http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 124
இதழ் 124 [ அக்டோபர் 2015 ] இந்த இதழில்.. In this Issue.. |
சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி வட்டத்தின் வளமையான சிற்றூர்களுள் ஒன்றான அன்பிலில் உள்ள பழங் கோயில்களான பிரம்மபுரீசுவரர் என்றழைக்கப்படும் சிவன் கோயிலிலும் சுந்தரராஜப் பெருமாள் என்றறியப்படும் பெருமாள் கோயிலிலும் திரு. பால.பத்மநாபனின் உதவியுடன் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவனின் மேற்பார்வையில் நானும் முசிறி அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அர. அகிலாவும் ஆய்வு மேற்கொண்டபோது பல்லவர், சோழர் காலச் சிற்பங்கள் சிலவற்றையும் இரண்டு புதிய கல்வெட்டுகளையும் கண்டறிந்தோம். அன்பில் கோயில்கள் இரண்டுமே கல்வெட்டுக் களஞ்சியங்களாக விளங்குகின்றன. அவற்றிலிருந்து ஏற்கனவே பல கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. எனினும், எங்கள் களஆய்வு பெருமாள் கோயிலில் இரண்டு புதிய கல்வெட்டுகளை வெளிப்படுத்தியதுடன், சிவன் கோயில் சுற்றில் செடி, கொடிகளுக்கிடையில் காணப்படும் சில அரிய பல்லவ, சோழச் சிற்பங்களை அடையாளப்படுத்தவும் உதவியது. தூண் கல்வெட்டு சங்கமராயன் திருமண்டபம் என்றழைக்கப்படும் சுந்தரராஜப் பெருமாள் கோயிலின் முன் மண்டபம் முச்சதுர, இருகட்டுத் தூண்களால் தாங்கப்படுகிறது. அம்மண்டபத்தின் தென்மேற்குத் தூணின் நடுச்சதுரத்திலிருந்து ஏறத்தாழப் பொதுக்காலம் 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டொன்று கண்டறியப்பட்டது. மாறன்மருதூரைச் சேர்ந்த இராமானுஜராயர் மகன் உறங்காவில்லராயர் அம்மண்டபத்தின் கட்டுமானப் பணிக்காக அறுபது காசுகளும் நான்கு பாவுக்கற்களும் தந்துள்ளார். மாறன்மருதூர் எனும் ஊரின் பெயர் சோழர் கல்வெட்டொன்றிலும் இடம்பெற்றுள்ளது. சோழர் காலத்தில் மீகோட்டு நாட்டின் கீழ் இணைக்கப்பட்டிருந்த அவ்வூர் தற்போது குழித்தலைக்கும் கரூருக்கும் இடையிலுள்ள மாயனூராகலாம். கற்பலகை ஒன்றில் பொறிக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கல்வெட்டுச் சீர்மை குலைந்திருந்த சுந்தரராஜப் பெருமாள் கோயிலின் திருப்பணிகள் பொதுக்காலம் 1910இல் தொடங்கி, 1913இல் முற்றுப்பெற்றதாகக் குறிப்பிடுகிறது. ஜெயராமன், வெங்கடாசலம், வெங்கடாசலதாசர், இராஜகோபாலன் ஆகிய நால்வரும் இப்பணிகளுக்கான பொருளுதவியைச் செய்துள்ளனர். இக்கல்வெட்டின் வழி மதுரகவிதாசர் நந்தவனம் என்ற பெயரில் வெங்கடாசலதாசரால் நிருவகிக்கப்பட்ட பூந்தோட்டம் இவ்வூரிலிருந்தமையை அறியமுடிகிறது. பிரம்மபுரீசுவரர் கோயில் வளாகத்தில் செடி, கொடிகளுக்கிடையே கிடத்தப்பட்டுள்ள சிற்பங்களில் விஷ்ணுவும் இலட்சுமியும் இணைந்து அமர்ந்துள்ள சிற்பம் பிற்காலப் பல்லவர் கலை மரபில் அமைந்துள்ளது. கல் இருக்கையில் சுகாசனத்தில் உள்ள விஷ்ணுவின் வல முன் கை அபயத்திலிருக்க, இட முன் கை தொடைமீதுள்ளது. கிரீடமகுடம் அணிந்துள்ள அவரது பின்கைகளில் சங்கு, சக்கரம். இடத்தோளிலிருந்து மார்பில் இறங்கி வலக்கைகள் மீதேறிப் பின்செல்லும் நிவீத முறையில் முப்புரிநூலும் சிற்ப இணையின் கூர்மையான அமைப்பும் இதைப் பல்லவர் சிற்பமாக உறுதி செய்கின்றன. இறைவனின் இடப்புறம் உத்குடி ஆசனத்தில் வலக்கையில் மலர் மொட்டுக் கொண்டு இடக்கையைத் தொடையிலிருத்திக் கரண்டமகுடம், செவியணிகள், பட்டாடை, சரப்பளி கொண்டு காட்சிதரும் இறைவியின் இந்தக் கோலம் வழக்கமாக சோமாஸ்கந்தர் திருமேனிகளில் உமை கொள்ளும் அமர்வாகும். மிக அரிதாகவே விஷ்ணுவும் இலட்சுமியும் இத்தகு அமர்வுக்கோலத்தில் செதுக்கப்பட்டுள்ளனர். இச்சிற்பத்தின் கீழ்ப்பகுதியில் விஷ்ணுவின் காலருகே இருகைகளையும் மார்பருகே குறுக்கீடு செய்து பத்திமை உணர்வுடன் காட்சிதரும் ஆடவரை கருடனாகக் கொள்ளலாம். விஷ்ணுவும் இலட்சுமியும் சோழர் காலச் சிற்பங்களாகக் கொள்ளத்தக்க சண்டேசுவரர், பைரவர் சிற்பங்களும் இவ்வளாகத்தில் செடி, கொடிகளுக்கிடையில் கண்டறியப்பட்டன. பனையோலைச் சுருள்களைச் செவியணிகளாகக் கொண்டுள்ள சண்டேசுவரர், சுகாசனத்தில் வலக்கையில் மழுவேந்தி அமர்ந்துள்ளார். பேரெழிலுடன் வடிக்கப்பட்டுள்ள இச்சிற்பம் சோழர் காலச் செதுக்குத் திறனுக்குச் சான்றாக உள்ளது. சுடர்முடியுடன் நிர்வாணியாக நிற்கும் பைரவரின் கைகளில் முத்தலைஈட்டி, தலையோடு, பாம்பு, உடுக்கை காட்சிதர, அவருடைய வாகனமான நாய் பின்னால் நிற்கிறது. கோரைப்பற்களும் நெற்றிக்கண்ணும் பைரவரின் தோற்றத்தைக் கடுமையானதாகக் காட்டினாலும் சோழர் உளித்திறம் அவர் அழகை மேம்படுத்துகிறது. சண்டேசுவரர் பைரவர் கடந்த சில மாதங்களில் ஆய்வு மேற்கொண்ட பல கோயில்களில் வழிபாடற்ற சிற்பங்கள் இது போல் புதர்களுக்கிடையிலும் மதிலோரங்களிலும் கிடத்தப்பட்டிருந்தன. சிற்பங்களின் தோற்றத்தில் காலப்போக்கில் நேரும் சிறு குறைகளுக்காக அவற்றை வழிபாட்டிலிருந்து நீக்குவது மரபாகப் பின்பற்றப்பட்ட போதிலும் இத்தகு அரிய சிற்பங்களை ஒதுக்கிவிடாமல் கோயில் வளாகங்களிலுள்ள மண்டபங்களில் மக்கள் பார்வைக்குக் காட்சியாக்கலாம். அது இயலாதெனின் அரசு அருங்காட்சியகங்களிலாவது இத்தகு வேலைப்பாடு மிகுந்த, காலத்தால் முற்பட்ட சிற்பங்களைத் தமிழர் கலைத்திறன் அறிய வாய்ப்பாக மக்கள் பார்வைக்குக் காட்சிப்படுத்தலாம். |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |