![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 30
![]() இதழ் 30 [ டிசம்பர் 16, 2006 - ஜனவரி 15, 2007 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
மதுரைத் தென்காசிச் சாலையில் தென்காசிக்கு ஏறத்தாழ இருபது கிலோ மீட்டர் முன்னால் மேற்கில் பிரியும் பாதை, கருப்பாநதி நீர்த்தேக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது. இப்பாதையில் நான்கு கிலோமீட்டர் பயணித்தால், வடபுறத்தே மலையொன்றின் சரிவில் தென்முகமாக வெட்டப்பட்டுள்ள சொக்கம்பட்டிக் குடைவரையை அடையலாம். காடுபோல மண்டியுள்ள செடிகொடிகளை ஊடுருவிச் செல்லும் ஒற்றையடிப்பாதையை ஒழுங்காகப் பின்பற்றினால் குடைவரை வாயிலைத் துன்பமின்றி நெருங்கலாம். குடைவரையின் முன்னால், மேற்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் படியமைக்க வாய்ப்பாக விடப்பட்டுள்ள பாறைப்பகுதியி மேற்கில் மட்டும் இரண்டு படிகள் வெட்டப்பட்டுள்ளன. முகப்பும் கருவறைகளும் கொண்டமைந்துள்ள குடைவரை மண்டபத்தையடைய இப்படிகள் உதவுகின்றன. தென்வடலாக 78 செ.மீ அகலமும் கிழக்கு மேற்காக 5.38 மீ நீளமும் கொண்டுள்ள முகப்பு, பக்கங்களில் இரண்டு நான்முக அரைத்தூண்களும் நடுவில் இரண்டு நான்முக முழுத்தூண்களும் பெற்றுள்ளமையால் மூன்று அங்கணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தூண்களின் மேலுள்ள போதிகைகள், விரிகோணக் கைகளால் உத்திரம் தாங்குகின்றன. கீழ்க்கைகளினும் சற்று நீளமாக உள்ள மேற்கைகள் உத்திரத்தைத் தொடுமிடத்துச் சிறுமடிப்புடன் காட்டப்பட்டுள்ளன. உத்திரத்தை அடுத்துள்ள இரண்டு சதுரப்பட்டிகளுள் முதலிலிருப்பதை வாஜனமாகவும் அடுத்திருப்பதை வலபியாகவும் கொள்ளவேண்டியுள்ளது. வாஜனம் அரைத்தூண்களையொட்டிக் கூரையிலிருந்து முகப்புத் தரைவரை இருபுறமும் அகலமான சதுரப்பட்டியாக இறங்குகிறது. கூரையின் முன்நீட்டல் ஓரளவிற்கு வடிவமைக்கப்பட்ட கபோதமாக உட்புறம் வளைந்து நீள்கிறது. பாறைச்சரிவிற்குச் சற்று உள்ளடங்கி, வெட்டப்பட்டுள்ள இதன் முகப்பில் கம்பியில் கோத்த கிளிஞ்சல் ஓடுகள் போன்ற அலங்காரம் நெடுகக் காட்டப்பட்டுள்ளது. இதுவே பின்னாளில் சந்திர மண்டலமாக மாறியது போலும். மேற்கிலும் கிழக்கிலும் பரவும் முகப்பின் பக்கச் சுவர்கள் நன்கு சீரமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மேற்பகுதியில் கோட்டம் அகழ்ந்து, மேற்கில் தேவமங்கையின் சிற்பமும் கிழக்கில் அடியவரொருவரின் சிற்பமும் முழுமையற்ற நிலையில் பொளியப்பட்டுள்ளன. இக்கோட்டங்களுக்கு அணைவுத்தூண்களோ, தோரண அலங்காரங்களோ இல்லையென்பது குறிப்பிடத்தக்கது. முகப்பிற்கு முன் பல குடைவரைகளில் காணப்படும் தரையமைப்பு இங்கில்லை. அதற்கு மாறாகப் படியமைப்பிற்கான பாறையே நிற்கிறது. முகப்பின் பின்னுள்ள மண்டபம், அதன் நடுப்பகுதியில் முகப்பையொத்து அமைந்துள்ள தூண்வரிசையொன்றில் இரு பிரிவுகளாக்கப்பட்டுள்ளது. கிழக்கிலும் மேற்கிலும் 1.56 மீ அகலமும் தென்வடலாக 4.76 மீ நீளமும் பெற்றுள்ள முன்பிரிவை முகமண்டபமெனலாம். இருவரிசைத் தூண்களுக்கு இடையிலமைந்துள்ள இம்முகமண்டபத்தின் தரை சீர்மையுறவில்லை. இம்மண்டபத்தின் மேற்குச் சுவரிலொரு கருவறையும் கிழக்குச் சுவரிலொரு கருவறையும் அகழப்பட்டுள்ளன. நன்கு சமன் செய்யப்பட்டுள்ள கூரை, கிழக்கிலும் மேற்கிலும் கருவறைகளுக்கு முன் ஏறத்தாழ 10 செ.மீ அளவிற்கு வளைமுகமாக உள்ளடங்கித் தொடர்கிறது. இவ்வுள்ளடங்கிய தொடர்ச்சி ஒவ்வொரு கருவறையின் முன்னும் ஏறத்தாழ 75 செ.மீ அளவிற்கு நீள்கிறது. கூரையின் வட, தென் பக்கங்களை அணைத்தவாறு ஓடும் வாஜனம் கருவறைகளின் கபோத மேற்பகுதியைத் தொட்டு பூமிதேசப் பகுதியில் முடிகின்றன. இருவரிசை அரைத்தூண்களுக்கும் இடைப்பட்ட முகமண்டபத்தின் மேற்குக் கிழக்குச் சுவர்களில் பக்கத்திற்கொன்றாய் அகழப்பட்டுள்ள இரண்டு கருவறைகளுமே முழுமை பெறவில்லை. இரண்டு கருவறைகளும் தாங்குதளம், சுவர்ப்பகுதி, கூரையுறுப்புகள் பெற்றுள்ளனவெனினும், கிழக்குக் கருவறையைவிட மேற்குக் கருவறையில் சீர்மையின் அளவு கூடுதலாக உள்ளது. மேற்குக் கருவறைத் தாங்குதளத்தின் வடபுறப்பகுதி பாதபந்தமாக உருவெடுத்துள்ளது. உபானம், ஜகதி, எண்பட்டைக் குமுதம், கம்புகளின் அணைப்பிலமைந்த பாதங்களுடனான கண்டம், பட்டிகை, மேற்கம்பு என அனைத்து உறுப்புகளும் கொண்டு இப்பகுதி முழுமையுற்றுள்ளது. தாங்குதளத்தின் தென்பகுதி பாறைப்பகுதியாகவே விடப்பட்டுள்ளது. மேற்கம்பு மட்டும் கருவறையின் முழுப்பகுதிக்குமாய்ச் செதுக்கப்பட்டுள்ளது. முகமண்டபத் தரையிலிருந்து 70 செ.மீ உயரத்தில் அமைந்துள்ள கருவறை வாயில், முறையான நிலையமைப்புடன் 1.38 மீ உயரத்தில் 68 செ.மீ அகலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாயில் சட்டத்தலையமைப்புக் கொண்ட இருநான்முக அரைத்தூண்கள் அணைத்துள்ளன. அவற்றுள் தென்புற அரைத்தூண் உறுப்பு வேறுபாடற்ற நான்முக அரைத்தூணாக விடப்பட்டுள்ளது. ஆனால், வடக்குத்தூண் பெருமளவிற்கு முழுமை பெற்றுள்ளது. பாதம், நான்முக உடல், மாலைத்தொங்கல், கலசம், தாடி, கும்பம், பாலிகை, பலகை, வீரகண்டம் என அனைத்து உறுப்புகளும் கொண்டுள்ள இத்தூணில், மாலைத்தொங்கலின் மேற்பகுதியான தானமும், அதனையடுத்துக் காட்டப்படும் தாமரைக்கட்டும் இடம்பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. கலசத்தின் கீழிருந்து நேரடியாக மாலைத்தொங்கலைப் பார்க்கமுடிவது, தமிழ்நாட்டில் இக்குடைவரையில் மட்டும்தானென்று கூறலாம். கருவறை வாயிலையடுத்த இருபுறச் சுவர்ப்பகுதிகளும் செவ்வகக் கோட்டங்களாக அகழப்பெற்று, வாயிற்காவலர் சிற்பங்களைப் பக்கத்திற்கொன்றாகப் பெற்றுள்ளன. இக்கோட்டங்கள் மண்டப அரைத்தூண்களையொட்டிச் சுவரில் வெட்டப்பட்டுள்ள உறுப்பு வேறுபாடற்ற இருமெல்லிய நான்முக அரைத்தூண்கள் வெளிப்புறத்தும், கருவறை வாயில் அணைவுத்தூண்கள் உட்புறத்துமாய்த் தழுவியுள்ளன. வாயில் அணைவுத் தூண்களின் மேலமர்ந்துள்ள போதிகைகள் விரிகோணக் கைகளால் உத்திரம் தாங்க, ஓரத்தூண்கள் போதிகைகள் ஏதுமின்றி நேரடியாக உத்திரத் தாங்கலில் பங்கேற்கின்றன. மேலே வாஜனம். வாஜனத்தையடுத்து முழுவளர்ச்சியுற்ற வலபி பூதவரியோடு காட்டப்பட்டுள்ளது. இப்பூதவரியில் இடம்பெற்றுள்ள ஏழு கணங்களும் செயலூக்கம் பெற்றனவாய் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கூரையின் முன்நீட்டலாய் நன்கு வளைந்திறங்கும் கபோதம் வட, தென் முனைகளில் வளைவுக் கூடுகள் பெற்றுள்ளது. இக்கூடுகளுள் கந்தர்வத்தலைகள் செதுக்கப்பட்டுள்ளன. வளைவுகளின் தலைப்பு கிளாவர் அமைப்பிலுள்ளமை குறிப்பிடத்தக்கது. கபோதத்திற்கு மேலே வடிவம் பெறாத பூமிதேசம். தென்வடலாக 2.25 மீ அளவும் கிழக்கு மேற்காக 2.10 மீ அளவும் கொண்டு ஏறத்தாழ ஒரு சதுரமாக அமைக்கப்பட்டுள்ள இம்மேற்குக் கருவறையின் உயரம் 1.73 மீ. கருவறையின் கூரையும் சுவர்களும் தரையும் ஓரளவிற்குச் சீர்மை பெற்றுள்ளன. பின்சுவரில் ஏதோ ஒரு வடிவத்தைச் செதுக்க மேற்கொண்ட முயற்சியின் சுவடுகளைக் காணமுடிகிறது. வடிவமற்ற நிலையிலும் இச்செதுக்கல் இப்போது வழிபாட்டில் உள்ளது. முகமண்டபத்தின் கிழக்குச் சுவரில் உருவாக்கப்பட்டுள்ள கருவறையின் வாயில், முகமண்டபத் தரையிலிருந்து 88 செ.மீ உயரத்தில் அமைந்துள்ளது. முறையான நிலையமைப்புப் பெற்றுள்ள இவ்வாயிலின் அகலம் 66 செ.மீ. உயரம் 1.45 மீ. இக்கருவறை வாயிலின் முன் படியமைப்பிற்காகப் பாறைப்பகுதி விடப்பட்டுள்ளது. வாயிலின் இருபுறத்துமுள்ள தாங்குதளம் வடிவு பெறாமல், மேலிருந்து கீழாக இருபிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ள பாறையாகவே உள்ளது. கருவறை வாயிலை அணைத்துள்ள சட்டத்தலைத் தூண்களும் நான்முக உடல், தலையுறுப்புகளுக்காக ஒதுக்கப்பட்ட பகுதி என இரு வடிவமைப்புகள் மட்டுமே கொண்டுள்ளன. இவற்றுள் தென்புறத் தூணில் பலகை, கும்பம் ஆகிய உறுப்புகளின் அமைப்பைக் காணமுடிகிறது. வீரகண்டமும் விரிகோணப் போதிகையும் இருதூண்களின் மீதும் வடிவம் பெற்றுள்ளன. இத்தூண்களையடுத்துக் கோட்டங்களும் அவற்றில் காவலர்களும் காட்டப்பட்டுள்ளனர். காவலர்களுள் வடபுறக் காவலர் முழுமை பெறவில்லை. மண்டப அரைத்தூண்களை ஒட்டிய கோட்ட அணைவுத் தூண்கள் மேற்கிலுள்ளாற் போலவே உறுப்பு வேறுபாடற்ற நான்முக அரைத்தூண்களாய் எழுந்து நேரடியாக உத்திரம் தாங்க, வாயில் அணைவுத் தூண்களின் மேலுள்ள போதிகைகள் கீழ்க்கைகளினும் நன்கு நீண்ட மேற்கைகளால் அத்தாங்கலில் பங்கேற்கின்றன. உத்திரத்தை அடுத்துள்ள வாஜனம், வலபி, வளைவுக் கூடுகளுடனான கபோதம் ஆகியன மேற்குக் கருவறை போலவே அமைக்கப்பட்டுள்ளன. எனினும் சிறு வேறுபாடுகளைக் காணமுடிகிறது. கணவரியில் இங்கு ஐந்து கணங்களே உருவாக்கப்பட்டுள்ளன. இரண்டு முழுமையுறவில்லை. கபோத இறக்கத்தில் இரண்டு கூடுவளைவுகளுக்கும் இடையில் விளிம்பு தட்டிச் சிறு சதுரங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை சந்திரமண்டல உருவாக்கத்திற்காக விடப்பட்டவையாகலாம். கபோதத்திற்கு மேலே மேற்கிலுள்ளாற் போலவே பூமிதேச அமைப்புள்ளது. தென்வடலாக 1.98 மீ அளவும் கிழக்கு மேற்காக 1.69 மீ அளவுமுள்ள கருவறையின் உயரம் 1.80 மீ. இதன் தரை, கூரை, வட, தென் சுவர்கள் வெறுமையாக உள்ளன. பின்சுவரின் நடுப்பகுதியில் 76 செ.மீ அகலத்தில் 62 செ.மீ நீளத்திற்கு விடப்பட்டுள்ள பாறைப்பகுதியில் சிற்பத்தை உருவாக்கும் முயற்சிகள் தொடங்கிய நிலையில் கைவிடப்பட்டுள்ளன. வடிவமற்ற இப்பாறை இப்போது வழிபாட்டில் உள்ளது. இதன் தென்புறத்தே, கூரையிலிருந்தும் பிரிக்கப்படாத தளமொன்றில் கருடாசனத்தில் கூப்பிய கைகளுடன், முழுமையடையாத ஆனால் சிதைந்த வடிவமொன்று காட்டப்பட்டுள்ளது. இடக்கையில் தோள்வளை, பட்டைவளைக்கான ஒதுக்கீடு உள்ளது. தலையில் நெற்றிப்பட்டமும் முக்கோண வடிவிலான மகுடமும் காட்டப்பட்டுள்ளன. இடுப்பாடையின் முடிச்சுத் தொங்கல் இடத்தொடையின் மீது தவழ்ந்து தரையிறங்கியுள்ளது. மார்பின் இடப்புறமுள்ள சிறு எழுச்சியை மார்பகமாகக் கொண்டால் இவ்வடிவத்தைப் பெண்ணெனலாம். மண்டபத்தை இருபிரிவுகளாகப் பகுக்கும் தூண்வரிசை, பக்கங்களில் இருநான்முக அரைத்தூண்களையும் நடுவில் இருநான்முக அரைத்தூண்களையும் பெற்றுள்ளது. இத்தூண்களின் மேலுள்ள போதிகைகள் முகப்பிலுள்ளாற் போலவே விரிகோணக் கைகளால் உத்திரம் தாங்குகின்றன. உத்திரத்தைத் தொடுமிடத்து இவற்றின் மேற்கைகள் சிறுமடிப்புக் கொள்வது முகப்பிலுள்ளாற் போலவே அமைந்துள்ளது. உத்திரத்தின் மேல் கூரையைத் தழுவியோடும் வாஜனம் கருவறைக் கபோதங்களைத் தொட்டுப் பூமிதேசப் பிரிவில் முடிகின்றது. பொதுவாக இதுபோல அமையும் இரண்டாம் வரிசைத் தூண்கள் நடுவில் இரு முழுத்தூண்களைப் பெற்று மண்டபத்தை முகமண்டபம், அர்த்த மண்டபம் என இரு பிரிவுகளாகப் பகுக்கும். ஆனால் இங்கு நடுத்தூண்களும் பின் சுவரிலிருந்து பிரிக்கப்படாத நிலையில் அரைத்தூண்களாகவே அமைந்து மண்டபத்தின் இவ்விரண்டாம் பகுதியை மூன்று அறைகளாகப் பகுக்கின்றன. இம்மூன்று அறைகளும் கிழக்கிலிருந்து முறையே 1.19 மீ, 1.15 மீ, 1.20 மீ அகலத்தில் அமைந்துள்ளன. இவ்வறைகளின் பின்சுவர்களில் வடிவங்கள் செதுக்க ஒதுக்கீடு செய்யப்பட்ட பாறைப்பாளங்கள் முன் தள்ளலாக வேறுபட்ட அளவுகளில் விடப்பட்டுள்ளன. நடு அறையில் பெரிய அளவிலான பாறைப்பகுதியும் அதன் இருபுற அறைகளில் ஏறத்தாழ ஒரே அளவிலான பாறைப்பகுதியும் பின்சுவரிலிருந்து பிரிக்கப்படாத நிலையில் விடப்பட்டுள்ளன. முகப்பின் அரைத்தூண்களையடுத்துப் பரவும் பக்கச் சுவர்களில், அகழ்ந்து அமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் இரண்டுமே முழுமை பெறவில்லை என்றாலும் அழகியல் நோக்கில் சிறக்க அமைந்துள்ளன. குடைவரைக் காவலராக வடிக்கப்பெற்றுள்ள கிழக்குக் கோட்ட ஆடவர் வடிவம் இடுப்பளவிற்கே செதுக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பகுதி முழுமை அடையவில்லை. இலேசாய் இடப்புறம் திரும்பிய முகம் சிதைந்திருந்தபோதும் அழகிய முறுவலுடன் விளங்குகிறது. மகுட முகப்பாக முத்தலைப் பாம்புப் படம். அவற்றுள் நடுத்தலை ஏனைய இரண்டினும் பெரிதாகக் காட்டப்பட்டுள்ளது. அழகிய நெற்றிப்பட்டத்தின் நடுவில், மூன்றாய்ப் பிரியும் முகப்பணி. செவிகளில் பனனயோலைக் குண்டலங்கள். கழுத்தில் உள்ள வடிவமைக்கப்படாத பட்டையான அணிகலன் சரப்பளிக்கான ஒதுக்கீடாகலாம். கனத்த முப்புரிநூல் உபவீதமாய் மார்பில் புரள்கிறது. முழுமையடையாத தோள்வளையும் பட்டைவளையும் பெற்றுள்ள கைகளுள் வலக்கை மடிந்து நீலோத்பல மலருடன் மேலுயர்ந்துள்ளது. இடப்புறத்தே ஓரளவிற்கே உருவாகியிருக்கும் உருளைத்தடியின் மீது முழங்கையை இருத்திய நிலையில் தாழவிடப்பட்டுள்ள இடக்கையின் விரல்கள் இடத்தொடையின்மீது கீழ்நோக்கிய நிலையில் படிந்துள்ளன. அரைக்கச்சு, இடுப்பாடை, இடைக்கட்டு ஆகியன ஓரளவுற்கே உருப்பெற்றுள்ளன. மேற்கில் செதுக்கப்பெற்றுள்ள பெண்வடிவமும் முழுமையுறவில்லை. இலேசான வல ஒருக்களிப்பில் முகத்தை நன்கு வலப்புறம் சாய்த்து நேர்ப்பார்வையாக நிற்கும் இவ்வம்மையின் தலையிலுள்ள மகுடத்தைச் சடைமகுடமாகக் கொள்ளலாம். செவிக் குண்டகங்கள் வடிவமெடுக்கவில்லை எனினும், பனையோலைக் குண்டலங்களெனக் கருதுமாறு ஒதுக்கீடுகள் உள்ளன. கழுத்திலுள்ள சீர்மையுறாத அணிகலன் சரப்பளியாகலாம். எடுப்பான மார்பகங்கள் கச்சின்றி உள்ளன. தோள், கை வளைகளுக்கான ஒதுக்கீடு மட்டுமே உள்ளது. சிற்பம் கால்கள் வரை செதுக்கப்பட்டிருந்தாலும் முழுமையுறாமையால் பாதநிலைகளை அறியக்கூடவில்லை. இடையாடை பட்டாடையாகலாம். அம்மையின் இடக்கை இடுப்பிலிருக்க வலக்கை, ஆடவருடையது போலவே மடிந்து மேலுயர்ந்து ஏதோ ஒரு பொருளைக் கொண்டுள்ளது. இந்தக்கை சரியாக உருவாகாமையின் பொருள் இன்னதெனக் கூறக்கூடவில்லை. மேற்குக் கருவறையின் தென்புறக் காவலர் கருவறைக்காய் ஒருக்களித்திருந்தாலும் முகம் நேர்ப்பார்வையாக சற்றே இடச்சாய்வாய் உள்ளது. வலக்கால் சமத்திலிருக்க, இடக்காலை இடப்புறம் நிறுத்தப்பட்டுள்ள உருவாகாத தடியின்மீது முழங்கால் அழுத்திய நிலையில் சற்றே மடிந்துள்ளது. இக்காலின் கீழ்ப்பகுதி நிறைவடையவில்லை. வலப்பாதத்தில் வீரக்கழல். இன்ன மகுடமென உறுதிப்படுத்த முடியாததொரு மகுடமணிந்து, இருபுறமும் சடைக்கற்றைகள் பரவ, வலக்கையை வயிற்றருகே தர்ஜனியில் இருத்தி இடக்கையை, முழங்கை தடியின் மீதிருக்குமாறு நிறுத்தித் தளர்த்தியுள்ள இக்காவலரின் கழுத்தில் சரப்பளி. மார்பில் உபவீதமாய் முப்புரிநூல். செவிகளில் பனையோலைக் குண்டலங்களாகக் கொள்ளத்தக்க அணிகள். கைகளில் தோள்வளைகள், வளையல்கள், உதரபந்தம், கைகளுக்கிடையில் இடப்புறம் மட்டும் சிறுபட்டை போலக் காட்சியளிக்கிறது, இடையில் சிற்றாடையும் இடைக்கட்டும். அரைக்கச்சின் முடிச்சுத் தொங்கல்கள் கால்களினிடையே தவழ்கின்றன. வடபுறக் காவலர் எவ்வித ஒருக்களிப்புமின்றி நேராக நிற்கிறார். வலதுகால் மட்டும், முழங்கால் வலப்புறம் நிறுத்தியிருக்கும் தடியின் மீது அழுத்தியபடி, கருவறைக்காய்ப் பாதம் திருப்பிய நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. இருபாதங்களிலும் வீரக்கழல்கள். வலக்கை, முழங்கையும் கையின் கீழ்ப்பகுதியும் தடியின் மீது இருக்குமாறு கீழ்நோக்கித் தளர்த்தப்பட்டுள்ளது. இடக்கை தர்ஜனியிலுள்ளது. தலையில் கிரீடமகுடம். மகுடத்தின் கீழ்ப்பகுதியிலிருந்து இருபுறத்தும் சூல் இலைகள் காட்டப்பட்டுள்ளன. சடைக்கற்றைகளும் குண்டலங்களும் தோள், கை வளைகளும் சரப்பளியும் உதரபந்தமும் கொண்டுள்ள இவரது முப்புரிநூலும் உபவீதமாகவே உள்ளது. இடுப்பில் சிற்றாடையும் இடைக்கட்டும் அரைக்கச்சும் உள்ளன. அரைக்கச்சின் முடிச்சுத் தொங்கல் கால்களின் நடுவில் கீழ்த் தொங்குமாறு காட்டப்பட்டுள்ளது. ஆடைக் கொசுவம் போன்ற அமைப்பு இடுப்பின் இடப்புறம். கிழக்குக் கருவறையின் வடபுறக் காவலர் முழுமையடையாத உடலினர். கருவறைக்காய் இலேசாக ஒருக்களித்திருக்கும் இவரது வலக்கால் நேராக அமைய, இடக்கால், இடப்புறமுள்ள தடியின்மீது முழங்கால் அழுந்துமாறு மடக்கப்பட்டு, பாதம் கருவறைக்காய்த் திரும்பிய நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. வலக்கை மார்பருகே தர்ஜனியில். இடக்கை தடியின்மீது ஊன்றிய நிலையில் தளர்த்தப்பட்டுள்ளது. கால்களில் கழல்கள். தலையில் சடைமகுடம். செவிகளில் குண்டலங்கள். இடுப்புப்பகுதி நிறைவடையாது இருப்பதால் ஆடையமைப்பை அறியக்கூடவில்லை. மார்பில் முப்புரிநூல் இல்லை. தென்புறக் காவலர் கருவறைக்காய் நன்கு ஒருக்களித்துள்ளார். இடக்கால் நேராக அமைய, வலக்கால், வலப்புறமுள்ள தடியின்மீது முழங்காலை அழுந்துமாறு நிறுத்திப் பாதத்தைக் கருவறைக்காய்த் திருப்பியுள்ளார். இவரது இடக்கை தர்ஜனியில். வலக்கை தடியின்மீது தாங்கலாகத் தளர்த்தப்பட்டுள்ளது. மகுடமும் குண்டலங்களும் சரப்பளியும் உதரபந்தமும் கைவளைகளும் அணிந்துள்ள இவரது முப்புரிநூல் உபவீதமாக உள்ளது. இடையில் அரைக்கச்சு, சிற்றாடை, இடைக்கட்டு ஆகியன காட்டப்பட்டுள்ளன. இடுப்பின் இடப்புறம் கொசுவம். பிற்பாண்டியர் பகுதிக் குடைவரைகளிலிருந்து சொக்கம்பட்டிக் குடைவரை அமைப்பு முறையில் பெரிதும் மாறுபட்டுள்ளது. 1. தமிழ்நாட்டளவில் இருவரிசைத் தூண்கள் பெற்ற பாண்டியர் பகுதிக் குடைவரை இது ஒன்றுதான். 2. மண்டபத்தின் பின் சுவரையொட்டி மூன்று திருமுன்கள் பெற்றிருக்கும் ஒரே குடைவரை இதுதான். 3. மண்டபத்தின் பக்கச்சுவர்களில் எதிரெதிர் நிலையில் இரண்டு கருவறைகள் பெற்றுள்ள இரண்டே பாண்டியர் குடைவரைகளுள் இது ஒன்று. 4. ஒரே மண்டபத்தில் ஐந்து இறைத்திருமுன்கள் பெற்ற பாண்டியர் பகுதிக் குடைவரையும் இது ஒன்றுதான். 5. முகப்பை அடுத்து நீளும் பக்கச் சுவரில் பெண்ணொருவரின் சிற்பத்தைப் பெற்றிருக்கும் ஒரே குடைவரை இதுதான். 6. நான்கு கருவறைக் காவலர்களும் தர்ஜனி காட்டும் ஒரே தமிழ்நாட்டுக் குடைவரை இதுதான். பல்லவர் பகுதியில்கூட ஒரு குடைவரையின் அனைத்துக் காவலர்களும் தர்ஜனியில் காட்சியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 7. கபோதத்திற்கு மேல் முழுமையான அளவில் ஆனால், யாளிவரியற்ற பூமிதேசம் பெற்றுள்ள ஒரே பாண்டியர் பகுதிக் குடைவரை. 8. முகப்புக் கபோதத்தில் சந்திரமண்டலத்திற்கான முன்னோடி அமைப்பைப் பெற்றுள்ள ஒரே குடைவரை. 9. முகப்புத் தூண்வரிசையின் அனைத்துத் தூண்களும் நான்முகத் தூண்களாக அமைந்திருப்பதும் இங்கு மட்டும்தான். குடைவரையின் பெரும்பகுதி நிறைவடையாமல் உள்ல நிலையில் அதன் காலத்தை உறுதிபடத் தீர்மானிப்பது இயலாதெனினும், அமைப்பில் உள்ள தனித்தன்மைகள், சிற்பங்களின் அலங்கரிப்புக் கொண்டு நோக்கும்போது இதைக் கே.வி.சௌந்தரராஜன் குறிப்பதுபோல ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்த குடைவரையாக, மலையடிக்குறிச்சிக்குக் காலத்தால் முற்பட்ட குடைவரையாகக் கொள்ளக்கூடவில்லை. கருவறைகளின் மேலுள்ள பூதவரிகள், முழு வளர்ச்சியுற்ற நிலையில் காணப்படும் கூடுகளுடனான கபோதம், பூமிதேசம் போன்றவை இதன் காலத்தைச் சற்றுப் பின் தள்ளியே கணிக்கத் தோன்றுகின்றன. இப்பகுதியிலுள்ள வீரசிகாமணி, ஆனையூர், திருமலைப்புரம், மலையடிக்குறிச்சிக் குடைவரைகளோடு ஒப்பீடு செய்கையில் அவற்றினின்று பலவகையில் வேறுபட்டு வளர்ச்சியுற்ற உறுப்புகளைப் பெற்றிருப்பதால் சொக்கம்பட்டிக் குடைவரையின் காலத்தை கி.பி.ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகவோ அல்லது எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியாகவோ கொள்ளலாம். முகப்பிலுள்ள நான்முகத் தூண்கள் மட்டும் கருத்தில்கொண்டு காலக் கணிப்புச் செய்வது முறையாகாது. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |