http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 30

இதழ் 30
[ டிசம்பர் 16, 2006 - ஜனவரி 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

உரிமைகளும் கடமைகளும்
பழுவூர் - 12
திரும்பிப் பார்க்கிறோம் - 2
சொக்கம்பட்டிக் குடைவரை
எத்தனை கோடி இன்பம்
நக்கன் : ஒரு சொல்லாய்வு
சங்கச்சாரல் - 13
இதழ் எண். 30 > பயணப்பட்டோம்
எத்தனை கோடி இன்பம்
ச. கமலக்கண்ணன்
ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலையுதிர் காலம்
....
....

ஒலிக்கும் பாடல் வெளிப்புறச் சூழலை அப்படியே படம்பிடிக்க, மெய்ஷின் விரைவுப்பாதையில் [Meishin Expressway] கியோட்டோவை நோக்கிக் கார் வழுக்கிச் சென்று கொண்டிருந்தது. ஆனால் சற்றுத் தொலைவிலே அவள் முகமெல்லாம் இல்லை. ஏப்ரல் மாதத்தில் வெள்ளை வெளேர் என்றிருக்கும் சக்குரா பூக்கள்தான் ஜப்பான் காடு/மலைகளுக்கு அழகு சேர்ப்பவை என்று எண்ணியிருந்தேன். ஆனால், நவம்பர் மாதம் மலரும் இரத்தச்சிவப்பு நிற மேப்பிள் [Maple] பூக்களும் சக்குராவுக்குச் சற்றும் சளைத்தவையல்ல என்று கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். சக்குராவை வரவேற்பதுபோல் மேப்பிளுக்கு விருந்தெல்லாம் வைப்பதில்லை. ஜப்பானின் தேசிய மலர் என்பதால் சக்குராவுக்கு மட்டும்தான் அந்த மரியாதை.

இந்த மேப்பிள் மலர்களின் அழகைச் சற்று பருகிவரலாம் என்று எங்கள் சர்வதேச நண்பர்கள் குழாம் [ஒரு இந்தியர், இரு ஜப்பானியர்கள், ஒரு அமெரிக்கர், ஒரு ஆங்கிலேயர், ஒரு ஆஸ்திரேலியர்] முடிவுசெய்து ஷிகா மாகாணத்திலுள்ள [Shiga prefecture] இஷியமா [Ishiyama] என்ற இடத்திலுள்ள மலைக்கோயிலுக்குச் சென்றோம். வழக்கமாக எனது SLR கேமராவின் பிலிம்/பிரிண்ட் செலவுகளுக்கு அஞ்சி, அவ்வளவாக வெளியே எடுப்பதில்லை. உடன் வருபவர்கள் அனைவரும் டிஜிட்டல் கேமரா வைத்திருப்பது இன்னொரு காரணம். ஆனால் இங்கு உள்ளே நுழைந்ததும், பத்து நிமிடங்களில் இரண்டு சுருள்கள் காலியாகிவிட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஒவ்வொரு இடத்திற்கும் சென்று வந்து, அழகாயிருக்கிறது, கண்கொள்ளாக்காட்சி என்று சொல்லிச் சொல்லி எனக்கே போரடித்து விட்டது. படிக்கும் உங்களுக்கும் அதே உணர்வு ஏற்படாமலிருக்க, இங்கே கண்களுக்கு மட்டும் விருந்து; காதுகளுக்கு எந்தத் தொந்தரவுமின்றி.'வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு', 'பட்ட காலிலேயே படும்' போன்ற பழமொழிகள் கேட்பதற்குச் சாதாரணமானவையாகத் தோன்றினாலும், வாழ்க்கையில் அவற்றை உணரும் தருணங்களில் பிரமிப்பாக இருக்கும். நல்லது கெட்டது இரண்டிற்கும் இவை பொருந்தும் என்றாலும், இன்பம் இருமடங்காகிறது. சக்குராதான் அழகு என்று எண்ணியிருந்த எனக்கு, மேப்பிளின் அழகு அந்த எண்ணத்தை மாற்றியது. இதுபோல் பல நிகழ்வுகள் பல முன்முடிவுகளை மாற்றியிருக்கின்றன என்றாலும், ஒரு சில விஷயங்களே என்றும் எண்ணி மகிழத் தக்கவை. சென்றமுறை இந்தியா வந்தபோது தஞ்சை இராஜராஜீசுவரம் விமானத்தின் மீதேறி வியந்து, அதுதான் உச்சகட்ட சந்தோஷம் என்று எண்ணியிருந்ததை மாற்றிய இரண்டாவது சந்தோஷமான இராஜராஜன் திருவாயிலின்மேல் ஏறியது அத்தகைய மறக்கவியலாத் தருணங்களில் ஒன்று.

அதேபோல், திருமதி தயா தொமிகோவின் பரதநாட்டியத்தை ஜப்பானில் கண்டு களித்துப் பேருவகையில் ஆழ்ந்திருந்த எனக்கு மயூரி யுகிகோவின் அறிமுகம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சியை அளித்தது. அறிமுகம் கிடைத்ததுதான் மிக மகிழ்ச்சியான தருணம் என்று எண்ணியிருந்ததைப் பொய்யாக்கியது அவரை வரலாறு.காமிற்காகப் பேட்டி எடுக்கக் கிடைத்த வாய்ப்பு. யொஷிகோ யுகினகா பேசிய தமிழைக் கண்டு ஆச்சரியக் கடலில் மூழ்கிப் போயிருந்த என்னை, யசுதா டெட்சுனோசுகே எழுதிக் காட்டிய தமிழ் அமுதக் கடலில் மூழ்கடித்து, மேற்கண்ட பழமொழியை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது. யொஷிகோ, யசுதா போன்ற ஒரு சிலருக்குத்தான் தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டின் மீது ஆர்வம் இருக்கும் என்று எண்ணியிருந்ததை மாற்றியமைத்தவர்கள் ஓஸகா ரஜினி ரசிகர் மன்றத்திலிருக்கும் 400 பேர்.

இப்படி நாள்தோறும் ஒவ்வொருபடி அதிகமாக இன்ப அதிர்ச்சிகளை அனுபவித்து வரும் என்னைச் சமீபத்தில் தாக்கிய சுனாமிதான் டாக்டர். அயாக்கோ இவாதனி.செப்டம்பரில் கியோட்டோவில் நடைபெற்ற சந்திரமுகி திரைப்படத்தின் 500வது நாள் விழாக்கொண்டாட்டத்தின்போது கிடைத்ததுதான் இவரது அறிமுகம். அவ்விழாவில் நான் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுப் பாராட்டப்பட்டதால் கிடைத்த புகழ், டாக்டர். அயாக்கோவின் அறிமுகப் படலத்தை எளிமையாக்கியது. கியோட்டோ பல்கலைக்கழகத்தில் மானுடவியல் [Anthropology] துறைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் இவருக்குத் தமிழ் மற்றும் தமிழகத்துடன் தொடர்பேற்படுத்தியது இவரது முனைவர் பட்ட ஆய்வுதான். நாடோடிகளைப் பற்றி முனைவர் ஆய்வு மேற்கொண்ட இவர் தமிழகத்துக்கு வந்து, திருச்சிக்கருகில் சமயபுரத்தில் இருக்கும் நரிக்குறவர் குடியிருப்பில் தங்கியிருந்தார். வழக்கமாக இந்தியாவுக்கு ஆய்வு மேற்கொள்ள வரும் வெளிநாட்டவர்களாயினும், வெளியூர்களுக்கு ஆய்வு செல்லச் செய்யும் இந்தியர்களாயினும், அவரவர் ஆய்வுக்களத்திற்கு அருகிலுள்ள விடுதிகளிலோ அல்லது வாடகை வீடுகளிலோ காலத்திற்கேற்பத் தங்குவது வழக்கம். ஆனால் இவர் வழக்கத்துக்கு மாறாக, இவரது ஆய்வுப் பொருளான நரிக்குறவர்களுடனேயே தமிழ்நாடு அரசு இவர்களுக்கு ஒதுக்கியுள்ள காலணியிலேயே சுமார் ஒன்றரை ஆண்டுகள் வசித்திருக்கிறார். நரிக்குறவர்களுடன் சேர்ந்து பழக/வசிக்கப் பெரும்பாலான இந்தியர்களே சுகாதாரக் காரணங்களுக்காகச் சங்கடப்படும் நிலையில், அவர்களுடனே தங்கி, அவர்கள் சமைப்பதையே உண்டு வாழ்ந்து வந்த இவர் நிச்சயம் பாராட்டுக்குரியவர்.'நாடோடிகளின் அன்றாட வாழ்க்கைமுறை மற்றும் சடங்குகளைப் பற்றி அறிந்துகொள்ள அவர்களுடனேயே தங்கியிருந்தால்தானே முடியும்?' என்கிறார். ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளைக் காட்டிலும் மிக அதிக அளவில் சுகாதாரம் பேணப்படுவது ஜப்பானில்தான். இந்தியாவிலேயே சுகாதாரத்தைக் குறைவாகப் பேணுபவர்கள் எனப் பெயர் பெற்றவர்கள் நரிக்குறவர்கள்தான். அப்படியிருக்க, இரண்டு துருவங்களும் இணையும்போது எந்தப் பிரச்சினைகளும் தோன்றவில்லையா? என்று கேட்டால், 'இல்லாமல் இருக்குமா?' என்கிறார். ஆரம்பத்தில் திறந்தநிலைக் கழிவறைகளும் குளியலறைகளும் சற்றுச் சிரமமாக இருந்தனவாம். ஆனால், இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே இவற்றைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்ததால், அவ்வளவாக அதிர்ச்சிக்கு உள்ளாகவில்லை. போகப்போகப் பழகிவிட்டது.

சமயபுரத்தில் வாழ்ந்தபோது இவர் சந்தித்த சுவாரசியமான சம்பவங்களுக்கு அளவே இல்லை. ஜப்பானிலிருந்து சமயபுரத்துக்கு வந்து சேர்ந்ததே ஒரு பெரிய கதை. ஆய்வின் முதற்கட்டமாக, பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றிருந்தார். அங்குள்ள ஜிப்ஸி இனத்தவரைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, அவர்களது முன்னோர்கள் இந்தியாவிலிருந்த பழங்குடிகள் எனக் கேள்விப்பட்டார். உடனே அவரது வழிகாட்டியான பேராசிரியர் தனகா அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'இருக்க வாய்ப்புண்டு' என்று கூறினார். திரு.தனகா அவர்கள்தான் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறைத் தலைவர். இவர் தனது முனைவர் பட்ட ஆய்விற்காக இலங்கையில் சுமார் இரண்டு ஆண்டுகளும் சிதம்பரத்தில் சுமார் ஆறு மாதங்களும் தங்கியிருந்திருக்கிறார். அவரது பரிந்துரையின்பேரில் டாக்டர்.அயாக்கோ அவர்கள் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.

சென்னைக்கு வரும் வழியில், கோலாலம்பூரில் சுமார் ஆறு மாதகாலம் தங்கி, தமிழை ஓரளவிற்குப் பயின்றுகொண்டார். பின்னர் சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும், அவருக்கு மூளையில் ஏதோ ஒரு மின்னலடித்தது போலிருந்ததாம். 'யாராவது புகைப்படம் எடுத்திருப்பார்கள்' என்று விளையாட்டாகச் சொன்னால், 'நிச்சயமாக இல்லை' என்று மிகவும் சீரியஸாக மறுக்கிறார். இதற்கு முன்பு ஏற்கனவே இந்த இடத்திற்கு வந்திருப்பதுபோல் உள்ளுணர்வு கூறியதாம். விமான நிலையம் மட்டுமல்ல. சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தபோதும்கூட, யாரையும் வழி கேட்காமலேயே இரண்டாம் தளத்திலிருந்த மானுடவியல் துறைக்கு நேராகச் சென்று விட்டாராம். பகுத்தறிவு பேசி அவரது ஆர்வத்தைக் குலைக்க விரும்பவில்லை. அமைதியாகக் கேட்டுக்கொண்டேன். பின்னர் சென்னைப் பல்கலை மானுடவியல் துறைப் பேராசிரியர்களிடம் பேசியபோது, தமிழக அரசு தமிழகத்திலுள்ள நாடோடிகளான நரிக்குறவர்கள், சாமக்கோடங்கிகள், பாம்பு பிடிப்பவர்கள், குரங்காட்டிகள் போன்றவர்களுக்குத் தனிக்குடியிருப்பைத் திருச்சிக்கு அருகில் அமைத்துத் தந்திருப்பதாகக் கேள்விப்பட்டார். உடனே ஓவர் டூ சமயபுரம்.

சமயபுரத்திற்கு வந்தவுடன் பிரமாதமான வரவேற்பு ஒன்றும் கிடைத்துவிடவில்லை இவருக்கு. சிலகாலம் தஞ்சைத் தமிழ்ப் பல்கலை விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தவர், அங்கிருந்த நூலகம் மற்றும் இதர இடங்களில் நரிக்குறவர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்திருக்கிறார். அங்கிருந்து தினமும் சமயபுரம் சென்று வந்துகொண்டிருந்தவர், மெல்ல மெல்லக் குடியிருப்பில் வாழ்ந்த மக்களின் மனதில் இடம்பிடிக்கத் தொடங்கினார். பின்னர் அவர்கள் வீட்டிலும் இடம் தானாகவே கிடைத்தது. நரிக்குறவர்களின் முக்கியத் தொழிலே ஊசி, பாசி மற்றும் நரிப்பல் ஆகியவற்றை விற்பதுதான். ஆகவே, ஒரே இடத்தில் தொடர்ந்து வசித்தால், அவ்வளவாக வருமானம் வராது. இப்படியிருக்க, அரசாங்கம் இவர்களுக்குக் குடியிருப்புகள் கட்டித் தருவதால் என்ன பயன்? அப்படியில்லையாம். மற்ற குடியிருப்புகளுக்கும் இவர்கள் இருக்குமிடத்திற்கும் உள்ள மிகப்பெரும் வித்தியாசம், நிரந்தர உரிமையாளர் யாரும் இல்லாததுதான். அந்தந்த சீசன்களில் அந்தப் பகுதிக்குப் பெயரும் நாடோடிகள் கிராம நிர்வாக அலுவலரின் அனுமதி பெற்று அங்கே தங்கிக் கொள்ளலாம். ஆனால், இவர் இருந்தபோது, அந்த ஒன்றரை வருடமும் ஒரே குடும்பம் இவருக்காகத் தொடர்ந்து வசித்து வந்ததாம்.நம் ஊரில் பொதுவாக, ஒரு பெண் தனியாக வசிப்பது சற்று சிரமமான காரியம்தான். இவர் இருபதுகளின் இறுதியில் இருக்கும் ஒரு பெண் என்பதால், பாலியல் ரீதியான சிக்கல்கள் ஏதாவது ஏற்பட்டதா? அப்படி எதுவும் ஏற்படவில்லையாம். நரிக்குறவர் சமுதாயம் மிகவும் கட்டுக்கோப்பானது; அந்தச் சமூகத்துப் பெண்களிடமே தவறாக நடப்பவர்கள் கிடையாது என்கிறார். ஆனால், ஒரு பெண் என்பதால், அவர்கள் நடத்தும் பூஜைகள் மற்றும் பில்லி சூனியங்களில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லையாம். இதனால், நேரடியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியவில்லை என்பது இவரது குறையாக இருக்கிறது. பூஜை செய்து முடித்ததும், எப்படிச் செய்தார்கள் என்று மீண்டும் ஒருமுறை இவருக்காகச் செய்து காண்பிப்பார்களாம். அல்லது வேறொருவரிடம் கேமராவைக் கொடுத்து, அவற்றைப் படம்பிடிக்க அனுமதித்ததும் ஓரளவிற்கு இக்குறையைப் போக்கியது.இந்தச் சமூகத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் மிகக்குறைவு. இந்தியாவில் எல்லாச் சமூகங்களிலும் இருக்கும் அதே பொருளாதாரக் காரணங்கள்தான் இவர்களுக்கும். பள்ளி செல்லும் நேரத்தில் ஊசி, பாசி விற்று வந்தால், வருமானம் வருமே என்று, பள்ளிக்கு அனுப்புவதில்லை. அடிக்கடி வெளியூர்களுக்கு மாறுவதாலும் ஒரே பள்ளியில் படிக்க வாய்ப்பு இல்லை. ஆனால், இப்பொழுது அரசாங்கம் குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்தபின், அருகிலுள்ள பள்ளிக்குச் சென்று கல்வி பெறுவதுடன், பெற்றோர் மட்டும் வெளியூர் சென்றுவிட்டு, சிறுவர் சிறுமிகள் அங்கு புதிதாக வரும் உறவினர்களுடன் தங்கிப் பயில்கிறார்களாம். தகவல் தொடர்பு வசதிகளும் ஓரளவிற்கு இப்போது பரவ ஆரம்பித்துள்ளன. டாக்டர். அயாக்கோ அவர்களும் கல்வியின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு எடுத்துக்கூறி, சிலருக்குக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பக்குவத்தையும் கொடுத்திருக்கிறார். தனது சொந்தச் செலவில் இவர்களுக்காகத் தொலைபேசி இணைப்பையும் பெற்றுத் தந்துள்ளார். ஆனால், இன்னும் வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

திருச்சி, சமயபுரம் மட்டுமின்றி, இந்தியாவில் நாடோடிப் பழங்குடியினர் எந்த மூலைமுடுக்குகளில் எல்லாம் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் சென்று வந்திருக்கிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பல இடங்களுக்குப் பயணப்பட்டிருக்கிறார். உதாரணமாக, தமிழ்நாட்டில் திருச்சி, சென்னை, மதுரை, நாகர்கோயில், ஈரோடு, சேலம், சங்ககிரி, நாமக்கல், மணப்பாறை, கரூர், வேலூர், வந்தவாசி, காஞ்சிபுரம், மாமல்லபுரம், ராமேஸ்வரம், சிவகங்கை, விருதுநகர் முதலான ஊர்களுக்குச் சென்று வந்திருக்கிறார். தஞ்சை தமிழ்ப் பல்கலை விடுதியில் தங்கியிருந்தபோது, பெரியகோயிலுக்குத் தினமும் மாலைவேளைகளில் சென்று வருவாராம். தமிழ்நாட்டில் அவரை மிகவும் கவர்ந்த கோயில் தஞ்சை இராஜராஜீசுவரம்தானாம். கேட்டதும் மிகவும் மகிழ்ந்து போனேன்.

இவ்வளவு தூரம் நம் மண்ணின் மைந்தர்களுடன் தொடர்புடைய டாக்டர். அயாக்கோ இவாதனி அவர்கள், இன்னொரு விதத்திலும் தமிழுடன் தொடர்பு வைத்திருக்கிறார். ஜப்பானில் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களுக்கு ஜப்பானிய மொழியில் சப்டைட்டில் தயாரித்துக் கொடுக்கும் பணிதான் அது. ஒரு திரைப்படத்தின் வசனங்களை வேறொரு மொழியில் மொழிபெயர்ப்பது என்பது சற்று சவாலான காரியம்தான். கலாச்சார வேறுபாடுகளும் வட்டார வழக்குச் சொற்களும் பெரும் சவாலாக இருக்கும். ரஜினியின் 'வீரா' திரைப்படத்திற்கு ஜப்பானிய மொழியில் சப்டைட்டில் தயாரித்துள்ளார். மொழிபெயர்க்கும்போது ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது தொலைபேசியிலோ அல்லது நேரில் சந்திக்கும்போதோ என்னிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்வார். இவர் போன்றவர்களுக்குத் தமிழ் தொடர்பான சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதுபோல் இன்பம் பயக்கக் கூடிய நல்ல காரியம் வேறெதுவுமில்லை எனலாம்.

இவரைச் சந்தித்தபோது, இதுவரை சந்தித்த ஜப்பானியர்களிலேயே இவர்தான் அதிகபட்ச அளவாகத் தமிழுடன் தொடர்புடையவர் என்று எண்ணியிருந்தேன். ஆனால் மீண்டும் அதே 'வல்லவன்' பழமொழிதான். சில மாதங்களுக்கு முன்பு வரலாறு.காமின் வாசகரும், கலைக்கோவன் அவர்களின் நண்பருமான பேராசிரியர் திரு. சு. கணேசன் அவர்கள் டோக்கியோ வந்திருந்தபோது, அவர் மூலம் அறிமுகமானவர்தான் டாக்டர். ஷு ஹிக்கோசக்கா [Dr. Shu Hikosaka] அவர்கள். இவரை இதுவரை சந்தித்ததில்லை எனினும், தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் உரையாடியிருக்கிறோம். இவரைச் சந்தித்தபோதும் இதே எண்ணம் மேலிட்டது.ஹிக்கோசக்கா அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழகத்துடன் தொடர்புடையவர். ஓஸகாவிற்கும் டோக்கியோவிற்கும் இடையில் இருக்கும் நகோயா [Nagoya] என்ற இடத்தில் பிறந்த இவருக்குத் தற்போது 60 வயதாகிறது. இவரது தந்தை நகோயா அருகிலுள்ள தோயோஹாஷி [Toyohashi] என்ற இடத்திலிருக்கும் புத்தர் கோயில் ஒன்றில் அர்ச்சகராகப் பணியாற்றினார். இயல்பிலேயே புத்த மதத்தின்மீது ஆர்வம் கொண்ட டாக்டர். ஹிக்கோசக்கா அவர்கள் கடந்த 1976ம் ஆண்டு சென்னைப் பல்கலையில் முனைவர் பட்ட ஆய்வுக்காகப் பதிந்து கொண்டார். அடிக்கடி புத்தகயாவுக்கு வந்து போய்க் கொண்டிருந்த இவருக்குத் தனது ஆய்வையும் இந்தியாவிலேயே செய்ய வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. வடமாநிலங்களைவிட, தமிழகத்தில் புத்த சமயம் பொலிவுடன் விளங்கியதைக் கேள்விப்பட்டதும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தனது ஆய்வினைத் தொடர முடிவு செய்தார். இவர் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட தலைப்பு என்ன தெரியுமா? 'தமிழகத்தில் புத்த மதத்தின் வளர்ச்சி'.

தமிழகத்தில் எங்கெல்லாம் புத்தர் சிலைகள் உள்ளனவோ, அங்கெல்லாம் பயணித்து, தகவல்களைச் சேகரித்திருக்கிறார். ஆய்வை முடித்தது மட்டுமல்லாமல், ஆய்வுக்குப் பிறகும் சென்னையிலேயே தங்கிவிட்டார். சுமார் 20 ஆண்டுகள் சென்னையில் வசித்திருக்கிறார். 1991இல் திருவான்மியூர் அருகே பெருங்குடியில் Institute of Asian Studies என்ற பயிற்சி மையத்தைத் தொடங்கினார். கிழக்காசிய நாடுகள் அனைத்தையும் இணைக்கும் ஒரு பொதுப்புள்ளி புத்தமதம் ஆகும். பாரதத்திலிருந்து புத்தமதம் மற்ற நாடுகளுக்குப் பரவியபோது இந்தியர்களின் பழக்கவழக்கங்களும் சேர்ந்தே பரவின. ஆகவே, இந்தியாவின் மற்ற சமயங்களான சைவம், வைணவம் முதலியவற்றைத் தவிர்த்து, புத்தமதத்தை ஆய்வு செய்வது முழுமையாகாது. அதனால்தான், பின்னாளில் இந்து மதத்துடன் ஐக்கியமானபோது எந்தவிதச் சிக்கலும் ஏற்படவில்லை.

தமிழகத்தில் புத்தமதத்தைப் பற்றிய இவரது முனைவர் பட்ட ஆய்வேடான 'Buddhism in Tamilnadu - A new Perspective' இந்திய அரசின் 'வெளிநாட்டவர்களால் பதிப்பிக்கப்பட்ட சிறந்த நூல்கள்' என்ற வகையின்கீழ் 2003ல் விருதைப் பெற்றது. இதுபோகப் பல நூல்களையும் எழுதி, பதிப்பித்துள்ளார். இவரால் வெளியிடப்பட்ட 'Encyclopedia of Tamil Literature Vol I to III' என்ற நூல் சங்க இலக்கியத்தில் ஆய்வு செய்வோர்க்குப் பெரிதும் பயன்பட்டு வருகின்றது. இதுவரை அச்சுவடிவம் காணாத ஓலைச்சுவடிகளிலிருக்கும் பல்வேறு சிற்றிலக்கியங்களையும் நாட்டுப்புறக் கதை/பாடல்களையும் பதிப்பித்திருக்கிறார். Manuscriptology என்றொரு துறையே இந்நிறுவனத்தில் செயல்பட்டு வருகிறது. இந்தியா மற்றும் ஜப்பான் தொடர்பான பெரும்பாலான மதப்பிரிவுகள் [சைவம், சாக்தம், கௌமாரம், ஜப்பானின் ஷிண்டோ], பெரும்பாலான மொழிகள் [கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஜப்பானிய மொழி] ஆகியவற்றுக்குத் தனிப்பிரிவுகளையும் தொடங்கியுள்ளார்.இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் செயற்கரிய ஒரு நற்காரியத்தையும் அமைதியாகச் செய்து முடித்திருக்கிறார். சங்கம் மற்றும் சங்கம் மருவிய கால இலக்கியங்களை நேசிக்கும் ஒவ்வொரு தமிழனின் நன்றிக்கும் உரிய வகையில், தமிழின் இரட்டைக்காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார். ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின் உரை அருகில் இல்லாவிடில், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கே சிலப்பதிகாரத்தைப் படித்து விளங்கிக் கொள்வது கடினம். ஒரு ஜப்பானியர், தமிழைப் படித்து, இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு, மிகச்சிறந்த இரண்டு இலக்கியங்களை அவரது தாய்மொழியில் பெயர்த்திருக்கிறார் என்றால், அதற்குப் பின்னால் உள்ள ஆர்வத்தையும் உழைப்பையும் சிரத்தையையும் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. எப்படி இது சாத்தியமாயிற்று என்று கேட்டால், இலக்கிய ஆர்வமுள்ள தமிழர்கள் உதவியதால்தான் முடிந்தது என்கிறார்.

இவ்விரு நூல்களும் டோக்கியோவில் கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கும்.

Kiko Bookshop,
40th Floor, Sumitomo Building,
Shinjuku 2-6-1,
Shinjuku-ku,
Tokyo - 163-0240.

Phone : 81-3-3343-5364

இவர் குடும்பத்தில் இவருக்கு மட்டும்தான் தமிழகத்தின் மீது ஆர்வம் என்றில்லை. இவரது மனைவி திருமதி.தனகா அவர்களுக்கும் நிறைய ஈடுபாடு உண்டு. இவர் சென்னையில் இருந்தபோது, இவரது மனைவி பரதநாட்டியத்தைக் கற்றுத் தேர்ந்து கொண்டு, தற்போது தோயோஹாஷியில் பரதநாட்டியப் பள்ளியை நடத்திக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது இந்தியாவுக்கு வந்து, நாட்டிய விழாக்களிலும் கலந்து கொள்கிறார்.திரு.ஹிக்கோசக்கா அவர்கள் தற்போது தனது தந்தையாரின் வழியில் தனது பரம்பரைக் கோயிலாக விளங்கும் ஒரு புத்தமதக் கோயிலில் மதகுருவாக வாழ்ந்து வருகிறார். இந்த மாதமும் அடுத்த மாதமும் சில புத்தமதப் பண்டிகைகள் வருவதால், வேலைப்பளு கூடுதலாக இருக்கிறது. எனவே, பிப்ரவரி/மார்ச் மாதம் நேரில் சந்திக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். நானும் உடல்நிலை காரணமாக இப்போது இந்தியா திரும்பி விட்டதால், சந்திப்பை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாகக் கூறினேன். சுமார் 20 ஆண்டுகள் தமிழக வாசத்திற்குப் பின் ஜப்பான் திரும்பிய பிறகும் தமிழ் இலக்கிய ஈடுபாட்டைக் கைவிட்டு விடாமல், இன்னும் சில இலக்கியங்களை ஜப்பானிய மொழியில் பெயர்த்துக் கொண்டிருக்கிறார். அவற்றில் சில சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், நேரில் சந்திக்கும்போது கேட்கவிருப்பதாகவும் தொலைபேசியில் கூறினார். ஆஹா... இவரைச் சந்தித்து உரையாடுவதே ஒரு மகிழ்ச்சியான சுகானுபவம். அப்படிப்பட்ட ஒரு சந்திப்பில் தமிழ் இலக்கியத்தைப் பற்றிப் பேசுவது என்பது .... எப்படி அந்த இரட்டைச் சந்தோஷ உணர்வை விளக்குவதென்றே தெரியவில்லை. சந்தித்த பிறகு சொல்கிறேன்.

பார்த்தீர்களா? 'வல்லவன்' பழமொழி மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி விட்டது. அயாக்கோவின் அறிமுகம்தான் உச்சகட்ட மகிழ்ச்சி என்று எண்ணியிருந்தது, ஹிக்கோசக்காவின் அறிமுகத்தால் தவிடுபொடியானது. ஹிக்கோசக்காவுடனான தொலைபேசிப் பேச்சுதான் அதிகபட்ச சந்தோஷ அனுபவம் என்ற எண்ணத்தை மாற்றியிருப்பது எதிர்நோக்கியிருக்கும் அவரது சந்திப்புதான். ஆனால் அந்தச் சந்திப்பைவிட அதிக சந்தோஷத்தை அளிக்கப் போகும் அடுத்த அனுபவம் எது? ஆண்டவனுக்கே வெளிச்சம். எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.