![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 20
![]() இதழ் 20 [ பிப்ரவரி 15 - மார்ச் 15, 2006 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
வாசகர்களுக்கு வணக்கம்.
வரலாற்றை ஆய்ந்து பார்க்கும்போது நமது முன்னோர்களும் நம்மைப் போல வார இறுதிகளுக்கும் விடுமுறை நாட்களுக்கும் ஏங்கினரா என்று நாமறியோம். நம்மைப் பொறுத்த வரையில் விடுமுறை நாட்கள் நம்மை மற்ற நாட்களில் உழைக்கத் தேவைப்படும் உற்சாக மருந்தாகத்தான் இருக்கின்றன. வருடத் தொடக்கத்தில் நம்மை மகிழ்விக்கும் தைப் பொங்கலுக்குப் பின் நமக்கு மகிழ்வளிக்கும் விடுமுறை இந்தியக் குடியரசு தினம். உயிரைத் துச்சமென மதித்து நாட்டின் நலனுக்காய்ப் போராடிய செம்மல்களைப் பற்றி நினைத்தபடி மாணவர்களும், வாலியை இராமன் மறைந்து நின்று கொன்றது சரியா தவறா என்று வாதித்தபடி பட்டிமன்றப் பேச்சாளர்களும், தமிழ் இரசிகர்களின் இதயம் கனியும் வகையில் ஆங்கிலத்தில் கதை பேசும் வட நாட்டுப் புது முக நடிகையின் பேட்டியைப் பார்த்தபடி சிலரும், இந்தியத் தொலைகாட்சியில் முதல்முறையாக ஒலிபரப்பப்படும் படு திராபையான திரைப்படத்தைப் பார்த்தபடி பலரும் குடியரசு தினத்தைக் கழிக்கின்றோம். குடியரசு நாளை நாம் எப்படிக் கழித்தாலும் நம் எல்லோரின் எதிர்பார்ப்பையும் பெறும் விஷயமாக விளங்குவது அன்றைய தினத்தில் வெளியிடப்படும் ஜனாதிபதி விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் விருதுப் பட்டியலாகும். இவ்விருதுகள் தொடக்க காலத்தில் இருந்த நிலைக்கும் இன்றைய நிலைக்கும் இருக்கும் வித்தியாசங்களை ஆராய்ந்தால், விருதுகளின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிப் பல சுவாரசியமான தகவல்கள் கிடைக்கக்கூடும். கடந்த சில வருடங்களை மட்டும் கருதும் போது, சில கருத்துக்கள் தோன்றுகின்றன. நம் தேச முன்னேற்றத்திற்கும் மேம்பாட்டிற்கும் உபயோகமாய்ப் பல துறைகள் இருப்பினும், சில துறை நிபுணர்களுக்கே விருது பெரும் பேறு அமைந்திருக்கின்றது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், திரைப்படத் துறை, விளையாட்டுத் துறை, இசை, நாட்டியம் போன்ற மற்ற கலைத் துறைகளுக்கு எல்லாம் விருதுகளை வழங்கியபின் ஏதேனும் மிச்சமிருப்பின் மற்ற துறைகளுள் சிலவற்றிற்குக் குலுக்கல் முறையில் விருதுகள் கிடைக்கும். பிரபலமாய் இருப்பதால் திரைப்பட நடிகருக்கோ, கிரிக்கெட் வீரருக்கோ விருது பெறும் சாத்தியக்கூறு பிரபலமில்லாத கைதேர்ந்த இருதய சிகிச்சை நிபுணரைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது என்ற வாதம் ஏற்க முடியாத ஒன்று. படிப்பறிவில்லா பாமரர்கள் பலரின் சிபாரிசின் பேரில் கொடுக்கப்படும் விருதுகளுக்கு வேண்டுமானால் பிரபலங்கள் தேர்ந்தெடுக்கப்படலாம். ஜனாதிபதியின் பெயரால் கொடுக்கப்படும் விருதுகளின் பட்டியலைத் தயாரிப்பவர்களும் பிரபலங்களையே தேர்ந்தெடுப்பார்களெனில், அம்முடிவை எடுப்பவர்கள் அறிவிலிகளாகத்தானே இருக்க முடியும்? இந்தியாவின் பெயரை உலக அரங்கில் பறை சாற்றும் வகையில் கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்ற லியாண்டர்-மகேஷ் ஜோடியையோ அல்லது யாருமே குவிக்காத அளவு ஓட்டங்களையும் சதங்களையும் குவித்திருக்கும் சச்சின் டெண்டுல்கரையோ கௌரவிப்பது எல்லா வகையிலும் பொருத்தமே. அதே சமயத்தில், எப்பொழுதோ ஒருமுறை முதன்மை ஆட்டக்காரர் ஒருவரை வீழ்த்திவிட்டதாலும், விளம்பரங்களுக்குத் தோதான உடலமைப்பைக் கொண்டிருப்பதால் நாடெங்கும் பிரபலமாக இருப்பதாலும் மட்டுமே கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அதிக பட்சம் இரண்டாவது சுற்றுவரை முன்னேறும் சானியா மிர்சா போன்ற வீராங்கனைகளுக்கு பத்மஸ்ரீ விருதுகளை விரயம் செய்வது மிகுந்த வேதனையளிக்கிறது. ஓவியம், இலக்கியம், பாரம்பரிய இசை போன்ற துறையினருக்கே lobbying என்று சூசகமாய் சொல்லப்படும் காக்காய் பிடிக்கும் சூட்சுமம் தேவைப்படும்போது, வரலாறு போன்ற துறைகளில் விருதுகள் வரண்ட நிலையில் இருப்பதில் வியப்பில்லை. சில துறைகளில் முளைவிட்டாலே விருதினைப் பெரும் வாய்ப்பு இருந்தாலும் வரலாறு போன்ற துறைகளில் திரு.கூ.ரா.சீனிவாசனைப் போன்ற மேருவாக விஸ்வரூபம் எடுத்தாலன்றி விருதினைப் பெற வாய்ப்பில்லை. 24.03.1991-இல் பத்ம பூஷண் விருதைப் பெற்ற இவரைப் பாராட்டி ஆவணம் இதழ் வெளியிட்ட குறிப்பில், "தொல்லியல் உலகின் மேருவாய் மதிக்கப்படும் திரு.கூ.ரா.சீனிவாசன் அவர்களே இத்துறையின் சார்பில் பத்மபூஷண் விருது பெற்ற முதல் அறிஞர் ஆவார்", என்கிறது. அதன்பின் 15 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட போதிலும் இத்துறையில் முதலும் கடைசியுமாய் விருது பெற்றவராய் கூ.ரா.சீனிவாசன் விளங்குவது வியப்புக்கும் நகைப்புக்கும் உரியதாகும். பல நூறு ஆண்டுகள் பழமையான வரலாற்றினைக் கொண்ட பாரதத்தில் வரலாற்று ஆய்வைச் செம்மையாய் இது நாள் வரை ஒருவர்தான் செய்திருக்கிறார் என்பது நம்ப முடியாத விஷயம். இத்துறையில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, ஹார்வர்டு பல்கலைக்கழகம் போன்ற உலகப் பல்கலைக்கழகங்கள் போற்றும் வகையில் தமிழ்க் கல்வெட்டுகள், சிந்து சமவெளி நாகரீகம், பிராமி கல்வெட்டுக்கள் உலகிற்கு எடுத்துச் சென்றது, இந்திய ஆட்சிப் பணியில் செவ்வனே ஆற்றிய பொறுப்பு, தினமணி நாளிதழின் ஆசிரியராய்ச் செய்த சாதனைகள் என்று பன்முக ஆளுமை கொண்ட திரு. ஐராவதம் மகாதேவன் போன்ற பெருந்தகைகளின் சாதனைகளுக்கு முன்னால், விளையாட்டை விட விளையாடும் போது அணியும் ஆடையின் அளவின் மூலம் சலசலப்பை ஏற்படுத்தும் சானியா போன்றோர்களின் சாதனை கால் தூசு பெறாத போதும், ஐராவதம் போன்ற அறிஞர்களை, அறிவியலாளர், சிந்தனையாளர், கீழ்த்தர அரசியலில் ஈடுபடாதவர் என்றெல்லாம் பெயர் எடுத்திருக்கும் நமது இன்றைய ஜனாதிபதியின் பெயரால் கொடுக்கப்படும் விருதுகள் கூடக் கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையைக் கண்டு நமது மனம் வருந்தினாலும், இத்தகைய போக்கால் இழப்பு விருதின் கௌரவத்துக்கே தவிர அறிஞர்களுக்கு அல்ல என்ற எண்ணமும் தோன்றி நம்மைத் தேற்றுகிறது. பின் குறிப்பு: கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்பு தொடங்கி, தொடர்ந்து நடந்த மா.இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தின், திருவலஞ்சுழி கள ஆய்வுகள், 'வலஞ்சுழி வாணர்' என்ற புத்தக வடிவை அடைந்திருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த மகிழ்வான தருணத்தில், தமிழறிஞர் டாக்டர் மா.இராசமாணிக்கனாரின் நூற்றாண்டினையொட்டிச் சிறப்பிதழாக வரலாறு.காமின் மார்ச்சு மாத இதழ் மலரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். -- ஆசிரியர் குழு this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |