http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 67

இதழ் 67
[ ஜனவரி 15 - பிப்ரவரி 15, 2010 ]


இந்த இதழில்..
In this Issue..

மாமன்னர் கிருஷ்ண தேவராயர்
இத்திருமலை செய்வித்தார்
கோவணநாடகம்
திருவரங்கத்து வைகாசித் திருவிழா
அன்னபிராயம் செய்த நாள்கொடை
தமிழிலிருந்து வந்ததா ஜப்பானிய மொழி?
பண்டைய நாழிகை காட்டிகள்
இதழ் எண். 67 > தலையங்கம்
மாமன்னர் கிருஷ்ண தேவராயர்
ஆசிரியர் குழு
வாசகர்களுக்கு வணக்கம்.

இந்த மாதம் (ஜனவரி 2010) விஜயநகரப் பேரரசின் சீரிய பெருமன்னராக விளங்கிய கிருஷ்ண தேவ இராயர் முடிசூடி 500 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளதைப் போற்றும் வகையில் ஹம்பி மாநகரில் சிறந்த்தொரு விழாவெடுத்துக் கொண்டாடியது கர்நாடக அரசு. இவ்விழாவின் ஒரு அங்கமாக விஜயநகரத்தைப் பற்றிய இரு புதிய புத்தகங்களை மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ண தேவராயருக்கும் விஜயநகர சாம்ராஜ்ஜியத்திற்கும் கர்நாடகம் மட்டுமல்லாமல் தென்னக மாநிலங்கள் அனைத்துமே நன்றிக்கடன் பட்டுள்ளன எனில் மிகையில்லை. பதிமூன்று மற்றும் பதினான்காம் நூற்றாண்டுகளில் படையெடுப்பு எனும் பெயரில் வரிசையாகப் பல கொள்ளைகள் நிகழ்த்தி - பொதுமக்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாத பல கொடுமைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளாக்கி - அக்காலச் சமுதாயத்தின் ஆணிவேர்களாக விளங்கிய திருக்கோயில்களையும் பண்பாடுகளையும் கடுமையாகத் தாக்கிச் சீர்குலைத்த வடக்கத்திய இஸ்லாமியப் படையெடுப்பாளர்களின் ஆதிக்கத்தை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்து தென்னகத்துக் கோயில்களும் கலைகளும் முற்றிலுமாக அழிந்து போகாமல் காப்பாற்றி ஒரளவிற்கு மீட்டெடுத்த பெருமை அவர்களுக்கும் அவர்கள் வழி வந்த நாயக்க அரசர்களுக்கும் மட்டுமே உரியது.

நான்கு வெவ்வேறு குலத்தவர்களால் பல்வேறு காலகட்டங்களில் வளரும் விஜயநகரப் பேரரசின் அதிசய வரலாறு பதினான்காம் நூற்றாண்டின் துவக்கத்தில் துங்கபத்திரை நதிக்கரையில் துவங்குகிறது. அப்பகுதியில் சங்கம குலத்ததைச் சேர்ந்த ஹரிஹரர் மற்றும் புக்கர் எனும் இரு சகோதரர்கள் ஹொய்சளர்களின் சிறு படைத்தலைவர்களாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நாடெங்கிலும் நிலையற்ற குழப்பமான அரசியல் சூழல் நிலவுவதால் மக்கள் பலத்த சிரமங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். கொலை கொள்ளை மலிகின்றன.

இந்நிலையில் சிருங்கேரி மடத்தைச் சேர்ந்த வித்யாரண்யர் எனும் துறவியின் சொற்கள் சகோதரர்களை வீறு கொண்டு எழ வைக்கின்றன. மகத்தானதொரு சாம்ராஜ்ஜித்திற்கான அடித்தளம் நிறுவப்படுகிறது. மெல்ல மெல்லத் திட்டமிடப்பட்டு அந்த அஸ்திவாரம் விஸ்தரிக்கப்படுகிறது. சாம்ராஜ்ஜிய விரிவாக்கம் - அதிகாரப் பரவல் - எனும் ஆசையை மட்டும் முன்வைத்து நகராமல் நமது மூலவேர்கள் முழுவதுமாகப் பட்டுப்போய்விடாமல் காப்பாற்றப்படவேண்டும் எனும் முனைப்புடன் அந்த அஸ்திவாரத்தின் மேல் எழும்புகிறது ஒரு கோட்டை. விஜயநகரத்தின் முதல் மன்னராக ஹரிஹரரும் அவரைத் தொடர்ந்து புக்கரும் அந்தக் கோட்டையைத் தங்கள் உதிரத்தைச் சிந்தி ஸ்தாபிக்கின்றனர். புக்கரின் புதல்வரான குமார கம்பணர்தான் தென்னகத்தின் கோடிவரை படையெடுத்து வந்து மதுரையையும் திருவரங்கத்தையும் மீட்டெடுத்தவர். கம்பணரின் துணைவியாரால் எழுதப்பட்ட சம்ஸ்கிருதக் காவியமான மதுரா விஜயம் விரித்துச் சொல்லும் இந்த மீட்சியின் இரு முக்கியப் பரிமாணங்களை திருவரங்கத்திலும் திருக்கோளக்குடியிலும் காணப்படும் இரு கல்வெட்டுக்கள் உருக்கமாகப் பதிவு செய்கின்றன. (இவ்விரண்டு திருக்கோயில்களிலுமே இக்கல்வெட்டுக்களின் பெருமையை விளக்கும் சிறு குறிப்புக்கூடக் கிடையாது!)

சங்கமர்களைத் தொடர்ந்து சாளுவ அரசர்களாலும் அதனைத்தொடர்ந்து துளுவ அரசர்களாலும் விஜயநகர சாம்ராஜ்ஜியம் வளர்ச்சியடைகிறது. இவ்வாறு எந்த மகத்தான பின்புலமுமின்றி துறவியொருவரின் தூண்டுதலால் உருவாகிப் பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்து நின்று நான்கு வெவ்வேறு குலத்தவர்களால் தொடர்ந்து அரசாட்சிக்குட்படுத்தப்பட்ட சாம்ராஜ்ஜியங்கள் மிகச்சிலவே. அவற்றுள் விஜயநகரம் தலையாயப் பெருமையுடையது.

இவ்விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட மூன்றாவது குலமான துளுவ குலத்தின் பெரும் பேரரசராகத் தோன்றியவர்தான் கிருஷ்ண தேவராயர். இவரது காலத்தில்தான் விஜயநகரம் தனது உச்சக்கட்ட பலத்தை எய்தியதெனலாம். இவரது காலகட்டத்தில் அந்நகரை விஜயம் செய்த போர்த்துகீசியப் பயணிகள் அந்த சாம்ராஜ்ஜியத்தின் செல்வத்தையும் செழிப்பையும் ஏராளமாகப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். இராயரும் வித்தியாசமான அரசர்தான். மதுரைக்கு அவரது பிரதிநிதியாக அனுப்பப்பட்ட நாகம நாயக்கர் வரி கொடுக்காமல் தகறாறு செய்ய, அவரைப் பிடித்துவர அவரது மகனான விசுவநாதனையே அனுப்பி வைத்தவர். அவரது நம்பிக்கை மாறாமல் விசுவநாதன் நடந்துகொள்ள, அவரைச் சுதந்திர மன்னராக்கிவிடுகிறார் இராயர். இதுதான் விசுவநாத நாயக்கர் முதல் மதுரை நாயக்கரான வரலாறு.

தென்னகம் முழுவதிலும் பல திருக்கோயில்களுக்குப் பலப்பல நிவந்தங்களை இராயர் அள்ளியள்ளி அளித்திருக்கிறார். சிதம்பரம், திருவரங்கம், திருமலை என்று நீளும் இப்பட்டியல் மிக நீளமானது. ஆள் கலை - இலக்கியத்திலும் லேசுப்பட்டவரல்ல. ஹம்பி மாநகர எச்சங்கள் இவரது கலையார்வத்திற்கோர் சிறந்த எடுத்துக்காட்டு. ஆண்டாளின் பக்தி வரலாறு இவருக்கு மிகவும் பிடித்துப்போக, ஆமுக்த மால்யதா என்றொரு காவியமே அவள் பேரில் இயற்றிவிட்டார். இந்தக் காவியத்தின் பின்னணியில்தான் இன்றும் ஆந்திர மக்கள் ஆண்டாளைக் கோதாதேவி என்று பெயரிட்டுக் கொண்டாடி வருகின்றனர். ஆண்டாள் திருமுன் இல்லாத வைணவக் கோயில்கள் தமிழ்நாட்டில் பல உண்டு. ஆந்திரத்தில் கிடையாது.

இவ்வாறு ஆந்திரம் கர்நாடகம் தமிழகம் என்று மும்மாநிலங்களையும் மக்களையும் அணைத்துச் சென்ற அப்பெருந்தகையைத் 'தமிழரல்ல' எனும் குறுகிய மனப்பான்மையினால் நாம் போற்றிக் கொண்டாடாமல் போகலாம். ஆனால் தமிழ்நாட்டில் பிழைத்திருக்கும் ஆயிரமாயிரம் பழங்கோயில்கள் காலகாலங்களுக்கும் அவரை நன்றியுடன் கைகூப்பி நினைத்திருக்கும்.

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.

அன்புடன்
ஆசிரியர் குழு

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.