![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [187 Issues] [1839 Articles] |
|
Issue No. 187
இந்த இதழில்.. In this Issue..
|
கர்நாடகத்தில் வரலாற்றைச் சொல்லும் கோயில்கள் என்றவுடன் நம் மனத்தில் முதலில் தோன்றுவது, ஹொய்சாளர்கள் எடுப்பித்த பேலூர், ஹளபேடு கற்றளிகளும், விஜயநகர சாம்ராஜ்யத்தினர் எழுப்பிய ஹம்பி கோயில்களும், சாளுக்கியர்களில் கைவண்ணத்தில் எழுப்பிய பாதாமி தளிகளும்தான். சில வருடங்களுக்கு முன்னால் ஃபேஸ்புக்கின் மூலம் வரலாற்று/விழிப்புணர்வு செயல்பாட்டாளரும் அற்புதமான புகைப்படக் கலைஞருமான ஸ்வாமிநாதன் நடராஜனின் அறிமுகம் கிடைத்தது. முன்குறிப்பிட்ட பரவலாய் அறியக்கூடிய தளிகளைத் தவிர பல கோயில்களைத் தன் புகைப்படங்கள் மூலம் அற்புதமாய் ஆவணப்படுத்தியுள்ளதைக் கண்ட போது, இருபது வருடங்களுக்கு மேலாக கர்நாடகவாசியாக இருந்தும் எவ்வளவு குறைவான வரலாற்றுத் தடங்களுக்குச் சென்றிருக்கிறோம் என்ற குற்றவுணர்ச்சி எழும்பியது. அவருடன் பேசிய போது, நானிருக்கும் பெங்களூருக்கு அருகிலேயே (ஒரு நாளில் சென்று வரத் தோதாக) பல அற்புதமான பழங்கோயில்கள் இருப்பதைச் சொன்னார். அவற்றுள் அரளகுப்பேவில் உள்ள கல்லேஸ்வரர் கோயிலைப் பற்றிச் சொல்லும் போது மிகவும் உணர்ச்சிவயப்பட்டார். அதிலும் கருவறைக்கு முன் உள்ள மகாமண்டபத்தின் கூரைச் சிற்பத் தொகுதியைப் பற்றிச் சொல்லும்போது, 'நீங்கள் அவசியம் பார்த்தேயாக வேண்டிய தொகுதி, அஷ்டதிக்பாலகர்களுக்கு நடுநாயகமாக நடராஜர்…', என்று சொல்லும்போதே அவருக்குத் தழுதழுத்துவிட்டது. அவருடன் பேசி முடித்தவுடனேயே அரளகுப்பேவுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனத்தை அரிக்கத் தொடங்கியது. புகைப்படம் எடுப்பதில் நிபுணத்வம் உள்ள நண்பர்கள் சிலருடன் பேசினேன். என் கல்லூரித் தோழியின் தந்தையாரும், அற்புதமான புகைப்படக் கலைஞருமான திரு. பாலசுப்ரமணியம் உடன் வருவதாகச் சொன்னார். அடுத்த நாளே ஸ்வாமிநாதன் அரளகுப்பேவைச் சேர்ந்த நஞ்சுண்டன் என்கிற வரலாற்று ஆர்வம் உள்ள இளைஞரை அறிமுகப்படுத்திவைத்தார். அவரும், 'எவ்வளவு சீக்கிரம் முடியுமோ வாருங்கள்', என்று உற்சாகமாய் அழைத்தார். இரண்டு நாட்களில் அரளகுப்பே நோக்கி கிளம்பிவிட்டோம். பெங்களூரைக் கடந்து தும்கூரை அடைந்தபின், இன்னும் அறுபது கிலோமீட்டரில் உள்ள கிராமம் அரளகுப்பே. "இந்த ஊரில் தொல்லியல் அளவீட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஹொய்சாலர் கட்டுமானமான சென்னகேசவர் ஆலயம் பிரபலமான ஒன்று. அதன் அருகிலேயே மாநிலத் தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லேஸ்வரர் ஆலயம் அதிகம் வெளியில் தெரியாதிருக்கிறது.", என்கிறார் உள்ளூர்வாசி நஞ்சுண்டன். ஐ.கே.ஷர்மா, 'Temples of the Gangas of Karnataka', என்கிற நூலில் இந்தக் கோயிலை ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கங்கர் கட்டுமானமாகக் கொள்ளத் தரவுகள் உள்ளன என்று குறிப்பிடுகிறார். இந்தக் கோயிலை முழுமையாகக் கண்டு குறிப்பெடுத்துக் கொள்ளத்தான் நினைத்திருந்தேன் என்றாலும், அலங்கார வாயில்களைக் கடந்து மகா மண்டபத்தை அடைந்ததும் தலையைத் தூக்கி கூரையில் உள்ள சிற்பங்களைப் பார்த்ததும் வேறு எதன்மீதும் கவனம் செல்லவில்லை. அங்கு இருந்த சில மணி நேரத்தை முழுமையாக அந்தச் சிற்பத் தொகுதி வாங்கிக் கொண்ட போதும், முழுமையாகப் பார்த்து ரசித்துவிட்டோம் என்ற திருப்தி எழவேயில்லை, அடுக்கடுக்காய் நுணுக்கங்கள் அழகுகெடாமல் வடிந்திருக்கின்றன. வந்து பார்ப்பவர்களுக்கு வசதியாக, இந்தச் சிற்பத்தொகுதியை ஒட்டியுள்ள தூண்களின் பலகையின் மேல் நல்ல வெளிச்சம் பாய்ச்சக் கூடிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. சற்று எம்பிக் குதித்தால் தொட்டுவிடக் கூடிய தூரத்தில்தான் சிற்பத் தொகுதி அமைந்துள்ளது என்பதால் நுணுக்கங்களை மின்சார விளக்கின் வெளிச்சத்தில் நன்றாகவே ரசிக்க முடிந்தது. டி.ஏ.கோபிநாத ராவின் பிரபல நூலான 'Elements of Hindu Iconography'-ல் அஷ்டதிக்பாலரைக் குறிப்பிடும்போது, கோயிலின் முக மண்டபத்தின் கூரைப் பகுதிகளிலோ அல்லது நிறைய பிரகாரங்களும் அமைந்த கோயில்களில் ஒன்றுக்கு மேல் தளங்கள் கொண்ட விமானத்தின் ஏதேனும் ஒரு மேல்தளத்தில் எட்டு மூலைகளிலும் திக்பாலகர் படிமங்களைப் பார்க்க முடியுமென்கிறார். இவ்விரு வகையினுள், முக மண்டபக் கூரையில் இந்தப் படிமங்களை வடிக்கும் மரபு கர்நாடகத்திலும், ஆந்திரத்திலுமே அதிகம் இருப்பதாகப் படுகிறது. தமிழகத்தில், பல்லவர், சோழர் காலக் கட்டுமானங்களில் முகமண்டபக் கூரைகளில் திக்பாலகர் படிமங்கள் (நான் தேடியவரை) இருப்பதாகத் தெரியவில்லை. அரளகுப்பேவிலிருந்து திரும்பியபின் இணையத்தில் மற்ற இடங்களில் உள்ள அஷ்டதிக்பாலகர் தொகுதிகளைத் தேடி அதன் படங்களைப் பார்த்தேன். நண்பர் ஸ்வாமிநாதன், "இவ்வளவு அழகும் கம்பீரமும் நிறைந்த திக்பாலகர்களை வேறு எந்தத் தொகுதியிலும் காண முடியாது", என்று சொன்னது நூறு சதம் உண்மை என்றே எனக்கு அப்படங்கள் உணர்த்தின. சிற்பத் தொகுதி ஒன்பது சதுரப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் நடுவில் அமைந்துள்ள பகுதியில் சிவபெருமானின் நடனக் காட்சியும், மற்ற எட்டுத் தொகுதிகளில் அந்தப் பகுதி அமைந்துள்ள திசைக்கு உரிய திக் பாலகரின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. நடனமாடும் சிவபெருமான் தொகுதியின் நான்கு மூலைகளிலிருந்தும் நான்கு கந்தருவர் மலர் மாலைகளை ஏந்தி சிவனை நோக்கி வருவது போல சித்தரிக்கப்பட்டுள்ளனர். நடராஜர் நன்கு அலங்கரிக்கப்பட்ட பூரிமங்களுடனான சடை மகுடராய் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நடராஜரின் சடைமுடியின் வலப்புறத்தே பிறை நிலவு. அலங்காரமான நெற்றிப்பட்டமும், வலது செவியில் மகர குண்டலமும், இடது செவியில் நாக குண்டலமும் சூடி, நெற்றிக் கண், வளைந்த புருவங்கள், கூர்மையான நாசி, புன்சிரிப்பு என்று ஒவ்வோர் அவையமாய் பார்த்துப் பார்த்து பல கணங்கள் ரசிக்க வேண்டிய எழில் முகம்! சரப்பளி, தோள்வளை, கைவளை, தாள்செறி என பல நிறைய வேலைப்பாடு நிறைந்த ஆபரணங்களை பூண்ட தோற்றம். முப்புரிநூலிலும், உதரபந்தத்திலும் கூட மணிகள் கோர்க்கப்பட்டுள்ளன. நான்கு கரங்களில், வலமுன்கை கடகத்திலும், இடமுன்கை வேழ முத்திரையிலும் அமைந்திருக்க, பின்கைகள் இரண்டிலும் திரிசூலம் ஏந்தியுள்ளார். அலங்கார முடிப்புகள் இருபுறமும் தவழும் இடைக்கட்டும், சிம்மமுகத்தினின்று விரியும் அரைக்கச்சும் இடையை அலங்கரிக்கின்றன. வலதுகாலை நன்கு ஊன்றி, இடது காலை குஞ்சிதமாய் வைத்து சிவனார் ஆடும் களம் முயலகனின் முதுகென்றாலும் முயலகன் முகத்தில் களிப்பே. முயலகனின் முகத்தருகில் பாம்பொன்று படமெடுத்தாட, நடனத்துக்கு இசையும், லயமும் கூட்ட பக்கவாத்தியமாய் மூன்று சிவகணங்கள். மூன்று கணங்களும் கரண்ட மகுடம், மகர குண்டலங்கள், சரப்பளி, தோள்வளை, கைவளை, முப்புரிநூலுடன் காட்சி தருகின்றனர். சிவனாரின் வலப்புறம் உள்ள கணம் அமர்ந்தபடி குழலிசைக்கிறது. இடதுபுறத்தில் மேலே உள்ள கணம் நின்ற நிலையில் தாளமிசைக்க, கீழே அமர்ந்துள்ள கணம் மூன்று முகங்கள் கொண்ட குடமுழவை இயக்குகிறது. இந்திரன் கிழக்குதிசைக்கு அதிபதியான இந்திரன் மேகப் பின்னணியில் வடிக்கட்டுள்ளார். இடக் கரத்தில் குடலையில் மலர்கள் ஏந்தி, வலக்கரத்தை போற்றி முத்திரையில் காட்டி மனைவியுடன் ஐராவதத்தின் மேல் அமர்ந்துள்ள தோற்றம். பூரிமங்களுடனான கரண்ட மகுடம், காதில் மகர குண்டலங்கள், சரப்பளி, முத்துமாலை, மணியால் அலங்கரிக்கப்பட்ட முப்புரிநூல், கைவளை, உதர பந்தம் என்று உடல் முழுவதும் ஆபரணங்கள். இந்திராணி பட்டாடை உடுத்தி, தோல் மேல் மேவும் தாமரையை இடக்கரத்தில் பிடித்து வலக்கையால் போற்றி முத்திரை காட்டுகிறார். கைவளை, தோள்வளை, கழுத்தில் நான்கு சரங்கள் கொண்ட மணிமாலை, செவியில் பூட்டுக் குண்டலம் அணிந்துள்ளார். இருவரும் அமர்ந்திருக்கும் கம்பீரமான ஐராவதத்துக்கு நான்கு தந்தங்கள். அம்பராத் துணி, நெற்றிப் பட்டம், உதர பந்தம் என்று துதிக்கையால் மலர் தாங்கி நடக்கும் களிற்றுக்கு நகாசுகள் நிறைந்துள்ளன. அக்னி தென்கிழக்குத் திசைக் கடவுள் அக்னி, மனைவியுடன் வீற்றிருப்பது அவர் வாகனமான துள்ளிப் பாயும் ஆட்டுக்கிடாவின் மேல். அக்னிதேவரை இரண்டு முகங்களுடன் காட்டும் மரபும் உள்ளது. இங்குள்ள அக்னிக்கு ஒருமுகம்தான். பூரிமங்கள் கூடிய நன்கு அலங்கரிக்கப்பட்ட கரண்ட மகுடம், நெற்றிப்பட்டம், நீண்ட செவியில் வேலைப்பாடுகள் நிறைந்து தோள் வரைத் தவழும் மகர குண்டலங்கள், கைவளை, தோள்வளை, சரப்பளி, உதரபந்தம், பிரம்ம முடிச்சுடன் கூடிய முப்புரி நூல், தாள்செரி என்று அக்னி தேவர் அணிந்திருக்கும் அனைத்திலுமே செழிப்பு. இடைக்கட்டும் பட்டாடையும் அணிந்து வலது கையை போற்றி முத்திரையில் காட்டி இடக்கையில் மலர் ஏந்தி அமர்ந்துள்ளார். உடன் அமர்ந்திருக்கும் அக்னி தேவரின் மனைவி ஸ்வாஹா, அக்னிதேவரைப் போலவே வலக்கையை உயர்த்தியும் இடக்கையில் மலர் ஏந்தியும் உள்ளார். அக்னி தேவரைப் போலவே ஸ்வாஹா தேவியும் குண்டலங்கள், சரப்பளி, கைவளைகள், தோள்வளைகள், இடைக்கட்டு, பட்டாடைகள் அணிந்திருந்தாலும் அனைத்திலுமே வேறுபடுகள் நுட்பமாய் காட்டப்பட்டுள்ளன. வாகனமான ஆட்டுக் கிடாவும் நெற்றிப்பட்டம், கழுத்தில் மணி கோர்த்த ஆரங்கள், உதர பந்தம், அம்பராத் துணியுடன் அலங்காரமாய் காட்டப்பட்டுள்ளது. யமன் தெற்கு திசைக்குரிய திக்பாலகர் யமன். யமனின் மனைவி யார் என்பதில் குழப்பம் நிலவுகிறது. யமியை சில இணையக் குறிப்புகளில் யமனின் மனைவி என்று குறிப்பிட்டாலும், இதை மறுக்க பல வலுவான தரவுகள் கொஞ்சம் தேடினாலே கிடைக்கின்றன. யமனுடன் இரட்டைப் பிறவியாய்ப் பிறந்தவள் யமி. அரளகுப்பே தெற்குதிசைத் தொகுதியில் யமனுடன் இருப்பவரின் பெயரை அறியக்கூடவில்லை. வார்த்தைகளால் விவரித்தால் அக்னிதேவருக்குச் சொன்ன வர்ணனையையே திரும்பச் சொல்வது போலத் தோன்றினாலும், சிற்பத்தைக் காணும்போது இரண்டு தொகுதிகளுக்கும் உள்ள நுட்மனான வேறுபாடுகளை சுலபமாக உணரமுடியும். உதாரணமாக யமனின் இடக்கரத்திலும் அக்னிதேவரைப் போலவே மலர் ஏந்தியிருந்தாலும், கடக முத்திரையை தெளிவாகக் காட்டும் யமனின் கரங்கள் வேறொரு பாவத்தை சிற்பத்துக்கு அளிக்கிறது. யமனின் மனைவியின் இடக்கரத்தில் உள்ள மலர் நன்கு மலர்ந்து விரிந்து காணப்படுகிறது. நீண்ட கொம்புடைய எருமைக் கடாவின் கழுத்தில் மணிகளாலான சங்கிலியைத் தவிர, கயிரொன்றும் இரட்டைவடமாய் அலங்கரிக்கிறது. நெற்றிப்பட்டம், உதரபந்தம், அம்பராத் துணி என்று யமனின் வாகனத்துக்கும் அலங்காரத்தில் எந்தக் குறைவும் இல்லை. நிருத்தி ஒழுங்கின்மைக்கு (chaos) அதிபதி நிருத்தி. தென்மேற்கு திசைக்கு உரிய திக்பாலகர். இவரின் வாகனம் சிம்மமாகவோ, நரனாகவோ இருக்கலாம் என்று சில குறிப்புகள் கிடைத்தாலும், அரளகுப்பேவில் இவர் மனைவியுடன் வீற்றிருப்பது நன்கு அலங்கரிக்கப்பட்ட கழுதையின் மேல். விஷ்ணுதர்மோத்தரம் இதைச் சுட்டுகிறது என்று கோபிநாத் ராவ் கூறினாலும், ஐ.கே.சர்மா இதை ஒரு அபூர்வமான சித்தரிப்பு என்கிறார். போற்றி முத்திரையில் இருக்க வேண்டிய நிருத்தியின் வலக்கரமும், அவர் மனைவியின் இடக்கரத்தில் உள்ள மலரும் சிதைந்துள்ளன. சிற்பத்தின் பின்புலத்திலும் சிதைவுகள் உள்ளன. நிருத்தியின் கையில் உள்ள மலரை விழுங்க வாய்பிளந்தது போன்ற மகர குண்டலமும், சங்கிலிகள் பிணைந்தது போன்ற தோற்றமளிக்கும் அவரது அரைப்பட்டிகையும் தனித்தன்மையுடன் மிளிர்கின்றன. வருணன் மேற்குத் திசைக்கு அதிபதி வருணன். மேகப்பின்னணியில் வலது கையில் தண்டில்லாத தாமரை மலரை ஏந்தி இடது கையைப் போற்றிமுத்திரையில் காட்டி மகரத்தின் மீது அமர்ந்துள்ளார் வருணன். வருணனின் மனைவி அமர்ந்திருக்கும் விதம் மற்ற திக்பாலகர்களின் மனைவியர் அமர்ந்திருக்கும் விதத்தினின்று மாறி அமைந்திருக்கிறது. இவர் இடக்கையில் மற்ற பெண்மணிகள் போல மலர் ஏந்தியிராமல் ஒய்யாரமாய் தொடைமேல் இருத்தியுள்ளார். இந்தத் தொகுதியில் காட்டப்பட்டுள்ள மகரம் மிக நுட்பமாய் காட்டப்பட்டுள்ளது. கணபதி ஸ்தபதி சிற்பச் செந்நூலில் மகரத்தைப் பற்றி, "மீன் உடலும், யானைத் துதிக்கையும், சிம்மக் கால்களும், குரங்கின் கண்களும், பன்றியின் காதுகளும், பல்வகை இலை, தழைகள் கொண்ட வாலும் உடைய ஓர் உருவம்.", என்று சொல்கிறார். சிறிய தொகுதியில் மகரத்தின் அத்தனை அவையங்களையும் துல்லியமாகக் காட்டும் வகையில் இந்தத் தொகுதி அமைந்துள்ளது. பிளாந்த மகர வாயின் நடுவில் ஒரு சிங்கமும் இருகால்களைத் தூக்கியபடி வெளிப்படுகிறது. வாயு வடமேற்கின் அதிபதி வாயு. அவரை வடிக்கும் போது சற்று அவசரத்தில் செல்பவர் போல வடிக்க வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றனவாம். அதனால்தானோ அவர் அமர்திருக்கும் மானின் துள்ளலுக்கேற்ப சற்றே ஒசிந்த தோற்றம். பெரும்பான்மையான திக்பாலகர்கள் கையில் உள்ள மலர் கூம்பியும், அவர்கள் மனைவியர் கையில் உள்ள மலர் விரிந்தும் காணப்படுகிறது. வாயு தொகுதியில் இது மாறியுள்ளது. மற்ற பெண்மணிகளுக்கு இல்லாத சிறப்பாய் வாயுவின் மனைவிக்கு கழுத்தணிகளோடு சேர்ந்து ஸ்வர்ண வைகாக்ஷ மார்பணியும் காட்டப்பட்டுள்ளது. குபேரன் வடக்குதிசைக்கு அதிபதி குபேரன். குபேரனுக்கு வாகனம் நரன் என்று சில ஆகமங்கள் கூறுகின்றன. அரளகுப்பே தொகுதியில் அக்னியைப் போலவே குபேரனும் ஆட்டுக் கிடாவின் மேல் மனைவியுடன் அமர்ந்துள்ளார். காதுகள், நெற்றிப்பட்டம், கண்கள், கழுத்தணி, உதரபந்தம், கொம்பு என்று ஒவ்வொரு அவயத்திலும் இரண்டு கிடாக்களிடையேயும் வித்தியாசத்தை காணமுடிகிறது. ஈசானன் வடகிழக்கு திசைக்கு அதிபதி ஈசானன். ஈசானன் என்பதும் சிவபெருமானின் வடிவமே. அரளகுப்பே தொகுதியில் மிகவும் விஸ்தாரமாய் காட்டப்பட்டுள்ள தொகுதி ஈசானன்தான். இன்னும் சொல்லப் போனால் நடுநாயகமாய் ஆடும் ஆடலரசனைக் காட்டிலும் அதிகப் பரிவாரங்கள் சூழ அமைந்திருப்பது ஈசானன் தொகுதிதான். நன்கு அலங்கரிக்கப்பட்ட நந்தி; அதன்மேல் சிவபெருமானும் பார்வதியும்; அவர்கள் இருவருக்கும் மலர்மாலை அளிக்க வரும் கந்தருவர் இருவர்; பார்வதிக்கும் பின்னால் விநாயகர்; நந்தியின் கால்கள் அருகில் நான்கு இசைக் கலைஞர்கள். இந்த நான்கு கலைஞர்களுள் ஒருவர் குழலூத, ஒருவர் முழவுக்கருவியான இடக்கையை இசைக்க, இவர்களுக்கு இருமருங்கிலும் செண்டுதாளம் இசைத்து தாளத்தைக் காட்டும் கலைஞர்கள் இருவர். வானுலகில் பறந்து கொண்டே உடற்பிரக்ஞையின்றி இசையுடன் கலக்கும் போது எழும் அங்க அசைவுகளை; அவை கலைஞனுக்கு ஏற்றார்போல வெளிப்படும் மாறுதல்களை மிக நுட்பமாய் இந்தத் தொகுதியில் வெளிப்பட்டுள்ளது. சிற்ப அமைதிகளில் ஆய்வு செய்யும் ஒருவர் இந்த ஒரு தொகுதியை மட்டும் பல பக்கங்களுக்கு விவரித்து எழுதக்கூடிய அளவிற்கு விவரங்கள் பொதுந்துள்ள தொகுதி. அஷ்டதிக்பாலகர்கள் பற்றிய முன்னுரையில் கோபிநாத் ராவ், "வேதகாலத்தில் மிகுந்த செல்வாக்குடன் பெருந்தெய்வங்களாகக் கொள்ளத் தக்க நிலையில் இருந்த இந்திரன் முதலான திக்பாலகர்கள் காலப்போக்கில் துணை தெய்வங்கலாக, திசைக்கு அதிபதிகளாக மாறினர்.", என்கிறார். அரளகுப்பே தொகுதியை திரு. கோபிநாத் ராவ் பார்த்திருப்பாரா என்று நானறியேன். பார்த்திருப்பின், 'வேதகாலத்தின் எச்சமாய் பல ஆயிர ஆண்டுகள் கழித்தும் கூட ஒருசில இடங்களில் அஷ்டதிக்பாலகர்கள் பெரும்தெய்வங்களாய் கொண்டாடப்பட்டனர்', என்றொரு பின்னொட்டைச் சேர்த்திருப்பாரோ என்று என் கற்பனைக்குத் தோன்றுகிறது. |
சிறப்பிதழ்கள் Special Issues
புகைப்படத் தொகுப்பு Photo Gallery
|
| (C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. | ||