http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 144

இதழ் 144
[ ஜனவரி 2019 ]


இந்த இதழில்..
In this Issue..

அவரும் நானும்
செய்திகள் வாசிப்பது வரலாறு டாட் காம் - 3
பாச்சில் அவனீசுவரம்
மாமல்லபுரக் குடைவரைகள் - 3
போய் வாருங்கள் தாத்தா!
ஐராவதம் மகாதேவன் – இதயத்திலிருந்து நேராக
தாராசுரம் - தேவநாயகி (அ) பெரியநாயகி அம்மன் ஆலயம்
நாதமும் நாதனும் நாட்காட்டியும்
இதழ் எண். 144 > கலையும் ஆய்வும்
பாச்சில் அவனீசுவரம்
மு.நளினி, அர.அகிலா
சிராப்பள்ளி முசிறிப் பெருவழியில் நொச்சியத்தையடுத்த கூடப்பள்ளி1 மன்றச்சநல்லூர் (மண்ணச்சநல்லூர்) சாலையில் 5 கி. மீ. தொலைவில் உள்ளது கோபுரப்பட்டி. இவ்வூரில் அவனீசுவரம், மேற்றளி எனும் இரண்டு சிவன்கோயில்களும் ஆதிநாயகப்பெருமாள் எனும் விஷ்ணுகோயிலும் உள்ளன. பாச்சில் அவனீசுவரம் எனப் பெரும்பாலான கல்வெட்டுகளிலும் அமலீசுவரம் என்று முதலாம் இராஜராஜரின் 21ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிலும் அமனீசுவரமாக முதலாம் இராஜேந்திரரின் 6ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிலும் அறிமுகமாகும் மேற்கு நோக்கிய கற்றளி, தமிழ்நாட்டரசின் தொல்லியல்துறைப் பராமரிப்பிலுள்ளது.2 வழிபாட்டுக்குக் கொணரப்பட்ட நிலையில் கருவறை, முகமண்டபம் மட்டுமே பெற்றுள்ள இத்தளியின் தேவகோட்டச் சிற்பங்கள் எண்ணெய் முழுக்கில் களையிழந்துள்ளன.



கருவறை

உபானம், துணைஉபானம் மீதெழும் பாதபந்தத் தாங்குதளம் பெற்றுள்ள கருவறையின் மூன்று பத்திகளும் முன்னிழுக்கப்பட்டுள்ளபோதும் சாலைப்பத்தி கர்ணபத்திகளினும் நன்கு பிதுக்கமாக உள்ளது. தாங்குதளக் கண்டபாதங்களிலும் மேலுள்ள வேதிகைத்தொகுதியின் கண்டபாதங்களிலும் சிற்றுருவச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேற்கம்பையடுத்து வளரும் சுவரின் கர்ணபத்திகளை அணைத்துள்ள தூண்கள் பாதம் பெற்ற எண்முகமாக, சாலைப்பத்தியின் அணைவுத்தூண்கள் பாதம் பெற்ற பதினாறு முகமாக உள்ளன. சில எண்முகத் தூண்களின் கட்டுகளிலும் சிற்றுருவச் சிற்பங்களைக் காணமுடிகிறது. பதினாறுமுகத் தூண்கள் பாலியும்3 எண்முகத் தூண்கள் தாமரையும் பெற்றுள்ளன. பாலியின் கீழ்ப்பகுதி கருக்கணி அலங்கரிப்பு கொண்டுள்ளது. போதிகைகள் குளவும் பட்டையும் பெற்ற தரங்க அமைப்பின.

சாலைப்பத்திகள் முப்புறத்தும் பாதமும் சட்டத்தலையும் பெற்ற உருளை அரைத்தூண்களால் அணைக்கப்பட்ட ஆழமான கோட்டங்களைக் கொண்டுள்ளன. மேலே மகரதோரணம். கோட்டங்களில் தெற்கில் ஆலமர்அண்ணலும் கிழக்கில் சங்கரநாராயணரும் வடக்கில் நான்முகனும் உள்ளனர். நான்முகன் கோட்டத்தின் கீழ்த் திருமஞ்சண நீர்வழியும் வலபியில் பூதவரியும் அமைய, கபோதம் ஆழமற்ற கூடுவளைவுகளுடன் கோணப்பட்டங்களும் சந்திரமண்டலமும் பெற்றுள்ளது.

பஞ்சரங்கள்

பத்திகளுக்கு இடைப்பட்ட ஒடுக்கங்களைத் திசைக்கு இரண்டெனத் தளம் அளாவிய நிலையில் ஆறு பஞ்சரங்கள் அலங்கரிக்கின்றன. வேதிகைவரை தளம் ஒத்து அமைந்துள்ள இப்பஞ்சரங்கள், வேதிகைக்கு மேற்பட்ட நிலையில், பஞ்சரத்திற்கு இரண்டென சிறிய அளவிலான செவ்வகப் பாதமுள்ள அரைத்தூண்களைப் பெற்றுள்ளன. தூண்களின் உடல், கீழே எண்முகமாகவும் மேலே பதினாறு முகமாகவும் அமைய, தலையுறுப்புகள் உருளை வடிவின. பாலி, பலகை, வீரகண்டத்தை அடுத்து வளரும் விரிகோணப் போதிகைகள்4 கூரையுறுப்புகள் தாங்க, வலபியில் பூதவரி. கபோதம் கோணப்பட்டத்துடன் நெருக்க நாசிகைகள் கொள்ள, மேலே பூமிதேசம், வேதிகை, கிரீவம் உள்ளன. ஆழமான கூடுவளைவே சிம்மமுகத் தலைப்புடன் சிகரமாகியுள்ளது. இச்சிகரம் விமானக் கபோதத்துடன் ஒன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.5

முகமண்டபம்

கருவறை ஒத்த தாங்குதளமும் வேதிகைத்தொகுதியும் பெற்றெழும் முகமண்டபத்தின் சுவர் பத்திப்பிரிப்பும் பஞ்சரங்களுமற்ற நிலையில் நான்முக அரைத்தூண்களால் தழுவப்பட்டுள்ளது. போதிகையும் கூரையுறுப்புகளும் கருவறை போலவே அமைய, சுவரின் இருபுறத்தும் சட்டத்தலை பெற்ற நான்முக அரைத்தூண்களின் அணைப்பிலுள்ள கோட்டங்களில் வடக்கில் கொற்றவை. தெற்குக் கோட்டமும் முகமண்டப மேற்குச் சுவரில் வாயிலின் இருபுறத்தும் காவலர்களுக்கென அமைந்துள்ள நெடிய, ஆழமான கோட்டங்களும் வெறுமையாக உள்ளன. கொற்றவைக் கோட்டத்தின் கீழும் சிறிய அளவிலான நீர்வழி காட்டப்பட்டுள்ளது.

கோட்டச் சிற்பங்கள்

சடைமகுடம், பனையோலைக் குண்டலங்களுடன் வலக்கையைக் கடகத்திலிருத்தி, இடக்கையில் பாம்புடன் கிழக்கு நோக்கிக் குப்புறப் படுத்துள்ள முயலகனின் முதுகில் வலப்பாதமிருத்தி, வீராசனத்திலுள்ள ஆலமர்அண்ணலின் இட முன் கையில் சுவடி. பின்கையில் தீச்சுடர். வல முன் கை சின் முத்திரையில் அமையப் பின்கையில் அக்கமாலை. விரிந்த சடைப்பாரத்தில் வலப்புறம் பிறைநிலவும் பாம்பும் கொண்டுள்ள இறைவனின் தலை நடுவே சிம்மமுகம் பதித்த மகரப்பதக்கம். சடைப்பாரச் சுருள் ஒன்று வலத்தோளில் நெகிழ்ந்துள்ளது. துணியாலான முப்புரிநூல், உதரபந்தம், இடைச் சிற்றாடை, தாள்செறியுடன் வலச்செவியில் பனையோலைக் குண்டலமும் இடச்செவியில் மகரகுண்டலமும் பெய்துள்ளவர் கழுத்தில் சரப்பளி, உருளைப் பதக்கத்துடனான பெருமுத்துமாலை. இறைவனின் பின்னுள்ள மரத்தில் வலக்கிளையொன்றில் பொக்கணப் பையும் அதனுடன் இணைந்த நிலையில் இதழ் விரித்த நீலோத்பலமும் காட்சிதர,6 மற்றொரு கிளையில் பல்லி. இடக்கிளையொன்றில் அணில். மரப் பொந்திலிருந்து பாம்பொன்று வெளிப்பட, உள்ளே ஆந்தை.



சங்கரநாராயணரின் வலப்பாதி சிவபெருமானாக அமைந்துள்ளதால் சடைமகுடமும் சிற்றாடையும் அவரை அலங்கரிக்கின்றன. இடப்பாதி விஷ்ணு கிரீடமகுடமும் பட்டாடையும் கொண்டுள்ளார். இருவருக்குமாய் அமைந்துள்ள இடைக்கட்டு, முடிச்சுத்தொங்கல்களுடன் சிறக்கக் காட்டப்பட்டுள்ளது. சிவப்பகுதிக் கைகளில் முன் கை காக்கும் குறிப்பில் இருக்க, பின்கையில் மழு. நாராயணரின் முன் கை கடியவலம்பிதமாகப் பின்கையில் தீக்கங்குகள் சூழ்ச் சங்கு. மகரகுண்டலங்கள், முப்புரிநூல், உதரபந்தம், தோள், கை வளைகள் பெற்றுள்ள சங்கர நாராயணரின் தோள்களில் சடைப்புரிகள் புரளக் கழுத்தில் சரப்பளி.



சடைமகுடம், பூட்டுக்குண்டலங்கள், கண்டிகை, சரப்பளி, துணியாலான முப்புரிநூல், உதரபந்தம், முத்துத் தோள்வளைகள், கைவளைகள் பெற்று, புலிமுக அரைக்கச்சு இருத்தும் பட்டாடையும் இடைக்கட்டும் கொண்டுள்ள நான்முகனின் முன் கைகள் காக்கும் குறிப்பிலும் கடியவலம்பிதத்திலும் அமையப் பின்கைகளில் அக்கமாலை, குண்டிகை.

தாமரைத்தளத்தில் சமபாதத்திலிருக்கும் கொற்றவை கரண்டமகுடம், மகரகுண்டலங்கள், சவடி, சரப்பளி, சுவர்ணவைகாக்ஷம், மார்புக்கச்சு, புலிமுகக்கச்சு இருத்தும் இடைக்கட்டுடனான சிற்றாடை அணிந்து பின்கைகளில் தீக்கங்குகள் சூழ்ச் சக்கரமும் சங்கும் கொண்டுள்ளார்.7 சிதைந்துள்ள வல முன் கை காக்கும் குறிப்பிலிருக்க, இட முன் கை கடியவலம் பிதமாக உள்ளது. கால்களில் தண்டையும் சதங்கையும். கைகளில் தோள்வளைகளும் அடுக்கு வளைகளும். செவிப்பூ அணிந்துள்ள அம்மையின் தோள்களில் சடைக்கற்றைகள் நெகிழ்ந்துள்ளன.



மகரதோரணச் சிற்பங்கள்

விமானத்தின் தெற்கு மகரதோரணத்தில் ஆலமர்அண்ணலும் வடக்குத் தோரணத்தில் அரக்கனை அழிக்கும் காளியும் உள்ளனர். கிழக்குத் தோரணம் சிதைந்துள்ளது. பெருமளவிற்குக் காப்பாற்றப்பட்டிருக்கும் தெற்குத் தோரணம் இடைச்சோழர் காலத் தோரண அலங்கரிப்பு உத்திகளை விளக்குமாறு அமைந்துள்ளது. பக்கத்திற்கொன்றாய்க் கீழே இரண்டு பெருமகரங்களும் மேலே இணைநிலையில் இரண்டு சிறுமகரங்களும் திறந்த வாயுடன் அமர, அவற்றின் வாய்களிலிருந்து வெளிப்படுமாறு இரண்டு வளைவுகள் காட்டப்பட்டுள்ளன. மேல் வளைவில் யாளிமீது அமர்ந்த போர்வீரர்களும் கீழ் வளைவில் வாத்துகளும் அமைய, கீழ் மகரங்களுக்கு இடைப்பட்ட வளைவில் சடைப்பாரத்துடன் வீராசனத்திலுள்ள ஆலமர்அண்ணலின் வல முன் கை காக்க, இட முன் கை முழங்கால் மீதுள்ளது. பின்கைக் கருவிகள் சிதைந்துள்ளன. இறைவனின் இருபுறமும் பக்கத்திற்கிருவராய் சனகாதி முனிவர்கள். இறைவன் அமர்ந்திருக்கும் வளைவிற்கு மேல் காட்டப்பட்டுள்ள தோரணத்தொங்கல்களில் நான்கு பூதங்கள் ஆட, ஒன்று மத்தளமும் மற்றொன்று சங்கும் இசைக்கின்றன. மத்தளப் பூதம் குன்றா அழகுடன் செம்மாந்துள்ளது.

வடக்குத் தோரணத்தில் எட்டுக் கைகளுடன் காட்சிதரும் போர்க்கோலக் காளியின் முன்னிரு கைகளில் நீளமான முத்தலைஈட்டி. அழிக்க வரும் அவரிடமிருந்து தப்பியோடும் நிலையில் காட்டப்பட்டுள்ள அரக்கன் திரும்பிப் பார்த்தவாறே ஓடுகிறார். தோரணத் தொங்கல்களில் பூதஆடல். நெற்றிப் பொட்டில் யோகசிவன்.

முகமண்டப வடக்குத் தோரணத்தில் எட்டுக் கைகளுடன் இடச்சுழற்சியில் உடலும் வலத்திருப்பமாக முகமும் கொண்டு விளங்கும் யானையை அழித்த மூர்த்தி வலக்காலை முழங்கால் அளவில் மடித்து வலப்புறம் திருப்பியுள்ளார். தோரணத்தின் மேற்பகுதி சிதைந்துள்ளது. தெற்குத் தோரண ஆடவல்லான் விரிசடையுடன் முயலகன் முதுகின் மேல் வலப்பாதம் ஊன்றி, இடக்காலை வலவீச்சில் திருப்பியுள்ளார்.8 பின்கைகளில் உடுக்கை, தீயகல். வல முன் கை காக்க, இட முன் கை வேழ முத்திரையில் உள்ளது. அவரது வலப்புறமுள்ள இருவரில் முன்னவர் குடமுழவு இசைக்கப் பின்னவர் தாளம் தருகிறார். இடப்புறமுள்ளவர் தோலிசைக் கருவியொன்றை ஆடலுக்கேற்ப இசைக்கிறார். வலப்புறம் மேலே ஆடலைப் போற்றி இரசிக்கும் கந்தர்வர். தோரணத்தொங்கல்களில் பூதங்களின் ஆடல். நெற்றிப்பொட்டில் கீர்த்திமுகம்.

சிற்றுருவச் சிற்பங்கள்

முகமண்டபம்

விமானம், முகமண்டபம் ஆகியவற்றின் பெரும்பாலான கண்டம், வேதிபாதங்களில் சிற்றுருவச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மிகச் சில பாதங்களே வெறுமையாக உள்ளன. சில பாதங்களின் சிற்பங்கள் அடையாளப்படுத்த முடியாத அளவிற்குச் சிதைந்துள்ளன. முகமண்டபத்தின் 18 வேதிபாதங்களில் சிற்பங்கள் பெறாதவை 5. ஒன்றில் சிற்பம் பெரிதும் சிதைந்துள்ளது. எஞ்சிய 12இல், 7இல் போர்க்காட்சிகளும் ஒன்றில் ஆடற்காட்சியும் உள்ளன. பெண் சார்ந்த காட்சிகளாக உள்ள 4இல் ஒன்று சீதையையும் அனுமனையும் கொள்ள, மற்றொன்றில், வலப்பாதத்தை நிலத்தில் ஊன்றி, இடக்காலை முழங்காலளவில் மடக்கிப் பாதத்தைத் தான் சாய்ந்திருக்கும் மரத்தில் பதித்தவாறு ஒயிலுடன் காட்சிதரும் அழகி. அவரது இடக்கை மரக்கிளை ஒன்றைப் பற்றியிருக்க, வலக்கை மேலுயர்ந்த பதாகமாக உள்ளது. இப்பெண்ணின் எதிரே நிற்கும் ஆடவர் தம் இருகைகளாலும் பற்றியிருக்கும் பொருளை அப்பெண்ணுக்குத் தருகிறார்.9



போர்க்காட்சிகளில் ஒன்றாகப் பதிவாகியுள்ள காளிங்கமர்த்தனம் மாறுபட்ட படப்பிடிப்பாக உள்ளது. இதில் கண்ணனின் கைப்பிடியிலிருந்து அவர் பாதம்வரை பாம்புடலுடனும் பாதத்திற்குக் கீழ் மனித வடிவிலும் காளிங்கன் காட்டப்பட்டுள்ளமை அரிதான பதிவாகும்.10 கண்ணனின் எதிரே நிற்கும் ஆடவர் காளிங்கமர்த்தனத்தைப் போற்றிக் கொண்டாடுவது அரிதினும் அரிதான காட்சியாகும்.

ஆடற்காட்சியில் சுவஸ்திகப் பாதங்களுடன் அர்த்தஸ்வஸ்திகக் கரணம் காட்டும் பெண்ணின் வலக்கை அர்த்தரேசிதமாக, இடக்கை நெகிழ்ந்துள்ளது. தலை இடச்சாய்வாகப் பார்வை வலப்புறமுள்ளது. இடைச் சிற்றாடையின் நடுவே அழகிய தொங்கல். வலப்புறம் குத்துக்காலிட்டு அமர்ந்துள்ள செண்டுதாள ஆடவர் நட்டுவராகலாம். அவரின் இடப்புறத்தவர் இடக்கைக் கலைஞர்.

முகமண்டபக் கண்டபாதங்கள் 13இல் ஒன்று வெறுமையாகவும் மற்றொன்று சிதைவுற்ற சிற்பத்துடனும் உள்ளன. அனுமன் சீதை, அனுமன் இராவணன் சந்திப்புக் காட்சிகள் 2இல் அமைய, சிவபெருமான் பாசுபதம் வழங்கியதும் தென் திசைக்கடவுளாய் ஆகமம் உரைத்ததும் 2இல் காட்டப்பட்டுள்ளன. 2 பாதங்கள் காளி அரக்கர்களை அழிப்பது காட்ட, ஒன்று கண்ணனின் காளிங்கமர்த்தனமாக உள்ளது. மகப்பேறு, பெண்களின் நடை, யானை, வில் - அம்புடன் இருவர் தோன்றும் வேட்டைக் காட்சி எனச் சமூகஞ் சார்ந்த படப்பிடிப்புகள் 4 பாதங்களில் பதிவாகியுள்ளன.

இவற்றுள், 5 பெண்கள் இடம்பெறும் மகப்பேறு காட்சி வழக்கமான படப்பிடிப்புகளிலிருந்து சற்றே மாறுபட்டுள்ளது. இடக்கோடி இருக்கையில் ஒரு பெண் உத்குடியில் இருக்க, வலக்கோடியில் இருகைகளையும் இடுப்பிலிருத்தியவாறு விரையும் பெண், மருத்துவி ஆகலாம். அவர்களுக்கு இடைப்பட்டு நிற்கும் மூன்று பெண்களில் நடுவில் இருப்பவரே மகப்பேற்றுக்குரியவர். இடமும் வலமுமாக நிற்கும் செவிலிகளின் தோள்களில் கைகளைத் தவழவிட்டு அவர்தம் கைத்தாங்கலில் மகப்பேற்றிற்குத் தயாராகும் அப்பெண்ணின் நெருங்கிய உறவினராகவோ, தலைமை மருத்துவராகவோ இருக்கைப் பெண்ணைக் கொள்ளலாம்.

இரண்டு பெண்களின் நடைக்காட்சிச் சிற்பமும் அரிதானதே. பெருங்கொண்டை, பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி அணிந்தவராய் முன்னால் நடக்கும் நங்கை வலக்கையை நெகிழ்த்தி, இடக்கையை மடக்கி நீட்டியுள்ளார். அவரைப் பின்பற்றும் முதிய பெண் தொங்கும் தலைமுடியுடன் சரப்பளி அணிந்தவராய் முன்னவரைப் போலவே கைகளை அமைத்து நடைபயில்கிறார்.

தெற்குப் பாதத்தில் உள்ள அனுமன் இராவணன் சந்திப்புக் காட்சியும் அரிதானதே. அரியணையில் வீராசனத்தில் கிரீடமகுடத்துடன் உள்ள இராவணனின் வலக்கை மேலுயர் பதாகமாக, இடக்கை முழங்கால் மீதுள்ளது. எதிரில் தன் வாலையே சுருட்டி இருக்கையாக்கி வீராசனத்திலுள்ள அனுமனும் இராவணன் போலவே கைகளை அமைத்துள்ளார். இருவருக்குமிடையே கடுமையான உரையாடல் நிகழ்வதை அவர்தம் கையமைப்பும் உடல்மொழியும் வெளிப்படுத்துகின்றன. இருவரின் பின்னும் பக்கத்திற்கொருவராக இருவர் நிற்கின்றனர்.



சிவபெருமான் ஆலமர்அண்ணலாய் ஆகமம் உரைக்கும் காட்சி எழிலுற அமைந்துள்ளது. சடைப்பாரத்துடன், வீராசனத்தில் வல முன் கையை மார்பருகே இருத்தி, இட முன் கையை முழங்கால் மீது வைத்துள்ள இறைவனின் இடப் பின் கை மேலுயர் பதாகமாக, வலப் பின் கை சிதைந்துள்ளது. இருக்கையின் மீதிருக்கும் அவரது முழங்காலைத் தழுவிய நிலையில் யோகபட்டம். எதிரில், வலக்கை சற்றே உயர்ந்து கடகமாக, இடக்கையை முழங்கால் மேலிருத்தி முதியவரும் இளையவருமாய் இரண்டு முனிவர்கள் அமர்ந்துள்ளனர். முதியவர் தாடியுடன் காட்சிதருகிறார்.

கருவறை

கருவறையின் 47 வேதிபாதங்களில் 6 வெறுமையாக உள்ளன. ஒன்றில் சிற்பம் சிதைந்துள்ளது. மற்றொன்றில் முழுமையடையவில்லை. எஞ்சிய 39இல் 21 பாதங்கள் இராமாயணம் தொடர்பான காட்சிகளைத் தொடர்பற்ற நிலையில் பெற்றுள்ளன. புள்ளரக்கன், பூதனை அரக்கி ஆகியோரைக் கண்ணன் அழிப்பது உள்ளிட்ட பாகவதக் காட்சிகள் ஐந்திலும் கங்காதரர், கஜசம்காரர், கங்காளர், பிச்சையுகக்கும் பெருமான் ஆகிய சிவபுராணக் கதைகள் நான்கிலும் ஆடற்காட்சிகள் ஆறிலும் பொதுக்காட்சிகள் மூன்றிலும் இடம்பெற்றுள்ளன.

இராமாயணக் காட்சிகள்

இராமாயண நிகழ்வுகளில் அகலிகை சாபநீக்கம், இராமன் - சீதை - சூர்ப்பனகை சந்திப்பு, சீதை மானைக் காணல், இராமனிடம் மான் கேட்டல், இராமன் மான் பின் செல்லல், இராவணன் சீதையைச் சந்தித்தல், சுக்ரீவனுடன் போர் வேண்டாமென வாலியைத் தாரை தடுத்தல், வாலி வீழ்வு, இராமன் - இலட்சுமணன் - சுக்ரீவன் - அனுமன் கலந்தாலோசித்தல், சீதையைத் தேட குரங்குகளை அனுப்பல், இராமன் - இலட்சுமணனுக்குச் சுக்ரீவன் ஆறுதல், குரங்குகள் பல திசைகளில் தேட இராமன், இலட்சுமணன் காத்திருத்தல், சீதையைக் கண்ட செய்தியை அனுமன் இராமன் - இலட்சுமணனிடம் கூறல், கடல் மேல் கற்பாலம் கட்டல், போர் முறைகள் பற்றி இராமன் - சுக்ரீவன் உரையாடல், இராமன் - அனுமன் உரையாடல், இலட்சுமணன் - இந்திரஜித் போரிடல், சீதை தீயில் இறங்கல், இராமன் - சீதை, இராமன் - சீதை - இலட்சுமணன் நின்றிருத்தல் முதலிய காட்சிகள் பதிவாகியுள்ளன.

பாகவதம்

பாகவதக் காட்சிகளில் வராகர் நிலமகளைக் கொண்டிருப்பதும் பூதனையைக் கண்ணன் பாலருந்திக் கொல்லும் நிகழ்வும் சிறக்க வடிக்கப்பட்டுள்ளன. ஐந்து தலைகளுடன் வலப்புறத்தே பாம்பரசன் போற்ற, வராகர் வலக்காலை ஊன்றி இடக்காலை உயர்த்தி மடக்கியுள்ளார். வணங்கிய கைகளுடன் இறைவனின் தொடையில் நிலமகள் அமர, வராகரின் இட முன் கை அவரை அணைத்துள்ளது. இடப் பின் கையில் சங்கு. வல முன் கையோ இடுப்பில். இடப்புறம் பாம்பரசி. இருக்கையொன்றில் வலக்கையைத் தாங்கலாக இருத்தி, சரிந்து அமர்ந்துள்ள பூதனையின் இடக்கை மேலுயர, அவள் மடிமீது வலமுழங்காலை இருத்தி, இடக்காலை நீட்டிய நிலையில் இடமார்பில் பாலருந்தும் கண்ணனின் அருஞ்செயலைப் போற்றுமாறு போல இடப்புறத்தே ஓர் ஆடவர்.

சிவபெருமானின் ஆடல்தோற்றங்கள்

ஆடற்காட்சிகள் ஆறில் மூன்று சிற்பங்கள் சிவபெருமானின் ஆடல்களைக் காட்டுகின்றன. அவரது இடப்பாதம் பார்சுவமாக அமைய, வலப்பாதம் குஞ்சித்த நிலையில் தரை நீங்கி ஊர்த்வஜாநு கரணத்தின் முதனிலை காட்டும் காட்சியை வடக்குப் பஞ்சரப் பாதத்தில் காணலாம். இறைவனின் முன்கைகளில் வலக்கை காக்கும் குறிப்புக் காட்ட, இடக்கை அர்த்தரேசிதமாக வீசப்பட்டுள்ளது. பின்கைகளில் வலப்புறம் உடுக்கையும் இடப்புறம் தீச்சுடரும். சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், இடைக்கட்டுடனான சிற்றாடை அணிந்து ஆடும் அவரது முகம் வலச்சாய்வாய் இடப்பார்வையில். ஆடலுக்கேற்ற தாளம் தருபவராய் இடப்புறமுள்ள கருவிக்கலைஞரின் வடிவம் முழுமையுறவில்லை.



கிழக்குப் பஞ்சரத்தில் சிவபெருமானின் ஊர்த்வஜாநு கரணம்.11 வலமுழங்கால் இடுப்புக்குச் சற்று மேலே உயர்த்தப்பட்ட நிலையில் இடப்பாதம் பார்சுவமாக உள்ளது. முன்கைகள் காக்கும் குறிப்பிலும் அர்த்தரேசிதத்திலும் அமையப் பின்கைகளில் முத்தலைஈட்டியும் உடுக்கையும். சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், உதரபந்தம், இடைக்கட்டுடனான சிற்றாடை அணிந்து ஆடும் இறைவனின் முகம் இடச்சாய்வாய் வலப்பார்வையில் உள்ளது.

இடப்பாதம் பார்சுவமாக, வலப்பாதத்தை அக்ரதலசஞ்சாரத்தில் இருத்தி மண்டலநிலையில் ஆடும் இறைவனைத் தெற்குப் பஞ்சரத்தில் காணமுடிகிறது. அவரது பின்கைகளில் உடுக்கை, தீச்சுடர். சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, இடைக்கட்டுடான சிற்றாடை அணிந்து ஆடும் பெருமானின் வல முன் கை காக்கும் குறிப்பில் இருக்க, இட முன் கை வேழமுத்திரையில் வீசப்பட்டுள்ளது. அவரது இடப்புறம் மடியில் குடமுழவை இருத்தி, இரு கைகளாலும் அதை வாசிக்கும் கலைஞர்.

பிற ஆடற்காட்சிகள்

பல முற்சோழர் கோயில்களில் காணுமாறு போல இங்கும் குடக்கூத்து இடம்பெற்றுள்ளது.12 சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், கைவளைகள், இடைச்சிற்றாடையுடன் வலப்பாதம் பார்சுவமாக, இடப்பாதத்தை அக்ரதலசஞ்சாரத்தில் நிறுத்தி வலக்கையை நெகிழ்த்தி, விரல்கள் வயிற்றருகே விரிந்திருக்குமாறு இடக்கையை முழங்கை அளவில் மடக்கி மேலுயர்த்தியிருக்கும் கூத்தரின் தலை வலச்சாய்வாய் உள்ளது. சடைகளைச் சுற்றி முடித்த துணியின் தொங்கல்கள் வலப்புறம் நெகிழ்ந்துள்ளன. குடம், மடக்கிய இடக்கைக்கு மேலுள்ளது.

ஐந்தாம் ஆடற்காட்சியில் இருபுறமும் முழக்குக் கருவிக்கலைஞர்கள் தாளம் தர, இடையில் ஆடும் நங்கை வலக்கையைப் பதாகமாக்கி, இடக்கையை அர்த்தரேசிதத்தில் வீசியுள்ளார். வலப்புறம் முடித்த கொண்டை, பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, நடுத்தொங்கல் பெற்ற இடைச்சிற்றாடை கொண்டு ஆடும் அவரது பாதங்கள் பார்சுவத்தில் உள்ளன. பக்கத்தில் சரிந்த கொண்டையும் சரப்பளியும் இடைச் சிற்றாடையும் பெற்ற இருபுறக் கலைஞர்களும் இடக்கைக் கருவி இசைக்கின்றனர். ஆடற்பெண்ணின் வலக்காலை வலக்கலைஞரின் இடக்காலாகவும் அந்நங்கையின் இடக்காலை இடக் கலைஞரின் வலக்காலாகவும் கொண்டு சிற்பி காட்டியிருக்கும் உளி உன்னதம் பாராட்டற்குரியது.

ஆறாம் ஆடற்காட்சியில் ஆடும் பெண் இடப்பாதத்தைப் பார்சுவமாக்கி, வலப்பாதத்தை அக்ரதலசஞ்சாரத்தில் நிறுத்தி, இடக்கையை நெகிழ்த்தி, வலக்கையை உயர்த்தி மடக்கிய பதாகமாக்கி ஆடக் கருவிக்கலைஞர் இடக்கை இசைத்து உடன் நிற்கிறார்.

பொதுக்காட்சிகள்

பொதுக்காட்சிகளில் கவனத்தைக் கவர்வது தென்மேற்குக் கர்ணபத்தியின் இறுதிப் பாதத்தில் மகிடாசுரமர்த்தினியை அடுத்து அமைந்திருப்பது. இதில் ஐந்து ஆடவர்களும் ஒரு பெண்ணும் இடம்பெற்றுள்ளனர். இடக்கோடியில் நிற்கும் பெண் பட்டாடையுடன் காட்சிதர, அவருக்கு முன் வீராசனத்தில் உயரமான இருக்கை ஒன்றில் அமர்ந்திருக்கும் ஆடவர் சன்னவீரம் அணிந்துள்ளார். சரப்பளியும் பனையோலைக் குண்டலங்களும் அணிந்துள்ள அவரது இடக்கை தொடை மீதிருக்க, வலக்கை மார்பருகே பதாகமாக உள்ளது. அவரின் இருபுறத்தும் கவரிவீசுனர்.

எதிரில் தரையில் அமர்ந்திருப்பவர் இடக்கையைக் கன்னத்தில் கொண்டவராய் வலக்கையை மடியில் இருத்தியுள்ளார். சரப்பளி அணிந்துள்ள அவரது முகத்தில் சிந்தனை ரேகைகள். அவருக்குப் பின்னால் ஒருவர் நிற்கிறார். அமர்ந்திருக்கும் இருவரும் முக்கியமான செயலொன்றைப் பற்றிக் கலந்தாலோசிக்கும் நிலையில் இருப்பதை அறியமுடிகிறது. இச்சிற்பத்தின் சிறப்பே அமர்ந்திருக்கும் இருவரின் தலையலங்காரம்தான். மௌரியச் சிற்பங்களில் பார்ப்பது போன்ற தலைப்பாகை இருவர் தலைகளையும் அணிசெய்கின்றது. சிராப்பள்ளி மாவட்டக் கோயில்களில் இத்தகு தலையலங்காரத்துடனான சிற்பங்களைக் காணக்கூடவில்லை.

மகிடாசுரமர்த்தினிக் காட்சியும் மிக நன்கு படைக்கப்பட்டுள்ளது. கரண்டமகுடம், சன்னவீரத்துடன் ஒரு கால் ஊன்றி, ஒரு காலை உயர்த்திய நிலையில் ஓடும் மெய்ப்பாட்டில் வலப்புறம் காட்சிதரும் மகிடனின் உயர்த்திய வலக்கையில் வாள். இடக்கையில் கேடயம். ஓடும் மகிடனைத் துரத்துமாறு நடைபயிலும் சிம்மத்தின் மேல் அமர்ந்துள்ள தேவியின் முன் கைகளிலும் வாள், கேடயம். இடப் பின் கையில் வில். சிம்மத்தையடுத்து ஒரு பெண் நிற்பதைக் காணமுடிகிறது.

கண்டபாதங்கள்

கர்ண, சாலைப்பத்திகளிலும் பஞ்சரங்களிலும் இடம்பெற்றுள்ள 44 கண்டபாதங்களில் பாகவதம் சார்ந்த காட்சிகள் (கருடன்-விஷ்ணு, நரசிம்மர், காளைஅரக்கன் அழிப்பு, ஆலிலைக் கண்ணன்) நான்கிலும் சிவபுராணம் சார்ந்த காட்சிகள் (பிச்சையேற்பவர், யானையை அழித்தவர், பாசுபதம் அளித்தவர், கிராதார்ச்சுனர், ஆனந்ததாண்டவர்) ஐந்திலும் பொதுக்காட்சிகள் ஒன்பதிலும் உள்ளன.



வடக்குச் சாலை, பஞ்சரம், கிழக்குக் கர்ணபத்திகள், பஞ்சரங்கள், சாலை ஆகியவற்றின் பாதங்களில் படம்பிடிக்கப்பட்டுள்ள தொடரான 22 காட்சிகள் ஒன்றோடொன்று தொடர்புடையனவாய் அக்காலக்கட்டத்தே வழக்கிலிருந்த புராணக் கதை ஒன்றின் பதிவாக அமைந்துள்ளன. அக்கதையின் நாயகர் போல ஏறத்தாழ அனைத்துக் காட்சிகளிலும் பங்கேற்கும் ஆடவரின் தலையலங்காரம் வழக்கமான அமைப்புகளிலிருந்து மாறுபட்டுள்ளது. பெண்களும் ஆடவர்களும் இணையப் பங்கேற்கும் இக்கதையில் போர்க்காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. வடமேற்குக் கர்ணபத்தி, பஞ்சரம் ஆகியவற்றின் நான்கு பாதச்சிற்பங்களில் அந்நாயகர் இல்லை என்றாலும் அவையும் ஏதோ ஒருவகையில் அவர் கதையோடு தொடர்புடையன போல உள்ளன.

பொதுப்பதிவுகள்

பொதுப்பதிவுகளில் ஆடற்காட்சி ஒன்று சிறக்க அமைந்துள்ளது. வலப்பாதத்தை அக்ரதலசஞ்சாரத்தில் நிறுத்தி, இடப்பாதத்தைப் பார்சுவமாக்கி ஆடும் காரிகையின் வலக்கை அலபத்மமாக, இடக்கை தொடையிலுள்ளது. நடுத்தொங்கல் பெற்ற இடைச்சிற்றாடையுடன் ஆடும் அப்பெண்ணின் அருகிருக்கும் கருவிக்கலைஞர்கள் இடக்கை, தாள இசை தர, இடக்கோடிப் பெண் அடுத்து ஆடக் காத்துள்ளார். இடக்கைக் கலைஞர் ஆடலருக்கேற்ற அசைவுகளுடன் இசைகூட்டும் திறன் போற்றுமாறு அமைந்துள்ளது.





சிவபுராணக் காட்சிகள்

சிவபுராணக் காட்சிகளில் யானையைஅழித்தமூர்த்தி அற்புதமான சிற்பமாக விளைந்துள்ளது. வலப்பாதத்தைப் பார்சுவத்தில் இருத்தி, இடமுழங்காலை உயர்த்தியுள்ள எண் கை இறைவனின் ஒரு கையில் முத்தலைஈட்டி. இடப்புறம் முகம் திருப்பியுள்ள அவரருகே வழக்கமான அமைப்பிலிருந்து மாறுபட்ட நிலையில் இறைவன் அளவிற்கே உயர்த்திக் காட்டப்பட்டுள்ள உமை இறைவனுக்காய் ஒருக்கணித்து வலக்கையால் அவரது வேகத்தைத் தணிக்குமாறு போலக் குறிப்புக் காட்ட, அவரது இடக்கை அச்சத்துடன் தம் தொடைகளைப் பற்றியுள்ள முருகனைத் தழுவியுள்ளது.

விரிசடை, கொக்கிறகுகள் திகழும் சடைமகுடம், அதிலிருந்து இருபுறத்தும் விரிந்து பரவிய சடைப்புரிகள், இடச்செவி நீள்செவியாக, வலச்செவியில் பனையோலைக் குண்டலம், இடைச்சிற்றாடை பெற்று ஆனந்ததாண்டவம் நிகழ்த்தும் சிவபெருமானின் பின்கைகளில் உடுக்கையும் தீச்சுடரும். நேர்ப் பார்வையராய் ஆடும் அவரது வல முன் கை காக்கும் குறிப்பிலிருக்க, இட முன் கை வேழமுத்திரையில் வலப்புறம் வீசப்பட்டுள்ளது. இறைவனின் இடப்புறம் கீழமர்ந்துள்ள கருவிக்கலைஞர் குடமுழவு இசைக்கிறார்.13

பின்னால் நிற்கும் நந்தியின் திமில்மீது வல முன் கையை இருத்தி, இட முன் கையால் உமையை அணைத்துள்ள சிவபெருமானின் வலப் பின் கை மேலுயர்ந்துள்ளது. இடப்புறம் ஒருக்கணித்துள்ள உமையின் வலக்கை இடுப்பருகே இருக்க, இடக்கை மேலுயர்ந்துள்ளது. உமையின் முன் நிற்கும் பூதத்தின் கையில் பாசுபதம். எதிரில் இறைஇணையைப் போற்றியபடி அர்ச்சுனன்.

அரைத்தூண் சிற்பங்கள்

எண்முக, நான்முக அரைத்தூண்களின் கட்டுப்பகுதியிலும் சிற்றுருவச் சிற்பங்கள் உள்ளன. யானை, சிம்மம், நந்தி, யாளிச்சண்டை, வாத்துவரிசை, யாளி முதலியவற்றோடு கண்ணன் எருது, பறவைவடிவ அரக்கர்களை அழித்தல், பிள்ளையார், கங்காதரர், இயமனையழித்தமூர்த்தி, ஆலிலைக்கண்ணன் ஆகிய காட்சிகள் எண்முகக் கட்டுகளில் இடம்பெற்றுள்ளன. ஓர் எண்முகத்தூணின் கட்டில் கருவிக்கலைஞர்கள் இசையுடன் ஆடற்பெண்களின் ஆடலும் மற்றொன்றில் யாளிவீரர்களின் அணிவகுப்பும் பார்க்கமுடிகிறது. நான்முகத் தூண்களின் கட்டில் வாத்துவரிசை, யாளிகள் ஆகியவற்றோடு இடக்கை இசைக்கு மண்டலநிலையில் பார்சுவப் பாதங்களுடன் ஆடும் பெண்ணும் இடம்பெற்றுள்ளார். வீராசனத்தில் யோகசிவனாய் அமர்ந்துள்ள இறைவனின் முன்னால் முனிவர்கள் இருவர்.

கல்வெட்டுகள்

அவனீசுவரத்திலிருந்து எட்டுக் கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.14 அவற்றுள் நான்கு உத்தமசோழருடைய 12, 14, 16ஆம் ஆட்சியாண்டுகளில் வெட்டப்பட்டுள்ளன.15 மூன்று கல்வெட்டுகள் முதலாம் இராஜராஜர் காலத்தவை. முதலாம் இராஜேந்திரரின் ஆறாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு இக்கோயில் வண்ணக்கன் குற்றமிழைத்துச் சிறை புக, அவருடைய நிலம் விற்கப்பட்டு அத்தொகை குற்றச் செயலுக்கான அபராதமாகக் கொள்ளப்பட்ட தகவலைக் கொண்டுள்ளது.

பாச்சில்

அவனீசுவரம் இருக்கும் ஊர், கல்வெட்டுகளில் பாச்சில் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தமசோழர் கல்வெட்டுகளில் மழநாட்டுப் பாச்சில் என்றழைக்கப்படும் இவ்வூர் இராஜராஜர் காலத்தே இராஜாச்ரய வளநாட்டின் கீழ்ப் பாச்சில் கூற்றத்திற்கு உள்ளடங்கிய ஊராக இருந்தது. ஆலங்குடி, மழபாடி, கொற்றங்குடி, பாளைநல்லூர், பண்ணைநல்லூர், வேளூர் என மிகச் சில ஊர்ப்பெயர்களே அவனீசுவரக் கல்வெட்டுகளில் கிடைக்கின்றன.

அரசு அலுவலர்கள்

முதலாம் இராஜராஜர் காலத்தில் இராஜாச்ரய வளநாட்டை வகைசெய்த உயர் அரசு அலுவலராக ஆவணமுடையான் மார்த்தாண்டன் உத்தமன் விளங்கினார். முதலாம் இராஜேந்திரர் காலத்தில் சிறுதனத்து அதிகாரிகளாக இருமுடிசோழ மூவேந்த வேளாரும் பரகேசரி விழுப்பேரையரும் சோழவேளாரும் விளங்க, நடுவிருக்கையாகக் கடலங்குடித் தாமோதிரபட்டர் இருந்தார். முடிகொண்ட சோழ விழுப்பேரையர் எனும் சிற்றரசரின் பெயரும் தெரிந்த வலங்கை வேளைக்காரப் படையைச் சேர்ந்த அடிகள் வாரணன், நாரணன் மண்டை ஆகியோர் பெயர்களும் இராஜேந்திரர் கல்வெட்டு வழி வெளிப்படுகின்றன.

வேளாண்மை

தரிசு நிலமான திடலை விளைச்சலுக்கேற்பப் பண்படுத்தும் செய்கை கல்லி வசக்குதல் எனப்பட்டது. பண்படுத்தப்பட்ட நிலம் மசக்கல் என்று குறிக்கப்பட்டுள்ளது. தோட்டம், கழனி எனும் நிலம் சார்ந்த சொற்களையும் கல்வெட்டுகளில் காணமுடிகிறது. வழக்கமாக நிலங்கள் சார்ந்து சுட்டப்பெறும் வாய்க்கால்களோ, வேறு நீர்வழிகளோ இவ்வூர்க் கல்வெட்டுகளில் இடம்பெறவில்லை.

அளவுகள்

கலம், தூணிப்பதக்கு, உழக்கு ஆகிய முகத்தலளவைகள், வேலி, மா, காணி, முந்திரிகை ஆகிய நிலஅளவுகள், பலம், கழஞ்சு, மஞ்சாடி முதலிய நிறுத்தலளவைகள் வழக்கிலிருந்தன. குடிஞைக்கல், பொன் நிறுக்கப் பயன்பட்டது. இராஜாச்ரய மரக்கால் கோயில் பண்டாரக்காலாக விளங்கியது. 1. 50 மீ. நீளமுள்ள அளவுகோல் ஒன்று கோயில் முகமண்டபத் தெற்குத் தாங்குதளத்தில் கண்டறியப்பட்டதால்16 இவ்வூரிலும் இதைச் சுற்றியிருந்த ஊர்களிலும் நிலங்களை அளக்க இக்கோல் பயன்பட்டதாகக் கொள்ளலாம்.

கோயில் அலுவலர்களும் கலைஞர்களும்

முதலாம் இராஜராஜரின் தொடக்க ஆட்சியாண்டுகளின்போது இக்கோயிலில் பொன், நகை ஆகியவற்றை மதிப்பீடு செய்யும் வண்ணக்குக் கரணத்தாராக ஆலங்குடியைச் சேர்ந்த மழபாடிக் குமரன் பணியாற்ற, இராஜராஜரின் 21ஆம் ஆட்சியாண்டில் குமரன் அவனிசுந்தரன் அப்பணியில் இருந்தார். அதே காலக்கட்டத்தில் கோயில் கருவிக்கலைஞராக (உவச்சன்) கல்லன் செருக்கலியும் பாடகராக (கந்தர்வர்) கணவதி கங்காதிரனும் மெராவியம் வாசித்தவராக ஆச்சன் கணவதியும் விளங்கினர். கோயிலில் பூசை செய்பவர்களாக உக்ரபூசன் அயனும் வெஞ்சிநப்பியான இராஜராஜ விடங்கபட்டனும் இருந்தனர். முதலாம் இராஜேந்திரர் காலத்தில் கோயிலில் வண்ணக்குக் கணக்குச் செய்தவராகப் பண்ணைநல்லூர் கொற்றங்குமரன் விளங்க, ஸ்ரீகாரியமாக வேளூர் உடையாரும் தேவகன்மிகளாக நாராயணன் சிங்கன், கல்லன் செருக்கலி ஆகியோரும் இருந்தனர்.

விளக்குகளும் திருமேனிகளும்

அவனீசுவரத்து வண்ணக்குக் கரணத்தார் மழபாடி குமரன் இறைவன் முன் நாளும் உழக்கெண்ணெயால் நந்தாவிளக் கொன்று ஏற்றுவதற்காக நெல் விளையுமாறு பண்படுத்தப் பட்ட கால்வேலி நிலத்தின் விளைவாகக் கிடைத்த 22 கலம் தூணிப்பதக்கு நெல்லுடன் தராவாலான (செம்பும் காரீயமும் சேர்ந்த உலோகக் கலவை) 320 பலம் நிறையுள்ள நிலை விளக்கொன்றையும் கோயிலுக்களித்தார். கண்டராதித்த சோழரின் தேவியாரான செம்பியன்மாதேவி, இறைவன் முன் விளக்கு ஏற்ற வாய்ப்பாகத் தராவினாலான ஐந்து நிலைவிளக்குகளை வழங்கினார். அவற்றுள் இரண்டு முறையே 334, 240 பலம் நிறைகொண்டமைய எஞ்சிய மூன்றும் 190 பலம் நிறை கொண்டிருந்தன.

இக்கோயிலில் நிகழ்ந்த வைகாசி விசாகத் திருவிழாவின்போது உலாத்திருமேனிகளாக எழுந்தருளச் செய்வதற்காகப் பாதத்தளமும் திருவாசியும் கொண்ட அவனிசுந்தரர், உமா பட்டாரகியார் திருமேனிகளை உத்தமசோழரின் தேவியருள் ஒருவரான நக்கன் வீரநாராயணியார் வழங்கினார். செம்பியன் மாதேவியார் குடிஞைக்கல்லால் நிறுக்கப்பட்ட நூற்று நாற்பத்தைந்தே முக்கால் கழஞ்சு இரண்டு மஞ்சாடி நிறையுள்ள பொன்னாலான பொருளொன்றை வழங்கியுள்ளார்.

விழாக்கள்

அவனீசுவரத்தில் திங்கள்தோறும் முதலாம் இராஜராஜர் பிறந்த மீனான சதையத்தன்றும் அவரது தமக்கையான குந்தவையின் பிறந்த மீனான அவிட்டத்தன்றும் இறைவனுக்குத் திருமுழுக்குச் செய்து பெருந்திருவமுது வழங்கவும் அவிட்ட விழா நாட்களில் 30 பிராமணர் 30 தவசியர் உண்பதற்கும் அறக்கட்டளை அமைக்கக் கருதிய இராஜாச்ரய வளநாட்டை வகை செய்த ஆவணமுடையான் மார்த்தாண்டன் உத்தமன் அதற்குரிய 300 கலம் நெல் முதலுக்காக ஏற்கனவே அவனீசுவரத்தில் அமைக்கப்பட்டிருந்த சில நிவந்தங்களை மாற்றி அமைத்தார்.17

நட்டவப் பங்காகவும் ஆச்சாரிய போகமாகவும் வழங்கப்பட்டிருந்த நிலத்தில் அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையானது போகத் தலைக்கு ஒரு பங்கென இரண்டு பங்குகள் விடுவிக்கப்பட்டு இறைவனுக்கு உரிமையாக்கப்பட்டன. அது போலவே மெய்மட்டு, கரணம், மெராவியம், வங்கியம், உவச்சர் பங்குகளில் தலைக்கு அரைப்பங்கு விடுவிக்கப்பட்டு இரண்டரைப் பங்குகள் இறைவனுக்கு உரிமையாயின. குயவர், திருக்கள் பங்குகளில் தலைக்குக் கால் பங்கும் விளக்குகளுக்கான எண்ணெய்க்கென ஒதுக்கப்பட்டிருந்த பங்கில் கால் பங்குமாக முக்கால் பங்கு விடுவிக்கப்பட்டு இறைவனுக்கு உரிமையாக்கப்பட்டது.

இந்த ஐந்தேகால் பங்குகள் வழிப் பெறப்பட்ட ஒன்றரை வேலி மூன்று மாக்காணி அரைக்காணி முந்திரிகைக் கீழ் அரை நிலம் இறைவன் தேவதான ஊர்களான கொற்றங்குடியிலும் பாளைநல்லூரிலும் இருந்தன. இந்நில விளைவு வழி ஆண்டு தோறும் 300 கலம் நெல் கோயில் பண்டாரக் காலான இராஜாச்ரய மரக்காலால் கோயிலில் அளப்பது கொற்றங்குடி, பாளைநல்லூர் ஊரார் கடமையாயிற்று.

சதையத் திருநாள் விழாவிற்கு 120 கலம் நெல்லும் அவிட்டத் திருநாள் விழாவிற்கு 180 கலம் நெல்லும் என அதைப் பங்கீடு செய்து விழாக்களை நடத்தும் பொறுப்பைக் கோயில் பதிபாதமூலப் பட்டுடை பஞ்சாச்சாரியர் ஏற்றனர்.18 இதற்கான ஆவணத்தில் உவச்சர் கல்லன் செருக்கலியும் கந்தருவர் கணவதி கங்காதிரனும் மெராவியம் வாசித்த ஆச்சன் கணவதியும் வண்ணக்குக் கரணத்தாரான குமரன் அவனிசுந்தரனும் கோயிலில் வழிபாடு செய்த உக்ரபூசன் அயன், வெஞ்சிநப்பியான இராஜராஜவிடங்க பட்டன் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.

குற்றமும் தண்டனையும்

அவனீசுவரம் கோயிலில் பொன், நகைகளை மதிப்பீடு செய்யும் பணியிலிருந்த பண்ணைநல்லூரான் கொற்றங்குமரன் பணி சார்ந்து செய்த குற்றங்களுக்காக முடிகொண்ட சோழ விழுப்பேரையரால் சிறையிலிடப்பட்டார். சிறுதன அதிகாரிகள் இருமுடிசோழ மூவேந்த வேளார், பரகேசரி விழுப்பேரையர், சோழ வேளார் ஆகியோரும் நடுவிருக்கையான கடலங்குடித் தாமோதிர பட்டரும் கொற்றங்குமரனை விசாரித்து அவன் காணி உரிமைகளைக் கேட்டறிந்தனர். கோயில்சார் பணி யாளன் என்பதால் அவன் காணி உரிமை பற்றிய தகவல்களை உறுதிப்படுத்தவும் அதைக் குத்தகைக்குத் தந்தோ, விற்றோ தண்டம் கொள்ளவும் கோயில் பதிபாதமூலத்தாரை அதிகார ஓலை அனுப்பி அழைத்தார் முடிகொண்ட சோழ விழுப்பேரையர்.

கொற்றங்குடியிலும் பாளைநல்லூரிலும் அவனீசுவரத்து வண்ணக்குப் பங்காக இருந்த நிலம் காலே காணியும் புறக்கழனி ஒரு மாவும் அவ்வூரில் இருந்த இல்லமனையும் தோட்டமும் அவனீசுவரத்துத் தளிச்சேரித்19 தென்வாய் இல்லமனையும் தோட்டமும் உள்ளிட்டவற்றிற்கு 100 காசு அளிக்கவேண்டும் என முடிவாயிற்று. வண்ணக்குப் பங்கான இக்காணி உடைமைகளைக் கணக்குப் பார்த்து, அதன் மதிப்பீடாக முடிவு செய்யப் பட்ட 100 காசுத் தொகையை அளிக்குமாறு பதிபாதமூலத்தாருக்கு முடிகொண்டசோழ விழுப்பேரையர் அனுப்பிய அதிகார ஓலையை அவரது தெரிஞ்ச வலங்கை வேளைக்காரப் படையைச் சேர்ந்த அடிகள் வாரணன், நாரணன் மண்டை உள்ளிட்டார் கொணர்ந்தனர்.

வண்ணக்குக் காணியை விற்கும் முயற்சியில் ஈடுபட்ட பதிபாதமூலத்தார் அதைக் கொள்வார் யாரும் இல்லாத நிலையில் கோயில் பண்டாரத்திலிருந்து 100 காசு அளித்து அப்பங்கைக் கோயிலுக்குப் பெறவும் தளிக்கு வேண்டும் கணக்கரைத் தாங்களே இட்டுக்கொள்ளவும் முடிவெடுத்தனர். கோயில் ஸ்ரீகாரியம் வேளூர் உடையார், தேவகன்மிகள் நாராயணன் சிங்கன், கல்லசெருக்காலி உள்ளிட்ட கோயிலார் மேற்பார்வையில் எடுக்கப்பட்ட இம்முடிவுக்கேற்ப வண்ணக்குப் பங்கு கோயிலுக்கு விற்கப்பட்டதுடன் அதற்கான கோயில் காசு 100ம் விழுப்பேரையர் பண்டாரத்துக்குச் செலுத்தப்பட்டது.20

காலம்

இவ்வளாகக் கல்வெட்டுகளில் உத்தமசோழரின் 12ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டே பழைமையானது. எனில், அவனீசுவரம் பொ. கா. 981க்கு முற்பட்டதென்பதை உறுதிசெய்யலாம்.21

குறிப்புகள்
1. கூடப்பள்ளியில் பொ. கா. 14 அல்லது 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காசிவிசுவநாதர், மாதவப் பெருமாள் கோயில் உள்ளது.
2. ஆய்வு நாள்கள்: 18. 2. 2017, 18. 3. 2017.
3. ஆலமர்அண்ணல் கோட்ட அணைவுத் தூண்கள் தாமரை பெற்றுள்ளன.
4. நான்முகனுக்கு இடப்புறத் தூண் மீதுள்ள போதிகை குளவும் பட்டையும் பெற்ற தரங்கக் கைகளுடன் மாறுபட்டு விளங்குகிறது.
5. திருஎறும்பியூர் விமானத்தில் இது போன்ற பஞ்சரங்களைக் காணமுடிகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் புள்ளமங்கை ஆலந்துறையார் உள்ளிட்ட பல கோயில்களில் இவ்வகைப் பஞ்சரங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை முதல் முறையாக மாமல்லபுரம் வளியான்குட்டை இரதத்திலும் தொடர்ந்து அங்குள்ள உலக்கணேசுவரத்திலும் காஞ்சிபுரம் கயிலாசநாதர் வளாக மகேந்திரவர்மேசுவரத்திலும் காணமுடிகிறது.
6. பொக்கணப் பையைப் பல ஆலமர்அண்ணல் சிற்பங்களில் காணமுடிந்தாலும் அதனோடு இணைந்த நிலையில் நீலோத்பலம் காட்டப்பட்டுள்ளமை தமிழ்நாட்டுப் பழங் கோயில்களில் இங்கு மட்டுமே எனக் கொள்ளலாம். பொக்கணம் பற்றி விரிவாக அறியக் காண்க: டாக்டர் இரா. கலைக்கோவன், பொக்கணம், கலைமகள் , டிசம்பர் 1992.
7. சிராப்பள்ளி மாவட்டக் கோயில்களின் கொற்றவைச் சிற்பங்களுள் நிகரற்ற வடிவமைப்பினதாக இதைக் கொள்ளலாம். தமிழ்நாட்டின் காலநிரலான கொற்றவை வடிவங்கள் பற்றிய ஆய்வு இன்றியமையாதது. பல்லவப் படைப்புகளிலிருந்து ஆதித்தர், பராந்தகர் காலச் சிற்பங்கள் பெறும் உடலியல் மாற்றங்களையும் உத்தமசோழர் காலந்தொட்டு அவை நெகிழ்வு குறைந்து இறுக்கமுறத் தொடங்குவதையும் காணமுடிகிறது. அந்நிலையிலும் அவனீசுவரம் போன்ற சில கோயில்களின் கொற்றவைகள் எழிலார்ந்த உடலமைப்பால் கண்களை நிறைக்கின்றன.
8. இது ஒத்த மகரதோரண ஆடவல்லானைச் சிராப்பள்ளி மாவட்டக் கோயில்களில் திருஎறும்பியூர் எறும்பீசுவர விமானத்தின் தெற்கு மகரதோரணத்தில் காணமுடிகிறது.
9. இது போன்ற அழகியின் தனித்த சிற்பம் திருவெள்ளறைத் தாமரைக்கண்ணர் கோயில் துணைத்தளத்தில் பல்லவர் கைவண்ணமாய் இடம்பெற்றுள்ளது.
10. இத்தகு சிற்பத்தைக் காஞ்சிபுரம் வைகுந்தப்பெருமாள் கோயிலில் பேருருவ வடிவில் காணமுடிகிறது.
11. 108 ஆடற்கரணங்களில் சிவபெருமானால் விரும்பிக் கொள்ளப்பட்ட கரணங்களாகச் சிற்பிகளும் வார்ப்பறிஞர்களும் வெளிப்படுத்தியிருப்பவை மிகச் சிலவே. அவற்றுள், புஜங்கக் கரணங்கள் ஆனந்ததாண்டவமாகக் காட்சிதர, அடுத்த நிலையில் இருப்பது ஊர்த்வஜாநுதான். தமிழ்நாடு முழுவதும் தேடினால் நூற்றுக்கும் மேற்பட்ட ஜாநு சிவபெருமான்களைத் திரட்ட முடியும். ஊர்த்வஜாநு பற்றி மேலும் அறியக் காண்க: இரா.கலைக்கோவன், முழங்கால் (ஜாநு), வரலாறு 26, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய வெளியீடு, திருச்சிராப்பள்ளி, 2016, பக். 130-149.
12. சிலப்பதிகாரம் வண்ணிக்கும் பதினோராடல்களில் ஒன்றான குடக்கூத்து இரா.கலைக்கோவனால் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. காண்க: இருண்ட காலமா?, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய வெளியீடு, திருச்சிராப்பள்ளி, 2016, பக். 128- 138.
13. முற்சோழர் சிற்பங்களாக ஒரே கோயிலில் இரண்டு ஆனந்ததாண்டவக் கோலங்களைக் காண்பது அரிது. சிராப்பள்ளி மாவட்டக் கோயில்களில் அவனீசுவரம் மட்டுமே அத்தகு பெருமை கொண்டுள்ளது.
14. ARE 1992-93: 418 - 421, 423, 424, 426, 428.
15. இவ்வளாகக் கல்வெட்டுகளில் காலத்தால் முற்பட்டது உத்தமசோழரின் 12ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டாகும். இதற்கிணையான பொதுக்கால ஆண்டு 981. ஆனால், இக்கோயில் 975இல் கட்டப்பட்டதாக இங்குள்ள தொல்லியல்துறை அறிவிப்புத் தெரிவிப்பது எதன் அடிப்படையில் என்பது விளங்கவில்லை.
16. களஆய்வின்போது இக்கோலைக் கண்டறிந்தவர் பேராசிரியர் முனைவர் அர. அகிலா.
17. இத்தகு நிவந்த அளவுக் குறைப்பு இவ்வூரிலுள்ள மேற்றளியிலும் நிகழ்ந்தமையை அங்குள்ள கல்வெட்டொன்று பகிர்ந்து கொள்கிறது. ஐயாறு வடகயிலாசத்திலும் இத்தகு நிவந்தக் குறைப்புக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது.
18. இப்பிறந்தநாள் விழாக்களைக் கொற்றங்குடி, பானநல்லூர் வாழ் குடிமக்கள் நடத்தி வந்ததாகத் தவறான தகவலைத் தந்துள்ளார் திரு. வே. இராமன். மாதம் ஒரு பிறந்தநாள் விழா, தினகரன் பொங்கல் மலர், 1998, ப. 92.
19. இக்கல்வெட்டால் அவனீசுவரத்தில் கோயில்சார்ந்த தளிச்சேரி இருந்தமை தெரியவருகிறது. இங்கிருந்து நக்கன் தில்லைக்கரசு, நக்கன் மூஞ்சி எனும் இரு தளிச்சேரிப் பெண்டுகள் தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்துத் தளிச்சேரிக்கு வரவழைக்கப்பட்டுக் குடியமர்த்தப்பட்டமையை அவ்வளாகத்துள்ள முதலாம் இராஜராஜரின் தளிச்சேரிக் கல்வெட்டு தெரிவிக்கிறது. இத்தளிச்சேரிக் கல்வெட்டு அவனீசுவரத்தைப் பாச்சில் அமலீசுவரமாகவே குறிக்கிறது. SII 2: 66; மு. நளினி, இரா. கலைக்கோவன், தளிச்சேரிக் கல்வெட்டு, கழக வெளியீடு, சென்னை, 2002, பக். 13-79.
20. இத்தொகை கோயில் பண்டாரத்தில் சேர்க்கப்பட்டதாகக் கல்வெட்டறிக்கை குறித்துள்ளமை சரியன்று. கல்வெட்டின் இறுதி வரிகள் மிகத் தெளிவாக வண்ணக்கப் பங்கு கோயிலுக்கு விற்கப்பட்டதையும் விற்பனைத் தொகையான 100 காசு விழுப்பேரையர் பண்டாரத்தில் சேர்க்கப்பட்டதையும் தெரிவிக்கின்றன.
21. உத்தமசோழரின் அன்னை செம்பியன்மாதேவியும் மனைவி வீரநாராயணியும் இக்கோயிலுக்குக் கொடையளித்துள்ளமையால் இக்கோயிலை மாமியாரும் மருமகளும் சேர்ந்து கட்டிய கோயிலாகத் தம் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் திரு. வே. இராமன். மு.கு.கட்டுரை, ப. 92.
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.