http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 86

இதழ் 86
[ பிப்ரவரி 15 - மார்ச் 17, 2012 ]


இந்த இதழில்..
In this Issue..

எதுதான் தமிழ்ப்புத்தாண்டு?
திரும்பிப்பார்க்கிறோம் - 33
தவ்வைத்தேவி
சேக்கிழாரும் அவர் காலமும் - 3
The Sapthamathas at Ayyarappar temple in Thiruvaiyaru
நன்னன் திருவிழா / நன்னன் பிறந்தநாள் விழா
இதழ் எண். 86 > கலையும் ஆய்வும்
தவ்வைத்தேவி
Dr.R.Kalaikkovan and Dr.M.Nalini

வாழ்வியல் கோட்பாடுகளையும் சமுதாய ஒழுங்குகளையும் காட்சிப்படுத்தும் அரியதோர் இலக்கியமான திருக்குறளே தவ்வைத்தேவியை அறிமுகப்படுத்தும் காலத்தால் முற்பட்ட தமிழ் நூல் எனலாம். தவ்வை (167) என்றும் மாமுகடி (617) என்றும் வள்ளுவரால் சுட்டப்படும் இவ்வம்மை ஜேஷ்டை என்ற பெயரில் கல்வெட்டுகளில் பரவலாக இடம்பெற்றுள்ளார். திருமகளின் தமக்கையாகக் கருதப்படும் இத்தேவிக்குச் சோழர் காலம் வரை செழிப்பான வழிபாடு இருந்தமைக்குப் பல கல்வெட்டுகள் சான்றாகின்றன.



இன்று தமிழ்நாட்டில் காணக்கிடைக்கும் தவ்வைத்தேவியின் சிற்பங்களுள் காலத்தால் பழைமையான பதிவு பல்லவப் பேரரசர் இராஜசிம்மரின் பனைமலை ஈசுவரத்தில் பலகைச் சிற்பமாகக் காணக்கிடைக்கிறது. இதில் தனித்த நிலையிலுள்ள ஜேஷ்டையுடன் அவரது காகக்கொடியும் இடம்பெற்றுள்ளது. காஞ்சிபுரத்திலுள்ள இராஜசிம்மரின் இராஜசிம்மேசுவரமான கயிலாசநாதர் கோயிலில் அம்மை குடும்பத்துடன் காட்சிதருகிறார். பெருவயிற்றினராய், பட்டாடையுடன் வளையணிந்த இருகைகளையும் கடக முத்திரையில் காட்டி, கழுத்தாரங்கள் பூண்டு, குண்டலங்கள் பெற்ற நீள்செவிகளுடன் அமர்ந்திருக்கும் அம்மையின் வலப்புறம் மகன் நந்திகேசுவரனும் (மாந்தன்) இடப்புறம் மகள் அக்கினிமாதாவும் உள்ளனர்.



ஏறத்தாழ இதே காலகட்டத்தைச் சேர்ந்த மற்றொரு ஜேஷ்டையின் சிற்பம் செங்கற்பட்டுக்கு அருகிலுள்ள வல்லம் முதற் குடைவரையின் புறச்சுவரில் செதுக்கப்பட்டுள்ளது. இதில் அம்மை தனித்து அமர்ந்திருக்கிறார். கள்ளக்குறிச்சிக்கு அருகிலுள்ள தச்சூரிலும் எழிலார்ந்த பல்லவர் கால ஜேஷ்டைச் சிற்பம் மகனும் மகளும் இடம்பெற்ற நிலையில் கிடைத்துள்ளது.



பல்லவர்பகுதியான வடதமிழ்நாட்டில் பெற்றிருந்த சிறப்பைப் பாண்டியர்பகுதியான தென்தமிழ்நாட்டிலும் மாமுகடி அம்மை பெற்றிருந்தமையைத் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஆண்டிச்சிப்பாறைச் சிற்பமும் வடபரங்குன்றத்திலுள்ள குடைவுத் திருமுன் சிற்பமும் நிறுவுகின்றன. நன்கு வடிவமைக்கப்பட்ட இருக்கையில் இரண்டு கால்களையும் கீழிறக்கிய நிலையில் அமர்ந்துள்ள ஆண்டிச்சிப்பாறை ஜேஷ்டையின் தலையில் கரண்டமகுடம். வலக்கை கடகத்திலிருக்க, சிதைந்துள்ள இடக்கை அருகில் உள்ள திண்டின்மீது உள்ளது. பூட்டுக் குண்டலங்கள், பதக்கம் வைத்த ஆரம், முத்துமாலை, சிற்றாடை அணிந்துள்ள தேவியின் மார்பகங்கள் கச்சுப் பெறவில்லை. தேவியின் வலப்புறம் மகனும் இடப்புறம் மகளும் நின்றகோலத்தில் காட்சிதருகின்றனர்.



வடபரங்குன்றத்தில் கி. பி. எட்டாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஜேஷ்டை உருவாக்கப்பட்டதை அங்குள்ள நக்கன் கொற்றியின் கல்வெட்டு தெரிவிக்கிறது. பிற்காலக் கட்டுமானங்களால் மறைக்கப்பட்டுள்ள குடைவரைக் கருவறையில் ஜேஷ்டையும் வலப்புறம் மகன் நந்திகேசுவரனும் இடப்புறம் மகள் அக்கினி மாதாவும் மேடையொன்றில் அமர்ந்துள்ளனர். வலக்கையில் மலருடன் காட்சிதரும் இளமை பொலியும் இந்த ஜேஷ்டை பேரெழிலினர்.



பல்லவர்களாலும் பாண்டியர்களாலும் புரக்கப்பட்ட ஜேஷ்டையை முத்தரையர்கள் கொள்ளமையைப் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அவர்தம் குடைவரைகள் தெளிவுபடுத்துகின்றன. அதியர்களும் அவர்தம் நாமக்கல் குடைவரைகளில் ஜேஷ்டைக்கு இடமளிக்கவில்லை. சோழர்களோ, பல்லவர்களையும் பாண்டியர்களையும் பின்பற்றி எழிலார்ந்த ஜேஷ்டை வடிவங்களை அவர்தம் ஆட்சிக்காலம் முழுவதும் உருவாக்கி மகிழ்ந்தனர். முற்சோழர் காலத்தில் பழுவேட்டரையர் கைவண்ணமாக உருவான அற்புதமான ஜேஷ்டை சிற்பம் ஒன்று மேலப்பழுவூர் சுந்தரேசுவரர் (பகைவிடை ஈசுவரம்) கோயிலின் கிழக்குச் சுற்று மாளிகையில் இடம்பிடித்துள்ளது.

முற்சோழர் காலத்துச் சுற்றாலைக் கோயில் தெய்வங்களுள் ஒன்றாய் ஜேஷ்டை இடம்பெற்றதைத் திருக்கட்டளைச் சுந்தரேசுவரர் கோயில் வளாகத்திலுள்ள ஜேஷ்டையின் சுற்றாலைத் திருமுன்னும் திருப்பராய்த்துறைக் கல்வெட்டும் உறுதிப்படுத்துகின்றன. இக்கல்வெட்டில் ஜேஷ்டை திருக்கேட்டைக் கிழத்தி என்று சுட்டப்படுகிறார். (8: 560) வள்ளுவர் வழி அறிமுகமாகிச் சோழர்கள் காலம்வரை சிறக்க வழிபடப்பட்ட தவ்வைத்தேவி பின்னாளில் பரவலான அணைப்பை இழந்தபோதும் அவரது பழஞ் சிற்பங்களுள் பல இன்றும் வழிபாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.