http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 60

இதழ் 60
[ ஜுன் 15 - ஜுலை 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

பேராசிரியர் மா.ரா.அரசு
பேராசிரியர் மா.ரா.அரசு புகைப்படத்தொகுப்பு
அரசு என்னும் அறிஞர் பெருந்தகை
இதழியல் இமயம்
ஓய்வு ஏது ஐயா உங்களுக்கு
இங்கிவரை யாம்பெறவே...
அரசு என்னும் அரிய மனிதர்
பேராசிரியருக்கு, அன்புடன்...
இதழா...? இயக்கமா...?
நிலா நிலா போ! போ!
இதழ் எண். 60 > சிறப்பிதழ் பகுதி
இதழியல் இமயம்
இரா. கலைக்கோவன்
அன்புள்ள வாருணி, சென்னை அண்ணாநகர் வாழ் பேராசிரியர் முனைவர் மா. ரா. அரசு அமைந்தகரையிலுள்ள பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பல்லாண்டுகள் பணியாற்றி மே 2009ல் ஓய்வுபெற்றுள்ளார். அவர் பணியைப் பாராட்டி வரலாறு டாட் காம் ஆசிரியர் குழு, சிறப்பிதழ் கொணரத் தலைப்பட்டுள்ளது. பெரியதோர் இடைவெளிக்குப் பிறகு இராம், கமல், கோகுல் மூவரின் எழுத்துரைகளும் இச்சிறப்பிதழில் இடம்பெறப் போவதறிந்து மகிழ்ச்சி உண்டாகிறது. கணினிச் சூழலில் படிக்கவும் எழுதவும் நேரம் தேடுவதே அரிதாக உள்ளது என்பாருக்கு இடையே இந்த மூவரும் பல பங்களிப்புகளை டாட் காமில் செய்துள்ளனர். எனினும், கடந்த சில திங்கள்களாக கமலும் இராமும் ஏதும் எழுதாமை, அவர்களைத் தொடர்ந்து படித்துவரும் என் போன்றோருக்கு இழப்பாகவே இருந்தது. நல்ல வேளையாக, அரசுவின் பணி ஓய்வு அந்த இருவரையும் எழுத்துக்கு இழுத்துவந்திருக்கிறது.

அரசு என் இளவல். பள்ளிப் பருவத்திலிருந்தே நாங்கள் நண்பர்கள். கல்லூரிக் காலத்தில் தந்தையை இழந்த பிறகு, படிப்புக் காலம் முழுவதும் இருவரும் இணைந்தே செயற்பட்டதாக நினைவு. நிறையப் பேசுவோம். நிறையப் படிப்போம். எது சார்ந்தும் எல்லாம் சார்ந்தும் எங்கள் படிப்பு இருந்ததால் கலந்துரையாட எப்போதும் செய்திகள் இருக்கும். திருமணம் என்னைச் சிராப்பள்ளிக்கு நகர்த்தியதால், அவருடன் தொடர்பிழந்தேன். சென்னை செல்லும்போது மட்டுமே சந்திக்கும் வாய்ப்புகள். அவர் முதுகலை பயின்று பணியில் சேர்ந்தமை, குடும்பம் சார்ந்த அவரது பங்களிப்புகள், அவருடைய வளர்ச்சி இவை எவற்றிலும் நான் கவனம் செலுத்தமுடியாதபடி சிராப்பள்ளி என்னைச் சுற்றி வளைத்துக் கொண்டது.

கண்மருத்துவம் பயிலச் சென்னை சென்றபோது சில காலம் விடுதியிலும் சில காலம் வீட்டிலும் இருந்தேன். அப்போது அவருக்குத் திருமணம் ஆகவில்லை. அம்மாவுக்கு உடல்நலம் சற்றுக் குன்றியிருந்தமையால் பெரும்பாலான நாட்களில் எங்களில் ஒருவரோ அல்லது இருவரும் இணைந்தோ இரவுச் சமையலை மேற்கொள்வோம். இரவு நெடுநேரம் பேசிக் கொண்டிருப்போம். கண் மருத்துவப் படிப்பு முடித்துச் சிராப்பள்ளி திரும்பியதும் மீண்டும் தொடர்பிழப்பு.

பச்சையப்பன் கல்லூரியில் பணியமர்ந்து திருமணம் முடித்த பிறகு மனைவியுடன் சிராப்பள்ளிக்குச் சுற்றுலா வந்தார். சிற்றண்ணல்வாயில், கொடும்பாளூர் சென்றிருந்தோம். சென்னையிலிருந்து பணிமாற்றம் பெற்றுத் தஞ்சாவூருக்கு அவர் வந்த பிறகுதான் எங்களுக்குள் பழைய நெருக்கம் மீண்டும் மலர்ந்தது. பணிமாற்றத்தை அவர் விரும்பவில்லை என்றாலும், தஞ்சாவூர் அவர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. சென்னை செல்லாவிட்டால் பெரும்பாலான வார இறுதி நாட்களில் சிராப்பள்ளி வந்துவிடுவார். எங்களிடையே இலக்கியம், வரலாறு, தொல்லியல் என எல்லாமே கடை விரிக்கும்.

வரலாற்று ஆய்வுகளைத் தொடங்கியிருந்த அந்தக் காலகட்டத்தில் அவருடைய துணை எனக்குப் பெரும் வலிமை தந்தது. அன்பான பேச்சு, உதவும் உளப்பாங்கு, கூட்டுறவான பழகும் பாங்கியல் இவற்றால் அவர் பெற்றிருந்த நண்பர் குழாம் மிகப் பெரியது. அதனால், எனக்குத் தேவைப்பட்ட புத்தகங்களை அவரால் துன்பமின்றிப் பெற்றுத்தர முடிந்தது. யாராலும் பெறமுடியாத இடங்களில்கூட அரசுவால் எதையும் பெறமுடியும். அவருடைய அன்பிற்கு, அணுகுமுறைக்கு அத்தனை வலிமை உண்டு. பலமுறை அந்த வலிமையைக் கண்டு வியந்திருக்கிறேன், பயன்பெற்றிருக்கிறேன்.

வரலாறு சார்ந்த என்னுடைய வளர்ச்சியில் அரசுவிற்குப் பெரும் பங்குண்டு. தமிழ்ப் பேராசிரியராக இருந்தபோதும் இலக்கியத்தைவிட அவருக்கு வரலாற்றில் நாட்டம் மிகுதி. பல வரலாற்றுப் பேராசிரியர்களைவிட, விரிவாகவும் தெளிவாகவும் வரலாற்றைப் படித்தும் புரிந்தும் வைத்திருந்த அவருடைய நினைவாற்றல் அபூர்வமானது. ஆண்டுகளைக் குறிப்பிட்டு நிகழ்ச்சிகளை முன்வைப்பது என்னால் எந்தக் காலத்தும் முடியாத செயல். அரசு அதை மிக இயல்பாகச் செய்வார். இந்திய நாட்டின் விடுதலை வரலாறு அவருக்கு மனப்பாடம். பல நேரங்களில் எனக்கு வியப்பாக இருக்கும், எப்படி இவரால் அத்தனை முக்கியமான நிகழ்வுகளையும் ஆண்டுக் குறிப்புடன் நினைவுகொள்ள முடிகிறது என்று!

தொடக்கக் காலத்தில் இதழியலில் அவருக்கு அத்தனை ஈடுபாடு இருக்கவில்லை. எங்கள் அண்ணன் இளங்கோவனின் இணைவால் அரசு இதழியலில் ஈடுபட்டார். தமிழ் இதழியல் முன்னோடி மேதைகளுள் இளங்கோவன் ஒருவர். அவருடைய எழுத்துரைகள் புதுமை நோக்கில் முற்றிலும் புதிய தரவுகளுடன் அமைந்தவை. திரு ம. பொ. சிவஞானத்திடம் மிகுந்த அன்பு பூண்டிருந்த இளங்கோவனின் கூட்டுறவு அரசுவை வரலாற்றிலிருந்து பிரித்து இதழியலுக்குள் அழுத்தியது. அண்ணனின் மறைவுக்குப் பிறகு அரசு முழுமையும் இதழியல் சார்ந்தே பணி செய்தார். வரலாறு அவருக்குள் நீறுபூத்த நெருப்பாக இருந்தாலும், இதழியல் அவரை விரைந்து ஆட்கொண்டது. மிகக் குறுகிய காலத்தில் இதழியலில் குறிப்பிடத்தக்க இடத்தை அவரால் அடையமுடிந்தது.

தஞ்சாவூர்ப் பணிக்காலத்தே கரந்தைக் கலைக் கல்லூரி மாணவர்கள் அவரால் பெரும் பயன்பெற்றனர். அவரைச் சுற்றி எப்போதும் மாணவர் கூட்டம் இருக்கும். இளைஞர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அவற்றைச் சரியான திசைகளில் செலுத்துவதில் அவருக்கு இணை அவர்தான். கவிதை எழுதுவதில் நாட்டம் கொண்டிருந்த இளங்கலை மாணவர் ஒருவரைக் கவிதைத்தொகுதி வெளியிடும் அளவிற்கு ஊக்கமூட்டி வளர்த்தவர். பல இளைஞர்களை முன்னிலைப்படுத்தி, அவர்தம் உழைப்பாற்றல் கொண்டு அவர் உருவாக்கிய ஆய்வுக்களஞ்சியம் கரந்தைக் கலைக் கல்லூரி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கத்தக்கது. தேர்ந்த சில மாணவர்களின் துணையுடன், ‘இளமையின் குரல்’ என்ற பெயரில் பருவ இதழ் ஒன்றைத் தொடங்கி நடத்தவும் துணிந்தார். தரமான ஆய்விதழாக வெளிவந்த இளமையின் குரலில் என் கட்டுரைகளும் இடம்பெற்றன.

திருச்சிராப்பள்ளி வானொலி நிலைய நிகழ்ச்சிப் பொறுப்பாளர்களின் துணையுடன் தம் மாணவர்களின் சிந்தனை ஆற்றலை வளர்த்த பெருமையும் அரசுவிற்கு உண்டு. ‘இளைய பாரதம்’ நிகழ்ச்சியை வடிவமைத்துக் கொண்டிருந்த திரு. சீனிவாசராகவனின் நட்பைப் பெற்று, பட்டிமன்றம், கருத்தரங்கம், கவியரங்கம் எனப் பல நிகழ்வுகளில் தம் மாணவர்களைப் பங்கேற்கச் செய்து அவர்களுடைய படைப்பாற்றலைக் கூர்மைப்படுத்திய அவருடைய உழைப்பு மறக்கமுடியாதது. தஞ்சாவூரில் பணியாற்றிய காலம் முழுவதும் தம் மாணவர்களுக்காகத் தம்மையே வருத்திக்கொண்ட அதிசய மனிதர் அரசு. அமுதசுரபி திங்களிதழில்கூட கரந்தை மாணவர்களின் படைப்புகள் இடம்பெற முடிந்ததென்றால் அதற்குக் காரணம் அரசு என்ற பேராற்றல்தான்.

தஞ்சாவூரில் இருந்த காலத்தில் பலமுறை என்னுடன் களப்பணிகளுக்குத் துணையாக வந்திருக்கிறார். அவர் பயணத்தில் பங்கேற்றால் கிண்டலுக்கும் கேலிக்கும் குறைவிருக்காது. உடன் பயணிப்பவர்கள் அத்தனை பேரையும் அவருடைய பேச்சாற்றல் வளைத்துக்கொள்ளும். யாரையும் விட்டுவைக்கமாட்டார். அவருடைய நகைச்சுவைப் பேச்சு மகிழ்வளிக்குமே தவிர, யாரையும் வருத்தியதில்லை. அவரிடம் மாட்டிக்கொண்டு படாதபாடு பட்டவர்களுள் குறிப்பிடத்தக்கவர் என் இனிய நண்பர் திரு. அ. அப்துல்மஜீது ஆவார். என் மாணவியர் அத்துனை பேருக்கும் அவரைப் பிடிக்கும். வாணியிலிருந்து சுமிதா வரை அவரை நேசிக்காத மாணவிகள் இல்லை. சாலப் பரிந்தூட்டும் அவருடைய தாய்மைப் பண்பை நாங்கள் அனைவருமே அனுபவித்திருக்கிறோம்.

அவரைப் போல் நூல்கள் வாங்கும் மனிதர்களை மிகக் குறைவான அளவிலேயே நான் சந்தித்திருக்கிறேன். இன்றியமையாத நூல்களை மட்டுமே நான் வாங்குவேன். பிறவற்றைக் கிடைக்குமிடங்களில் நூலகங்களோ, நண்பர்களோ, பெற்றுப் படித்துத் திருப்பித் தந்துவிடுவேன். ஆனால், அவரோ இதழியல் தொடர்பான அத்தனை நூல்களையும் தம்மிடம் வைத்திருக்கிறார். அவருடைய வருமானத்தை மீறிய நூலகமது! எப்படி இந்த மனிதர் எந்தத் தயக்கமும் இல்லாமல் எல்லா நூல்களையும் வாங்கிவிடுகிறார் என்று நான் பலமுறை வியந்ததுண்டு. வாங்கிய நூல்கள் எல்லாவற்றையும் முழுமையும் படித்து முக்கியமான இடங்களில் அடிக்கோடிட்டுக் குறிப்புகள் எழுதும் அவரது பழக்கம் தந்தை வழிச் சொத்து. அவருடைய அறையில் நூல்கள் இல்லாத இடம் துணிகள் தொங்கும் கொடி மட்டும்தான். இப்படி நூல்கள் சூழ வாழும் அதிசய மனிதர்கள் சிலரை எனக்குத் தெரியும். அவர்களுள் அரசு தலையாயவர் மட்டுமன்று தனித்தன்மையரும்கூட.

இதழியலில் எனக்கு ஈடுபாடு இல்லாமையால், அத்துறையில் அரசுவின் பங்களிப்புகளையோ அவர் பெற்ற அசுர வளர்ச்சியையோ உரியவாறு விளங்கிக் கொள்ளக்கூடவில்லை. ஒருமுறை அறிஞர் அவ்வை நடராசனிடம் பேசிக் கொண்டிருந்தபோது, ‘இதழியல் சார்ந்த எந்தச் செய்தி வேண்டுமானாலும் அரசுவிடம் கேட்டால் தெளிவு கிடைக்கும். மனிதர் அத்தனைத் தரவுகளையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார்’ என்று பாராட்டி மகிழ்ந்தமை என் கண்களைத் திறந்தது. அவ்வை நடராசன் நான் சந்தித்த மிகச் சிறந்த படிப்பாளிகளில் ஒருவர். தமிழ், ஆங்கிலம் இரு மொழி சார்ந்தும் எப்போதும் படிக்கும் தமிழறிஞர் அவர். அவரே அரசுவிற்கு இப்படியொரு சான்றிதழ் வழங்குகிறார் எனில் அரசு எந்த அளவிற்கு இந்தத் துறையில் வளர்ந்திருக்க வேண்டுமென வியந்தேன்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளைப் பொழிவிற்குச் சென்றிருந்தபோது அப்போது துணைவேந்தராக இருந்த அறிஞர் திரு. இ. சுந்தரமூர்த்தி அரசுவின் இதழியல் அறிவைப் பலபடப் பாராட்டிப் பேசியதும் எனக்கு அரசுவின் உயரத்தை உணரப் பெரிதும் உதவியது. பல நிறுவனங்களுடன் இணைந்து அவர் நிகழ்த்திய இதழியல் சொற்பொழிவுத் தொடர்கள் வரலாற்றுச் சிறப்புடையவை. அவற்றுள் பெரும்பான்மையன அருமையான தொகுதிகளாக வெளியாகியுள்ளன. அந்தத் தொடர்கள் நிகழவும் அவை தொகுதிகளாக மலரவும் அரசு உழைத்த உழைப்பைச் சொற்களில் சிறைப்பிடிப்பது இயலாத செயல். நிறுவனங்களும் உடன்கூட்டமும் அவருக்குத் துணைநின்றன என்றாலும், அவற்றின் பின் இமயமாய் எழுந்து கங்கையாய்ப் பாய்ந்த அவருடைய உழைப்பாற்றலும் தொடர் முயற்சிகளும் வரலாற்றுச் சிறப்புடையன; மறக்கக்கூடாதன; வணங்கத்தக்கன.

இராசமாணிக்கனாரின் மறைவிற்குப் பிறகு, அந்தக் குடும்பத்தை ஓர் அன்பு வட்டத்தில் சீராகக் கொண்டு செலுத்திய பெருமை அரசுவையே சேரும். வயதில் அவர்தான் சிறியவர் என்றாலும், மூத்தவர்கள் அத்துனை பேரும் அவருடைய சொல்லுக்குக் கட்டுப்பட்டோம். அதற்குக் காரணம் எந்தச் சிக்கலிலும் பொதுநலம் சார்ந்து முடிவெடுப்பதில் அவர் கருத்தாக இருந்ததுதான். அவருக்குப் பொய்யுரைக்கத் தெரியாது. போலியாகப் புகழவும் தெரியாது. அதனாலேயே அவர்மீது அனைவருக்கும் நம்பிக்கை இருந்தது. ஒரு காலகட்டத்தில் குறிப்பாக பெரிய அண்ணனின் மறைவிற்குப் பிறகு அவரே தகப்பன் சாமியாக இருந்து குடும்பத்தை வழிநடத்தியதை நானறிவேன். இன்றைக்கும் இராசமாணிக்கனார் குடும்பத்தின் இரண்டாம் தலைமுறை உறுப்பினர்கள் அத்துனை பேருக்கும் அவர் இனிய தோழர், நல் நெறியாளர், நன்னம்பிக்கை முனை.

அரசுவைப் பயன்படுத்திக் கொண்டு வளர்ந்திருப்பவர்கள் நான் உட்படப் பலராவோம். எங்களுக்கெல்லாம் தம் காலத்தையும் உழைப்பையும் தந்த அந்த மனிதர், தமக்காகவும் சற்று உழைத்திருந்தால், இன்று மிகப் பெரிய உயரத்தை அடைந்திருப்பார். தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவோ, தனக்காக எதுவும் கேட்டுப் பெறவோ அவர் முயலவில்லை என்பதைவிட அவற்றை அவர் விரும்பவில்லை என்பதே சரியாக இருக்கும். அவரைப் பயன்படுத்திக்கொண்ட பல பெரியவர்கள் அவருக்கு உரிய சிறப்புகளைச் செய்யும் வாய்ப்புகள் இருந்தபோதும், செய்யாமல் விட்டமையும் ஏனென்று விளங்கவில்லை.

வாழ்க்கையின் பின்பருவத்தில் நானும் அவரும் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் அவரிடம் எனக்குச் சில வேண்டுதல்கள் உண்டு. அவற்றுள் தலையாயது அவர் தம்முடைய இதழியல் உழைப்பை நூல்களாகப் பதிவுசெய்யவேண்டுமென்பது. எவ்வளவு பேசினாலும் உரைகள் நிற்கா. அவை காற்றில் கரைந்துவிடும். ஆனால், எழுத்து அப்படியன்று. அது காலத்தை எதிர்த்து நீந்தும் ஆற்றலுடையது. அரசு, இனி எழுத வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு முன் நான் எடுத்த முடிவை, இன்றேனும் அரசு மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அவரிடமிருந்து நாமும் நாடும் நிறைய எதிர்ப்பார்த்துள்ளோம்.

எத்தனை நாட்களுக்குத்தான் பாதையாகவே இருந்து பயணம் அமைத்துக் கொடுப்பது! தேடித் தேடிச் சேகரித்து வைத்திருக்கும் உழைப்பு முத்துக்களை என்றுதான் மாலையாக்குவது? எத்தனையோ சுகங்களை இழந்து, எவ்வளவோ பொருளிழப்பிற்குப் பின் பெற்ற கருத்து முதல்களைக் காலம் சுமக்க அதன் கைகளில் நூல்களாக்கிக் கொடுக்காவிட்டால், பெற்றவையும் சுமைகளே! பேருழைப்பும் வீணே. இனியேனும் அவர் எழுதவேண்டும். தொடர்ந்து எழுதி இதழியல் உலகின் தலைமகனாக வேண்டும். அந்த இலக்கை அவர் அடைய, அவரால் பயன்பெற்ற என்னைப் போன்ற எல்லோரும் என்றென்றும் எதுவும் செய்யக் காத்திருக்கிறோம்.

அன்புடன்,

இரா. கலைக்கோவன்.

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.