http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 4

இதழ் 4
[ நவம்பர் 15 - டிஸம்பர் 14, 2004 ]


இந்த இதழில்..
In this Issue..

தரவுகளைத் தொகுப்போம்
மத்தவிலாச அங்கதம் - 2
கதை 3 - கண்டன்
தட்டப்படாத கதவுகள் திறப்பதில்லை
கல்வெட்டாய்வு - 3
ஆத்மாவின் அடையாளங்கள்
கட்டடக்கலை ஆய்வு - 4
இராஜசிம்மன் இரதம்
Rare Karana Sculptures from Thirumalapadi
இராகமாலிகை - 3
சங்கச்சாரல் - 4
கோச்செங்கணான் யார் - 2
இதழ் எண். 4 > கதைநேரம்
நித்த வினோத வளநாட்டின் கிழார் கூற்றத்து பிரம்மதேயமான புள்ளமங்கலத்தில் எழுந்தருளியிருக்கும் திருவாலந்துறை மகாதேவர் திருக்கோயிலின் கிழக்கு கோபுர வாயிலுக்குள் நுழையுமுன் ஈசுவர பட்டர் வானத்தை அண்ணாந்து ஒருமுறை பார்த்துக் கொண்டார்.

இருள் சரிவரப் பிரியாத வைகறை நேரமாதலால் ஒன்றும் சரிவரத் தெரியவில்லை - அல்லது தமக்குத்தான் வயதாகிவிட்டதால் கண்கள் மங்குகின்றனவா ?

சிலநாட்கள் கோபுரத்தின் வடக்கு பூதகணத்திற்கருகில் ஒரு கிழக் காக்கை உட்கார்ந்திருக்கும். அப்படிக் காக்காய் கண்களில் தென்பட்டுவிட்டால் அவரைப் பொறுத்தவரை நல்ல சகுனம். அன்று முழுவதும் கழஞ்சுகளும் மாடைகளும் சற்று தாராளமாகவே தட்டில் விழும். இன்றைக்கு ஒன்றும் தென்படவில்லை - ஆக தேங்காய் மூடிகளும் மடைப்பள்ளி பிரசாதமும்தான் இன்றைய கச்சேரி.

அலுப்புடன் விடுவிடுவென்று நேராக நடந்து கருவறைக் கதவைத் சாவியிட்டுத் திறந்தார். விளக்கொளியில் சிவம் ஏதோ ஒருவித மோனமயக்கத்தில் இருப்பது தெரிந்தது. ஈசுவர பட்டருக்கு இருந்த மனச் சோர்வில் அதையெல்லாம் கவனிக்க நேரமில்லை - அதுதான் நாள்கணக்காக வருடக்கணக்காக இதே உருவத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாரே ?

கருவறைக்குத் திரையிட்டுவிட்டு இயந்திரத்தனமாய் லிங்கத்தின் மீதிருந்த வேட்டியைக் கழற்றி புதிய வேட்டி மாற்றினார். பழைய மலர் மாலைகளை எடுத்துவிட்டு புதிய மாலைகளை அணிவித்தார்.

இன்னும் சற்று நேரத்தில் உஷத்கால பூஜைமணி அடிக்க ஆரம்பித்துவிடும். அந்த அதிகாலை நேரத்தில் புள்ளமங்கலத்தில் வேலைவெட்டியில்லாத சில கிழங்கள் ரொம்ப மும்முரமாய் அதிகாலை குளித்தெழுந்துவிட்டு சரியாய் கோயிலுக்கு வந்துவிடும். அர்ச்சனை செய்து முடித்துவிட்டு அவர்களுக்கெல்லாம் தூப தீபங்கள் காட்டி முடித்தால்தான் சற்று ஓயலாம்.

ஒரு நாளா - இரண்டு நாளா - கிட்டத்தட்ட ஆறாயிரத்தி இருநூறு நாட்களாக... அதாவது பதினேழு வருடங்களாக ஈசுவர பட்டர் இந்தப் பணியை விடாமல் மாறாமல் செய்துகொண்டிருக்கிறார்....அலுப்பு வருமா வராதா ?

திரையைச் சற்று லேசாகத் திறந்து வந்திருக்கும் கும்பலை நோட்டமிட்டார். அர்த்த மண்டபத்தில் இரண்டு பாவை விளக்குகள்தான் என்றாலும் பொழுது புலர ஆரம்பித்துவிட்டதால் சாளரங்கள் வழியாக லேசாக வெளிச்சம் வர ஆரம்பித்துவிட்டது...

வழக்கமான முகங்களுக்கு மத்தியில்...இதென்ன ?

பளிச்சென்று உடலெங்கும் திருநீறணிந்து வெள்ளை வேட்டி துண்டு உடுத்தி களையாக ஒரு இளைஞன் ! அவன் கழுத்திலும் காதுகளிலும்...தங்கமேதான் ! சற்று வசதியான வீட்டுப் பிள்ளைதான் போலிருக்கிறது...

ஈசுவர பட்டருக்கு சற்று உற்சாகம் தொற்றிக் கொண்டது. புதிய மனிதர்களைப் பார்த்தாலே அவருக்கு உற்சாகம் பொங்கும். தட்டில் ஏதாவது விழும் என்பது மட்டும் காரணமல்ல - அவர்களிடம் பேச்சுக்கொடுத்து ஊர் நடப்பு உலக நடப்பு முதலியவற்றைத் தெரிந்துகொள்ளலாமல்லவா ?

அதோ மணி சத்தம் கேட்கிறது -
திரையைத் திறந்தார். கொஞ்சம் உரத்த குரலிலேயே நிதானமாக இராகமிட்டு பூஜை செய்தார். தொழிலில் அவருடைய சிரத்தை புதியவனுக்குத் தெரியவேண்டாமோ ?

தூப தீபங்களை முடித்துவிட்டு நிதானமாக அனைவருக்கும் திருநீறு வழங்கினார். அந்த இளைஞனும் அவருடைய பக்தி சாகரத்தில் மயங்கிவிட்டதுபோல்தான் தெரிந்தது - தட்டில் முழுசாக ஒரு கழஞ்சு விழுந்தது ! பட்டரின் மகிழ்ச்சிப் பிரவாகம் கட்டுப்படுத்த முடியாமல் முகத்தில் முறுவலாக விரிந்தது.

ஒரு கழஞ்சு ! அடேய் - அனவரதமும்(1) வந்து சுவாமியை உரிமையோடு தரிசித்துவிட்டுப் போகிறீர்களே - எவனாவது ஒரிரு மாடைகளுக்குமேல் கண்களில் காட்டியதுண்டா ? அட தினமும் வேண்டாமையா - விசேஷ நாட்களில்கூடவா மனம் இரும்புபோலக் இறுகிவிடும் ?

ஒரு சில கிழங்கள் இதற்கும் மேலே போய் ஊர்ச்சபையாரிடம் ஈசுவர பட்டன் எங்களையெல்லாம் சரியாகவே கவனிப்பதில்லை - தட்டில் பணம்போடுகிறவர்களைத்தான் கவனிக்கிறானென்று குற்றம்வேறு சொல்லிவிட்டு வந்திருக்கிறதுகள் ! எப்படி இருக்கிறது கதை ?

அவன் கருவறையை விட்டு நகர ஆரம்பித்துவிட்டானே...உடனே பிடித்தால்தான் உண்டு ! ஒரு வேளை ஏதாவது பெரிய வீட்டுப் பிள்ளையாக இருக்கலாம் - முடிந்தவரை சகாயம் செய்துகொள்ள முடிந்தால் நல்லதுதானே ?

"புள்ளமங்கலத்துக்குப் புதியவர் போலிருக்கிறது ?" என்று பேச்சை ஆரம்பித்தார் பட்டர்.

"ஆம் ஐயா ! நேற்று இரவுதான் இங்கு வந்தேன் !"

"தங்களின் சொந்த ஊர்.....?"

"எனக்குத் தொண்டை மண்டலம் ஐயா - கச்சிப்பட்டுக்கருகில் சிறு கிராமம்..."

"ஓஹோ - அத்தனை தூரத்திலிருந்து வருகிறீர்களா ? நன்று நன்று !"

அதற்கப்புறம் எப்படிப் பேச்சை வளர்த்துவது என்று தெரியவி.... அவனும் வளவளவென்று பேசுகிற இரகமாய்த் தெரியவில்லை...என்ன இருந்தாலும் பெரிய இடத்துப் பிள்ளையில்லையா ? தகப்பன் அரசாங்கத்தில் பெரிய உத்யோகஸ்தனாய் இருக்கக்கூடும்....

இளைஞனாயிருக்கிறான் - அதனால் அரசியல் பேச முடியாது. வேறு வழியில்லை - நிலம் நீச்சு என்று கொண்டுபோய்ப் பார்ப்போம்.

"அந்தப் பகுதிகளில் வெள்ளாமையெல்லம் எப்படி ?"

"உங்கள் பகுதியைப்போல் வருடம் முழுக்க வற்றது பாயும் காவிரிப் பாசனம் எங்களுக்கெல்லாம் ஏது ? ஏதோ ஓடிக்கொண்டிருக்கிறது - நான்தான் விவசாயம் வேண்டாமென்று வேலைதேடி தஞ்சைக்குச் சென்றுகொண்டிருக்கிறேன்..."

"உங்களின் பெயர் என்ன தம்பி ?"

அவன் சற்றுத் தயங்கி "கண்டன்....கண்டன் சூற்றி" என்றான்.

"நல்ல பெயர்....அது சரி, தஞ்சையில் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா ? யரையும் தெரியாமல் வேலை வாங்குவது கடினமாயிற்றே..."

"என் தந்தையார் வலங்கை வேளக்காரப்படையில் நெடுநாள் பணிபுரிந்தவர் ஐயா - சில வருடங்களுக்கு முன் அவர் காலமாகி விட்டார். என்றாலும் இன்றைக்கும் படையில் தெரிந்தவர்கள் சிலர் உண்டு... அவர்களை நம்பித்தான்..."

"ஓ...உங்கள் தந்தையார் வலங்கையரா ? சரிதான்..."

பட்டருக்குக் கொஞ்சம் சப்பென்றாகிவிட்டது. நினைத்த அளவிற்கு பெரிய ஆள் இல்லை போலிருக்கிறதே இவன் ? என்றாலும் இந்தக் காலத்தில் யார் யாரைத் தெரிந்துவைத்திருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. வாயில் காவலன் என்பான் - ஆனால் உடையாரையே தெரிந்து வைத்திருப்பான் ! வேளக்காரப் படைவீரர் தகப்பன் என்றால் செல்வாக்கோடு வாழ்ந்திருந்த குடும்பம்தான்... இன்றைய நிலைமையும் பழுதில்லாமல் நன்றாக இருக்கிறதென்பதை தட்டிலிட்ட முழுக் கழஞ்சு சொல்லிவிடுகிறது.

அவன் ஒரு புன்னகையோடு அவரை விட்டுப் பிரிந்து வெளிப் பிரகாரத்தை நோக்கி சற்று நகர ஆரம்பித்துவிட்டாலும் ஈசுவர பட்டர் விடாமல் பின்தொடர்ந்தார்.

அவன் அவர் மீது பரிதாபப்பட்டோ என்னவோ - "இந்தத் திருக்கோயிலைப் பற்றிச் கொஞ்சம் சொல்லுங்களேன் ஐயா..."

தொண்டையைச் செருமிக்கொண்டார் பட்டர். தானே பேசிக்கொண்டிருந்த நிலைமாறி அவனும் அவரிடம் ஒரு கேள்வி கேட்டுவிட்டதில் அவருக்குப் பேரானந்தம்.

"கோயில் அத்தனை புராதானமானதென்று சொல்ல முடியாது - என்றாலும் இருநூறு வருஷங்களுக்கு முன்பே லிங்க மூர்த்தியும் கருவறையும் தோன்றிவிட்டதாகச் சொல்லிக்கொள்கிறார்கள். மதிரை கொண்ட கொப்பரகேசரியான(2) பராந்தகச் சோழ மகாராஜா காலத்தில் கோயில் கற்றளியாகக் கட்டப்பட்டது... அதற்குப்பின் வந்த பல சோழ இராஜாக்களும் அரசியர்களும் கோயிலுக்கு ஓரளவு ஆதரவும் நிவந்தங்களும் கொடுத்திருக்கிறார்கள் - நமது மகாராஜாவான உடையார் இராஜராஜ சோழ தேவர்கூட பன்னிரண்டு ஆண்டுகளுக்குமுன் சில நிலங்களுக்கு இறைநீக்கித் தந்தார்..

இங்கே விசேஷமாக ஏதாவது சொல்லவேண்டுமென்றால் பராந்தகரின் காலத்தில் மிகச் சிறந்த சிற்பியாகக் கருதப்பட்ட சிற்ப இரத்தினம் விசுவகர்மர் வாகீச தேவர் தன் திருக்கரங்களாலேயே திருப்பணிசெய்த கோயில் என்பதைச் சொல்லலாம். இன்றைக்கு சிற்ப மேதை என்று மார்தட்டிக்கொள்ளும் பயல்களெல்லாம் அவருடைய கால் தூசி பெறமாட்டார்கள் ! அத்தனை மேன்மையான கலை அவருடைது.

திருக்கொருக்குத்துறை, குடந்தை, பொன்செய் நற்துணையீசுவரம் முதலான இடங்களிலெல்லாம் திருப்பணியை முடித்துக்கொண்டு இறுதியாக இங்கு வந்தாராம்... அப்போது அவரிடமே கலையைக் கற்றதொரு சீடன் அகங்காரம் பிடித்து அவரிடமே சவால் விட்டானாம் !

இதுவரை வேறு எந்த இடத்திலும் வடிக்கப்பெறாத அழகில் மன்மதனை விஞ்சக்கூடிய உருவங்களைப் படைக்கவேண்டும் என்று போட்டியாம்...

இருவரும் நான்முகனாகிய பிரம்மனின் உருவத்தைச் செதுக்குவதென்று முடிவானது. சீடன் பலமாத காலம் சிரமப்பட்டு தன்னில் இருந்த கலைத்திறமையையெல்லாம் பயன்படுத்தி இந்தக் கோயிலின் வடக்கு கோஷ்ட பிரம்மாவை உருவாக்கினானாம். ஆனால் வாகீசச் சிற்பியோ நாற்பத்தொன்பது நாட்களிலேயே இன்றைக்கும் இக்கோயிலின் மேற்கு திசையில் அருள்பாலிக்கும் லிங்க புராணத் தேவர்(3) தொகுதியை அனாயசமாக - சிரமமே படாமல் - செதுக்கி முடித்துவிட்டாராம்.

அழகு சொட்டும் அந்தத் தொகுதியின் பிரம்மனைப் பார்த்ததும் சீடன் கண்களில் தாரை தாரையாக நீர் வழிந்ததாம். "ஐயா - நீர் தேவ சிற்பி மயனின் அவதாரம் ! உமது கலைக்குமுன் என் கலை ஒரு பிடி மண்ணுக்குச் சமம் !" என்று சொல்லி சுத்தியலையும் உளியையும் அவருடைய காலில் வைத்து வணங்கிவிட்டு - வாகீசர் எத்தனையோ எடுத்துச் சொல்லியும் கேளாமல் - கங்கைக்கு தவம் செய்யப் போய்விட்டானாம் !





சீடன் படைப்பும் குருவின் படைப்பும்


வாகீசருக்கு போட்டி என்று போய் தன்னுடைய மிகச்சிறந்த சீடனை இழந்துவிட்டோமே என்று மிகுந்த துக்கமாகி விட்டதாம். அதனால்தான் எத்தனையோபேர் - அரசர் உட்பட - யாசித்தும் இந்தப் பிரம்ம வடிவத்தைப் போல் வேறொரு வடிவத்தை அவர் வாழ்நாளில் வடிக்க வில்லையாம் ! அதேபோல் அதற்குப்பின் எந்த சிற்பக்கலைப் போட்டிகளிலும் அவர் கலந்துகொள்ளவுமில்லையாம்.

லிங்க புராணத் தேவர் தொகுதி தவிர இங்குள்ள மகர தோரணங்கள், கணபதிப் பிள்ளையார்(4) தொகுதி, இராமகாதைச் சிற்பங்கள், விமானத்தில் அருள்பாலிக்கும் மாதொருபாகர் முதலியவையெல்லாம் அவருடைய திருக்கரங்கள்பட்ட சிற்பங்களாகச் சொல்வார்கள்........"

விடாமல் பேசியதில் பட்டருக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.

மிக ஆர்வமாக அனைத்தையும் கேட்குக்கொண்டே தெற்குப் பிரகாரத்தில் நடக்க ஆரம்பித்த கண்டன் அப்படியே திகைத்துப்போய் நின்றுவிட்டான்.

"ஆஹா - என்ன அற்புதம் ! என்ன அற்புதம் ! பட்டரே - இத்தனை ஜீவனுள்ள சிற்பங்களை நான் என் வாழ்நாளில் கண்டதில்லை !"

"இந்த மாதிரியான சிற்ப வேலைப்பாடுகளை நின்று இரசிப்பவர்கள் நாட்டில் மிகக் குறைவு தம்பி ! உங்களுக்கு இரசனை அதிகம் !"

அவன் ஒவ்வொரு சிற்பமாக நின்று நிதானமாக இரசித்தான். ஒவ்வொரு இடத்திலும் "ஆஹா ! ஓஹோ !" என்று உற்சாகக் குரல்கள் பட்டருக்குக் கேட்ட வண்ணம் இருந்தன. குறிப்பாக லிங்க புராணத்தொகுதியை அணு அணுவாக இரசித்தான்.

ஏறக்குறைய ஒரு நாழிகை நேரம் நின்று நிதானமாய்ப் பார்த்தும் கண்டன் திருப்தியடைந்தவனாகத் தெரியவில்லை ! பட்டர்தான் ஒருவழியாக - ஏறக்குறைய வலுக்கட்டாயமாக - இழுத்துக்கொண்டுவந்து கோயில் மடைப்பள்ளியின் வாயிலில் வந்து அமர்த்தினார்.

பொழுது நன்றாக விடிந்துவிட்டதால் பள்ளியில் அடைப்பக்காரர்களின் போக்குவரத்து ஆரம்பமாகிவிட்டது.

"உங்கள் கோயிலின் சிற்ப வேலைப்பாடுகள் மிகப் பிரமாதம் ஐயா ! வர்ணிக்க வார்த்தைகள் ஏது ?"

"ஹூம் - உங்கள் மாதிரி இரசனை நாட்டில் நிறைய பேருக்கு இருந்தால் கோயிலுக்கும் நாலுபேர் வந்து போவார்கள் தம்பீ...."

"உண்மைதான் பட்டரே - கோயிலில் அத்தனை போக்குவரத்து இல்லை போலிருக்கிறதே....."

"சாதாரண நாட்களில் வழக்கமாக வந்து செல்லும் சிறு கூட்டம் உண்டு. விசேஷ நாட்களென்றால் சுற்றுப்புற ஊர்களிலிருந்தும் மனிதர்கள் வருவார்கள்...."

"கோயிலுக்கு வாத்திய மாராயர்கள்கூட இல்லையா என்ன... காலை பூசையில் வாத்தியச் சப்தம் கேட்கவேயில்லையே..."

"'என்ன தம்பீ அப்படிக் கேட்டு விட்டீர்கள் ? வகைக்கொருவராக மத்தளம், கரடிகை, செண்டை, குடமுழவு(5) முதலியவை இயக்க ஒருவரும் காளம், கொம்பு, சங்கு, காளை(6) முதலியவைகளை ஊத ஒருவரும் உண்டு...இருவரும் உடன்பிறந்தவர்கள். தம் தமக்கைக்கு உடம்பு முடியவில்லையென்பதால் சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறார்கள்... இரண்டு மூன்று நாட்களில் திரும்பிவிடுவார்கள்..."

"தளிச்சேரிப் பெண்டுகள்....திருப்பதியம் ஓதுவார்..."

"...எல்லோரும் உண்டு - பெண்டுகள் இன்னும் சற்று நேரத்தில் கோயிலுக்கு வந்து மாலைகள் தொடுக்க ஆரம்பித்துவிடும்... ஓதுவாரைத்தான் கோயில் வட்டாரத்தில் காண்பது சற்று அரிது... (குரலைச் சற்றே தாழ்த்தி)...அவர் அடிக்கடி பதியம் ஓதிக்கொண்டிருப்பது கம்மாளச் சேரியைத் தாண்டி அமைந்துள்ள கணிகையர் விடுதிகளில்தான் என்று கேள்வி...." என்றார் பட்டர் சிரித்தபடி.

கண்டனும் சிரித்தான் - "சரிதான் - அப்போது பெரும்பாலான நேரங்கில் நீங்களும் மகாதேவரும்தான் ஒருவருக்கொருவர் துணை... !"

"சரியாகச் சொன்னாய் தம்பீ ! பாவம் - திருவாலந்துறை மகாதேவர்க்கு என்னை விட்டால் வேறு ஆட்களில்லை...! எனக்கும் அவரை விட்டால் வேறு கதியில்லை - இதோ அதோவென்று பதினேழு வருடங்களை இங்கேயே கழித்து விட்டேன் !"

"கோயிலுக்கென்று மாகேசுவரக் கங்காணிகள் உண்டா ?"

"தனியாகக் கிடையாது - புள்ளமங்கலத்து மகாசபைதான் கோயில் விவகாரங்களையும் கவனித்துக் கொள்கிறது....பகலில் பக்கம் பார்த்துப் பேசு என்பார்கள்...இதனைப் பற்றி அதிகம் பேசாதது நல்லது தம்பீ...!"

இதுவரை சாதாரணமாக பட்டர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த கண்டனுக்கு இதைக் கேட்டதும் கொஞ்சம் ஆர்வமாகி விட்டது !

"அட, நமக்குள்ளென்ன ஒளிவு மறைவு பட்டரே - நானென்ன இந்த ஊர்க்காரனா என்ன ? சொல்ல வந்ததை முழுவதுமாகச் சொல்லிவிட வேண்டியதுதானே !"

பட்டர் குரலை ரொம்பவே தாழ்த்திக் கொண்டார். என்றாலும் அவருக்கு இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவதில் கண்டனைவிட அதிக ஆர்வம் உண்டு என்பது அவர் கண்களில் தெரிந்தது.

"உன்னைப் பார்த்தால் நல்ல பிள்ளையாகத் தெரிகிறது - அதனால் சொல்கிறேன்.

அதாவது புள்ளமங்கலத்தைப் பொறுத்தவரை சபையென்பது பெயரளவிற்குத்தான் ! இங்கு நடப்பதென்னவோ தனிமனித இராஜ்ஜியம்... ஊரில் அதவத்தூரார் என்ற பெயரில் தண்டல்காரர் ஒருவர் இருக்கிறார். ஊரிலேயே பெரிய கை அவர்தான் ! ஊரிலுள்ள நிலங்களிலிருந்து அரசாங்கத்துக்கு வரி வசூல்செய்து தரும் முக்கியப் பொறுப்பிலிருக்கிறார். அவர் வைத்ததுதான் இங்கே சட்டம். புள்ள மங்கலத்தில் ஆரம்பித்து அரசாங்கத்தின் பெருந்தரத்து அதிகாரிகள் வரை அவருடைய செல்வாக்கு இருப்பதாகப் பேசிக்கொள்கிறார்கள்...புள்ளமங்கலத்து சபையின் அத்தனை முடிவுகளையும் நிர்ணயிப்பது அவர்தான். அவரை எதிர்க்க - அவ்வளவு ஏன் - அவர்முன் எழுந்து நின்று ஒரு வார்த்தை பேசுவதற்குக்கூட இங்கே ஒரு ஆண்மகன் கிடையாது.

ஊர் விவகாரங்களானாலும் கோயில் விவகாரங்களானாலும் அவர் எடுக்கும் முடிவுதான் சபை முடிவு....."

"அட அப்படியா .."

"ஆமாம் - நான் அவரை ஒரு சிறிய விவகாரத்தில் பகைத்துக்கொண்டுவிட்டேன். அதனால் என்னைக் கண்டால் அவருக்குப் பிடிப்பதில்லை.. எப்படியாவது என்னைக் கோயிலிலிருந்து கழற்றிவிடவேண்டுமென்று நினைக்கிறார் - ஆலந்துறையார் அருளால் அந்த ஆபத்திலிருந்து இதுவரை தப்பி வந்திருக்கிறேன்...."

"அடக்கடவுளே !"

"ஆமாம் - சென்ற முறைகூட தஞ்சையிலிருந்து உடன்கூட்டத்தார் வந்திருந்தபோது...."

"டாண்...! டாண்...! டாண்... !" - பட்டருடைய பேச்சு கோயில் மணியோசை எழுந்ததில் தடைபட்டது.

"அடடா, உங்களுடன் பேசிக்கொண்டிருந்ததில் நேரத்தை கவனிக்க மறந்துவிட்டேன் தம்பீ ! மகாதேவரின் திருமஞ்சன முழுக்காட்டுக்கு நேரமாகிவிட்டதே - நான் உடனே கிளம்ப வேண்டும். நீங்கள் இன்றைக்கே தஞ்சைக்குக் கிளம்புகிறீர்களா என்ன ?"

"இல்லை ஐயா ! நெடுதூரம் பயணப்பட்டதால் உடல் களைப்பு அதிகமாக இருக்கிறது. புள்ளமங்கலத்தின் அஞ்சினான் புகலிடத்தில் ஓரிருநாட்கள் தங்கி ஓய்வெடுத்துக்கொண்டுதான் செல்ல வேண்டும் !"

"ஆஹா - நன்றாகத் தங்குங்கள் ! விடுதிக் காப்பாளரான எதிர்மேல் சீகண்டப் பேரரையர் மிக நல்ல மனிதர் - உங்களைத் தக்கபடி கவனித்துக் கொள்வார். கோயிலுக்கு முடிந்த நேரத்தில் வந்து போயக்கொண்டிருங்கள் - இந்த திங்கள் முழுவதும் எனக்கு காலை முறை - மதியம் ஒரு ஜாமம் அல்லது இரண்டு ஜாமம் வரைகூட கோயிலில் இருப்பேன் !"

"அவசியம் வருகிறேன் ஐயா ! கோயில் சிற்பங்களை இன்னும் முழுமையாகப் பார்த்து இரசித்து முடிக்கவில்லை - அவசியம் வருகிறேன் !"

இவன் ஒரு சரியான கலைப் பித்தன் என்று நினைத்துக் கொண்டார் பட்டர்.


***********************************************************************************************


அதற்கடுத்த இரண்டு மூன்று நாட்களும் கண்டன் தொடர்ந்து காலையும் மாலையும் திருக்கோயிலுக்கு வருகை புரிந்ததில் அவனுக்கும் பட்டருக்குமான நட்பு மிகவும் முகிழந்து செழித்துவிட்டது.

விடாமல் பிடிவாதம் பிடித்து விமானம் வரை ஏறி சாதாரணமாய் கண்களுக்குத் தட்டுப்படாத மாதொருபாகரையும் தரிசித்துவிட்டுத்தான் திருப்தியடைந்தான் கண்டன் !

நான்காம் நாள் காலை -

கோயிலுக்குள் நுழைந்த கண்டனை மத்தளம், செண்டை முதலியவற்றிலிருந்து எழுந்த பேரொலியும் காளத்தின் கம்பீரமான நாதமும் வரவேற்றன. கோயிலே புதுப் பொலிவு பெற்றதுபோல் காணப்பட்டது. "சரிதான் - உவச்சப் பெருமக்கள் திரும்பிவிட்டார்கள் போலிருக்கிறது !" என்று நினைத்துக் கொண்டான் கண்டன்.

அன்றைக்கு அவன் புள்ளமங்கலத்திலிருந்து கிளம்பியாக வேண்டும்.

பட்டருக்கு அவனைப் பிரிய மனமேயில்லை. "தம்பீ ! நீ நாளை தஞ்சையில் பெரிய ஆளான பிறகு என்னை மறந்துவிடக்கூடாது !" என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். கண்டன் ஒருநாள் இல்லை ஒருநாள் பெருந்தரத்து அதிகாரியாய் நிச்சயம் உயர்ந்துவிடுவான் என்பது அவருடைய திண்ணமான முடிபு.

"பட்டரே - உம்மை எப்படி மறப்பேன் ? அடுத்த முறை ஊருக்குச் செல்லும்போது உங்களை அவசியம் வந்து சந்திக்கிறேன் !"

"ஆஹா - அவசியம் வரவேண்டும் ! நான் இந்தப் புள்ளமங்கலத்திலேயேதான் இருப்பேன் - இந்தக் கட்டைக்குப் போக்கிடம் வேறேது ?"

கண்டன் பட்டரின் கால்களைத் தொட்டு ஆசி பெற்றான். பட்டருக்கு கண்களில் நீர் முட்டி விட்டது.

"நீ நல்ல வேலை பெற்றுத் திருமணமாகி குழந்தை குட்டிகளுடனும் நில ஐசுவரியங்களுடனும் சுபிட்சமாக இருக்க வேண்டும் தம்பீ !" என்று மனமாற வாழ்த்தினார்.

கிளம்புவதற்குமுன் ஒரு சிறு பண முடிப்பை கண்டன் அன்பளிப்பாகத் தர - சற்று சங்கோசத்துடன் அதனைப் பெற்றுக் கொண்டார் ஈசுவர பட்டர்.


***********************************************************************************************


இதெல்லாம் நடந்து ஆறு திங்கள்(7) கழிந்தன.

கொஞ்ச நாட்கள் கண்டனையே நினைத்துக்கொண்டிருந்த பட்டர் மெதுமெதுவாக வாழ்வின் சுழற்சியில் புதிய முகங்களை - புதிய கணங்களை பார்த்துப் பார்த்து ஏறக்குறைய கண்டனை முழுவதுமாக மறந்துவிட்டார்.

ஒரு செவ்வாய் காலை -
அவருக்கு புள்ளமங்கலத்து மகாசபையாரிடமிருந்து அழைப்பு வந்தது. சபை கோயிலின் மஹா மண்டபத்தில் கூடியிருக்கிறதாம். பட்டரை உடனடியாக அழைத்து வரச் சொல்லி உத்தரவாம்.

பட்டருக்கு ஏறக்குறைய எல்லாக் சபைக் கூட்டங்களுக்கும் அழைப்பு வந்துவிடும். துண்டை மடித்து உதறித் தோளில் போட்டுக்கொண்டு உடனடியாகக் கிளம்பிவிட்டார்.

சபைக்குள் நுழைந்தால் -

அடக்கடவுளே - இதென்ன ? சபை இப்படி நிசப்தமாயிருக்கிறதே ? அங்கத்தினர்கள் ஒருவர் முகத்தில்கூட ஈயாடவில்லையே ?

ஆச்சரியத்திற்கும்மேல் ஆச்சரியமாக சபையில் நடுநாயகமாக அமர்ந்து ஒருகால் மேல் மறுகால் மடித்து கம்பீரமாக அனைவரையும் ஆட்டிவைக்கும் அதவத்தூர் உடையாரின் முகத்தில் எள்ளும் கொள்ளுமல்லவா வெடித்துக்கொண்டிருக்கின்றன ! பார்ப்பதற்குக் கொஞ்சம் வேடிக்கையாகக்கூட இல்லை ?

"அடே - என்னைப் பற்றி என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறான்கள் தஞ்சையில் ? நினைத்தால் இவர்களையெல்லாம் தவிடு பொடியாக்கி விடுவேன் தெரியுமா ?"

ஒருவரும் பதில் பேசவில்லை.

"எவனாவது பதில் சொல்லித்தான் தொலையுங்களேன் ! நம் ஊருக்கு இப்படியொரு அபகீர்த்தியா ? அதுவும் உடையார் வரை செய்தி போயிருக்கிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.... நமக்கெதிராக இப்படியெல்லாம் சதி நடக்கிறதா தஞ்சையில் ?"

பட்டர் தமக்கருகில் அமர்ந்திருந்த கோனாட்டுக் கிழார் - காதில் மெதுவான குரலில் "என்ன விஷயம் ?" என்று வினவினார். கோனாட்டாரோ கிழார் மட்டுமல்ல - கிழவரும்கூட. அவருடைய காதுகள் இருக்கும் நிலைமையில் நன்றாக உரத்துப் பேசினாலே கேட்காது.

நல்லவேளையாக இந்தச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளிவைத்தாற்போல் அதவத்தூராரே "அடே - எவனாவது மகாசபைக்கு வந்திருக்கும் ஓலையையாவது படித்துத் தொலையுங்களேன்!" என்று உறுமினார்.

உடனே ஒருவர் எழுந்து அந்த ஓலையை உரத்தகுரலில் படிக்கலானார்.

ஓலையிலிருந்த விஷயத்தின் சாரம் இதுதான் -
தஞ்சையிலிருக்கும் இராஜகேசரிவர்மரான உடையார் ஸ்ர் இராஜராஜசோழர் புள்ளமங்கலத்து மஹாசபைராருக்கு திருவாய் மொழிந்தருளிய ஆணை.
அதாவது தேவரின் 12ம் ஆண்டு நீலமங்கலத்துக்கருகில் அமைந்திருந்த கோயில் நிலம் திருப்பதியம் ஓதுவதற்காக இறையிலியாக்கித் தரப்பட்டது. புள்ளமங்கலத்தில் தற்போது திருப்பதியம் ஓதுவதற்கு சட்டர்கள் ஏதும் இல்லாத நிலையில்.....
(இந்த இடத்தைப் படிக்கும்போது அதவத்தூரார் தன் மைத்துனனான ஓதுவார் சிற்றலம்பலத்தைப் பார்த்த பார்வையில் அவர் பஸ்பமாகியிருக்கவேண்டும் - ஏனோ ஆகவில்லை)
...ஓதுவார் இல்லாத நிலையில் அந்த நிலங்கள் இனிமேலும் இறையிலியாகக் கருதப்படமாட்டாது. இனி அவற்றிற்கு இறை (அல்லது வரி) செலுத்தியாக வேண்டும் !

"அடே - எங்கோ தஞ்சையில் அமர்ந்துகொண்டிருப்பவனுக்கு நம் ஊரில் பதியம் பாடப்படுகின்றதா இல்லையா என்கிற செய்திவரை தெரிந்திருக்கிறது ! எனக்கேகூட இந்த விஷயம் தெரியாது...

ஒன்று மட்டும் சொல்கிறேன் - நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள் !நல்லவன்போல நடிக்கும் உங்களில் யாராவது அரசாங்க உள்கை இருந்தால் அதை நான் ஒருநாள் இல்லை ஒருநாள் கண்டுபிடிக்காமல் விடமாட்டேன் !"

ஓலையைப் படித்தவர் கொஞ்சம் தொண்டையை செருமிக்கொண்டு சொன்னார் -
"தஞ்சையிலிருந்து சில செய்திகள் கேள்விப்படுகிறோம். நமது அரசர் கோயில்களையும் கோயில் நிர்வாகத்தையும் கண்காணிக்க பழைய அமைப்பைக் கலைத்துவிட்டு புதிய அமைப்பொன்றை நிறுவியிருப்பதாகக் கேள்வி. இந்த ஆட்கள்தான் நாடெங்கிலுமுள்ள பல்வேறு கோயில்களுக்கும் சென்று...."

"அட, இந்த செய்தி எனக்குத் தெரியாதே ! முன்பு வரும் ஆட்களாக இருந்தால் வருவதற்கு முன்னரே தகவல் அனுப்பிவிடுவார்கள் - நாமும் தக்கபடி ஆயத்தமாயிருப்போம் - இப்போதைய ஆட்கள் வருகிறேனென்று ஒரு வார்த்தைகூட தெரிவிக்காமல் வந்திருக்கிறார்களா என்ன ? மரியாதை தெரியாத...."

இதற்கு மேல் அவர் உபயோகித்த அக்காலத்தைய வசவுகளை நாகரீகம் கருதி விட்டுவிடுகிறோம்.

"இந்த அமைப்பின் தலைவர் யார் தெரியுமா ? மறைந்த உத்தமச் சோழ மகாராஜாவின் தமையன் மதுராந்தகன் கண்டராதித்தன் !"

கண்டராதித்தன் ! கண்ட...ராதித்தன் !

பட்டருக்கு பளிச்சென்று மின்னல் வெட்டியமாதிரி இருந்தது.

கண்டன் இரண்டு மூன்று நாட்கள் தங்கி கோயில் செயல்பாடுகளை கவனித்தமை... நான்காம் நாள் உவச்சர்கள் வந்து சேர்ந்ததை உறுதி செய்து கொண்டபிறகே கிளம்பியது....அந்த நான்கு நாட்களுமே ஓதும் சட்டரான சிற்றம்பலக்காரர் கோயில் பக்கம் தலை வைத்துப் படுக்காமை....

எல்லாவற்றுக்கும் மேலாக அவன் முகத்தில் தெரிந்த பக்தியும் கம்பீரமமும் கலந்ததொரு களை !

கண்டன் கடைசியாகக் கொடுத்த கழஞ்சுகளில் இராஜமுத்திரை பொறித்த ஒரு காசும் இருந்தது. அப்போது அது முக்கியமாகப் படவில்லை - இப்போது...?

பட்டருடைய பரபரப்பைப் பார்த்துவிட்டு அருகில் அமர்ந்திருந்த கோனாட்டுக் கிழார் "என்ன ?" என்பதுபோல் ஒரு பார்வை பார்த்தார்.

ஒரு கணம் யோசனை செய்த பட்டர்.
அப்புறம் ஏதோ முடிவுக்கு வந்தவராக "ஒன்றுமில்லை!" என்பதுபோல் தலையை அப்புறமும் இப்புறமும் பலமாக ஆட்டினார்.


(முற்றும்)

அடிக்குறிப்புக்கள் :

(1) தினமும்
(2) மதுரை மதிரையென்றும் கோப்பரகேசரி கொப்பரகேசரியென்றும் அக்காலத்தைய கல்வெட்டுக்கள் குறிக்கும்
(3) லிங்கோத்பவர் அக்காலத்தில் லிங்க புராணத் தேவர் என்று அழைக்கப்பட்டார்
(4) அக்காலத்தில் கணபதி, கணபதிப் பிள்ளையார் என்றும் முருகன், சுப்பிரமணியப் பிள்ளையார் என்றும் அழைக்கப்பட்டார்கள்
(5) அக்காலத்தைய தோல் கருவிகள்
(6) காற்றுக் கருவிகள்
(7) மாதம்





கல்வெட்டுச் செய்தி




புள்ளமங்கை.

தற்போது பசுபதி கோயில் என்ற பெயரில் தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் அமைந்துள்ள சிற்றூர். இங்கு அற்புதமான பராந்தகர் காலச் சோழர்கலையை தன்னுள் தேக்கி வைத்துக்கொண்டு அமைதியே உருவாக விளங்கும் திருவாலந்துறையார் கோயில்.

டாக்டர் கலைக்கோவன் தலைமையில் திருச்சி மா.இராசமாணிக்கனார் வரலாற்று மையம் மேற்கொண்ட கள ஆய்வின்போது இங்கிருந்த அழகிய ஆடற்கரணச் சிற்பங்கள் அடையாளம் காணப்பட்டு தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதுடன் பல புதிய கல்வெட்டுக்களும் வரலாற்றுலகிற்கு வெளிச்சமாயின.

இந்தக் கல்வெட்டுக்களில் ஒன்றுதான் இங்கு கதையாகியிருக்கிறது.

அக்காலத்தில் சகட்டு மேனிக்கு ஊரெங்கிலுமுள்ள கோயில்களுக்கு நிவந்தம் கொடுத்திருக்கிறார்களே - அந்த நிவந்தங்களெல்லாம் சரியாக நிறைவேற்றப்பட்டனவா, அதைக் கண்காணிப்பதற்கு ஆட்கள் இருந்தார்களா என்ற கேள்விகளெல்லாம் என்னுள் எழுவதுண்டு. முதலாம் இராஜராஜ சோழரின் 24ம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்ட இந்தக் கல்வெட்டு அதற்கு பதிலாக அமைந்துள்ளது.

தன்னுடைய 12ம் ஆட்சியாண்டில் சில நிலங்களை இக்கோயிலில் திருப்பதிகம் (திருப்பதியமென்று அன்னாளில் குறிப்பார்கள்) பாடுவதற்கென்று இறைநீக்கி - அதாவது வரிநீக்கி - நிவந்தமாய் அளிக்கிறார் மன்னர். (இந்தக் கல்வெட்டும் கோயிலில் இன்றைக்கு உள்ளது.)

அவரே தன்னுடைய 24ம் ஆட்சியாண்டில், கோயிலில் பதிகம் ஓதுவதற்கு சட்டர்கள் எவரும் இல்லாததால் இறையிலியை மாற்றி அந்த நிலங்களுக்கு இனி இறை(வரி) வசூலிக்கப்படும் என்று ஊர்ச்சபையாருக்கு ஆணையிடுகிறார் ! அதை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள்.

ஒரு வித வருத்தத்தோடு மஹாசபை பொறித்திருக்கும் இந்தக் கல்வெட்டில் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள் பல உண்டு.

முதல் விஷயம் இது அரசரின் நேரடி ஆணை என்பது. 24ம் ஆட்சியாண்டென்பதால் அவர் இந்த நேரத்தில் மும்முடிச் சோழனாகி பெயருக்கேற்றார்போல் நிஜமாகவே இராஜ - ராஜனாகி ஏறக்குறைய தென்னிந்தியா முழுவதையும் வளைத்து விட்டார். என்றாலும் தமது இராஜ்ஜியத்தில் எங்கோ ஒரு ஊரில் இறையிலி நீக்கப்பட்ட நோக்கம் நிறைவேற்றப்படாத நிலையில் அதனை மாற்றியமைக்க அவர் தயங்கவில்லை.

இரண்டாவது விஷயம். இதுமாதிரியான விஷயங்களை கவனிக்க வேண்டியது உண்மையில் ஊர்ச்சபை அல்லது கோயில் மாகேசுவரர்கள். கோயிலுக்குத் தரப்பட்ட நிவந்தங்களை சரிவர நிறைவேற்ற வேண்டியது அவர்கள் கடமை - ஏனெனில் நிவந்தங்களும் இறையிலி நிலங்களும் இவர்களை நம்பித்தான் செயல்பட்டன. அதற்காக இவர்களுக்கு ஊதியமும் உண்டு. அவர்கள் தம் கடமையை சரிவர நிறைவேற்றாத நிலையில் - அரசரின் ஆணை புதிய ஓதுவாரை நியமியுங்கள் என்று சொல்லாமல் நிவந்தத்தைப் மீட்டுக்கொண்டது - இவர்களுக்கு ஏறக்குறைய ஒரு எச்சரிக்கை விடுவதுபோல் அமைந்துள்ளதல்லவா ?

மூன்றாவதாக கவனிக்க வேண்டியது எங்கோ ஒரு ஊரில் உள்ள ஒரு கோயிலில் திருப்பதியம் ஒழுங்காகப் பாடப்படுகிறதா, அதற்கு ஏதாவது நிவந்தம் அல்லது இறையிலி உள்ளதா இல்லையா என்பதுவரை சகல விஷயங்களையும் நிர்வாகத்துக்குத் தெரிந்திருக்கிறது.

நான்காவதாக....இதுபோன்ற கோயில் நிர்வாகத்தின் தவறுகளை கண்டுபிடித்து தண்டிக்கும் பதிவுகள் பல நமக்குக் கிடைத்துள்ளன. என்றாலும் ஏற்கெனவே கொடுக்கப்பட்ட இறையிலியை மீட்டுக்கொள்வதாக அமைக்கப்பட்ட கல்வெட்டு நமக்குத் தெரிந்தவரை இது ஒன்றுதான்.

ஐந்தாவதாக....அடிக்கவராதீர்கள், இதுதான் கடைசி....
கதையில் வரும் தண்டல்காரரான அதவத்தூருடையாரை முழுக்க முழுக்க கற்பனைப் பாத்திரமென்று ஒதுக்கிவிட நினைக்கும் அன்பர்கள்... கல்வெட்டை சற்று கவனமாகவே படித்துப் பார்க்கவும் !


திருக்கோயில் - புள்ளமங்கை திருவாலந்துறையார் திருக்கோயில்

இடம் - மையக் கோயில் கருவறை, மேற்குச் சுவர்

காலம் - முதலாம் இராஜராஜரின் 24ம் ஆட்சியாண்டு (கி.பி.1009)

கல்வெட்டு முதன்முதலில் வெளியான இதழ் - வரலாறு இதழ் 3, பக்கம் 22 - 23

கல்வெட்டுப் பாடம்


1 -8 திருமகள் போல என்று தொடங்கும் மெய்க்கீர்த்தி(1)
9 ------ஸ்ர்கோவிராஜராஜ
10 கேஸரிவற்------தேவர்க்கு யாண்டு 24 ஆவது
11 நித்த (விநோத) வளநாட்டுக் கிழார் கூற்றத்து ப்ர
12 ஹ்மதேயம் புள்ளமங்கலத்து மஹாஸபையோ
13 மும் இவ்வூ(ர்) தண்டலுடைய அதவத்தூர் உடையாரு
14 ம் கூடியிருந்து ஸ¨
15 பயோம் பணித்த ப
16 ரிசாவது முன் ஸபையோ
17 ம் ந....................(நீ)லமங்
18 கலத்து முட்டத்து அளை
19 யூர் நக்கன் காளி காணி வி
20 லை கொண்டு ஸஹையோ
21 மிதாய் ஸபைப் பொது
22 வாய் இ(ரு)ந்த நிலம் இ§
23 தவர்க்கு யாண்டு 12 ஆவ
24 து இ நீலமங்கலத்து ஸ
25 பையோமிதான ஒன்றே
26 நான்கு நில(த்)தையும் இவ்
27 வூர் ச(ட்)டற் நின்று ஓதுவார்க்கு
28 இறை இலியாகப் பணி
29 த்து இறை கொள்ளப் (¦
30 பறாதி(ந்த) நிலத்தாலென்
31 று திருவாணை கூறி கல்லி(ல்)
32 வெட்டி கிட(ந்)த நிலம் நிலை(த்)
33 து சட்டராய் ஓதுவாருமின்
34 றி இறை இ(லி)யாந நிலங்
35 கள் இறை ஏற்றி கொள்க ¦
36 வன்று ந(ம்)மை உடைய
37 சக்ரவத்தி(கள்) ஸ்ர்ராஜராஜ தேவர்(க்கு) யாண்
38 டு 2(4 ஆவது)................
39 .......இந்நிலமும் இறை கொள்ள
40 (¡)தி.............ஊர்................ஊர்க்கற்று ஸபை
41 யோமேய் விட்டு திருவாய் மொழிந்தபடி (இநி)
42 லம் இறை கொள்வதாக பணித்தே(¡ம்)
43 மஹாஸபையோம்


உத்தமச் சோழரின் புதல்வராக வரலாறு சுட்டும் மதுராந்தகன் கண்டராதித்தர் புள்ளமங்கலத்துக்கு வந்தாரா இல்லையா என்று நமக்குத் தெரியாது. என்றாலும் இராஜராஜர் காலத்தில் கோயில் ஸ்ர்காரியங்களை - குறிப்பாக தஞ்சை இராஜராஜேஸ்வரத்தின் கோயிற் பணிகளை - மேற்பார்வை பார்த்தது இவர்தான் என்று கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

புள்ளமங்கலத்து மகாசபைக்கு ஒருவழியாக தைரியம் வந்து அரசருக்கு எழுதி அதவத்தூருடையாரின் தண்டல் உரிமைகள் அடுத்த ஒரு திங்களில் பறிக்கப்பட்டதையும் அவர் சிறிது காலத்தில் புள்ளமங்கலத்தை விட்டே வெளியேறியதையும் நம்மால் இங்கே எழுத முடியாது.

ஏனெனில் அவையெல்லாம் கல்வெட்டு சொல்லாத கதைகள்.this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.