http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 60

இதழ் 60
[ ஜுன் 15 - ஜுலை 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

பேராசிரியர் மா.ரா.அரசு
பேராசிரியர் மா.ரா.அரசு புகைப்படத்தொகுப்பு
அரசு என்னும் அறிஞர் பெருந்தகை
இதழியல் இமயம்
ஓய்வு ஏது ஐயா உங்களுக்கு
இங்கிவரை யாம்பெறவே...
அரசு என்னும் அரிய மனிதர்
பேராசிரியருக்கு, அன்புடன்...
இதழா...? இயக்கமா...?
நிலா நிலா போ! போ!
இதழ் எண். 60 > சிறப்பிதழ் பகுதி
இங்கிவரை யாம்பெறவே...
லலிதாராம்
வரலாறு.காம்-க்கு பரிச்சியம் ஆனவர்தான் என்ற போதும், பேராசிரியர் மா.ரா.அரசுவுக்கு வரலாறு.காம்-ஐப் பற்றித் தெரிந்த அளவுக்கு வரலாறு.காம்-க்கும் அதன் வாசகர்களுக்கும் மா.ரா.அரசுவைப் பற்றி அதிகம் தெரியாது. அப்படித் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இந்தச் சிறப்பிதழைத் தயாரித்ததன் மூலம் எனக்குக் கிடைத்தது. யாம் பெற்ற இன்பம் பெருக எம் வாசகர்களும்.



மா.இராசமாணிக்கனாரின் தமிழ்ப் பணியையும், அவரது குடும்பத்தாரின் பணியையும் அறிந்தவர் எவருக்கும், தாங்களும் தமிழ்த் துறையில் ஈடுபாடு கொண்டவராக இருப்பீர்கள் என்று உணர்தல் கடினமல்ல. இருப்பினும், தமிழ்த் துறையில் குறிப்பாக இதழியலை ஆய்வுக்காக எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?


நீங்கள் சொன்னது போல, பிறந்த சூழல் காரணமாக, தமிழ் இலக்கியங்களும், வரலாறும் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்குமே பரிச்சியமான துறைகள்தான். விவரம் தெரிந்த பின், பல வருடங்கள் என் தந்தையாருடன் இருக்கும் பேறினை நான் பெறவில்லை. இருப்பினும், இருந்த கொஞ்ச ஆண்டுகளில் கூட, அப்பாவின் கட்டுரைகள், புத்தகங்கள், அவரைப் பார்க்க வருபவர்களுடன் அவர் நிகழ்த்தும் உரையாடல்கள் போன்ற காட்சிகளைப் பார்க்கும் போது, என்னை அறியாமலே எனக்குள் தமிழ் மேல் ஆர்வம் எழுந்தது. அது மட்டுமின்றி, நாங்கள் அனைவருமே தமிழ்தான் படிக்க வேண்டும் என்று அப்பா விரும்பினார். எங்கள் குடும்பத்தில் என் உடன் பிறந்தோரில் பெரும்பாலானோர் ஆசிரியர் வேலைக்கே சென்றனர். ஒரே ஒருவர்தான் மருத்துவத் துறைக்குச் சென்றவர். அப்படித் துறை மாறிச் சென்ற டாக்டர் கலைக்கோவன் கூட மருத்துவத்தை விட வரலாற்றுத் துறையில்தான் அதிக ஆர்வத்தோடு உழைக்கிறார்.


என்னைப் பொறுத்த மட்டில், ஏதேனும் ஒரு துறையை தேர்வு செய்து, அதில் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் கல்லூரி நாட்களில் எழுந்தது. என்னுடைய மூத்த அண்ணன் இளங்கோவன் புதுக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். கல்லூரிப் பணிக்கு வருவதற்கு முன் இதழாசிரியராய் இருந்திருக்கிறார். மதுரையிலிருந்து வந்த தமிழ்நாடு மற்றும் சென்னையிலிருந்து வந்த 'சுதேசமித்ரன்' போன்ற இதழ்களில், பல புகழ் பெற்ற ஆசிரியர்களுடன் அவர் பணியாற்றியிருக்கிறார். அவருக்கு இதழியலில் ஆர்வம் மிகுந்திருந்ததால், ஆய்வுகள் செய்யத் தொடங்கினார். 1975-க்குப் பின், அவர் கல்லூரிப் பணிக்கு வந்த பிறகு, தனக்கு ஒழிந்த நேரத்தில் எல்லாம் இதழ்களைப் பற்றிய ஆய்வில் செலவிட நினைத்தார். அந்தப் பணியில் அவர் ஈடுபடும் போது, நானும் அவருடன் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவருக்கும் என்னை பிடிக்கும் என்பதால் தயக்கமின்றுச் சேர்த்துக் கொண்டார். அந்தத் துறைதான் எனக்கு ஏற்ற துறை என்று நான் உணராத போதும், கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் அவரோடு சேர்ந்து உழைத்தேன்.


1975-ல், தாங்கள் ஆய்வினைத் தொடங்கிய காலத்தில், இதழியல் என்ற துறையே தமிழுக்கு புதிய ஒன்றாய் இருந்திருக்கும். அக் காலகட்டத்தில் எப்படி ஆய்வுகளை மேற்கொண்டீர்கள்?

நான் 1975-ல் எம்.ஏ தமிழ் முடித்தவுடன், பச்சையப்பன் அறக்கட்டளை காஞ்சிபுரத்தில் நடத்திய கல்லூரியில் 'திருத்துனர்' (Tutor) பணியில் சேர்ந்தேன். காஞ்சிபுரத்தில் வேலை என்ற போதும், சென்னைக்கு அடிக்கடி வந்துவிடுவேன். அண்ணனுக்கு இரவில் வேலை செய்ய ரொம்பப் பிடிக்கும். அவருடன் சேர்ந்து எனக்கும் இரவில் வேலை செய்வது பழகிவிட்டது. அன்றைய காலகட்டத்தில், சென்னையில் இணையற்ற நூலகமாய் விளங்கிய நூலகம் - மறைமலை அடிகள் நூலகம். அந்த நூலகத்தில் சிறப்பு அனுமதி பெற்று, இரவு 10.00 மணிக்கு தொடங்கி இரவெல்லாம் இதழ்களை ஆராய்வோம். அப்போதுதான் பழைய இதழ்களை எல்லாம் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. அண்ணனுக்காக பார்க்கத் தொடங்கி, அவ்விதழ்களைப் படித்த போது, எத்தனை விதமான செய்திகள் இருக்கின்றன என்று புரிய ஆரம்பித்தது. எனக்கு எழுந்த ஆர்வத்தைப் பார்த்து, அண்ணன் என்னிடம் நிறைய உரையாடுவார். வெவ்வேறு கோணங்களில் ஆய்வு செய்யத் தூண்டுவார். என் அணுகு முறையை கலைக்காமல், என் போக்கில் ஆய்வு செய்ய முழு உரிமையும் கொடுப்பார். 1980-ல் அண்ணன் காலமானார். அந்த குறைந்த காலத்திலேயே, இதழியல் பற்றி அருமையான நூல்கள் எழுதினார். அந்த நேரத்தில் அவருடன் நானும் இருந்தது என் இதழியல் ஆர்வத்துக்கு ஓர் அடிப்படைக் காரணம்.

இதழியல் என்பது இதழ்கள் தொடர்பான துறை என்று புரிந்தாலும் கூட, 'இதழியல் ஆய்வு' என்று சொல்லும் போது, எதைக் குறிப்பிடுகிறீர்கள்? இதழ்களைக் கொண்டு நாம் என்ன ஆய்வுகள் நிகழ்த்த முடியும்?

நீங்கள் எப்படி கல்வெட்டுகளை வைத்துக் கொண்டு வரலாற்றை முழுமையாகவும் உண்மையாகவும் பதிவு செய்ய நினைக்கறீர்களோ, அதே போல, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் வரலாற்றை - குறிப்பாகச் சொன்னால் ஆங்கிலேய ஆட்சிக்குப் பிற்பட்ட காலகட்டத்து இந்திய வரலாற்றையும் தமிழ் வரலாற்றையும் முழுமையாக புரிந்து கொள்ள, நமக்குக் கிடைத்திருக்கும் ஓர் அபூர்வமான சொத்து என்று இதழ்களைக் கூறலாம். 'இதழியல் ஆய்வு' என்று சொல்லும் போது - இதழ்களின் வரலாறை ஆராய்தல், இதழ்களுக்காகவே தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட இதழாளர்களைப் பற்றி வெளியுலகத்துக்குத் தெரிவித்தல், தமிழ் நாட்டில் இதழ் என்ற ஒன்று உருவாகி, வளர்ந்து, காலப்போக்கில் இன்றியமையாத ஒன்றாய், வாழ்க்கையில் எப்படி இரண்டரக் கலந்தது என்ற வரலாற்றை வெளிக் கொணர்தல், இதழுக்குப் பின்னால் இருக்கும் செயல் முறைகள், உழைப்பு ஆகியவற்றைப் பற்றி ஆய்வுகள் செய்தல் - இவற்றைத்தான் இதழியல் ஆய்வு என்று குறிப்பிடுகிறோம்.


இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், இதழ்கள் எப்போது தொடங்கின, எப்படி வளர்ந்தன?


இந்தியாவைப் பொறுத்த மட்டில் 1780-ல், கிழக்கிந்திய கம்பெனியில் எழுத்தராய்ப் பணி செய்த ஒருவரால், முதல் இதழ் தொடங்கப்பட்டது. அதன் பின், கிருஸ்துவ மிஷினரிகள் மூலம் இதழ்கள் வளர்ந்தன. அவர்களது முதன்மை நோக்கம் கிருஸ்துவ சமயத்தை பரப்ப வேண்டும் என்பதாகவே இருந்தது. அதன் பின், ஆங்கில இலக்கியங்களை இந்தியாவிற்கு அறிமுகம் செய்யவும் இதழ்களைப் பயன்படுத்தினர். காலப்போக்கில், இந்தியர்களுக்கும் அச்சகம் வைத்து இதழ்கள் நடத்தக் கூடிய உரிமைகள் கிடைத்தன. 1818-ல் இந்திய மொழியில் (வங்காளம்) முதல் இதழ் வந்தது. 1831-ல் தமிழ்நாட்டில் முதல் இதழ் மலர்ந்தது. அதற்கு என்ன பெயர் வைக்க என்ற தெரியாமலோ என்னவோ, 'தமிழ் மேகஸின்' என்றே பெயர் வைத்தனர். சென்னையில், 1818-ல் 'Madras Tract Society' என்ற அமைப்பை ஏற்படுத்தி, துண்டு பிரசுரங்கள் மூலம் கிருஸ்துவ சமயத்தை பரப்ப எண்ணினர். இவ்வமைப்பே 'தமிழ் மேகஸின்' இதழையும் தொடங்கியது. மதப் பிரசாரத்துக்காகத் தொடங்கிய இவ்விதழ் அதிக நாட்கள் நீடிக்கவில்லை.



அதன் பின், குறிப்பிடும்படியான இதழ் என்று 'தினவர்த்தமானி'-யைக் குறிப்பிடலாம். சென்னை மாநிலக் கல்லூரியின் மொழிப் பேராசிரியராய் இருந்த பெர்சிவல் பாதிரியார் இவ்விதழை தோற்றுவித்தார். ஆங்கிலேயராகவும், கிருஸ்துவராகவும் இருந்தும் கூட, தமிழ் பண்பாடு, நாகரீகம் போன்ற விஷயங்களை 'தினவர்த்தமானி'-யின் கொண்டு வந்தார். முதன் முதலாக தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகுக்கு அளித்த பெருமை இவரையே சேரும். தமிழ் இதழியல் வரலாற்றின் முதல் இதழாகக் கூடப் பலர் தினவர்த்தமானியைக் கருதுகிறார்கள். தமிழில் உரைநடை வளர உரமிட்ட இதழாகத் திகழ்ந்தது தினவத்தமானி. இவ்விதழில் தொடர்ந்து வந்த 'விநோத ரசமஞ்சரி' என்ற தொகுப்பு புத்தகமாக வெளி வந்து மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. கி.வை.தாமோதரம் பிள்ளை, வீராசாமி செட்டியார், கிருஷ்ண பிள்ளை போன்ற தமிழறிஞர்கள் இவ்விதழின் துணை ஆசிரியர்களாய்ப் பணி செய்து பெருமை சேர்த்தனர். இத்தனை சிறப்பெல்லாம் பெற்ற இந்த இதழ், இன்று கிடைக்கவில்லை. இத்தனை செய்திகளும் இவ்விதழைப் பற்றி வேறு இடங்களிலிருந்து கிடைக்கும் குறிப்புகளிலிருந்தே தெரிய வருகின்றன. தினவர்த்தமானி தொடங்கப் பட்ட காலகட்டத்தை என் ஆய்வுக்குரிய காலத்தின் தொடக்கமாகக் கருதுகிறேன்.


இதுவரை யாருமே கண்டிராத இதழைப் பற்றி இத்தனை சுவாரசியமான தகவல்களை நீங்கள் கூறுவதைக் கேட்க மலைப்பாக உள்ளது. தினவர்த்தமானிக்குப் பின் தமிழ் இதழியலின் நிலை என்ன?


சுதேசமித்ரன் என்ற பெருமை வாய்ந்த இதழை தமிழகம் பெற்ற ஆண்டு 1882. இவ்விதழைத் தொடங்கியவர் ஜி.சுப்ரமணிய ஐயர். இதழியல் வரலாற்றின் முதல்வராக இவரைக் கருதுவதுண்டு. தமிழில் அரசியல் இதழாக மலர்ந்த முதல் இதழ் சுதேசமித்ரன். முதலில் மாத இதழாய் வந்து, பின் மாதத்துக்கு மூன்று முறை வந்து, அதின் பின் வார இதழாய் மாறி, கடைசியில், 1899-ல் நாளிதழாக மலர்ந்தது. 'தி ஹிந்து' நாளிதழைத் தொடங்கியரும் (1878) ஜி.சுப்ரமணிய ஐயர்தான். 100 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து வெளிவந்த சுதேசமித்ரனின் எண்ணற்ற பெருமைகளைச் சொல்லி மாளாது. ஒரே ஒரு சிறப்பை மட்டும் சொல்கிறேன். காந்தியடிகளை, இந்தியாவில் யாரும் அதிகம் அறியாத வேளையில், அவர் தென்னாப்பிரிக்காவில் அறப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த காலத்திலேயே, இந்தியாவுக்கும் சரி, தமிழ்நாட்டுக்கும் சரி - காந்தியடிகளைஅறிமுகப்படுத்திய முதல் இதழ் சுதேசமித்ரன்தான்! தென்னாப்பிரிக்க வாழ் தமிழர்களை தொடர்பு கொண்டு, அவர்களிடமிருந்து ஏராளமான கடிதங்கள் பெற்று, காந்தியடிகளின் அறப் போராட்டத்தை உடனுக்குடன் இந்தியாவுக்குத் தெரியப்படுத்த சுதேசமித்ரன் எடுத்துக் கொண்ட முயற்சி அளப் பெரியது. ஒரு இதழ் என்பது இயக்கமாக மாறக் கூடும் என்பதை முதன் முதலில் தமிழ்நாட்டில் நிரூபித்திக் காட்டிய பெருமையும் இவ்விதழையே சேரும்.



சுதேசமித்ரனுக்கு அடுத்த படியாக குறிப்பிடத்தக்க இதழ் விவேக சிந்தாமணி. இதைத் தொடங்கியவர் சி.வி.சாமிநாத ஐயர். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் சுதேசமித்ரனில் வேலை பார்த்த பின் இவ்விதழைத் தொடங்கினார். இவ்விதழின் பணிகளை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று - கிராமப்புறக் கல்வி; மற்றொன்று இலக்கியம். முதன் முதலாக கிராமப்புறக் கல்வியைப் பற்றி சிந்தித்து, எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று இவ்விதழாசிரியர் போராடினார். கிராமத்தில் பள்ளிகள் தொடங்கப்படாத காலகட்டத்தில், அங்குள்ளோருக்கும் கல்வி கிடைக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று தன் கருத்துகளை முன் வைத்தார். அரசாங்கம், இயக்ககங்கள் முதலானவற்றைத் தொடர்பு கொண்டு கிராமப்புறக் கல்விக்கான பல பரிந்துரைகள் செய்தார். இலக்கியம் என்று பார்க்கும் போது, தமிழ் நாவல் வரலாற்றில் குறிப்புடும்படியான இடத்தைப் பெற்றுள்ள 'கமலாம்பாள் சரித்திரம்' விவேக சிந்தாமணியில் தொடராக வந்த நாவலாகும். தமிழ் மொழியின் வளர்ச்சி தொடர்பான பல கட்டுரைகளும், நூல் மதிப்புரைகளும் இவ்விதழின் குறிப்பிடத்தக்க அம்சங்கள்.



காலப்போக்கில் இதழ்கள் மக்களின் வாழ்வோடு இரண்டரக் கலந்து, சமுதாயத்தில் மாற்றங்கள் நிகழ முக்கிய காரணங்களாய் இருந்திருக்கின்றன. 1967-ல் தமிழகத்தில் காங்கிரஸ் என்ற இயக்கம் விழுந்து தி.மு.க என்ற இயக்கம் ஆட்சியைப் பிடித்தற்கு இதழ்கள் வகித்த பங்கு மகத்தானது. தந்தை பெரியார் நடத்திய 'குடியரசு', 'விடுதலை', அண்ணா நடத்திய ' திராவிட நாடு' போன்ற இதழ்கள் தலைவர்களை அவர்தம் எழுத்து மூலமாக மக்களைச் சென்றடைய வைத்து, மக்களின் மனநிலையில் பெரிய மாற்றத்தை நிகழ்விக்க முடியும் என்று நிரூபித்தன.



இருநூறு ஆண்டு கால தமிழ் சமுதாயத்தின் பல்வேறு கூறுகளை, அறிந்தோ அறியாமலோ இதழ்கள் பதிவு செய்து வைத்திருக்கின்றன.


தமிழ்நாட்டில் இதழ்கள் பற்றி அழகான ஒரு பறவைப் பார்வையை கூறினீர்கள். இன்னும் குறிப்பாக, இந்தத் துறையில் தங்களது பணிகளைப் பற்றி சொல்லுங்களேன்.


1981-ல் பணி மாற்றம் காரணமாக நான் தஞ்சாவூருக்குச் சென்று கரந்தை புலவர் கல்லூரியில் பணியாற்றினேன். என் அப்பாவிடமும் சரி, நான் முன் மாதிரியாய் கருதும் என் அண்ணன் இளங்கோவனிடமும் சரி, மாணவர்கள் அளவு கடந்த அன்போடு பழகுவதை நான் நேரில் கண்டிருக்கிறேன். அவர்கள் போலவே நானும் மாணவர்களுடன் பழக வேண்டும் என்று விரும்பினேன். சென்னையைக் காட்டிலும் தஞ்சாவூர் பெரிய ஊர் இல்லையே என்று நான் சற்று தயங்கியபடி தஞ்சை சென்ற போதும், நாம் சொல்வதை கேட்க மாணவர்கள் அதீத ஆர்வம் காட்டுவதை நான் தஞ்சையில் கண்டேன். காலப்போக்கில் மாணவர்களும் நானும் ஒன்றானோம். அப்போதுதான் நான் வெகு நாளாய் நினைத்திருந்த ஆய்வு மையத்திற்கு வடிவம் கொடுக்கும் எண்ணம் விளைந்தது. 1983-ல், மாணவர்களுடன் இணைந்து, டாக்டர் மா.இராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையத்தை (தஞ்சையில் பணியாற்றிய போதும் கூட) சென்னையில் தொடங்கினோம். தொடங்கிய காலத்தின் இந்த மையத்தின் நோக்கமானது, மாணவர்களை இந்தத் துறையில் ஊக்கப்படுத்த வேண்டும் என்பதாகவே இருந்தது.



முதலில் எங்கள் வீட்டில்தான் இந்த மையத்தின் செயல்பாடுகள் அமைந்தன. மாணவர்களிடம், அன்று பரவலாய் இருந்த இதழ்களை (கல்கி, ஆனந்த விகடன் முதலியன), ஆளுக்கு ஒரிதழாய்ப் பிரித்துக் கொடுத்து, ஓராண்டு காலத்தில் என்னன்ன விஷயங்கள் அவ்விதழில் வெளி வந்துள்ளன என்று தொகுக்கச் சொன்னோம். இதழை மாணவர்கள் புரிந்து கொள்கிற பயிற்சியாய் அது அமைந்தது. நாளடைவில், மாணவர்கள், நண்பர்கள், ஜர்னலிஸம் படிப்பவர்கள் என்று கூட்டம் சேர, எங்கள் வீட்டில் நடத்தினால் வசதியாக இல்லை என்பதால், மாவட்ட மைய நூலகத்தில் அறையை வாடகைக்கு எடுத்து கருத்தரங்குகள் நடத்தினோம். மாதம் ஒரு முறை மாணவர்களை அழைத்து கட்டுரைகள் படிக்க வைத்தோம். ஒவ்வொரு கருத்தரங்கின் போதும் மாணவர்கள், நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் அழைத்து, நிச்சயம் கூட்டம் இருக்கும்படி பார்த்துக் கொள்வேன். கூட்டத்துக்கிடையே மாணவர்கள் தங்கள் உழைப்பால் விளைந்த கட்டுரையை படிக்கும் போது ஊக்கமடைவர். தஞ்சையில் என்னுடன் வேலை செய்தவர்கள், வேறு கல்லூரியில் வேலை செய்தவர்கள் கூட, எங்கள் கூட்டங்களுக்கு வந்து கட்டுரை படிப்பதில் ஆர்வம் காட்டினர். நான் படித்த, எனக்கு தொடர்பிருந்த, இதழ்களோடு தொடர்பிருந்த பேராசிரியர்கள், விக்கிரமன் போன்று இதழ்களிலேயே ஊறிக் கிடந்த ஆசிரியர்கள், இத் துறையில் உழைத்த ஆய்வாளர்கள், ஆகியோரை அழைத்து, அமர்வுக்கு ஒருவரை தலைவராக்கி, அவர்கள் கருத்துகளைச் சொல்லச் செய்தோம். இது மாணவர்களுக்கான பயிலரங்குகளாய் விளங்கின.



இந்த நிலையைத் தாண்டி அடுத்த கட்ட நிலைக்கு போக வேண்டும் என்று நினைத்தேன். தமிழில் முத்திரை பதித்த இதழாசிரியர்களான, ஜி.சுப்ரமணிய ஐயர், சி.வி.சாமிநாத ஐயர், தந்தை பெரியார், பாரதியார், திரு.வி.க, கண்ணதாசன், அண்ணா, வரதராஜுலு நாயுடு, சுப்ரமணிய சிவா போன்றவர்களின் பங்கைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தோம். தொடர்ந்து, மாதம் ஒரு நிகழ்ச்சியாய், ஓராண்டு காலம் இதழாசிரியர்களைப் பற்றிய சொற்பொழிவுகள் நடத்தத் திட்டமிட்டோம். முதலில் 12 இதழாளர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டோம். அதன் பின், இவர்களைப் பற்றி யார் பேசினால் சரியாக இருக்கும் என்று முடிவு செய்தோம். அந்தப் பொழிவுகளுக்கு ஏற்ற தலைவர்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டோம். எனக்கு இவரைத்தான் அழைக்க வேண்டும், இன்னாரை அழைக்கக் கூடாது என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. இந்த இதழாளரைப் பற்றி இன்னாருக்கு நன்றாக விஷயம் தெரியும் என்று நினைத்தால், அவரை நான் அறியாத போதிலும் கூட, அறிந்து கொண்டு அணுகி, பேச வைப்பதற்கு நான் தயங்கியதேயில்லை. இவ்வாறாக திட்டமிட்ட பின், முதல் பொழிவை ஜி.சுப்ரமணிய ஐயரைப் பற்றிய பொழிவாக நடத்தினோம். அந்த சொற்பொழிவை தொடங்கி வைத்தவர் திரு.நாரண துரைக்கண்ணன். மா.போ.சி அவர்கள் அக் கூட்டத்துக்கு தலைமை ஏற்றார். நாங்கள் நினைத்ததை விட அந்தப் பொழிவுகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. சுதேசமித்ரன், தினமணி, முத்தாரம் போன்ற இதழ்கள் எங்கள் பணிகளைப் பற்றி எழுதி ஊக்குவித்தன. 1986 அக்டோபரில் தொடங்கி, 1987 செப்டம்பர் வரை, இந்த பொழிவுகள் தொடர்ந்து நடந்தன.



தமிழ்நாட்டில், முதன் முறையாக, இதழியலுக்காகவென்றே திங்களொரு சொற்பொழிவாக, தடையில்லாமல் வந்த நிகழ்ச்சி இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின் உங்கள் ஆய்வு மையத்தின் பணிகள் எப்படி அமைந்தன?



இந்தப் பன்னிரண்டு சொற்பொழிவுகள் வரவேற்பைப் பெற்ற போதும், நாங்கள் நினைத்த அளவிற்கு அது மக்களை சென்றடையவில்லை என்று நினைத்தோம். பழைய இதழ்களில் பொதிந்துள்ள செய்திகளும், அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் வரலாறும் முழுமையாகப் பதிவு செய்யப்பட வேண்டுமெனில், இன்னும் பெரிய அளவில் ஏதாவது செய்தால்தான் முடியும் என்று உணர்ந்தோம். 1998-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மொழித் துறைக்கு எனது நண்பர், பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி தலைவராக வந்தார். அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பின், சற்று உரிமையுடன், "இதழியல் என்று ஒரு துறை, கவனிப்பார் அற்று இருக்கிறது. இத் துறையில் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து உழைப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். பல்கலைக்கழகத்தின் சார்பில் தாங்கள் ஏதாவது செய்ய வேண்டும்." என்று கூறினேன். உடனே சரியென்று சொல்லி, என்ன செய்யலாம் என்று கேட்டறிந்தார். என் நீண்ட கால திட்டங்களுள் ஒன்றான, செம்மையான இதழியல் கருத்தரங்குகள் பற்றி கூறினேன். கேட்ட அவர், "செய்யலாம். ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால், இதற்கு நிறைய பணம் செலவாகும். அவ்வளவு பணம் பல்கலைக்கழகத்திடம் இல்லை. ஆனால், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் என்று ஒன்று இருக்கிறது. அவற்களிடம் இந் நிகழ்ச்சிகளுக்குச் செலவழிக்க பணம் உண்டு. நாம் அவர்களுடன் இணைந்து கருத்தரங்குகள் நடத்தலாம்.", என்று கூறினார்.



அதன் பின், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் இராமர் இளங்கோவை சந்தித்துப் பேசினோம். அவர் பெரிதும் மகிழ்ந்தார். அவர் தலைமையில் இது போன்ற நிகழ்ச்சிகள் நிச்சயம் நடக்க வேண்டும் என்று கருதினார். "நீ என்ன நினைக்கிறாயோ செய். நான் துணை நிற்கிறேன். நீ செய்வதைச் சரியாகத்தான் செய்வாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு", என்று பெரிதும் ஊக்குவித்தார். முதலில், ஒரு கருத்தரங்கம் செய்யலாம் என்றுதான் நினைத்தோம். எந்தெந்த தலைப்புகளின் கட்டுரைகள் கேட்கலாம். யார் யாரை அழைக்கலாம் என்று திட்டம் உருவாக்கினோம். எங்கள் மையம் பதிவு செய்யப்பட்ட பெரு நிறுவனமாக இல்லாத போதும், உழைப்புக்கு மதிப்பு கொடுத்து, பெரிய பெயருடைய பல்கலைக்கழக மொழித்துறையுடனும், பெருமை வாய்ந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவத்துடனும், எங்கள் மையத்தின் பெயரையும் இணைத்து, மூவரும் சேர்ந்து நிகழ்த்தும் கருத்தரங்காக அழைப்பில் போட வைத்தது அவர்களுடைய பெருந்தன்மை.



பல்கலைக்கழகத்தில் நடத்திய முதல் கருத்தரங்கு மகத்தான வெற்றியைப் பெற்றது. அன்று கூடிய கூட்டம் போன்ற கூட்டத்தைப் பொதுவாக கருத்தரங்குகள் பார்க்க முடியாது. நடத்திய, பங்கு பெற்ற எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருந்ததால், ஒரு கருத்தரங்கு போதாது; தொடர்ந்து செய்ய வேண்டும் என்று அனைவருமே நினைத்தோம். விடுதலைக்கு முந்தைய தமிழ் இதழ்கள், திராவிட இதழ்கள், மகளிர் இயக்க இதழ்கள், பொதுவுடமை இதழ்கள், இலக்கிய இதழ்கள் என்று பிரித்து, அந்தந்த இதழ் தொடர்பானவர்களை தலைமை உரை, தொடக்க உரை மற்றும் நிறைவுரைக்கு அழைத்தோம். எழுத்தாளர் மாலன், திராவிட இதழ்களுடன் தொடர்புடைய எஸ்.வி.ராஜதுரை, பெரியாருடனே இருந்த வே.ஆனைமுத்து, மகளிர் இதழ் தொடர்பான கருத்தரங்குக்கு ராஜம் கிருஷ்ணன் என்று இதழ்களோடும், இலக்கியங்களோடும், இயக்கங்களோடும் தொடர்புடையவர்களை அழைத்தோம்.



எங்கள் முயற்சியைப் பார்த்து, எங்கள் பணியில் தங்களையும் இணைத்துக் கொள்ள பலர் விரும்பினர். உதாரணமாக, சென்னை வானொலி நிலையத்துடன் சேர்ந்து ஒரு கருத்தரங்கம் செய்தோம். இப்படியாக, இரண்டே ஆண்டுகளில் பத்து கருத்தரங்குகள் நிகழ்ந்தன. அந்த நேரத்தில், இலங்கைப் பேராசிரியர் சிவத்தம்பி, வருகைதரு பேராசிரியராக சென்னைக்கு வந்திருந்தார். அவரை ஒரு கருத்தரங்குக்கு அழைத்திருந்தோம். அவருக்கு அது மிகவும் பிடித்துப் போனது. ஒரு பன்னாட்டு கருத்தரங்கை நீங்கள் நடத்த வேண்டும் என்று கூறினார். அதன் பின், 2001-ல் மூன்று நாள் நிகழ்ச்சியாக ஒரு பன்னாட்டு இதழியல் கருத்தரங்கை நடத்தினோம். அதில் இலங்கையில் வெளி வந்த தமிழ் இதழ்கள் பற்றியும் கட்டுரைகள் படித்தனர். ஆக மொத்தம் பதினோரு கருத்தரங்குகள் நடத்தியுள்ளோம். அதில் ஒன்பது கருத்தரங்குகளின் நிகழ்வுகள் தொகுதிகளாக வெளியாகியுள்ளன. இன்னும் இரண்டு தொகுதிகள் அச்சில் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் இதழியல் பற்றிய ஒரு விழிப்புணர்வை இக் கருத்தரங்குகள் ஏற்படுத்தியது என்ற ஒன்றே எனக்குப் பெரு மகிழ்ச்சியளிக்கிறது.



இந்த ஒன்பது தொகுதிகளைத் தவிர தங்கள் மையத்தின் வெளியீடாக என்னென்ன புத்தகங்கள் வெளி வந்துள்ளன?


என் மனைவியின் எம்.ஃபில் ஆய்வுக்காக இராஜாஜியின் இதழியல் பணிகளைப் பற்றி ஆய்வு செய்தோம். அந்த ஆய்வை 'இதழாளர் இராஜாஜி' என்றொரு புத்தகமாக வெளியிட்டோம். முதன் முறையாக இராஜாஜியை ஓர் இதழாசிரியராய்க் காட்டிய புத்தகம் அது. அதில் வந்த செய்திகள் அனைத்துமே புதிய செய்திகள்.



அந்தச் செய்திகளுள் முக்கியமான செய்திகள் சிலவற்றைக் கூறுங்களேன்.


இராஜாஜியின் அரசியல் ஈடுபாடு பலர் அறிந்தது. அனால் தமிழில் கலைச் சொல் உருவாக்குவதில் இராஜாஜிக்கு அளவு கடந்த ஈடுபாடு இருந்ததை பலர் அறிந்திருக்கமாட்டார்கள். அவர் சேலத்தில் இருந்த போது, நண்பர்களுடன் சேர்ந்து, ஆங்கிலத்தில் 'scientific journal' என்று ஓர் இதழைத் தொடங்கினார். இயற்பியல், வேதியல், உயிரியல், பயிரியல் போன்ற துறைகளில் உள்ள ஆங்கிலக் கலைச் சொற்களுக்கு உரிய தமிழ்ச் சொற்களை உருவாக்கினர். அவ்விதழ் நாலு மாதங்கள் வெளி வந்து பின் நின்று போனது. இவ்விதழைப் பற்றி பாரதி, சுப்ரமணிய சிவா போன்றோர் எழுதியுள்ளனர். இதைத் தவிர, 1929-ல் பள்ளிப்பாளையத்தில் காந்தி ஆசிரமத்தை உருவாக்கிய போது, 'விமோசனம்' என்ற பெயரில், மது விலக்குக்காகவே ஓர் இதழ் தொடங்கினார். இதழுக்கு 30 பக்கங்கள் கணக்காக, மொத்தம் பத்து இதழ்கள் வெளியாயின. இலக்கியங்கள், சிறுகதைகள், கவிதைகள், நாடகம், கேலிச் சித்திரம் போன்ற பல உத்திகள் மூலம் 400 பக்கங்களும் மது விலக்கை மட்டுமே பேசிய இதழ், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.



இராஜாஜியைப் போலவே, கல்கியின் எழுத்துகளும் முழுமையாகப் பார்க்கப்படுவதில்லை. அவர் ஆனந்த விகடனிலும் கல்கியிலும் எழுதியவையே பிரபலமாக உள்ளன. அதற்கு முன் நவசக்தியிலும் விமோசனத்திலும் எழுதியவை அதிகம் அறியப்படாதவை. அவர் நவசக்தியில் எழுதியவற்றை இரண்டு தொகுதிகளாக பதிப்பக நண்பர் மூலம் வெளியிட்டுள்ளோம்.



1987-ல் மாணவர்களோடு இணைந்து நடத்திய கருத்தரங்குகளுக்குப் பின் 1998-ல்தான் அடுத்த கட்ட கருத்தரங்குகள் நடத்தியுள்ளீர்கள். இடைப்பட்ட காலத்தில் என்ன மாதிரி பணிகளில் ஈடுபட்டிருந்தீர்கள்.


இந்த இடைப்பட்ட காலத்தில் பொது நிகழ்ச்சிகள் எதையும் நாங்கள் நடத்தவில்லை. இதழ்களைத் தேடுதல், கிடைக்கும் இதழ்களை ஆய்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் என் முனைவர் பட்ட ஆய்வையும் செய்தேன். இதழியலைப் போலவே எனக்கு இந்திய விடுதலை இயக்கத்திலும் அதிக ஈடுபாடு உண்டு. அதில் குறிப்பாக வ.உ.சி-யைப் பற்றி ஆய்வு செய்ய நினைத்தேன். வ.உ.சி-யின் அரசியல் பணியைப் பற்றி தெரிந்த அளவுக்கு அவரது இலக்கியப் பணி தெரிவதில்லை என்பது என் கருத்து. அதனால் அவரது இலக்கியப் பணியை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டேன். 1980-களிலேயே தொடங்கிய ஆய்வு என்றாலும், அதனைத் தொடர்ந்து செய்து முடிக்க முடியாததால், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. அதுவரை வ.உ.சி-யைப் பற்றி சொல்லப்படாத பல புதிய செய்திகளைச் சொல்ல முடிந்தது எனக்குப் பெரிய நிறைவை அளித்தது.



குறிப்பாக தாங்கள் வெளிக் கொணர்ந்த செய்திகள் எவை?


மக்களைத் திரட்டி அவர்களிடம் அரசியலைப் பற்றி சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால்தான் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு கிடைக்கும் என்று நினைத்து, அதை தமிழ்நாட்டில் முதன் முதலில் செய்தவர் வ.உ.சி. தமிழ்நாட்டில் மேடைப் பேச்சு என்ற ஒன்றைத் தொடங்கி வைத்தவர் வ.உ.சி-தான். ஆனால், தமிழ்நாட்டின் மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர்களைப் பற்றி சொல்லும்போது யாரும் அவரைக் குறிப்பிடுவதில்லை. என்னுடைய ஆய்வில் ஓர் இயல் முழுதும் அவருடைய மேடைப் பேச்சைப் பற்றி எழுதியுள்ளேன். அவர் வாழ்ந்த எல்லா ஊர்களுக்கு சென்று, அவர் பேச்சை கேட்டவர்களை சந்தித்து, அவரைப் பற்றி மற்றவர்கள் எழுதிய குறிப்புகளை எல்லாம் இயன்றவரை திரட்டி, முதன்மைச் சான்றுகள் கொண்டு அவரது பேச்சின் வன்மையைப் பற்றி பதிவு செய்துள்ளேன். அவர் செய்ததை எல்லாம் விட்டுவிட்டு, அவர் செய்யாததையெல்லாம் செய்ததாக சொல்லப்பட்ட கருத்துகளை மறுத்தும் என் ஆய்வில் குறிப்பிட்டுள்ளேன். உதாரணமாக, அவர் மூன்று பத்திரிகை நடத்தினார் என்ற பரவலான கருத்தை மறுத்து, அவர் எந்தப் பத்திரிகையும் நடத்தவில்லை என்ற செய்தியை ஆதாரங்களுடன் நிறுவியுள்ளேன். இந்த உழைப்பின் பயனாய், பதிக்கப்படாத வ.உ.சி-யின் கட்டுரைகளைத் தொகுத்து பதிப்பக நண்பர்கள் மூலம் நூலாக்க முடிந்தது. அதுவரை தெரியாத கட்டுரைகள் அத் தொகுப்பில் வெளியானதில் எனக்கு நிறைவுண்டு.



தாங்கள் கல்வித் துறையில் இருந்தது உங்கள் ஆய்வுக்கு உதவியாக இருந்திருக்கும் இல்லையா?


அப்படி இல்லை என்றுதான் நினைக்கிறேன். நிறைய மாணவர்களையும் மற்றவர்களையும் சந்திக்க களம் அமைத்துக் கொடுத்தது கல்வித் துறைதான் என்றாலும் என் ஆய்வையும் கல்லூரிப் பணியையும் பிரித்துதான் பார்க்கிறேன். சில சமயம் கல்வித் துறையில் இருப்பது சிக்கலாகக் கூட அமைந்துவிடுவதுண்டு. நாம் நினைப்பதை எல்லாம் அங்கு சொல்லிவிட முடியாது. ஆளுமையை விட seniority-க்கு அதிகம் மதிப்பு கொடுக்கும் நிறுவனங்களாகவே கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. இந்தத் தகுதி அமையாவிட்டால் சட்டப் பூர்வமாக கல்லூரியில் நம் எண்ணங்களை செயலாக்க முடியாது. சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்றாலோ, கருத்தரங்கள் நடத்த வேண்டும் என்றாலோ seniority இல்லாதது ஒருதடையாக நிற்கும். கல்லூரிக்கு வெளியே செய்யும் போது இந்த மாதிரி நடைமுறைச் சிக்கல்கள் எழுவதில்லை.



வரலாறு.காம்-ஐ பொறுத்த மட்டில். பேராசிரியர், ஆய்வாளர் என்பதை விட உங்களை ஒரு சிறந்த பேச்சாளராகத்தான் அறிவோம். மேடைப் பேச்சில் தங்களுக்கு பயிற்சி ஏற்பட்டது எப்படி?


ஆசிரியர் துறௌக்குச் சென்றதால், வகுப்புகள் நிறைய எடுக்க வேண்டியிருக்கும். நான் என் வகுப்புகளை மிகவும் ஈடுப்பாட்டோடு எடுப்பேன். எடுக்கும் பாடம் மாணவர்களுக்குப் புரிய வேண்டும், புதிய செய்திகளைச் சொல்ல வேண்டும், வகுப்புக்குப் பின் சொன்னதைப் பற்றி மாணவன் சிந்திப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும், இவை எல்லாவற்றுக்கும் மேல் வகுப்பறைவில் மாணவனின் கவனம் சிதறாமல் நாம் சொல்வதிலேயே தக்க வைக்க வேண்டும். இவற்றில் நான் மிகவும் கவனமாக இருப்பேன். இதனால் என் வகுப்புகளை மிகவும் ஜனரஞ்சகமாக நகைச்சுவை கலந்து அமைத்துக் கொள்வேன். என் வகுப்பறைகளில் புத்தகங்களை வைத்து நடத்துவதில்லை. என்னை அவர்களுக்குப் பிடிப்பதற்கு அது ஒரு முக்கியமான காரணம். நேருக்கு நேராக மாணவருடன் பேசிக் கொண்டே பாடம் எடுத்தால்தான் அவர்கள் கவனத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.அப்படி வந்ததுதான் பேச்சுப் பயிற்சி. மேடையில் பேசும் போது மிகவும் அலங்காரமாகப் பேசக் கூடாது, செய்தியை மட்டும் சொன்னால் போதும் என்று முதலிலேயே வைத்துக் கொண்டுவிட்டேன். பேச்சினுடைய கனம் தெரியாமல் இருக்க வேண்டி நகைச்சுவை இழையோட பேசினால் கேட்பவர் ரசிக்கும்படி இருக்கும். அப்படி முதலில் திட்டமிட்டு பேசத் தொடங்கி, காலப்போக்கில் அதுவே இயல்பாகவும் மாறிவிட்டது. எங்கு பேசச் சென்றாலும் தயார்படுத்திக் கொள்ளாமல் போவதில்லை. அப்படி தயார் செய்தாலும், தயாரித்த குறிப்பை கையில் வைத்துப் பேசுவதில்லை. யாருக்கான பேச்சு என்பதை மனதில் வைத்துக் கொண்டு பேச வேண்டும். எந்தத் தலைப்பில் பேசுகிறோமோ அந்தத் தலைப்பில் அதுவரை அதிகம் கேட்டிராத செய்திகளைக் கூற வேண்டும். இவ்வளவு செய்திகள் இருக்கின்றனவா என்று கேட்பவர் நினைக்க வேண்டும். பேச்சு தடையில்லாப் பேச்சாக இருக்க வேண்டும். ஓரளவு என் மேடைப் பேச்சு நன்றாக அமைகிறது என்றால் அதற்கான அடிப்படையான காரணங்கள் இவை.



உங்கள் இதழியல் ஆய்வில் இதுவரை செய்யாமல் இருந்து, இனி இதை முடிக்க வேண்டும் என்று எதைப் பற்றியாவது எண்ணுவதுண்டா?


இந்தத் துறையில் இன்னும் செய்வதற்குப் பல விஷயங்கள் இருந்தாலும், நான் நிச்சயம் செய்ய வேண்டும் என்று நினைப்பது நான்கு விஷயங்கள். முதலில், தமிழ் இதழியல் வரலாற்றைப் பற்றிய ஒரு முழுமையான பதிவை எழுத வேண்டும். இதற்கு முன் பலர் எழுதியிருந்தாலும், முதன் முதலில் வந்த சில ஆய்வுகளைத் தாண்டி பின் வந்தவர்கள் செல்லவில்லை. எந்த ஒரு துறையிலும் காலம் செல்லச் செல்ல புதிய தரவுகள் நமக்குக் கிடைக்கும். அப்படிக் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு ஆய்வை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லுதல் அவசியம். வரலாற்றுப்பூர்வமான, நம்பகத்தன்மை நிறைந்த, இன்று கிடைக்கும் தரவுகள் எல்லாவற்றையும் கருதி, ஒரு முழுமையான இதழியல் வரலாறை எழுத வேண்டும். அடுத்து, இதழ்கள் பதிவு செய்யும் சமுதாய போக்குகள் (trends) வரலாற்றுப் பார்வையில் பதிவாக வேண்டும். மூன்றாவதாக, தமிழ் இதழியலில் முத்திரை பதித்த இதழாளர்கள் எப்படி திருப்புமுனையாய் அமைந்தார்கள் என்றும் விரிவான பதிவுகள் செய்ய வேண்டும். நான்காவதாக, இதழ்கள் செய்திகளைச் சொல்ல பயன்படுத்திய 'உத்திகள்' பற்றி ஆய்வுகள் நிகழ்த்த வேண்டும். இந்தத் தலைப்புகளில் எல்லாம் யாரும் உழைக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. பலர் உழைத்திருந்தாலும் ஒரு முழுமையான தொகுப்பாக வெளிவரல்லை என்று நினைக்கிறேன்.




பேராசிரியர் மா.ரா.அரசுவின் பணிப் பாராட்டு விழா (பணி நிறைவுப் பாராட்டு விழா என்று அழைப்பிதழ் குறிப்பிட்டது மா.ரா.அரசுக்கு சற்றும் பொருந்தாது), 13-06-2009 அன்று நடை பெற்றது. அங்கு திரு.குமணன் கூறிய (சற்றே மாற்றப்பட்ட) பாரதி வரிகளை விட அழகாக, நமக்கு அவர் பால் எழும் உணர்வை வெளிப்படுத்த முடியாது.



"இங்கிவனை யாம் பெறவே

என்ன தவம் செய்துவிட்டோம்"


அன்புடன்
லலிதா ராம்

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.