http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 20

இதழ் 20
[ பிப்ரவரி 15 - மார்ச் 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

ஜனாதிபதி விருதுகள் என்னும் கேலிக் கூத்து
ஜனாதிபதி விருதுகள் என்னும் கேலிக்கூத்து
பழுவூர் - 9
கல்வெட்டாய்வு - 14
படிமவியல் - ஒரு பார்வை (ஆய்வுத் தொடர்)
மலைநடுவே மலையரசன்
வலஞ்சுழி வாணர் - வரலாற்று ஆய்வும் ஆய்வு வரலாறும்
ஆயிரம் வருஷத்துப் புன்னகை - I
சங்கச் சிந்தனைகள் - 8
இதழ் எண். 20 > பயணப்பட்டோம்
மலைநடுவே மலையரசன்
ம.இராம்நாத்
செல்லும் வழி

சென்னையில் உள்ள கிண்டியிலிருந்து குரோம்பேட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். திடீரென்று ஏதோ தோன்ற, சட்டென்று விமான நிலையத்திற்கு எதிரில் உள்ள பாதையில் வண்டியைத் திரிசூலநாதர் கோவிலை நோக்கிச் செலுத்தினேன். கோவிலுக்குச் செல்ல இந்திய ரயில்வே துறையின் அனுமதி மிகவும் முக்கியம். ஏனென்றால், செல்லும் வழியில் சற்று தூரத்திலேயே ஒரு ரயில்வே தடுப்பு உள்ளது. இந்தத் தடுப்பைத் தாண்டித்தான் நாம் கோவிலுக்குச் செல்ல வேண்டும். இந்தக் கோவிலுக்கு அருகில் உள்ள திரிசூலம் ரயில் நிலையத்திலிருந்து நடந்தும் செல்லலாம். இதைக் கடந்து சுமார் அரை மைல் தொலைவு உள்ள பாதையில் பயணித்தால், செல்லும் வழியில் வலது பக்கத்தில் உள்ளடங்கி உள்ள கோவில் வளைவு நம்மை வரவேற்கிறது. திரிசூலம்1 போன்று மூன்று மலைகளின் நடுவே இந்த கோவில் உள்ளது. இதுவே இவ்வூர் இப்பெயர் பெற காரணமாகவும் இருந்திருக்கலாம்.

1பல்லவபுரமான வானவன் மாதேவிச் சதுர்வேதிமங்கலம், திருநீற்றுச் சோழ நல்லூர், சுரத்தூர், திருச்சுரம், பிரம்மபுரி என பலப்பெயர்கள் இருந்ததாகக் கோவில் புத்தகத்தில்(கல்வெட்டில்?) குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவில் அமைப்பு

கோவிலின் நுழைவுப்பகுதி கிழக்கு நோக்கியுள்ளது. நிலைகள் ஏதும் இல்லாத நிலையில் கோபுரம் உள்ளது. பேச்சு வழக்கில் மொட்டை கோபுரம்-னு சொல்லுவோமே அதேதானுங்க. நுழைந்தவுடன் நமக்கு முதலில் தென்படுவது தற்போது கோவில்களில் அரிதாகிவரும், கொடிமரம் தான். கொடிமரம் உள்ள கோவில்களில் வருடந்தோறும் பிரம்மோத்ஸவம் நடைபெறவேண்டும் என்பது பெரியோர் கூற்று. ஆனால் இங்கு பிரம்மோத்ஸவம் எதுவும் தற்போது நடைபெறுவதில்லை எனக்கூறுகின்றனர். அடுத்து கொடிமரத்தைத் தாண்டி உள்ளது நந்தி. இதை அடுத்து வெளிமண்டபம். இதில் உள்ள ஒவ்வொரு தூண¢லும் ஒரு புடைப்புச்சிற்பம் உள்ளது. இடது பக்கத்தில் உள்ள முதல் தூணில் சரபேஸ்வரர் புடைப்புச்சிற்பம் உள்ளது. அடுத்து கோவில் உள்மண்டபம் மற்றும் கருவ¨ற உள்ளது.

இறைவனைச் சுற்றி வர இரண்டு சுற்றுகள் உள்ளன. கருவ¨றயைச் சுற்றி வரக் கருவ¨றக்கு வெளியே ஒரு பாதையும், கொடிமரத்தை ஒட்டினாற்போல வெளியே ஒரு பாதையும் உள்ளன. இதில் வலது பக்கச் சுவற்றில் நாம் மீன் சின்னத்தைப் பார்க்கலாம்.

சரி வாருங்கள் உள்ளே சென்று பார்ப்போம்.

விமான அமைப்பு

கருவ¨றயின் மேலே உள்ள விமானம் தூங்கானை மாடம் (கஜபிருஷ்ட விமானம்). இந்த மாதிரி விமானம் பல்லவ நாட்டில் இந்த பகுதியிலுள்ள கோவில்களில் காணலாம்.

கட்டிட அமைப்பு

அதிஷ்டானம், எண் பட்டை குமுதம் கொண்டு பாதபந்தமாக உள்ளது. சுவர்ப்பகுதியின் இடை இடையே அரைதூண்களைக் காணலாம். கோவிலைச்சுற்றி வலபிப் பகுதியில் அழகாகச் சிதிலம் அடையாமல் பூதவரி உள்ளது. கருவ¨றயின் உள்ளே உள்ள இறைவனின் அபிஷேக நீர் வெளியேற அமைக்கப்படும் கோமுகம் இங்கு யானைத்தலை உருவத்திலமைக்கப்பட்டுள்ளது.

கருவ¨ற

இங்கு கருவ¨றயின் நுழைவுப்பகுதியில் துவாரபாலகர்கள் இல்லை. அதற்கு பதில் சற்றுத்தள்ளி வலதுபக்கம் முருகனையும், இடது பக்கம் விநாயகரையும் காணலாம். கருவ¨றக்கு வெளியே 16 கால் முகமண்டபம் உள்ளது. கிழக்கு நோக்கியுள்ள நிலையில் கருவ¨றயின் உள்ளே சிவபெருமான் லிங்கவடிவில் திரிசூலநாதர் எனும் பெயர் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கருவ¨றயின் வடக்குப் பக்கத்தில் தேவி திரிபுரசுந்தரி எனும் பெயரில் கொலு வீற்றிருக்கிறாள். தேவியின் முன்கைகள் இரண்டும் அபயஹஸ்தத்திலும், வலது பின்னங்கையில் அக்கமாலையும் இடது பின்கையில் மழுவும் உள்ளது.

தேவகோஷ்டங்களும் மயக்கும் மகரதோரணங்களும்

இங்கு கருவ¨றயை சுற்றி வரும் பொழுது நாம் காணும் கோஷ்டதெய்வங்களையும் அதற்கு மேலே உள்ள ஒவ்வொரு மகரதோரணத்திலும் உள்ள புடைப்புச்சிற்பங்களையும் ரசிக்கக்கூடிய ந¢லையிலே நமது சிற்பிகள் படைத்துள்ளனர். தெற்குப் பக்கம் இரண்டு தேவகோஷ்டங்கள். மேற்கே ஒரு தேவகோஷ்டமும், வடக்கு பக்கம் இரண்டு தேவகோஷ்டங்களும் உள்ளன.

விநாயகர் - வாலி சுக்ரீவன் துவந்த யுத்தம்

முதலில் கருவ¨றயின் தெற்குப் பக்கத்தில் நாம் காணவிருப்பது விநாயகரை. தலையில் கிரீடம் தரித்து, வலது முன்கையில் தந்தமும், வலது பின்கையில் அங்குசமும், இடது முன்கையில் கொழுக்கட்டையும். அந்தக் கொழுக்கட்டையைத் தனது தும்பிக்கையால் எடுப்பது போன்ற நிலையில், தும்பிக்கை இடதுபக்கமாக திரும்பிக் கொழுக்கட்டையைத் தொட்ட வண்ணமாக உள்ளது. இடது பின்கையில் அக்கமாலையும், மலரையும் வைத்துள்ளார். காதுகள் இரண்டும் வெளிப்புறம் நன்றாக இழுத்துப் பார்ப்பதற்கு யானையின் காதுகள் போன்று தெளிவாகத் தெரிகின்றன. பாம்பினாலான முப்புரிநூல் (நாக யக்ஞோபவீதம்) அணிந்து தாமரை போன்ற ஆசனத்தில் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். இவரது தலைக்கு மேலே இரண்டு பக்கமும் தீப்பந்தங்கள் காண்பித்துள்ளனர். இதற்குக் காரணம் தெரியவில்லை.



விநாயகரின் கோஷ்டத்திற்கு மேலே உள்ள மகரதோரணத்தில் இரண்டு வானரங்கள் சண்டை போடுவது போன்று ஒரு சிற்பம் காட்டப்பட்டுள்ளது. இப்படி ஒரு காட்சியைப் பார்த்தடவுடன் நமக்குத் தோன்றுவது வாலி சுக்ரீவன் சண்டைக்காட்சிதான். நமது முன்னோர்களைப் பார்த்த பரவசத்தில் அதைச்சுற்றியுள்ள வேலைப்பாடுகளைக் காணத்தவறாதீர்கள். இந்த வேலைப்பாடுகளை உற்றுப் பார்த்தால் புலிக்கச்சு போன்றுள்ளது.



அந்த காலத்திலேயே சிவன் கோவிலில் ராம காதையில் வரும் நிகழ்வுகளுக்கு உருவம் கொடுத்திருப்பது, சிற்பிகளுக்குக் கொடுத்துள்ள சுதந்திரத்தைக் காட்டுகிறது.

தட்சிணாமூர்த்தி - சோமாஸ்கந்தர்

விநாயகருக்கு அடுத்து உள்ள கோஷ்டத்தில் நமக்குத் தரிசனம் அளிப்பவர் தட்சிணாமூர்த்தி. அவர் கைகளில் என்ன வைத்துள்ளார் எப்படி அமர்ந்துள்ளார் என நாம் கவனிக்கும் முன்னே நம்மை ஈர்ப்பது அவரது வசீகரப்புன்னகை தான். என்னே ஒரு வசீகரம்! தலையில் உள்ள முடி பறப்பது போல ஒரு அமைப்பு. உற்றுப்பார்த்தால் அது கற்றை கற்றையாக உள்ள குழல் முடி. தலையில் சடை மகுடம், வலது காதில் பனையோலைக்குண்டலம், இடது காதில் குண்டலம். கழுத்தில் ருத்திராட்சமாலை, வரி வரியாக வேலைப்பாடுகளுடன் கூடிய சரப்பளி இவற்றின் நடுவில் பூவுடன் கூடிய கண்டிகை. மார்பில் முப்புரி நூல். முப்புரி நூலில் எத்தனை நூல்கள் உள்ளன என்று கூட நாம் எண்ணிவிடலாம்! வலது பின்கையில் அக்கமாலையும், வலது முன்கை சின் முத்திரையிலும், இடது பின் கையில் தீப்பந்தமும், இடது முன்கையை மடக்கிய நிலையில் உள்ள இடது காலின் மேல் வைத்துள்ளார். நான்கு கைகளிலும் வளையல் அணிந்துள்ளார். வலது காலைப் பாம்பைப்பிடித்து விளையாடும் அரக்கனின் முதுகின் மேலே வைத்துள்ளார். காலை எடுத்தால் ஒருவேளை ஓடி விடுவானோ என்னமோ! காலில் தண்டை மற்றும் கழல் அணிந்துள்ளார். கீழே இரு பக்கமும் முனிவர்களுக்கே உரித்தான சடாமகுடம் மற்றும் தாடியுடன் சனகாதிமுனிவர்கள். அமர்ந்த ந்¢லையில் இவரிடம் பாடம் பயின்று வருகின்றனரோ. கேட்டுப்பார்க்கவேண்டும்! ஏதாவது புரிகிறதா என்பதற்காக.



கோஷ்டத்திற்கு மேலே உள்ள மகரதோரணத்தில் காட்டப்படுள்ள சோமாஸ்கந்தரைக் கவனிக்கத்தவறாதீர்கள். தலையில் சடை மகுடத்துடன் நெற்றிக்கண் தெரிய சுகாஸனத்தில் அமர்ந்துள்ளார். முன்னங்கைகள் அபயஹஸ்தத்திலும், குடும்பத்தில் யாராவது வெளியிலிருந்து வந்து வம்பு செய்தால் மிரட்டுவதற்கு வலது பின் கையில் கோடாரியும், பிள்ளைக்கு விளையாட்டு காட்டுவதற்கு இடது பின் கையில் மானும் வைத்துள்ளார். கழுத்தில் ருத்திராட்சமாலை அணிந்துள்ளார். இவரது மார்பில் முப்புரி நூல் மற்றும் மார்புக்கும் வயிற்றுக்கும் இடையே உதரபந்தத்தைக் காணலாம். இவரது இடது பக்கத்தில் உமை அமர்ந்துள்ளார். இவர்களின் இருவருக்கும் இடையே உமையின் மடியில் தலையில் சென்னியுடன்(பல இடங்களில் இந்த சென்னியை வைத்து முருகனை அடையாளம் காணலாம்) பால முருகன். அருகில் உள்ள உமையைப் பார்ப்போம். தலையில் கிரீடம் அணிந்துள்ளார். கழுத்தில் மாலை, மார்பில் சன்னவீரம் அணிந்து சுகாசனத்தில் அமர்ந்துள்ளார்.



இந்த மகரதோரணத்தில் சோமாஸ்கந்தரைச் சுற்றியுள்ள வேலைப்பாடுகளில் உள்ள முதல் சுற்றில் ஒவ்வொரு வளைவிலும் ஏதாவது ஒரு விலங்கு அல்லது பறவை காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லிங்கோத்பவர் - ரிஷபாரூடர்

தட்சிண¡மூர்த்திக்கு அடுத்துச் சிவனுக்குப் பின்புறத்தில் நமக்குக் காட்சி தருபவர் மேற்திசை நோக்கியுள்ள லிங்கோத்பவர். பொதுவாக மற்ற இடங்களில் உள்ள லிங்கோத்பவருக்கும், இங்கு உள்ள லிங்கோத்பவருக்கும் பார்க்கும் பொழுதே ஏதோ வித்தியாசமாகத் தெரிகிறது. லிங்கோத்பவர் உருவம் பெரிதாகவும் வித்தியாசமாக மாலைத்தொங்கல் போன்று மணியாலான சரங்கள் மேல் பகுதியில் காணப்படுகின்றன. லிங்கோத்பவரில் சிற¢ய வடிவில் காட்டப்படும் அன்னப்பட்சியும், வராகரும் இங்கு பெரிய வடிவில். அன்னப்பட்ச¢ தாழம்பூவிடம் பேசுவது போலவும், வராகர் பூமியைத் தோண்டுவது மிகத் தெளிவாகவும் காட்டப்பட்டுள்ளன. வராகரை உற்று பார்த்தால், பொதுவாக மனிதன் எப்படிக் கைகளால் பூமியைத் தோண்டுவானோ, அப்படி வராகர் தனது கைகளால் தோண்டுவது மிக இயல்பாகக் காட்டப்பட்டுள்ளது. உற்றுப்பார்த்தால் இன்னும் பலவற்றைக் கண்டுபிடிக்கலாம். அதாவது பன்றி உருவத்திற்கு முப்புரி நூல், கைகளில் வளையகள். குட்டிப்பசங்க போனால் கூடப்போகிறவர்களுக்கு ஒரு கேள்வி நிச்சயம். இவ்வளவு பார்த்துவிட்டு நடுவில் உள்ள சிவனைப் பார்க்காவிட்டால் எப்படி? தலையில் சடாமுடியுடன், காதுகளில் குண்டலம் தரித்து, வலது கையில் கோடாரி, இடது கையில் மழுவும் வைத்துள்ளார். மூக்குதான் கொஞ்சம் சிதிலம் அடைந்துள்ளது. கழுத்தில் ருத்திராட்சமாலையும் மார்பில் முப்புரி நூல் தரித்துள்ளார்.



லிங்கோத்பவருக்கு மேலே உள்ள மகரதோரனத்தில் நம்மைப் பார்த்துக் கொண்டிருப்பவர் ரிஷபாரூடர். சோமாஸ்கந்தரில் உள்ளது போலவே இங்கும் நிறைய வே¨லப்பாடுகள். ஆனால் ரிஷபாரூடரை சுற்றியுள்ள வேலைப்பாடுகளில் சோமாஸ்கந்தரில் காணப்படுவது போல விலங்குகளோ, பறவைகளோ அதிகம் இல்லை. அதற்காக இல்லவே இல்லை என்றும் கூறமுடியாது. விலங்கில்லாமல் ரிஷபாரூடர் ஏது? நடுவில் உள்ள ரிஷபாரூடருக்கு இரண்டு பக்கங்களிலும் விலங்குகளின் மீது அமர்ந்தது போன்று இரண்டு வீரர்கள். சிவபெருமான் தனது இடது கையை ஒய்யாரமாக நந்தியின் மீது வைத்து அருகில் உமையுடன் காட்சி தருகிறார். பின்னங்கைகளில் வலதில் கோடாரியும், இடதில் மானையும் வைத்துள்ளார். இந்தக் கோவிலில் எங்கெல்லாம் உமை அருகில் உள்ளாரோ அங்கெல்லாம் இடது கையில் மயக்குவதற்க்கு மானைக் கொடுத்துள்ள சிற்பியை பாராட்டவேண்டும்.



நான்முகன் - உமையெருபாகனார்(அர்த்தநாரீஸ்வரர்)

லிங்கோத்பவருக்கு அடுத்து, கோமுகத்திற்கு மேலே உள்ள தேவகோஷ்டத்தில் நான்முகன். நமக்குக் கண்களில் தெரியும் மூன்று தலைகளிலும் சடாமகுடமே தரித்துள்ளார். முன்னால் இருப்பவரின் கைகள் அபயஹஸ்தத்திலும், வலது பக்கம் இருப்பவரின் இடது கையில் அக்கமாலையும், இடது பக்கம் இருப்பவரின் வலது கையில் தாமரை மொட்டும் வைத்துள்ளனர். கைகளில் கைவளைகள் அணிந்துள்ளனர். கழுத்துக்குக் கீழே முழங்கால் வரை கதராடை தரித்துள்ளார்(எல்லாம் கோவில் உபயம்). ஆனால் படைத்தவரைப் படைத்தவன் நன்றி மறவாமல் அவரைப் பட்டாடையால் அலங்கரித்து ஆசையை தீர்த்துக்கொண்டுவிட்டான்.



இவருக்கு மேலே பட்டாடை2 அணிந்து உமையெருபாகனார் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

2.சிற்பங்களில் பொதுவாக கால்வரை வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடை காண்பிக்கப்பட்டால் அதைப் பட்டாடையாகக் கருதலாம். இங்கு உமைக்குக் கால்வரை ஆடை காண்பித்துவிட்டு இவருக்கு இடுப்பு வரை ஆடை காட்டஇயலாது. ஆகையால் இதைப் பட்டாடையாக கருதலாம்.

துர்க்கை - காளிங்கநர்த்தனம்

நான்முகனுக்கு அடுத்தது நாம் காண்பது துர்கையை. தலையில் கிரீடம் தரித்துள்ளார். முகத்தில் புன்னகை தவழ்கிறது. கைகளை அபயஹஸ்தத்தில் வைத்து அருள்பாலிக்கிறார். துர்க்கையின் அலங்காரத்தினால் இதற்கு மேல் என்னால் பார்க்கமுடியவில்லை.

இவருக்கு மேலே துவாபர யுகத்தில் கண்ணன் செய்த திருவிளையாடல் காளிங்கநர்த்தனம் உருவில் இங்கு காட்டப்படுள்ளது. வலது கையைப் பாம்பின் தலை மேலும், இடது கையால் பாம்பின் வாலைப்பிடித்த வண்ணம் இடது காலைத்தூக்கி நர்த்தனமாடிக் கொண்டிருக்கிறார்.



தென் பக்கம் திரேதாயுகக்காட்சி, வடப்பக்கம் துவாபரயுகக்காட்சி இரண்டையும் நாம் ஒரே கோவிலில் பார்ப்பது கலியுகத்தில், அதுவும் சிவன் கோவிலில். இறைவனிடத்திலே எந்த ஒரு பாகுபாடும் தேவை இல்லை என்பதை இங்கு காணலாம்.

கல்வெட்டுக்கள்

இந்தக் கோவிலில் கோஷ்டதெய்வங்களுக்குக் கீழே உள்ள பகுதியில் பல கல்வெட்டுக்களை நாம் கானலாம். இவற்றை என்னால் படிக்க முடியாததால், இந்தக் கோவிலில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பார்ப்போம்.

முதலாம் குலோத்துங்கன் - 4 கல்வெட்டுக்கள்
விக்கிரம சோழன் - 4 கல்வெட்டுக்கள்
இரண்டாம் இராசராசன் - 1 கல்வெட்டு
இரண்டாம் இராசாதிராசன் - 2 கல்வெட்டுக்கள்
மூன்றாம்குலோத்துங்கன் - 2 கல்வெட்டுக்கள்
குலசேகர பாண்டியன் - 1 கல்வெட்டு

ஒரே ஒரு குறைதான்.. இவ்வளவு அழகான கோவிலில் இருந்து, கோவில் வேண்டாம் - இவ்வளவு அமைதியான இடத்தில் இருந்து, நேரமில்லாமல் வேகமாகப் புறப்பட வேண்டியதாகிவிட்டது. கோவில் அமைந்துள்ள இடம் மிகவும் அமைதியாக உள்ளது. நகர வாழ்கையில் இருந்து சற்று அமைதியான இடத்திற்குச் செல்ல வேண்டும் எனத் தோன்றினால் மறுகணம் யோசிக்காமல் இங்கு சென்று வரலாம். பிறகு சென்னையில் இப்படி ஒரு அமைதியான இடம் உள்ளதா என ஆச்சர்யப்படுவீர்கள்.this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.