http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 20

இதழ் 20
[ பிப்ரவரி 15 - மார்ச் 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

ஜனாதிபதி விருதுகள் என்னும் கேலிக் கூத்து
ஜனாதிபதி விருதுகள் என்னும் கேலிக்கூத்து
பழுவூர் - 9
கல்வெட்டாய்வு - 14
படிமவியல் - ஒரு பார்வை (ஆய்வுத் தொடர்)
மலைநடுவே மலையரசன்
வலஞ்சுழி வாணர் - வரலாற்று ஆய்வும் ஆய்வு வரலாறும்
ஆயிரம் வருஷத்துப் புன்னகை - I
சங்கச் சிந்தனைகள் - 8
இதழ் எண். 20 > கலைக்கோவன் பக்கம்
போரில் வீரர்கள் இறந்த செய்தி இக்கல்வெட்டில் மிகத் தெளிவாகச் "சென்ற இடத்தில் பட்ட" என்ற சொற்களால் விளக்கப்படுகிறது. ஆனால் பாண்டியனோ, ஈழத்தரையனோ இறந்ததாகக் குறிப்பு இல்லை. இருப்பினும் போரில் பாண்டியனும் ஈழதரையனும் இறந்ததாக 1926ஆம் ஆண்டுக் கல்வெட்டறிக்கை தயங்காமல் கூறுகிறது. இக்கல்வெட்டு பதிப்பிக்கப் பட்டுள்ள கல்வெட்டுத் தொகுதி மூன்றில், இப்படியொரு செய்தியில்லை67. 'அஸ்திக்கடை' என்ற சொல்லுகு 'Fierce Battle' (கடுமையான சண்டை) என்று ஆங்கில மொழிபெயர்ப்பு தந்துள்ளார்கள். அடிக்குறிப்புப் பகுதியில், 'அஸ்திக் கடை செய் நான்று, The translation of this phrase by a deadly battle is purely conjectural. It is not found in the dictionaries. The word may also mean a 'fight on elephant' என்று விளக்கம் தந்துள்ளார்கள்68. திரு. நீலகண்ட சாஸ்திரியார் சோழர்களைப் பற்றிய தம்முடைய நூலில் வெள்ளூர்ப் போரில் தோற்றோடிய இராசசிம்மன் முதலில் இலங்கைக்குச் சென்றதாகவும், பின் கேரளம் சென்று உறைந்ததாகவும் மகாவம்சக் குறிப்புகளின் உதவியுடன் மெய்ப்பித்துள்ளார்69. திருவாலங்காட்டுச் செப்பேட்டு வரிகளும் இதை உறுதி செய்கின்றன.

"Encircled by the first of his (Parantaka's) prowess, the Pandya as if desirous of cooling the heat caused by it, quickly enetered the sea (embarked for ceylon) abandoning his royal state and the Kingdom inherited from his ancestors"70.

திரு. பண்டாரத்தாரும் இதே செய்தியைத் தம் நூலில் தருவதன் மூலம் இராசசிம்மன் வெள்ளூர்ப் போரில் இறக்கவில்லை என்பதைத் தெளிவாக்குகிறார்71. நிலைமைகள் இப்படியிருக்க 1926ஆம் ஆண்டுக் கல்வெட்டறிக்கையும், கல்வெட்டுத் தொகுதி பதின்மூன்றும்72 ஏனோ தெரியவில்லை பாண்டியனையும் ஈழதரையனையும் போரில் தீர்த்துக்கட்டி விடுகின்றன.

'போரில் இறந்தவன் கண்டன் அமுதன். இதைக் கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோயில் கல்வெட்டு கூறுகிறது' என்ற தியாகராசனின் கருத்து அடிப்படையற்றதாகும், கீழப்பழுவூர்க் கல்வெட்டை முன்பே பார்த்தோம். இக்கல்வெட்டின் ஆறாம் வரியிலிருந்து பத்தாம் வரி வரையுள்ள பகுதிதான் வெள்ளூர்ப் போரைப் பற்றிப் பேசுகிறது. பெருமானடிகளான முதற்பராந்தகனோடு, பாண்டிய மன்னன் ஈழப்படை கொணர்ந்து, வெள்ளூரில் போரிட்டபோது கண்டன் அமுதன் வீரஸ்ரீ பெற்றதை இவ்வரிகள் சுட்டுகின்றன. இதில் எந்த இடத்தில் கண்டன் அமுதன் இறந்த குறிப்பு உள்ளது என்பதுதான் விளங்கவேயில்லை. இவரும், 'அஸ்திக் கடை செய் நான்று' என்ற சொல்லாட்சியைத்தான் தவறாகப் பொருள் புரிந்து கொண்டு பேசுகிறாரோ என்றால், அதற்கும் கல்வெட்டு வரிகள் கச்சிதமாய் அமையவில்லை. 'அஸ்திக் கடை செய் நான்று' பாண்டியனுக்கும் ஈழதரையனுக்கும் பொருந்துமே அல்லாது கண்டன் அமுதனுக்குப் பொருந்த 'தமிழ்' அனுமதிக்கவில்லை. எனவே எந்த அடித்தளமும் இல்லாமல் 'கல்வெட்டே கண்டன் அமுதன் இறந்த செய்தியைத் டஹ்ருவதாக' இவர் குறிப்பது பிழையாகும்.

'பராந்தகனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டிற்குப் பிறகு கண்டன் அமுதன், கல்வெட்டுகளில் யாண்டும் குறிப்பிடப்படவில்லை' என்பது இவரது அடுத்த கருத்து. இக்கருத்தைத் தகர்க்கிறது திருவையாற்றுப் பஞ்சநதீசுவரர் கோயில் கல்வெட்டொன்று. கண்டன் அமுதன் வெள்ளூர்ப் போரில் இறக்கவில்லை என்பதற்கான இவ்வலிமையான கல்வெட்டுச் சான்று பரகேசரிவர்மனின் பதினான்காம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு பழுவேடரையன் கண்டன் அமுதன் திருவையாற்று மகாதேவர்க்கு நந்தா விளக்கொன்றெரிக்கத் தொண்ணூறு ஆடுகள் கொடையாகத் தந்ததைக் குறிக்கிறது73. முதலாம் பராந்தகனுடையதான இப்பதினான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் கொடையளித்துள்ள கண்டன் அமுதன் எப்படிப் பராந்தகனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் நடந்த வெள்ளூர்ப் போரில் இறந்திருக்க முடியும்? திரு. தியாகராசனும், திரு. சுந்தரேசனாரும் பஞ்சநதீசுவரர் கல்வெட்டைப் பார்த்திருந்தால் கண்டன் அமுதன் இறந்ததாகக் கருத்து கொண்டிருக்க மாட்டார்கள் என்பதோடு, பராந்தகனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டிற்குப் பிறகு அமுதனைப் பற்றிய கல்வெட்டேயில்லை என்று தியாகராசன் அடித்துச் சொல்லியிருக்கவும் மாட்டார்.

பழுவூரில் தியாகராசனால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கல்வெட்டு குறிக்கும் பள்ளிப்படைக் கோயில், கண்டன் மறவனால் 'ஸ்ரீகண்ட ஈசுவர்ம்' என்ற பெயரில் எழுப்பப்பட்டதாகும். இது கண்டன் அமுதனுக்கு எழுப்பப்பட்டது என்று தினமலரிலும், குமரன் கண்டனுக்கு எழுப்பப்பட்டது என்று அஞ்சல்வழிக் கருத்தரங்கக் கட்டுரையிலும் தியாகராசன் குறிப்பிட்டுள்ளார். இன்றைக்குச் சுவடழிந்து போயிருக்கும் இப்பள்ளிப்படைக் கோயில் கண்டன் அமுதனுக்கோ குமரன் கண்டனுக்கோ எழுப்பப்பட்டதல்ல74. கண்டன் அமுதன் கி.பி. 919இல் வெள்ளூர்ப் போரில் இறக்கவில்லை என்பதை முன்னரே நிறுவியுள்ளோம். 'ஸ்ரீகண்ட ஈசுவரம்' என்ற பெயரே இக்கோயிலுக்குரிய மன்னர், கண்டன் என்ற இயற்பெயரை உடையவர் என்பதைத் தெளிவாய்த் தெரிவிக்கிறது. இந்நிலையில் இக்கோயிலை அமுதன் என்ற இயற்பெயரை உடையவரின் பள்ளிப்படையாகக் காட்டுவது எப்படிப் பொருந்தும்? இதைச் சற்றுக் காலங்கடந்து புரிந்துகொண்ட நிலையில்தான் தியாகராசன் தம் இரண்டாவது கட்டுரையில் இக்கோயிலைக் குமரன் கண்டனுடையதாக்கிவிட்டார். இப்பள்ளிப்படைக்குரியவர்களாய் இருவரைத்தான் கொள்ள முடியும். ஒருவர் தியாகராசன் குறிக்கும் குமரன் கண்டன். மற்றவர் குமரன் மறவனின் மகனான மறவன் கண்டன். திரு. தியாகராசன், 'குமரன் கண்டன் தொனொடை மண்டலப் போரில் கலந்துகொண்டு வீர மரணம் எய்திவிட்டார் போலும். அதனால் இறந்துவிட்ட குமரன் கண்டனுக்கு இவருடயை இயற்பெயரில் ஸ்ரீகண்ட ஈசுவரம் என்ற பள்ளிப்படை எழுப்பப்பட்டது', என்று குறிப்பிடுகிறார்75. குமரன் கண்டன் தொண்டை மண்டலப்போரில் கலந்துகொண்டதற்கோ, அதில் வீரமரணம் அடைந்ததற்கோ எந்தவிதமான சான்றுகளும் இல்லாத நிலையில் இப்படியொரு கற்பனை திரு. தியாகராசனுக்கு ஏன் தோன்றியதென்று விளங்கவில்லை. முதற்கட்டுரையில் கண்டன் அமுதன் வீர மரணம் அடைந்ததாகக் கூறி அவனுக்கே பள்ளிப்படை என்றார். இரண்டாம் கட்டுரையில் குமரன் கண்டன் வீரமரணம் அடைந்ததாகக் கூறி அவனுக்குத்தான் பள்ளிப்படை என்கிறார். எத்தனை முன்னுக்குப்பின் முரண். எந்த அடித்தளமும் இல்லாத இக்கற்பனைக் கூற்றினை ஏற்றுக்கொண்டு இக்கோயிலைக் குமரன் கண்டனின் பள்ளிப்படையாகக் கருதுவதைவிட வரலாற்றில் அதிகம் பேசப்படுபவரும், திருவாலந்துறைத் திருக்கோயிலைக் கற்றளியாக்கியவருமான மறவன் கண்டனே இப்பள்ளிப்படைக் கோயிலுக்குரிய பெருமகனாவார் எனக் கொள்வதே பொருந்துவதாகும். மேலும் இக்கோயிலை எழுப்பியவன் இவர் மகனான கண்டன் மறவன் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அரிய சாதனைகளைச் செய்த தன் அன்புத் தந்தைக்கு மகன் பள்ளிப்படை எடுத்தது முற்றிலும் பொருத்தமே.

அடிக்குறிப்புகள்
-----------------

67. Lbid., PP. 231-233
68. Lbid., See footnote 8, P.232
69. K.A. Nilakanta Sastri, The Colas, PP. 123,-124
70. Lbid., P.123
71. தி. வை. சதாசிவ பண்டாரத்தார், பிற்காலச் சோழர் வரலாறு, பக். 37
72. S.I.I. Vol.XIII, P.V.
73. S.I.I. Vol. V, Ins. No. 551
74. இரா. கலைக்கோவன், ஸ்ரீகண்ட ஈசுவரம், கட்டுரை, தமிழரசு (திங்களிருமுறை), 1-5-1988
75. இல. தியாகராசன், பழுவேட்டரையர் பள்ளிப்படைக் கோயில், அஞ்சல்வழிக் கருத்தரங்கு எண். 12., பக். 6-7this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.