![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 144
![]() இதழ் 144 [ ஜனவரி 2019 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
அன்புள்ள வாருணி,
12. 12. 2018 தினமணி மகளிர் மணி இதழின் முதல் பக்கத்தில் 'வட்டெழுத்தில் அசத்தும் மாணவி' என்ற தலைப்பில் திரு. வ. ஜெயபாண்டி எழுதியிருந்த கட்டுரையை நீயும் படித்திருப்பாய் என்று நம்புகிறேன். திருப்புல்லாணி அரசு மேனிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் பயிலும் மாணவி செல்வி இரா. கோகிலா வட்டெழுத்துக் கல்வெட்டுகளைப் படிப்பதிலும் ஊரகக் கோயில்களின் வரலாற்றைத் தொகுப்பதிலும் கொண்டிருக்கும் ஆர்வம் குறித்த கட்டுரை அது. இந்த இளம் வயதிலேயே ஆசிரியர்களுக்கும் கோகிலா கல்வெட்டுப் பயிற்சி அளிப்பதாகவும் இதற்கெல்லாம் காரணர் அப்பள்ளியின் தொன்மை மன்றப் பொறுப்பாளரும் ஆங்கிலப் பாட ஆசிரியருமான திரு. வே. ராஜகுரு என்றும் அவரது வழிகாட்டலில் பள்ளி மாணவர்கள் பலர் ஊரக வரலாறுகளைத் தொகுத்து நூல்களாக்கியுள்ளதாகவும் திரு.ஜெயபாண்டி தம் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இவ்வரிய செய்தியைப் பகிர்ந்துகொண்டதுடன், கட்டுரையாளர் தம் பதிவை நிறைவு செய்திருந்தால் இம்மடலுக்கு இடமிருந்திருக்காது. நாமும் தமிழ்நாட்டு வரலாற்றிற்கு வளம் சேர்க்கும் தொண்டாக அதைக் கருதித் தமிழ்நாட்டில் வரலாற்றாய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆய்வாளர்களின் சார்பிலும் திரு. வெ. ராஜகுரு, வட்டெழுத்துச் செல்வி கோகிலா, திரு. ஜெயபாண்டி மூவருக்கும் நம் உளம் கனிந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து மகிழ்ந்திருப்போம். உளம் களிக்க வைக்கும் இந்தச் சிறப்புச் செய்தியை உள்ளடக்கிய கட்டுரையை வெளியிட்டு, மேனிலைப்பள்ளி ஒன்றின் தொன்மை மன்றம் ஆற்றிவரும் அரும்பணியை நாடறியச் செய்திருக்கும் தினமணி நாளிதழுக்கும் நம் உளமார்ந்த பாராட்டைப் புலப்படுத்தி நிறைந்திருப்போம். ![]() ஆனால், நற்செய்தியைக் கட்டுரையாக்கிய திரு. ஜெயபாண்டி, தமிழ்நாட்டுக் கல்வெட்டியல் வரலாறு பற்றி அறியாதநிலையில், தம் கட்டுரையில் பிழையான சில செய்திகளையும் தவறான சில கூற்றுகளையும் பதிவு செய்திருக்கிறார். அவை குறித்து உரிய சான்றுகளுடன் தினமணி நாளிதழின் ஆசிரியர் திரு. கி. வைத்தியநாதனுக்கு மின்னஞ்சலில் ஒரு மடல் அனுப்பியதுடன், 'ஆசிரியரின் நேரடிப் பார்வைக்கு' என்ற குறிப்புடன் அதே மடலின் படியை விரைவஞ்சலிலும் அனுப்பியுள்ளேன். ஓர் அருஞ்செயலைப் பாராட்டிப் பதிவுசெய்வது போற்றத்தக்கதே. ஆனால், அது காரணமாகப் பிழையான தரவுகளை, தவறான கருத்துக்களை முன்னிருத்துவது சரியன்று. தினமணி என் மடலைப் பதிப்பிக்குமா என்பதறியேன். அதனால்தான், திரு. ஜெயபாண்டியின் தவறான மொழிவுகளையும் அவற்றுக்கான என் பதிவுகளையும் உன்னுடன் பகிர்ந்து சற்றே ஆறுதல் காண்கிறேன். 1. ஒலி ஓசையாக வந்த தமிழ் கி. பி. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பாகவே வரிவடிவத்துக்கு மாறியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர் என்கிறார் திரு. ஜெயபாண்டி. அவர் தம் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் திரு. ஐராவதம் மகாதேவனே தம் நூலில் பொதுக்காலத்திற்கு முற்பட்ட (கி. மு.) 2ஆம் நூற்றாண்டிலேயே தமிழ் பிராமி வரிவடிவம் நிலைபெற்றுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள நடுகற்களின் அடிப்படையிலும் பொருந்தல் அகழாய்வுச் சான்றுகளின் அடிப்படையிலும் தமிழ் பிராமி வரிவடிவம் பொதுக்காலத்திற்கு முற்பட்ட 3ஆம் நூற்றாண்டிலேயே வழக்கில் இருந்ததாகப் பேராசிரியர் திரு. கா. இராஜனும் பேராசிரியர் சு. இராஜவேலுவும் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளனர். 2. வரிவடிவம் வட்டெழுத்து வடிவமாகத் தெளிவாக எழுதப்பட்டது சேர, சோழ, பாண்டியர் காலமாகக் கூறப்படுகிறது எனும் ஜெயபாண்டியின் கருத்து பிழையானது. தமிழ்நாட்டில் கிடைத்துள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகளைக் காலவரிசைப்படுத்தியிருக்கும் திரு. ஐராவதம் மகாதேவன், வட்டெழுத்தின் தொடக்கக் காலமாகப் பொதுக்காலம் (இனி, பொ. கா.) 5ஆம் நூற்றாண்டைக் குறிப்பிட்டுள்ளார். அக்காலக்கட்டத்தில் தமிழ்நாட்டின் ஒரு பகுதி பல்லவர் ஆட்சியின் கீழும் மற்றொரு பகுதி களப்பிரர் ஆட்சியிலும் இருந்தன. சிராப்பள்ளி உள்ளிட்ட ஒருபகுதியைச் சோழர்களும் பல்லவர்களும் மாறி மாறி ஆள, சிறு சிறு பகுதிகள் வேளிர், பாணர், கொங்கர் உள்ளிட்ட சிற்றரசர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன. (காண்க: நுயசடல கூயஅடை நுயீபைசயீயால யீயீ.449, இருண்ட காலமா? பக். 11-30) 3. கி. பி. 10ஆம் நூற்றாண்டுக்கு முன்பே தமிழ்க் கல்வெட்டுகளில் வட்டெழுத்துக்களின் வடிவம் தென்பட்டுள்ளது என்பதே ஆய்வாளர்கள் கருத்து என்கிறார் கட்டுரையாளர். தமிழ்நாட்டில் பொ. கா. 5ஆம் நூற்றாண்டிலிருந்து காணப்படும் வட்டெழுத்து வரிவடிவம் தென்தமிழகத்தில் பொ. கா. 10ஆம் நூற்றாண்டு வரையிலும் வழக்கிலிருந்தது. வடதமிழகத்தில் பொ. கா. 6ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே கல்வெட்டுகளில் தமிழ் வரிவடிவம் இடம்பெறத் தொடங்கிவிடுகிறது. இப்பகுதியில் நடுகற்களில் மட்டுமே சில காலம் தொடரும் வட்டெழுத்து பொ. கா. 8ஆம் நூற்றாண்டளவில் வழக்கிழக்கிறது. 9ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே பிற்பல்லவர், சோழர் ஆட்சியில் பெரும்பாலான தமிழகப்பகுதிகளில் தமிழ் வரிவடிவக் கல்வெட்டுகளைக் காணமுடிகிறது. 4. தமிழின் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் மலைக்குன்றுகள் தோறும் விரவிக் கிடக்கின்றன எனும் கட்டுரையாளரின் கருத்து பிழையானது. வட்டெழுத்துக் கல்வெட்டுகள் காணப்படும் தமிழகத்தின் குன்றுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். 5. அவை குறித்த (வட்டெழுத்துக்கள்) ஆய்வுக்கோ, அதன் பொருள் குறித்து விளக்கமறியவோ தமிழில் பெரிய பெரிய பட்டம் பெற்று ஆய்வு முனைவர் பட்டம் பெற்று தமிழுக்குச் சேவை செய்வதற்கென்றே பிறவிப்பயன் எடுத்ததாகக் கூறிக்கொள்ளும் பேராசிரியர்கள் முதல் தமிழ்த் தொண்டர்கள்வரை யாரும் முன்வரவில்லை என்பதே உண்மை என்கிறார் திரு. ஜெயபாண்டி. அவரது இக்கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டு வரலாற்று வரைவியலின் வரலாற்றை அறியாமல் இக்கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஓர் அருஞ்செயலுக்காக ஒருவரைப் பாராட்டுவது மதிக்கத்தக்கது. ஆனால், அதை முன்னிட்டு உண்மைகளை அறியாமல் பிறர் குறித்துப் பொறுப்பற்ற கருத்துக்களை வெளிப்படுத்துவது நேர்மையன்று. தமிழ்நாட்டிலுள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகளைப் பற்றிப் பல தமிழ், வரலாற்று அறிஞர்கள் அரிய கட்டுரைகளை, நூல்களைப் பதிப்பித்துள்ளார்கள். பேராசிரியர்கள் மயிலை சீனி.வேங்கடசாமி, ஐ.ரா.சுந்தரேசனார், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், மா. இராசமாணிக்கனார் உள்ளிட்ட பல தமிழறிஞர்கள் தமிழ்நாட்டின் அனைத்துக் கல்வெட்டு வரிவடிவங்களைப் பற்றியும் ஆழ ஆராய்ந்து நூல்கள் வெளியிட்டுள்ளனர். பேராசிரியர்கள் டி. வி. மகாலிங்கம், கே. கே. பிள்ளை, நீலகண்ட சாஸ்திரியார், கே. வி. இராமன், எ. சுப்பராயலு உள்ளிட்ட பல வரலாற்றறிஞர்கள் வட்டெழுத்து உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்துக் கல்வெட்டு வரிவடிவங்களைப் பற்றியும் மிக விரிவான அளவில் பல ஆய்வுக் கட்டுரைகளைப் பதிப்பித்துள்ளனர். தினமலர் நாளிதழின் ஆசிரியரும் நாணயவியல் அறிஞருமான திரு. இரா. கிருஷ்ணமூர்த்தி காசியல் நூல்களோடு வட்டெழுத்துக் கல்வெட்டுகள் பற்றிய நூல்களையும் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறையில் பணியாற்றிய முனைவர்கள் நடன. காசிநாதன், சு.இராஜகோபால், வெ. வேதாசலம், சொ.சாந்தலிங்கம் உள்ளிட்ட பல ஆய்வாளர்கள் வட்டெழுத்து வல்லுநர்கள். இவர்கள் தென்தமிழகத்தின் அனைத்து வட்டெழுத்துக் கல்வெட்டுகளையும் படித்தறிந்து ஆய்வுசெய்து தமிழ்நாடு அரசுத் தொல்லியல்துறையின் கல்வெட்டிதழில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்கள். திரு. நடன.காசிநாதன் வட்டெழுத்து விற்பன்னர் என்பது நாடறிந்த செய்தி. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் பலர் வட்டெழுத்து அறிஞர்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர் சு. இராஜவேலு. பாண்டிச்சேரிப் பல்கலைக் கழகத்தின் மேனாள் வரலாற்றுத்துறைத் தலைவரும் தமிழ்நாட்டின் மிகச் சிறந்த அகழாய்வறிஞருமான பேராசிரியர் கா. இராஜன் கல்வெட்டுத்துறையின் தலைவராக விளங்கியவர். டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் இணை இயக்குநரும் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவருமான பேராசிரியர் மு. நளினி வட்டெழுத்து வரிவடிவக் கல்வெட்டுகளைப் படிப்பதில் வல்லவர். திரு. ஐராவதம் மகாதேவனோடு மேற்கொண்ட களஆய்வுகளுள் ஒன்றின்போது புதிய வட்டெழுத்துக் கல்வெட்டொன்றையே கண்டறிந்தவர் அவர். இச்செய்தியைத் திரு. ஐராவதம் மகாதேவன் தம் நூலிலேயே குறிப்பிட்டுள்ளார். நடுவணரசின் கல்வெட்டுத்துறையில் பணியாற்றிய முனைவர்கள் திரு. இரமேஷ், திரு.கே.ஜி.கிருஷ்ணன், திரு. மு. து. சம்பத், திரு. சூ. சுவாமிநாதன் உள்ளிட்ட பல கல்வெட்டறிஞர்கள் வட்டெழுத்து வல்லுநர்கள். தஞ்சாவூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தமிழகத் தொல்லியல் கழகத்தின் நூற்றுக்கணக்கான கல்வெட்டாய்வாளர்கள் தமிழ்நாடு முழுவதும் பரவிய அளவில் வட்டெழுத்து உள்ளிட்ட அனைத்து வரிவடிவக் கல்வெட்டுகளையும் ஆராய்ந்து துறைபோகியவர்கள். உண்மைகள் இப்படியிருக்க, வரலாறு அறியாத நிலையில் திரு.ஜெயபாண்டி விருப்பம் போல் எழுதியிருப்பது நியாயமன்று. 6. கடந்த 25 ஆண்டுகளாகத் தமிழகத்தில் தமிழ்மொழி குறித்த ஆய்வுகள் பெரிதாக முன்னெடுத்துச் செல்லப்படவில்லை எனும் திரு. ஜெயபாண்டியின் கூற்றும் பிழையானதே. மொழியியல் சார்ந்த அறிஞர்களும் தமிழ் இலக்கியம் சார்ந்த அறிஞர்களும் கடந்து 25 ஆண்டுகளில் மிகச் சிறந்த நூல்களையும் கட்டுரைகளையும் பதிவுசெய்திருக்கிறார்கள். பேராசிரியர்கள் கா. செல்லப்பன், செ. வை. சண்முகம் உள்ளிட்ட பல மொழியியல் அறிஞர்களும் க. ப. அறவாணன், செ. இராசு, இரா. கலைக்கோவன், ம. சா. அறிவுடைநம்பி, வீ. அரசு உள்ளிட்ட பல இலக்கியம் சார் முனைவர்களும் எழுதியுள்ள நூல்களை, வெளியிட்டுள்ள கட்டுரைகளைத் திரு. ஜெயபாண்டி படிக்கவேண்டும். கண்களை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டதாக நினைப்பது அறிவுடைமையன்று. உலகம் தழுவிய அளவில் தமிழ் வளர்ந்து வருகிறது. அண்மையில் தினமணிகதிரில்கூட, பேராசிரியர் தி. இராசகோபாலன் சிம்லாவில் நடந்த இரட்டைக் காப்பியப் பன்னோக்கு ஆய்வு குறித்து எழுதியிருந்தமையை ஜெயபாண்டி போன்றோர் அறியவேண்டும். ஏதும் படிக்காமல், நாற்புறத்தும் நடப்பன பார்க்காமல் பொதுஅளவில் குற்றம் சாட்டுவது நேர்மையன்று. திரு.ஜெயபாண்டி தொன்மைப் பாதுகாப்பு மன்ற ஆசிரியர் திரு. வே. ராஜகுருவிடமாவது சற்றே வரலாறு கேட்டுப் பிறகு இந்தக் கட்டுரையை எழுதியிருக்கலாம். நாளும் புதியன படித்துத் தம் சிந்தனைகளைப் புதுப்பித்துக் கொள்வதோடு அதைத் தமிழறிந்த அனைவரிடமும் ஒரு சுவைஞராகத் தமிழ்மணி வழிப் பகிர்ந்துகொள்ளும் திரு.கி.வைத்தியநாதனின் நெறியாள்கையில் வெளிவரும் பொறுப்புள்ள நாளிதழாம் தினமணியில் இது போன்ற பொருளற்ற கருத்துக்கள் பதிவாவது ஆழ்ந்த துன்பம் தருகிறது. அன்புடன், இரா. கலைக்கோவன். (இக்கட்டுரையை எழுதி முடித்த நிலையில் தினமணி ஆசிரியரிடமிருந்து என் மடலுக்கு மறுமொழி வந்தது. 'நான் பார்க்கவோ, படிக்கவோ இல்லை என்பதால், பிரசுரமாகியிருக்கும் அந்தக் கட்டுரைக்கான பொறுப்பிலிருந்து நான் விலகிவிட முடியாது. பத்திரிகையின் சிறப்புகளுக்கு ஆசிரியர் பெருமை பெறுவது போலவே, தவறுகளுக்கும் பொறுப்பேற்பதுதான் நியாயம். இன்னும் பொறுப்புடனும் தகுந்த புரிதலுடனும் அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்க வேண்டும். தவறு நடந்துவிட்டது என்று கூறி இது போன்ற பதிவுகளை அப்படியே விட்டுவிடுதல் சரியல்ல. அது பத்திரிகை தனது கடமையிலிருந்து வழுவுவதாகும். தங்கள் கடிதத்தில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களை பத்திரிகைக்கு ஏற்றவாறு பதிவுசெய்துவிடுகிறேன். பொறுப்புணர்வுடன் தவறைத் திருத்த முற்பட்டிருக்கும் தங்களுக்கு நன்றி' என்ற அப்பெருந்தகையின் விளக்கம் தினமணியைப் பற்றியும் அதன் ஆசிரியர் குறித்தும் நான் கொண்டிருந்த மதிப்பீட்டைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. நாள், பருவ இதழ்களில் வெளியாகும் செய்திகள், கட்டுரைகளில் கருத்துப் பிழைகள் இருப்பின் அவற்றை உரியவர்க்குச் சுட்டுவது படிப்பவர் கடமை. அப்போதுதான் உண்மையான வரலாறு உருவாக முடியும். பல இதழ்கள் அத்தகு புரிதல் கொள்வதில்லை. ஆனால், தினமணி அந்த நிலைப்பாட்டிலிருந்து வழுவியதில்லை. மேனாள் தினமணி ஆசிரியர்கள் திரு. கி. கஸ்தூரிரங்கன், திரு. ஐராவதம் மகாதேவன், திரு. சம்பந்தம் போன்றே இப்போதைய ஆசிரியர் திரு. கி. வைத்தியநாதனும் அம்மேம்பட்ட பண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளமை உள்ளம் நிறைக்கிறது.) |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |