![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 67
![]() இதழ் 67 [ ஜனவரி 15 - பிப்ரவரி 15, 2010 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
கிட்டத்தட்ட எட்டு ஒன்பது வருடங்கள் இருக்கும். சென்னை திருவான்மியூரில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினேன். "இங்கு ஜப்பானிய மொழியைக் கற்றுத் தருகிறீர்களா? நான் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்" என்று கதவைத் திறந்த திருமதி. கல்பனா அவர்களிடம் தெரிவித்தேன். "பெருங்குடியிலுள்ள ஆசியவியல் நிறுவனத்தில் விசாரித்தது நீங்கள்தானா?" என்று உறுதி செய்துகொண்டு, ஜப்பானிய மொழியைக் கற்றுத்தர இசைந்தார். அதற்கு மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ஜப்பான் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது அவர் எழுதிய நூலை வாங்கியிருந்தேன். தமிழ் வழியாக ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்ள உதவும் நூல் அது. அதிலுள்ள இலக்கணப் பகுதியை ஆழ்ந்து வாசித்தபோது அதிசயித்துப்போனேன். தமிழ் இலக்கணத்துக்கும் ஜப்பானிய இலக்கணத்துக்கும் 99 விழுக்காடு ஒற்றுமை இருப்பதைக்கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. சில ஆண்டுகள் கழித்து வேறொரு ஆசிரியரிடம் ஜப்பானிய மொழியைத் தொடர்ந்து பயின்றாலும், ஒவ்வொரு பாடத்தையும் தமிழுடன் தொடர்புபடுத்திப் படித்ததால், இலக்கணத்தையும் உச்சரிப்பையும் எளிதாக உள்வாங்கிக்கொள்ள முடிந்தது மட்டுமின்றி, அந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற தேர்வில் 90 விழுக்காட்டுக்கு மேல் மதிப்பெண் பெறவும் முடிந்தது. இது ஜப்பானிய மொழியில் புலமை பெறுவது கடினமானதல்ல என்ற தன்னம்பிக்கையைத் தந்து ஊக்கப்படுத்தியது. பிறகு ஜப்பானுக்கு வந்தபிறகு, தமிழ்மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் உள்ள தொடர்பைத் தேடியலைந்தேன். தமிழுடன் தொடர்புடைய ஜப்பானியர்கள் பலருடன் தொடர்பு ஏற்பட்டது. ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் யசுதாவில் தொடங்கி, சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் ஜப்பானிய மொழியில் பெயர்த்த டாக்டர். ஷு ஹிக்கோசக்கா வரை பல்வேறு தரப்பட்ட ஜப்பானியர்களைத் தமிழ் அறிமுகப்படுத்தியது. இருப்பினும், தமிழுடன் உள்ள தொடர்பு எப்போது, யாரால், எவ்வாறு கண்டறியப்பட்டது என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு மட்டும் விடையே கிடைக்கவில்லை. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காகத் தயாரித்துவரும் ஆய்வுக்கட்டுரை, இக்கேள்விக்கான விடையை வெளிச்சமிட்டுக் காட்டியது. பேராசிரியர் சுசுமு ஓனோ என்பவர்தான் அவ்வறிஞர். இவருக்கு முன்பே பலர் இத்தொடர்பு பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிற்சில ஆய்வு முடிவுகளை வெளியிட்டிருந்தாலும், இவரது முறையான ஆய்வுமுறை இந்தக் கருத்தை முன்மொழிந்தவர் என்ற பெருமையைப் பெற்றுத்தந்தது. இவர் கடந்த 2008 ஜூலை 14 அன்று இயற்கை எய்தியிருந்தாலும், அண்மையில்தான் இவரைப்பற்றித் தெரியவந்தது. இதுபோன்றவர்களைத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம் என்றெண்ணி இங்கே பதிகிறேன். தனது 89 வருட வாழ்க்கையில், சுமார் 30 வருடங்களுக்கும் மேல் தமிழ் மற்றும் ஜப்பானிய மொழிகளுக்கு இடையிலுள்ள தொடர்பைப் பற்றி ஆய்வு செய்திருக்கிறார். 1957 ஆம் ஆண்டிலேயே ஜப்பானிய மொழியின் வேர்களைத் தேடும் பயணத்தைத் தொடங்கிய இவர், ஆரம்பத்தில் கொரிய மொழி, ஐனு (Ainu) மற்றும் ஆஸ்த்ரோநேஷிய (Austronesian) மொழிகளுடன் (இவற்றைப் பற்றி இதற்கு முன்பு கேள்விப்பட்டதில்லை) ஜப்பானிய மொழிக்கு உள்ள நெருக்கத்தை ஆராய்ந்தார். இம்மொழிகளுடன் பொருந்துவதைவிட, தமிழுடன் இலக்கண ரீதியாகவும், வாக்கிய அமைப்பு ரீதியாகவும் வெகுவாகப் பொருந்துகிறது என்று 1970ன் பிற்பகுதியில் கண்டறிந்தார். இவரது ஆய்வைப் பற்றி ஐரோப்பியத் தமிழறிஞர் டாக்டர். கமில் சுவலபில் பின்வருமாறு கூறுகிறார். 'The similarities between Japanese and Dravidian cannot be regarded as mere freakish coincidence, and may indeed reflect a very deep genetic kinship...'. இவ்விரண்டு மொழிகளுக்கும் இடையே பெரும் ஒற்றுமை உள்ளது என்று பேராசிரியர் ஓனோ அவர்கள் உறுதியாகக் கூறுவதற்குக் காரணம், இவரது ஆய்வின் முதுகெலும்பாக விளங்கும் பண்டைய கல்வெட்டுகளின் ஒப்புநோக்கல்தான். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதான யயோய் காலத்து ஈமத்தாழிகளிலுள்ள எழுத்துகளுக்கும் தமிழகத்தின் பெருங்கற்காலப் பண்பாட்டின் ஈமத்தாழிகளிலுள்ள எழுத்துகளுக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருப்பதைக் கண்டறிந்தார். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, அவர் ஜப்பானுக்கு வந்திருந்தபோது ஏற்பட்ட அனுபவத்தைக் கூறினார். டோக்கியோவுக்கும் ஓசகாவுக்கும் இடையே நகோயா என்றொரு நகரம் இருக்கிறது. அங்கு ஓரிடத்தில் இருந்த பலகையில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களில் பிராமி எழுத்துருக்களின் சாயலைக் கண்டிருக்கிறார். பிராமியில் அவ்வெழுத்துருக்களின் பொருளைக்கூறி, அச்சொற்களும் அதே பொருளைத் தருவதைப் பார்த்தபோது, நிச்சயம் திராவிட மொழிகளுக்கும் ஜப்பானிய மொழிக்கும் ஏதோ தொடர்பிருக்கும் என்று கருதியிருக்கிறார். பேராசிரியர் ஓனோ அவர்களின் இந்தக்கூற்று பல அறிஞர்களால் மறுக்கப்பட்டும் புறந்தள்ளப்பட்டும் வந்திருக்கிறது. ஆனால் இவர் விடாப்பிடியாக இருந்து, ஆதாரங்களை அடுக்குகிறார். கீழ்க்கண்ட ஜப்பானிய மொழிச் சொற்கள் தமிழிலிருந்து வந்ததாகக் கூறுகிறார். தனோஷி (pleasant) யசாஷி (gentle) நிகோநிகோ (with a smile) ட்சுயா (luster) சபிஷி (lonely) கனாஷி (sad) அவரே (misery) கவாயி (adorable) அகாய் (red) அவோய் (blue) குரோய் (black) ஷிரோய் (white) ஹனாசு (talk) இயு (say) சகேபு (scream) அதாமா (head) கவோ (face) ஹா (tooth) பொகே (dementia) இவற்றில் பேசுதல் என்று பொருள் தரும் இயு மட்டுமே 'இயம்புதல்' என்ற தமிழ்ச்சொல்லுடன் பொருந்தி வருவதுபோல் தெரிகிறது. மற்ற சொற்களை ஒத்த தமிழ்ச்சொற்கள் உள்ளனவா என்று சங்க இலக்கியங்களில் புலமை பெற்றவர்கள்தான் கூறவேண்டும். இவர் எழுதிய நூலில் (Nihongo no Genryu wo Motomete - ஜப்பானிய மொழியின் வேர்களைத் தேடி) கண்டிப்பாக இந்த ஒற்றுமைகளின் விளக்கங்கள் இடம்பெற்றிருக்கும் என்று எண்ணுகிறேன். இத்தமிழ்ச்சொற்கள் ஜப்பானில் எப்படிப் பரவியிருக்கும் என்பதற்கும் கருதுகோள்களைத் தருகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு யயோய் காலத்தில் தமிழர்கள் ஜப்பான் நாட்டுக்கு வணிகநோக்கில் பயணம் செய்ததாகக் கூறுகிறார். நெல் விதைக்கும் முறை கொரியாவிலிருந்து வந்திருந்தாலும், விதைப்பதற்கு முந்தைய சடங்குகள், அறுவடைகால வழிபாடு போன்ற கொரியாவில் இல்லாத, தமிழகத்தில் வழக்கத்திலுள்ள பழக்கங்களை ஆதாரமாகக் காட்டுகிறார். இன்னொரு உதாரணத்தையும் கூறுகிறார். ஒருவன் ஒருத்தியை மணம் செய்துகொள்ள விரும்பினால், மூன்று நாட்கள் தொடர்ந்து அப்பெண்ணை அவளது வீட்டுக்குச் சென்று சந்தித்து விண்ணப்பம் விடுத்து வருவது வழக்கம். அவளுக்கும் விருப்பமிருப்பின், மூன்றாவது நாள் இட்லி போன்ற அரிசியால் செய்யப்பட்ட உணவை அளிப்பாள். இது ஒரு முக்கியமான கலாச்சார ஒற்றுமை என்கிறார். ஆனால் தமிழகத்தில் இப்படியொரு கலாச்சாரம் இருந்ததா என்பதையும் சங்க இலக்கிய வல்லுனர்கள்தான் கூறவேண்டும். இவரது ஆய்வுகளை மறுக்க விரும்பும் அறிஞர்கள், இத்தகைய ஒப்புமைகளை Co-incidence என்று கூறுவதைத்தான் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இவர்கள் சொல்வதையும் அவ்வளவு எளிதாக மறுக்க முடியாது. ஏனெனில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் ஜப்பானுக்கு விஜயம் செய்தார்கள் என்பதற்குச் சூழல் சார்ந்த ஆதாரங்கள் (Circumstantial evidences) தவிர, வெளிப்படையான ஆதாரங்கள் ஏதுமில்லை. எனவே, வெளிப்படையான ஆதாரங்கள் கிடைக்கும்வரை, தற்செயலான ஒப்புமை என்பதையும், இரு இனத்தவர்களும் ஒரே மாதிரி சிந்தித்திருத்தல் மட்டுமே சாத்தியம் என்பதையும் ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. மீண்டும் ஏதாவது ஆதாரம் கிடைத்தபிறகு சந்திப்போம். this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |