![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 13
![]() இதழ் 13 [ ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2005 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
வாசகர்களுக்கு வணக்கம்.
வரலாறு.காமின் பதிமூன்றாவது இதழை வெளியிடும் தருவாயில், இதழ் ஆரம்பித்து ஒரு வருடம் முடிந்து இரண்டாம் வருடத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறோம். தமிழில் 100% வரலாற்றுக்காக ஓர் இதழை ஆரம்பிப்பது சுலபம். ஆரம்பத்திலிருக்கும் உற்சாகம் குன்றாமல், காற்றில் கரைந்துவிடும் தீப்பொறி போலல்லாமல், பாரதி கண்ட அக்கினிக் குஞ்சாய்த் தொடர்ந்து இருப்பதுதான் கடினம். இந்த ஓராண்டில் கொஞ்சம் கூடத் தொய்வு எங்களுக்குத் தோன்றாததற்கு இரண்டு காரணங்கள். முதலாவது, மகேந்திரர், இராஜசிம்மர், இராஜராஜர், இராஜேந்திரர் போன்ற மஹா புருஷர்களால் தமிழகமெங்கும் பரவியிருக்கும் வரலாற்றுப் பொக்கிஷங்கள். இரண்டாவது, ஒவ்வொரு இதழையும் படித்துக் குறை நிறைகளைச் சுட்டி எங்கள் உற்சாகம் சிறிதும் குன்றாமல் பார்த்துக்கொள்ளும் வரலாற்று ஆர்வலர்களாகிய வாசகர்கள். இவ்விருசாரார்க்கும் இந்நேரத்தில் எங்கள் நன்றியை உளமாறக் கூறிக் கொள்கிறோம். ![]() உண்மையான உழைப்பும் கூர்ந்த பார்வையும் இருப்பின் வரலாற்றுக் கதவுகள் தட்டாமலே திறந்து கொள்ளும் என்றொரு தலையங்கத்தில் கூறியிருந்தோம். அவ்வாக்கைச் சத்தியமாக்கும் வகையில் எங்கள் திருவலஞ்சுழிப் பயணங்கள் அமைகின்றன. இது வரை ஒரு பயணமேனும் பிரமிப்பூட்டும் ஒரு புதிய தகவலையாவது எங்களுக்குக் காட்டாமல் இருந்ததில்லை. எங்களது ச்மீபத்திய பயணத்தில் (நிஜமாகவே) வெளிச்சத்திற்கு வந்தவர்தான் ஏகவீரி பிடாரி. தமிழ்நாட்டின் மிகத் தொன்மையான காளிகளுள் ஒருவராகக் கொள்ளத்தகும் இவரின் அழகை வர்ணிப்பதற்குக் கம்பரும் கபிலருமே வார்த்தையின்றி தவிப்பார்கள். புன்சிரிப்பைக் கூறுவதா? செவியிலிருக்கும் மனிதக் குழையைக் கூறுவதா? அமர்ந்திருக்கும் ஒய்யாரத்தைக் கூறுவதா? ஆயுதமும் மணியும் ஏந்திய கரங்களைக் கூறுவதா? அல்லது வெறும் கையை விஸ்மயத்தில் வைத்திருக்கும் பாங்கைக் கூறுவதா? என்றெல்லாம் நாம் யோசிக்க ஆரம்பித்தால், எமது யோசனையை முடிப்பதற்குள் நீங்கள் திருவலஞ்சுழி சென்று அம்மையின் தரிசனத்தை பெற்று விடலாம். ![]() பார்த்தவுடனேயே சோழர்காலச் சிற்பம் என்று எவரும் கண்டுகொள்ளும் வகையில் இருக்கும் இச்சிற்பத்தை மனதில் வாங்கிக் கொண்டால் எந்த ஒரு சோழர்காலச் சிற்பத்தையும் அடையாளம் கண்டு கொள்வது சுலபம் என்பது அறிஞர் வாக்கு. அம்மன் சன்னதிக்குள் இருள் படிந்த ஓர் அறையில் 'அஷ்ட புஜ மஹா காளி' என்று பயமுறுத்தும் பெயருடன் இத்தனை காலம் அடைந்திருந்த ஏக வீரிப் பிடாரியை அடையாளம் கண்டுகொள்ள, வலஞ்சுழியிலிருக்கும் கல்வெட்டுதான் உதவியது. கல்வெட்டு குறிப்பிடும் திசையில் அல்லாது வேறொரு இடத்தில் அம்மை இருக்க, இவர்தான் ஏக வீரியா என்ற சந்தேகம் சற்றே எழுந்தது. அக்கோயிலில் பணி புரியும் ஒருவர் அம்மை ஆதியில் குடியிருந்த இடத்தைக் கூறவும் அவ்விடமும் கல்வெட்டு குறிப்பிட்ட இடமும் சரியாக பொருந்த, சந்தேக இருள் பகலவனைக் கண்ட பனி போல விலகியது. ஏகவீரி பிடாரிக் கல்வெட்டைப் பற்றிக் கூறும்போது, இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். திருவலஞ்சுழிக் கோயிலின் மேற்குப்புறமுள்ள கருவறையில் இருக்கும் ஏகவீரி பிடாரிக்கு நடைபெறும் அபிஷேகங்களைப் பற்றியும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஏகவீரி பிடாரி சாந்திக்கு செய்யும் அர்ச்சனை என்பதைக் கோபமாக இருக்கும் காளியை அமைதிப்படுத்தச் செய்யப்படும் பூஜை எனக்கொள்ளலாம். ஆனால் இன்னொரு சொற்றொடர் எங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. இதே ஏகவீரி பிடாரிக்கு 'அவபல அஞ்சனை' என்றொரு பூஜையும் நடத்தப்பட்டதாகக் கல்வெட்டு தெரிவிக்கிறது. இச்சொல் இதுவரை வேறு எந்தக் கல்வெட்டிலும் காணப்படாதது மட்டுமல்ல, கேட்டறியாததும் கூட. இப்பூஜையை நடத்துவதற்கு நிவந்தம் அளித்த பெண்மணி முதலாம் இராஜராஜரின் மாமியார். இவர் தெலுங்கு தேசத்தைச் சேர்ந்தவர். பெயர் குந்தணன் அமுதவல்லியார். ஆக, 'அவபல அஞ்சனை' என்பது தெலுங்குச் சொல்லாக இருக்கவும் வாய்ப்புள்ளது. இத்தலையங்கத்தைப் படிக்கும் வாசகர்கள் யாருக்காவது இது பற்றித் தெரிந்தால் editor@varalaaru.com க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும். இந்தியா என்னும் மாபெரும் நாட்டின் ஒரே ஒரு மாநிலம் தமிழ்நாடு. இம்மாநிலத்தில் ஒரே ஒரு மாவட்டம் தஞ்சை. தஞ்சையில் ஒரு பகுதிதான் குடந்தை. குடந்தையில் ஓர் சிற்றூர்தான் திருவலஞ்சுழி. இச்சிற்றூரில் இருக்கும் கோயில் ஒன்றே அள்ள அள்ளக் குறையா அட்சய பாத்திரமாய் விளங்குமெனில், நமது தேசம் முழுவதும் வெளிவரக் காத்திருக்கும் புதயல்கள்தான் எத்தனை? எத்தனை முறை கேட்டாலும் நல்ல இசை அலுப்புத் தட்டாது. அது போல, இதே கருத்தை எத்தனைமுறை கூறினாலும் எங்களுக்கு பிரமிப்பு குறையாது. படிக்கும் வாசகர்களுக்கும் அப்படியே என்று நம்புகிறோம்! --ஆசிரியர் குழு. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |