http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 20
இதழ் 20 [ பிப்ரவரி 15 - மார்ச் 15, 2006 ] இந்த இதழில்.. In this Issue.. |
என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல் வையத்து
முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள் மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப் பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே. 2003 பிப்ரவரியில் பொ.செ குழுவின் முதல் யாத்திரையின் போது எங்கள் பெரியண்ணன் திரு. சுந்தர் பரத்வாஜ் அவர்களின் வழிகாட்டலில் பயணக்குழு வலஞ்சுழி வளாகத்துள் காலடி எடுத்து வைத்தது. நுழைந்தவுடனே பல விஷயங்களைக் கண்டு பிரமித்துப்போனோம். முதலாம் இராஜேந்திரர் தனது தந்தையின் முதலாண்டு நினைவாகத் திலபர்வதம் (எள்மலை) புகுந்தது இக்கோயிலில்தான் என்ற செய்தி, இது சோழர் வரலாற்றில் ஒரு முக்கியமான கோயில் என்ற முதல் விதையை எங்கள் மனத்துள் விதைத்தது. பாண்டியர் மற்றும் சேரர் படையெடுப்புகளால் சேதம் ஏற்பட்டு விடாமலிருக்கக் குளத்துக்குள் வெட்டப்பட்ட கல்வெட்டு மற்றும் முதலாம் இராஜராஜரின் இரண்டாம் புதல்வியான மாதேவடிகளின் பாழடைந்த பள்ளிப்படை போன்ற விஷயங்கள் வரலாற்றில் சுவாரசியமான பல விஷயங்கள் புதைந்துள்ளன என உணர்த்தின. சிற்பிகள் எப்படி ஒரு கோயிலைக் கட்ட ஆரம்பிக்கும் முன்னர் ஒப்பந்தத்தில் ஆவுடையார் கோயில் கொடுங்கை மாதிரியான வேலை நீங்கலாக மற்றவற்றைச் செய்வதாகக் கையெழுத்திடுவார்களோ, அதைப்போல, இக்கோயிலின் கூரை வேலைப்பாடுகளை மீண்டும் செய்வது கடினம் எனக் கூறுவர் என்ற செய்தி, கட்டடக்கலை பற்றிய முக்கியத்துவத்தையும் உணரவைத்தது. முதல் சுற்றின் வடகிழக்கு மூலையில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில்தான் முதலாம் இராஜராஜர் புதைக்கப்பட்டார் என்று யாரோ சொல்ல, இலாவண்யாவும் சத்யாவும் கிருபாசங்கரும் காலில் செருப்பில்லாமல் நாட்டியமாடியபடியே நெருஞ்சி முட்களுக்கிடையே நடந்து சென்றது இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. இவ்வாறன்ன மீள இயலா நினைவுகளை அளித்த இப்பயணத்தின்போது, சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து, திருச்சிராப்பள்ளி டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் ஆய்வின்போது உடனிருப்போம் என எண்ணவில்லை. 2005 பிப்ரவரியில் ஆய்வைத் தொடங்கி, 2006 ஜனவரியில் அவ்வாய்வு முடிவுகளைப் புத்தகமாக வெளியிட்ட முனைவர் இரா.கலைக்கோவன் மற்றும் முனைவர் மு.நளினி ஆகியோரின் பெரும்பாலான ஆய்வுப்பயணங்களின்போது அவர்களுடன் சென்று, நாங்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள் எண்ணிலடங்காதவை.
ஆகிய 10 கட்டுரைகளை உடனடிச் செய்திகளாகச் சுடச்சுட வெளியிடும் வாய்ப்புக் கிடைத்ததை, வரலாறு.காமிற்குக் கிடைத்த வலஞ்சுழி வாணரின் ஆசியாகவே கருதுகிறோம். புதிய செய்திகளைப் பெரும்பாலும் உடனுக்குடன் பகிர்ந்து கொண்டாலும், வெளியே சொல்லாத, இதுவரை வெளியிட வாய்ப்புக் கிடைக்காத தகவல்கள் பல. அவற்றில் சிலவற்றை நேயர்களுடன் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம். அனைத்தையும் கூற எவ்வளவுதான் முயன்றாலும், கட்டுரையின் முடிவிலும், கூறவேண்டிய செய்திகள் பல இன்னும் மீதமிருக்கும். வலஞ்சுழிப் பயண அனுபவங்கள் அத்தகையன. பிற ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகளைத் தங்கள் முயற்சியாகக் கூறிப் போலி கௌரவம் தேடிக்கொள்ளும் சில ஆய்வாளர்கள் மத்தியில், எங்களின் சிறு உதவிகளைக் கூட விட்டுவிடாமல், கவனத்துடன் முன்னுரையிலும் பின்குறிப்புகளிலும் உரிய தகவல்களைப் பதிவு செய்த நூலாசிரியர்களுக்கு எங்களின் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கோயிற்கலை ஆய்வுகளைக் கற்க விழைவோருக்குத் திருவலஞ்சுழி வளாகம் ஒரு பல்கலைக்கழகம். கட்டடக்கலை அறிய வேண்டுமா? தாங்குதளங்கள், தூண்கள், போதிகைகள், ஆர உறுப்புகள், இவைகளில் எத்தனை வகைகளுண்டோ, அவற்றில் பெரும்பாலானவை கொட்டிக்கிடக்கின்றன. கல்வெட்டுக்கள் படிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமா? உலகமாதேவி முதல் மூன்றாம் இராஜேந்திரர் வரை இரு நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட எழுத்தமைதிகள் காத்துக்கொண்டிருக்கின்றன. சிற்பக்கலை பற்றி அறிய வேண்டுமா? சோழர்கால ஏகவீரி முதல் பிற்கால வண்டுவாழ்குழலி வரை எண்ணற்ற இறைத்திருமேனிகள் அழகை அள்ளித்தந்து கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இலாவண்யாவும் இராமச்சந்திரனும் படித்துவந்த கல்வெட்டு இதுவரை படியெடுக்கப்படாத ஒன்று என்ற தகவல், இன்னும் பல கல்வெட்டுகள் படியெடுக்கப்படாமலிருக்க வாய்ப்புண்டு என்ற தகவலையும் சேர்த்தளித்தது. வரலாறு.காம் தொடங்குவதற்கு முன்பிருந்தே எங்கள் வரலாற்றார்வத்துக்கு ஊக்கமளித்து, ஆன்மீக பலமாக விளங்கும் எங்கள் பெரியண்ணன் அவர்கள் ஆய்வுச்செலவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்ள முன்வந்தார். உற்சாகமாகத் தொடங்கிய ஆய்வு தொய்வுறாமல் தொடர்ந்து நடைபெற அவரே காரணம். ஒவ்வொரு முறை கும்பகோணம் செல்லும்போதும் அவர் வீட்டிலேயே தங்கிக்கொள்ள அனுமதியளித்து, குளிர்பதன வசதியையும் செய்து கொடுத்தார். பைரவரின் தீவிர பக்தரான இவரைத் தமிழகத்தின் முதல் சேத்ரபாலர் ஈர்த்ததில் வியப்பில்லை. முதலில் சேத்ரபாலர் தளியை மட்டும் ஆய்வு செய்ய விழைந்து, பின்னர் முழுவளாகத்தையும் ஆய்வுக்குட்படுத்த ஊக்குவித்தார். முதல் இரண்டு பயணங்களின்போது இராமச்சந்திரனும் இலாவண்யாவும் டாக்டருடன் சென்றிருக்க, நான் அமெரிக்கா சென்றிருந்ததால் பங்கேற்க முடியவில்லை. தொலைபேசியிலேயே சேத்ரபாலர் தளியின் கட்டடக்கலை அமைப்பைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். பத்மபந்த தாங்குதளத்துடன் கூடிய ஒரு தள வேசரவிமானம். தாங்குதளமும் சுவரும் நாகரம். விமானம் வேசரம். கிட்டத்தட்ட நார்த்தாமலையிலுள்ள கட்டுமானத்துக்கு ஒப்பானது. அங்கு மூன்று தளங்களில் சதுரம் வட்டமாக மாறியது. இங்கு ஒரே தளத்தில். இந்தியா திரும்பியவுடனே, அடுத்த வார இறுதியிலேயே வலஞ்சுழிக்கு விரைந்து பார்த்ததில், தாங்குதளம் மட்டும் இருந்தது. சுவர்க்கற்கள் அங்கும் இங்குமாகச் சிதறிக் கிடந்தன. பழைய கட்டுமானத்தை முழுவதுமாகப் பிரித்து விட்டார்கள் என்ற செய்தி முன்பே எட்டியிருந்ததால், ஏமாற்றம் தவிர்க்கப்பட்டது. முதல்யாத்திரையின்போது, நாகரம், வேசரம் போன்ற விவரங்களெல்லாம் தெரியாதாகையால், சரியாகக் கவனிக்கவில்லை. இனிமேல் புதிதாகக் கட்டும்போது விமானத்தையும் நாகரமாகத்தான் கட்டுவார்கள் என நினைக்கிறேன். ஜூன் மாதம் 27ம் தேதி இரவு, பல்லாவரத்தில் என் வீட்டில் அமர்ந்தபடியே யோசித்துக்கொண்டிருக்கிறேன். நேற்றும் அதற்கு முந்தைய நாளும் சொந்த ஊரான கோபிசெட்டிபாளையத்திற்குச் சென்றுவிட்டதால் டாக்டருடன் வலஞ்சுழி செல்ல முடியவில்லையே! அடுத்த பயணத்தின்போதாவது போகமுடியுமா? எப்போது செல்கிறார்கள் என டாக்டரிடம் கேட்கலாம் என எண்ணுகிறேன். சொல்லி வைத்தாற்போல் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. உற்சாகம் துள்ளும் குரலில் அஷ்டபுஜமாகாளி என்ற பெயரில் இருட்டறைக்குள் சிறைப்பட்டிருந்த ஏகவீரி வெளிச்சத்துக்கு வந்த செய்தியைப் பகிர்ந்து கொண்டார். எவ்வளவு வேலையிருந்தாலும் அடுத்த வாரமே திருவலஞ்சுழி செல்வது என முடிவு செய்துகொண்டேன். இராமும் இலாவண்யாவும் உடனே ஒப்புக்கொண்டார்கள். சனிக்கிழமை காலை சீதாராமன் வீட்டில் அடை அவியலை நன்றாக ஒரு பிடி பிடித்துவிட்டு முறுக்கையும் தட்டுவடையையும் ஒரு பையில் போட்டுக்கொண்டு, வலஞ்சுழிக்குப் பயணமானோம். பத்தரை மணியாகி விட்டதே! டாக்டரிடம் தாமதத்திற்கு என்ன காரணம் சொல்வது என எண்ணியவாறே உள்ளே நுழைந்தோம். நாங்கள் திருச்சியிலிருந்தே 9 மணிக்கு வந்துவிட்டோம். கும்பகோணத்திலிருந்து வர இவ்வளவு நேரமா? எனக்கேட்பார் என எண்ணியிருந்தோம். வாய்விட்டுக் கேட்கவில்லை. பார்வையால் கேட்டார். அறநிலையத்துறை அதிகாரிகள் உடனிருந்ததால் தப்பித்தோம். வாருங்கள் ஏகவீரியைக் காணலாம் என அழைத்துக்கொண்டு போனார். ஆஹா! காளியை இவ்வளவு நுட்பமாக வடிக்க முடியுமா? மென்மையும் இருக்கிறது. வீரமும் இருக்கிறது. சாந்தமும் இருக்கிறது. கோபமும் இருக்கிறது. அழகும் இருக்கிறது. கம்பீரமும் இருக்கிறது. காதில் உயிருடன் துடித்துக்கொண்டிருக்கும் மனிதனைப் பாருங்கள்! சற்றே உற்றுப் பார்த்தால் அவன் துடித்துக்கொண்டிருப்பது தெரியும். ஏகவீரியை வர்ணிக்க ஆரம்பித்தால் கட்டுரையை முடிக்க இயலாது. மற்ற விவரங்களை நூலில் படித்து அனுபவிக்கவும். அடுத்தமுறை நாங்கள் சென்றிருந்தபோது, திரு.பத்மனாபன் அவர்கள் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள முதுமக்கள் தாழிகளைக் காண அழைத்துச் சென்றார். அறிமுகமாகிய பின், ஓரிரு சந்திப்புகளிலேயே மிகவும் நெருக்கமாகிவிட்டோம். உணவு வேளைகளின்போது அவரது குடும்பத்தினரின் உபசரிப்பை வாழ்நாள் முழுக்க மறக்க இயலாது. எனது பிறந்தநாளன்று அவர் வீட்டிலிருந்து சிறப்பு விருந்து கொணர்ந்ததைக் கண்டு நெகிழ்ந்துபோனேன். செஞ்சோற்றுக்கடன் தீர்க்க என்ன செய்யப்போகிறோம் எனத்தெரியவில்லை. சோழநாடு சோறுடைத்து என்பது இன்றளவும் உண்மையாகவே இருந்து வருகிறது. வரலாற்றாய்வில் எங்களை விட ஒருபடி ஆர்வம் அதிகம் எனச்சொல்லலாம். ஒருமுறை மதிய இடைவேளையின்போது தாராசுரம் சென்றிருந்தோம். வலஞ்சுழியில்தான் டாக்டரிடமிருந்து கட்டடக்கலை தொடர்பான தகவல்களைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தார். சில மாதங்களிலேயே தாராசுரம் விமானத்திலிருக்கும் பெரும்பாலான உறுப்புகளை அடையாளம் காணமுடிந்தமைக்கு அவருக்கு வரலாற்றின்பால் இருந்த ஆர்வம்தான் காரணம். இதுவரை படியெடுக்கப்படாத கல்வெட்டுகள் ஏதாவது இருக்கிறதா எனப் பார்த்து வையுங்கள் என ஒருமுறை டாக்டர் இவரைக் கேட்டுக்கொண்டார். அடுத்தமுறை சென்றபோது, கிட்டத்தட்ட வலஞ்சுழி வளாகத்தையே ஒரு வரைபடமாகத் தயாரித்து, கல்வெட்டுகள் சிதறியுள்ள இடங்களைக் குறித்து வைத்திருந்ததைக் கண்டு அசந்து போனோம். அவை எவ்வளவு உதவியாக இருந்தன என்பதை உரிய முறையில் நூலில் பதிவு செய்துள்ளனர் நூலாசிரியர்கள். ஆய்வு இறுதிக்கட்டத்தை நெருங்க நெருங்க, கட்டுரைகளும் முழுமை பெற்றுக்கொண்டே வந்தன. கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை தொடர்பான அக்கட்டுரைகளையும் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களையும் சரிபார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு அமைந்தது. அதாவது, தணிக்கைக்குழு உறுப்பினர்கள் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பார்த்து விடுவது போல. கல்வெட்டுக் காரிகை இலாவண்யா கல்லெழுத்துக்களைக் கவனித்துக்கொள்ள, நானும் இராமும் கட்டுரைகளைத் தள்ளிக்கொண்டு போனோம். கருவறையில் ஆரம்பித்து, அர்த்த மண்டபம், முகமண்டபம், கோட்டச்சிற்பங்கள், மூன்று திருச்சுற்றுக்கள் என ஒன்றுவிடாமல் சரிபார்த்துக்கொண்டே வந்த எங்களுக்கு அதுவரை புரியாமல் இருந்த பலவிஷயங்கள் புரிய ஆரம்பித்தன. கருவறைக்கு வெளியே ஹேரண்டமுனிவரின் சிலை இருக்கும். அதைச் சரிபார்த்தபோது, அவர் தலை மேல் ஒரு முக்காலி இருந்தது. இது கட்டுரையில் இடம்பெறவில்லையே என எண்ணியபடியே அண்ணாந்து பார்த்தபோது, அம்முக்காலியின் மீதமர்ந்து முனைவர் நளினி அவர்கள் மேலேயிருந்த ஒரு கல்வெட்டைப் படியெடுத்துக்கொண்டிருந்தார்கள். அதற்கு முந்தைய நாள்தான் இவ்வளவு உயரத்திலிருக்கும் கல்வெட்டை எப்படிப் படிப்பது என யோசித்துக்கொண்டிருந்தோம். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதுபோல, ஹேரண்டமுனிவரின் உதவியுடன் படித்து முடித்தார்கள். கட்டடக்கலை கட்டுரையைச் சரிபார்க்கும்போது, மிகுந்த குழப்பமாக இருந்தது. தென்புறச்சுவரில் மேற்கிலிருந்து கிழக்காக ஒவ்வொரு உறுப்பாக விவரித்துக்கொண்டே வந்த கட்டுரை பாதியில் நின்றுபோயிருந்தது. வடபுறச்சுவரிலும் பாதியில் நின்றுபோயிருந்தது. ஏன் அதற்குமேல் தொடரவில்லை எனக் கவனித்தபோது, அச்சுவர்களிலிருந்த கல்வெட்டுகளும் பாதியில் நின்று போயிருந்தன. என்னவென்று புரியாமல் டாக்டரிடம் ஓடிப்போய்க்கேட்க, வியப்பான அந்த நிகழ்வை விவரித்தார். அதாவது, முதலில், கருவறையிலிருந்து கல்வெட்டு நின்றுபோயிருந்த இடம் வரைதான் கட்டுமானம் இருந்தது. அதற்கப்பால் வெற்றுவெளியாகத்தான் இருந்திருக்கிறது. பிற்காலத்தில் திருப்பணி செய்தபோது, இதை நீட்டி, மண்டபமாக ஆக்கினர் என்றார். எதை வைத்துச் சொல்கிறீர்கள்? என்ன ஆதாரம் எனக்கேட்டோம். இரண்டு ஆதாரங்கள் இருக்கின்றன. ஒன்று கட்டடக்கலை தொடர்பானது. இரண்டாவது கல்வெட்டு தொடர்பானது. கல்வெட்டு நின்ற இடத்தில் உருள்குமுதம் வளைந்து உள்ளே செல்கிறது. உருள்குமுதம் சுவரின் முனையில் வளையும்போது ஒரு கூர்முனை ஏற்படும். அக்கூர்முனை வெளியே தெரியாவண்ணம் உட்பக்கம் குழிந்த இன்னொரு கல்லை வைத்து நீட்டியதே தெரியாமல் வித்தை காட்டியிருந்தார்கள். உற்றுக்கவனித்தால் மட்டுமே புலப்படக்கூடிய நுட்பம். அடுத்ததாக, பெறற்கரிய பேறுபெற்ற கிழக்குச்சுவரிலிருந்த இரண்டு கல்வெட்டுகளும் இந்த நீட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. அதாவது, திருமகள் சிற்பம் இருக்கும் சுவரில், 'திருமகள் போல' எனத்தொடங்கும் இராஜராஜரின் கல்வெட்டின் இடதுபக்கம் சுமார் ஒரு அடியும், கலைமகள் சிற்பம் இருக்கும் சுவரில் 'சிவசரணசேகரன்' இராஜேந்திரரின் கல்வெட்டின் வலதுபக்கம் சுமார் ஒரு அடியும் இந்த நீட்சிச்சுவருக்குள் ஒளிந்திருந்தன. கோயில் கட்டப்பட்டபோதே இச்சுவர்களை எழுப்பியிருந்தால் இரண்டு கல்வெட்டுகளும் மறைந்து போயிருக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காதல்லவா? இதுதான் விஷயம். இந்தச் சிவசரணசேகரன் கல்வெட்டைப் படித்தது ஒரு சுவாரசியமான சம்பவம். களைப்பான ஒருநாளின் மதியம் சோர்வுடன் கட்டுரைகளைச் சரிபார்த்துக்கொண்டிருந்தபோது, 'கங்கையுங் கடாரமுங் கொண்ட...' என்ற வார்த்தைகள் காதில் விழுந்தன. அவ்வளவுதான்! கிழக்கிலிருந்த நானும் இராமும், மேற்கிலிருந்த இலாவண்யாவும் சதீஷும் ஓடோடிச்சென்று, கல்வெட்டை வாசித்துக்கொண்டிருந்த நளினி மேடமையும் அவர் சொல்வதை எழுதிக்கொண்டிருந்த டாக்டரையும் சூழ்ந்து கொண்டோம். சோர்வு இருந்த இடம் தெரியவில்லை. நாங்களும் எங்கள் கண்ணில் பட்ட வார்த்தைகளை உரக்கப் படிக்க ஆரம்பித்தோம். இராஜேந்திரரின் கல்வெட்டு என்பதால், டாக்டரும் அதைத் தொந்தரவாகக் கருதவில்லை. பல புதிய தகவல்களை உள்ளடக்கியதாக இருந்தது அக்கல்வெட்டு. ஸ்வஸ்திஸ்ரீ பூர்வதேசமும் கெங்கையு ம் கடாரமும் கொண் டருளிந கோப்பர கேஸரிபம்மரான உடை யார் ஸ்ரீராஜேந்த்ர சோள சிவசரணசேகர தேவர் குடுத் தருளிந ஊர் வரியில்லி ட்டபடி கல் வெட்டியது கோப்பரகேஸ ரிபன்மரான உடையார் ஸ்ரீரா ஜேந்த்ர சோள தேவர் கு யாண்டு மூன்றாவது ... ... எனத்தொடங்கும் இக்கல்வெட்டில் இரண்டு மற்றும் மூன்றாவது சுற்றுக்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ஏகவீரி திருமுன் இருக்கும் தோட்டத்திற்கு வியாள கஜமல்லன் என்ற பெயர் இருந்தது. அங்கே அமர்ந்து உணவு உண்ட போது இராஜேந்திரர் இந்த நிவந்தத்தை அளித்தார். இராஜராஜருக்கு சிவபாதசேகரன் என்ற பெயர் இருந்ததுபோல, இராஜேந்திரருக்கு சிவசரணசேகரன் என்ற பெயரும் இருந்தது வரலாற்று வெளிச்சத்துக்கு வந்தது. ஒரு வித்தியாசம் என்னவெனில், இராஜராஜர் தனது இருபத்தொன்பதாவது ஆட்சியாண்டில்தான் இப்பெயரைச் சூட்டிக்கொண்டார். ஆனால் இராஜேந்திரர் மூன்றாம் ஆண்டிலேயே கொண்டுவிட்டார். ஆனால் மற்ற கல்வெட்டுகளின் வழியாக, இராஜராஜரின் இருபத்தொன்பதாவது ஆண்டும் இராஜேந்திரரின் மூன்றாவது ஆண்டும் ஒரே ஆண்டுதான். இருவரும் ஒரே சமயத்தில் சிவனின் பாதத்தில் சரணடைந்தார்கள் என்பது புலனாகிறது. இதுபோக, இன்னொன்றையும் இக்கல்வெட்டு பகர்கிறது. நீலகண்ட சாஸ்திரி முதல் சதாசிவ பண்டாரத்தார் வரை இராஜேந்திரர் தனது ஆட்சியின் பிற்பகுதியில்தான் கடாரத்தை வென்றதாக எழுதியுள்ளனர். இதற்குமுன் கிடைத்த பதினெட்டாம் ஆட்சியாண்டுக்கு மேற்பட்ட கல்வெட்டுகளே கடாரங்கொண்ட செய்தியினைச் சொல்லியிருந்தன. ஆனால் இக்கல்வெட்டு அக்கருத்தை அடியோடு மாற்றுகிறது. மூன்றாம் ஆட்சியாண்டிலேயே கடாரத்தை வென்றிருக்கிறார். இக்கல்வெட்டைப் படித்தபோது இவ்வுண்மை புலப்படவில்லை. கடைசி அச்சுப்பிழைத் திருத்தத்தின்போதுதான் ஆசிரியர்கள் கண்டறிந்தார்கள். எனவே, புத்தகத்தில் இச்செய்தியை வெளியிடக்கூடவில்லை. இதுபோல எண்ணற்ற சம்பவங்கள். வலஞ்சுழி ஆய்வு தொடங்கும்முன் ஒவ்வொரு கள ஆய்வின்போதும் ஓரிரு கல்வெட்டுக்களையோ, சிற்பங்களையோ, ஏதாவது ஒரு பகுதியின் கட்டடக்கலை அமைப்பையோ மட்டும் ஆய்ந்து கற்றுக்கொண்டிருந்த எங்களுக்கு, இவ்வலஞ்சுழி ஆய்வுதான் ஒரு ஆய்வை எப்படித் தொடங்கி, எப்படி முடித்து, அவற்றை எப்படிக் கட்டுரைகளாக்குவது என நேரடிப் பயிற்சியாக அமைந்தது. இவ்வாய்வு தந்த ஊக்கத்தில்தான் சிவபாதசேகரமங்கலமென்னும் உடையாளூரைக் கள ஆய்வு செய்ய முடிவெடுத்துள்ளோம். சீதாராமன் மற்றும் பத்மனாபன் உதவியுடன், முனைவர் கலைக்கோவன் மற்றும் முனைவர் நளினி வழிகாட்டலுடன், மிகுந்த ஈடுபாட்டுடன் உழைத்து, இன்னும் நிறையக் கற்றுக்கொள்ள முயல்கிறோம்.this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |