http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 30

இதழ் 30
[ டிசம்பர் 16, 2006 - ஜனவரி 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

உரிமைகளும் கடமைகளும்
பழுவூர் - 12
திரும்பிப் பார்க்கிறோம் - 2
சொக்கம்பட்டிக் குடைவரை
எத்தனை கோடி இன்பம்
நக்கன் : ஒரு சொல்லாய்வு
சங்கச்சாரல் - 13
இதழ் எண். 30 > தலையங்கம்
உரிமைகளும் கடமைகளும்
ஆசிரியர் குழு
அன்பார்ந்த வாசகர்களே,

வணக்கம்.

நம் மத்திய அரசு சமீபத்தில் 'தகவல் அறியும் உரிமை' மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது. அமலில் இருந்தும் நடைமுறைப்படுத்தப்படாத பல சட்டங்களுக்கு மத்தியில், இச்சட்டம் தன் கடமையைச் செய்வது குறித்து மகிழ்ச்சியே. அரசாங்க அலுவலகங்களில் லஞ்ச ஊழலைக் குறைக்க இச்சட்டம் எத்தனை தூரம் பலனளிக்கும் என்று சரியாகத் தெரியாவிட்டாலும், தகவல்களைத் தர மறுத்த தாசில்தார் போன்ற அதிகாரிகள் தண்டிக்கப்பட்டிருப்பது மக்களின் அடிப்படை உரிமையை நிலைநாட்ட முடியும் என்ற செய்தியை மக்களுக்கு அளிக்கிறது. இது அரசுத்துறைகளுக்குச் சரி. பொதுமக்களுக்குத் தகவல் அளிக்கவேண்டியது அவர்களது கடமைகளில் ஒன்று. ஏனெனில் அவர்கள் ஊதியமாகப் பெறுவது மக்களின் வரிப்பணத்தை. ஆனால், தனிப்பட்ட ஆர்வத்துடன் ஆய்வில் ஈடுபடுபவர்களை எந்தச் சட்டத்தாலும் கட்டுப்படுத்திவிட முடியாது. அவரவர் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நடந்தால்தான் உண்டு.

வரலாற்று ஆய்வில் ஈடுபடுவது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தனிப்பட்ட உரிமை. யாராலும் தடுக்க முடியாது. மற்ற துறைகளைக் காட்டிலும் வரலாற்றுத் துறையில்தான் தனிப்பட்ட ஆர்வத்தால் ஈடுபடும் ஆர்வலர்களின் எண்ணிக்கை அதிகம். ஆர்வலர்கள் அனைவரையுமே ஆய்வாளர்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், பெரும்பாலானோர் ஆய்வாளர் என்ற தகுதியை நோக்கியே பயணிப்பது கண்கூடு. ஒரு ஆர்வலர் ஆய்வாளரா இல்லையா என்பதை வரையறுக்க எந்த அமைப்பும் சட்டதிட்டங்களும் இல்லை. வரலாற்றுத் துறையின் பலமும் இதுதான். பலவீனமும் இதுதான். ஒரு ஆர்வலரை ஆய்வாளராக அடையாளம் காட்டுவன அவரது கண்டுபிடிப்புகளும் கட்டுரைகளும்தான். இப்படி தானே ஒரு தகுதியைச் சுயமாக ஏற்படுத்திக் கொள்ளும்போது, உரிமைகளுக்கு இணையாகப் பொறுப்புணர்ச்சியும் இருமடங்கு கூடுதலாகிறது.

வரலாற்று ஆய்வில் ஈடுபடுபவர்களைக் கீழ்க்கண்டவாறு 4 பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. அரசுத்துறை சார்ந்தோர்
2. கல்வித்துறை சார்ந்தோர்
3. தனியார் ஆய்வு மையங்கள்
4. தனிப்பட்ட ஆர்வலர்கள்

இந்த நான்கு பிரிவினரும் வரலாற்று ஆய்வில் ஈடுபட்டுச் சேகரிக்கும் செய்திகள் அனைத்தும் இறுதியாக யாரைச் சென்றடைய வேண்டும்? மக்களைத்தானே! இந்நான்கு பிரிவினரிலுமே ஒரு சிலரைத்தவிர, பெரும்பாலானவர்கள் மக்களால் எளிதில் அணுகப்படக்கூடியவர்களாகவும் அவ்வப்போது ஏதாவது ஒரு ஊடகத்தில் தங்களது கண்டுபிடிப்புகளைப் பற்றிய தகவல்களை வெளியிடுபவர்களாகவுமே இருக்கிறார்கள். இருப்பினும், மக்களுக்குச் சென்றடையும் செய்திகளில் பிழைகள் மலிந்திருப்பது ஏன்? ஒரே கண்டுபிடிப்பைப் பற்றி இருவேறு ஆய்வாளர்கள் முரண்பட்ட கருத்துக்களைக் கூறுவது ஏன்? இதுவரை நாங்கள் கண்ட நிகழ்வுகளின் அடிப்படையில், காரணங்களைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

1. ஆய்வு முடிவுகளில் ஏற்படும் மாறுபாடுகள்

ஒரு கட்டுமானத்தின் காலத்தை ஒரு ஆய்வாளர் 10ம் நூற்றாண்டு என்று முடிவு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். சில ஆண்டுகள் கழித்து இன்னொரு ஆய்வாளர் ஆய்வு செய்யும்போது கிடைக்கும் கூடுதல் தகவல்களை வைத்து 12ம் நூற்றாண்டு என முடிவு செய்தால், இது ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஏனெனில், புதிய தரவுகள் கிடைத்துள்ளன. அவை சரியாக இருக்கும் பட்சத்தில், முதல் ஆய்வாளர் தனது கருத்தை மாற்றிக் கொள்ளவேண்டியது அவரது கடமை. இவ்வாறு நிகழ்வது வரலாற்று ஆய்வுகளில் இயல்பே. அறிவியல் ரீதியான ஆய்வு முறைகளுக்குட்பட்டு நேர்மையாக ஆய்வு செய்திருந்தால், அவருக்கு எள்ளளவும் கௌரவக் குறைச்சல் ஏற்பட்டுவிடாது. மாறாக, அவரது பெருந்தன்மைதான் நிமிர்ந்து நிற்கும். இதைத்தான் 'வரலாற்றாய்வு முடிவுகள் காலப்போக்கில் மாறுதலுக்குட்பட்டவை' என்று கூறுகிறோம்.

2. தரவுகளில் இருக்கும் பிழைகள்

ஆய்வு என்பதே கவனத்துடன் செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். ஆய்வின்போது வெளிப்படும் தரவுகள்தான் ஆய்வின் முடிவை நிர்ணயிப்பதில் முதலிடம் வகிக்கும். உதாரணமாக, பராந்தகர் காலக் கட்டுமானம் ஒன்றிலிருக்கும் தரங்கப்போதிகையை வெட்டுப்போதிகை என்று ஒரு ஆய்வாளர் கவனக்குறைவாக எழுதிவிட்டால், கட்டுமானத்தின் காலத்தைக் கணிப்பதில் குழப்பம் ஏற்படும். பின்னர் அப்புத்தகத்தைப் படிக்கும் ஆர்வலர்களின் மனதில் அவ்வாய்வாளரைப் பற்றிய மதிப்பும் குறையும். வெட்டுப்போதிகை இருந்தால் அது முதலாம் இராஜராஜர் அல்லது அவருக்குப் பிந்தைய காலம் என்று அறியாத ஆர்வலர்களைத் தவறான முடிவுக்கு எடுத்துச் செல்லவும் வாய்ப்புகள் உண்டு. இத்தகைய பிழைகளைச் சுட்டிக்காட்டும்போது, சில ஆய்வாளர்கள் 'வரலாற்றாய்வு முடிவுகள் காலப்போக்கில் மாறுதலுக்குட்பட்டவை' என்று கூறித் தப்பித்துக் கொள்கின்றனர். 10ம் நூற்றாண்டை 12ம் நூற்றாண்டு என்று முடிவு செய்வதை வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாமேயொழிய, ஒருவருக்கு வெட்டுப்போதிகையாகத் தெரிவது இன்னொருவருக்குத் தரங்கப் போதிகையாகத் தெரிய வாய்ப்பே இல்லை. கல்வெட்டுகளை ஆராயும்போது இத்தகைய பிழைகள் ஏற்படுவது சகஜம். ஒருவர் படியெடுத்த கல்வெட்டை இன்னொருவர் களத்துக்குச் சென்று சரிபார்க்காமல் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரும்போது இத்தகைய தவறுகள் நேர்கின்றன.

3. முன்முடிவுகளால் உருவாகும் பக்கச்சார்புடைய கருத்துக்கள்

ஆய்வு முடிவு என்பது அவ்வாய்வின்போது கிடைக்கும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவது. ஆனால் சில ஆய்வாளர்கள், முன்கூட்டியே முடிவுகளைக் கற்பனை செய்துகொண்டு, அதற்குத் தகுந்தாற்போல் தரவுகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அறிவியல் ரீதியான ஆய்வு முறையில் Null Hypothesis மற்றும் Alternate Hypothesis ஆகியவற்றை ஆய்வு ஆரம்பிக்கும் முன்னரே வரையறை செய்யவேண்டியது முக்கியம்தான். ஆனால் இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், முன்கூட்டியே எடுக்கப்பட்ட முடிவுகளையும் Hypothesisகளையும் குழப்பிக் கொள்பவர்கள்தான் அதிகம். இரண்டு Hypothesisகளில் எதற்குச் சாதகமாகத் தரவுகள் கிடைக்கின்றனவோ, அவற்றை முடிவாகக் கொள்ளாமல், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான். இன்னும் சில ஆய்வுகளுக்குப் பின் நான்காம் கால் மறைந்துவிடும் என்று கூறுபவர்களால் பாதிக்கப்படுவது வரலாறுதான். அவற்றை உண்மையென்று அப்பாவித்தனமாக நம்பும் ஆர்வலர்கள்தான். மதம், மொழி, இனம் தொடர்பான நம்பிக்கைகள் வரலாற்றாய்வுடன் கலக்கும்போது இத்தகைய பக்கச்சார்புடைய கருத்துக்கள் உருவாகின்றன.

4. முழுமையற்ற கட்டுரைகள்

ஒரு ஆய்வாளர் தனது கண்டுபிடிப்பை ஆய்வுக் கட்டுரையாக்கி வெளியிடும்போது, அக்கண்டுபிடிப்பு தொடர்பான அத்தனை தகவல்களையும் தரவேண்டியது அவசியம். இன்று பெரும்பாலான ஆய்வாளர்கள் அடிக்குறிப்புகளோ துணைநூற்பட்டியலோ இல்லாமல் ஏதோ பொழுதுபோக்குப் பத்திரிக்கை கிசுகிசு வெளியிடுவதுபோல் வெளியிடுகிறார்கள். இதுபோன்ற ஆய்வுக்கட்டுரைகள் கண்டுபிடிப்பின் நம்பகத்தன்மையைக் குறைத்து ஆய்வாளரின் மீதான நம்பிக்கையைப் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை. குறைந்த பட்சம் பின்குறிப்புகளில் வரவேண்டியவை அவ்வக்கட்டுரைகளிலேயே இடம்பெற்றிருந்தாலாவது பரவாயில்லை. அப்படியிருக்கும் கட்டுரைகளிலும், எது எடுத்தாளப்பட்ட குறிப்பு, எது ஆய்வாளரின் கருத்து என்பதில் தெளிவிருப்பதில்லை. சில கட்டுரைகளைப் படிக்கும்போது அந்த ஆய்வாளர் உண்மையிலேயே களத்திற்குச் சென்று ஆய்வு செய்தாரா என்று சந்தேகம் ஏற்படும். தன் ஆய்வுப்பொருளைப் பற்றி A, B, C என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட மூன்று கருத்துக்களை வெவ்வேறு நூல்களிலிருந்து எடுத்துக்கூறிவிட்டு, அதற்குச் சற்றும் பொருத்தமில்லாத D என்ற தன் கருத்தை முடிவாகக் கூறுகிறார்கள். A, B & C கருத்துக்கள் உண்மை என்பதால், படிப்பவர்கள் D ஐயும் உண்மை என்றே கருதிக்கொள்வார்களாம். தாமும் ஏதாவது கட்டுரை எழுதவேண்டுமே என்று கடமைக்காக எழுதுபவர்களின் எழுத்துக்களில் இத்தகைய போக்கைக் காணலாம்.

5. தனிமனிதத் தாக்குதல்கள்

கருத்துக்களைக் கருத்துக்களால் மறுப்பதுதான் ஆய்வுலகில் ஆரோக்கியமான போக்கு. ஆனால், மேற்கண்ட பிழைகளைச் செய்யும் சில ஆய்வாளர்கள் அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமின்றி, ஏதோ அவர்களைக் குறை சொல்வதையே நாம் நோக்கமாகக் கொண்டதுபோல் பதிலுரைப்பார்கள். ஒரு கட்டுரையின் மீதான கேள்விகள் நேர்மையாக இருக்கும்போது, அக்கேள்விகளுக்குப் பதில் இல்லாமல், 'நான் ஏற்கனவே அவர் கட்டுரையைக் கேள்விக்குட்படுத்தியதால்தான் இப்போது என் கட்டுரையைத் தவறென்று நிரூபிக்க முயல்கிறார்' என்று பொறுப்பில்லாமல் கூறும் சில ஆய்வாளர்களும் இருக்கிறார்கள். நேர்மையான ஆய்வாளர்கள் யாருக்கும் முன்விரோதங்கள் இருக்க வாய்ப்பில்லை. அப்படியே இருந்தாலும், விமர்சனங்களில் அவை கலக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு கட்டுரை மீதான விமர்சனத்தில் கருத்துக்கள் தொடர்பான கேள்விகளுடன் கலந்திருக்கும் தனிமனிதத் தாக்குதல்களைத் தவிர்த்து விட்டு, கருத்துக்கள் தொடர்பான கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்கலாம். இதனால் படிப்பவர்களுக்கும் கட்டுரையைப் பற்றிய தெளிவு ஏற்படும்.

மேலே கூறிய குறைகளைக் களைய என்ன தீர்வு என்பதை விரிவாகச் சொல்லவேண்டிய அவசியமில்லை. அனைவருக்கும் தெரிந்ததுதான். ஒவ்வொரு ஆய்வாளருக்கும் மிகுந்த பொறுப்புணர்ச்சி தேவை. தவறுதல் யாவர்க்கும் இயல்பே. தவறிவிட்டோமே என்று வருத்தப்பட ஒன்றுமில்லை. கருத்துக்களையும் முடிவுகளையும் தெளிவாக முன்வைப்பதோடு, தவறிருந்தால் திருத்திக் கொள்ளும் மனப்பக்குவமும் இருந்தால், தான் கூறியது தவறாக இருந்தாலும் வரலாறு நேராகிறதே என்ற மனப்போக்கும் இருந்தால், வரலாறு வளப்படும். ஐயமில்லை.

அன்புடன்
ஆசிரியர் குழு

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.