http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 124

இதழ் 124
[ அக்டோபர் 2015 ]


இந்த இதழில்..
In this Issue..

வரலாறு வெள்ளி இதழ் வெளியீட்டு விழா - அழைப்பிதழ்
திருச்சிராப்பள்ளி மாவட்டக் கோயிற் கட்டடக்கலை (பொ. கா. 500-1300)
சிராப்பள்ளி தொட்டியம் சாலையில் சில கண்டுபிடிப்புகள்-7
அன்பில் ஆய்வும் புதிய கண்டுபிடிப்புகளும்
விஜயநகரக் கலைச்சிறப்பு மிக்க அய்யங்கார் குளம்
கான மயிலாட!
இதழ் எண். 124 > கலைக்கோவன் பக்கம்
திருச்சிராப்பள்ளி மாவட்டக் கோயிற் கட்டடக்கலை (பொ. கா. 500-1300)
இரா.கலைக்கோவன், மு.நளினி
பொ. கா. 500க்கும் 1300க்கும் இடைப்பட்டுத் தமிழ்நாட்டை ஆண்ட பல அரசமரபுகளின் கோயிற் கட்டுமானங்களை இன்றைய சிராப்பள்ளி மாவட்டத்தில் காணமுடிகிறது. குடைவரை, ஒருகல் தளி, கற்றளி எனும் மூவகைக் கோயில் அமைப்புகளில் ஒருகல் தளி தவிர ஏனைய இரண்டும் இங்குள்ளன.

குடைவரைகள்

தமிழ்நாட்டளவில் குறைவான எண்ணிக்கையில் குடைவரைகளைக் கொண்டிருக்கும் மாவட்டங்களில் சிராப்பள்ளியும் ஒன்று. இங்குப் பொ. கா. ஆறாம் நூற்றாண்டிலிருந்து எட்டாம் நூற்றாண்டிற்குள் உருவான ஐந்து குடைவரைகள் உள்ளன. அவற்றுள், சிராப்பள்ளிக் குன்றின் மேற்பகுதியில் ஒன்றும் கீழ்ப்பகுதியில் ஒன்றுமாய் அகழப்பட்டுள்ள இரண்டு குடைவரைகளும் பல்லவர் காலத்தன. சிராப்பள்ளித் துறையூர்ச் சாலையில் அமைந்துள்ள வெள்ளறையில் இரண்டு குடைவரைகள் உள்ளன. அவற்றுள், அளவில் பெரியது பல்லவர் காலப் பணியாக மலர்ந்துள்ளது. சிறியதான ஆனைக்கல் குடைவரையின் அமைப்பாளரை அறியக்கூடவில்லை. மண்ணச்சநல்லூருக்கு அருகிலுள்ள பைஞ்ஞீலியிலும் மிகச் சிறிய குடைவரை ஒன்று உள்ளது. கல்வெட்டுச் சான்றுகளற்ற நிலையில் அதன் அமைப்பாளர்களையும் அறியக்கூடவில்லை. இவ்வைந்து குடைவரைகளைப் பற்றிய ஒப்பாய்வு சிராப்பள்ளி மாவட்டத்தில் பதிவான தொடக்கக் காலக் கோயிற் கட்டடக்கலை முயற்சிகளை அறிய உதவும்.


திருப்பைஞ்ஞீலிக் குடைவரை


இவ்வைந்து குடைவரைகளுள் மண்டபக் குடைவரைகள் நான்கு. கருவறை மட்டுமே கொண்டமைந்த பைஞ்ஞீலி எளிய அமைப்பினது. ஆனால், கருவறையிலுள்ள சோமாஸ்கந்தர் இறைவடிவத்தால் தென்தமிழ்நாட்டுக் குடைவரைகளில் சிறப்பிடம் பெறுவது இது. பல்லவ சோமாஸ்கந்தர் வடிவங்களில் இருந்து அமைப்பிலும் அமர்வு முறையிலும் மாறுபட்டுள்ள இவ்விறையகச் சிற்பம் குடைவரை அளாவிய அளவினது.

மண்டபக் குடைவரைகளில் பேரளவினது வெள்ளறைக் குடைவரை. ஆறு எளிய, ஆனால், கனமான முகப்புத் தூண்களுடன் தொடங்கும் மண்டபத்தின் இருபக்கச் சுவர்களிலும் படியமைப்புடனான கருவறைகளைப் பக்கத்திற்கொன்றாகக் கொண்டிருந்தபோதும் நிறைவடையாத இக்குடைவரை, உட்புறத்தே சிற்ப இருப்பும் அற்றதாகும். இதைப் போலவே ஆறு முகப்புத் தூண்களும் பக்கச் சுவர்களில் கருவறைகளும் கொண்டுள்ள சிராப்பள்ளிக் கீழ்க் குடைவரை இவ்விரண்டு அமைப்புகளிலுமே சிறப்பான மாற்றங்களைப் பெற்று மிளிர்கிறது. மாவட்டத்தின் பிற குடைவரைகள் எவற்றிலும் காணப்படாத அழகூட்டல்களுடன், முழு வளர்ச்சியுற்ற எண்முகத் தூண்கள் இதன் முகப்பை அலங்கரிக்க, கருவறைகள் இரண்டும் முன்றில்கள் பெற்றுள்ளன. சிற்ப இருப்பிலும் இதுவே மாவட்ட அளவில் செழிப்பான குடைவரை.


திருவெள்ளறைக் குடைவரை


இதன் ஒரு கருவறை நிறைவடைந்த விஷ்ணு சிற்பத்தொகுதியைப் பெற, மண்டபத்தின் முச்சுவர்களையும் சிற்பங்கள் நிறைத்துள்ளன. முகப்பு வலபியில் பூதவரி உள்ள இந்தக் குடைவரையின் கோட்டங்கள் மாமல்லபுரத்துப் பெருவராகர் குடைவரைக் கோட்டங்களுக்கு இணையான அளவினவாய் அகழப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டளவில் இக்குடைவரையில் மட்டுமே பிள்ளையார், முருகன், நான்முகன், கொற்றவை ஆகிய இறைவடிவங்களுக்கு இணையாகச் சூரியனும் பேரளவுக் கோட்டச் சிற்பமாகக் காட்சிதருகிறார். தளவானூர், கழுக்குன்றம் குடைவரைகள் போலவே இங்கும் கருவறைக் காவலர்களுக்குத் துணையாகக் குடைவரைக் காவலர்களும் உருவாக்கப்பட்டுள்ளனர். இதன் தனித்துவமாகக் குடைவரைக் காவலர்கள் இருவரிலிருந்து நால்வராக்கப்பட்டுள்ளமையைக் குறிக்கலாம். தமிழ்நாட்டுக் குடைவரைகளில் காணப்படும் மிகச் சில முன்றில்களில் இதற்கு ஒப்பானது வேறெங்குமில்லை. நின்றகோலத்தில் பிள்ளையாரைக் கொண்டிருக்கும் ஒரே தமிழ்நாட்டுக் குடைவரையும் இதுதான். அகழ்ந்தவர் குறித்த கல்வெட்டுச் சான்றுகள் ஏதுமற்ற நிலையிலும் அமைப்பு, அலங்கரிப்பு, சிற்பப் பங்கீடு, அவற்றின் தோற்றஅமைதி ஆகியவற்றின் அடிப்படையில் பல சான்றுகளை முன்னிருத்தி, இக்குடைவரையைப் பல்லவர் காலப் பணியாக இக்கட்டுரையாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சிராப்பள்ளிக் குன்றின் மேற்பகுதியிலுள்ள இலளிதாங்குரம் முதலாம் மகேந்திரவர்மரின் படைப்பாகும். இம்மாவட்டக் குடைவரைகளில் மண்டபப் பகுப்புப் பெற்ற ஒரே குடைவரை இதுதான். தமிழ்நாட்டின் மிகப் பழைமையான கங்காதரர் திருக்கோலம் ஒரு நாடகக் காட்சியெனக் காட்டப்பட்டிருப்பதும் இங்குதான். சிற்பக்காட்சியின் கீழ்த்தளம் மிக நுண்ணிய வேலைப்பாட்டுடன் நாடகமேடை முகப்பெனக் கட்டமைக்கப்பட்டுள்ள ஒரே தமிழ்நாட்டுக் குடைவரையும் இலளிதாங்குரம்தான். இதன் இரு மண்டபத் தூண்களிலும் தாமரைப் பதக்கங்களுக்கு இணையாகக் காட்டப்பட்டிருக்கும் சிற்ப, கொடிக்கருக்குப் பதக்கங்களைச் சிராப்பள்ளி மாவட்டத்தின் பிற குடைவரைகள் கொள்ளாமை குறிப்பிடத்தக்கது. சிற்பம், கல்வெட்டு இரண்டுமே கட்டுமானத்தோடு ஒன்றிணைந்து ஒருமைப்படும் அழகை இலளிதாங்குரத்தில் காணமுடிகிறது. இங்குள்ள மகேந்திரரின் பல்லவ கிரந்தக் கல்வெட்டுகள் அவை பொறிக்கப்பட்டிருக்கும் முறையாலும் உள்ளீட்டாலும் அழியாப் புகழ் பெற்றவை. குடைவரை முகப்பு, தாங்குதள உருவாக்கத்தைத் தொட்டிருப்பதும் இதன் கூடுதல் சிறப்பாகும்.


இலளிதாங்குரம் - முகப்பு



இலளிதாங்குரம் - முகமண்டபம், கருவறை



இலளிதாங்குரம் - கங்காதரர்


வெள்ளறை ஆனைக்கல் குடைவரை மண்டபக் கட்டமைப்பாக இருந்தபோதும், அளவில் சிறியதாகவும் நிறைவடையாததாகவும் உள்ளது. தெளிவான, ஆனால், எளிய முகப்புத்தூண்கள், தாய்ப்பாறையிலான பிள்ளையார், விஷ்ணு சிற்பங்கள் இதன் சிறப்பெனலாம். சிராப்பள்ளி மாவட்டத்திலேயே அளவில் சிறிய தாய்ப்பாறை இறைச்சிற்பங்களாக இவற்றைக் குறிப்பிடலாம். அதிக அளவிலான கல்வெட்டுகள் சுட்டும் குடைவரையாக இது இருந்தபோதும் அக்கல்வெட்டுகளில் ஒன்றேனும் குடைவரைக்குள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் எண்ணற்ற கல்வெட்டுகளைக் குடைவரைக்குள் கொண்டிருக்கும் ஒரே சிராப்பள்ளிக் கட்டமைப்பு இலளிதாங்குரமே. கல்வெட்டுகளே இல்லாத அமைப்பாகப் பைஞ்ஞீலி சோமாஸ்கந்தர் குடைவரையைச் சுட்டலாம்.


கீழ்க்குடைவரை - சிவன் கருவறை



கீழ்க்குடைவரை - பின்சுவர்ச் சிற்பங்கள்



கீழ்க்குடைவரை - சூரியன்



திருவானைக்கல் - பிள்ளையார்



திருவானைக்கல் - விஷ்ணு


இந்த ஐந்து குடைவரைகளையும் காலநிரலாகக் காணும்போது இலளிதாங்குரம் பொ. கா. 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தைச் சேர்ந்ததாகவும் ஏனைய நான்கும் 8ஆம் நூற்றாண்டினவாகவும் அமையும். சிராப்பள்ளிக் குடைவரைகளில் காணப்படும் பேரளவிலான சிற்பங்களோடு ஒப்பிடும்போது ஆனைக்கல் குடைவரைச் சிற்பங்கள் அளவில் சிறியனவாகவும் கலைமரபில் மாறுபட்டனவாகவும் விளங்குவது கண்கூடு. பைஞ்ஞீலி, பல்லவருக்கே உரிய சோமாஸ்கந்தரைப் பெற்றிருந்தபோதும் சிற்பங்களில் வெளிப்படும் ஊரகத்தன்மையும் சிவன், உமை இடவல மாற்றமும் அவற்றைப் பல்லவ மரபினின்று வேறுபடுத்திக் காட்டுகின்றன. இவ்விரண்டும் பல்லவர் காலத்தில் உருவான குடைவரைகளாகவே இருந்தபோதும் இவற்றின் படைப்பில், இப்பகுதியில் ஆட்சிசெலுத்திய சிற்றரச மரபினருக்குப் பங்கிருப்பதாகவே கருதவேண்டியுள்ளது. குடைவரைக் கலையில் பெரும் பங்காற்றிய முத்தரையர்களை அச்சிற்றரச மரபினராக இனங்காண வாய்ப்புகள் இருந்தபோதும், வலிமையான சான்றுகள் கிடைக்கும்வரை உறுதிபட இவர்தாம் படைப்பாளிகள் எனக் கூறக்கூடவில்லை. சங்கப் பொதியில்களின் தொடர் இழைகளாகக் கல்லில் உருவான இக்குடைவரைகள் அவை தோன்றிய காலகட்டச் சிற்பிகளின் கட்டுமான உத்திகளையும் அலங்கரிப்பு நேர்த்தியையும் புதுமை அவாவும் போக்கையும் சமூகத்தின் சமயச் சிந்தனைகளையும் வாழ்க்கையின் பண்பாட்டுக் கூறுகளையும் நன்கு வெளிப்படுத்துகின்றன.

கற்றளிகள்

பத்திமை இலக்கியங்களும் பிற இலக்கியங்களும் அறிமுகப்படுத்தும் சிராப்பள்ளி மாவட்டக் கோயில்கள் பல, பல்லவர், சோழர் காலங்களில் கற்றளிகளாயின (எ. கா. தவத்துறை சப்த ரிஷீசுவரர், எறும்பியூர் எறும்பீசர், வெள்ளறை புண்டரிகாட்சப் பெருமாள்). புதிய கற்றளிகளும் இவ்விரு மரபினரால் உருவாக்கப்பட்டன (எ. கா. பட்டூர்க் கயிலாசநாதர், ஆலம் பாக்கம் மாடமேற்றளி, சீனிவாசநல்லூர்க் குரங்கநாதர், திருச்செந்துறை சந்திரசேகரர், உறையூர்த் தான்தோன்றீசுவரம்). சில கோயில்கள் சிதைவின் காரணமாகப் பின் வந்த அரச மரபு களால் செப்பம் செய்யப்பட்டன (எ. கா. திருவரங்கம், திருவாசி மாற்றுரை வரதீசுவரர், திருவானைக்கா). சிராப்பள்ளியில் முற்பாண்டியர், ஒய்சளர் கோயில்களையும் (எ. கா. அழுந்தூர் வரகுணீசுவரம், கண்ணனூர்ப் போசளீசுவரம்) காணமுடிகிறது.

கற்றளிகளின் வளாகப் பெருக்கம் கருதி இவ்வாய்வு விமானங்களை மட்டுமே முதன்மைப்படுத்திப் பகுப்பாய்வாகவும் ஒப்பீட்டுநோக்கிலும் கட்டமைப்புத் தரவுகளை முன் வைக்கிறது.

பல்லவர் படைப்புகள்

இம்மாவட்டக் கற்றளிகளில் பல்லவர் கைவண்ணம் மாறாமல் காட்சிதரும் விமானங்களாக ஆலம்பாக்கம் மாடமேற்றளியையும் பட்டூர்க் கயிலாசநாதரையும் மட்டுமே சுட்ட முடியும். மாடமேற்றளியின் வெற்றுத்தளம் அமைப்பில் காஞ்சிபுரம் வைகுந்தநாதப் பெருமாள் கோயிலின் மதில்சுவரைப் பின்பற்றியுள்ளமை அதன் பல்லவ வீச்சைப் புலப்படுத்தும். மேலப்பழுவூர்ப் பகைவிடை ஈசுவரத்து விமானக் கட்டுமானமும் இவற்றை எதிரொலிப்பது எண்ணத்தக்கது. பட்டூர்க் கயிலாசநாதர் அடிமுதல் நுனிவரை பல்லவ மரபில் துளிர்த்த விமானம் எனினும் அதன் மேற்றளங்கள் பின்னாள் திருப்பணிகளுக்கு ஆளாகியுள்ளன.

சாந்தாரமாகவும் அனர்ப்பிதமாகவும் நாற்றளங்களுடன் சிராப்பள்ளியிலேயே உயர்ந்த விமானமாக ஐந்து பத்திப் பிரிப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இம்மணற்கல் கட்டுமானம் கருவறையிலும் பல்லவ மரபிலான ஆவுடையாரற்ற தாராலிங்கத்தையே பெற்றுள்ளது. காஞ்சிபுரம், உத்திரமேரூர்க் கயிலாசநாதர் கோயில்களை ஒத்த அகலக் குறைவான சாந்தாரம் பெற்றிருந்தபோதும் அவற்றினின்று மாறுபட்டுச் சாந்தாரத்தில் சாளரங்கள் கொண்டுள்ளமை இதன் தனித் தன்மையாகும். தொண்டை மண்டலப் பல்லவர் கட்டுமானங்களைப் போலவே இதுவும் துணைத்தளத்தின் மீது எழுவதுடன், பத்திகளில் முதன்மைச் சிற்பங்களும் ஒடுக்கங்களில் அவை தொடர்பான துணைச் சிற்பங்களும் கொண்டுள்ளது. இவ்விமானத் துணைத் தளத்தில் காணப்படும் அழகூட்டல்கள் காஞ்சிபுரம் கயிலாசநாதர் விமானத்தை நினைவூட்டுவன.

(வளரும்)
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.