http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 86

இதழ் 86
[ பிப்ரவரி 15 - மார்ச் 17, 2012 ]


இந்த இதழில்..
In this Issue..

எதுதான் தமிழ்ப்புத்தாண்டு?
திரும்பிப்பார்க்கிறோம் - 33
தவ்வைத்தேவி
சேக்கிழாரும் அவர் காலமும் - 3
The Sapthamathas at Ayyarappar temple in Thiruvaiyaru
நன்னன் திருவிழா / நன்னன் பிறந்தநாள் விழா
இதழ் எண். 86 > தலையங்கம்
எதுதான் தமிழ்ப்புத்தாண்டு?
ஆசிரியர் குழு

வாசகர்களுக்கு வணக்கம்.

சென்ற மாதத் தலையங்கத்தை ஆதரித்தும் எதிர்த்தும் கருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. 'தையோ, சித்திரையோ, புத்தாண்டைக் கொண்டாட விரும்புபவர்கள் அரசின் ஆணைக்காக இல்லாமல், அவரவர் மனசாட்சிப்படி எது சரியென்று படுகிறதோ, அதைக் கொண்டாடுவதுதான் சரி. அரசு ஆணையிட்டது என்பதற்காக ஒரு வருடம் யோசிக்காமல் தையில் கொண்டாடிவிட்டு, அடுத்த அரசு அதை மாற்றும்போது மீண்டும் யோசிக்காமல் சித்திரையில் கொண்டாடுவதுதான் தவறு' என்பதுதான் தலையங்கத்தின் உட்கருத்து. இதைச் சரியாகப் புரிந்து கொண்டிருந்தால் எதிர்ப்பிற்கு இடமிருந்திருக்காது.

கடந்த இதழ் வெளியான பின்பு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் எங்களிடமிருந்து உடனடி மறுமொழி வராததால் 'நாங்கள் கள்ள மௌனம் சாதித்ததாக'க் குற்றம் சாட்டினார்கள். அவர்களுக்கு, மாத இதழுக்கும் Blogக்கும் இடையே உள்ள வேறுபாடு தெரிந்திருக்கும் என்றே நம்புகிறோம். வரலாறு.காம் என்பது குறிப்பிட்ட அளவு கட்டுரைகள் சேர்ந்த பிறகு ஏறத்தாழ ஒரு மாத கால இடைவெளியில் வெளியிடப்படும் மின்னிதழ்; தினந்தோறும் பதிவேற்றப்படும் வலைத்தளம் அல்ல. கட்டுரைகள் கிடைப்பதைப் பொறுத்து இந்த ஒரு மாதம் என்பது சற்று அதிகமாகவும் ஆகலாம். எனவே, இந்தத் தாமதத்திற்குப் பொருள், எங்கள் நிலையைத் தெளிவுபடுத்த எங்களால் முடியவில்லை என்பதன்று.

தமிழ்க்கடல் மறைமலையடிகள், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் போன்ற ஆய்வுநெறி அறிந்த புலமைமிக்க அறிஞர்கள் ஒரு கருத்தை வலியுறுத்தி இருக்கும்போது நிச்சயம் அவர்கள் தகுந்த பின்புலம் இல்லாமல் சொல்லியிருக்க மாட்டார்கள் என்பது எங்கள் நம்பிக்கை. வரலாற்றை எழுதும்போது உணர்ச்சிவயப்படாமல் எழுதுவதே முறை. வரலாறு.காம் அதில் இயன்றவரை கவனமாகவே இருக்க முயல்கிறது என்றாலும், அதையும் மீறிச் சில சொற்கள் உணர்ச்சி மிகுதியாய் எப்போதேனும் வந்து விழுந்துவிடுகின்றன. அப்படி வந்து விழுந்த சொற்கள்தான் சென்ற தலையங்கத்தின் 'மானமும் அறிவும்' போன்றவை. அந்தச் சொற்களால் யாரேனும் மனம் புண்பட்டிருந்தால் பொறுத்தாற்றிக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

மறைமலை அடிகள் தலைமையில் புத்தாண்டு குறித்து முடிவுகள் எடுக்கப்பட்ட காலகட்டத்தில் வெளிவந்த நாளிதழ்கள் மற்றும் மாத இதழ்களை மறைமலையடிகள் நூலகம், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்ற இடங்களில் கடந்த ஒருமாத காலமாகத் தேடிப்பார்த்தாலும், இதுபற்றிய செய்திகளை இதுவரை காணக்கூடவில்லை. எனவே, இன்னும் தேடல் தொடர்ந்து கொண்டிருந்தாலும், இதுவரை கிடைக்காத நிலையில், எப்போது தமிழ்ப் புத்தாண்டு என்று நாமே மூலத்தரவுகளில் இருந்து ஆய்ந்தறிந்தால் என்ன என்ற எண்ணம் துளிர்விட்டது. தேடலின் முடிவில், சித்திரையில் தமிழ்ப்புத்தாண்டு என்று சொல்வதற்கும் எந்த ஆதாரமும் இல்லை; தையில் தமிழ்ப்புத்தாண்டு என்று சொல்வதற்கும் எந்தச் சான்றும் இல்லை என்பது தெளிவானது. அது மட்டுமல்ல, 'சங்ககாலத்தில் தமிழர்கள் புத்தாண்டு கொண்டாடியதற்கே சான்றில்லை' என்றும் அறிந்தோம். சித்திரையில்தான் புத்தாண்டு என்று கூறுபவர்கள் வைக்கும் தரவுகளைச் சீர்துக்கிப் பார்த்தபோது கேள்விகளே மிஞ்சி நின்றன.

'சங்க இலக்கியங்களில் 'தைந்நீராடல்' எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் அதனைச் சூரிய வழிபாட்டுடன் தொடர்புபடுத்துவதற்குரிய குறிப்போ, புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்) தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்போ சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை.' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வுதான் (உத்தராயனத் தொடக்கம்) புத்தாண்டு தொடங்குகிறது என்பதற்கு அறிகுறி என்று கூறுவதை மனதில் நிறுத்திக் கொள்வோம். தை முதல்தேதி அன்று நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்பு இல்லை. சரி. இந்த நிகழ்வு சித்திரை முதல்தேதி நிகழ்கிறது என்பதற்கான இலக்கியச் சான்றுகள் எவை?

'மகாபாரதம் நிகழ்ந்த காலமாகக் கருதப்படும் கி.மு. 1300ஆம் ஆண்டிலிருந்து, மகாபாரதம் எழுத்து வடிவம் பெற்ற கிறிஸ்து சகாப்தத் தொடக்க நூற்றாண்டு வரையிலும்' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.

மகாபாரதத்தின் காலத்தை கி.மு 1300ம் ஆண்டு என்று கூறுவது எப்படி? தமிழ் ஹிந்து தளம் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்று கூறுகிறதே? (பார்க்க: http://www.tamilhindu.com/2009/08/kannan_for_all_time/) எது உண்மை?

'மேலை நாடுகளில் உறைய வைக்கும் குளிர்காலம் முடிந்து வெயிற்காலம் தோன்றுவது மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது.'
'"உறையூர்ப் பங்குனி முயக்கம்" என்றும் "கொங்கர் மணி அரை யாத்து மறுகின் ஆடும் உள்ளிவிழவு" என்றும் குறிப்பிடப்படும் விழா, பங்குனி மாதப் பூர்ணிமை நாளான உத்தர பல்குன நட்சத்திரத்தன்று நடைபெற்ற ஹோலி விழாவே ஆகும். இவ்விழா பங்குனி மாத இறுதி நாளில் கொண்டாடப்பட்டது. வேனில் காலத்தை வரவேற்கின்ற விழாவாக இது அமைந்தது எனத் தெரிகின்றது.' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.


மேலை நாடுகளில் சரி! உறைய வைக்காத குளிரைக்கொண்ட தமிழ்நாட்டில் வெயில் காலம் ஏன் வரவேற்கப்பட்டது? பங்குனி முயக்கமும் உள்ளிவிழவும் வடநாட்டுப் பண்டிகையான 'ஹோலி'யுடன் தொடர்புபடுத்தப்படுவது எதன் அடிப்படையில்? காமன் பண்டிகைக்கும் இந்திரவிழாவுக்கும் என்ன தொடர்பு? மேலும் இந்திரவிழாவுக்கும் புத்தாண்டுக்கும் என்ன தொடர்பு? 'மீனமேஷம் பார்த்தல்' என்பதைச் சான்றாகக் கொள்ள வேண்டுமானால், 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற பேச்சு வழக்கையும் ஆதாரமாகக் கொள்ளலாமா?

'ஆங்கில வருடப் பிறப்புக் காலமாகிய ஜனவரி மாதத்தினையொட்டித் தை மாதம் வருவதாலும், விக்ரம சகாப்தம், சாலிவாகன சகாப்தம் முதலியனவெல்லாம் காலாவதியாகிப் போய் ஆங்கிலேய சகாப்தம் - சொல்லப் போனால் கிறிஸ்துவ யுகம் - அகிலத்தையே ஆக்கிரமித்துவிட்டதாலும், அதற்கு ஒத்து வருகிற வகையில் நமது பழம் மரபுகளுக்குப் புதிய விளக்கமளிக்கிற ஓர் ஒத்திசைவே இதற்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.

இது கட்டுரையாளருக்குத் 'தோன்றியிருக்கிறது'. அவ்வளவே. முடிந்த முடிவாகச் சொல்லவில்லை. நேரடியான ஆதாரங்களையும் காட்டவில்லை. சாந்திரமான மற்றும் சௌரமான முறைகளைக் குழப்பங்கள் என்று சொல்லிவிட்டு, கிரேக்க, ரோமானிய, ஜொராஸ்ட்ரியக் காலக்கணக்கீடுகளை இந்தியச் சோதிட அறிவியலின் (உண்மையிலேயே இது அறிவியலா என்பது வேறு விஷயம். பார்க்க : நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி முனைவர். வெங்கட்ராமன் அவர்களின் கூற்று. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=375826) சாந்திரமான முறையின் பூர்ணிமாந்தக் கணக்கீட்டுடன் இணைத்திருப்பது ஏன்? இது ஐரோப்பிய நாடுகளுடன் ஒத்துவருகிற வகையில் புதிய விளக்கமளிக்கிற ஓர் ஒத்திசைவா?

'பூர்ணிமாந்த முறை (பெளர்ணமியை ஒரு மாதத்தின் முடிவாகக் கொள்ளும் முறை)'
'இந்திர விழா சித்திரை மாதப் பூர்ணிமையன்று நிகழ்ந்தது என்பது சிலப்பதிகாரத்தில் தெளிவுபடக் குறிப்பிடப்படுகிறது.'
'பூம்புகாரில் சித்திரைத் திங்களில் இந்திர விழா கொண்டாடப்பட்டதைப் பற்றிய இலக்கியச் செய்திகளை இக் கட்டுரையில் முன்னரே பரிசீலித்தோம். இச் செய்திகளின் அடிப்படையில் பார்த்தாலும் தேவர்களின் தலைவனாகிய இந்திரனுக்கு ஆண்டின் தொடக்க காலத்தில் விழா எடுக்கின்ற மரபு நீண்ட நெடுங்காலமாகச் சோழ நாட்டில் தொடர்ந்து வந்திருக்கின்றது' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.


இந்திரவிழா தொடர்பான மேற்கண்ட மூன்று வரிகளையும் படிப்போர்க்குக் குழப்பமே மிஞ்சும். பூர்ணிமை (பௌர்ணமி) + அந்தம் = பௌர்ணமியுடன் ஒரு மாதம் முடிகிறது. இதை இரண்டாவது சொற்றொடருடன் பொருத்திப் பார்க்கும்போது இந்திரவிழா சித்திரை மாதத்தின் கடைசி நாளில் நடைபெற்றதாக வருகிறது. இதன்மூலம் மூன்றாவது வரியில் இந்திரனுக்கு ஆண்டின் தொடக்கக் காலத்தில் விழா எடுத்திருப்பதால் பூர்ணிமாந்த முறையில் சித்திரையின் கடைசி நாள்தான் ஆண்டின் தொடக்கமா?

'பூர்ணிமாந்தக் காலக்கணக்கீட்டின் படியமைந்த, மார்கழி மாத இறுதி நாளன்று அதாவது தை முதல் தேதிக்கு முந்தைய நாளான மார்கழிப் பெளர்ணமியன்று பாவை நோன்பின் இறுதி நாளாகக் கருதப்பட்டு பலராமன் வழிபாடும் நிகழ்ந்திருக்க வேண்டும்.'
'போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே தவிரப் பரவலாகக் கருதப்படுவது போல இந்திரனுக்கு உரிய விழா அன்று.'
'மார்கழித் திங்களின் இறுதி நாளன்று கொண்டாடப்படும் போகிப் பண்டிகை விவசாயக் கடவுளான பலராமனுக்கு உரிய விழாவே.'
'பக்தி இயக்கக் காலகட்டத்தில் மார்கழி நோன்பின் இறுதி நாளன்று அல்லது நோன்பு முடிகின்ற நாளை அடுத்துப் பால் சோற்றுப் பொங்கல் சமைத்து அதில் நெய்யைப் பெய்து உண்டு களித்தனர்.'
'பூம்புகாரில் இந்திர விழாவின் போது "சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து" மூதிற் பெண்டிர் வழிபட்டனர் எனச் சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை வரி 64-69களில் குறிப்பிடப்படுகிறது. விழுக்குடை மடை என்பது 'மாமிசம் விரவின சோறு' என்றும் பொங்கல் என்பது 'கள்ளு' என்றும் உரையாசிரியர்கள் பொருள் கண்டுள்ளனர். எனவே தைப் பொங்கல் விழா என்ற பெயர்கூட மதுப் பொங்கல் தொடர்பானதே; விவசாயக் கடவுளான பலராமனுக்குரிய வழிபாட்டு விழாவே என்பதும் தெளிவாகும். போகியை மார்கழி மாத இறுதி நாளன்று தனி விழாவாகவும் பொங்கலைத் தை முதல் நாளன்று தனி விழாவாகவும் கொண்டாடுவது மட்டும்தான் இன்று நாம் காணும் வெளிப்படையான வேறுபாடே தவிர இவை இரண்டும் ஒரே விழாவாகவே இருந்துள்ளன என்பது தெளிவான உண்மையாகும்.' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.


போகிப்பண்டிகை என்பது பலராமனுக்கு உரியது. அது மார்கழித் திங்களின் இறுதி நாளன்று கொண்டாடப்படுவது. பூம்புகாரில் இந்திரவிழாவின்போது (சித்திரை மாதக் கடைசிநாளில்) வைக்கப்பட்ட பொங்கலும் பலராமனுக்குரியதே. அப்படியெனில் இவை இரண்டும் எப்படி ஒரே விழாவாக இருந்திருக்க முடியும்? சிலப்பதிகாரக் காலத்தில் மார்கழிக்கு அடுத்துச் சித்திரை மாதம் வந்ததா? இரண்டு மாதங்களின் இறுதி நாட்கள் (பௌர்ணமிகள்) அடுத்தடுத்து வந்தனவா? அப்படியானால் சித்திரை மாதத்துக்கு ஒரே நாளா? மேலும், போகிப்பண்டிகை பலராமனுக்கு உரிய விழா என்பதற்கு என்ன சான்று?

'பிற்காலச் சோழராட்சியின் போது தைப் பொங்கல் விழா என்பது தமிழர் திருநாளாகக் கருதப்பட்டதா; தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப் பொங்கலன்று தொடங்கிற்றா என்ற கேள்விகள் தொடர்பான பிரச்சினையாகும். இவை இரண்டிற்குமே தெளிவான விடை "அல்ல" என்பதுதான்.'
'சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்திற்குத் திரும்புகின்ற நாள் என்ற காலக் கணக்கீட்டின் அடிப்படையில் தை மாதம் முதல் தேதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது பிற்காலச் சோழர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது உண்மையே.'
'இருப்பினும் இந்நாள் புத்தாண்டுத் தொடக்கமாகவோ தமிழர்க்கு மட்டுமேயுரிய திருநாளாகவோ கருதப்படவில்லை.' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.


கட்டுரையின் தொடக்கத்தில் 'புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்) தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்புச் சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை' என்று குறிப்பிடுபவர், சோழர் காலக் கல்வெட்டு உத்தராயனத் துவக்கம் தை முதல்நாள் என்று குறிப்பிடும்போது அதை ஏன் புத்தாண்டாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்?

'சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் ஓரிடத்தில்கூடத் தைப் பொங்கல் விழாவை முதன்மைப்படுத்தியோ, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் உழவர்கள் கொண்டாடிய முதன்மையான ஒரு விழாவாகவோ குறிப்பிடவில்லை என்பது எண்ணிப்பார்க்கத் தக்கது.' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.

சித்திரைப் புத்தாண்டையும் அப்பெருந்தகை முதன்மைப் படுத்தவில்லை என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டாமா?

'பருவங்களின் தலைமைப் பருவம் தொடங்கும் சித்திரை மாதத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். மருத நிலத்தின் தெய்வமாக இந்திரனையும், அந்நிலத்துக்குரிய பெரும் பொழுதாக இளவேனில் பருவத்தையும் குறிப்பிடுவதே தமிழிலக்கிய மரபாகும்' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.
'கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில்-முதுவேனில், கார்-கூதிர், முன்பனி-பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது.' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.


இந்த வரிசை தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் தரும் வரிசையுடன் பொருந்தவில்லையே?

'காரும் மாலையும் முல்லை
குறிஞ்சி, கூதிர் யாமம் என்மனார் புலவர்
பனி எதிர் பருவமும் உரித்து என மொழிப
வைகறை விடியல் மருதம்
எற்பாடு, நெய்தல் ஆதல் மெய் பெறத் தோன்றும்
நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே
பின்பனிதானும் உரித்து என மொழிப
இரு வகைப் பிரிவும் நிலை பெறத் தோன்றலும்
உரியது ஆகும் என்மனார் புலவர்' - தொல்காப்பியம் - பொருளதிகாரம் - அகத்திணையியல் – (6-13)


இதில் கார்காலம்தானே முதலாவதாகக் குறிக்கப்படுகிறது? இது தொல்தமிழ் மரபில்லையா?

'60 ஆண்டுகள் கொண்ட பிரபவாதி சுழற்சிமுறை "வியாழ வட்டம்" (Jovian Circle) எனப்படும்.'
'இந்த வியாழ வட்டத்திற்கும் சித்திரை மாதத்தில் புத்தாண்டு பிறப்பதற்கும் அடிப்படையான தொடர்பு ஏதுமில்லை.' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.


பிறகு ஏன் ஒவ்வொரு சித்திரை முதல் தேதியிலும் ஒவ்வோர் ஆண்டு தொடங்குவதாகச் சோதிடம் கூறுகிறது? 1-1-2012 என்ற தேதிக்கும் 2012ம் ஆண்டுக்கும் எந்த அடிப்படைத் தொடர்பும் இல்லை என்று கூறுவதுபோல் இருக்கிறது.

'ஜோதிட அடிப்படையில் பார்க்கப்போனால் விஸ்வபுருஷனின் தலையாகக் கருதப்படும் மேஷ ராசியின் முதல் பாகையில் சூரியன் பிரவேசிக்கின்ற காலமே சித்திரை முதல் நாளாகும்.'
'"திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்" என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல்வாடையில் இடம்பெறும் வரியாகும். மேஷ ராசியே தலையான (முதல்) ராசி என்பது இதன் பொருள்.' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.


இப்பாடலுக்குப் 'பத்துப்பாட்டு ஆராய்ச்சி'யில் தமிழரின் வானியல் அறிவைக்கூறும் 'வானக்கலை' என்ற தலைப்பில் டாக்டர். மா.இராசமாணிக்கனார் எழுதிய விளக்கம் : 'சந்திரன் தக்கனுடைய புதல்வியர் இருபத்தெழுவரை மணந்தான்; அவர்களுள் உரோகிணியிடம் மிகுந்த அன்பு செலுத்தினான்' என்பது புராணக்கதை. பாண்டிமாதேவியின் கட்டிலின் மேற்கூரையில் இராசிமண்டலம் வரையப்பட்டிருந்தது. சந்திரன், உரோகிணி உருவங்களும் வரையப்பட்டிருந்தன. ஆகாயத்திடத்தே திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேடராசி முதலாக ஏனை இராசிகளிற் சென்று திரியும் மிக்க செலவினையுடைய ஞாயிற்றோடே மாறுபாடு மிகுந்த தலைமையினையுடைய திங்களோடு திரியாமல் நின்ற உரோகிணி எழுதப்பட்டிருந்தது'.

இதில் புத்தாண்டு எங்கே வருகிறது?

மேடராசியைத் தலையாகக் கொண்டு சூரியன் சுற்றி வருவதாக இப்பாடல் கூறினாலும், சூரியனுக்கும் புத்தாண்டுக்கும் உள்ள தொடர்பை வகுத்தவர் யார்? சூரியன் ஒரு குறிப்பிட்ட இராசிக்குள் நுழைவதுதான் புத்தாண்டு என்று எப்படி எடுத்துக் கொள்வது? வானியல் என்பது வானில் உள்ள கோள்களின் இயக்கத்தை ஆராயும் இயல். மேற்கண்ட பாடல் தமிழர்களின் வானியல் அறிவுக்குச் சான்று. அவ்வளவே. அவ்வானவியல் கூறுகளின் பெயரால் பண்டிகைகளையும் பலன்களையும் கணிக்கும் சோதிடம் என்பது மக்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. அறிவியல் விதிகளைப் போன்று சோதிட விதிகளைத் தெளிவாக வரையறை செய்து தொடர்ச்சியாக நிரூபிக்க முடியாது. வரலாற்று ஆய்வு என்று குறிப்பிடப்படும் ஒரு கட்டுரைக்கு அறிவியல் முறையில் நிரூபிக்க முடியாத சோதிடத்தை அடிப்படையாகக் கொள்வது ஆய்வுநெறியா?

மேட ராசி என்று நச்சினார்க்கினியர் போன்ற உரையாசிரியர்கள் குறிப்பிடுவதால் அது சித்திரைதான் என்கிறார்கள். உரையாசிரியர்கள் சங்க இலக்கியங்கள் இயற்றப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் அல்லர். ஒருகாலத்தில் எழுதப்பட்ட ஒரு பாடலுக்குப் பல நூற்றாண்டுகள் கழித்து வந்தவர்கள் உரையெழுதியிருக்கிறார்கள். எனவே, பாடலை இயற்றியவர் சொல்ல விரும்பிய கருத்தைத்தான் உரையாசிரியர்களும் கூறியிருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள முடியாது. உரையாசிரியர்களின் கருத்துக்கள் இரண்டாம்நிலைத் தரவுகளே. மூலபாடம்தான் முதல்நிலைத் தரவாகக் கொள்ளத்தக்கது.

உரையாசிரியர்கள் அவரவர் காலத்தில் நிலவிவந்த நம்பிக்கைகளுக்கேற்பத் தற்குறிப்பேற்றியோ அல்லது நடுநிலையுடனோ பாடலுக்குப் பொருள் கண்டிருக்கவே வாய்ப்பிருக்கிறது. தமிழ் ஹிந்து தளத்தில் 'விய' ஆண்டுக்கு 'இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியையும்', கணியன் பூங்குன்றனாரின் பாடலுக்கு ஊழ்வினைக் கருத்தையும் தற்குறிப்பேற்றி இணைத்துப் பார்ப்பதையும் புராணம் தொடர்பான சங்க இலக்கியப் பாடலடிகளுக்கு அப்புராணங்களைக் காட்டியே பரிமேலழகர் போன்றவர்கள் நடுநிலையுடன் உரையெழுதியதையும் போல. எனவே, உரையாசிரியர்களின் கருத்தைச் சான்றாக முன்வைக்கும்போது மூலபாடத்திலுள்ள செய்யுள் அடிகளையும் சரிபார்ப்பது அவசியமாகிறது.

அந்த வகையில், நெடுநல்வாடைப் பாடலின் 'ஆடு தலையாக' என்ற சொல்லைப் பார்க்கும்போது உண்மையிலேயே 'மேடராசி முதல் இராசிதானா?' என்று ஐயம் எழுகின்றது. சூரியன் சுற்றுகிறது என்ற தொடரே அதன் பாதையை வட்டம் என்கிறது. வட்டத்திற்கு ஏது தலையும் வாலும்? அப்படியே ஏதாவதொரு புள்ளியிலிருந்து தொடங்க வேண்டும் என்றாலும் தலையாக என்பதை 'முதலாக' என்று ஏற்றுக் கொள்வதிலும் சிக்கல் இருக்கிறது. உதாரணமாக, எங்கள் குழுவைக் குறிப்பிடும்போது, கோகுலை நன்கு அறிந்தவர்கள் 'கோகுல் முதலான வரலாறு.காம் உறுப்பினர்கள்' என்றும், லலிதாராமை நன்கு அறிந்தவர்கள் 'ராம் முதலான வரலாறு.காம் உறுப்பினர்கள்' என்றும் குறிப்பிடுவார்கள். நாங்கள் அனைவரும் சமம் எனும்போது, இங்குப் பயன்படுத்தப்படும் 'முதலான' என்ற சொல் அவரவர் பார்வையையே குறிக்கிறது.

அதுமட்டுமின்றி, பரிபாடல் 11ல் 'எரிசடை எழில்வேழம் தலையெனக் கீழிருந்து தெருவிடைப் படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்' என்ற அடிகளில் எரி – கார்த்திகை, சடை – திருவாதிரை, வேழம் – பரணி 'முதலென' என்று வருவதால், முதல் நட்சத்திரம் அசுவினி என்றல்லாமல், 'கார்த்திகை' என்று கொள்ளலாமா? அல்லது இதை இன்னொரு விதமாகப் பார்க்கலாம். அடுத்த அடியில் 'தெருவிடைப் படுத்த' என்று வருவதால், 12 இராசிகளைக் கார்த்திகைக்குரிய இடபவீதி (கன்னி, துலாம், மீனம், மேடம்), திருவாதிரைக்குரிய மிதுனவீதி (விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம்) மற்றும் பரணிக்குரிய மேடவீதி (இடபம், மிதுனம், கடகம், சிம்மம்) என்று பெருமழைப் புலவர் சோமசுந்தரனார் கூறும் வரிசையில் பார்த்தாலும் வீதிகளில் ரிஷபமும் இராசிகளில் (இடபவீதியின் முதல் இராசியான) கன்னியுமே முதலாக வருகின்றன. எனவே, நெடுநல்வாடையில் முதல் இராசியாக மேடராசிதான் குறிக்கப்படுகிறதா என்பது தெளிவாக இல்லை.

சோதிடத்தில் மட்டுமே மேட ராசியும் சித்திரையும் இணைத்துக் கூறப்படுகின்றன. எந்தவொரு சங்க இலக்கியத்திலும் அத்தகைய இணைப்பு இல்லை. தமிழ் ஹிந்து தளத்தில் வெளியாகி இருக்கும் 'சித்திரையில் தொடங்கும் புதுவருடம் - 1' என்னும் கட்டுரையின் இறுதியிலும் இதற்கு ஒரு விளக்கம் தரப்பட்டுள்ளது.

'மாதம் என்னும் சொல்லே, மதி என்னும் சொல்லிலிருந்துதான் உண்டாயிற்று. எந்த நட்சத்திரத்தில் மதி, முழு மதியாகிறதோ, அந்த நட்சத்திரத்தின் பெயரில்தான் சந்திர மாதங்கள் சொல்லப்பட்டன. இந்த முறைக்கு சாந்திரமானம் (Lunar Calender) என்று பெயர். இந்தப் பெயர்கள் நாளடைவில் சூரிய மாதங்களுக்கும் சேர்த்து, தற்காலத்தில், சூரியமாதப் பெயர்களாகி விட்டன.' - ஜெயஸ்ரீ சாரநாதன் - 'சித்திரையில் தொடங்கும் புதுவருடம் - 1'.

இது தவறு. இக்கட்டுரையை வாசிக்க நேர்ந்த 8-ஜனவரி-2012 அன்று பௌர்ணமி இருந்தது. மாதம் மார்கழி. இக்கட்டுரையின்படி பார்த்தால் அன்று மார்கழி என்று தமிழில் சொல்லப்படும் மிருகசீரிஷ நட்சத்திரம்தான் இருக்கவேண்டும். ஆனால் அன்று இருந்ததோ அதிகாலை 5:45 வரை திருவாதிரை நட்சத்திரமும், அதன் பின்னர் புனர்பூசமும். அதற்கு அடுத்த நாள் 9-ஜனவரி-2012 அன்று பௌர்ணமி பகல் 13:39 வரை இருக்க, புனர்பூசம் காலை 6:20 வரையும் அதன் பின்னர் பூசம் நட்சத்திரமும் இருந்தன.
பார்க்க: http://www.tamildailycalendar.com/tamil_monthly_calendar.php?month=01&year=2012&Submit=Submit.

'மார்கழி, திருவாதிரைப் பௌர்ணமியில் ஆரம்பிக்கும் இந்த நோன்பு தொடர்பாக' - ஜெயஸ்ரீ சாரநாதன் - 'சித்திரையில் தொடங்கும் புதுவருடம் - 2'.

அடுத்த கட்டுரையிலேயே மார்கழிப் பௌர்ணமி ஏன் மிருகசீரிஷத்தில் வராமல் திருவாதிரையில் வருகிறது?

'12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற குருவும்' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.
'வியாழன் கிரகத்தின் 60 வருட சுழற்சியின் பெயர்கள்'' - ஜெயஸ்ரீ சாரநாதன் - 'சித்திரையில் தொடங்கும் புதுவருடம் - 2'.


இரண்டு கட்டுரைகளுக்கும் இடையே ஏன் இத்தனை முரண்பாடுகள்?

'சூரியன் சிம்ம ராசி ஏகினவுடன், பொதியில் முனிவனான அகத்தியன் (Canopus) சூரிய உதயத்திற்குமுன் எழும்போது (Heliacal rising), சைய மலையில் மழை பொழியும், என்கிறது பரிபாடல்- 11. இது மேற்குத் தொடர் மலை. இன்று அம்மலை நம் வசம் இல்லை. அங்கு மழை பெய்தால், அதனால் தமிழ்நாட்டுக்கு ஒன்றும் இல்லை. மூவேந்தர் ஆட்சி அஸ்தமித்த உடனேயே தமிழ் நிலமும் மாறிவிட்டது, மக்கள் வாழ்க்கை முறையும் மாறிவிட்டது. இவற்றைக் கருத்தில் கொண்டு இடைக் காட்டு சித்தர் போன்றவர்கள், சூரிய மாதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, 60 வருடப் பெயர்களையும் சூரிய வருடங்களுக்குக் கொடுத்திருப்பர்.' - ஜெயஸ்ரீ சாரநாதன் - 'சித்திரையில் தொடங்கும் புதுவருடம் - 2'.

பரிபாடல் 11ன் உரையைப் படித்த கட்டுரையாளர் பார்த்த நிலப்படத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையும் அதிலிருந்து உருவாகும் வைகை நதியும் தமிழ்நாட்டில் இல்லை போலிருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பொழிந்ததால் வைகையில் வெள்ளம் பெருகிக் கரையை உடைத்தது என்பதுதான் பரிபாடல் 11ம் பாடலின் 1 முதல் 15 வரையிலான அடிகள் உணர்த்தும் செய்தி. மூவேந்தர் ஆட்சி முடிந்த பிறகு வைகைக்கு நீர் எங்கிருந்து வருகிறது? அகத்தியன் சூரிய உதயத்திற்கு முன் எழுவதெல்லாம் இப்பாடலில் இல்லவே இல்லை. Heliacal rising என்பதற்கு Dictionary.com தரும் பொருள்: 'the rising of a celestial object at approximately the same time as the rising of the sun' என்பது. 'அகத்தியன் பெயர்கொண்ட விண்மீன் தன் உயர்ந்த இடத்தைக் கடந்து மிதுனத்தைப் பொருந்தியது' என்பதுதான் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறையின் முதற்பேராசிரியராகவும் பின்னர் துறைத்தலைவராகவும் திகழ்ந்த திரு. இரா. சாரங்கபாணி அவர்கள் எழுதிய உரை. 'பொதியில் முனிவன் புரைவரைக் கீறி மிதுனம் அடைய' என்ற மூலபாடமும் இக்கருத்துடன் பொருந்தி வருகிறது. பல்வேறு பெயர்களையும் மேற்கோள்களையும் கட்டுரை முழுவதும் தந்தால் மட்டும் போதாது. அவற்றுக்குள்ள தொடர்பு முறையாக விளக்கப்படவேண்டும். அவ்விளக்கம் படிப்போருக்குச் சிந்தனைத் தொடர்ச்சியைத் தரவேண்டும்.

'பரிபாடல் 11-இல் கார் காலத்தில் வரும் முதல் மழை, சரியான சமயத்தில்தான் வந்துள்ளதா என்று சொல்லிவிட்டுத்தான், புலவர், அந்த மார்கழி மாதம் பௌர்ணமியில் துவங்கும் பாவை நோன்பு பற்றி விவரிக்கின்றார்.' - ஜெயஸ்ரீ சாரநாதன் - 'சித்திரையில் தொடங்கும் புதுவருடம் - 2'.

இது பரிபாடல் 11ம் பாடலின் தவறான புரிதல் அல்லது தற்குறிப்பேற்றல். 'சைய மலையில் மழை பொழிந்ததால் வைகையில் வெள்ளம் பெருகி அதன் கரையைத் தாக்கி அழித்தது' என்பதுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. மழை சரியான சமயத்தில் வந்ததா, தவறான நேரத்தில் வந்ததா என்பதெல்லாம் கட்டுரையாளரின் தற்குறிப்பேற்றம். இந்தப் பாடலின் 77ம் அடியில்தான் மார்கழிப் பௌர்ணமி திருவாதிரையில் வந்ததாகக் கூறப்படுகிறது.

'மார்கழி விடியலுக்குமுன், காற்று மண்டலத்தில் மக்கள் வெளியில் செல்வதால் உண்டாகும் சலசலப்பும், சில்லிடும் ஆற்று நீரில் குளிப்பதால் ஆற்று நீரில் ஏற்படும் சலனங்களும், மணலில் பாவைகள் செய்து உற்சாகக் கூக்குரலிடும் சிறுமியர் எழுப்பும் சப்தமும், ஆற்றங்கரையில், ஹோமத் தீ வளர்த்து உண்டாக்கும் வெம்மையும், தெய்வம் தொழும் போது எழுப்பும் ஒலி அலைகளும், என்றைக்கெல்லாம் அவ்வாறு செய்யபட்டனவோ, அன்றிலிருந்து, 195 – ஆம் நாள் மழை பெய்வதை உறுதி செய்யும் என்பது சோதிட விதி. இது தவறுவதில்லை.'
'காலம் சுழன்றாலும், இந்த மார்கழி குறித்த – மழை வரச் செய்யக் கூடிய – விடியலுக்குமுன் செய்ய வேண்டிய சலசலப்புகள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.'
'தற்காலத்தில், ஐயப்ப பக்தர்கள் அந்த உத்தம நன்மையைச் செய்கிறார்கள். விடியலுக்கு முன், அவர்கள் கோவிலுக்குச் செல்லுதலும், பஜனை பாடுதலும், முற்காலத்தில் பாவை நோன்பின் போது சுற்றுப்புற சூழலில் உண்டாக்கப்பட்ட சலசலப்பிற்கு ஒப்பானது.' - ஜெயஸ்ரீ சாரநாதன் - 'சித்திரையில் தொடங்கும் புதுவருடம் - 2'.


அப்படியானால் சில பத்தாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் மழை பொய்த்துப் பஞ்சம் ஏற்பட்டபோது சோதிடவிதி தவறியது எதனால்? அப்பஞ்சம் ஏற்பட்ட ஆண்டுகளில் இத்தகைய சலசலப்புகள் நிகழவில்லையா? சிரபுஞ்சியில் இச்சலசலப்புகள் அதிக அளவில் நிகழ்வதற்கும் கவுகாத்தியில் குறைவாக நிகழ்வதற்கும் சான்றுகள் உள்ளனவா? அல்லது இச்சோதிடவிதி மூவேந்தர் ஆட்சிக்குப் பிந்தைய தமிழ்நாட்டுக்கு மட்டும் எழுதப்பட்டதா?

'வருடை என்னும் ஆட்டுக்கு நம் முன்னோர் எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதற்கு 'வான வரம்பன்' என்று பெயர்பெற்ற, ஆடு கோட்பாட்டுச் சேரலாதனே சாட்சி.'
'கோட்படுதல் என்றால், பிடித்தல் அல்லது கட்டுதல் என்று பொருள். ஆட்டைப் பிடித்து வந்தமையால் இந்த அரசனுக்கு இப்படி ஒரு பட்டப் பெயர்.'
'இமயத்தை எட்டிய இவன் முன்னோன் 'இமய வரம்பன்' என்று பெயர் பெற்றான். இவன் சென்றது தண்டகாரண்யம் என்றாலும், அங்கு சென்றதன் காரணமாக "வான வரம்பன்" என்று பெயர் பெற்றான் என்று பதிகம் கூறுவதால், அந்த வனத்தைக் கொண்டுள்ள விந்திய மலைச் சிகரத்தையே எட்டி உள்ளான் என்று தெரிகிறது. அங்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன என்று ஆராய்ந்தால்- அவன் போரிடச் செல்லவில்லை. மலைச் சிகரங்களில் வாழும், வருடை என்னும் மலையாட்டைப் பிடித்துக் கொண்டு வரவேதான் அங்கு சென்றிருக்கிறான் என்று தெரிகிறது. எந்த அளவு வருடை ஆட்டுக்கு முக்கியத்துவம் இருந்திருந்தால், சேர அரசன், தானே சென்று அதைப் பிடித்து வந்திருப்பான்? அதன் காரணமாக பட்டப் பெயரையும் பெற்றிருப்பான்?' - ஜெயஸ்ரீ சாரநாதன் - 'சித்திரையில் தொடங்கும் புதுவருடம் - 1'.


கோயிலூர் மடாலயத்தின் மூலமாக முனைவர் தமிழண்ணல் அவர்களும் முனைவர் சுப. அண்ணாமலை அவர்களும் பதிப்பித்த முனைவர் அ.மா. பரிமணம் அவர்கள் எழுதிய பதிற்றுப்பத்து உரையில், 'தண்டகாரண்யம் என்னும் நிலப்பகுதி ஆரிய நாட்டிலுள்ள ஒரு நாடு என்று பழைய உரையாசிரியர் குறிப்பர். இது, முன்னாள் பம்பாய் (மும்பை) மாகாணப் பகுதியில் இருந்தது என்று ஆய்வாளர் சுட்டுவர். பதிகத்தில் இடம்பெறும் "தண்டகாரனியத்துக் கோட்பட்ட வருடை" என்பது கொண்டு, "இச்சேரன் ஆடுகளைக் கவர்ந்து வந்தமையால், ஆடுகோட்பாட்டுச் சேரன் எனப்பட்டான்" என்று சிலர் விளக்குவர். "ஆடு" என்னும் சொல் அக்காலத்தில் வெற்றியைக் குறிக்கும் சொல்லாக விளங்கியதாலும், பண்டு "ஆடு" யாடு என்றே குறிப்பிடப்பட்டு வந்துள்ளமையாலும் "சேரன் போரில் வெற்றி கொள்வதனையே குறிக்கோளாக்க் கொண்டு செயல்பட்டவன்" என்னும் கருத்தில் இவ்வாறு கூறப்பட்டான் என்னும் ஆய்வாளர் கருத்தே ஏற்புடையதாகும்' என்று கூறியுள்ளார். ஆறாம் பத்தின் பதிகம் தவிரப் பிற பாடல்களில் இந்த 'ஆடு' சுட்டப்படாததால், மூலபாடத்தைச் சரிபார்த்தாலும் இக்கருத்தே பொருந்தி வருகிறது. மதுரைத் தமிழ்ப் பேரகராதியும் அறிஞர் நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதியும் 'ஆடு' என்பதற்கு ஆடுதல், விலங்கு என்பன தவிர, கூர்மை, வெற்றி என்னும் பொருட்களையும் தருகின்றன. எனவே, ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தண்டகாரணியத்துக்குப் போரிடத்தான் சென்றான் என்பதும் தன் கொல்லைப்புறத்தில் கட்டிவைத்துக் கொள்வதற்காகத் தானே சென்று வருடையைக் கொண்டுவரவில்லை என்பதும் தெளிவாகிறது. வெற்றி பெற்றவர்கள் கவர்ந்து வரும் பெருமையைப் பெற்றதால் ஆடு முக்கியத்துவம் பெறுகிறது; அதனால் மேடராசியே தலையாயது என்று சொன்னால், ஆநிரை கவர்தலுக்கு இதைவிடப் பல நேரடிச் சான்றுகள் உள்ளன. அவற்றை முன்வைத்து, இடப ராசிதான் முதல் ராசி என்றும் வைகாசியில்தான் தமிழ்ப் புத்தாண்டு என்றும் சொல்லலாமா? மற்றபடி, 'நம் தமிழ் முன்னோருக்கு, இமயமும், பொதியமும் நினைத்தாலே இனிக்கும் இடங்கள்' என்பனவெல்லாம் அனுமானங்களே அன்றி வேறன்று.

சித்திரையைப் புத்தாண்டாக நியாயப்படுத்துபவர்கள் அனைவரின் கட்டுரைகளிலும் இவைபோல் வலிந்து இழுத்து வளைத்து நிறுவ முயலும் தன்மையே விரவிக் கிடக்கிறது. எனவே, சித்திரைதான் தமிழ்ப்புத்தாண்டு என்ற முடிவை நம்மால் ஏற்க முடியவில்லை. இது போகக் கல்வெட்டு ஆதாரம் இருப்பதாகவும் தமிழ் ஹிந்து தளத்தில் வெளியான கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'பத்தாம் நூற்றாண்டில் பிராமண, சத்திரிய, விஸ்வகர்மா மற்றும் சூத்திர வர்ணத்தைச் சார்ந்த 98 ஜாதியினர் சித்திரையில் புத்தாண்டு கொண்டாடியதாகக் கல்வெட்டு உள்ளதே' - பால கௌதமன் - 'திரிபே வரலாறாக'.

எந்தக் கோயிலின் எந்தப் பகுதியில் உள்ள கல்வெட்டு இதைக் கூறுகிறது என்று தெரிவிப்பதுடன் கல்வெட்டின் முழுப்பாடத்தையும் வெளியிட்டால் நன்றாகும்.

நாம் ஆராய்ந்தவரை கீழ்க்கண்ட தரவுகள் நமக்குப் புலப்படுகின்றன.

1. சங்க காலத்தில் தமிழன் புத்தாண்டு கொண்டாடியதற்குச் சான்றுகள் இல்லை.
2. இன்று வழக்கிலிருக்கும் 60 ஆண்டுகளின் பெயர்கள் தமிழில் இல்லை.
3. சங்க இலக்கியங்களில் இந்த அறுபதில் எந்த ஆண்டின் பெயரும் தமிழ்ப்படுத்தப்பட்டோ அப்படியேவோ இடம்பெறவில்லை.
4. சிலப்பதிகாரத்தில்தான் முதன்முதலில் சித்திரை என்ற பெயரே வருகிறது. அதுவும் புத்தாண்டு குறித்த தரவுடன் அன்று.

இந்தத் தரவுகளின் அடிப்படையில் 'சித்திரையில் புத்தாண்டு' என்பது இடையில் வந்த வழக்கமேயன்றிப் பழங்காலத் தமிழர்களுடையதாக இருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது. தமிழ்மண்ணில் வடபுலத்தவர், இசுலாமியர், கிறித்தவர், நாயக்கர், மராத்தியர், ஆங்கிலேயர் என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான அயலகச் சிந்தனைத் தாக்கங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

பி.டி.சீனிவாச ஐயங்காரும் தமது "History of the Tamils from the earliest times to 600 AD" என்னும் நூலில் இதே கருத்தைப் பின்வருமாறு கூறுகிறார்.

'வேத வேள்விகள், இதிகாச புராணச் செய்திகள் எல்லாம் மிக மிகச் சிறு அளவே சங்க நூல்களில் கூறப்படுகின்றன. அவற்றோடு வானியல் அறிவும் சோதிட மூடநம்பிக்கைகளும்கூட மெதுவாகத் தென்னிந்தியாவிற்குப் பரவின. திங்கள், ஞாயிறு, அவை விண்ணில் செல்லும் பாதையை 27 உடுக்களோடு இணைத்துக் கூறுதல் ஆகியவை மட்டுமே வேதங்கள் கூறுவது. கோள்கள் தன்மையும் வான்வெளியில் அவற்றின் பாதைகளும் பற்றிய அறிவு வேதங்களிலோ வேதாந்தங்களிலோ இல்லை. அவை பற்றிய அறிவும் அவற்றோடு பிணைந்த சோதிடக் கருத்துக்களும் காந்தாரம், சிந்துப் பகுதிகளில் யவன (இந்தோ கிரேக்கர்) அரசுகள் அமைந்த காலத்தில் அவர்களிடம் இருந்து கி.மு. 200 – கி.பி. 400 காலகட்டத்தில் வட இந்தியாவில் பரவின. பின்னர் கி.பி. 5ம் நூற்றாண்டில் தென் இந்தியாவிற்கும் பரவினதாகத் தோன்றுகிறது.' – பக். 215, 'தமிழர் வரலாறு – மூலம் : பி.டி.சீனிவாச ஐயங்கார் – தமிழாக்கம் : பி.இராமநாதன்'.

இவைபோன்ற சிந்தனை மாற்றங்களுள் ஒன்றுதான் சங்க இலக்கியத்தில் கொண்டாடப்படாத புத்தாண்டு பின்னாளில் சித்திரையில் கொண்டாடப்பட்டதும். ஆனால், நினைவு தெரிந்த நாள்முதலாய்ப் புத்தாண்டு கொண்டாடிப் பழகிவிட்ட இன்றைய தலைமுறைத் தமிழர்கள் ஒருவேளை தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட விரும்பினால் எப்போது கொண்டாடுவது பொருத்தம்?

சிந்தனைக் கலப்பு நிகழ்வதற்கு முன்னர் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் சங்க இலக்கியங்களில் எந்த மாதம் சிறப்பாகக் குறிக்கப்பட்டுள்ளது?

"தைஇத் திங்கள் தண்கயம் படியும்" - நற்றிணை (80 மருதம் - பூதன்தேவனார்)

"தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" - குறுந்தொகை (196. மருதம் - தோழி கூற்று)

"நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும் தைஇத் தண்கயம் போலப் பலர்படிந்து" - ஐங்குறுநூறு (84, 9. புலவி விராய பத்து)

"வையெயிற் றவர்நாப்பண் வகையணிப் பொலிந்து நீ தையினீ ராடிய தவந்தலைப் படுவயோ" - கலித்தொகை (59, தளை நெகிழ்... எனத்தொடங்கும் பாடல்)


இன்று வாசிக்கக் கிடைக்கும் பழந்தமிழர்தம் இலக்கியங்களில் தமிழ் அறிஞர்களால் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நற்றிணையிலும் குறுந்தொகையிலும் ஐங்குறுநூற்றிலும் தை மாதத்தை மட்டுமே சிறப்பித்திருக்கிறார்கள்.

தைத்திங்கள் சங்க இலக்கியங்களில் இத்தனை இடங்களில் இடம்பெற்றிருக்க, சித்திரை முதன்முதலில் எங்கே வருகிறது என்று தெரியுமா? சிலம்பில் இந்திர விழவூரெடுத்த காதையில்தான். ஆகவே, தையில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுவதே பொருத்தம் என்று உரைத்த தமிழ்க்கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியபிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், பேராசிரியர் கா.நமச்சிவாயனார், தந்தை பெரியார், கரந்தை தமிழ்ச்சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், பி.டி. இராஜன், ஆற்காடு இராமசாமி முதலியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகிய அறிஞர்களின் முடிவு ஆழ்ந்து சிந்திக்கத்தக்கதாக உள்ளது.

இலக்கியங்களில் சிறப்பிக்கப்பட்டதால் மட்டுமே புத்தாண்டு என ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்று கேட்பவர்கள் கல்வெட்டுச் சான்றையும் பார்க்கவேண்டும். சித்திரையில்தான் புத்தாண்டு என்பதை வலியுறுத்தும் தமிழ் ஹிந்து தளம் உட்படப் பல்வேறு இணைய தளங்கள் சான்றாகச் சுட்டும் ஆய்வாளர் திரு. எஸ். இராமச்சந்திரன் அவர்களின் கூற்றான 'புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்)' என்ற கருதுகோளின் அடிப்படையில் பார்த்தாலும், சங்ககாலத்தில் தை முதல்நாள் உத்தராயனத் தொடக்கமாகக் குறிப்பிடப்படாவிட்டாலும், பிற்காலச் சோழர் காலத்தில் தை முதல்நாள் அவ்வாறு கருதப்பட்டதற்குத் திருவலஞ்சுழிக் கல்வெட்டுகள் (முதலாம் இராஜராஜரின் 14ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு) கட்டியங் கூறுகின்றது என்று திரு. எஸ். இராமச்சந்திரனே ஒப்புக்கொள்கிறார். எனவே, உத்தராயனத் தொடக்கத்தை அடிப்படையாகக் கொள்ள விரும்புபவர்களும் தை மாதத்தை ஆண்டுத் தொடக்கமாகக் கொள்ளலாம்.

அன்புடன்
ஆசிரியர் குழு
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.