http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 13

இதழ் 13
[ ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

அள்ள அள்ளக் குறையா அட்சய பாத்திரம்
கல்வித் தலைமை
பகவதஜ்ஜுகம் - 4
கதை 5 - தேவதானம்
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே!
வாழ்க நீ தம்பி!
விடியலைக் கண்ட விட்டுப்போன தொடர்ச்சிகள்
கோயில்களை நோக்கி
2. வலம் வருவோம் வாருங்கள்

கட்டடக்கலைத்தொடர் - 10
திருநந்தி ஈஸ்வரம் - 1
சங்கச் சிந்தனைகள்-1
இதழ் எண். 13 > கதைநேரம்

<ராஜகணிகை> : பெண்ணே மதுகாரிகா எங்கே இராமிலகன்?

<மதுகாரிகா> : அஜ்ஜுகா, பிரபு வந்துவிடுவேன் என்று சொல்லிவிட்டு பட்டணம் போயுள்ளார்.

<ராஜகணிகை> : எதற்காக இருக்கும்?

<மதுகாரிகா> : வேறு எதற்கு? நண்பர்களைக் கண்டு அவர்களை விரைவுபடுத்த.

<ராஜகணிகை> : இதுவரை களியாட்டங்களிலே கிடைத்த மகிழ்ச்சி இன்னும் அவருக்குப் போதவில்லை.

<மதுகாரிகா> : தாங்கள் சொல்லுவது சரியே அஜ்ஜுகா! மதுவே உல்லாசத்துக்கு உறுதுணை. போதை ஊட்டுவதும் கூட. சிரிக்க வைக்கிறது. பெண்ணைச் சல்லாபிக்கச் செய்கிறது.

<ராஜகணிகை> : போ, போய் விரைவில் வரச்சொல்.

<மதுகாரிகா> : அப்படியே ஆகட்டும் அஜ்ஜுகா!.

(அவள் வெளியேறுகிறாள்)

<ராஜகணிகை> : பரப்பிரிதிகா, எங்கே நாம் உட்காரலாம்?

<பரப்பிரிதிகா> : அஜ்ஜுகா, அதோ அந்த கல்திண்டில் சற்று அமர். ஒரு மாமலர் அதற்கு அழகுத் திலகமாகும். அஜ்ஜுகா ஒரு பாட்டு பாடுங்களேன்.

<ராஜகணிகை> : நல்லது பரப்பிரிதிகா.

(இருவரும் உட்கார்ந்து பாடுதல்)

காதற்கிறைவன் மன்மதனன் இச்சோலை தன்னில் நிற்கின்றான்
குயிலின் வண்டின் இசையாக வில்லின் நானை இசைக்கின்றான்
மாவரும்பவனுக்கு அம்பாகி மாதவர் மனங்களை அலைக்கிறது.

<சாண்டில்யன்> : (கேட்டவண்ணம்) ... ஆஹா குயிலோசை. இல்லை. இது குயிலோசையில்லை. என்ன இது? (புரிந்து கொண்டு) தேன் கலந்த பாயாசம் போல ஒரு பாட்டின் இனிய ராகம் (அவன் கடந்து சென்று பார்க்கிறான்) ஆ! அந்த இளநங்கை யார்? அணிபூண்ட ஓர் அலங்காரம் இந்த பூங்காவுக்கே அணிகலனாக விளங்குகிறதே.

<பரப்பிரிதிகா> : அஜ்ஜுகா.

<சாண்டில்யன்> : ஓ ... ஹோ ... ராஜகணிகையா? பணம் படைத்தவர்கள் புண்ணியவாளர்கள்!

<பரப்பிரிதிகா> : அஜ்ஜுகா, இன்னொரு பாடல்?

<ராஜகணிகை> : நல்லது.

இரதிதன் கடைக்கண் பாங்கனவன்
மன்மதன் தென்றலால் மயங்கிடவே
அசோக மலர் தன் நாண் தொடுக்கும்
அறவோர் மனமும் தடுமாறும்.

<சாண்டில்யன்> : எவ்வளவு இனிமையாகப் பொழிகிறது அவளது குரல்! ஆண்டவனே கேளுங்கள்.

<பரிவிராசகர்> : சொற்களை மட்டும் கேட்டேன். அதன் சம்பந்தத்தில் கவனம் செலுத்தவில்லை.

<சாண்டில்யன்> : பணம் மட்டும் உங்களிடம் இருந்தால் உடனே சம்பந்தத்தை உண்டாக்கிக் கொள்வீர்கள்.

<பரிவிராசகர்> : போ! போ! முறையாகப்பேசு.

<சாண்டில்யன்> : சினங்காக்க ... சன்னியாசிகள் கோபங்கொள்ளக்கூடாது.

<பரிவிராசகர்> : சரி, வாயே திறக்கவில்லை ...

<சாண்டில்யன்> : இப்போதுதான் நீங்கள் ஞானி.

(எமதூதன் வருகிறான்)

<எமதூதன்> : இதோ வந்துவிட்டேன்.

உலகில் கடன் முடித்தவர் உயிர் எடுப்பவர்
உள்ள நல்லதல்லதற்கு சாட்சி நிற்பவர்
உயர் காலதேவர் எனக் காணையிட்டனர்
உடலினின்றுயிர் பிரிக்கவே முடியுங்காலையே.

அதனால் ...

உலகின் நாடு பல கண்டு வந்தேன்
உள்ள ஆறுமலை இவைதாண்டி வந்தேன்
ஊற்றும் மேகமுறை ஊர்ந்து வந்தேன்
உருசாரண சித்தர் கின்னரர் நிறைந்த ஒரு
உச்சி மண்டலம் கடந்து வந்தேன்
உன்னதகால தேவர் சொல்லியே
உசித பட்டினம் எண்ணப்படி கடுகி வந்தேன்.

எங்கே அவள்? (பார்த்து)

பொன்னுருக்கிய வண்ண அசோக மலர்
மென்போதுக்கொத்தென நின்றிலங்கினள்
இனி மாலை முகிலிடை கூர்த்த வெண்ணிலா
தன்னொளியாய் இக்கணிகை இருக்கிறாள்.

சரி, இன்னும் சிறிது நேரம் இருக்கிறது. சற்றுப் பொறுத்திருந்து இவளது உயிரைக் கவரலாம்.

<பரப்பிரிதிகா> : அஜ்ஜுகா இந்த அசோக மொட்டு பார்வைக்கு அழகாக இருக்கிறது. நான் அதைப் பறித்துக் கொள்ளுகிறேன்.

<ராஜகணிகை> : வேண்டாம், வேண்டாம். நான் பறிப்பேன்.

<எமதூதன்> : நல்லவேளை. பாம்பாக மாறிக்கொண்டு அந்த அசோக மரக்கிளையில் மறைந்து கொள்ளுகிறேன். கடித்து அவளது உயிரைக் கவருகிறேன். ஆனால் ஒன்று,

கனிமொழி இன்முக சியாமள வண்ண இளங்கன்னி
சந்தனமணிந்தவள் அகன்மருங் குடையாள்
விழியோ மயக்கும் சிவப்பாம்பல் வெகுவாய் அருளைத்தான் சுரக்கும்
சுமந்தேகிடுவேன் இவளுயிரை எமனிடமே!

(ராஜகணிகை மலரைப் பறிக்கிறாள்)

இதுதான் கடிப்பதற்கு தருணம்.

<ராஜகணிகை> : ஆ ... ஏதோ என்னைக் கடித்துவிட்டது.

<பரப்பிரிதிகா> :

(மரக்கிளைகளைப் பார்த்துவிட்டு) அஜ்ஜுகா, அம்மா! அதோ ஒரு பாம்பு மரக்கிளையில்!

<ராஜகணிகை> : பாம்பா! (கீழே சாய்கிறாள்)

<சாண்டில்யன்> : (முன்னே போய்) பெண்ணே, என்ன இது?

<பரப்பிரிதிகா> : அஜ்ஜூகாவைப் பாம்பு கடித்துவிட்டது.

<சாண்டில்யன்> : ஐயோ! ஆண்டவனே! ராஜகணிகையைப் பாம்பு கடித்துவிட்டது.

<பரிவிராசகர்> : அவளுக்கு நேரம் வந்திருக்கலாம்.

வினைப்பயனைத் துய்ப்பதற்கே மக்கள்
விதிப்படியே தோன்றுகிறார் இங்கே
அதுபடியே உயிர் முடித்த பின்னே
மறுபடியோர் உடலேற்பர் எங்கோ.

<பரப்பிரிதிகா> : வலிக்குதோ அம்மா?

<ராஜகணிகை> : எனது உடலைக் கிழிப்பதுபோல் இருக்கிறது. என் உயிரே உருளுவதுபோல் இருக்கிறது. நான் படுத்துக்கொள்ளவேண்டும்.

<பரப்பிரிதிகா> : படுத்து இளைப்பாறு அஜ்ஜுகா.

<ராஜகணிகை> : அம்மாவுக்கு எனது வணக்கத்தைச் சொல்லு.

<பரப்பிரிதிகா> : கவலைப்படாதிருங்கள். நீங்களே போய் அம்மாவுக்குச் சொல்லலாம்.

<ராஜகணிகை> : இராமிலகாவை அரவணை ...

(அவள் மூர்ச்சையடைந்து விடுகிறாள்)

<பரப்பிரிதிகா> : ஐயோ! அஜ்ஜுகா இறந்துவிட்டாள்.

<எமதூதன்> : இதோ! இவளது உயிரைப் பறித்தாயிற்று. இப்பொழுது,

கங்கை விந்தியம் நன்னீர் நர்மதம்
சாகாய மலைத்தொடர் குறுவளை கிருஷ்ண
காஞ்சி செம்மைப் பசுபதியாலயம்
சீரோடு காவிரி பொருனையொடு பொதிகையும்
காற்றினுங்கடுகிக் கடந்திடுவேன்
கடலுக்கு அப்பால் ஈழமும் தாண்டி
கோலகால தேவனுழைச் சேர்ந்தேனே.

அதோ கிளைகள் படர்ந்த ஆலமரம் அங்கே
அமர்ந்திருக்கும் சித்திரகுப்தனை அணுகுவோம்.

(அவன் மறைந்துவிடுதல்)

<பரப்பிரிதிகா> : ஐயோ, அஜ்ஜுகா!

<சாண்டில்யன்> : ஆண்டவனே, இந்த இளமை பொங்கும் ராஜகணிகை உயிர் துறந்து விட்டாள்.

<பரிவிராசகர்> : முட்டாளே, உயிர் என்பது உணர்ச்சி. உலகில் விலையேறப்பெற்ற ஒரு பொருள். உயிர் உடலைத் துறந்துவிட்டதென்றுதான் கூறவேண்டும்.

<சாண்டில்யன்> : விலகிப்போம். இரக்கமற்ற, நட்பறியாத, கல்நெஞ்ச, கேட்டு மதிக்காத, பணிவற்ற, வெறுக்கத்தக்க, பிடிவாத, வீணுக்குமழித்த ...

<பரிவிராசகர்> : என்னதான் நினைப்பு?

<சாண்டில்யன்> : நூற்றெட்டுத் துதிகளையும் முடிக்கவிடுங்கள்.

<பரிவிராசகர்> : ஓ, தாராளமாக.

<சாண்டில்யன்> : ஆண்டவனே, நான் துக்கப்படுகிறேன்.

<பரிவிராசகர்> : ஏன்? எதற்காக?

<சாண்டில்யன்> : அவள் நம்மில் ஒருத்தி.

<பரிவிராசகர்> : எப்படி அவள் நம்மில் ஒருத்தி.

<சாண்டில்யன்> : அவள் சன்னியாசிகளைப்போலவே குறைந்த அளவு பற்றும் இல்லாதவள்.

<பரிவிராசகர்> : பற்றற்றவர்களும் தங்களுக்கு வேண்டுவன வந்து உச்சநிலையில் நிற்கும்போது தளர்ந்துவிடுகிறார்கள்.

பற்றின்பின் செல்லலை முற்றும் ஒறுத்தவர்
உற்ற சாத்திரத் திண்வழி செல்பவர்
மற்றும் இவ்வுலகப் பற்றினை விட்டவர்
உயர் பண்பிலே ஆவலைக் காட்டிடும் நெஞ்சினர்.

<சாண்டில்யன்> : ஓ ... ஆண்டவரே ... என்னால் அடக்கிக் கொள்ள முடியவில்லை. தூரமாகப்போய் அழுதுவிடுகிறேன்.

<பரிவிராசகர்> : போகாதே! போகாதே!

<சாண்டில்யன்> : கோபிக்க வேண்டாம். துறவிகள் கோபங்கிள்வது முறையல்ல.

(ராஜகணிகையின் பக்கம் சென்று)

ஓ ... அஜ்ஜுகா, அம்மா, இனிக்கப் பாடுபவளே.

<பரப்பிரிதிகா> : ஐயோ, இதென்ன?

<சாண்டில்யன்> : இரங்கல் ... அம்மா ...

<பரப்பிரிதிகா> : (தனக்குள்) ஆமாம், நல்லவர்களெல்லாம் இரங்குகிறார்கள்.

<சாண்டில்யன்> : அம்மா, இவளை நான் தொடலாமா?

<பரப்பிரிதிகா> : ஓ ... அப்படியே ஐயா.

<சாண்டில்யன்> : ஓ, அம்மா! (பாதங்களை அவன் தொடுகிறான்)

<பரப்பிரிதிகா> : அவளது பாதங்களைத் தொடாதீர்!

<சாண்டில்யன்> : ஐயோ, நான் குழம்பியுள்ளேன். பாதமெது தலையெதுவெனத் தெரியவில்லை. அய்யோ, தெங்கிள நீர்போல பருத்த அழகு முலைகள், கருஞ்சாந்தம் பூசியது, குத்தும் கூர்மையின. அவள் உயிர் வாழும்போது அவைகளால் குத்தப்பட்டு நான் மாளாதது என் துரதிர்ஷ்டம்.

<பரப்பிரிதிகா> : (தனக்குள்) இப்படிச் செய்யலாம். (சப்தமாக) ஐயா, அஜ்ஜுகாவைச் சற்று கவனித்துக் கொள்ளுங்கள். அவளது தாயைக் கூட்டி வருகிறேன்.

<சாண்டில்யன்> : சீக்கிரம் போ. தாயற்றவர்களுக்குத் தாய் போலிருக்கிறேன்.

<பரப்பிரிதிகா> : (தனக்குள்) இந்த அந்தணன் அன்பு மிகுந்தவன். அஜ்ஜுகாவைவிட்டுப் போகிறானில்லை. நான் சென்று வருகிறேன். (அவள் போகிறாள்)

<சாண்டில்யன்> : அவள் போய்விட்டாள். என் மன திருப்திக்காக நான் அழுதுவிடுகிறேன். ஓ ... அஜ்ஜுகா, இனிக்கப் பாடுபவளே ...

(அவன் ஏங்கி அழுகிறான்)

<பரிவிராசகர்> : சாண்டில்யா வேண்டாம்.

<சாண்டில்யன்> : விலகிப்போகும். நெஞ்சமில்லாத மனிதரே, உம்மைப்போல என்னை நினைத்தீரோ?

<பரிவிராசகர்> : மகனே வா, பாடங்கேள்.

<சாண்டில்யன்> : ஆண்டவனே, எந்தப் பாடத்தைக் கேட்பது? கைவிடப்பட்ட இந்த அப்பாவிப் பெண்ணுக்கு எப்படி வைத்தியம் செய்வது என்றா?

<பரிவிராசகர்> : மருத்துவ விதிகளை வைத்துக்கொண்டு நீ என்ன செய்யப்போகிறாய்?

<சாண்டில்யன்> : உமது யோகாசனத்தின் பலனே பாவந்தான்.

<பரிவிராசகர்> : (தனக்குள்) கடமையின்பால் இந்த அப்பாவிப் பயலின் அசட்டை. சிறிது உலகத்தொடர்பொன்றும் கெடுதலில்லை என்னும் மஹேஸ்வர ஆசாரியர்களின் சொல்லைக் கேட்டிருக்கிறான். யோகாசன சக்தியினால் இந்த ராஜகணிகையின் உடலினுள் நுழைந்து ஆன்மா ஒன்று உள்ளது என்பதை இவனுக்கு எடுத்துக்காட்டுகிறேன்.

<ராஜகணிகை> : (விழித்தெழுந்து) சாண்டில்யா ... சாண்டில்யா ...

<சாண்டில்யன்> : (மகிழ்ச்சியுடன்) ஓ .. உயிரோடிருக்கிறாள். உயிர் திரும்ப வந்துவிட்டது. இதோ ... இதோ ... இருக்கிறேன்.

<ராஜகணிகை> : கழுவாத உன் கையினாலே என்னைத் தொடாதே!

<சாண்டில்யன்> : மிகப் புனிதமாயிருக்கிறாள் இவள்.

<ராஜகணிகை> : வா மகனே ... பாடங்கேள்.

<சாண்டில்யன்> : இங்கேயும் பாடங்கேளா? நான் ஆண்டவனிடமே கேட்கிறேன். (நெருங்கி) ஆண்டவனே, ஐயோ ஆண்டவர் இறந்துவிட்டார். ஓ ... நிலைபெயராத ஒன்றே, யோகாசனத்தின் சொத்தே, ஓ ... குருவே ... பெரும் அறிஞரும் சாகிறார்கள்.

(பரப்பிரிதிகாவும் தாயும் வருகிறார்கள்)

(தொடரும்)
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.