http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 153

இதழ் 153
[ ஏப்ரல் 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

இராஜராஜரின் திருவிளக்குகள்
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 5
புள்ளமங்கை ஆலந்துறையார் தளப்பஞ்சரங்கள்
இறவாதான் ஈசுவரம்
மாமல்லபுரக் குடைவரைகள் - 4
இதழ் எண். 153 > கலைக்கோவன் பக்கம்
இராஜராஜரின் திருவிளக்குகள்
இரா. கலைக்கோவன்

'நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி' என்ற பெருமைமிகு அறிவிப்புடன் சோழப் பேரரசர் முதல் ராஜராஜர் தஞ்சாவூரில் எழுப்பிய ராஜராஜீசுவரம் தமிழர் தலை நிமிர்த்தும் கட்டுமானமாகும். கட்டடம், சிற்பம், கல்வெட்டுகள் என மூன்று சார்ந்தும் இப்பெருங்கோயில் தமிழர் வரலாற்றுக்கு வழங்கும் அரிய தரவுகள் இன்றுவரை முழுமையுற வெளியாகவில்லை. இக்கோயிலில் ராஜராஜர் காலத்தே பதிவாகியிருக்கும் கல்வெட்டுகள் அனைத்துமே பொ. கா. 10, 11ஆம் நூற்றாண்டுத் தமிழர் வாழ்க்கையை உள்ளீடாகக் கொண்டுள்ளன.



இராஜராஜீசுவரத்துச் சுற்றுமாளிகை வடசுவரின் புறத்தே உள்ள தளிச்சேரிக் கல்வெட்டை விரிவான ஆய்வுக்கு உட்படுத்திய டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்கள் அதன் வழிப் பெற்ற தரவுகளை 1995 ஆகஸ்டில் வெளியான வரலாறு 5ஆம் தொகுதியில் கட்டுரையாக்கியுள்ள னர். 2002இல் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்ட அக்கட்டுரை கூடுதல் தரவுகளுடன், 'தளிச்சேரிக் கல்வெட்டு' என்ற தலைப்பில் நூலாக வடிவம்பெற்றது. ஏறத்தாழப் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ராஜராஜீசுவரச் சுற்றுமாளிகை வடசுவரின் புறத்தேயுள்ள மற்றொரு கல்வெட்டு மையத்தின் ஆய்வுப்பார்வைக்குள் கொணரப்பட்டுள்ளது. 



விளக்கேற்றல்



அக்காலத்தே திருக்கோயில்களில் விளக்கேற்றல் பேரறமாகக் கருதப்பட்டது. அரசர், அரசகுடும்பத்தினர், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட சமுதாயத்தின் பல தள மக்களும் இவ்வறச்செயலில் இணையாகப் பங்கேற்றனர். பலவகையான விளக்குகள் சந்தி களிலும் இரவு பகலெனத் தொடர்ந்தும் ஒளிர்ந்தன. தனியாகவும் தொகுப்பாக ஒரு மாலை அல்லது தோரணமெனவும் ஒளிர்ந்த இவ்விளக்குகளுக்குக் காலகாலத்திற்கும் நெய், எண்ணெய் வழங்க அவற்றை நிறுவிய கொடையாளிகள் பல ஏற்பாடுகளைச் செய் திருந்தனர். 



இவ்விளக்குகளுக்கான முதலாக ஆடு, பசு, எருமை ஆகிய கால்நடைகளைப் பெரும்பாலோர் வழங்க, பொன், நிலம், காசு, நெல் ஆகியனவும் பெறப்பட்டன. விளக்கேற்றத் தரப்பட்ட நிலம் திருவிளக்குப்புறமாகப் பெயரேற்க, விளக்கொளிர வழங்கப்பட்ட கால்நடைகளுக்குப் பொறுப்பேற்ற ஆயர்பெருமக்கள் திருவிளக்குக் குடிகளாயினர். 'தேவர் இடைச் சான்றோர்' என்றும் கல்வெட்டுகளில் கொண்டாடப்படும் இக்கால்நடைப் பராமரிப்பாளர்கள் குறித்துத் தமிழ்நாட்டுக் கோயில்களில் பதிவாகியிருக்கும் எழுத்துப் பொறிப்புகள் பல பயனுள்ள தரவுகளைக் கொண்டுள்ளபோதும், தஞ்சாவூர் ராஜராஜீசுவரத்தில் பேரரசர் ராஜராஜர் காலத்தே வெட்டப்பட்டுள்ள விளக்குக் கல்வெட்டு தரும் செய்திகளுக்கு அவை இணையாகா. ஆயர் சமுதாயம் குறித்த பல்வேறு செய்திகளுடன், அந்நாளைய அரசியல்சார் புவியமைப்பு, நகரமைப்பு, ஊர்ப்பெயர்கள், கால்நடைகள் எனப் பல்துறைத் தரவுகளையும் இக்கல்வெட்டு பகிர்ந்துகொள்கிறது. 



விளக்குக் கல்வெட்டு



வரலாற்றாய்வாளர் திரு. ஹூல்ஷால் படியெடுக்கப்பட்டு 1892இல் வரலாற்று வெளிச்சத்திற்குக் கொணரப்பட்ட ராஜராஜீசுவரத்து விளக்குக் கல்வெட்டு, தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 2இல் 63, 64, 94, 95 என நான்கு கல்வெட்டுகளாகப் பிரித்து எண்ணிடப்பெற்றுப் பதிவாகியுள்ளது. மிக நீளமான இக்கல்வெட்டின் முதற்பகுதி 63ஆகவும் அதன் தொடர்ச்சி 94ஆகவும் அமைய, இரண்டாம் பகுதி 64இல் தொடங்கி, 95இல் நிறைவுறுகிறது. திருமகள் போல எனும் மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் இக்கல்வெட்டு, மன்னரின் 29ஆம் ஆட்சியாண்டுவரை இக்கோயில் இறைவனுக்கான விளக்குகளுக்காக ராஜராஜரும் பிறரும் அளித்த கால்நடைகள், விலைக்குப் பெறப்பட்ட கால்நடைகள் குறித்த பதிவேடாக விளங்குகிறது. 



கால்மாடு



கல்வெட்டில் 'கால்மாடு' என அழைக்கப்பெறும் இக்கால்நடைகளில், ஒரு திருவிளக்கிற்கு நாளும் உழக்கு நெய் அளிக்க ஆடு எனில் 96 ஆகவும், பசுவாக இருப்பின் 48ஆகவும், எருமை என்றால் 16ஆகவும் இருக்கவேண்டும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவ்விலங்குகளுடன் அளிக்கப்பெற்ற கன்றுகளும் பட்டி பெருகத் தரப்பட்ட எருது, கிடாய் முதலியனவும் அந்தந்தக் கால்நடையினங்களுடன் சேர்த்து எண்ணப்பெற்றே கொள்ளப் பட்டன. 



இடையர்களும் அடைகுடிகளும்



இக்கால்நடைகளைப் பெற்றுக்கொண்டு கோயிலுக்கு நெய்யளக்க ஒப்பிய இடையர்கள், அப்பணியைத் தம் உறவுமுறைகளுடன் பகிர்ந்துகொண்டனர். அடைகுடிகள் என்றழைக்கப்பெற்ற இந்த உறவுகள் தலைமை இடையர்களின் பிள்ளைகள், உடன்பிறப்புகள், சிற்றப்பன், பேரப்பன், அவர்தம் பிள்ளைகள், மாமன், மச்சுனன், மருமகன் என அமைந்ததுடன், வெளியூர்களிலோ, தலைமை இடையர்களின் ஊர்ப்பகுதிகளிலோ வாழ்ந்த சொந்தங்களையும் இணைத்துக் கொண்டன. கால்நடைகளின் பொறுப்பேற்ற தலைமை இடையரும் அவரின் அடைகுடிகளும் ராஜராஜீசுவரத்தில் திருவிளக்கேற்றக் கோயிலில் விளங்கிய ஆடவல்லான் என்னும் முகத்தலளவையால் நாளும் உழக்கு நெய் அளக்க ஒப்பினர்.



கல்வெட்டின் முதற்பகுதி



இவ்விளக்குக் கல்வெட்டின் முதற்பகுதி இக்கோயிலில் 78 விளக்குகள் ஏற்ற ராஜராஜர் அளித்த கால்நடைகளைப் பற்றியும் அவற்றைப் பெற்றுக்கொண்ட இடையர் பெருமக்களைப் பற்றியும் விரிவான தகவல்களைக் கொண்டுள்ளது. 



விளக்குகளும் கால்நடைகளும்



இராஜராஜரால் ஏற்றப்பட்ட இவ்விளக்குகளில் 59 பசுவின் நெய்யால் ஒளிர்ந்தன. ஒரு விளக்கிற்கு 48 பசுக்கள் என 59 விளக்குகளுக்கு 2832 பசுக்கள் மன்னரால் அளிக்கப்பட்டன. அது போலவே 14 விளக்குகளுக்கு ஒளியூட்ட ஆட்டு நெய் உதவியுள்ளது. ஒரு விளக்கிற்கு 96 ஆடுகள் என 14 விளக்குகளுக்கு 1344 ஆடுகள் தரப்பட்டன. 



எஞ்சிய 5 விளக்குகளுக்கு எருமைகளும் ஆடுகளும் கலந்து வழங்கப்பட்டுள்ளன. அவற்றுள் 3 விளக்குகளுக்கு விளக்கொன்றுக்கு 8 எருமைகள் 48 ஆடுகள் அமைய, ஒரு விளக்கு 4 எருமைகள் 72 ஆடுகள் பெற்றது. மற்றொரு விளக்கிற்கு 2 எருமைகளும் 84 ஆடுகளும் தரப்பட்டன. இக்கலப்புக் கால்நடை வழங்கலால் முதல் ராஜராஜர் காலத்தில் ஓர் எருமை 6 ஆடுகளுக்கு இணையாகக் கருதப்பட்டமை தெரியவருகிறது. இக்கலப்பு வழங்கலில் இடம்பெற்ற ஆடுகளின் எண்ணிக்கை 300. இவற்றையும் சேர்ப்பின் ராஜராஜரால் வழங்கப்பட்ட ஆடுகளின் எண்ணிக்கை 1644ஆக அமையும். எருமைகள் 30. 



ஆயர் வாழிடங்கள்



கால்நடைகளைப் பெற்ற ஆயர் பெருமக்களை அடையாளப்படுத்துமிடத்து அவர்தம் வாழிடம், பெயர், உறவுமுறைகள் சுட்டப்படுவதால் பல வளமான தகவல்களைப் பெறமுடிகிறது. 



வளநாடுகள்



முதல் ராஜராஜர் காலத்தே சோழமண்டலம் பல வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டது. அரசரின் விருதுப்பெயர்களை ஏற்றமைந்த இவ்வளநாடுகளுள் ஏழின் பெயர்கள் கல்வெட்டின் முதல் பிரிவில் இடம்பெற்றுள்ளன. கால்நடைகளைப் பெற்ற பெரும்பாலான ஆயர்களின் ஊர்கள் பாண்டிகுலாசனி, ராஜராஜ வளநாடுகளிலேயே இணைந்திருந்தன. இவ்விரண்டனுள் தஞ்சாவூரை உள்ளடக்கியிருந்த பாண்டிகுலாசனி வளநாடே முதன்மை நிலையில் உள்ளது. இவ்விரு வருவாய்ப் பிரிவுகளுக்கு அடுத்த நிலையில் நித்தவிநோத வளநாடு அமைய, ராஜேந்திரசிங்க, அருமொழிதேவ வளநாடுகளில் மிகக் குறைவான ஆயர்களின் ஊர்களே (ஒவ்வொன்றிலும் 3 ஊர்கள்) இருந்துள்ளன. வடகரை குன்றக்கூற்றம் என்றும் அழைக்கப்பெற்ற உத்துங்கதுங்க வளநாடு, உய்யக்கொண்டார் வளநாடு ஆகிய இரண்டிலும் ஈரிரு ஊர்களே ஆயர்களின் வாழிடங்களாகச் சுட்டப்பட்டுள்ளன. 



நாடு/கூற்றம்



வளநாட்டிற்கு அடுத்த நிலையிலிருந்த வருவாய்ப் பிரிவு நாடு அல்லது கூற்றம் என்றழைக்கப்பெற்றது. இக்கல்வெட்டில் ஆயர்களின் ஊர்கள் உள்ளடங்கியிருந்த இத்தகு வருவாய்ப் பிரிவுகளாக 29ன் பெயர்கள் கிடைக்கின்றன. அவற்றுள் கூற்றம் என்ற பின்னொட்டுடன் 9ம் (பொயிற், ஆர்க்காட்டு, வெண்ணி, புன்றிற், புலிவலம், ஆவூர், மிறை, ஏமப்பேர், பாம்புணி), நாடு என்ற பின்னொட்டுடன் 20ம் (நல்லூர், கரம்பை, மீசெங்கிளி, நென்மலி, கீழ்வேங்கை, கீழ்சூதி, மீய்பொழி, பனங்காட்டு, ஏரியூர், சுண்டைமூலை, மீய்வழி, முடிச்சோழ, பாம்பூர், பன்றியூர், காந்தார, அள, மண்ணி, பொய்கை, கிளியூர், எயில்) இருந்தன. 



ஊர்கள்



ஆயர் பெருமக்களின் வாழிடங்களாகவும் அவர்தம் பெயரில் ஒருபகுதியாகவும் 97 ஊர்ப்பெயர்கள் சுட்டப்பெறுகின்றன. அவற்றுள் ஓர் ஊரின் பெயர் மட்டும் கல்வெட்டில் சிதைந்துள்ளது. பிறவற்றுள் பிராமண ஊர்களாக 15 அமைய, வணிக ஊர்களாக 3 (அழகியசோழபுரம், ராஜராஜபுரம், சத்திரியசிகாமணிபுரம்) உள்ளன. வணிக ஊர்கள் மூன்றுமே அரசரின் விருதுப்பெயர்கள் ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிராமண ஊர்களில் 5 மங்கலம் எனும் பின்னொட்டுடன் அமைய (கொற்றமங்கலம் எனும் பெயரில் 2 ஊர்கள், சாத்தமங்கலம், தலைவாய்மங்கலம், குட்டிமங்கலம்), 10 ஊர்கள் (தெங்கம்பூண்டி, ரெட்டகுலகால, ராஜகேசரி, காமரவல்லி, விசையாலய, செம்பியன்மாதேவி, ஜனநாத, சந்திரலேகை, கண்டராதித்ய, லோகமாதேவி) சதுர்வேதிமங்கலம் எனும் பின்னொட்டு கொண்டுள்ளன. அவற்றுள் ரெட்டகுலகாலச் சதுர்வேதிமங்கலம் உப்பூராக இருந்து சதுர்வேதிமங்கலமாக மாறியுள்ளது. அது போலவே லோகமாதேவி சதுர்வேதிமங்கலமும் கீழ்ப்பூண்டி எனும் பெயருள்ள ஊராக இருந்து பின்னாளில் பிராமண ஊராகியுள்ளது. குட்டிமங்கலம் ஜனநாத சதுர்வேதிமங்கலத்தின் தென்பிடாகையாகக் குறிக்கப்பட்டுள்ளது. காமரவல்லி தற்போது காமரசவல்லியாக அறியப்படுகிறது.



ஊர் என்ற பின்னொட்டுடன் 22 குடியிருப்புகளும் (ஆரூர், ஆணூர், பழுவூர், காவனூர், மருவூர், புலியூர், கள்ளூர், நாறலூர், கோட்டூர், மழையூர், நாவலூர், கருவூர், பூவணூர், உறையூர், சாக்கூர், உப்பூர், பன்றியூர், ஆலத்தூர், கொட்டையூர், பெருமுள்ளூர், பெருங்கோவூர், சிறுகுளத்தூர்), குடி என்ற பின்னொட் டுடன் 10 வாழிடங்களும் (விராற்குடி, விரைக்குடி, கண்ணிகுடி, இரைக்குடி, களக்குடி, அணுக்குடி, மாங்குடி, கிள்ளிக்குடி, திருத்தேவன்குடி, கமகஞ்சேந்தன்குடி) இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் மாங்குடி ராஜகேசரிச் சதுர்வேதிமங்கலத்தின் பிடாகையாக அமைய, ஆணூர், ஆரூர், கருவூர், புலியூர், உறையூர், சாக்கூர், களக்குடி, அணுக்குடி ஆகியன ஆயர் பெயர்களின் முன் அல்லது பின்னொட்டுக்களாக இடம்பெற்றுள்ளன. 



நல்லூர் எனும் பின்னொட்டுடன் உள்ள 9 ஊர்களில் (குந்தவைநல்லூர், கோயில்நல்லூர், மங்கலநல்லூர், ராஜவித்யாதர நல்லூர், சுந்தரசோழநல்லூர், ஜயங்கொண்டசோழநல்லூர், இரவிகுலமாணிக்கநல்லூர், பாண்டியகுலாந்தகநல்லூர், மும்மடிசோழநல்லூர்), மும்மடிசோழநல்லூர் தொடக்கத்தில் விண்ணனேரி என்ற பெயரில் அழைக்கப்பட்டது. 



பல்வேறு பின்னொட்டுகளுடன் அமைந்த 37 ஊர்களில் மிகச் சிறிய பெயர்களாக ஊரி, ஐயாறு, கூடல், ஸ்ரீபூதி, இடவை அமைய, மிகப்பெரிய பெயராக இளம்புலிவாய் சுற்றிய பெரும் புலிவாய் உள்ளது. நான்கெழுத்துப் பெயர்களாக ஓதவேலி, பாச்சில், குறுக்கை, வடவாய், பாம்புணி, மழபாடி, கரந்தை, பட்டம், பூதிகுடி, கரம்பை, ஆகியன குறிக்கப்பெறுகின்றன. பிரம்பில், பெருங்கரை, திருவூறல், பெருஞ்சோலை, கரச்சேரி, புனவாயில், விண்ணனேரி, அண்ணாமலை எனும் ஊர்கள் ஐந்தெழுத்துப் பெயர்கள் கொள்ள, பிற ஊர்கள் (தெங்கம்பூண்டி, நம்பன்காரை, திருப்பூவனம், காட்டிஞாழல், சிற்றினவாழ், திருக்குடமூக்கு, குளப்பாட்டு, ஆயிரத்தளி, கீழ்ப்பூண்டி, பழங்குளம், நரிக்குடிச்சேரி, அட்டுப்பள்ளி நியமம்) ஐந்துக்கும் மேற்பட்ட எழுத்துப் பெயர்களைக் கொண்டன. பெண்டடுகலம் எனப் படிக்கப்பட்டுள்ள ஊர்ப்பெயர் பெண்ணாடகமாகலாம். தெங்கம்பூண்டி, கீழ்ப்பூண்டி எனும் இரு ஊர்களும் சதுர்வேதிமங்கலங்களாக மாறின. பழங்குளம் ரெட்டகுலகாலச் சதுர்வேதிமங்கலத்தின் பிடாகையாக விளங்கியது. சிற்றினவாழ் எனும் ஊர்ப்பெயர் சிந்தனை தூண்டுவதாய் அமைந்துள்ளது. 



தஞ்சாவூர்



உள்ளாலை, புறம்படி என இரு பிரிவுகளாகத் தஞ்சாவூர் நகரம் வடிவமைக்கப்பட்டிருந்ததை இக்கல்வெட்டால் அறியமுடிகிறது. உள்ளாலைத் தெருக்களுள் ஒன்றாகக் குறிக்கப்பெறும் சாலியத்தெரு நெசவாளர் குடியிருந்த தெருவாகலாம். புறம்படி பல தெருக்களையும் அங்காடிகளையும் வேளங்களையும் கொண்டிருந்தது. தெருக்களுள் சில பெருந்தெருக்களாக இருந்தன. 



தெருக்கள்



யானைகளுக்கு உணவிட்டுப் பராமரித்தவர்கள் வாழ்ந்த தெரு ஆனைக்கடுவார் தெரு என்றும் இசைக்கலைஞர்கள் வாழ்ந்த தெரு கந்தருவர் தெரு என்றும் யானைப்படை வீரர்கள் குடியிருந்த தெரு ஆனையாட்கள் தெரு என்றும் பெயரேற்க, சமையல் வல்லவர்களின் குடியிருப்புகள் இருந்த தெரு மடைப்பள்ளித்தெரு என்றும் வில்வித்தையில் தேர்ந்தவர் இருப்பிடங்கள் இருந்த தெரு வில்லிகள் தெருவாகவும் அழைக்கப்பட்டன. பன்மையார் தெரு பல தொழில்விற்பன்னர்கள் இணைந்து வாழ்ந்த பகுதியாகலாம். இக்கல்வெட்டில் இடம்பெறும் பெருந்தெருக்கள் நான்கும் அரச விருதுப்பெயர்களுடன் (வீரசோழ, ஜயங்கொண்டசோழ, சூரசிகாமணி, ராஜவித்யாதர) விளங்கின. 



அங்காடிகள்



இராஜராஜரின் விளக்குக்கொடை பேசும் இக்கல்வெட்டால் தஞ்சாவூர்ப் புறம்படியில் அமைந்திருந்த கடைத்தெருக்கள் நான்கு வெளிச்சத்திற்கு வருகின்றன. அவற்றுள் ஒன்றின் பெயர் சிதைந்துள்ளது. பேரங்காடியாகத் திகழ்ந்த ஒன்று திரிபுவனமாதேவி எனப் பெயரேற்றிருந்தது. ஒரு கடைத்தெருவிற்குக் கொங்கவாளார் பெயர் விளங்க, மற்றொன்று ராஜராஜ பிரும்ம மகாராஜன் பெயர் கொண்டது. 



வேளங்கள்



அரண்மனைப் பணியாட்களின் தொகுதியாக விளங்கிய வேளங்களிலும் கால்நடைகளைப் பெற்ற இடைப்பெருமக்கள் இருந்துள்ளனர். சில வேளங்கள் அவை உள்ளடக்கியிருந்த பெரும்பான்மைப் பணியாளர் பெயரால் திருப்பரிகலத்தார் வேளம், திருமஞ்சனத்தார் வேளம் என்றழைக்கப்பட்டன. இருவகைத் திருமஞ்சனத்தார் வேளங்கள் இருந்தமை உய்யக்கொண்டான் தெரிந்த திருமஞ்சனத்தார் வேளம், ராஜராஜத் தெரிந்த பாண்டித் திருமஞ்சனத்தார் வேளம் எனும் பெயர்களால் தெரியவருகிறது. திருப்பரிகலத்தார் வேளம் அருமொழிதேவத் தெரிந்த எனும் முன்னொட்டைக் கொண்டிருந்தது. மற்றொரு வேளம் அபிமானபூஷணத் தெரிந்த வேளமாக அமைய, முதற் பராந்தகரின் மகனான உத்தமசீலியின் பெயரால் பிறிதொரு வேளம் அமைந்திருந்தது. இவ்வேளங்களின் பெயர்களில் உள்ள தெரிந்த எனும் சொல், 'தேர்ந்தெடுக்கப்பட்ட' என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளதாகக் கருதலாம். பரிகலவேளத்தார் கோயில், அரண்மனைக் கலங்களைப் பராமரித்தவர்களாகலாம். மஞ்சனத்தார் வேளப் பணிமக்கள் கோயில், அரண்மனை சார்ந்த முழுக்காட்டுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்தவர்களாகலாம். 



தலைமை இடையர்கள்



இராஜராஜர் அளித்த கால்நடைகளுக்குப் பொறுப்பேற்ற தலைமை இடையர்களாக எழுபத்தெண்மர் அமைந்தனர். அவர்களுள் உள்ளூரார் 29, வெளியூரார் 49. இந்த எழுபத்தெண்மரின் பெயர்களை ஆய்வு செய்தபோது சில சுவையான தரவுகளைப் பெறமுடிந்தது. 16 இடையர்களின் பெயர்களில் முன்னொட்டாகவோ, பின்னொட்டாகவோ ஊர்ப் பெயர்கள் இணைந்துள்ளன ( திருவூறல் நக்கன், ஆலத்தூர் உழவன், மழபாடி பூவன் முதலியன). 16 தலைமை இடையர்களின் பெயர்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தெய்வங்களின் பெயர்களைப் பெற்றுள்ளன (சூற்றி நாரணன், வடுகன் கணபதி, சுரும்பன் காளி, காரி சாத்தன் முதலியன). மரம் அல்லது விலங்கு சார்ந்த பெயர்களை அறுவரும் (பனையன் தனியான், வேம்பன், ஊரி குருந்தன், ஆனை சாத்தன், அமுதன் குஞ்சிரன் முதலியன), தொழில் சார்ந்த பெயர்களை ஐவரும் (பிடாரன், தூதுவன், தச்சன், கூத்தன் முதலியன), அரசர் சார்புடைய பெயர்களை இருவரும் (அரிஞ்சவன், மாறன் நக்கன் பூதி) கொள்ள, சில இடையர்களின் பெயர்கள் புதுமையாக உள்ளன (முப்பளி, திருமுற்றம், சித்திரகுத்தன், கவடி, குறுக்களன், குளவன், மனநிலை முதலியன). நக்கன் என்ற முன் னொட்டுடன் நால்வர் பெயர்கள் அமைய, பட்டன் என்ற பின்னொட்டுடன் சில பெயர்கள் விளங்கின. விசையாலைய சதுர்வேதிமங்கலத்து வாழ்ந்த இடையர் கம்பன் கவடியாக அறியப்பட்டார். இராமாயணத்தைத் தமிழில் தந்த பெருங்கவி கம்பரின் பெயர் பத்தாம் நூற்றாண்டிலேயே மக்கள் வழக்கில் இருந்தமை இதனால் பெறப்படும். தூய தமிழ்ப் பெயர்களாகச் சீராளன், அணுக்கன், தாழி, தெற்றி, கோவன், தளியன், மருதன், பொதுவன், தீய்மைமாலை முதலியவற்றைச் சுட்டலாம்.



அடைகுடிகள்



கால்நடைகளின் பொறுப்பேற்ற தலைமை இடையர்களின் நெருங்கிய உறவுகளும் (156 பேர்) கிளைஞர்களும் (133 பேர்) இக்கல்வெட்டில் அடைகுடிகளாக இடம்பெற்றுப் பொறுப்பில் பங்கேற்றுள்ளனர். தலைமை இடையர்களின் உடன்பிறந்தவர் களாக 70 பேர், உடன்பிறந்தார் மகன்களாக 20 பேர் அமைய, தலைமை இடையர்களின் பிள்ளைகளாக 29 பேர் இருந்தனர். சிற்றப்பன் உறவாக எழுவரும் சிற்றப்பன் மகன்களாக பன்னிருவரும் இடம்பெற்றுள்ளனர். பேரப்பன் மகன்களாக ஐவர் குறிக்கப்பட்டாலும் அடைகுடிகளாக இக்கல்வெட்டில் பேரப்பன்களுக்கு இடமில்லை. மாமன் (4), மச்சுனன் (3), மருமகன் (5) உறவுகள் 'நன்' என்ற சிறப்பு முன்னொட்டுடன் குறிக்கப்பட்டுள்ளன. தலைமை இடையர்கள் 78 பேரில் ஒருவரின் தந்தை (தமப்பன்) மட்டுமே அடைகுடியாக இருந்தார். 



தலைமை இடையர்களின் உறவு சுட்டப்படா கிளைஞர்களாகக் கால்நடைகளின் பொறுப்பில் பங்கேற்ற 133 பேரில், 51 பேர் தலைமை இடையரின் ஊர், தெரு, அங்காடி, வேளம் சார்ந்தவர்களாக உள்ளனர். 82 பேர் அயல் ஊர், தெரு, அங்காடி, வேளம் வாழ்ந்தவர்கள். 



உறவாகவும் கிளையாகவும் கல்வெட்டில் சுட்டப்பெறும் அடைகுடிகளின் பெயர்களை ஆய்வு செய்தபோது தெய்வம், கோயில் சார்ந்த பெயர்களைக் கொண்டிருந்தவர்களே மிகுதியாக (51) இருந்தனர். பிரம்மன், கலியன், காளி, திருவடி, துக்கையன், வைய்குந்தன், நீலன், நாராயணன், சாத்தன், கோயில், வீரட்டம் என இப்பெயர்கள் பலவாக உள்ளன. சாத்தன் என்ற பெயரைப் பலர் கொண்டிருந்தனர். சிலர் சீகிட்டன் (ஸ்ரீகிருஷ்ணன்), சீஇராமன் (ஸ்ரீஇராமன்) என்று அழைக்கப்பெற்றுள்ளனர். 



இதற்கு அடுத்த நிலையில் (38) கிடைக்கும் பெயர்கள் மக்கள் வழக்கிலிருந்தபோதும் சற்று மாறுபட்டு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தகு பெயர்களாக பிசங்கன், ஏமடி, கருவிடை, பக்கன், மியன், நெத்தானன், ஆமாயில், தான்றி, சிறுகொள்ளி, சூற்றி, தாழி, வட்டில், கோளி, கிலாதிரன், மக்கி, சேரி, குப்பை, விதியன், கோணை, கொட்டை, கொண்டி, குணமடி, ஊதாரி, மோடன், குறுக்களன், கட்டி, கணபுரவன், பூசல், கோழி, நிலாவி, குட்டன், அண்ணகாமடியன் முதலியவற்றைக் குறிக்கலாம்.



மரம் அல்லது விலங்கு தொடர்பான பெயர்களைக் கொண்டிருந்தவர்களும் பலராக (25) இருந்தனர். கொன்றை, வேம்பன், குருந்தன், கருவேலன், வன்னி, வாகை, ஆவரங்காடன், பிரண்டை, புலியன், பனையன், குரங்கன், சிங்கன், நாகன், நரியன் என இத்தகு பெயர்கள் அமைந்தன. நாடு, ஊர், குன்று, சார்ந்த பெயர்களைக் கொண்டிருந்தவர்களாக 31 பேரைக் காணமுடிகிறது. நாடன், ஊரி நாடன், சாத்தன் நாடன், சூரநாட்டான், குன்றன் என்பனவாக அப்பெயர்கள் அமைந்திருந்தன. ஒருவர் பூமி என்றும் மற்றொருவர் உலகம் என்றும் பெயர் கொண்டிருந்தனர். 



நக்கன், பட்டன் எனும் சொற்களை முன் அல்லது பின்னொட்டுகளாகக் கொண்டிருந்தவர்கள் 26 பேர். பதின்மர் தொழில் சார்ந்த பெயர்களுடன் விளங்கினர். கூத்தன், கணிச்சன், வண்ணக்கன், தூதுவன், தச்சன், மாணி எனுமாறு இப்பெயர்கள் அமைந்தன. அரசுசார் பெயர்களுடன் பதினெழுவர் இருந்துள்ளனர். பராந்தகன், அரையன், சுவரன், பூதி, வேளதரையன், வீரசோழன், சோழன், மாறன், அருமொழி எனுமாறு அவர்தம் பெயர்கள் இருந்தன. 



13 பேர் வீரம் செறிந்த பெயர்களைக் கொண்டிருந்தனர் (மறவன், முனைப்பகை, பகையன் திறலன், பகையன் காளி, மல்லன், மூர்க்கன் முதலியன). வயல், நீர்நிலை சார்ந்து எண்மர் (கழனி, செரு, குமிழி, அடவி) பெயர் கொள்ள, எண்ணிக்கைப் பெயர்களில் சிலர் (மூவரையன், எழுவன், முந்நூற்றுவன், அறுநூற்றுவன், எழுநூற்றுவன், ஆயிரவன் முதலியன) இருந்தனர். 



(சீயமங்கலத்திலுள்ள முதலாம் மகேந்திரவர்மரின் அவனிபாஜன பல்லவேசுவரம் குடைவரையின் முன்னுள்ள முகமண்டபத்தையும் சீயமங்கலம் ஏரியில் குமாரவாயையும் உருவாக்கிய திருப்பாலையூர்க் கிழவர் அடவியை இங்கு நினைத்துப் பார்க்கலாம் மு. நளினி, இரா. கலைக்கோவன், மகேந்திரர் குடைவரைகள், ப. 105)



வடுகர் என்ற முன்னொட்டுடன் குறிக்கப்பெறும் இடையர்கள் வடுகக் காந்தருவர் போல் வேங்கடத்திலிருந்து குடிபெயர்ந்தவராகலாம். மாற்றுத் திறனாளிகளாக இருந்த இடைப்பெருமக்கள் தங்கள் பெயரின் முன் அல்லது பின்னொட்டாக தங்கள் உடல் குறை சுட்டும் சொற்களைக் கொண்டிருந்தமை நீங்காநிலை கூனன், குருடன் கணவதி, தாழி குருடன் என்பன போன்ற பெயர்களால் அறியப்படும். தூய தமிழ்ப் பெயர்களாக வளவன், காரி அணுக்கன், பூவடி திருமழலை, வாஞ்சியப் பேரையன், சேந்தன், அடவி, திருவடிகள் தத்தை முதலிய பெயர்களைச் சுட்டலாம். 



இக்கல்வெட்டிலுள்ள இடைப்பெருமக்களின் பெயர்களுள் மிகச் சிலவே சிதைந்துள்ளன. எண்ணிக்கையில் பலவாகக் கிடைக்கும் இப்பெயர்கள் தந்தை பெயரை முன்னொட்டாகக் கொள்ளும் அக்கால வழக்கை நன்கு பின்பற்றியுள்ளன. பெரும்பாலான பெயர்கள் தந்தை பெயர் நீக்கிய நிலையில் மூன்றிலிருந்து எட்டெழுத்துக்கள் கொண்டனவாகவே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சீகாளி மிகக் குறைந்த எழுத்துக்கள் கொண்ட பெயராக அமைய, களப்பாளன் புன்றிற்காரி, கணத்தான் வேளதரையன் முதலிய பெயர்கள் சற்றே நீண்ட பெயர்களாக அமைந்துள்ளன. 



இராஜராஜீசுவரத்தின் இவ்விளக்குக் கல்வெட்டால் மாமன்னர் ராஜராஜரால் இக்கோயில் வளாகத்தே 78 விளக்குகள் ஏற்றப்பட்டமையும் அவ்விளக்குகளுக்கான நெய் வழங்க 2832 பசுக்கள், 1644 ஆடுகள், 30 எருமைகள் ஆகியவற்றை மன்னர் வழங்கியுள்ளமையும் தெரியவருவதுடன், இக்கால்நடைகளைப் பராமரித்துக் கோயிலுக்கு நெய் வழங்கும் பொறுப்பு, சோழநாட்டின் ஏழு வளநாடுகளிலிருந்த 97ஊர்களைச் சேர்ந்த 361 இடைப்பெருமக்களிடம் ஒப்புவிக்கப்பெற்ற தகவலும் வெளிப்படுகிறது. 



தமிழ்நாட்டளவில் பொ. கா. 11ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தே வேறெந்த திருக்கோயிலும் இத்தகு கால்நடைவளம் பெற்றிருந்தமைக்குச் சான்றில்லை. அது போன்றே தாம் அளித்த 78 விளக்குகளின் பேரொளியில் தாம் எழுப்பிய திருக்கோயிலைக் கண்டு மகிழும் பேறு வாய்த்த முதல் சோழப் பேரரசராக முதல் ராஜராஜரையே வரலாறு அடையாளப்படுத்துகிறது.

 


இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.