http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 144
இதழ் 144 [ ஜனவரி 2019 ] இந்த இதழில்.. In this Issue.. |
தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அந்நாளைய கல்வெட்டியல் கருத்தரங்குகள் ஆய்வாளர்களும் அறிஞர்களும் சந்திக்கும் களங்களாகும். அங்குதான் கல்வெட்டறிஞர் திரு.ஐராவதம் மகாதேவனை முதன் முதலாகப் பார்க்கும் வாய்ப்பமைந்தது. மதிய உணவின்போது புலவிருந்தக வாயிலில் அவர் நின்றிருந்தார். சுற்றிலும் பெருங்கூட்டமாய்க் கல்வெட்டு, தொல்லியல் ஆய்வர்கள். தினமணி ஆசிரியராக அப்போதுதான் அவர் பெறுப்பேற்றிருந்தார். ஏதேதோ கேள்விகள். அனைத்திற்கும் மலர்ந்த முகத்துடன் பதிலளித்துக் கொண்டிருந்தார். நான் சற்றுத் தொலைவில் நின்றபடி அவரைப் பார்த்தேன். அகன்ற நெற்றி; அறிவார்ந்த கண்கள்; குழந்தைத்தனமான முகம்; எளிமையான ஆடை; இயல்பான பேச்சு; பார்வை பேசுபவர்களிடம் மட்டுமே இருந்தது. பார்த்துக் கொண்டிருந்த சில மணித்துளிகளிலேயே அவரது பழகும் பாங்கு எனக்குப் பிடித்துவிட்டது. நெருங்கி உரையாட விழைந்தும் அறிமுகம் இல்லாமையினால் தயங்கித் திரும்பினேன்.
தினமணி கதிர் தொடர்ந்து என் கோயிற்கலைக் கட்டுரைகளை வெளியிட்டுக் கொண்டிருந்த காலம்அது. அதனால், சென்னை செல்லும்போதெல்லாம் தினமணி அலுவலகம் சென்று, 'கதிர்' ஆசிரியர் திரு. கி. கஸ்தூரிரங்கனையும் அங்கு உதவி அசிரியராக இருந்த திரு. திருப்பூர் கிருஷ்ணனையும் சந்தித்து உரையாடி வருவேன். அப்படி ஒருமுறை சென்றிருந்தபோதுதான். கஸ்தூரிரங்கன், 'ஆசிரியரைப் பார்க்கின்றீர்களா?' என்று கேட்டார். உடன் ஒப்புக்கொண்டேன். தொலைப்பேசியில் என்னை ஆசிரியருக்கு அறிமுகப்படுத்திய கஸ்தூரிரங்கன், என்னை அவர் அறைக்கு ஆற்றுப்படுத்தினார். ஐராவதம் மகாதேவனை நேருக்குநேர் மிக அருகில் சந்தித்த அந்த வாய்ப்பு என் நெஞ்சில் நிறைந்தது. என்னைப் பற்றி வினவினார். சொன்னேன். அவர் கட்டுரைகளைப் படித்திருந்தமையால் அவை பற்றிக் கூறி மகிழ்ந்தேன். தினமணி கதிரில் தொடர்ந்து எழுதுவது குறித்துச் சொன்னதும், 'படித்திருக்கிறேன்; நல்ல தமிழ்நடை. தொடர்ந்து எழுதுங்கள்' என்று உற்சாகப்படுத்தினார். அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டுமென்று ஏதோ ஒன்று எனக்குள் சொல்லியது. தினமணியில் ஐராவதம் மகாதேவன் பல புதுமைகளைச் செய்தார். இலக்கியத்திற்கும் அறிவியலுக்குமென இரண்டு இணைப்புப் பகுதிகளை உருவாக்கினார். அப்பகுதிகளில் வெளியான கட்டுரைகள், செய்திகள் குறித்த என் கருத்துக்களை தினமணிக்குத் தொடர்ந்து எழுதிவந்தேன். அவற்றை வெளியிட்டமையுடன், அறிவியல் சுடருக்கான கேள்வி பதில் பகுதியில் வாசகர்கள் அனுப்பும் மருத்துவஞ் சார்ந்த கேள்விகளுக்குரிய பதிலளிக்கும் பொறுப்பையும் மகாதேவன் எனக்களித்தார். அவர் ஆசிரியர் பொறுப்பிலிருந்தபோது தினமணிசுடரில் வெளியான 'குளிப்பதற்கு நேரமில்லை' என்ற என் கட்டுரை அமரர் தவத்திரு அடிகளார் உள்ளிட்ட அறிஞர்களின் பாராட்டுக்களைப் பெற்றுத்தந்தது. தவத்திரு அடிகளார் பெருமானின் அருள் நோக்கில் ஆட்படும் பேறும் அந்தக் கட்டுரை வழிதான் எனக்கு அமைந்தது. புதிதாக வெளியாகியிருந்த என் 'பழுவூர்ப் புதையல்கள்' நூலுடன் மகாதேவனைக் காண தினமணி அலுவலகம் சென்றிருந்தேன். அவர் தலையங்கம் எழுதிக்கொண்டிருந்தமையால் சற்று நேரம் காத்திருக்குமாறு ஆயிற்று. அவரே அழைத்தார். நூலைத் தந்தேன். நூல் குறித்து அவர் கருத்தறியும் ஆர்வத்தை வெளிப்படுத்தினேன். நான் அடுத்த நாளும் சென்னையில் இருப்பேனா எனக் கேட்டறிந்து, வரச் சொன்னார். தேர்வெழுதிய மாணவன் மனநிலையில்தான் சென்றேன். 'பொதுவாகவே இப்போது இளைஞர்கள் நன்றாக எழுதுகிறார்கள். அவர்கட்கு வாய்ப்புகள் பெருகியுள்ளன. இந்த நூல் நன்றாக வந்துள்ளது. விவாதங்கள், கருத்துக்கள், சொல்லி இருக்கும் முறை, சான்றுகள், நடை எல்லாம் நன்றாக உள்ளன. கருத்து மாறுபாடுகளைக் குறிக்கும்போது மட்டும் இப்போதிருக்கும் நிலையினும் சற்று மென்மையாகக் கூறினால் நல்லதென்று நினைக்கிறேன்' என்று கூறி நூலைத் திருப்பித் தந்தார். 'நூல் உங்களுக்குத்தான்' என்று சொல்லி விட்டு வெளியில் வந்தேன். அவருடைய பாராட்டுக்களைவிட இறுதியில் வெளிப்பட்ட அந்த வழிகாட்டல்தான் என்னை ஆட்கொண்டது. அவர் அறையிலிருந்து வெளியேறிய அந்த நொடியில் தீர்மானித்தேன், 'இனி எத்தகு கருத்துப் பிறழ்வுகளைச் சந்தித்தாலும் சரி, மென்மையாகவே மறுக்க வேண்டும்.' தினமணியில் ஐராவதம் மகாதேவன் ஆசிரியராக இருந்த சில ஆண்டுகள் தினமணியின் பொற்காலம். தமிழுக்கும் அது வளர்பிறைக் காலமே. தமிழண்ணல் தொடங்கிப் பல தமிழ் அறிஞர்கள் அருமையான கட்டுரைகளைத் தமிழ்மணியில் பதிவுசெய்தனர். கல்பாக்கம் சீனிவாசன், மருத்துவர் சு. நரேந்திரன், கே. என். இராமச்சந்திரன், திரு. இராமசுந்தரம் உள்ளிட்ட பல அறிவியல் தமிழ் அறிஞர்கள் அறிவியல் சுடரைச் செழுமைப்படுத்தினர். தமிழில் அறிவியல் கட்டுரைகளைப் பலவாய்ப் படைக்க எனக்கும் சுடர் பெருமளவில் உதவியது. திறமையை மட்டுமே கருத்தில் கொண்டு நடத்தியதால் மகாதேவனின் உழைப்புப் படித்தவர் இடையே தினமணியை அழுந்த நிலை நிறுத்தியது. தமிழ் நாளிதழ் படிக்காத பலர் தினமணி வழித் தமிழ் நாளிதழ் உலகின் அறிமுகம் பெற்றதை நானறிவேன். டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் அந்தக் காலக்கட்டத்தில் பொதுமக்களுக்கான வரலாற்றுச் சொற்பொழிவுகளை திங்கள்தோறும் நடத்திவந்தது. ஏதேனும் ஒரு திங்கள் பொழிவாற்ற வருமாறு மகாதேவனை அழைத்திருந்தேன். அவரும் ஒப்புதலளித்தார். மாலையில் இரண்டு மணிநேரம் தினமணி வாசகர்களுடன் கலந்துரையாடவும் பின் சற்று இடைவெளிவிட்டு பிராமி கல்வெட்டுகள் பற்றிப் பேசுவதாகவும் ஏற்பாடாயிற்று. தம் துணைவியாருடன் வந்திருந்த மகாதேவன் என் இல்லத்தில் உணவருந்தியதைப் பெருமையாகக் கருதினேன். வாழ்க்கை முழுவதும் தமிழ் பிராமி கல்வெட்டுகளைத் தேடி நடந்த அப்பெருந்தகையின் திருவடிகள் பதியும் பேற்றை என் இல்லம் பெற்றது. அன்று நடந்த இரண்டு நிகழ்வுகளிலும் பங்கேற்பாளர்கள் முன் பலமுறை என்னைப் பெருமைப்படுத்திப் பேசிய அவர் பெருந்தன்மை என்னை நிறைத்தது. ஒருசொல் சொல்லிப் பாராட்டவே பலமுறை சிந்திக்கும் பேராசிரியர்களுக்கு இடையே உண்மையான உழைப்பை மதித்துப் போற்றும் அவர் மாறுபட்ட மனிதராய்த் தோன்றினார். என்னையும் என் வாழ்வரசியையும் அவர்கள் பெரிதும் அன்பு பாராட்டி வாழ்த்தியது நேற்று நடந்தது போல் நினைவில் உள்ளது. வாசகர்களின் பல்வேறு வினாக்களைச் சரியான விடைகளுடன் எதிர் கொண்ட அவருடைய ஆசிரிய ஆளுமையும் பிராமி கல்வெட்டுகளைப் பற்றிய அவருடைய உழைப்பின் பதிவும் தினமணியின் மறுமலர்ச்சி வழி என்னில் உருவாகியிருந்த அவர் தொடர்பான மதிப்பீட்டைப் பன்மடங்காக உயர்த்தின. உலகத்தமிழ் மாநாட்டிற்காகத் தஞ்சாவூர் சென்றிருந்தபோது மகாதேவனைக் கருத்தரங்க அவையில் சந்தித்தேன். திரு. பாலாஜி படித்த கட்டுரையொன்றில் காணப்பட்ட கருத்துப் பிறழ்வைச் சுட்டியபோது, என்னை யாரென்று அறிமுகப்படுத்திக்கொள்ள அமர்வுத்தலைவர் அறிவுறுத்தினார். அப்போது அவையிலிருந்த மகாதேவன், என்னைப் பெயர்கூறி அழைத்து, 'இயக்குநர், டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்' என்று அறிமுகம் செய்து கொள்ளுமாறு சொல்ல, அதுவே எனக்கு அறிமுகமானது. இரண்டாம் முறையாக அவரது பெருந்தன்மை என்னை ஆட்கொண்டது. எத்தனை பேருள்ளம் என்று வியந்தேன். 'வரலாறு' இதழ் தொடங்கிய பிறகு அதன் புரவலர் உறுப்பினரான மகாதேவன், வரலாறு இதழிற்கு இயன்ற போதெல்லாம் கட்டுரைகள் வழங்கிவந்தார். சிறிய அளவில், ஆனால் புதிய கருத்து மலர்வுகளுடன், படிப்பவர்க்கு எளிதில் விளங்குமாறு அவர் கட்டுரைகள் அமைந்தன. எங்கள் மையத்தில் பொழிவாற்ற இரண்டாம் முறையாக அவரை அழைத்திருந்தேன். வந்திருந்தார். சிந்துவெளி நாகரிகச் சுவடுகள் பற்றிய உரை. கலந்துரை நேரத்தில் பல கேள்விக் கணைகள். உணர்வு வயப்படாமல் பொறுமையாக அனைத்துக் கேள்விகளுக்கும் விடைதந்தார். அவரது அடக்கம், தணிவு, எத்தகு வினாவையும் எளிமையாக எதிர்கொள்ளும் திறன் ஆகியன என்னுள் ஆழப்பதிந்தன. 'வரலாறு' இதழால் எங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. அப்பெருந்தகையுடன் அடிக்கடி தொலைப்பேசியில் உரையாடும் வாய்ப்பமைந்தது. தம்முடைய வாழ்நாள் பணியான, 'Early Tamil Epigraphy'ஐ அவர் உருவாக்கிக் கொண்டிருந்த காலம் அது. ஒரு தவம் போல அப்பணியில் ஈடுபட்டிருந்தார். கருவைச் சுமக்கும் ஒரு தாயின் எதிர்பார்ப்பும் எச்சரிக்கை உணர்வும் நலநோக்கும் அவரிடம் இருந்தன. தம் உழைப்பையும் நூல் வரவிருக்கும் அமைப்பையும் என் போன்றோர் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளையும் அவ்வப்போது பகிர்ந்துகொள்வார். அவரது உழைக்கும் ஆற்றல், இயன்றவரையில் பிழைகளில்லாமல் நூலைக் கொணர அவர் மேற்கொண்ட முயற்சிகள், பலர் கருத்துரைகளையும் கேட்டுத் தம் நூலை ஓர் உன்னதப் பதிப்பாக வெளிக்கொணரக் கருதிய அவரது பண்பு ஆகியன இன்றைய ஆய்வாளர்கள் நெஞ்சில் நிறுத்திக் கொள்ளத்தக்கன. பொறாமை, தாழ்வு மனப்பான்மை, இயலாமை, தவறான போட்டியுணர்வு காரணமாகப் பிற ஆய்வாளர்களைப் பற்றிப் பொய்யாகவும் புறம்பேசியும் மகிழ்ந்திடுவோர், மகாதேவனின் பெருந்தன்மையை முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும். அவரது பெருந்தன்மைக்குப் பல சான்றுகளை முன்வைக்கலாமெனினும் இரண்டைச் சுட்டினால் போதுமென்று நினைக்கிறேன். பிராமி, வட்டெழுத்துக் கல்வெட்டுகளை மீளாய்வு செய்த காலத்துச் சிராப்பள்ளி மலைக் கல்வெட்டுகளையும் அவர் ஆராய வேண்டியிருந்தது. அந்தப் பணிக்கான முன்னேற்பாடுகளை என் பொறுப்பில் விட்டிருந்தார். எங்கள் ஆய்வு மையத்திலிருந்து ஒரு பங்கேற்பாளர் அவசியம் வர வேண்டுமெனப் பணித்திருந்தார். அதனால், பேராசிரியர் முனைவர் மு. நளினி அவர் குழுவில் பங்கேற்றுச் சிராப்பள்ளி மலை ஆய்விற்குச் சென்றார். அங்கு, 'அகரம் குசலன்' எனும் வட்டெழுத்துக் கல்வெட்டைத் தற்செயலாக நளினி கண்டுபிடித்தார். அந்தக் கண்டுபிடிப்பு குழுவின் கண்டுபிடிப்பாகவே கருதப்படவேண்டுமெனினும், மகாதேவன் அந்தப் பெருமையை முழுவதுமாய் நளினிக்கே தந்தார். அன்றிரவு அவரைக் காணச் சென்றபோது, 'நளினி கண்டுபிடித்தார்' என்று தொடங்கிக் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவர் ஒத்துழைப்பையும் பெருமையையும் அவர் எடுத்துச் சொல்லிய பாங்கு, 'அடடா இந்தக் குழுவில் நாம் இடம்பெறாது போனோமே' என்று என்னை வருந்த வைத்தது. திரு. மகாதேவன், சிராப்பள்ளி மலைக்கோட்டையைப் படமெடுத்துத் தருமாறு என்னிடம் கேட்டிருந்தார். அவர் வேண்டுகோளைத் தலைமேல் ஏற்று ஆண்டார் தெரு வீடுகளில் ஒன்றைத் தேர்ந்து, வீட்டார் அநுமதி பெற்று, மாடிக்குச் சென்று, அங்கிருந்து சிராமலைப் பிளவு நன்கு தெரிகிறதா என்பதை உறுதி செய்துகொண்டு படங்கள் எடுத்தனுப்பினேன். அவற்றுள் ஒரு படம் Early Tamil Epigraphy நூலில் வெளியாகியுள்ளது. படமெடுக்கச் சொன்னபோதும் படம் எடுத்து அனுப்பியபோதும் அவர் படம் கேட்கிறார், நாம் அனுப்புகிறோம் என்று மட்டும் கருதியிருந்தேன். நூல் வெளியாகி அதைப் படித்தபோதுதான், அவர் எதற்காக என்னை மலைக்கோட்டையைப் படமெடுக்கப் பணித்தார் என்பதறிந்தேன். என் கண்கள் குளமாயின. 'எத்தனை அன்பு இந்த மனிதருக்கு, எத்தனை பெரிய உள்ளம்!' என்று குழைந்தேன். அவர் குழுவில் இடம்பெற்றதால் எங்கள் மையத்தின் பெயரும் நளினியின் பெயரும் இணையற்ற அவர் நூலில் இடம்பிடித்தன. குழுவில் பங்கேற்காமையாலும் பிராமி கல்வெட்டுகளோடு அதிகத் தொடர்பில்லாமையாலும் என் பெயர் அந்த நூலில் பதிவாக வாய்ப்பில்லாதிருந்தது. என் பெயரும் அந்த நூலில் இடம்பெற வேண்டுமெனக் கருதியோ என்னவோ அப்பெருந்தகை படமெடுக்கும் பணி தந்து என்னையும் நூலில் பதிவுசெய்தார். உழைப்பையும் உண்மைத் தன்மையையும் மதிக்கும் அந்தப் பண்பு என் நெஞ்சில் நீங்கா இடம்பெற்றது. என் வாழ்வின் உளம் நிறைத்த நாள்களுள் ஒன்று அவரது Early Tamil Epigraphy நூல் வெளியிடப்பட்ட நாள். மடல் வழியும் தொலைப்பேசியும் விழாவில் பங்கேற்குமாறு அன்பொழுக அழைத்தார். அவர் அழைத்ததை எங்கள் ஆய்வு மையத்திற்குக் கிடைத்த பெருமையாகவும் பேறாகவும் கருதி மகிழ்ந்தேன். அரங்கில் நுழைந்ததும் நூலைக் கையில் தந்தார். எத்தனையோ நூல்களை வணங்கத்தக்க பெரியவர்கள் பலரிடமிருந்து பெற்றிருக்கிறேன். ஆனால், இந்த நூல் தரப்பட்ட விதமும் அதன் முதற் பக்கத்தில் எழுதப்பட்டிருந்த சொற்களும் என்னை நெகிழவைத்தன. 'To my dear friend and fellow epigraphist Dr. R. Kalaikkovan, with affectionate regards, Iravatham Mahadevan.' சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைவிலிருந்து அவரைப் பார்த்து மகிழ்ந்த அந்த நிலைக்கும், இன்று அப்பெருந்தகையின் நண்பனாக அழைக்கப்பெறும் இந்த நிலைக்கும் இடையில்தான் எவ்வளவு மாற்றங்கள். என் வாழ்க்கையின் பெரும் பேறான அழைப்பு அதுவென உணர்ந்தேன். அதற்கு முன் எப்போதும் ஏற்பட்டிராத உணர்வுப் பெருக்கில் நிலைகொள்ளாதிருந்தேன். மேடையில் என் பெயர் அழைக்கப்பட்டபோது என் உணர்வுகளையே உரையாக்கினேன். நூலை வாங்கியதும் என் கைகள் புரட்டிய பக்கங்களில் பளிச்சிட்ட அந்த மேதையின் உழைப்பையும் அந்த உழைப்பின் கனிவையும் என்னைப் போலவே அவையினரும் நன்கு உணர்ந் திருந்தமையால், என்னால் அவர்களை நெருங்கமுடிந்தது. என் வேண்டுகோள் மிகச் சரியானதென மதித்த அனைவரும் எழுந்து நின்று கையொலித்து அவர் உழைப்பைப் போற்றிச் சிறப்பித்தனர். அடுத்த நாள் தினமணி பெட்டிச் செய்தியாக அரங்கின் அந்த நிகழ்வைத் தனிப்பட வெளியிட்டு அவரைப் பெருமைப்படுத்தியிருந்தது. நூற்றுக்கணக்கான பேராசிரியர்களோடும், கணக்கற்ற ஆய்வாளர்களோடும் மிகச்சிறந்த பல்துறைசார் அறிஞர்களுடனும் பழகும் வாய்ப்பு இறையருளால் எனக்குக் கிடைத்திருக்கிறது. அவர்களுள் சிலர் அறிவிற் சிறந்தவர்கள். ஆனால், அகந்தை நிறைந்தவர்கள். சிலர் அன்பு கமழும் உள்ளத்தர். ஆனால், ஆற்றல் அற்றவர்கள். சிலர் பெரும் பெயருடன் இருப்பவர்கள். ஆனால், ஆழமற்றவர்கள். இந்தப் பெருங் கூட்டத்தில் தொழத்தக்கவர்களாய் விளங்குவார் மிக மிகச் சிலரே. அவர்களுள் ஐராவதம் மகாதேவன் குறிப்பிடத்தக்கவர். நாற்பதாண்டுகளுக்கும் மேலாக பிராமி கல்வெட்டுகளுக்கு என்றே தம் வாழ்வை அர்ப்பணித்து, மிகப்பெரும் புதையலாய் Early Tamil Epigraphy நூலை அவர் தமிழ்ச் சமுதாயத்திற்குத் தந்திருக்கிறார். 'இந்தப் பணிக்காக அவரைத் தமிழ்நாட்டரசும் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களும் போட்டிபோட்டுப் பாராட்டி மகிழ்ந்திருக்க வேண்டும். உருப்படியான செயல் எதையும் எப்போதும் செய்வதில்லை என்பதுதான் இங்கு எழுதப்படாத விதியாக உள்ளதே' எனறு என்று வரலாறு ஆய்விதழின் 17ஆம் தொகுதியில் நான் எழுதியிருந்தேன். என் போன்று ஒலித்த பல்வேறு குரல்களுக்கு விடையிறுக்குமாறு தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகம் அப்பெருந்தகைக்குச் சிறப்பு முனைவர் பட்டமளித்துப் பெருமை கொண்டது. தமிழ்நாடு அரசும் நடுவணரசின் தாமரைத்திரு விருதுக்கு அவர் பெயரைப் பரிந்துரைத்து அதை அவர் பெறுமாறு செய்தது. வரலாறு ஆய்விதழ் பொருள் முட்டுப்பாடுகளால் தளர்ந்து வெளிவருவதறிந்து அதற்கு உதவ முன்வந்தார் மகாதேவன். திரு. எம். ஜே. எஸ். நாராயணன் இந்திய வரலாற்றாய்வுக் கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்றமை அறிந்ததும் வரலாறு இதழ்களை அவருக்கு அனுப்பிவைத்து, அவருடன் பலமுறை தொலைப்பேசி, என்னையும் தொடர்பு கொள்ளச் செய்து, 'வரலாறு சிறந்த ஆய்விதழ். அது எக்காரணம் கொண்டும் தளரக்கூடாது' என்று ஊக்கப்படுத்திப் பெரும் போராட்டத்திற்கிடையில், அக்கழகத்தின் கருணைப் பார்வை வரலாறு இதழின் பக்கம் திரும்புமாறு செய்த பெருமை அவருக்கே உரியது. அந்தப் போராட்டத்தின் பாடுகளை அருகிருந்து பார்த்தவன் என்ற முறையில் அவரிடம் எனக்கு நன்றிக் கடப்பாடு உண்டு. மகாதேவன் தாம் உழைத்து ஈட்டிய செல்வத்தின் பெரும்பகுதியை, வீடு உட்பட ஏழை மாணவர்களின் கல்விக்காக வழங்கியவர். இது குறித்து அவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் நானறிவேன். மிகப் பிற்பட்ட பகுதியில், மிகப் பிற்பட்ட மாணவர்களுக்காக மேல்நிலைப் பள்ளியொன்று கட்ட விழைந்த அவரால், கல்வித்துறை நடைமுறைகளுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அதனால், தம் திட்டத்தின் ஒரு பகுதியை தகுதிக்குரிய மாணவர்களின் உயர்கல்விக்கான அறக்கட்டளை நிதியமாக மாற்றி அமைத்தார். அதன் விளைச்சலை திறனார்ந்த ஏழை மாணவர்கள் பலர் பெற்று வாழ்க்கையில் உயர்வதை நான் அறிவேன். வாழ்நாள் முழுவதும் தாம் சேர்த்த அரிய நூல்களை அவை வீற்றிருந்த அலமாரிகளுடன் தம் செலவில் உ. வே. சாமிநாத ஐயர் நூலகத்திற்குக் கொண்டு சேர்த்து, அவை ஆய்வாளர்களுக்குப் பயன்படுமாறு செய்த பெருமைக்குரியவர் மகாதேவன். காழ்ப்பும் கயமையும் நிரம்பிய ஆய்வுலகத்தில், தம் கால அறிஞர்களை நட்பு பாராட்டி நேசிக்கும் பண்பு வெகுவாகக் குறைந்துவருவது கண்கூடு. ஒருவர் எழுத்திலுள்ள தவறைச் சுட்டினாலே முகத்திற்கு நேரே குழைந்தும் முதுகிற்குப் பின் புறம்பேசியும் உட்பகை பாராட்டும் ஆய்வாளர்கள் நடுவே, மகாதேவன் தொழத்தக்கவராய் உவந்து பின்பற்றத்தக்கவராய் உயரிய பண்புகளின் அடையாளமாய்த் திகழ்ந்ததை இங்குப் பதிவுசெய்ய விழைகிறேன். தாம் உழைத்து ஈட்டிய பொருளால் தம் பெயரிலோ, தம் துணைவியார் பெயரிலோ தம்மைப் பெற்றவர்கள் பெயர்களிலோ அறக்கட்டளைகள் அமைக்காமல், தம் கால ஆய்வறிஞர்களான திரு.தி. நா. இராமச்சந்திரன், கூ. ரா. சீனிவாசன் ஆகியோர் பெயரால் தமிழகத் தொல்லியல் கழகத்திலும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்திலும் அறக்கட்டளைகள் அமைத்த அப்பெருந்தகையின் பெருந்தன்மையும் அறிவைப் போற்றி ஆராதிக்கும் அவரது பெரும் பண்பும் நினைக்குந்தோறும் என்னை நெகிழவைப்பன. மகாதேவன் அணுகுதற்கும் பழகுதற்கும் எளிமையானவர்; அவர் எழுத்தும் அவரைப் போலவே எளிமையானது. கவர்ச்சியாகவோ, கம்பீரமாகவோ பேசவேண்டும் என்று அவர் நினைப்பதில்லை. ஆனால், அவர் உழைப்பின் கம்பீரமும் அன்பின் கவர்ச்சியும் அவர் பேசும்போது அவையைக் கட்டிப்போட்டு விடுகின்றன. 'நீங்கள் சொன்னால்தான் உலகம் ஏற்கும்' என்று அரியலூர் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் திரு. இல. தியாகராசன் தமிழ்ப் பல்கலைக்கழகக் கருத்தரங்கொன்றில், அறிஞர்கள் முன்னிலையில் வெளிப்படையாக அவரிடம் வைத்த வேண்டுகோள் உலகளாவிய அவர் உன்னதம் புரியவைக்கும். வரலாறு டாட் காம் என்ற இணையதள வரலாற்றிதழ் ஆசிரியர் குழுவினர் அவரைச் சந்திக்க விழைந்தபோது, அவரிடம் அனுமதி பெற்று, வாய்ப்பேற்படுத்தித் தந்தேன். அக்குழுவினருடன் உரையாடிய பிறகு எனக்கு எழுதிய கடிதத்தில் என்னை, 'அன்புள்ள பேராசிரியர் இரா.கலைக்கோவன் அவர்கட்கு' என்று விளித்திருந்தார் மகாதேவன். அதிர்ந்து போனேன். ஏனிந்த மாற்றம் என்று வருந்தவும் செய்தேன். வரலாறு டாட் காம் குழுவினர் எங்களிடம் பயிற்சி பெற்று வரலாற்றாய்வில் வளர்ந்து வரும் நிலை கண்டே அவர் இப்படி அழைத்திருக்கிறார் என்பது புரிந்ததும் என்னைப் பழைய நிலைக்கே கொண்டுபோகச் சொல்லி அன்புடன் அவரிடம் வேண்டுகோள் வைத்தேன். பேராசிரியர் கூட்டத்துள் ஒருவனாக இருப்பதைவிட ஐராவதம் மகாதேவனின் நண்பர்களுள் ஒருவனாக இருப்பதுதானே பெருமை. எத்தனை பழந்தமிழ் எழுத்துக்களைத் தடவிப் பார்த்த விரல்கள் அவருடையவை! எத்தனை எத்தனை மலைகளை தமிழ்க் கல்வெட்டுகளுக்காக ஏறி அளந்தவை அந்தப் பாதங்கள்! பிராமி எழுத்துக்களைப் பிழையின்றிப் படிக்கவும் பொருத்தமுறப் பொருள் காணவும் பயின்ற சுடர்களல்லவா அவர் கண்கள்! உற்சாகப்படுத்தி உயர வைப்பதன்றி வேறொன்றும் சொல்லத் தெரியாத சொற்கள் பிறக்கும் இதழ்களல்லவா அவருடைய இதழ்கள்! அந்தக் கூரிய பார்வை, அறிவார்ந்த நெற்றி, அன்பான அணைப்பு, எந்த இடத்திலும் யார் முன்னிலையிலும் உரியவர்களை உரியவாறு பாராட்டத் தயங்காத பேருள்ளம்! இப்படிப்பட்ட ஓர் இனியவரின் நட்பினும் பெரும் பேறா பேராசிரியர் அழைப்பு. ஒருக்காலும் இல்லை. தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வர்கள் அவர் உழைப்பையும் அறிவாற்றலையும் கொடையையும் மதிப்பது உண்மை எனில், அவர் பணிகளைப் பற்றியும் அவரைப் பற்றியும் தகுதி சான்றதொரு நூலை ஒன்றிணைந்து உருவாக்கிடல் வேண்டும் என்ற விதையை Early Tamil Epigraphy நூல் வெளியீட்டு விழாவின்போதே விதைக்க முயன்றேன். தமிழ்ப் பல்கலைக்கழகக் கருத்தரங்கின்போதும் இந்த ஆர்வத்தைத் தமிழகத் தொல்லியல் கழகத்தாருடன் பகிர்ந்து கொண்டேன். இந்தப் பணி தொடங்கும் நாளே மகாதேவனின் மகத்தான உழைப்பிற்கு இந்த மண் பதில் மரியாதை செய்யும் நாள் என்ற என் கருத்தை உளங்கொண்ட வரலாறு டாட் காம் மின்னிதழ் ஆசிரியர் குழுவினர் தாங்கள் உழைத்து ஈட்டிய ஊதியத்தில் ஐராவதி என்ற பெயரில் மகாதேவனுக்குப் பணிப்பாராட்டு நூல் ஒன்றை வெளிக்கொணர்ந்தனர். அந்த நூல் இன்றைய இளைஞர் சமுதாயம் அறிஞர்களை மதிக்கிறது என்பதற்கான அடையாளம். இப்போது அந்நூல் இணையதளத்தில் அனைவர் பார்வைக்கும் வைக்கப்பட்டுள்ளது. வரலாறு ஆய்விதழின் ஒவ்வொரு தொகுதியையும் முழுமையாகப் படித்துத் தம் கருத்துக்களை ஒரு மடலாகப் பகிர்ந்துகொள்வது அவர் வழக்கம். வரலாறு இதழ் படிப்போர் பெரும்பாலான தொகுதிகளில் அன்புள்ள உங்களுக்குப் பகுதியில் அவர் மடல்கள் இடம்பெற்றிருக்கக் காணலாம். சென்னையில் நிகழ்ந்த வரலாறு ஆய்விதழின் 25ஆம் தொகுதி வெளியீட்டு விழாவில் பங்கேற்று மைய ஆய்வர்கள் பேராசிரியர்கள் நளினியையும் அகிலாவையும் உளமாரப் பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிச் சிறப்பித்த அப்பெருந்தகையின் ஆய்விதழ் குறித்த கருத்துரை என்றென்றும் என் நெஞ்சில் நிலைத்திருக்கும். அவரது Early Tamil Epigraphy செம்மொழி நிறுவனத்தின் செம்பதிப்பாக வெளியிடப்பட்ட நாள் என் நினைவில் என்றும் இருக்கும். அப்போதைய தமிழக ஆளுநர் மாண்பமை திரு.ரோசய்யாவால் ஆளுநர் மாளிகை அரங்கில் 13. 11. 2014 அன்று அந்நூல் வெளியிடப்பட்டது. நூலின் படியைப் பெறச் செம்மொழி நிறுவனம் என்னை அழைத்திருந்தது. அரங்கில்தான் திரு.மகாதேவனைச் சந்தித்தேன். அவரும் நானும் இணையாகச் சென்று ஆளுநரின் வல, இடப்புறங்களில் நிற்க, நூலை வெளியிட்ட ஆளுநர் இருவர் கைகளிலும் ஆளுக்கொரு படியளித்தார். அவருடன் இணைந்து சென்று அவர் நூலைப் பெற்ற பெருமையை இன்றும் உணர்கிறேன். என் வாழ்க்கையின் மிக அரிய நிகழ்வுகளுள் அதுவும் ஒன்று. ஊர் திரும்பியதும் நூலைப் பிரித்துப் பார்த்தேன். முதற் பதிப்பின் திறனாய்வுகளிலிருந்து சில பகுதிகள் என்ற தலைப்பின் கீழ் 11 அறிஞர்களின் கருத்துக்கள் பதிவாகியிருந்தன. அவற்றுள் வரலாறு இதழில் நான் பதிப்பித்திருந்த திறனாய்வுப் பகுதியும் இடம்பெற்றிருந்தமை என் கண்களை ஈரமாக்கியது. சென்னை செல்லும் வாய்ப்புகள் குறைவென்பதால் அவரது இல்லத்திற்கு மிகச் சில முறையே செல்ல வாய்த்தது. எங்கள் தந்தையார் டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் நூற்றாண்டு விழாச் சிறப்புக் கூட்டத்திற்கு அவரை அழைக்க நானும் என் இளவல் பேராசிரியர் மா. ரா. அரசுவும் அவர் இல்லம் சென்றபோது அவர் காலத்துத் தமிழ்மணி பற்றி அரசு எழுதியிருந்த கட்டுரை குறித்து நெடுநேரம் உரையாடினார். அக்கட்டுரை எந்த அளவிற்கு அவரை ஈர்த்திருந்தது என்பதை அவ்வுரையாடல் தெரிவித்தது. அவர் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகளை மீளாய்வு செய்து திரும்பியிருந்த சூழலில் நானும் நளினியும் அவரைக் காணச் சென்றிருந்தோம். தாம் எடுத்த மசிப்படிப் படங்களைக் காட்டி, அக்கல்வெட்டுக் குறித்த தம் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதோடு, பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகளை நாங்கள் ஆய்வு செய்யவேண்டும் என விழைந்தார். நாங்கள் அப்போது தமிழகக் குடைவரைகள் பற்றிய தரவுகளைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தமையால் அவரது வேண்டுகோளை உடன் ஏற்கக்கூடவில்லை. குடைவரைப் பணி முடித்து, அவர் வழிகாட்டலில் பூலாங்குறிச்சிக் கல்வெட்டாய்வை மேற்கொள்ளக் கருதியிருந்தோம். ஆனால், அதற்குள் அவர் நலம் குன்றியது. அவரைச் சந்திப்பதுகூட அவர் நலக் காப்புக்குத் தொல்லையாகலாம் எனக் கருதி பொறுத்திருந்தோம். 2014க்குப் பிறகு அவரது கவனமெல்லாம் சிந்துசமவெளி எழுத்தியல் குறித்த ஆய்விலேயே நிலைத்தது. அவ்வப்போது அவர் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரைகளின் படிகளை எனக்கும் நளினிக்கும் அனுப்பிப் படித்துக் கருத்துரைக்குமாறு எழுதுவார். தாம் கூறுவது அனைத்தும் சரி என்று எப்போதும் அவர் கருதியதில்லை என்பதால், நம் கருத்துக்களுக்கு மிகுந்த மதிப்பளிப்பார். கடந்த மூன்றாண்டுகளில் அவர் வெளியிட்ட கட்டுரைகள் தொடர்பான என் எண்ணங்களை மிக வெளிப்படையாக அவரிடம் பகிர்ந்துள்ளேன். குடியரசுத் தலைவரின் செம்மொழித் தமிழறிஞர் விருதை நான் பெற்றபோது கல்வெட்டுலகிலிருந்து வெளிப்பட்ட முதல் பாராட்டு அவருடையதுதான். தொலைப்பேசியில் தொடர்புகொண்டதோடு நில்லாமல், ஒரு மடலும் அனுப்பியிருந்தார். அம்மடலை வரலாறு 27ஆம் தொகுதியில் பதிவுசெய்தோம். அம்மடலின் ஒவ்வொரு சொல்லும் அவரின் பெருந்தன்மை காட்டவல்லன. தம் உடல்நலம் குறைந்துவிட்டதாகவும் எண்பதுக்குப் பிறகு தளர்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும் பேசும்போதெல்லாம் சொல்வார். ஓராண்டுக்கு முன்புவரை திங்களுக்கு ஒரு முறையாவது அவரே அழைத்துப் பேசுவார். அன்பும் கனிவுமாய் நட்பு தோய்ந்த அவரது குரல் அளவற்ற உற்சாகத்தையும் உழைக்கும் ஆற்றலையும் எங்களுக்குத் தந்தது. இனி அந்தக் குரலை, அவரது அன்பை, இணையற்ற அவரது பெருந்தன்மையை அனுபவிக்கும் வாய்ப்பில்லை. என் ஆய்வு வாழ்க்கையின் நிறைவான பக்கங்களை எழுதிய மிகச் சிலருள் அவரும் ஒருவர். நெஞ்சிருக்கும் வரை அவர் நினைவிருக்கும். |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |