http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 30

இதழ் 30
[ டிசம்பர் 16, 2006 - ஜனவரி 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

உரிமைகளும் கடமைகளும்
பழுவூர் - 12
திரும்பிப் பார்க்கிறோம் - 2
சொக்கம்பட்டிக் குடைவரை
எத்தனை கோடி இன்பம்
நக்கன் : ஒரு சொல்லாய்வு
சங்கச்சாரல் - 13
இதழ் எண். 30 > கலைக்கோவன் பக்கம்
திரும்பிப் பார்க்கிறோம் - 2
இரா. கலைக்கோவன்

அன்புள்ள வாருணி,

திருமூக்கீச்சரத்தை அடுத்து, 1982 செப்டம்பர் மாதச் செந்தமிழ்ச் செல்வி இதழில், 'திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில்' பற்றிய கட்டுரையை வெளியிட்டேன். இத்திருக்கோயில் கோச்செங்கட்சோழரின் மாடக்கோயில்களுள் ஒன்று.

"அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்
குரிசிலசெங் கண்ணவன் கோயில் சேர்வரே"

என்னும் சம்பந்தர் பதிகவரிகள் இக்கோயிலை எனக்கு அடையாளம் காட்டின. நான் முதன்முதலாகப் பார்த்த மாடக்கோயில் எது என்பது எனக்கு நினைவில் இல்லை. ஆனால், அம்பர் மாடக்கோயில் வழி நான் பெற்ற அநுபவங்கள் மறக்கமுடியாதவை.

திருக்கோயில் ஆய்வுகளைத் தொடங்கிய நிலையிலேயே, கோயில்களில் ஆய்வு செய்யவும் படமெடுக்கவும் அநுமதி பெறவேண்டுமெனத் தெரிந்திருந்தமையால் இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு எழுதி அநுமதிக் கடிதம் பெற்றிருந்தேன். அம்பர் திருக்கோயிலுக்குச் சென்றபோது அலுவலகத்தில் இருந்த கோயில் கணக்கர் திரு. கணேசமூர்த்தி நான் பெற்றிருந்த அநுமதிக் கடிதத்தைப் பார்த்தார். அவருக்கு எனோ அந்தக் கடிதத்தில் நம்பிக்கை பிறக்கவில்லை. ஏற இறங்க என்னை ஒருமுறை பார்த்துவிட்டு, 'இந்த அநுமதிக் கடிதத்தில் இருப்பது எங்கள் ஆணையர் கையெழுத்துதான் என்பதை எப்படி நம்புவது?' என்று கேட்டார். அந்த அநுமதி மடலை நான் பெற்றவிதம் விளக்கி, என் ஆய்வு நோக்கமும் கூறி, அதற்கு முன் நான் சென்ற கோயில்களில் சந்தித்த துறை சார்ந்த அலுவலர்கள் பெயர்கள் அனைத்தும் கூறி, ஏறத்தாழப் பத்துநிமிடம் உரையாடிய பிறகும் அவர் நம்பிக்கை கொள்ளவில்லை.

இறுதியாக, 'இந்து அறநிலையத்துறை மடல்கள் உங்கள் அலுவலகத்திற்கு வருகின்றனவா?' என்று கேட்டேன்.

'ஆம்' என்றார்.

'அந்த மடல்கள் அஞ்சலில்தானே வருகின்றன?'.

'ஆம்'.

'அந்த மடல்களில் உள்ள உங்கள் ஆணையரின் கையெழுத்தை மட்டும் எப்படி நீங்கள் அவருடைய கையெழுத்துதான் என்று ஏற்றுக்கொள்கிறீர்கள்?'

'அக்கடிதங்கள் அலுவலகத்திலிருந்து நேராக எங்களுக்கு வருகின்றன. அஞ்சல் உறையில் எங்கள் அலுவலக முத்திரை உள்ளது' என்றார். அவருடைய அந்த மறுமொழி வேடிக்கையாக இருந்தது. எனினும், நான் அதைப் பொருட்படுத்தவில்லை.

நல்லவேளையாக எனக்கு வந்த அநுமதிக் கடிதத்தின் அஞ்சல் உறை என் கோப்பில் இருந்தது. நான் அந்த உறையைக் காண்பித்தேன். உறையைக் கையில் வாங்கி அதிலிருந்த அலுவலக முத்திரையைப் பார்த்தவர், மீண்டும் ஒருமுறை என் அநுமதி மடலை முழுவதுமாய்ப் படித்துப் பார்த்தார். அவரிடமிருந்த ஆணையர் அலுவலக மடலின் கையெழுத்தோடு என் மடலில் இருந்த கையெழுத்தை ஒப்பிட்டுப் பார்த்தார். பத்து நிமிடங்களாவது இந்த ஒப்பீட்டு வேலை நிகழ்ந்திருக்கும். பிறகு மெல்ல நிமிர்ந்து என்னைப் பார்த்தார். 'எவ்வளவு நேரம் ஆய்வு செய்வீர்கள்' என்றார். 'தெரியாது. கோயிலுக்குள் சென்று பார்த்தால்தான் சொல்லமுடியும்' என்றேன். 'வாருங்கள் போவோம்' என்று அழைத்துச் சென்றார். கோயிலுக்குள் நுழைந்ததும் என் துணைவி கோயிலின் வரைபடத்தை வரையத் தொடங்கினார். நானும் என் உறவினர் ஆறுமுகமும் கோயிலின் அமைப்புப் பற்றிப் பேசிக்கொண்டே கோயிலைச் சுற்றி வந்தோம். திரு. கணேசமூர்த்தி எங்களுடன் வந்தார். ஆனால், எதுவும் பேசவில்லை.

மாடக்கோயில் அமைப்பு, கோயிலில் நிகழ்ந்துள்ள திருப்பணி காரணமாக ஏற்பட்ட மாற்றங்கள், அங்கிருந்த சிற்பங்கள் பற்றிய விளக்கம், கல்வெட்டுச் செய்திகள் என நாங்கள் பேசியவற்றை எல்லாம் கேட்டபடியே வந்த திரு.கணேசமூர்த்தி பரவசமானார். அவ்வப்போது அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டு வந்த நான் அதை உணர்ந்ததும், அவரையும் உரையாடலில் சேர்த்துக் கொண்டேன். சோமாசிமாற நாயனாருடன் தொடர்புடையது அக்கோயில் என்று கூறிய அவர் அந்நாயன்மாரின் வரலாறு உரைத்தார். சிற்பங்களைப் படமெடுக்க முனைந்தபோது துணைநின்றார்.

ஏறத்தாழ மூன்று மணிநேரம் உடனிருந்து உதவியதோடு, தேநீரும் பெற்றுத் தந்தவர், 'உங்களைப் போய் சந்தேகப்பட்டேனே சார்! இந்தக் கோயிலில் பத்து வருடங்களாக இருக்கிறேன். ஆனால் இன்று நீங்கள் பேசிய செய்திகள் ஒன்றும் அறியாதவனாய் இருந்திருக்கிறேன். அடிக்கடி வாருங்கள். பக்கத்தில் அம்பர் மாகாளம் இருக்கிறது. வேண்டுமானால் சொல்லுங்கள், நான் வந்து காட்டுகிறேன்' என்று மகிழ்ந்து குழைந்தார். அம்பர் மாகாளம் பார்க்க அவர் துணை பேருதவியாக இருந்தது. அக்கோயிலில் இருந்த அற்புதமான நந்திதேவர் செப்புத் திருமேனியை ஆராயவும் படமெடுக்கவும் உதவியவர், சோமாசிமாற நாயனார் யாகம் செய்ததாகக் கருதப்படும் இடத்தையும் காட்டினார். புறப்பட முனைந்தபோது எங்களுடன் ஒரு படம் எடுத்துக்கொள்ள விழைந்தார். படமெடுத்துக் கொண்டதுடன், சிராப்பள்ளி வந்ததும் படத்தின் ஒரு படியையும் அவருக்கு அனுப்பினேன்.

திருக்கோயில் ஆய்வுகளில் நான் சந்திக்காத தொல்லைகள் இல்லை. அந்தத் தொல்லைகளுக்காகக் கோயிலாரைச் சினப்பதில் பொருளில்லை. அவர்கள் நிலை அப்படி. கோயில் கொள்ளைகள் அவர்களை இப்படியெல்லாம் நடந்துகொள்ள வைக்கின்றன. நாம் யார், எப்படிப்பட்டவர்கள், நம் நோக்கம் என்ன என்பதை அவர்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள நேர்ந்தால், தொல்லைகள் மறைந்து அரவணைப்பு நேர்வதை என் பயணம் முழுவதும் அநுபவித்திருக்கிறேன். ஆய்வாளனுக்குப் பொறுமை வேண்டும்! மலையளவு பொறுமை வேண்டும்!

பின்னாளில் ஒருமுறை அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்துக்கு அருகிலுள்ள கங்கஜடாதரர் கோயிலுக்குச் சென்றிருந்தோம். கோயில் பூட்டியிருந்தது. மணி காலை ஒன்பதரை இருக்கலாம். பக்கத்தில் விசாரித்தபோது கோயில் காவலர் வீட்டைக் காட்டினார்கள். அவரிடம் சென்று கோயிலை திறந்துவிடச் சொல்லிக் கேட்டோம். அவர் மறுத்தார். ஒரு நாளைக்கு ஒருமுறை திறக்கப்பட்டு உடன் மூடப்படும். மக்கள் வரத்தற்ற கோயில் அது. சிவாச்சாரியார் பூசைக்கு வரும்போதுதான் திறப்பேன் என்றார். நல்ல குடிமயக்கத்தில் இருந்த அவர் இடுப்பில் கத்தி வேறு! அவரிடம் பேசுவதே கடினமாக இருந்தது. என் அநுமதிக் கடிதத்தை வாங்கிப் பார்த்துவிட்டு, 'ஆணையர் சொல்வதற்கெல்லாம் நான் செய்யமுடியாது. என் மேலதிகாரி அரியலூர்க் கோயிலில் இருக்கிறார். அவரிடம் போய் அநுமதி வாங்கி வாருங்கள் திறக்கிறேன்' என்றார். ஏறத்தாழ அரைமணி நேரம் அவரிடம் நான் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்து மக்களும் அவர் மனைவியும் அவரிடம் வந்து கோயிலைத் திறந்துவிடுமாறு கூறினர். அவர்களைச் சினந்துகொண்ட அவர் கூறத்தகாத சொற்களால் அவர்களை வைதார்.

ஊர்மக்களும் அவர் மனைவியும் என்னைச் சமாதானப் படுத்தினார்கள். 'அந்த ஆள் எப்போதும் அப்படித்தான், நீங்கள் இன்னொரு நாள் வாருங்கள். நாங்கள் நிருவாக அதிகாரி வரும்போது சொல்லி அநுமதி வாங்கி வைக்கிறோம்' என்றார்கள். நளினியும் அகிலாவும் போகலாம் என்றனர். செம்பியன் மாதேவியின் கோயில் அது. அவ்வளவு தொலைவு வந்துவிட்டு அதைப் பார்க்காமல் போக எனக்கு மனமில்லை. மீண்டும் ஒருமுறை முயற்சித்துப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில், அந்தக் 'குடிகாரக் காவலர்' அருகில் சென்று, அவர் கைகளைப் பற்றினேன். நெடுந்தொலைவு பயணம் செய்து வந்திருப்பதாகக் கூறியதுடன் எங்கள் நோக்கம் பற்றியெல்லாம் அவர் கண்களைப் பார்த்தபடியே பேசினேன். நான் ஒரு மருத்துவன் என்பதைப் பலமுறை உணர்த்தினேன். பேசும்போதே அவர் தோளைத் தொடுவது, கைகளைத் தொடுவது எனத் 'தொடுமொழி'யும் நிகழ்த்தினேன். என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. மனைவியின் பக்கம் திரும்பியவர், 'சாவி கொண்டுவா' என்றார். கதவுகள் திறந்தன. கங்கஜடாதரர் தரிசனமானார்.

நாங்கள் கோயிலைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே அவருக்குத் 'தெளிந்து' விட்டது. தன் செயலுக்கு வருந்தியவர், எங்களுக்குத் தேநீர் வாங்கித் தந்தார். அரைநாள் நாங்கள் பணி முடிக்குமளவும் உடனிருந்தார். கேட்டனவெல்லாம் செய்து தந்தார். புறப்படும்போது அடிக்கடி வந்துபோகுமாறு வேண்டினார். கோயில் குற்றங்கள் மலிந்துவிட்டதால் தாம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டு உள்ளதாகவும் அதனால்தான் அப்படி நடந்து கொண்டதாகவும் கூறியவர், நான் தொட்ட பிறகுதான் அவருக்கு என்னைப் பற்றி நம்பிக்கை வந்ததாகவும் அந்தத் தொடு உணர்வு என்னை அவரைச் சேர்ந்தவராய் (!) அடையாளப்படுத்தியதாகவும் கூறி விடைதந்தார்.

காரில் புறப்பட்டதும், 'நல்ல காலம் தப்பித்தோம். நீங்கள் அருகில் சென்றதும் எங்களுக்கு எங்கே அவர் இடுப்புக் கத்தியை எடுத்துக் கொள்வாரோ என்று பேரச்சமாக இருந்தது என்றார் நளினி. அண்மையில் வெளிவந்த 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் 'கட்டிப்பிடி வைத்தியம்' என்று ஒரு மருத்துவமுறையை விளக்கியிருப்பார்கள். இதன் அடிப்படை தொடு உணர்வுதான். எங்கள் பேராசிரியர் மருத்துவர் தெய்வநாயகம், 'நோயாளியைத் தொடாமல் பேசாதே. தொடுவது அவருக்கு உன்னைப் புரிய வைக்கும். உன்மீது நம்பிக்கை ஏற்படுத்தும்' என்று அடிக்கடி சொல்வார். இந்த மருத்துவப் பொன்மொழி பல நேரங்களில் நன்மைகளையும் சில நேரங்களில் சிக்கல்களையும் உண்டாக்கியதை அநுபவத்தில் பார்த்திருக்கிறேன். அதன் பின்விளைவாகத் 'தொடு. அது நல்லதுதான். ஆனால், யாரைத் தொடுவது, எப்போது தொடுவது, எப்படித் தொடுவது என்பதில் எச்சரிக்கையாக இரு' என்று ஒரு புது மருத்துவ மொழியும் உற்பத்தியாகி உலவத் தொடங்கியது.

கோச்செங்கணானைப் பற்றிய ஆய்வு நிறைவிற்கு வந்திருந்தமையால், 'கோச்செங்கணான் யார்?' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதத் தொடங்கினேன். இந்த ஆய்வின்போது எனக்குப் பல ஏமாற்றங்களும் சில தெளிவுகளும் ஏற்பட்டமையைக் குறிப்பிடவேண்டும். தந்தையாரையும் அவருடன் உரையாட வந்த தமிழறிஞர்களையும் கண்டிருந்தமை, பள்ளியிலும் கல்லூரியிலும் எனக்கு வாய்த்த தமிழாசிரியர்கள் பாடம் நடத்திய முறை இவற்றின் வழித் தமிழாசிரியர்கள் என்றால் தமிழை முற்றிலுமாய் அறிந்தவர்கள் என்று எனக்குள் ஓர் எண்ணம் துளிர்விட்டிருந்தது. ஆனால், கோச்செங்கணான் ஆய்வு அந்தத் துளிரைக் கருக்கியது. இந்த ஆய்வின்போது ஐயங்களைத் தெளிவு செய்து கொள்வதற்காக நான் அணுகிய பல தமிழறிஞர்கள் குறுகிய எல்லைக் கல்வி கொண்டவர்களாகவே இருந்தனர். அவர்களுக்கு இலக்கியப் பின்புலம்கூட இருக்கவேண்டிய அளவில் இல்லாமல் இருந்ததும் அதிர்ச்சியளித்தது.

காலம் காலமாகச் சொல்லப்பட்டு வந்த கூற்றுகளை அப்படியே பின்பற்றுவதில் ஆர்வமாக இருந்த அவர்கள், ஆய்வு உணர்வற்றவர்களாகவே இருந்தனர். அந்தக் கூட்டத்தில் எனக்குச் சற்று நம்பிக்கை அளித்தவர்கள் பேராசிரியர் இராம.சண்முகமும் பேராசிரியர் பி.விருத்தாசலமும்தான். பேராசிரியர் இராம. சண்முகம் என் பெரியப்பா மகன். மொழியியலில் வல்லவர். அறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் மருமகன். அமெரிக்காவில் கார்னெல் பல்கலையில் பணியாற்றிப் பிறகு மதுரை காமராசர் பல்கலையில் பேராசிரியர் பொறுப்பிலிருந்தார். அஞ்சல் வழிக் கல்வி வகுப்புகள் நிகழ்த்துவதற்காக அவர் பன்முறை சிராப்பள்ளி வரவேண்டியிருந்தமையால் நானும் அவரும் கலந்துரையாட நிறைய வாய்ப்பு கிடைத்தது. அக்கலந்துரைகள் எனக்குப் பெரிதும் பயனளித்தன. என் கேள்விகளுக்கெல்லாம் அவரால் விடையளிக்கக் கூடவில்லை. என்றாலும், எங்கெங்கு தேடினால் விடை கிடைக்க வாய்ப்புண்டு என்று வழிகாட்டினார். ஆங்கிலத்திலும் தமிழிலும் பரவலாகவும் ஆழமாகவும் பயின்றிருந்த அவருடன் மணிக்கணக்காக உரையாடி இலக்கியக் கொள்கைகள், ஒப்பிலக்கியம், இலக்கிய நோக்குகள் இவை பற்றியெல்லாம் அறிந்தேன். என் முயற்சியினைப் பெரிதும் உற்சாகப்படுத்திய அவர், 'கணைக்கால் இரும்பொறை' கற்பனை வடிவம் என அறிய நேர்ந்தபோது வியந்தார். கோச்செங்கணானோடு போரிட்ட சேரவேந்தன் களவழிப் போரில் மாண்டதைக் களவழி நாற்பது கொண்டு விளக்கியபோது அதிர்ந்தார். கணைக்கால் இரும்பொறையோடு தொடர்புபடுத்தப்படும் எந்தப் பாடலிலும் அம்மன்னரின் பெயரினம் குறித்தும் விவாதித்தோம். என் கட்டுரையை முழுவதுமாய்ப் படித்துப் பலமுறை விவாதித்து, மாற்றம் ஏதுமின்றி அப்படியே வெளியிடுமாறு கூறினார்.

பேராசிரியர் பி.விருத்தாசலம் கரந்தைப் புலவர் கல்லூரியில் முதல்வராக இருந்தவர். தமிழ் உணர்வுடைய தகைமையர். என் இளவர் அரசு வழி எனக்கு அறிமுகமானவர். சங்க இலக்கியத்தில் நல்ல தேர்ச்சியுடையவர். செந்தமிழ்ச்செல்வி 1982 நவம்பர் இதழிலிருந்து வெளியாகத் தொடங்கிய 'கோச்செங்கெணான் யார்?' கட்டுரையைப் படித்துவிட்டு என்னிடம் கருத்துப் பரிமாற்றம் செய்ய இல்லம் வந்தவர், நான் காட்டிய சான்றுகளையெல்லாம் பார்த்து அமைதியானார். இவ்வளவு தரவுகள் இத்தனை காலம் மறைபொருளாகவே இருந்துவிட்டனவே என்று வருந்தினார். என் ஆய்வை வாழ்த்தியதோடு, இலக்கிய ஆய்வுகள் பற்றிய அவர் அநுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

'கோச்செங்கணான் யார்?' செந்தமிழ்ச் செல்வியில் திங்கள் தோறும் திடர் கட்டுரையாக வந்துகொண்டிருந்த காலத்தில்தான் தமிழுலகமும் வரலாற்றுலகமும் என்னைத் திரும்பிப் பார்த்தன. அப்போதும்கூட, ஒரு கண்மருத்துவன் இலக்கியத்திலும் வரலாற்றிலும் என்ன ஆய்வு செய்துவிடமுடியும் என்று எண்ணியவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். நான் அந்த எள்ளல்களை விரும்பி எதிர்கொண்டேன். அவர்கள் சொல்வதில் உண்மையில்லை என்பதை உணர்த்த, நிறைய படித்தேன். இரண்டு துறைகளிலும் என்னை ஆழப்படுத்திக் கொள்ள விழைந்தேன். இலக்கியம் மட்டும் பயின்றால் போதாதென்று இலக்கணம் படிக்கக் கருதினேன். அப்போதுதான் புலவர் சு.அரங்கசாமி அறிமுகமானார்.

புலவரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் சிராப்பள்ளி மருத்துவர் மு.சிவக்கண்ணு. இந்திய மருத்துவமன்றச் சிராப்பள்ளிக் கிளையில் என்னை உறுப்பினராக்கி, அக்குடும்பத்தில் என்னை ஒன்றச் செய்தவரும் அவரே. நானறிந்தவரை அவர்தான் தமிழில் 'இலக்கிய இளவல்' பட்டம் பெற்ற தமிழ்நாட்டின் முதல் மருத்துவர். பொது மருத்துவரான அவரது வழிகாட்டலில் திருவானைக்காவிலிருந்த தமிழ்க்குடிலில் சேர்ந்தேன். என்னை அழைத்துச் சென்று புலவருக்கு அறிமுகப்படுத்தி இலக்கணம் பயிற்றுவிக்கக் கேட்டுக்கொண்டார். புலவர் என்னையும் இலக்கிய இளவலாக்க விரும்பினார். இசைந்தேன். சென்னைப் பல்கலைக்கழக அஞ்சல் வழிக் கல்வியில் சேர்ந்தேன்.

புலவர் அரங்கசாமி நான் அறிய நேர்ந்த தமிழாசிரியர்களில் முற்றிலும் மாறுபட்டவர். அவருடைய அறிமுகமும் நட்பும் தமிழில் முதுகலை பயிலுமளவு என்னை உயர்த்தின. அவரிடம் படித்த காலம் என்னால் மறக்கமுடியாத காலம். எனக்கு வாய்ப்பான நேரங்களில் வகுப்பெடுத்தார். அப்போது அவர் சிராப்பள்ளி இ.ரெ.மேனிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்தார். மிகுந்த உரிமையளித்துப் பாடம் சொல்லித்தந்ததால், அவரிடம் நிறைய விவாதிப்பேன். ஒருமுறை 'உங்களைப் போல ஒரு மாணவர் முன்பே கிடைத்திருந்தால் நான் நிறையப் படித்திருப்பேன்' என்று அவர் கூறியது நினைவில் உள்லது. என் கேள்விகளுக்கு அவர் அஞ்சியதே இல்லை. என்னைப் பார்த்ததுமே 'இன்று என்ன ஐயம்' என்றுதான் தொடங்குவார். அந்தக் காலத் தமிழ் மாணவர் என்பதால் ஆங்கில அறிவும் நன்கிருந்தது. சில நேரங்களில் ஆங்கில இலக்கணத்தோடு தமிழ் இலக்கண நெறிகளை ஒப்பிட்டுப் பேசுவார். அவ்வப்போது வீட்டிலேயே சுற்றுண்டி, பால் தந்து கொள்ளச் செய்வார். அவரிடம் தனி மாணவனாகவும் பாடம் கேட்டிருக்கிறேன். அவர் வகுப்புகளில் மாணவரோடு மாணவனாய் இருந்தும் பாடம் கேட்டிருக்கிறேன். வகுப்புத் தேர்வு அறிவித்தபோது என்னை மட்டும் அணுகி, நீங்கள் எழுத வேண்டுமென்பதில்லை என்றார். நான் பிடிவாதமாக எழுதி முதல் மதிப்பெண் பெற்றபோது மகிழ்ந்தார். உடன் பயின்ற தமிழாசிரியர்கள் இதனால் அவர் கேலிக்கு ஆளாகியது வருத்தம் தந்தது.

முதலாண்டில், 'வைராக்கிய சதகம்' என்றோர் இலக்கியம் பாடமாக இருந்தது. அந்தப் பாடத்திலிருந்து ஆண்டுதோறும் ஒரு கேள்வி மட்டுமே கேட்கப்பட்டு வந்தது. முதலாண்டு முடியும் தருவாயிலிருந்தபோதும், புலவர் அந்த இலக்கியத்தை அணுகவில்லை. நான் அந்த இலக்கியம் பற்றிக் கேட்டபோது, அந்தப் புத்தகம் அவரிடம் இல்லையென்பதாலும் அது தேடியும் கிடைக்கவில்லை என்பதாலும், அதை எடுப்பதைப் பல ஆண்டுகளாகத் தவிர்த்து வந்திருப்பதாகக் கூறினார். கேள்வித்தாளில் பத்துக்கேள்விகள் தந்து ஐந்திற்குத்தான் விடை எழுதச் சொல்வார்கள் என்றும் அதில் இந்தக் கேள்வியை தவிர்த்துக் கொள்ளலாம் என்றும் வழிகாட்டினார். அவருடைய அந்த மறுமொழி எனக்கு வேதனையளித்தது. எப்படியாவது, 'வைராக்கிய சதகம்' பெற விழைந்தேன். என் இளவல் பேரா. அரசுவிற்கு எழுதி அந்நூலைத் தேடச் செய்தேன்.

இதற்கிடையில், வைராக்கிய சதகத்தில் வல்ல ஒரு பெரியார் திருவானைக்காவிலேயே இருப்பதாகவும் அவரிடம் ஓர் உரை நிகழ்த்தச் சொல்லலாம் என்றும் புலவர் கூறினார். அவர் விருப்பப்படியே நானும் அவரும் போய் அப்பெரியாரைப் பார்த்தோம். அவர் வைராக்கிய சதகம் தமக்குத் தெரியுமென்று கூறி, உரை நிகழ்த்த ஒப்புக்கொண்டார். புத்தகம் கிடைக்காமையால் அந்த உரையைப் பதிவு செய்ய விழைந்து நான் ஒலிப்பதிவுக் கருவியுடன் தயாராக இருந்தேன். உரை ஒன்றரை மணிநேரம் நிகழ்ந்தது. 'வைராக்கிய சதகம்' என்ற பெயர் பலமுறை உச்சரிக்கப்பட்டதே தவிர அவர் என்ன பேசினார் என்பதே எங்களில் யாருக்கும் புரியவில்லை. புலவரிடம் கேட்டபோது அவருக்கும் அந்தக் குழப்பம் இருந்ததை அறியமுடிந்தது.

சென்னை மறைமலையடிகள் நூலகத்தில் வைராக்கிய சதகம் கண்டறியப்பட்டு, அரசு எனக்கு அந்நூலை ஒளியச்சுச் செய்து அனுப்பினார். அதில் நூற்பதிப்புப் பேரூர் சாந்தலிங்க மடம் என்பதறிந்து, நான் கோயமுத்தூரில் இருந்த என் நண்பர் மருத்துவர் பொ.பெருமாளிடம் மடத்திற்குச் சென்று அந்நூலின் படி பெற்றுத்தரக் கேட்டுக்கொண்டேன். அவரும் பெற்றனுப்பினார். அரசு அனுப்பியிருந்த படியை நான் படித்ததும் புலவரிடம் தந்தேன். தாம் அந்த நூலை அதுநாள் வரையில் பார்த்ததில்லை என்று கூறிப் படிக்க வைத்துக்கொண்டார். நான் அந்த நூலைப் படித்த பிறகுதான், 'வைராக்கிய சதகம்' பற்றித் திருவானைக்கா பெரியவர் நிகழ்த்திய உரைக்கும் அந்த நூலுக்கும் யாதொரு தொடர்புமில்லை என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளமுடிந்தது. புலவரும் அதை உணர்ந்து வருந்தினார். 'வைராக்கிய சதகத்தைப் பார்த்ததில்லை. அதனால் அது தொடர்பான கேள்வியை ஒதுக்கிவிடுக' என்று அறிவுறுத்துய புலவரின் நேர்மையையும், 'தெரியும்' என்று கூறிப் பொய்யுரைத்த பெரியவரின் கயமையையும் நினைத்துப் பார்த்தேன். அந்தப் பெரியவர் பல நூல்கள் எழுதியவர். சிராப்பள்ளியில் சிறந்த கவிஞராகவும் சமய அறிஞராகவும் போற்றப்பட்டவர். அவர் பெயரைக் குறிப்பிடுவது பெருந்தன்மையன்று என்பதால் தவிர்க்கிறேன். ஆனால், என் வரலாற்று வாழ்க்கையில் இது போல போலிகளை நூற்றுக்கணக்கில் சந்தித்து வருந்தியிருக்கிறேன்.

புலவர் அரங்கசாமியின் தொடர்பால் தொல்காப்பியம், நன்னூல், காரிகை, மாறன் அலங்காரம், பாட்டியல் நூல்கள் எனப் பலவும் பயிலும் வாய்ப்புப் பெற்றேன். அவற்றுள் என்னை பிரமிக்க வைத்தது தொல்காப்பியம். புலவர் அதைப் பாடமாக மட்டுமே நடத்தினார். ஆனால், பொருளதிகார நூற்பாக்கள் ஒவ்வொன்றும் என்னை எங்கெங்கோ கொண்டு சென்றன. அவற்றில் வாழ்க்கையின் சால்புகளை எளிதாக என்னால் பார்க்க முடிந்தது. என் வாழ்வரசியிடம் அந்த நூற்பாக்களைப் பற்றிக் கலந்துரையாடிய போதுகளில் அவர் வியப்படைவதைக் கண்டிருக்கிறேன். தொல்காப்பியம், 'தமிழர் வரலாறும் பண்பாடும்' பேசும் அருமையான நூல் என்பதைத் தமிழ்ப் புலவர்களில் பலரும் இன்றளவும் அறிந்திருக்கவில்லை என்ற உண்மையையும் என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

புலவருடைய துணைவியார் அன்பானவர்; அமைதியானவர். புலவருக்கு நான்கு பெண்கள். ஒரு பையன். அந்த நான்கு பெண்களுள் ஒருவர்தான் நம் மையத்தின் பெருமைக்குரிய ஆய்வாளராகப் பின்னாளில் உருவான அர.அகிலா. நான் படிக்கச் சென்ற காலத்தில் அகிலா பள்ளிக்கூட மாணவி. சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் முதுகலை சேர்ந்தபோது ஆய்வேட்டிற்காக மையத்திற்கு வந்தவர் வரலாற்றார்வம் காரணமாகவே முனைவர் ஆய்வு செய்து இன்று தமிழ்நாட்டின் சிறந்த ஆய்வாளர்களுள் ஒருவராய் மிளிர்கிறார்.

அகிலாவின் தந்தையார் புலவர் அரங்கசாமி ஓர் அதிசயமான மனிதர். ஏறத்தாழ ஆறாண்டுகள் மிக நெருக்கமாக அவருடனும் அவர் குடும்பத்தாருடனும் பழகியுள்ளேன். இளங்காலை நேரம் தவிர மற்றெப்போதும் மாணவர்கள் சூழக் காட்சியளிப்பவர் புலவர். சனி, ஞாயிறு நாட்களில் உணவருந்தும் நேரம் தவிர, பிற போதுகளில் இலக்கிய இளவல், புலவர், முதுகலை மாணவர் வகுப்புகளில்தான் அவரைக் காணமுடியும். சாதி, மத, இன வேறுபாடற்ற உயர்ந்த கொள்கையராய் அவர் திகழ்ந்தார். மாணவர்களில் யார் வேண்டுமானாலும் தேவைகளுக்கு அவர் வீட்டுச் சமையலறைவரை உட்செல்ல முடியும் நிலை இருந்தது. பெரும்பாலான தமிழாசிரியர்கள் உணவு கொணர்ந்து அவர் இல்லத்திலேயே சாப்பிட்டு ஓய்வெடுத்துப் படித்துச் செல்வதைக் கண்டிருக்கிறேன். பிஞ்சுக் குழந்தைகளுடன் வரும் தமிழாசிரியைகள், அவர் வீட்டு முற்றத்திலேயே தொட்டில் கட்டிக் குழந்தைகளை அதிலிட்டுப் படித்துச் சென்ற வகைமையையும் புலவர் வீட்டில் மட்டுமே கண்டிருக்கிறேன். அவர் இல்லம் உண்மையாகவே 'தமிழ்க்குடிலாக' இருந்தது. அவர் பிள்ளைகள் அனைவரும் மாணவர்கட்கு உதவுவதில் பெரும் பங்காற்றினர். தவறுகள் வந்துவிடுமோ என்ற அச்சத்தால், அவரிடம் பயின்ற பெரும்பான்மையான தமிழாசிரியர்களுக்குத் தேர்வு விண்ணப்பம் நிறைவு செய்வதில்கூட தயக்கமிருந்ததைக் கண்டிருக்கிறேன். அவர்களுக்கெல்லாம் புலவரின் பிள்ளைகள் அனைத்து உதவிகளையும் செய்து தந்தனர். சுருக்கமாகச் சொல்வதானால், தமிழ்க் குடிலில் படிக்க வந்தவர்கள் அனைவருக்கும் புலவரில்லம் புகலிடமாக விளங்கியது.

அன்புடன்
இரா. கலைக்கோவன்
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.