![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [187 Issues] [1839 Articles] |
|
Issue No. 187
இந்த இதழில்.. In this Issue..
|
மக்கள் ஒன்றிணைந்து வாழத் தலைப்பட்ட நிலையில், 'சமூகம்' என்ற கட்டமைப்புத் தோன்றியது. தொடக்கத்தில் வேட்டுவச் சமூகமாக இருந்து, பின்னர் வேளாண் சமூகமாக மாறிய இம்மக்களின் தாய்த்தெய்வ வழிபாட்டுச் சிந்தனைகள் பற்றி உலகெங்கிலும் உள்ள ஆய்வாளர்கள் கட்டுரைத்துள்ளனர்.(1) நதிக்கரை நாகரிக சமுதாயங்களில் இத்தாய்த்தெய்வ வழிபாடும் தலைமை வழிபாடுகளுள் ஒன்றாக இருந்தமைக்குப் பரவலாகச் சான்றுகள் கிடைத்துள்ளன. வழிபாட்டு நிலைக்குத் 'தாய்' உயர்த்தப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. 'வேளாண் தொழில் பெண்களின் கண்டுபிடிப்பு. அதன் காரணமாகவே பெண்கள் வழிபாட்டு நிலையைப் பெற்றனர்' என்பர் சிலர்(2) சிந்துச் சமவெளியில் கிடைத்த முத்திரை வடிவத்தையும் குப்தர் காலச் சுடுமண் வடிவம் ஒன்றையும் இதற்கான சான்றுகளாக அவர்கள் முன்வைக்கின்றனர். இந்த முத்திரையில் பெண்ணொருவரின் பிறப்புறுப்பிலிருந்து செடியொன்று முளைத்துவருவதாகக் காட்டப்பட்டுள்ளது. சுடுமண் வடிவத்தில், பெண்ணின் கழுத்திலிருந்து தாமரை முளைத்துள்ளது. இவை இரண்டுமே பெண்ணின் தாய்மைப் பண்பை, வளமைப் பண்பை உணர்த்துவனவாகக் கொள்வதே பொருத்தமாக அமையும். பெண்ணின் கருவுயிர்க்கும் நிலையே அவளைத் தெய்வமாய் வழிபடும் நிலைக்கு உயர்த்தியதேயன்றி, பயிர்த்தொழில் கண்டுபிடிப்பல்ல என்பது இந்நூலாசிரியர்களின் துணிபாகும். அறிஞர்களால் தமிழர் நாகரிகமாக அடையாளப்படுத்தப்படும் சிந்துச் சமவெளியில் தாய்த் தெய்வமாகக் கருதப்படும் சுடுமண் வடிவங்கள் பலவாகக் கிடைத்துள்ளன. இத்தாய்த்தெய்வ வழிபாடே பெண்தெய்வ வழிபாட்டின் தோற்றவாயில் எனலாம். கொற்றவை தமிழர்தம் தொல் இலக்கண நூலாகக் கருதப்படும் தொல்காப்பியத்திலேயே கொற்றவைநிலையாகப் பெண்தெய்வ வழிபாடு குறிப்பிடப்பட்டுள்ளது. போருக்குச் செல்வோர் கொற்றவையின் பெருமைகளைக் கூறி அத்தெய்வத்தை வழிபட்டுச் செல்லுதலே கொற்றவைநிலை. இக்கொற்றவைத் தெய்வம் எப்படி வடிவமைக்கப்பட்டிருந்தது என்பதற்கான தடயங்களைத் தொல்காப்பியத்திலோ, பரிபாடல், கலித்தொகை, திருமுருகாற்றுப்படை தவிர்த்த காலத்தால் முற்பட்ட சங்க இலக்கியங்களிலோ காணமுடியவில்லை. சங்க மறவர்களால் போர்த் தெய்வமாகக் கொண்டாடப்பட்ட கொற்றவையை, 'வெற்றிவெல் போர்க் கொற்றவை' என்று பரவுகிறது திருமுருகாற்றுப்படை. கொற்றியென்றும் அறியப்பட்ட இவ்வம்மை பெருங்காட்டில் பேய்கள் சூழக் குடியிருந்ததாகக் கலித்தொகை கூறுகிறது. இக்கொற்றவைக்கெனத் திட்டமான வடிவமைப்பு இருந்ததை,'கொற்றவை கோலம் கொண்டோர் பெண்' எனும் பரிபாடல் அடியால் அறியலாம்.(6) கொற்றவையின் மகனாக முருகனைச் சுட்டும் திருமுருகாற்றுப்படை, அவரைக் 'கொற்றவை சிறுவ', 'பழையோள் குழவி' என்றழைத்துச் சிறப்புச் செய்கிறது.(7) இப்பழையோள் என்ற சொல் கொற்றவையின் காலத்தால் முற்பட்ட நிலையை உறுதிசெய்வது கவனிக்கத்தக்கது. முருகாற்றுப்படைக்குக் காலத்தால் முற்பட்ட சங்க நூலான பெரும்பாணாற்றுப்படையில், 'சேய்' என்னுஞ் சொல்லால் குறிக்கப்படும் முருகனைப் பயந்த பெருவயிற்றுத் துணங்கையஞ் செல்வியாகக் கொற்றவை வெளிப்படுகிறார். இவ்விலக்கியமும் தீண்டி வருத்தும் தெய்வங்கள் சூழக் கொற்றவை இருந்ததைக் குறிப்பிடுகிறது. (8) இக்குறிப்புக்களையெல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது தொடக்கக் காலத் தமிழினம் கொற்றவையைக் காடமர்ந்த மறவர்த் தெய்வமாக, போர்க் கடவுளாகக் கொண்டிருந்தமையைத் தெளிவாக உணரலாம். இதனால், 'ஓங்கு புகழ் கானமர் செல்வி' என்று அகநானூறு குறிப்பதும் இவ்வம்மையையே எனத் தெளியமுடியும். இதற்கு மணிமேகலையும் காடமர் செல்வியின் கழிபெருங் கோட்டங் காட்டித் துணையாகிறது.(9) இவ்வம்மை குறிஞ்சிப் பெண்களாலும் வழிபடப்பட்டமையை 'அடுக்கத்து விறல் கெழு சூலி' என்னும் குறுந்தொகைப் பாடலடி தெளிவுசெய்கிறது.(10) குறிஞ்சித் தெய்வமான முருகன் கொற்றவையின் மகன் என்பது சங்க காலத்திலேயே அறியப்பட்டிருந்த செய்தியாகும். முருகனை சிவபெருமானின் மகனாக அறிமுகப்படுத்தும் கலித்தொகைப் பாடலடியைப்(11) பெரும்பாணாற்றுப்படைச் செய்தியுடன் இணைத்துப் பார்த்தால், சிவன், கொற்றவை, தாய் தந்தையாகவும் முருகன் அவர்தம் மகனாகவும் சங்க மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வழிபடப்பட்டமை தெளிவாகத் தெரியவரும். ஆனால் இவ்விலக்கியங்கள் எவற்றிலும், சிவபெருமானின் மனைவியாகக் கொற்றவையோ, கொற்றவையின் கணவராக சிவபெருமானோ சுட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முருகனை வைத்தே அம்மையும் அப்பனும் இணையும் சங்க அதிசயம் கூர்ந்து சிந்திக்கத்தக்கது. பல்லவர் காலத்தில் வழக்கிற்கு வந்த சோமாஸ்கந்தர் தொகுதிக்கு இச்சங்கச் சிந்தனையே தூண்டுகோலாய் அமைந்திருக்கலாம். அணங்குகள், வரையர மகளிர், சூரர மகளிர், சுவர்ப் பாவைகள், கடல்கெழு செல்வியெனச்(12) சிறுதெய்வ வணக்க மாகவும் பெண்தெய்வ வழிபாடு சங்கச் சமுதாயத்தின் ஒருபால் கிளைத்திருந்ததைப் பாடலடிகள் உணர்த்தினாலும், தனிப்பெருந் தெய்வமாய்த் தமிழர் வணங்கியது கொற்றவையையே என்பது தெளிவான உண்மையாகும். உமை சங்க நூல்களாக அறியப்பட்டாலும், சங்க காலத்தைத் தொடர்ந்தமைந்த காலகட்டத்தில் எழுந்த இலக்கியங்களாகவே இன்றைய ஆய்வாளர்களால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகிய மூன்றும் உமையை அறிமுகப்படுத்துகின்றன. இம்மூன்று இலக்கியங் களிலுமே உமை சிவபெருமானின் மனைவியாகக் காட்டப்படுகிறார். இமயத்தை வில்லாக்கிய, கங்கையைத் தலையிலேற்ற இறைவன் உமையுடன் சேர்ந்து அமர்ந்திருந்த உயர்மலையைப் பத்துத் தலைகள் கொண்டிருந்த அரக்கர் அரசன் அசைத்த தகவலைத் தருகிறது கலித்தொகை.(13) இதில் சிவபெருமானின் மூன்று செயல்கள் இடம்பெறுகின்றன. இம்மூன்று செயல்களுக்குமே தனித்தனி இறைத்தோற்றங்களைப் பல்லவர் காலச் சிற்பிகள் உருவாக்கியிருக்கிறார்கள் என்பதும் அம்மூன்றனுள் திரிபுரம் எரித்தமை தவிர்த்த ஏனைய இரண்டு செயல்களிலும் சிவ பெருமானுடன் உமையும் இடம்பெற்றுள்ளார் என்பதும் இங்கு நினைக்கத்தக்கன.(14) சிவபெருமான் உமையைத் திருமணம் செய்துகொண்டதைப் பரிபாடல் தெரிவிக்கிறது. ஆனால் முருகன், கார்த்திகை மாதர் அறுவரிடத்தே நீலகண்டப் பெருமானுடைய குமாரனாகப் பிறந்ததாகக் கூறுகிறது.(15) இறைவனும் இறைவியும் இணைந்திருக்கும் அம்மையப்பர் தோற்றத்தை அறிமுகப்படுத்தும் திருமுருகாற்றுப்படை இதை வழிமொழிகிறது.(16) சங்க காலத்தின் பிற்பகுதியிலோ அல்லது சங்க காலத்திற்குப் பிற்பட்டோ உருவான தொன்மங்களின் தாக்கத்தையே இவ்விலக்கியங்கள் பதிவு செய்துள்ளதாகக் கருதலாம். உமையை முன்நிறுத்தும் இம்மூன்று இலக்கியங்களும் கொற்றவையையும் படம்பிடிப்பது குறிப்பிடத்தக்கது. சங்கத் தமிழரின் கொற்றவை, ஆலமர் செல்வன், முருகன் என்ற வழிபாட்டு நிலையில் ஆரியக் கலப்பு ஏற்பட்டதையும் அதன் விளைவாகக் கொற்றவையின் இடத்திற்கு உமை வரத் தொடங்குவதையும் முக்கட்செல்வர், ஈர்ஞ்சடை அந்தணனாக, பைங்கட் பார்ப்பனனாக வண்ணிக்கப்படத் தொடங்குவதையும் இவ்விலக்கியங்கள் இனிதே உணர்த்துகின்றன. முருகனை ஓரிடத்தில், 'கொற்றவை சிறுவ' என்றழைக்கும் முருகாற்றுப்படை, மற்றோரிடத்தில் அவரை, 'மலைமகள் மகனே' என்றும் விளிக்கிறது. இறைவன் உயிர்ப்பை விழுங்கிய கார்த்திகை மாதர் கருவுற முருகன் பிறந்தார் என்றும் கூறுகிறது. முருகன் கார்த்திகை மாதர் பயந்தவரென்பதை விளக்கமுறச் சொல்லும் பரிபாடல், மற்றோரிடத்தில் அவர் நீலகண்டருக்கும் மாசிலோளுக்கும் பிறந்தவர் என்கிறது. இந்த மாசிலோள், உமையா, கொற்றவையா என்பதில் தெளிவில்லை. முருகனின் பிறப்புப் பற்றி இவ்விரு இலக்கியங்களும் முரண்பட்ட தகவல்களைக் கூறுவதற்கு அக்காலத்து வழங்கிய சமயத் தொடர்பான சிந்தனைக் கலப்பே காரணமெனலாம். கலித்தொகை உள்ளிட்ட இம்மூன்று இலக்கியங்களும் தேவார காலத்திற்கு முற்பட்டவை என்பதற்கும் இச்சிந்தனைக் கலப்புகளின் பதிவுகளே உறுதியான சான்றுகளாகின்றன. முருகன் கொற்றவையின் மகனே என்ற சங்கச் சமூகம் சார்ந்த பெரும்பாண் ஆற்றுப்படையின் தெளிவான, தீர்க்கமான அறிவிப்பையும் விடமுடியாமல், அதே சமயம் சமகாலச் சிந்தனைகளின் தாக்கத்தையும் மறுக்கக் கூடாமல் இவ்விலக்கியங்கள் இருகாலத் தரவுகளையும் ஒழுங்குறத் தந்திருக்கும் வரலாற்று நேர்மையைப் பாராட்டாது இருக்கமுடியவில்லை. சங்க காலத்தில் கொற்றவையும், சங்க காலத்தைத் தொடர்ந்து அமைந்த காலத்தில் கொற்றவையோடு உமையும் தமிழர்தம் முதன்மைப் பெண்தெய்வங்களாக விளங்கினர். போர்த் தெய்வமான கொற்றவை, போரையே தொழிலாகக் கொண்டிருந்த இனமரபுக் குழுக்களின் ஆட்சியில் முதன்மைத் தெய்வமாக அமைந்ததும், சமுதாய வளர்ச்சி நிலைபெற்ற காலத்து அமைதியான வேளாண் வாழ்க்கையில் உமை ஏற்றம் பெற்றதையும், ஆனால் அதே காலத்தில் ஊரகப் பகுதிகளில் இனமரபுக் குழுக்களின் மாடுபிடிச் சண்டைகள் தொடர்ந்த நிலையில் அங்குக் கொற்றவை தொடர்ந்து முதன்மையில் இருந்ததையும் சிற்பங்களும் கல்வெட்டுகளும் பின்னால் வந்த இலக்கியங்களும் மிகத் தெளிவாக உணர்த்துகின்றன. சிலப்பதிகாரத்தில் பெண்தெய்வச் சிந்தனைகள் கொற்றவை, உமை, சிவபெருமான் எனும் மூன்று தெய்வங்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிணைப்பையும், உமையின் வரவால் கொற்றவைக்கு ஏற்பட்ட பின்னடைவையும், இப்பின்னடைவையும் தாண்டி ஊரகப் பகுதிகளில் கொற்றவை பெற்றிருந்த ஏற்றத்தையும் சிலப்பதிகாரம் மிக அருமையாகப் பதிவு செய்துள்ளது. பெண் தெய்வ வழிபாட்டின் படிநிலைகளைச் சமுதாயஞ் சார்ந்த சமயப் படப்பிடிப்பாகக் காட்டியிருக்கும் இளங்கோவடிகளின் வரலாற்று நோக்கு வியந்து போற்றற்குரிய ஒன்றாகும். சிலப்பதிகாரத்தில் மூன்று இடங்களில் மட்டுமே உமை குறிக்கப்படுகிறார். இம்மூன்றிடங்களிலுமே சிவபெருமானின் ஒரு பாதியாக அவ்வம்மை விளங்கும் செய்திதான் திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளது.(17) சிவபெருமானின் கோயில்களைச் சுட்டும் இடங்களில்கூட உமைக்கு இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முக்கட்செல்வராகப் புறநானூறு அறிமுகப்படுத்தும் சிவபெருமானின் நெற்றிக்கண், சிலம்பில் நுதல்விழியாகச் சிறப்பிக்கப்படுகிறது.(18) இந்நுதல்விழி பரிபாடலில் கொற்றவைக்கான அடையாளமாகக் கூறப்பட்டிருப்பது இங்குக் கவனிக்கத்தக்கது.(19) சிலப்பதிகாரத்தில் சிவபெருமானுக்கும் கொற்றவைக்கும் பொதுவான அடையாளமாகச் சுட்டப்படும் இந்நுதல்விழி, பத்திமைக் காலத்தில் மீண்டும் சிவபெருமானுக்கே உரிய தனிச்சிறப்பாய் மாறுகிறது. இவ்விலக்கியப் பதிவுகள் தொன்மங்களின் காலநிரலான வளர்நிலைகளையும் அவை சமய ஒழுகலாறுகளில் ஏற்படுத்தும் தற்காலிக, நிரந்தரத் தாக்கங்களையும் வரலாற்று ஒழுங்குடன் எடுத்தோதுகின்றன. உமையை மூன்றிடங்களில் மட்டும் சுட்டும் இளங்கோ வடிகள், கொற்றவை வழிபாட்டை ஒரு காதையாகவே அமைத்திருக்கிறார். 'வேட்டுவ வரி' என்ற தலைப்பில் அமையும் இக்காதை, காட்டில் அமைந்திருந்த 'ஐயை' என்றழைக்கப்பட்ட கொற்றவைக் கோட்டம் சார்ந்து நிகழ்ந்த மறவர் செயற்பாடுகளை முன்வைக்கிறது. இக்காதையின் தரவுகளைக் கொற்றவையின் தோற்றம், வழிபாட்டுமுறை என இரண்டாய்ப் பகுத்துப் பார்ப்பது அக்காலகட்டப் பெண்தெய்வ வழிபாட்டின் தன்மைகளைத் தெளியவும், சிலப்பதிகாரத்தின் காலத்தை உணரவும் வழிகாட்டும். கொற்றவைத் தெய்வம் எப்படியிருந்தது என்ற கேள்விக்கு முதன் முதலாகச் சிலப்பதிகாரமே விரிவான விடையிறுக்கிறது. பாம்புக்குட்டி வடிவிலமைந்த தங்க நாணால் கட்டப்பட்ட நெடிய சடை (கரண்ட மகுடம்); சடையில் பிறைநிலவெனப் பன்றியின் தந்தம்; உடன் வெள்ளிய மலரிதழ்கள்; நெற்றியில் இமைக்காத கண்; பவழம் போல் வாயும் வெண்சிரிப்பும் கொண்டவள்; நஞ்சுண்டதால் கருத்த கழுத்தில் புலிப்பல் தாலி; மார்பகங்களைப் பாம்புக் கச்சால் மறைத்தவள்; வளைகள் அணிந்த கைகளில் சூலமும் வளைக்கப்பட்ட வில்லும் வெற்றியையுடைய வாளும் சங்கும் சக்கரமும் தாமரையும் கொண்டவள்; யானைத் தோல் போர்த்தவள்; இடையில் புலித்தோல், சிங்கத்தோல் உடுத்தவள்; கால்களில் இடப்புறம் சிலம்பும் வலப்புறம் கழலும் அணிந்தவள்; கை வாளால் மகிடனை அழித்து அவன் தலைமீது நின்றவள்; சிங்கம், கலைமான் இவள் வாகனங்கள். ஓர் ஆகமத்தைப் போலக் கொற்றவையின் வடிவத்தை ஒரு கூறு விடாமல் வண்ணித்துள்ள இளங்கோவடிகள் கொற்றவை வழிபாட்டையும் தெளிவுற விளக்குகிறார். கொற்றவைக் கோட்டத்தில் தேவி கலைமானின்மீது எழுந்தருளியிருந்தார். அவர் திருமேனிக்கு வண்ணம், சந்தனம் பூசப்பெற்றன. அம்மையின் கொடி சிங்கக் கொடி. தேவியின் திருவுருவத்திற்கு முன் பல்வகை மரங்கள் சூழ்ந்த பலித்தளம் இருந்தது. அதில் கொற்றவை தரும் நன்மைகளுக்கு வேட்டுவர் தரும் விலையான மலரும் அவரை, துவரை போன்ற புழுக்குக் கறிகளும் எள்ளின் கசிவும் நிணச்சோறும் பலியுணவாக இடப்பெற்றன. பூ, புகை, வாசனைப் பொருட்கள், பந்து, கழங்கு, பாவை ஆகியன வழிபாட்டில் இடம்பெற்றன. கிளி, கானக்கோழி, மயில் ஆகிய பறவைகள் இறைவியின் திருமுன் விடப்பட்டன. கொற்றவையை வழிபட்டவர்கள் அம்மையை, அமரி (அலங்கரித்தல் இல்லாதவள்), குமரி (அழியாதவள்), கௌரி, சமரி (போரில் வல்லவள்), சூலி (சூலத்தை உடையவள்), நீலி (நீல நிறமானவள்) எனப் பல பெயர்களால் விளித்து மகிழ்ந்தனர். கொற்றவை திருமாலுக்குத் தங்கையென்றும் கொண்டாடினர். பறை, சின்னம், துத்தரிக் கொம்பு, குழல், மணி முதலிய இசைக்கருவிகள் ஒலித்தன. வழிபாட்டிற்குப் பிறகு வேட்டுவ மக்கள் பங்கேற்ற கூத்து நடந்தது. அதில் கொற்றவையின் பெருமைகள் பேசப்பட்டன. 1. நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமானின் ஒரு பாகத்தை ஆள்பவள். 2. தன் சடையில் திங்களைக் கொண்டவள். 3. கானத்தெருமையின் தலைமேல் நிற்பவள். 4. அசுரர் வாட, அமரருக்காக மரக்கால்களின் மேல் நின்று வாளமலை ஆடியவள். 5. சிவபெருமான், திருமால், நான்முகன் ஆகிய மூவரின் இதயத்திற்கும் விளக்கானவள். 6. திருமாலின் தங்கை. இளங்கோவடிகள் தொகுத்துத் தரும் கொற்றவைச் செய்திகள் அவர் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் கொற்றவை வழிபாடு மிகச் சிறந்த நிலையில் இருந்தமையைத் தெளிவுபடுத்துகின்றன. கொற்றவையை மட்டுமே கொண்டாடிய சங்க காலத்திற்குப் பிறகு வந்த இலக்கியமென்பதால், இதில் உமையும் இடம்பெற்றுள்ளார். சில அறிஞர்கள் கருதுமாறு போல இவ்விலக்கியம் தேவார காலத்திற்குப் பிற்பட்டதாக இருக்குமெனில், இளங்கோவடிகள் கொற்றவைக்குத் தந்த முக்கியத்துவத்தை உமைக்கும் தந்திருப்பார் அல்லது உமையின் பெருமைகள் கொற்றவையை விஞ்சியிருக்கும். இவ்விரண்டும் இல்லாத நிலையில் பரிபாடல், முருகாற்றுப்படை போலச் சிலப்பதிகாரத்தையும் தேவார காலத்திற்கு முற்பட்ட இலக்கியமாகவே கொள்ளமுடியும். இந்தக் காலநிர்ணயத்தைச் சிலப்பதிகார உள்ளடக்கமே வலியுறுத்திப் பேசுகிறது. உமையின் நுழைவும், கொற்றவையின் பெருமையும் காலக் கட்டாயமாக இவ்விலக்கியத்தில் பதிவாகியுள்ளன. தொல்காப்பியத்திலேயே கொற்றவை இடம்பெற்றுவிட்ட போதும், அவரை சிவபெருமானின் மனைவியாகச் சிலப்பதிகாரமே முதன்முதலாக நேரடியான முறையில் உறுதிப்படுத்துகிறது.(20) சிவபெருமானின் அத்தனை புறக்குறியீடுகளையும் அம்மை பெற்றுச் சிறக்கிறார். தமிழ்நாட்டு இலக்கிய வரலாற்றில் முதன்முறையாகத் திருமாலின் தங்கையாகக் கொற்றவை அறிமுகமாவதும், திருமாலின் அடையாளக் கருவிகளான சங்கையும் சக்கரத்தையும் தம் கருவிகளாகப் பெற்றுச் சிறப்பதும் சிலப்பதிகாரத்தில்தான்.(21) இத்தனைக்கும் மேலே இன்னும் ஒருபடி கூடுதலாகப் போய் சிவபெருமான், விஷ்ணு, நான்முகன் ஆகிய மூவரின் அகமலருக்கும் கொற்றவையே விளக்காய் நிறைந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுவதைப்(22) பார்க்கும்போது, சங்க காலத்தைத் தொடர்ந்தமைந்த காலகட்டத்தில் ஆரியஞ் சார்ந்த சமயச் சிந்தனைகளுக்கும் தமிழினஞ் சார்ந்த சமயச் சிந்தனைகளுக்கும் இடையே நிலவிய போட்டி மனப்பான்மையை மிகத் துல்லியமாக அறியமுடிகிறது. சிலப்பதிகாரக் கால வேட்டுவர்கள், 'கண்ணுதலோன் பாகத்து மங்கையுருவாய், மறையேத்தவே நிற்பாய்' என்று முன்னிலைப் பரவலாய் இந்தப் போட்டியின் உச்ச நிலையைப் படம் பிடிக்கிறார்கள்.(23) மறைகள் வழிவந்த உமையை ஏற்க விழையாத மண்ணின் மைந்தர்கள், தங்கள் மண்ணோடு மணக்கும் கொற்றவையை அந்த மறைகள் ஏற்றுப் போற்றுவதே முறை எனுமாறு போல இப்பாடலடிகள் கண்சிமிட்டுகின்றன. தமிழ்ச் சிந்தனைகளுக்கும் உள்நுழைந்த சிந்தனைகளுக்கும் நிகழ்ந்த உராய்வில் மெல்ல மெல்ல ஆரியச் சிந்தனைகள் வலுப்பெற்றுக் கொற்றவையின் இடத்தை உமை பெற்றாலும், சில காலம் தொடர்ந்து கொற்றவையும் துர்க்கை என்று பெயர்மாறித் தனித்தன்மையுடன் விளங்கியமையைப் பல்லவ, பாண்டியர் காலச் சிற்பங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. மாமல்லபுரத்திலும், காஞ்சிபுரத்திலும், பனைமலையிலும் சிலப்பதிகார வண்ணனைகளை வடிவங்களாகவே பார்க்கமுடிவது இங்கு ஒப்புநோக்கத்தக்கது. பல்லவர் பகுதிகளில் துர்க்கையின் சிற்பங்கள் வளமையுற வேர்விட்டமைக்கு வலிமையான காரணமொன்றும் இருந்தது. சங்கத் தொடராய்ப் பல்லவ பூமியில் வெட்சி, கரந்தைப் போர்கள் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கக் காலம் வரை தொடர்ந்து நிகழ்ந்தமையை நூற்றுக்கணக்கில் கிடைத்திருக்கும் பல்லவர் கால நடுகற்கள் உறுதிசெய்கின்றன.(24) கொற்றவையை அறிமுகப்படுத்தும் தொல்காப்பியம், அம்மையைப் போர்த் தெய்வமாகவே காட்டுவதும், அக்கொற்றவையின் நிலைபோற்றியவர்கள் வெட்சி மறவர்களே என்பதும் இங்கு நினைக்கத்தக்கன. இலக்கியம், கல்வெட்டு, சிற்பம் எனும் முத்துறைத் தடயங்களும் இக்கால கட்டத்தின் பெண்தெய்வ வழிபாட்டு வரலாற்றை முறையாகப் பதிவுசெய்திடப் பெருந்துணையாகின்றன. அன்னையர் எழுவர் தமிழ்நாட்டுச் சமய வரலாற்றின் அடுத்த இயலையும் இளங்கோவடிகளே எழுதித்தருகிறார். தமிழ்நாட்டு இலக்கியங்கள் அனைத்துமே மிகச்சிறந்த வரலாற்றுக் களங்களென்றாலும் சிலப்பதிகாரம் தனித்தன்மையது. இம்மக்கள் காப்பியம் மதுரைக் காண்டத்தில், பாண்டியன் அரண்மனை வாயிற்காவலன் வாய்மொழியாக அன்றிருந்த சமயச் சிந்தனைகளைப் பிரதிபலித்துள்ளது. இந்த இலக்கியத்தில்தான் முதன்முறையாக 'அன்னையர் எழுவர்' வழிபாட்டுச் சிந்தனையின் விதையைப் பார்க்கமுடிகிறது. 'அறுவர்க்கு இளையநங்கை, இறைவனை ஆடல் கண்டருளிய அணங்கு, சூருடைக் கானகம் உகந்த காளி, தாருகன் பேருரம் கிழித்த பெண்' என்று புதியதொரு பெண்தெய்வத்தையும் அதன்வழி அன்னையர் எழுவர் வழிபாட்டின் தொடக்கத்தையும் சிலம்பின் வழக்குரைகாதை வெளிச்சப்படுத்துகிறது. அறுவர்க்கு இளைய நங்கை என்பதால், அன்னையர் எழுவரில் இளையவரான பெண்தெய்வம் என்பது பெறப்படும். இறைவனை ஆடல் கண்டருளிய அணங்கு யாரென்பதைச் சிலப்பதிகாரத்திற்குச் சற்றுப் பின் வந்த அப்பரும், சம்பந்தரும் கூடத் தங்கள் பதிகங்களில் பல இடங்களில் பதிவுசெய்துள்ளனர். "ஆடினார் பெருங்கூத்து காளி காண" (25) "காளி முன் காணக் கானிடை நடஞ்செய்த" (26) சிலப்பதிகாரமே மூன்றாவது சொற்றொடரில் இளைய நங்கையான இவ்வணங்கைக் 'காளி' எனப் பெயரிட்டு அடையாளப்படுத்துகிறது. நான்காவது சொற்றொடர் இக்காளி தாருகனின் பேருரம் கிழித்தவள் என்கிறது. இந்தச் செய்தியையும் பின்னால் வந்த அப்பரும் சம்பந்தரும் உறுதிப்படுத்துகின்றனர். "தாருகன் தன்னுயிர் உண்டபெண்" (27) "வென்றிமிகு தாரகன் ஆருயிர் அடங்கக் கன்றிவரு கோபம் மிகு காளி" (28) சிலப்பதிகாரமும் தொடர்ந்து தேவாரப் பதிகங்களும் சுட்டும் 'காளி'யைக் காரைக்காலம்மையும் குறிப்பிடுகிறார். பேயொன்று தன் பிள்ளைக்குக் காளியென்று பெயரிட்டதாம். இறைவனாடும் காடு, அணங்காடும் காடாம். காரைக்காலம்மையின் இக்கூற்றுகள், சிலப்பதிகாரச் செய்திகளை, உறுதிப்படுத்தும் பக்கத் துணையாவதுடன், அவர் காலத்தையும் உறுதிசெய்கின்றன. ஏறத்தாழச் சிலப்பதிகாரத்தின் காலமும் காரைக்காலம்மையின் காலமும் ஒன்றெனலாம். காளி அன்னையர் எழுவரின் பெயர்கள் அனைத்தும் இவ்விலக்கியங்கள் எவற்றிலும் இடம்பெறவில்லையாயினும், 'காளி' தனியிடமும் தனிச்சிறப்பும் பெறுவது, தமிழ்நாட்டின் காளி வழிபாட்டிற்கான தோற்றுவாயாக அமைவதுடன், தமிழ்நாட்டின் ஆடற்கலை வரலாறு பற்றிய புதிய சிந்தனைகளுக்கும் வித்திடுவது தெளிவு.(30) 'இறைவனை ஆடல் கண்டருளிய அணங்கு' எனும் சிலம்பின் அடியும், 'இறைவனாடும் காடு அணங்காடும் காடு' எனும் காரைக்கால் மொழிவும் ஆழச் சிந்திக்கத்தக்கன. பத்திமைக் காலத்திற்கு முன் ஆடல் தலைமை அணங்கிடம் இருந்தமையையும் போட்டி ஒன்றின் வழியாக அத்தலைமைத் தகுதி இறைவனுக்கு மாற்றப்பட்டமையையும் இந்தக் காலகட்ட நிகழ்வுகளாக இலக்கியப் பதிவுகள் தெளிவு செய்கின்றன. 'அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப் பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை'யைக் கூறிய பிறகே, காளியைப் பற்றிய செய்திகள் பேசப்படுவதன் மூலம் கொற்றவையான துர்க்கைக்கு அடுத்த நிலையிலேயே இவ்வன்னையர் எழுவர் வழிபாடு இருந்ததென்பதைச் சிலப்பதிகாரம் நன்கு விளக்குகிறது. அன்னையர் எழுவருள் காளியை உள்ளடக்கி, அறுவர்க்கும் அவரை இளைய நங்கையாக்கிச் சிறப்புச் செய்யும் சிலப்பதிகாரச் சிந்தனை, தேவார காலத்தில் மாற்றம் பெறுவதைப் பார்க்க முடிகிறது. அன்னையர் எழுவருள் மகேசுவரி (சிவபெருமானின் மனைவி), வைஷ்ணவி (திருமாலின் மனைவி), கௌமாரி (முருகனின் மனைவி), பிராமி (நான்முகனின் மனைவி), வராகி (வராகப் பெருமானின் மனைவி), இந்திராணி (இந்திரனின் மனைவி) என்னும் இவ்வறுவரும் தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்த ஆண் தெய்வங்களின் மனைவியர்கள். காளி மட்டுமே இறைவியின் அம்சமாகத் தோன்றியவள். அரக்கர்களை அழிப்பதற்காகவே தோற்றுவிக்கப்பட்டவள்.(31) அதனாலேயே சிலம்பு அவளை அறுவர்க்கும் இளையநங்கை என்கிறது. எவருடைய மனைவியாகவுமின்றி இறைவியின் அம்சமாகத் தோன்றிய காளியை அன்னையர் எழுவருடன் சில காலமே வைத்திருந்த சமய மரபுகள், அவளை அக்கூட்டத்திலிருந்து பிரித்துத் தனிமைப்படுத்தி, தனியொரு தெய்வமாக்கி உயர்நிலைக்கு நகர்த்தின.அன்னையர் எழுவருள் காளியைத் தவிர வேறு யாருக்கும் சிறப்புச் செயற்பாடுகள் அமையவில்லை. ஆகமங்களிலும் பிற்கால இலக்கியங்களிலும் இவர்கள் உடன்கூட்டத் தெய்வங்களாக மட்டுமே அறியப்படுவது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. தாரகன், சும்பர், நிசும்பர் எனும் அரக்கர்களை அழிப்பதற்காகவே காளி உருவாக்கப்பட்டதாகப் பிற்கால ஆகமங்கள் பேசுகின்றன. சிவபெருமானை ஆடற்கலையின் தனிப்பெருந் தெய்வமாக உயர்த்தவும் இக்காளி பயன்பட்டிருப்பதை இங்கு எண்ணிப்பார்க்கலாம். தொன்மங்கள் வளர்ந்து கிளைத்த நிலையில், காளி எழுவர் அன்னையர் குழுவிலிருந்து விலகித் தனிப்பெருந் தெய்வமாகிறார். அன்னையர் எழுவர் தொகுதியில் காளியின் நகர்வால் ஏற்பட்ட வெற்றிடத்தைச் சாமுண்டி எனும் புதிய பெண்தெய்வம் கொண்டு நிரப்பிய சமயச் சூழலை அப்பர் மறைமுகமாகத் தம் பதிகமொன்றில் பதிவுசெய்துள்ளார். 'சாமுண்டி சாமவேதம் கூத்தொடும் பாடவைத்தார்'(32) எனும் நாவுக்கரசரின் சுட்டல், சாமுண்டி எனும் புதுப் பெயரைப் பெண்தெய்வ வழிபாட்டிற்கு வழங்குகிறது.(33) அப்பர் இச்சாமுண்டி எனும் பெயரால் குறித்தது காளியையா அல்லது வேறொரு பெண்தெய்வத்தையா என்பதைத் தெளிவுற அறியக்கூடவில்லை என்றாலும், பிற்கால ஆகமங்கள் இச்சாமுண்டியை இயமனின் மனைவியாக்கி, இயமி என்றும் பெயர் சூட்டி அன்னையர் எழுவர் தொகுதியில் அமர்த்திவிடுவதைப் பார்க்கமுடிகிறது.(24) தமிழ்நாட்டின் மிகத் தொன்மையான அன்னையர் எழுவர் சிற்பத் தொகுதிகள் அனைத்துமே இச்சாமுண்டியைக் கொண்டுள்ளன. திருக்கோளக்குடித் தொகுதியிலுள்ள சாமுண்டியின் திருவடிக் கீழ் எருமையின் தலையிருப்பது குறிப்பிடத்தக்கது.(35) தேவார காலத்துக் காளி வண்ணனைகளை இச்சாமுண்டியின் வடிவம் அப்படியே பெற்றிருப்பதும் கூர்ந்து நோக்கத்தக்கது. "பைதற் பிணக்குழைக் காளி" (36) "கோபம் மிகு காளி" (37) "கத்துங் காளி" (38) சிலப்பதிகாரக் காலத்தில் அன்னையர் எழுவருள் ஒருவராக அறிமுகமாகும் காளி, தேவார காலத்தில் தனித் தெய்வமாகிறார். அவர் இடத்திற்கு வரும் புதிய நுழைவான சாமுண்டி, காளியின் தன்மைகளைப் பெற்றவராகவே அமைந்து, அன்னையர் எழுவர் தொகுதியில் சிறப்பிடம் பெற்றுக் கூட்டத்தின் நடுவிலும் தனித்தமையும் வாய்ப்பைப் பெறுகிறார். இந்த இடமாற்றங்களுக்கிடையில், தேவார வீச்சால் உமை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லப்படுவதைக் காணமுடிகிறது. காரைக்காலம்மையால்கூட விதந்தோதப்படாத உமை, காலப்போக்கிற்கேற்ப அப்பராலும் சம்பந்தராலும் சைவ உலகின் முதன்மைப் பெண் தெய்வமாக, சிவபெருமானின் உரிமையுடைய மனைவியாக அடையாளப்படுத் தப்படுகிறார். ஆறு திருமுறைகளும் உமையை அடி முதல் முடிவரை வண்ணித்துக் களிக்கின்றன.(39) இறைவனின் திருவிளையாடல்களுடன் உமையும் இணைக்கப்படுவதைப் பார்க்கிறோம். இறைவன் ஆடலுக்கு அம்மை பாடுகிறார். உடன் ஆடுகிறார். இருவருமாய் இணைந்து பிள்ளையாரைப் பெற்றெடுக்கிறார்கள்.(40) முருகனின் தாயாகவும் அம்மை முழுமனதுடன் ஏற்கப்படுகிறார். உமையைக் கொண்டாடிப் பரவும் தேவார இலக்கியங்கள், கொற்றவையான துர்க்கையை முழுமையாகக் கைவிடுகின்றன.(41) காளியின் புதுவரவை ஏற்கின்றன. சாமுண்டியை அறிமுகப்படுத்துகின்றன. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியும் ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியும் காட்டும் இலக்கியஞ் சார்ந்த தமிழ்நாட்டுச் சமய நிலையில், இடம்பெறும் பெண்தெய்வங்களாக உமை தலைமையேற்க, காளி கொற்றவையை நிகர் செய்கிறார். அன்னையர் எழுவர் சாமுண்டியுடன் சப்தமாதர்களாகின்றனர். (வளரும்) |
சிறப்பிதழ்கள் Special Issues
புகைப்படத் தொகுப்பு Photo Gallery
|
| (C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. | ||