http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 139
இதழ் 139 [ டிசம்பர் 2017 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே
பெருவுடையார் கோயிலில் பல்வேறு சிற்பங்கள் பல இடங்களில் இடம் பெற்றிருந்தாலும் திரிபுராந்தகர் சிற்பம் அதிக அளவில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பிரஹதீஸ்வரர் ஆலயத்தின் உயரம் பொறுத்து அதில் முதல் தள ஆர உறுப்புகள் இடம் பெற வேண்டிய இடத்தில் கபோத முடிவில் பூமிதேச யாளிவரி பெற்று இரண்டாம் தளம் எழும்பும். இரண்டாம் தளத்தின் முடிவிலிருந்தே ஆரச்சுவர்கள் இடம் பெறும்! இரண்டாம் தளத்தின் அனைத்து கோட்டங்களும் திரிபுராந்தகர் சிற்பம் பெற்று விளங்குவது இவ்வாலயத்தின் பல்வேறு தனிச்சிறப்புகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இத்தளத்தின் கருவறை இடைநாழிகை மற்றும் முகமண்டப கோட்டங்கள் அனைத்திலும் நாம் திரிபுராந்தகரை தரிசிக்கலாம்! இவ்வாலயத்தில் சற்றேறக்குறைய முப்பத்தியிரண்டு கோட்டங்களில் திரிபுராந்தகர் சிலைகள் நிறுவப்பட்டிருக்கிறது. மேலும் தளங்களின் திருப்பங்களில் (கருவறை-கர்ணப்பத்தி)அமைந்த கோட்டங்களிலும், இடைநாழிகை மற்றும் முகமண்டபத்திலமைந்த கோட்டங்கள் அனைத்திலும், ஒரு காலை மடக்கி ஒரு பீடத்தில் ஒய்யாரமாக நிறுத்தி சுமார் பதினெட்டு கோட்டங்களிலும் மீதமுள்ள பதினான்கு கோட்டங்களில் சமபாதராய் சாந்தமாகவும் காட்சியளிக்கிறார். இது மட்டுமல்லாது தரை தளத்தில் நுழைவாயிலை அடுத்து துவாரபாலகருக்கு அருகாமையில் ஈசான பாகத்திலும் திரிபுராந்தகர் இருத்தப்பட்டுள்ளார். இச்சிற்பங்கள் தவிர முதல் தள சாந்தாரச்சுவரில் உள்ள ஐந்து ஓவியங்களில் ஒரு முழு பகுதி திரிபுராந்தகருக்கு அர்ப்பணிக்கப்பட்டது கவனிக்கத்தக்கதாகும். இவற்றிலிருந்து சிவனின் அட்ட வீரட்டங்களில் இராஜராஜரின் சிந்தை கவர்ந்தது திரிபுர தகனம் என்பது வெள்ளிடைமலை போல் விளங்குகிறது. திரிபுர சம்ஹார தத்துவம் சிவன் இவ்வுலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் தன்னுடைய உடன் கூட்டமாகத்தான் கருதுகிறார். அதனை நமக்குணர்த்தத்தான் அவர் திரிபுரம் எரிக்க பிரம்மா,விஷ்ணு உள்ளிட்ட தேவாதிதேவர்களுடன் தேரில் பவனி புறப்பட்டார்! திரிபுரசம்ஹாரத்தின் பெருமையை அனைவருக்கும் அளிப்பதே அவர் நோக்கமாயிருந்தது! ஆனால் அங்குள்ளோர் செருக்குற்று சகல ஆற்றலும் பொருந்திய சிவனுக்கே நமது உதவி தேவைப்படுகிறதே என்று எண்ணி முடிப்பதற்குள் எம்பெருமானின் அக்கினிப்பார்வை அரை நொடியில் திரிபுரத்தை எரித்தது நாம் அறிந்த கதைதான்! (தற்குறிப்பேற்றம் -கட்டுரையாளர் கருத்து) இக்கதையிலிருந்து நாம் எடுக்க வேண்டிய கருத்து : என்றைக்கு நமக்கு "நான்", "எனது" என்ற சிந்தை தலை தூக்குகிறதோ அன்றே சிவன் நம்மைக் கைவிட்டுவிடுவார்! ஆனால் நம்மை ஒன்றும் செய்யமாட்டார்! நமது தோழமை நிலையை நாமே இழக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுவிடும்! நாம் அவரது தோழமையை இழக்காமலிருக்க நம் அகந்தையை ஒப்புக்கொடுத்தாலே போதுமானது! எல்லாவற்றையும் அவன் முன்னின்று நடத்துவான்! அதன் பெருமை நம்மை தானாகவே வந்தடையும்! "அவனருளாலே! அவன்தாழ் வணங்கி" எப்பேர்ப்பட்ட மகா வாக்கியம்! (சிவபக்தியில் கரைந்த இராஜராஜர் இவ்வுண்மையை நமக்குணர்த்த இத்தனை திரிபுராந்தகரை இராஜராஜேஸ்வரத்தில் நிறுவினாரோ என்னவோ யார் கண்டது?!) |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |