http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 13
இதழ் 13 [ ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2005 ] இந்த இதழில்.. In this Issue.. |
கல்வித் தலைமை என்பது எளிய நிலையல்ல. துறைதோறும் வளர்நிலைகள் நித்தமும் காணப்படும் இந்தக் காலக்கட்டத்தில், கல்வியைச் சரியான இலக்குகளில், கற்பவர் தேவைக்கேற்ப வழங்கிடும் தலைமை இன்றியமையாத ஒன்றாகும். அந்தத் தலைமை எப்படி இருக்க வேண்டும்! எப்படி இயங்க வேண்டும்? வழிகாட்டல்கள் நமக்கில்லாமல் இல்லை. நாம்தான் அந்த வழிகாட்டல்களைச் சரியான தளங்களில் ஏற்றுப் புரிந்துகொள்ள மறுத்து பழம்பாடல்கள் என்று ஒதுக்கி விட்டோம்.
நம்முடைய இலக்கியப் பேராசான்களின் கல்விக் கொள்கைகளுள் தலையாயது கற்பவை கசடறக் கற்றல் வேண்டும் என்பது. இன்று இருக்கும் கல்வி நடைமுறைகளில் இந்தக் கொள்கை பத்து விழுக்காட்டளவிலாது சாத்தியப்படுகிறதா என்பதைக் கருதிப் பார்த்தாலே தலைமையின் கடமையும், செயலூக்க எழுச்சியின் அளவும் தெற்றெனப் புலப்படும். இன்று 'கற்றல்' என்பதே கேள்விக் குறியாகிவிட்டது. பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் வாழைப்பழத்தை உரித்து அதை வாயிலும் திணித்து விழுங்கவும் வைத்துவிடும் சூழல்தான் நிலவுகிறது. இந்த 'ஊட்டல் பழக்கம்' கற்றலைக் கல்லறைக்கல்லவா அனுப்பிவிடுகிறது. எது கற்றல்? கற்றலின் நிலைகள் யாவை? ஆழக் கற்றல், அகலக் கற்றல். இவற்றுள் எது தேவை? தேவைக்கேற்பக் கற்றல் நிலைகளா? அல்லது அதிலும் பொதுவுடைமையுண்டா? கல்வி நிறுவனங்கள் பெருகியுள்ள அளவிற்குக் கல்வி பெருகியுள்ளதா? கற்றலில் தெளிவும் புரிதலும் உண்டா? இத்தனைக் கேள்விகளுக்கும் ஒரே துன்பமான பதில்தான் முன்நிற்கிறது. ஆம். நாம் கடக்க வேண்டிய தொலைவு அதிகம். அந்தப் பயணத்திற்கு இந்த மண்ணின் கல்விக் கொள்கைகளை நன்குணர்ந்த தலைமை மிகத் தேவை. பன்னாட்டு படிப்பாக இருந்தாலும் இந்நாட்டுப் படிப்பாகயிருந்தாலும் கற்றல் பொதுவான நிலை. கற்றல் என்பது வாசிப்பு மட்டுமல்ல. வாசித்ததை வாசிவாசியென்று மனனம் செய்வதும் கற்றலில் சேராது. எதைப் படிக்கிறோமோ அதைப் புரிந்துகொள்ள வேண்டும். எது புரிகிறதோ அதைச் சிந்திக்க வேண்டும். சிந்தனைதான் கற்றலின் பயனைத் தருகிறது. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு To discern the truth in everything, by whomsoever spoken, this is wisdom. என்று வள்ளுவம் சுட்டுவது இதைத்தான். கல்விக்கூடங்கள் கற்றலைப் பற்றிய இத்தகு தெளிவைத் தரமுடியுமானால் கல்வி வெற்றி பெறும். ஒருவர் எப்படிக் கற்க வேண்டும் என்பதற்குக் கூட வள்ளுவம் வழிகாட்டுகிறது. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் கடையரே கல்லா தவர் In humility they learn, standing like the poor before the rich; base are they that acquire no learning (in this manner) என்பது அவர் காலக் கொள்கை. இன்று அத்தகு நிலையில் கல்வி பெறப்படுகிறதா? கற்கவேண்டும் என்ற ஏக்கம் எங்காவது தென்படுகிறதா? ஏங்கிக் கற்றலில் உள்ள இன்பம் கற்றலைப் பூரணமாக்கிவிடும் என்பது தெளிவுதானே. கற்க என்று ஆணையிட்டு, கற்பவை மட்டுமே கற்க என்று வழிகாட்டி, அப்படிக் கற்பவற்றைக் கசடறக் கற்க என்று தெளிவுபடுத்தி அத்தகு கற்றலை 'ஏங்கிச் செய்க' என்று நெறிப்படுத்தும் தலைமை இன்று மிகத் தேவை. அறிவு வேறு கல்வி வேறு என்ற அடிப்படைப் புரிதலும் கல்வியாளர்களுக்குத் தேவை. கற்றவரெல்லாம் அறிவு பெற்றவரல்லர் என்பார் வள்ளுவர். ஆனால் அறிவு வளரக் கல்வி தேவை என்பது அவர் முடிவு. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு The more the sandy spring is dug up, more water wells up in it. The more men learn, more of knowledge do they gain. என்பார் அவர். அதனால் கல்வியை அப்பெருந்தகை கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை The precious undecaying wealth of a man is his learning. All other riches are no wealth at all. என்று விதந்துரைத்தார். கல்வி செல்வம் தான். அதனால் தான் அதைப் பெறும் வழியைச் செம்மைப்படுத்துதல் தேவையாகிறது. அதற்கெனத் திட்டமிடும் கல்வித் தலைமையை உருவாக்குதல் இன்று நம்முன் நிற்கும் மிகப்பெரும் சவாலாக உள்ளது. எளிதான படிப்பு, விரைவான வேலை, கை நிறையப் பணம் என்பது தான் இன்றைக்குக் கல்விக் கூடங்களின் தடம் பதிப்போரின் கனவாக உள்ளது. மாறிவரும் இத்தகு சூழல்களைச் சந்திக்க மரபுசார் கல்விக்கொள்கைகளால் முடியுமா? புதிய கல்விக் கொள்கைகளைச் சூழலின் தேவைகளுக்கேற்ப உருவாக்குதல் வேண்டாமா? 'புதிய' என்ற சொல்லாட்சியும் சிக்கலானது தான். அந்தச் சொல்லைப் பற்றிய புரிதல் தளத்திற்குத் தளம் வேறுபடும். நம்முடைய மண்ணில் அருமையான விதைகள் ஊன்றப்பட்டுள்ளன. ஆனால் அவை முளைவிட மறுக்கின்றன. காரணம் நிலம் பண்படுத்தப்படவில்லை. காலங்காலமாக யாரையேனும் குறை கூறிக்கொண்டே காரியச் செழுமை தடைபட்டுள்ளது. இனியும் வாளாவிருப்பின், புத்தக மூட்டைகளாகவும் நோட்ஸ் குவியல்களாகவுமே கற்பவர் மாறிப்போவர். கற்பதும் கேட்பதும் சிந்திப்பதும் எனக் கல்வி புதுப்பரிமாணம் பெறட்டும். இந்த முக்கட்டு உத்தியை முனைப்பாக மேற்கொண்டு கற்றலைத் தளமாக்கும் தலைமையே இன்றைய தேவை. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |