http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 86
இதழ் 86 [ பிப்ரவரி 15 - மார்ச் 17, 2012 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
பெரியபுராண ஆய்வு
(சென்ற இதழ்த் தொடர்ச்சி...) மூன்றாம் குலோத்துங்கன் பேரம்பலம் பொன்வேய்ந்தவன் அல்லன் மூன்றாம் குலோத்துங்கன் கட்டிய திரிபுவன வீரேச்சுரம் என்ற சிறப்புடைக் கோயிலில் உள்ள வடமொழிச் சுலோகங்கள் அம்மன்னன் செய்தனவாகக் கூறுவன காண்க: 1. அவனுடைய சோழ-ஈழ-சேர நாட்டு வெற்றிகள் 2. அவன் தில்லையில் முகமண்டபம், கோபுரம், அம்மன் திருச்சுற்று இவற்றைப் பொன்மயமாக்கினான். 3. ஈடும் எடுப்பும் அற்ற சிவபக்தன். 4. காஞ்சி ஏகாம்பரர் கோயில், மதுரைச் சிவன் கோயில், திருவிடைமருதூர்க் கோவில், தாராசுரத்தில் உள்ள இராசராசேச்சுரம், திருஆரூர்ப் பெருங்கோயில் இவற்றைப் பொன்மயமாக்கினான். இக்கல்வெட்டில் மூன்றாம் குலோத்துங்கனான திருபுவன வீரதேவன் பேரம்பலம் பொன்வேய்ந்தான் என்பது குறிக்கப்படாமை காண்க. அவன் தில்லையில் முகமண்டபம், கோபுரம், அம்மன் திருச்சுற்று இவற்றையே சிறப்புறச் செய்தான் என்று இக்கல்வெட்டு கூறுகின்றது. மூன்றாம் குலோத்துங்கன் பேரம்பலம் பொன் வேய்ந்தவன் அல்லன் என்பது பெறப்பட்டதன்றோ? மேலும், சேக்கிழார் காலத்தரசன் அநபாயன் என்ற சிறப்புப் பெயர் பெற்றவன் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அச்சிறப்புப் பெயர் மூன்றாம் குலோத்துங்கற்கு உண்டு என்று கூறச் சான்றின்மை காண்க. இன்னபிற காரணங்களால் மூன்றாம் குலோத்துங்கன் சேக்கிழார் காலத்தவன் ஆகான் என்பது அறியப்படும். 'அநபாயன்' இரண்டாம் குலோத்துங்கனே சேக்கிழார் புராண ஆசிரியர், சேக்கிழார் காலத்து அரசனை 'அபயன்'28 எனவும் 'அநபாயன்'29 எனவும் குறித்துள்ளார் என்பதை முன்பே கூறினோம் அல்லவா? சேக்கிழார் பத்து இடங்களில் தம் காலத்தரசனைக் குறித்துள்ளார்; அப்பத்து இடங்களிலும் 'அநபாயன்' என்பதையே சிறப்பாகக் குறிக்கின்றார்; இரண்டு இடங்களில் 'அபயன்' என்பதைக் குறித்துள்ளார். இனி இம்மன்னனைப் பற்றிப் பெரிய புராணம் கூறுவனவும் கூத்தர் பாடிய உலா, பிள்ளைத்தமிழ், தக்கயாகப்பரணி ஆகிய மூன்றும் கூறுவனவும் முறையே காண்போம். அநபாயனைப் பற்றிப் பெரியபுராணம் கூறுவன: 1. பேரம்பலம் பொன்வேய்ந்தமை 2. சிறந்த சிவபக்தன் 3. செங்கோல் அரசன் 4. தில்லைத்திரு எல்லைப் பொன்னின் மயமாக்கினான் 5. தில்லைநகர் மணிவீதி அணிவிளக்கும் சென்னி நீடு அநபாயன் 6. அம்புயமலராள் மார்பன் 7. சிறந்த கொடையாளி அநபாயனைப் பெரியபுராணம் குறிக்கும் சொற்கள் 1. அநபாயன் - 10 இடங்களில் வருகின்றன 2. அபயன் - 2 இடங்களில் வருகின்றன 3. சென்னி - 3 இடங்களில் வருகின்றன 4. செம்பியன் - 1 இடத்தில் வருகின்றது 5. குலோத்துங்கன் - 1 இடத்தில் வருகின்றது உலாவும் பிள்ளைத்தமிழும் தக்கயாகப்பரணியும் கூறுவன 1. பேரம்பலம் பொன் வேய்ந்தமை 2. சிறந்த சிவபக்தன் 3. பட்டம் பெற்றவுடன் பகைவேந்தரை விடுதலை செய்தான்; செங்கோல் அரசன் 4. சிற்றம்பலம், பல பல மண்டபம், அம்மன் கோயில், எழுநிலைக் கோபுரம், திருச்சுற்று மாளிகை, தெரு இவற்றைப் பொன்மயம் ஆக்கினான் 5. நான்கு திருவீதிகளையும் அமராவதியில் உள்ள பெருவீதிகள் நாணப் பெருக்கினான் 6. இலக்குமியை மார்பில் தரித்தவன் 7. மறையவர்க்குத் தானம் செய்தான் இவனைக் குறிக்கும் சொற்கள் 1. அநபாயன் - 3 இடங்களில் வருகின்றன 2. அபயன் - 2 இடங்களில் வருகின்றன 3. சென்னி - 2 இடங்களில் வருகின்றன 4. குலோத்துங்கன் - 4 இடங்களில் வருகின்றன இங்ஙனம் சேக்கிழாரும் ஒட்டக்கூத்தரும் குறிப்பிட்ட கருத்துக்கள் ஒன்றுபடுதலைக் காணின், சேக்கிழார் குறித்த அநபாயன் இரண்டாம் குலோத்துங்கனே என்பது ஐயமற விளங்குகின்றதன்றோ? தண்டியலங்கார மேற்கோள் பாக்களில் எட்டுப் பாடல்கள் அநபாயனைப் பற்றியே வருகின்றன30. அவை அவனுடைய வள்ளற்றன்மை, செங்கோண்மை, பேரரசுத்தன்மை ஆகிய மூன்றையும் பெரியபுராணத்தைப் போலவும் உலா, பிள்ளைத்தமிழ், பரணி போலவும் விளக்கமாகக் கூறுகின்றன. அப்பாடல்களுள் இறுதிப்பாடல் அநபாயனை வாழ்த்துவதாக முடிவதால், தண்டியலங்கார மூலமும் உரையுமோ அல்லது உரை மட்டுமோ இவ்விரண்டாம் குலோத்துங்கன் காலத்தது எனக் கூறலாம். இங்குப் பெரிய புராணம் குறிக்கும் பத்து இடங்களிலும் சிறப்புச் சொல்லாக 'அநபாயன்' என்பதே ஆளப்பட்டிருத்தலும், தண்டியலங்காரம் குறிக்கும் மேற்கோட்செய்யுட்கள் எட்டிலும் 'அநபாயன்' என்ற சொல் ஒன்றே ஆளப்பட்டிருத்தலும் காணச் 'சேக்கிழார் காலத்தரசன்' 'அநபாயன்' என்ற பெயர் ஒன்றையே தனது சிறப்புப் பெயராகக் கொண்டவன் என்பது நன்கு தெரிகின்றது. இங்ஙனம் கொண்டவன் கூத்தரால் புகழப்பெற்ற இரண்டாம் குலோத்துங்கனே என்பது மேற்காட்டிய ஒற்றுமையால் நன்கு விளக்கமாதல் காண்க. இனி, இவ்விரு புலவரும் குறித்த செய்திகள் அனைத்திற்கும் இக்குலோத்துங்கன் கல்வெட்டுக்கள் சான்று பகர்ந்து நிற்கும் அருமைப்பாட்டைக் கீழே காண்க: அநபாயனைப் பற்றிய இலக்கியச் செய்திகள் 1. பேரம்பலம் பொன்வேய்ந்தமை 2. இவன் ஆட்சியில் போரைப் பற்றிய குறிப்பே இல்லை 3. இவன் கோப்பெருந்தேவி புவனமுழுதுடையாள் 4. இவன் சிறந்த சிவபக்தன் 5. இவன் தில்லை-கோவிந்தராசர் சிலையை அப்புறப்படுத்தியவன் 6. இவனது சிறப்புப்பெயர் அநபாயன் அநபாயனைப் பற்றிய கல்வெட்டுச் சான்றுகள் 1. திருமாணிக்குழி, திருப்புறம்பயம், திருக்கோகர்ணம் கல்வெட்டுகள் இவன் பொன்வேய்ந்தமையைக் குறிக்கின்றன 2. இவன் கல்வெட்டுகளிலும் போர் பற்றிய பேச்சில்லை; அமைதியான அரசாட்சி நடந்தது 3. இவன் கோப்பெருந்தேவி புவனமுழுதுடையாளையே திருமழபாடிக் கல்வெட்டும் கூறுகின்றது 4. 'அநபாயன் தில்லை நடராசர் திருவடித் தாமரையில் ஈப்போன்றவன்' என்று திருவாரூர் வடமொழிக் கல்வெட்டு கூறுகிறது 5. இவன் தில்லை கோவிந்தராசர் சிலையை அப்புறப்படுத்தியதைத் திருவாவடுதுறைக் கல்வெட்டு கூறுகின்றது 6. இவனை அநபாயன் என்றே திருவாரூர் வடமொழிக் கல்வெட்டு கூறுகிறது. 7. இவனது அரசியல் செயலாளர், அநபாய மூவேந்த வேளான் எனப்பட்டான் 8. இவன் காலத்தில் கோயில்கட்கு விடப்பட்ட நிலங்கள் அநபாய நல்லூர், அநபாயமங்கலம் எனப் பெயர் பெற்றன 9. சிற்றரசன் ஒருவன் அநபாயக் காடவராயன் எனப்பட்டான். (தொடரும்) பின்குறிப்புகள் 27. 190 of 1907; See also Prof. K.A.N. Sastry's article in the 'Acharya Pushpanjali' pp. 5-7 28. S.59 29. S.98 30. Kumarasamy pulavar edition (1926), pp. 1, 28, 81, 93, 115,152 and 184 this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |