்தது. மீண்டும் ஒரு மாற்றம். தமிழ்மணியின் வரலாற்றில் நிறைவுப் பகுதியாக அது அமைந்தது. 10-ஏப்ரல்-1993 முதல் 5 பக்கங்களாகக் குறைந்து, பிறகு அதுவே ஒரு பக்கமாகி முடிந்து போகிறது. தமிழ்மணி வெளிவந்த கடைசி இதழ் 22-மே-1993 தினமணி கதிராகும். "பிற நாளிதழ்கள் அணுகத் துணியாத துறைகளில் தினமணி நம்பிக்கையுடன் ஈடுபடுவதன் காரணம், தினமணி வாசகர்களின் சிந்தனைத் திறனும் தமிழைப் பிற நவீன மொழிகளுக்கு ஈடாக வளர்க்கவேண்டும் என்பதில் எமக்கும் வாசகர்களுக்கும் உள்ள ஆர்வமுமேயாகும் (தினமணி, 9-ஆகஸ்ட்-1989, ப.6)." என்று மிகுந்த நம்பிக்கையோடும் ஆழ்ந்த கனவுகளோடும் அறிவித்து 12-ஆகஸ்ட்-1989 இல் தொடங்கப்பெற்ற தமிழ்மணி, வளர்ந்தும் தேய்ந்தும் 22-மே-1993 இதழோடு நிறைவு பெற்றது. தமிழ் இதழியல் வரலாற்றில் ஓர் அழகிய கனவு கலைந்தது. வடிவத்திலும், பக்க அளவிலும் பல மாற்றங்களோடு ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் வெளிவந்த தமிழ்மணியின் வரலாற்றை ஐந்து கட்டங்களாகப் பகுத்துக் கொள்ள இயலும். அதில், முதல் கட்டமாக அமைந்த - தினமணி சுடரின் ஒரு பகுதியாக - நான்கு பக்க - 12-ஆகஸ்ட்-1989 முதல் 22-செப்டம்பர்-1990 முடிய வெளிவந்த தமிழ்மணியே இக்கட்டுரைக்கு உரிய பொருளாகிறது, நான்கு பக்கத் தமிழ்மணியின் அமைப்பு, அதில் இடம்பெற்றிருந்த செய்திகள் ஆகியவற்றில் அறிமுகமாகவும் விரிவான வருங்கால ஆய்வுகளுக்கு ஒரு தொடக்கமாகவும் இக்கட்டுரை திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்மணி - நான்கு பக்க இணைப்பு முதல் இதழ் - அறிமுகம் தமிழ்மணியின் முதல் இதழில் தொடங்கப்பெற்ற 'தமிழில் இலக்கியத் திறனாய்வு' என்னும் கலந்துரையாடல், முதல் பக்கத்திலும் நான்காம் பக்கத்திலும் இடம்பெற்றது. திருமதி. ராஜம் கிருஷ்ணன், பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி, பேராசிரியர் அ.அ.மணவாளன் ஆகியோர் கலந்துகொண்ட அக்கலந்துரையாடலில் தினமணியின் சார்பில், அதன் நிர்வாக ஆசிரியர் கி.கஸ்தூரிரங்கன் கலந்துகொண்டார். தொடர்ந்து மூன்று இதழ்களில் அக்கலந்துரையாடல் இடம்பெற்றது. முதல் இதழின் இரண்டாம் பக்கம் 'மதிப்புரை'க்கு ஒதுக்கப் பெற்றுள்ளது. 'பாரதி தமிழ்', 'தேசிய காப்பியம்', 'கி.வா.ஜ. வின் சிலேடைகள்' ஆகிய மூன்று நூல்களின் மதிப்புரைகள் இடம்பெற்றுள்ளன. 'மங்கலதேவி கண்ணகிக் கோட்டம்', 'புதுக்கவிதைகளும் புதுச்செய்யுள்களும்' என்னும் இரு சிறு கட்டுரைகள் பக்கம் மூன்றில் அமைந்துள்ளன. 'உக்ரைனிய மொழியில் பாரதி கவிதைகள்' என்னும் சிறு கட்டுரையும் ஒன்பது நூல்கள் பற்றிய விவரங்களோடு 'வரப்பெற்றோம்' பகுதியும் பக்கம் நான்கில் இடம்பெற்றுள்ளன. 'தமிழில் இலக்கியத் திறனாய்வு' என்னும் கலந்துரையாடலும் மூன்று சிறு கட்டுரைகளும் மூன்று நூல்களுக்கான மதிப்புரையும் 'வரப்பெற்றோம்' பகுதியுமாகத் தமிழ்மணியின் முதல் இதழ் அமைந்துள்ளது. இரண்டாவது இதழில், 'உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்', 'சங்கப் பலகை' என்னும் தலைப்புகளில் இரு புதிய பகுதிகள் சேர்க்கப்பெற்றுள்ளன. சங்கப்பலகை, வாசகர்களின் கடிதங்கள் இடம்பெறும் பகுதி. உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள், தமிழை, தமிழ்ச் சொற்களை விளக்கும் தொடர். தமிழண்ணல் எழுதியது. மூன்றாவது இதழில், மேலும் ஒரு புதிய பகுதி இடம்பெறுகிறது. 'இலக்கிய மேடை' என்ற தலைப்பில் ஏதாவது ஒரு பொருள் பற்றி அசோகமித்திரன் எழுதும் களமாக அது அமைகிறது. 'மதம் - எழுத்து - சமூகம்' என்பது முதல் கட்டுரையின் தலைப்பு. அசோகமித்திரனின் இலக்கிய மேடையும் தொடர்ந்து வெளிவந்தது. தமிழ்மணியின் நான்கு பக்கங்களில் பொதுவாகக் கட்டுரைகள், மதிப்புரைகள், வாசகர் கடிதங்கள் இடம்பெற்றன. பெரும்பாலும் இரண்டு பக்கங்கள் கட்டுரைகளுக்கும் ஒரு பக்கம் மதிப்புரைக்கும் ஒதுக்கப்படும். ஒரு பக்கத்தில் சங்கப்பலகையும் (வாசகர் கடிதங்கள்), தமிழண்ணலின் தொடர் கட்டுரையும் அமையும். இது, தமிழ்மணியின் பொதுவான அமைப்பு. சில நேரங்களில் இதில் மாற்றங்களும் இருக்கும். மதிப்புரை இரு பக்கங்களும் கட்டுரை ஒரு பக்கமும் சங்கப்பலகை முதலிய பிற செய்திகள் ஒரு பக்கமுமாக அமைவதும் உண்டு. கட்டுரைகள், மதிப்புரைகள், சங்கப்பலகை - இவை தமிழ்மணியின் முதன்மைப் பகுதிகள். 'கட்டுரைகள், மதிப்புரைகள், சங்கப்பலகை (வாசகர் கடிதங்கள்) ஆகியவை தமிழ்மணிக்குப் பெருமைசேர்த்த பாங்கினை இனிவரும் பக்கங்களில் காணலாம். கட்டுரைகள் தமிழ்மணியில் எண்ணற்ற கட்டுரைகள் வெளிவந்தன. இலக்கியக் கட்டுரைகள், வரலாற்றுக் கட்டுரைகள், திறனாய்வுக் கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் எனப் பலவாறு அவற்றை வகைப்படுத்தலாம். 'சுவடழிந்த கோயில்கள்' (4-ஆகஸ்ட்-1990), 'வாராது போல வந்த மாமணியைத் தோற்றோமே...' (17-பிப்ரவரி-1990), 'வ.வே.சு.ஐயரின் சிறுகதை இலக்கியக் கொள்கை' (8-செப்டம்பர்-1990), 'கு.ப.ரா. குறிப்பிடும் நான்கு கதைகள்' (30-டிசம்பர்-1989), 'மரபுத்தமிழ் படைப்பிலக்கியத்திற்கு எதிரியா?' (14-அக்டோபர்-1989), 'கூத்து, நவீன நாடகத்திற்கு அளிக்கும் பங்கு' (21-அக்டோபர்-1989), 'வடமொழியும் தென்மொழியும்' (11-நவம்பர்-1989), 'தெரிந்த சொல்லுக்கு அகராதி தேவையா?' (25-நவம்பர்-1989), 'தமிழில் ஷேக்ஸ்பியர் மொழிபெயர்ப்புகள்' (16-டிசம்பர்-1989), 'ந.பிச்சமூர்த்தி' (2-செப்டம்பர்-1989) போன்ற பல கட்டுரைகள் அரிய புதிய செய்திகளை வெளிப்படுத்திப் பலகோணங்களில் சிந்திக்கத் தூண்டின; புதிய விழிப்பை ஏற்படுத்தின. புதிய கருத்துகளை முன்வைத்த சிறப்பான பல கட்டுரைகளில் தமிழ்மணியின் வரலாற்றில் குறிப்பிடத்தக்கதொன்றாக அமைந்த 'தமிழில் ஒரு மரபுப் பிரச்சினை என்னும் கட்டுரை இங்கு ஆய்வுக்கு உரியதாகக் கொள்ளப்படுகிறது. வாசகர் ஒருவர் எழுதிய கடிதத்திற்கு உரிய பதிலாக இக்கட்டுரை அமைந்துள்ளது. அந்த வாசகரின் கடிதமும் அதற்குப் பதிலாக அமைந்த இதழாசிரியரின் கருத்தும் அறியத்தக்கன. அவை, 'தமிழில் ஒரு மரபுப் பிரச்சினை' என்னும் கட்டுரையை விளங்கிக் கொள்ள உதவும். "தினமணி 25-ஜூந்1990 தேதியிட்ட இதழில் இரு அரசியல் பெயர்களில் சிறு மாறுதல்கள் செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். இலங்கை அதிபர் பிரேமதாசாவைப் 'பிரேமதாசர்' என்றும் நம் நாட்டு மத்திய அமைச்சர் உபேந்திராவை 'உபேந்திரர்' என்றும் வெளியிட்டிருக்கிறீர்கள். இவர்கள் அரசியலில் வலுவான நிலையில் இன்று இருக்கிறார்கள் என்பதற்காகவா இப்படி புது மரியாதைப் பெயர்களில் அவர்களை அழைக்கத் தொடங்கியிருக்கிறீர்கள்? -ஜி.கதிரேசன் இல்லை. தமிழ்மொழியின் மரபைப் பேணுவதற்காக தினமணி எடுத்துவரும் பல புதிய முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும். மேலே படியுங்கள். - ஆசிரியர்' (தமிழ்மணி, 14-ஜூலை-1990, ப.1) வாசகர் ஜி.கதிரேசனின் கடிதம் தமிழ்மணியின் தமிழ்நடை சார்ந்த கருத்தை அறிவதற்கும் தமிழ் மரபை இயன்றவரையில் பேணிக்காக்க அது எடுத்துவரும் முயற்சிகளை உணர்வதற்கும் அரியதொரு வாய்ப்பாக அமைந்தது. செய்தியின் முதன்மை கருதி, 'தமிழில் ஒரு மரபுப் பிரச்சினை' என்னும் கட்டுரையின் இன்றியமையாத பகுதிகள் தரப்பெற்றுள்ளன. வடமொழிப் பெயர்களைத் தமிழில் எழுதும்பொழுது, 'அன்' அல்லது 'அர்' விகுதிகளைச் சேர்த்து எழுதுவது தமிழ்மரபாகும். ராம, க்ருஷ்ண போன்ற வடமொழிப் பெயர்கள் இராமன், கிருஷ்ணன் என்று தமிழில் வழங்குகின்றன. அதேபோன்று வடநாட்டுப் பெரியார்களின் பெயர்களைத் தமிழாக்கம் செய்யும்பொழுது மரியாதைப் பன்மையைக் குறிக்கும் 'அர்' விகுதியைச் சேர்த்து எழுதுவது நம் மரபு. (எ-டு) அரவிந்தர், திலகர், விவேகானந்தர். வரலாற்றுப் புகழ் பெற்ற பெயர்களையும் இவ்வாறே எழுதி வந்திருக்கிறோம். (எ-டு) புத்தர், அசோகர், ஹர்ஷர். கடந்த சில ஆண்டுகளில்தான் இந்த மரபு ஆங்கிலத்தின் தாக்கத்தால் சீர்குலைந்து வருகிறது. ஆங்கில மொழியாக்கத்தில் பெயர்களின் பின்னர் அன்/அர்/அம் விகுதிகள் சேர்க்கப்படுவதில்லை என்பதாலும் பெயர்களின் ஈற்றில் உள்ள அகரம் ஆங்கிலத்தில் ஆகாரமாக நீட்டி உச்சரிக்கப்படுகிறது என்ற தவறான எண்ணத்தினாலும் தமிழிலும் இப்போது இராமன், கிருஷ்ணன் போன்ற மரபுப் பெயர்களை 'ராமா', 'கிருஷ்ணா' என மாற்றி எழுதி வருகின்றனர். இதே காரணங்களினால் தமிழ்ப் பெயர்ச் சொற்களின் ஈற்றில் இருக்க வேண்டிய 'அம்', 'அந்து'ச் சாரியைகளும் மெல்ல மெல்ல மறைந்து வருகின்றன. 'கேரளம்', 'கர்நாடகத்தில்' போன்ற வழக்குகள் நலிந்து 'கேரளா', 'கர்நாடகாவில்' முதலிய தமிழ் இலக்கணத்திற்குப் புறம்பான சொற்கள் புழக்கத்தில் வந்து கொண்டிருக்கின்றன. இந்திரன் என்பது ஆண்பால்; இந்திரா என்றால் பெண்பால். 'உபேந்திரா' எந்தப் பாலைச் சேர்ந்த பெயர்? தெலுங்கு மொழியில் 'உபேந்த்ர' என்றே எழுதுகிறார்கள். ராமதாஸ என்ற வடமொழிப் பெயரை இராமதாசர் என்றுதானே இதுவரை தமிழில் எழுதி வந்திருக்கிறோம். ப்ரேமதாஸ மட்டும் பிரேமதாசாவாக ஆவதேன்? ஹர்ஷவர்த்தனர், பிரபாகவர்த்தனர் என்று நம் வரலாற்றுப் பெயர்களை எழுதி வந்திருக்கும்போது, இலங்கை முன்னாள் அதிபரின் பெயரை மட்டும் 'ஜயவர்த்தனா' என்று ஏன் நீட்டி எழுத வேண்டும்? பெயர்களுடன் வேற்றுமை உருபுகளைச் சேர்க்கும்பொழுது கூட, 'அன்'/'அர்' விகுதிகளையோ அத்துச் சாரியையோ கூட்டாது, 'சின்மயானந்தாவின் பேருரை', 'ஜயவர்த்தனாவின் அறிக்கை', 'உபேந்திராவின் வருகை', 'கேரளாவில் மழை' என்றெல்லாம் பத்திரிகைகள் எழுதி வந்திருக்கின்றன. இவற்றிற்குத் தமிழில் இலக்கணம் எப்படிக் கூறுவது? தினமணியில் தமிழ் மரபைப் பேணவேண்டும் என்ற ஆர்வத்தில் முதல் கட்டமாக, 'பிரேமதாசா', 'உபேந்திரா' போன்று தவறாக நீட்டி எழுதப் பெறும் பெயர்களை 'பிரேமதாச', 'உபேந்திர' என்று மாற்றி எழுதத் தொடங்கியிருக்கிறோம். மேலும். வேற்றுமை உருபுகளைச் சேர்த்து எழுதும்போது 'பிரேமதாசவின்', 'உபேந்திராவின்' என்று தினமணியில் வருவது தமிழ் மரபுக்கு உகந்ததாக இல்லையே என்று சில வாசகர்கள் சுட்டிக் காட்டிய பிறகு, வடமொழிப் பெயர்களைத் தமிழாக்கம் செய்து எழுதும்போது, இடத்திற்குத் தக்கபடி அன்/அர்/அம் விகுதியை அல்லது அத்துச் சாரியைச் சேர்த்து நெடுநாளைய தமிழ்மரபின்படி எழுதவேண்டும் என்றும் முடிவு செய்து ஓரளவு முயன்று வருகிறோம். (எ-டு) இலங்கை அதிபர் பிரேமதாசருடன் விடுதலைப் புலிகள் பேச்சு முறிவு. மத்திய அமைச்சர் உபேந்திரரின் அறிக்கை. ஆந்திரத்தில் புயல்; கேரளத்தில் மழை. ஆயினும், இந்த மரபு மீட்சியைச் சிறிது சிறிதாகத்தான் நடைமுறைக்குக் கொண்டுவர இயலும் என்று தோன்றுகிறது. இந்த முயற்சி முழுவதுமாக வெற்றி பெறுமா என்பது தினமணி வாசகர்களின் தமிழ் ஆர்வத்தைப் பொருத்திருக்கிறது. மற்ற பத்திரிகைகளும் ஒளி, ஒலி செய்தி அறிக்கைகளும் ஒத்துழைத்தால், பழைய தமிழ்மரபை முழுவதும் இழந்து விடுவதற்குள் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை தினமணியில் பணிபுரியும் எங்களுக்கு இருக்கிறது. ஒரு நாளிதழ் வணிக நோக்கத்தை மறந்துவிட்டு, மொழியை - மொழியின் பழைய மரபைப் பேணுவதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகள் மிகமிக அரிதான நிகழ்வாகும். தமிழ் மரபை மீட்டெடுத்தல் என்னும் சிந்தனையும் அதற்கான முயற்சிகளும் தமிழ் இதழியல் வரலாற்றில் தினமணியின் சிறப்பான சாதனையாகும். "பழைய தமிழ் மரபை முழுவதும் இழந்து விடுவதற்குள் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை தினமணியில் பணிபுரியும் எங்களுக்கு இருக்கிறது" என்னும் இதழாசிரியர் ஐராவதம் மகாதேவனின் எண்ணம் - மன உறுதி ஆழ்ந்து எண்ணத்தக்கது. தமிழ்மணியின் - தினமணி ஆசிரியரின் இந்தக் கட்டுரை அறிஞர், ஆய்வாளர் இடையே ஏற்படுத்திய தாக்கம் பற்றி அறிவது இன்றியமையாததாகும். தமிழ் மரபு கெடாதவாறு வடமொழிப் பெயர்களை எழுதுவதில் ஏற்படும் சிக்கல்களைக் குறிப்பிட்டுத் 'தமிழில் ஒரு மரபுப் பிரச்சினை' என்ற என் கட்டுரை தமிழ்மணியில் (14-ஜூலை-1990) வெளியானது. அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்த கருத்துகளை ஆதரித்தும் விமர்சித்தும் பல தமிழறிஞர்கள் கடிதங்கள் எழுதியிருக்கின்றனர். தமிழ் மரபு என்றால் என்ன? தமிழில் மரபுகளைப் பேணுவது எப்படி? தமிழில் மரபுகளைக் காக்கவேண்டிய அவசியம்தான் என்ன? இத்தகைய பிரச்சினைகளைச் சுவையுடனும் கருத்தாழத்துடனும் அலசும் வாசகர் கடிதங்களை இன்றும் அடுத்த சனிக்கிழமையன்றும் வாசகர் மன்றப் பகுதியில் இரு தொகுப்புகளாக வெளியிடுகிறோம். என்னும் ஆசிரியர் குறிப்போடு, தினமணி 'வாசகர் மன்றம்' பகுதியில் 4-ஆகஸ்ட்-1990 இல் வெளியிடப்பெற்ற வாசகர் மடல்களில் குறிப்பிடத்தக்க ஒன்று இங்குத் தரப்பெற்றுள்ளது. மொழியியல் தொடர்பான சில புதிய மரபுகள் பற்றிய சிந்தனைகளுக்குப் பின்புலமாகவும் நிலைக்களனாகவும் இருந்து வருகிறது தினமணியும் தினமணி சுடரும். தினமணி பின்பற்றி வரும் சில மொழி மரபுகள் போற்றுதற்கு உரியனவாகவும் வேறு சில மரபுகள் கேள்விக்குரியனவாகவும் அமைந்துள்ளன. தினமணி சுடரின் ஒரு பகுதியாகிய தமிழ்மணியில் 14-ஜூலை-1990 இல் வெளியாகியுள்ள 'தமிழில் ஒரு மரபுப் பிரச்சினை' என்ற கட்டுரை, தினமணியின் மொழி மரபுகளை ஒட்டுமொத்தமாக மதிப்பீடு செய்வதற்கு வாய்ப்பளிக்கிறது. புதிய மொழிகளின் தாக்கத்தினால் தமிழின் மொழி மரபுகள் மறுபரிசீலனைக்கு உரியவையாகின்றன. புதிய மொழி மரபுகளை எந்த அளவுக்குத் தமிழ் போன்ற மொழிகள் தவிர்க்க முடியும் என்று தெரியவில்லை. ஆயினும் தினமணி போன்ற மொழியியல் உணர்வுள்ள நாளிதழ்கள் புதிய மொழி மரபுகளைப் போற்றுவதில் ஒரு சீரான கொள்கையைப் பின்பற்ற முன்வரவேண்டும். இந்த முயற்சியில் பழைய மொழி மரபுகளைத் தளர்த்த வேண்டிய இடங்களில் தளர்த்தியும் போற்ற வேண்டிய இடங்களில் போற்றியும் தவிர்க்க வேண்டிய இடங்களில் தவிர்த்தும் மொழியைத் தரப்படுத்த வேண்டும். (இரா.கோதண்டராமன், மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி). தமிழ் மரபு என்றால் என்ன? தமிழ் மரபுகளைப் பேணுவது எப்படி? தமிழ் மரபுகளைக் காக்க வேண்டியதன் அவசியம் என்ன? என்பன போன்ற வினாக்களுக்கு விடைதேடும் முயற்சியில் ஆழ்ந்து ஈடுபட்ட தமிழ்மணியின் தமிழுணர்வு போற்றத்தக்கதாகும். மதிப்புரைகள் தமிழ்மணியில் அளவற்ற நூல் மதிப்புரைகள் வந்துள்ளன. ஒரு பக்கம், அரைப்பக்கம், கால் பக்கம் என்று பல்வேறு நிலைகளில் தேவைகளுக்கு ஏற்ப மதிப்புரைகள் நூல்களின் தரம், தரமின்மையைப் புலப்படுத்தும் வகையில் இடம்பெற்றுள்ளன. அவை, நூல்களைத் தரம் அறிந்து படித்தல் அல்லது ஒதுக்குதல் என்பதற்கான வாய்ப்பை வாசகர்களுக்கு உருவாக்கித் தந்தன. நூல் மதிப்புரை என்பதைத் தன் முதன்மையான பணிகளில் ஒன்றாகக் கருதிச் செயல்பட்ட தமிழ்மணியின் தலையாயதொரு மதிப்புரையாக அமைந்தது 'ஐந்திறம்' என்னும் நூலுக்கான மதிப்புரையாகும். அந்த மதிப்புரையும் அது ஏற்படுத்திய தாக்கமும் ஒரு வரலாற்றுப் பதிவாகும். 'ஐந்திறம் என்ற இலக்கிய (இலக்கண) மோசடி' என்னும் புதுமையான தலைப்புடன் வெளிவந்த 'ஐந்திறம்' என்று சொல்லப்பெற்ற நூலுக்கான மதிப்புரையான அது, ஒரு மாறுபட்ட கோணத்தில் அமைந்திருந்தது. நூல் பற்றிய மதிப்புரையாக அமையாமல், நூலின் நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உரியதாக்கியது அந்த மதிப்புரை. 'ஐந்திறம்' என்ற பெயரில் தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் மூலம் அன்றைய தமிழக அரசின் நிதி உதவியுடன் வெளியிடப்பெற்ற அந்நூல் ஒரு போலி நூல் என்பதைத் தெளிவுபடுத்துவதே மதிப்புரையின் முதன்மையான நோக்கமாக இருந்தது. அதற்கான காரணங்களை முறையாக முன்வைத்து மதிப்புரை வளர்ந்து செல்கிறது. நூலில் இடம்பெற்றுள்ள அன்றைய தமிழக அரசின் கல்வி அமைச்சர் திரு. செ. அரங்கநாயகத்தின் அணிந்துரை, திரு. கணபதி ஸ்தபதியின் நீண்ட அறிமுக உரை, நூலைப் பதிப்பித்த புலவர் வீரபத்திரன் பற்றிய குறிப்புகள் ஆகியவற்றை முன்வைத்து தம் வாதத்தைத் தொடங்குகிறார் மதிப்புரையாளர். 30-அக்டோபர்-1989 தினமணியில் வெளியான செய்தி, அது வாசகர் மனங்களில் எழுப்பிய ஐயங்கள், அதைத் தொடர்ந்து தஞ்சை சரஸ்வதி மகால் நூலக இயக்குனருக்குத் தினமணி அனுப்பிய கடிதம், அதில் எழுப்பியிருந்த வினாக்கள், அதற்கு நூலகர் அனுப்பிய பதில் என்று வளரும் மதிப்புரை, அதுநாள் வரையில் அந்நூல் பற்றி வெளியாகியிருந்த மூன்று மதிப்புரைகளையும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறது. 'தமிழ்ப்பொழில்', 'செந்தமிழ்ச் செல்வி' ஆகிய இலக்கியத் திங்கள் இதழ்களில் எழுதப் பெற்றிருந்த மூன்று மதிப்புரைகளும் 'ஐந்திறம்' என்பது போலிநூல் என்பதையே வற்புறுத்தியுள்ளமை சுட்டிக் காட்டப்பெறுகிறது. ஒல்லும் வழியெல்லாம் 'ஐந்திறம்' என்பது ஒரு போலிநூல் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தும் மதிப்புரையாளர் பின்வருமாறு மதிப்புரையை நிறைவு செய்கிறார். நயத்தையும் நாகரிகத்தையும் பாராட்டாது, உண்மையை மட்டும் கூறவேண்டுமெனில் 'ஐந்திறம்' என்ற இந்த நூல் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வீரபத்திரனாராலோ அல்லது வேறு எவராலோ இயற்றப்பட்ட ஒரு மூன்றாந்தரப் போலிப் படைப்பாகும். இதை எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு பழந்தமிழ் இலக்கணநூல் என்று பதிப்பித்திருப்பது, இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இலக்கிய (இலக்கண) மோசடியாகும். தமிழ் மக்களின் தமிழுணர்வுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகும். தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் இந்தச் சுவடி அங்கு இருந்ததே இல்லை என்று மறுத்துக் கூறிய பின்னரும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் சென்னை தமிழாராய்ச்சி நிறுவனமும் இந்த நூலைப் பதிப்பிக்கும் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்ட பின்னரும் தமிழக அரசு தமிழாய்வுக்குத் தொடர்பில்லாத ஒரு துறை மூலம் இந்த நூலைப் 'பத்தே நாட்களில்' அச்சிட்டு வெளியிட்டது ஏன் என்பது முந்தைய அரசுக்குத்தான் தெரியும். இனியாவது இந்தப் 'பத்து லட்சம்' பாடல்களை ஒலிப்பதிவு செய்யவும் அச்சேற்றவும் நிதியுதவி தொடர்ந்து அளிக்கப்படுவது நிறுத்தப்படுமா? 'ஐந்திறம் என்ற இப்போலி நூல் பொது நூலகங்களில் இருந்து அகற்றப்படுமா? இத்தகைய மோசடிகள் நடக்காமலிருக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விகளுக்கு இன்றைய தமிழக அரசுதான் தமிழுலகிற்கு விளக்கம் அளிக்க வேண்டும். 3-பிப்ரவரி-1990 தினமணி இதழில் வெளிவந்த இந்த மதிப்புரையை எழுதியவர் அன்றைய தினமணி ஆசிரியரான திரு. ஐராவதம் மகாதேவன். தெளிவாகவும் துல்லியமாகவும் துணிவாகவும் எழுதப்பெற்ற இந்த மதிப்புரை பரவலான வரவேற்பைப் பெற்றது. 'ஐந்திறம் - தமிழ்க் கலாசாரத்தின் நோய்க்குறி', (17-பிப்ரவரி-1990), 'ஐந்திறத்தை இருட்டடிப்பு செய்திடுவதே பெரிய மோசடி' (3-மார்ச்-1990), 'ஐந்திறம் வெளியீடு ஒரு தமிழ்ப் பணியே' (10-மார்ச்-1990) என்னும் தலைப்புகளோடு தொடர்ந்து மூன்று வாரம் சங்கப் பலகையில் வாசகர் கடிதங்கள் இடம்பெற்றன. ஐந்திறம் வெளியீட்டுடன் தொடர்புடைய அன்றைய அமைச்சர் திரு. செ. அரங்கநாயகம், திரு. கணபதி ஸ்தபதி ஆகியோர் கடிதங்கள் நீங்கலாக எஞ்சிய அனைத்து வாசகர் கடிதங்களும் திரு. மகாதேவனின் கருத்தை ஏற்று ஐந்திறம் ஒரு போலிநூல் என்பதை உறுதி செய்யும் விதமாகவே அமைந்திருந்தன. அவற்றில் சில காணுதல் தகும். சுமார் இரண்டரையாண்டுகளுக்கு முன் நான் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலிருந்தபோது தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் 'ஐந்திறம்' நூலை அனுப்பி, கருத்துரை கேட்டிருந்தார். இது, பழைய நூலன்று; கற்பித நூல்; தமிழ் மரபுக்கு மாறுபட்டது என்பதை விளக்கி எழுதியிருந்தேன். (பேராசிரியர் மு. சண்முகம்பிள்ளை, தமிழ்மணி, சங்கப்பலகை, 10-மார்ச்-1990, ப.4). இதுபோன்ற இலக்கிய மோசடிகளை அரசாங்கம் ஆதரிப்பதும் அரசுக்கு அஞ்சி, சிலர் வெளிப்படையாக மறுப்புக் கூறாததும் அவலச் செய்திகளாகும். இம்மோசடியை வெளியுலகுக்கும் தமிழ் உலகுக்கும் எடுத்துக் காட்டியிருப்பதை உளமாரப் பாராட்டுகிறேன். (மு.கு.ஜகந்நாதராஜா, தமிழ்மணி, சங்கப்பலகை, 17-பிப்ர்வரி-1990, ப.4). ஒரு நூலுக்கான மதிப்புரை எப்படி அமையவேண்டும் என்பதற்குத் தக்கதோர் சான்றாக திரு. மகாதேவனின் 'ஐந்திறம்' பற்றிய மதிப்புரை விளங்குகிறது. இம்மதிப்புரையை எழுதுவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் பிறருக்கு ஒரு வழிகாட்டுதலாக அமைந்துள்ளன. 'ஐந்திறம் என்னும் நூலுக்கு நான் எழுதியிருந்த மதிப்புரையைத் திறனாய்வு என்பதைவிடப் புலனாய்வு என்று கொள்வதே பொருந்தும் (3-மார்ச்-1990) என்னும் திரு. மகாதேவனின் கருத்தும் குறிப்பிடத் தக்கதாகும். ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் ஐந்து படிநிலைகளாக வளர்ந்து வாழ்ந்த தமிழ்மணியின் பணி - குறிப்பாக, நான்கு பக்க அளவிலும் எட்டுப் பக்க அளவிலுமாக - ஏறக்குறைய இரண்டாண்டுகள் வெளிவந்த தமிழ்மணியின் பங்களிப்பு மகத்தானது. ஓர் இதழ் பெறக்கூடிய வெற்றியை இதழின் இணைப்பாக - வாரம் இருமுறை மட்டுமே வெளிவந்த தமிழ்மணி பெற்றது வியப்பானதொரு வரலாறு. புதிய படைப்பாளர்களும் புதிய வாசகர்களுமாக ஒரு புதிய இலக்கியத்தடம் உருவாக வழிவகுத்தமை, மொழியியல் தொடர்பான சில புதிய மரபுகள் பற்றிய சிந்தனைகளுக்குப் பின்புலமாகவும் நிலைக்களனாகவும் இருப்பதை ஒரு தவமாகக் கருதிச் செயல்பட்டமை மிகப்பெரியதொரு இலக்கிய மோசடியைக் கண்டறிந்து வெளிப்படுத்தியமை ஆகியவை திரு. ஐராவதம் மகாதேவனை ஆசிரியராகக் கொண்டு இயங்கிய தினமணியின் ஓர் இணைப்பாக வெளிவந்த தமிழ்மணியை இதழ் என்ற நிலையில் இருந்து இயக்கம் என்ற நிலைக்கு உயர்த்தின. இதழ் இயக்கமாகி, இயக்கம் வரலாறாகி, அந்த வரலாறு காலப் பேரேட்டில் பதிவாகி நம் கண் முன்னே நெடிதோங்கி நிற்கிறது. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |