![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 115
![]() இதழ் 115 [ ஜனவரி 2015 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே
தெய்வங்கள் தாங்கி நிற்கும் பல்வேறு ஆயுதங்களுக்கும் தனித்தனியே பெயர்களிட்டு அழைக்கும் மரபைப் புராணங்களில் காண முடிகிறது. ![]() வில் முறிக்கும் இராமன் - திருச்சென்னம்பூண்டி குறுஞ்சிற்பம் சிவபெருமான் வில்லிற்குப் ‘பினாகம்’ எனும் பெயர் உள்ளது. இதனால் வில்லேந்திய கோலத்தில் அவர் பினாகபாணி என்றறியப்படுகிறார். திருமால் ஏந்தும் வில் ‘சார்ங்கம்’ ஆகும். ஆகவே வில்லேந்தி நிற்கும் திருமால் சார்ங்கபாணி ஆவார். கும்பகோணத்தில் அமைந்துள்ள சார்ங்கபாணி திருக்கோயில் வில்லேந்திய கோலத்தில் நிற்கும் திருமாலுக்காக அமைக்கப்பட்டதாகும். ‘சார்ங்கமுதைத்த சரமழை போல்’ என்பது ஆண்டாள் வாக்கு. இராமன் ஏந்தும் வில்லிற்குக் கோதண்டம் என்று பெயர். அதனால் அவருக்குக் கோதண்ட இராமன் எனும் பெயர் வந்தது. இராமாயணத்தில் ஜனக மகாராஜாவின் சபையில் இராமனால் உடைக்கப்படும் வில்லிற்கென்று தனித்த பெயர் ஏதேனும் ஒன்று இருந்ததா? அப்படியெனில் அதன் பெயர் என்ன? வால்மீகி இராமாயணத்திலும் கம்ப இராமாயணத்திலும் விரிவாக எடுத்துரைக்கப்படும் இந்த வீர நிகழ்வின் இடையே வில்லின் வரலாறு கூறப்படுகிறது. வால்மீகத்தில் இப்பின்னணியை ஜனகர் விவரிக்க, கம்ப இராமாயணத்தில் அதனை எடுத்துரைப்பவர் சதானந்த முனிவர் (பால காண்டம், கார்முகப் படலம் - பாடல்கள் 12-13). இந்த வில் சிவபெருமானுக்குரியது. முன்னொரு காலத்தில் தக்கன் நடத்திய வேள்வியில் தனக்குரிய அவிர் பாகத்தை தேவர்கள் அளிக்க முன்வராததால் கோபம் கொண்ட சிவபெருமான், இந்த வில்லின் வல்லமையுடன் வேள்வியை சர்வ நாசம் செய்தார். இதற்குக் காரணமான தேவர்களையும் அவர் தண்டிக்க முற்படுகையில் அவர்கள் வேண்டிக்கொண்டதன் பயனாக சினம் தணிந்து வில்லினை ஜனகனின் முன்னோர்களுள் ஒருவரான தேவரதன் எனும் மன்னனிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். அது பல தலைமுறைகள் தாண்டி ஜனகனை வந்தடைந்தது. இவ்வாறு இந்த வில்லினைப் பற்றிய பல்வேறு விபரங்கள் பேசப்பட்டாலும் வில்லின் பெயர் மட்டும் குறிப்பிடப் படுவதில்லை. அப்படியெனில் இந்த வில்லிற்குத் தனித்த பெயர் எதுவுமில்லையா? இருந்துள்ளது. இது கம்ப ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் அனுமன் வாய்மொழியாக இது வெளிப்படுகிறது. பம்பைப் பொய்கையில் ஓய்வெடுத்துவிட்டுச் சீதையைத் தேடி நடந்து சுக்ரீவன் தங்கியிருக்கிருக்கும் இடத்தை அடைகிறான் இராமன். இராம இலக்குவணரைக் கண்டு அஞ்சி சுக்ரீவன் ஒளிய, அனுமன் அவர்களைச் சந்தித்து அவரை இன்னார் என்று அறிந்து கொள்கிறான். சுக்ரீவனைச் சந்திக்க இராமன் விழைய, அவனிடம் சென்று இராம இலக்குவணர்களை அறிமுகம் செய்யும் பொருட்டு பத்து பாக்களில் அவர்களின் அருமை பெருமைகளை விரிவாக எடுத்துரைத்துரைக்கிறான் அனுமன். இராமன் கதையில் அதுவரை நிகழ்ந்து முடிந்த அனைத்து சம்பவங்களின் அழகிய தொகுப்பாக விளங்கும் இப்பத்து பாடல்களுள் ஒன்றில் இராமன் வில்லுடைத்த வரலாறு விவரிக்கப் படுகையில் வில்லின் பெயரும் வெளிப்படுகிறது. நல்லுறுப் பமையும் நம்பியரில் முன்னவன் - நயந்து எல் உறுப்பு அரிய பேரெழுசுடர் கடவுள்தன் பல்லிறுத்தவன் வலிக்கு அமை தியம்பகமெனும் வில் இறுத்தருளினான் - மிதிலை புக்க நாள். (நட்பு கோட் படலம் பாடல் 7) அழகிய அவய இலக்கணங்களுடன் பிறந்த நால்வருள் முன்னவனான இராமன், மிதிலைக்கு வந்து சேர்ந்த நாளில் திரியம்பகம் எனும் வில்லினை ஒடித்தருளினான். இந்தத் திரியம்பகமானது இருளின் அடையாளத்தை அழிக்கும் பெரிய ஏழுசுடர்களைக் கொண்ட கடவுளின் (அதாவது சூரியனின்) பற்களை உதிர்த்த சிவபெருமானின் வலிமைக்கு ஏற்றவாறு அமைந்த அவருடைய வில்லாகும். திரியம்பகன் என்பதற்கு மூன்று கண்களை உடையவன் என்று பொருள் என்பதால் திரியம்பகம் என்பதனை ‘சிவசம்மந்தமான’ என்று பொருள் கொள்ளச் சொல்கிறார் உரையாசிரியர் வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார். அனுமனின் வாய்மொழியாக இப்பாவில் வெளிப்படுவது வில்லின் பெயர் மட்டுமல்ல. சூரியனின் பற்களைச் சிவபெருமான் உடைத்தார் எனும் அரிய புராணச் செய்தியும்தான். இந்தப் பல்லுடைப்பும் தக்கன் வேள்வியழிப்பின்போதே நிகழ்ந்தது என்பது உரையாசிரியர் தெரிவிக்கும் கூடுதல் தகவல். |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |