![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 67
![]() இதழ் 67 [ ஜனவரி 15 - பிப்ரவரி 15, 2010 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
சோழர்களின் விருப்பத்திற்கு உகந்த உறைவிடமான பழையாறையில் வாழ்ந்தவர் அமர்நீதிநாயனார். வணிக மரபில் வந்த அச்சைவப் பெருமகனார் இறையடியாருக்கு உணவிடலும் ஆடையளித்தலும் தம் கடமைகள் எனக் கருதித் தொண்டாற்றி வந்தார். பழையாறைக்குப் பக்கத்திலுள்ள திருநல்லூருக்கு விழாக் காணச் சென்றவர் அங்கு மடம் ஒன்று அமைத்துத் தம் தொண்டைத் தொடர்ந்தார்.
அமர்நீதியாரின் நல்ல உள்ளத்தை உலகுக்கு உணர்த்த விழைந்த இறைவன் பிரம்மசாரி வடிவெடுத்துக் கைத்தண்டில் கட்டப்பெற்ற இரண்டு கோவணங்களுடன் அமர்நீதியாரின் மடம் சேர்ந்தார். அவரை வரவேற்ற அமர்நீதி அப்பெரியாரின் வருகைக்குத் தாம் செய்த தவம் என்னவோ என வியந்து மகிழ்ந்தார். அடியாருக்கு உணவூட்டி உடையும் அளிக்கும் தொண்டு அறிந்து அமர்நீதியைக் காணவந்ததாக இறைவன் கூறினார். மடத்தில் உணவருந்திச் செல்லுமாறு இறைவனை அமர்நீதி வேண்ட, ஒப்பிய இறைவன் தாம் குளித்து வந்து உணவு உண்பதாகக் கூறித் தண்டிலிருந்த இரண்டு கோவணங்களுள் ஒன்றை எடுத்து அமர்நீதியிடம் தந்தார். குளித்து மாற்றத் தாம் ஒன்று கொண்டு செல்வதாகவும் ஒரு வேளை இடையில் மழைவரின் அது நனைந்து போகக்கூடும் என்பதால் மற்றொன்றைப் பாதுகாப்புக் கருதி அமர்நீதியிடம் தருவதாக வும் கூறி, 'ஓங்கு கோவணப் பெருமையை உள்ளவாறு உமக்கே ஈங்கு நான் சொல வேண்டுவதில்லை. நீர் இதனை வாங்கி நான் வரும் அளவும் ஆங்கு வைத்துத் தாரும்' என்றுரைத்துக் குளிக்கச் சென்றார். அமர்நீதியார் கோவணத்தை வாங்கிப் பாதுகாப்பாக வைத்தார். குளித்துத் திருமடம் வந்த இறைவனை அமர்நீதி உணவருந்த வேண்டினார். இறைவன் உடுத்திருந்த கோவணமும் தண்டுக் கோவணமும் நனைந்திருந்தன. இரண்டும் ஈரமாகிப் போனதெனக் கூறி மாற்றிக்கொள்ள அமர்நீதியிடம் தாம் தந்த கோவணத்தைக் கேட்டார் இறைவன். அமர்நீதி கோவணம் வைத்த இடத்திற்குச் சென்று பார்த்தார். கோவணத்தைக் காணவில்லை. இறைவன் அதை மறையச் செய்தமை அமர்நீதிக்குத் தெரியாமையின் திருமடம் முழுவதும் தேடினார். இருந்தால்தானே கிடைப்பதற்கு! செய்வதறியாது திகைத்த அமர்நீதி, புதிய கோவணம் ஒற்றைக் கொணர்ந்து இறைவனிடம் தந்தார். 'வைத்தது பிழைத்தது; இது புதியது. நனைந்தது களைந்து நெய்தமைத்த இது அணிக' என இறைவனிடம் வேண்டினார். இறைவன் நெருப்பாய்ச் சினந்தார். தாம் தந்ததை மறைத்துப் புதியதென வேறு தருவது சரிதானா என்று எள்ளினார். தாம் அறியாமல் நடந்த பிழை என்றுரைத்த அமர்நீதி, தாம் கொணர்ந்திருந்த கோவணத்துடன் பட்டாடைகள், மணிகள் அனைத்தும் தருவதாகக் கூறினார். தமக்குப் பொன்னும் பட்டும் வேண்டாம் எனக் கூறிய இறைவன், தம் கோவணத்திற்கு ஈடான கோவணமே போதும் எனத் தணிந்தார். அமர்நீதியார் சற்றே மகிழ்ந்து, இறைவன் கோவணத்திற்குச் சமமான கோவணத்தைத் தாம் எங்ஙனம் தருவது என்று கேட்க, தண்டில் இருந்த கோவணத்தைக் காட்டிய இறைவன், அது அமர்நீதியார் தவறவிட்ட கோவணத்திற்கு இணையானது எனக் கூறி அதன் எடைக்குச் சமமானதைத் தந்தால் போதும் என்றார். மிக நன்று என மகிழ்ந்த அமர்நீதி தராசொன்றை அமைத்தார். அதன் ஒரு தட்டில் தண்டிலிருந்த கோவணத்தை இறைவன் வைக்க, அமர்நீதி தம் கையிலிருந்த புதிய கோவணத்தை மற்றொரு தட்டில் இட்டார். இறைவன் தட்டு இறங்கி வரவில்லை. அது கண்டு வியந்த அமர்நீதி நாயன்மார்களுக்கு அளிப்பதற்காக வைத்திருந்த கோவணங்களை ஒவ்வொன்றாக தட்டில் இட்டார். தட்டு சமமாகவில்லை. 'உலகில் இல்லாத மாயை! இக்கோவணத்திற்குப் பல கோவணங்கள் இட்டும் ஒப்பாகவில்லையே' என்று உருகியவர், தம்மிடமிருந்த பல ஆடைகளையும் அத்தட்டில் இட்டார்; பொதிப்பொதியாக வைத்தார். தட்டு சமமாகவில்லை. அஞ்சிய அமர்நீதி தம்மிடமுள்ள பொன், பொருள் இவற்றை இடலாமா எனக் கேட்க, எது இட்டாலும் சரி; தம் கோவணத்திற்கு அது ஈடானால் போதும் என்றார் இறைவன். திருமடத்திற்குள் நுழைந்த அமர்நீதி, தாம் வைத்திருந்த பொன், வெள்ளி, நவமணித்திரள் அனைத்தும் கொணர்ந்து தட்டில் இட்டார். தட்டு நேராகவில்லை. பலவகை உலோகங்களைக் கொணர்ந்து வைத்தார். தட்டு நேராகவில்லை. அச்சமும் வியப்பும் கலந்த நிலையில், 'தலைவ, யானும் என் மனைவியும் சிறுவனும் தகுமேல் துலையில் ஏறிடப் பெறுவதுன் அருள்' எனத் தொழுதார். அமர்நீதியின் நிலையைத் தராசின் வழி உலகிற்கு உணர்த்தவும் அவரை இவ்வுலகத் துன்பத்திலிருந்து விடுவிக்கவும் எண்ணிய இறைவன் அதற்கு இசைந்தார். 'இழைத்த அன்பினில் இறைத் திருநீற்று மெய்யடிமை பிழைத்திலோம் எனில் பெருந்துலை நேர் நிற்க' என்று நல்லூர் இறைவனை வணங்கியவாறே ஐந்தெழுத்து ஓதித் தராசுத் தட்டில் ஏறி நின்றனர் அமர்நீதியாரும் அவர் மனைவியும் மகனும். இறைவன் கோவணமும் அமர்நீதியாரின் தொண்டும் ஒத்தமையால் தட்டுகள் நேராகின. இறைவன் வேடம் கலைத்து நல்லூரில் இருக்குமாறு போலத் தேவியுடன் காட்சியளித்தார். தட்டேறிய மூவரும் கைதொழுது இறைவனை ஏத்தினர். இறைவன் அருளினால் அத்தட்டே விமானமாகி வணிகர் குடும்பம் கைலாயம் அடைந்தது. சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்தில் விரிவாகக் கூறியிருக்கும் அமர்நீதிநாயனாரின் இவ்வரலாறு, 'கோவணநாடகம்' என்ற பெயரில் கி. பி. 1175ல் நல்லூர்த் திருக்கோயிலில் நடிக்கப்பட்ட தகவலை அக்கோயிலில் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்கள் கண்டறிந்த புதிய கல்வெட்டுகளுள் ஒன்று வெளிச்சப்படுத்துகிறது. பாபநாசத்திற்கு அருகில் பாபநாசம் வலங்கைமான் சாலையில் உள்ள பாடல் பெற்ற ஊர் திருநல்லூர். அங்குள்ள கல்யாண சுந்தரேசுவரர் கோயில் திருவாவடுதுறை மடத்தின் ஆளுகையில் உள்ளது. மாடக்கோயிலாக வெற்றுத் தளத்தின்மீது அமைந்திருக்கும் இக்கோயிலின் இருதளத் திராவிட விமானம் பல்லவச் சாயல் கொண்டது. அதன் கருவறைப் பின்சுவரில் இறைவனும் இறைவியும் அமர்நிலையில் இருக்க, துளைப்பட்ட மேனியுடன் இலிங்கமும் உள்ளது. பக்கச் சுவர்களில் நான்முகனும் விஷ்ணுவும். இக்கோயிலில்தான் அப்பருக்குத் திருவடி சூட்டும் படலத்தை இறைவன் நிகழ்த்தியதாகச் சேக்கிழார் கூறுவார். அதை முன்னிறுத்தியே இன்றளவும் அடியவர்கட்கு இங்குத் திருவடிச் சேவை நிகழ்த்தப்படுகிறது. அமர்நீதிநாயனாரால் புகழ் பெற்ற இக்கோயிலில் அவருக்குக் கல்லிலும் மரத்திலும் சிற்பங்கள் உள்ளன. மரச்சிற்பம் தராசுத் தட்டில் அமர்நீதியின் குடும்பம் நிற்பதைக் காட்ட, கற்சிற்பங்கள் அமர்நீதியையும் இடுப்பில் குழந்தை ஏந்திய அவர் துணைவியையும் படம்பிடிக்கின்றன. நல்லூர்க் கோயில் இரண்டாம் கோபுரத்தின் வடபுறத் தாங்குதளத்தில் வெட்டப்பட்டிருக்கும் இரண்டாம் இராஜாதிராஜரின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, நல்லூர் அக்காலத்தில் ஸ்ரீபஞ்சவன்மாதேவிச் சதுர்வேதிமங்கலம் என்றும் அறியப்பட்டதாகக் கூறுகிறது. நித்தவிநோத வளநாட்டின் கீழ் இணைக்கப்பட்டிருந்த இந்த பிரமதேய ஊரின் நிருவாகத்தைக் கவனித்து வந்த பெருங்குறி மகா சபையினர், நல்லூர்க் கோயில் திருவிழாவின்போது கோவணநாடகம் நடத்த இக்கோயில் தேவரடியாள் நெற்றிக்கண் நங்கைக்குக் காசு கொள்ளா இறையிலியாக இரண்டு மா முக்காணி அளவு நிலம் கோவணநாடகப் புறமாகக் கொடையளித்துள்ளனர். நெற்றிக்கண் நங்கை இக்கோவண நாடகத்தை வேறுயாரிடமிருந்தோ கற்று ஆடியதாகக் கூறும் கல்வெட்டில், நங்கையின் மறைவுக்குப் பிறகும் அந்நாடகம் அவரது வழித்தோன்றல்களால் தொடர்ந்து நடத்தப்பெற வேண்டும் என்று பெருங்குறி மகாசபை அறிவுறுத்தியதை அறியமுடிகிறது. வழித் தோன்றல்களால் இந்நாடகம் நடத்த முடியாத நிலை உருவாகுமானால் அவர்கள் வேறு ஆடற்கலைஞர்களை ஏற்பாடு செய்து இந்நாடகத்தைத் தொடர்ந்து நடத்திட வேண்டும் என்ற நிபந்தனையையும் பெருங்குறி மகாசபை விதித்திருந்தது. கோவணநாடகப் புறமாக அளிக்கப்பட்ட நிலத்தின் எல்லைகளைக் குறிப்பிடும்போது இருமுடிசோழ வதி, பஞ்சவன்மாதேவி வாய்க்கால் ஆகிய நீர்ப்பாசன அமைப்புகளின் பெயர்களையும் இருள்நீக்கி எனும் சிற்றூரின் பெயரையும் கல்வெட்டு முன்வைக்கிறது. 'கற்றாடுதல்', ஆடமுடியாத நிலை ஏற்படின், 'பிரதி கொடுத்தாடுதல்' போன்ற கல்வெட்டுச் சொல்லாட்சிகள் குறிப்பிடத்தக்கன. தமிழ்நாட்டு ஆடற்கலை வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெறும் இந்தக் கல்வெட்டு, அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரும் இவ்வூருடன் தொடர்புடையவருமான அமர்நீதிநாயனாரின் வரலாற்றையே, 'கோவணநாடகம்' என்று குறிப்பிடுகிறது. இந்நாடகத்தை நடிக்கத் தேவரடியாள் நெற்றிக்கண் நங்கைக்குத் தரப்பட்ட நிலம் நாடகத்தின் பெயராலேயே கோவணநாடகப்புறம் என்று வழங்கப்பட்டமையும் சிறப்பிற்குரிய தரவாகும். தமிழ்நாட்டில் இருவரையிலும் கிடைத்திருக்கும் ஆடற்கலை சார்ந்த கல்வெட்டுகள் எவற்றிலும் இது போல் கொடையளிக்கப்பட்ட நிலம் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் பெயரால் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நல்லூரில் கண்டறியப்பட்ட மற்றொரு புதிய கல்வெட்டு, கோயில் விமானக் கீழ்த்தளப் பெருமண்டபத் தூண் ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ளது. அம்மண்டபத்தைக் கட்டித் தந்தவராகப் பழையனூர் உடையான் திருப்பெருமணம் உடையானைச் சுட்டும் அக்கல்வெட்டு, தூணையும் அவரே தந்ததாகக் கூறுகிறது. கல்வெட்டுக் குறிப்பிடும் பெருமணம் சம்பந்தர் இறைவனோடு கலந்த இடமாகும். வெற்றுத் தளத்தின் தெற்குக் கோட்டமொன்றில் இடம் பெற்றிருக்கும் ஆலமர்அண்ணலின் முன் எடுக்கப்பட்டுள்ள முன்றிலின் மேற்குக் காலின் கீழ்ப்புறம், அதை எடுத்தவரின் சிற்பமும் அதைச் சுற்றி, முன்றிலை எடுத்தவர் மாதானமங்கலத்து ஸ்ரீமாகேசுவரப் பிரியனான உழியின்றி வந்தான் என்று குறிப்பிடும் கல்வெட்டுப் பொறிப்பும் காணப்படுகின்றன. அமர்நீதிநாயனாராலும் அப்பர் பெருமானாலும் மாடக்கோயில் அமைப்பாலும் சிறப்புப் பெற்றிருக்கும் நல்லூர்க்கோயில் புதிய கண்டுபிடிப்பான கோவணநாடகக் கல்வெட்டால் மேலும் சிறப்புக்குரியதாகி இருப்பது கண்கூடு. கல்வெட்டுகள் 1 ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனசக்கரவர்த்திகள் ஸ்ரீராஜாதிராஜ தேவர்க்கு யாண்டு 12வது நித்தவினோத வளநாட்டு நல்லூர் நாட்டுத் திருநல்லூரான ஸ்ரீபஞ்சவன்மஹாதேவிச் சதுர் வேதிமங்கலத்துப் பெருங்குறி மஹாஸபையோம் உடையார் திருநல்லூர் நாயனார் கோயிற் திருநாடகம் இவ்வூர்த் திருப்பூத்தூர் மாளந்தை பட்டாரகர் வடுகனான 2 உடைய பிள் . . . . கோவண நாடகங் கற்றாடின இக்கோயில் தேவரடியா - - ளமர் மதலையான நெற்றிக்கண்ணங்கைக்குக் கோவணநாடகப்புறமாக விட்ட நிலமாவது இவ்வூர் இருமுடிசோழ வதிக்குக் கிழக்குப் பஞ்சவன்மாதேவி வாய்க்காலுக்குத் தெற்கு முதற் கண்ணாற்று 3 மூன்றாஞ் சதிரத்து கெளதமன் இருணீக்கி திருவையாறுடையான் பக்கல் நாங்கள் - - விட்ட பொத்தகப்படி நிலம் . . . . . யினால் விரித்து நிலம் . . இந்நிலம் இரண்டு மா முக்காணியும் கூத்தாட இக்காணியுங் காசு கொள்ளா இறையிலியுமாக அனுபவித்து இத்தேவர் திருவிழாவிலேய் 4 இக்கூத்தாடக் கடவராகவுந் தனக்குப் பின்புந் தன் வம்சத்தால் பிஜ்ஜை நல்ல - - - ஆடக் கடவராகவுந் தங்களால் ஆட இயலாவிடிற் ப்ரதி குடுத்தாடுவிக்கக் கடவதாகவுஞ் சொல்லி இந்நிலமித் திருநாடகத்துக்கே கூத்தாட்டுக் காணியுங் காசு கொள்ள இறையிலியுமாகச் சந்த்ராதித்தவற் செல்வதாக இறையிலிசெய்து குடுத்தோம் 5 இப்பெருங்குறி மஹாஸபையோம் இவ்விறையிலி ஆதிசண்டேசுவர ரக்ஷை பன்மாஹேச்வர ரக்ஷை இப்படிக் கிவை இப்பெருங்குறி மஹாஸபையோம் - - ஆவணமாகக் கொண்டருளித் தேவர் தொழக் கறுத்த கண்டத்தான் தூமழையோனாகிய முக்கறுக்கத் தோன்றினான் வந்து 1 ஸ்வஸ்திஸ்ரீ இ 2 த்திருமண்டபம் 3 செய்வித்தார் ப 4 ழையனூருடை 5 யான் திருப்பெரு 6 மணமுடையா 7 ன் கால் 1 மாதாநமங்க 2 லமுடையான் 3 ஸ்ரீ 4 மா 5 ஹே 6 ச்வர 7 ப் 8 பி 9 ரி 10 ய 11 ன் 12 உழி 13 யி 14 ன் 15 றி 16 வ 17 ந் 18 தா 19 ன் this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |