http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[175 Issues]
[1738 Articles]
Home About US Temples Facebook
Issue No. 144

இதழ் 144
[ ஜனவரி 2019 ]


இந்த இதழில்..
In this Issue..

அவரும் நானும்
செய்திகள் வாசிப்பது வரலாறு டாட் காம் - 3
பாச்சில் அவனீசுவரம்
மாமல்லபுரக் குடைவரைகள் - 3
போய் வாருங்கள் தாத்தா!
ஐராவதம் மகாதேவன் – இதயத்திலிருந்து நேராக
தாராசுரம் - தேவநாயகி (அ) பெரியநாயகி அம்மன் ஆலயம்
நாதமும் நாதனும் நாட்காட்டியும்
இதழ் எண். 144 > ஆலாபனை
நாதமும் நாதனும் நாட்காட்டியும்
ச. கமலக்கண்ணன்
அக்டோபர் 2013 என்று ஞாபகம். பரிவாதினி வலையொளிப் பக்கம் தொடங்கப்பட்டபோது அதில் கட்டடக்கலை தொடர்பாக ஒரு தொடரை ஒளிபரப்பும் நோக்கில் சிதம்பரம் கோயிலில் ஒரு சோதனை முயற்சியை மேற்கொண்டோம். பின்னர் அது வடிவம் பெறாவிட்டாலும், அன்றைய படப்பிடிப்பும் அன்று மாலை அக்கோயிலில் நடைபெற்ற "நாதமும் நாதனும்" குறுந்தட்டு வெளியீட்டு நிகழ்வும் லலிதாராமின் இசை தொடர்பான பல்வேறு முயற்சிகளைப் புரியவைத்தன. ஏறத்தாழ ஐராவதி வெளியீட்டுக்குப் பிறகு அவர் வரலாற்றாய்விலிருந்து இசையின்பால் ஒதுங்கியபோது சற்று வருத்தம் இருந்ததென்றாலும், இசைத்துறையிலும் சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகள், பழம் மரபுகளின் ஆவணப்படுத்தல்கள் என அவரது வளர்ச்சி அந்த வருத்தத்தை ஓரளவுக்குப் போக்கிக்கொண்டு வந்தபோதுதான் அதற்குச் சிகரம் வைத்தாற்போன்று "நாதமும் நாதனும்" குறுந்தகடு வெளியானது.

இசையுலக இளவரசர் மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய வாழ்க்கை வரலாற்று நூல்களுக்கு இவர் செலவிட்ட நேரமும் உழைப்பும் பெரும்பாலான தொழில்முறை எழுத்தாளர்களாலோ அல்லது பல்வேறு ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறுகளை வரிசையாக எழுதிக் குவிக்கும் எழுத்தாளர்களாலோ கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாதவை மட்டுமல்ல, முயன்றாலும் முடியாதவை. இரண்டுமே நேர்மையாகச் செய்யப்பட்ட ஆய்வு நூல்கள் வரிசையில் கம்பீரமாக அமரக்கூடிய தரம் வாய்ந்தவை. இசையுலக இளவரசரின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக கந்தர்வ கானத்தைச் சொல்லலாம். ஜி.என்.பியின் இசை பற்றிய கட்டுரைகள், அவரும் அவரது தந்தையாரும் எழுதியவை மற்றும் அவரைப் பற்றிய நினைவுகள் என விரிகிறது. நாங்கள் ஐராவதியைத் தயார் செய்தபோது ஒரு பணிப்பாராட்டு மலரைத் தரம் மிக்கதாகச் செய்ய விரும்பும்போது வரும் சிக்கல்களைக் கண்கூடாகக் கண்டிருக்கிறோம். அத்தகைய பின்புலத்தோடு கந்தர்வ கானத்தைக் காணும்போது பிரமிப்பே மிஞ்சுகிறது.

சகலகலா ஆச்சார்யாரும் இசை வசீகரனும் இதே தரத்தையும் உழைப்பையும் காணொளிக் குறுந்தகடுகளுக்கு இடப்பெயர்ச்சி செய்து பெறப்பட்டவை. இவை இரண்டும் சாதனையாளர்களைப் பற்றியவை என்றால், இவற்றின் சமகாலத்தில் ஆவணப்படுத்தப்பட்ட மிக முக்கியமான ஒன்று நாதஸ்வரம். சென்னை டிசம்பர் சீஸனில் நாகசுரத்துக்கு எத்தகைய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை இவரது வழக்கமான இழையோடும் நகைச்சுவை நடையில் எழுதி, சுமனஸா அறக்கட்டளை இக்குறையைப் போக்கியதைப் பாராட்டி இருப்பதை இங்கே வாசிக்கலாம். வீணைக் கச்சேரி, வயலின் கச்சேரி போன்று நாகசுரக் கச்சேரிகள் பரவலாக இல்லை என்பதை உணர்பவர்களே இன்று அரிது. அழிந்து கொண்டிருக்கும் மரபை அடுத்த தலைமுறைகளுக்காக ஆவணப்படுத்த வேண்டும் என எண்ணுவது அதனினும் அரிது. முற்றாக வழக்கொழிந்து விடும்முன் தொடர்புடையவர்களை ஒருங்கிணைத்து முடிந்த வரையில் மீட்டுருவாக்கம் செய்து மரபு மாறாமல் பதிவு செய்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். சைவ மரபு, வைணவ மரபு இரண்டையுமே பதிவு செய்திருப்பது மிகச்சிறப்பு. பெரம்பலூர் புத்தகத் திருவிழாவில் தினம் ஓர் ஆவணப்படம் வரிசையில் திரையிடுவதற்காகச் சில ஆண்டுகள் ஆவணப்படங்கள் தந்து உதவியபோது 2014ம் ஆண்டு முனைவர் ம. செல்வபாண்டியன் அவர்களின் முயற்சியால் நாதமும் நாதனும் குறுந்தகட்டின் ஒரு பகுதி திரையிடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, மாதம் ஒரு தவில் அல்லது நாகசுரக் கலைஞரைச் சிறப்பித்து 2019க்கான நாட்காட்டி ஒன்றும் வெளியிடப்பட்டிருப்பது நல்ல முயற்சி. நம் மின்னிதழின் நூறாவது இதழில் மங்கல இசை மன்னர்கள் என்ற நூலைப்பற்றி எழுதியிருப்பார். அதில் நூலாசிரியர் பல கலைஞர்களைப் பற்றி எழுத முடியாமல் போனது உள்ளத்தில் கனன்று கொண்டிருக்க, நண்பர் ஒருவர் அனுப்பிய சில புகைப்படங்கள் அந்நெருப்பைப் பற்ற வைக்க, உதயமானது நாகசுர நாட்காட்டி. கீழ்க்கண்ட கலைஞர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.

வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை
செம்பனார் கோயில் சகோதரர்கள் (முத்துக்குமாரசுவாமி மற்றும் வைத்தியநாதன்)
பெரும்பள்ளம் வெங்கடேச பிள்ளை
மதுரை பொன்னுத்தாயி
திருச்சேறை முத்துக்குமாரசுவாமி பிள்ளை
வண்டிக்காரத்தெரு மணி / மான்பூண்டியாபிள்ளை
பொறையாறு வேணுகோபால் பிள்ளை
தருமபுரம் கோவிந்தராஜ பிள்ளை
சுவாமிமலை கோவிந்தராஜ பிள்ளை
திருமங்கலம் சோமாஸ்கந்த பிள்ளை
கீவளூர் சிங்காரவேலு பிள்ளை
பந்தநல்லூர் தட்சிணாமூர்த்தி பிள்ளை

வரலாற்றுலகில் காலடி வைக்கும் முன்பே ஏற்பட்ட இசையார்வம் தற்போது முழுநேர ஆர்வப்பணியாக மாறி இசையுலகில் சாதனைகள் படைத்துவரும் லலிதாராம் அவர்களை வரலாறு.காம் வாழ்த்திப் பாராட்டி மகிழ்கிறது.
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.