http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 4

இதழ் 4
[ நவம்பர் 15 - டிஸம்பர் 14, 2004 ]


இந்த இதழில்..
In this Issue..

தரவுகளைத் தொகுப்போம்
மத்தவிலாச அங்கதம் - 2
கதை 3 - கண்டன்
தட்டப்படாத கதவுகள் திறப்பதில்லை
கல்வெட்டாய்வு - 3
ஆத்மாவின் அடையாளங்கள்
கட்டடக்கலை ஆய்வு - 4
இராஜசிம்மன் இரதம்
Rare Karana Sculptures from Thirumalapadi
இராகமாலிகை - 3
சங்கச்சாரல் - 4
கோச்செங்கணான் யார் - 2
இதழ் எண். 4 > கலையும் ஆய்வும்
ஆத்மாவின் அடையாளங்கள்
மு. நளினி
மாமல்லபுரம் பல்லவர்களின் கலைத்தொட்டில். ஏறத்தாழ ஆறு நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டை ஆண்ட அவர்தம் ஒப்பற்ற கலை முயற்சிகளை அந்தக் கடற்கரை நகரமே நமக்குக் காட்சியாகக் காத்து வைத்திருக்கிறது. அலைக்கரங்கள் நுரைப்பூக்களால் கரை தழுவும் இந்த அழகுபொலிந்த பூமியில்தான் தமிழ்நாட்டின் தலைநிமிர்த்தும் கட்டுமானங்கள் தமிழர்தம் வீறுபேச, வித்தகம் காட்ட விதைக்கப்பட்டன. உலகத்தின் வேறெந்தப் பகுதிக்கும் இல்லாத பெருமைகள் சில மாமல்லபுரத்திற்கு உண்டு. கற்கோயில் அமைப்பில் மூன்று வகைகளை உருவாக்கினர் சிற்பிகள். பாறையைக் குன்றைக் குடைந்து அவர்கள் சமைத்தவை குடைவரைக் கோயில்களாயின. குடைவதை நிறுத்தி அதே பாறை அல்லது குன்றை மேலிருந்து செதுக்கியபோது ஒருகல் தளிகள் பிறந்தன. குடைவதும் செதுக்குவதும் மனித உழைப்பைப் பேரளவில் பெற்றதுடன், கல் உள்ள இடத்தில்தான் கோயில் என்று உருவாக்க நெருக்கடிகளையும் தோற்றுவித்ததால், கற்பாறைகளைச் சிறுசிறு கல்துண்டுகளாக்கி, விரும்பிய இடத்தில் ஆலயம் அமைக்க வழிகண்டறிந்தனர் இந்த வளநாட்டின் கலைத்தொழிலர். குடைவரை, ஒருகல்தளி, கட்டுமானத்தளி என மூவகைப்பட்ட இறையகங்கள் இதனால் பிறந்தன. இந்த மூவகை அமைப்பும் ஒரே இடத்தில் காணக்கிடைக்கும் பேறு மாமல்லபுரத்தின் மகத்தான தனிச்சிறப்பாகும்.

உலகட்தின் எந்த ஒரு கடற்கரை நகரமும் கலைக்கோயில்களின் நகராக, காலம் காத்து வைத்திருக்கும் வரலாற்றுப் படப்பிடிப்பாக அமையவில்லை என்பதும் மாமல்லபுரத்தின் மகுடத்தில் மற்றொரு வைரத்தைப் பதிக்கின்றது, இங்குதான், இங்கு மட்டும்தான் ஒருகல்தளிகளாய்ச் செதுக்கப்பட்ட ஒன்பது பாறைக் கோயில்கள், ஒவ்வொன்றும் ஒரு வடிவில், ஒன்றுக்கொன்று ஏதாவது ஒரு விகிதத்தில் மாறுபட்ட நிலையில், புதுமை அவாவிய பல்லவக் கூறுளிகளின் படைப்பாற்றலுக்குக் கட்டியம் கூறியபடி, வருவார்க்கும் போவார்க்கும், வாழ்ந்து மறைந்த ஒரு சமுதாயத்தின் வனப்பான அடையாளங்களைக் காட்டியபடி காட்சி தருகின்றன.மாமல்லபுரத்தின் மகத்தான பெருமைகளுள் குறிப்பிடத்தக்க கட்டுமானமாய் கடற்கரைக் கோயில் வளாகத்தைச் சுட்டலாம். சீறிவரும் அலைகள் பாறைகளில் மோதும் பேரிரைச்சலின் பின்னணியில், கால்கள் அழுந்தப் பதிய நடக்கும் மணற்சூழலில், சுற்றிலும் வேறெந்தக் கட்டுமானமும் கண்ணுக்கெட்டும் தொலைவு வரை இல்லாத நிலையில், முப்புறத்தும் வெள்ளைச் சரிகைகளுடன் நீலப்பட்டு உடுத்தினாற்போன்ற கடல் அலைகளின் அரவணைப்பில், வானத்தைத் தொட்டுவிடும் வேகத்தில் எழுந்த மனித முயற்சிகளின் முத்திரைகளாய் நிற்கும் கடற்கரைச் சிம்மேசுவரங்கள், பல்லவர் மரபில் வந்த இராஜசிம்மரின் மனோகரப் படைப்புகள்.

கிழக்கில் நின்று பார்த்தால் ஒரு கோயில் போலவும், மேற்கிலிருந்து பார்த்தால் இரண்டு கோயில்கள் போன்றும் காட்சி தரும் இவ்வளாகத்தில் மூன்று இறையகங்கள் விளைந்துள்ளன. தெற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் பார்ப்பவர்க்கு மட்டுமே ஒருக்களிப்புப் பார்வையில் இந்த உன்னதம் விளங்குமாறு கட்டமைப்புகளை நிறுத்திக் கண்கட்டுவித்தை நிகழ்த்தியிருக்கும் பல்லவச் சிற்பிகள் பெருமைக்குரிய இந்த வளாகத்திற்கு நந்திகள் அமர்ந்த சுற்றுச் சுவரையும் படைத்தனர். மேற்கில் எளிமையான கோபுரவாயில். தமிழ்நாட்டின் மிகப்பழைய கோபுரங்களுள் ஒன்றாய் அமைந்த இது, இன்று தாங்குதளத்துடன் மட்டுமே காட்சி தருவதற்குச் சுற்றுச்சூழல் துன்பங்களைத்தான் தண்டிக்க வேண்டியுள்ளது.பல்லவர்க்குப் பிடித்தமான தாங்குதள அமைப்புகளுள் பிரதிபந்தமும் ஒன்று. ஜகதி, குமுதம், பிரதிவரி, கம்பு எனும் நான்கு முதன்மை உறுப்புகளைப் பெற்றெழும் இத்தாங்குதளமே, கல்வெட்டுகளுடன் கடற்கரைக் கோயிலைச் சுற்றுச்சுவராய்ச் சூழ்ந்துள்ளது. இச்சுற்றுச்சுவர் மேற்குவாயிலின் முன், இராஜசிம்மரின் விருதுப்பெயர்களுடன் கொடிக்கருக்குகளாலும் கின்னரர்களாலும் அலங்கரிக்கப்பட்ட பலித்தளங்கள். இவற்றைக் கொடித்தளங்களாகக் கருதுவாரும் உண்டு.

சுற்றுச்சுவர் வாயில்வழி உள்நுழைவாரை சிதைந்த இரண்டு கட்டுமானங்களின் பிரதிபந்தத் தாங்குதளங்கள் வரவேற்கின்றன. பதினேழு மீட்டர் நீளமும் பத்து மீட்டர் அகலமும் கொண்ட முதற்கட்டுமானத்தை அடுத்து, ஒன்பது மீட்டர் நீளமும் ஏழு மீட்டர் அகலமும் உள்ள மற்றொரு கட்டுமானம். இவற்றின் பின்னால்தான் கடற்கரை வளாகக் கோயில்களின் முதல் விமானம் முத்தள திராவிடத் தளியாய் எழும்பியுள்ளது. இத்தளியின் வடபுறச் சுற்றிலிருக்கும் சோழப்பேரரசர் முதலாம் இராஜராஜரின் கல்வெட்டொன்று இங்குள்ள இரு சிவன் கோயில்களையும் இராஜசிம்மேசுவரம், சத்திரியசிம்மேசுவரம் என்று பெயரிட்டு அழைக்கிறது. இப்பெயர்களுள் எப்பெயர் எக்கோயிலைக் குறிக்கிறதென்பது உறுதியாகத் தெரியாத நிலையில் இரண்டு கோயில்களையும் சிம்மேசுவரங்களாகவே பார்க்கலாம்.முதல் சிம்மேசுவரம் மேற்கு நோக்கிய விமானமும் சிறு முகமண்டபமும் கொண்டமைந்த மூன்று தளத்தளி. இதைச் சில அறிஞர்கள் இராஜசிம்மேசுவரம் எனப் பெயரிட்டுள்ளனர். பிரதிபந்தத் தாங்குதள வகையைச் சேர்ந்த பத்மபந்த அமைப்பில் தாங்குதளமும் வேதிகைத் தொகுதியும் சுவரும் கொண்டெழும் இவ்விமானத்தின் ஆதிதளச் சுவர்கள் வடக்கிலும் தெற்கிலும் அழகிய சிற்பங்களைப் பெற்றிருந்ததன் சுவடுகளை இன்றும் காணமுடிகிறது. ஒவ்வொரு சுவரையும் நான்கு எண்முகத் தூண்களால் மூன்று பிரிவுகளாக்கி அப்பிரிவுகளுள் நடுப்பிரிவை அகலப்படுத்தி, அதையும் இரண்டு நான்முக அணைவுத் தூண்களால் கோட்டம், பக்கப்பகுதிகள் என மூன்றாய்ப் பகுத்து அனைத்துப் பகுதிகளிலும் தேவைக்கும் கற்பனைக்கும் ஏற்பச் சிற்பங்களை விரவியிருக்கும் பல்லவ விரல் நேர்த்தியும் அந்த விரல்களை விழைவுக்கேற்ப வித்தகம் செய்ய வழியமைத்திருக்கும் சிந்தனைக் கூர்மையும் திட்டமிடலிலும் அழகியல் நோக்கிலும் தமிழ்நாட்டுச் சிற்பாசிரியர்கள் எத்தனை திறமையானவர்களாய் இருந்தார்கள் என்பதைக் காட்டுவனவாகக் கொள்ளலாம்.

சுவர்த் திருப்பத் தூண்களுக்குத் தாவும் சிம்மங்கள் தாங்கலாக, கோட்டத்தூண்களைத் தாவும் குதிரைகள் தாங்குகின்றன. இந்தத் தூண்களின் வளைமுகப் போதிகைகள் கூரையுறுப்புகள் தாங்க, கூரையின் நீட்சியாய் வளைந்திறங்கும் கபோதத்தின் கூடுகளில் எத்திசை நோக்கினும் விநாயகர்தான். தமிழ்நாட்டுக் கலை வரலாற்றில் கணபதி வடிவம் கபோதக் கூடுகளில் தோன்றும் முதல் இடம் இதுதான். குடைவரைக் கோயில் முகப்பு வலபியின் கணவரிசையில், கணத்தோடு கணமாய்க் காட்சிதந்த கணபதிக்கு இது வெளிப்பார்வை வழங்கிய களம். சுவர்ப்பரப்பிலும் கிழக்குகோடி மேல் சதுரம் அவருக்காகவே ஒதுக்கப்பட்டு, நேர்ப் பார்வைக்கு கணபதி இறக்கப்பட்ட முதலிடமும் இந்தச் சிம்மேசுவரம்தான்.

முதல் தளத்திற்கு மேலே உயரமான இரு தளங்கள். இந்த முத்தளங்களுள் இரண்டாம் தளம் மட்டுமே சுற்றிலும் ஆரம் பெற்று நான்கு கர்ணகூடுகளும் நான்கு சாலைகளும் இடைப்பட்ட ஆரச்சுவருமாய்க் காட்சி தருகிறது. இரண்டாம், மூன்றாம் தளச் சுவர்களிலும் பத்திப் பிரிப்பு உண்டு. அப்பிரிவுகளில் சிற்பங்கள் இடம்பெற்றிருந்தனவா என்பதை அறியக்கூடவில்லை. மூன்றாம் தள உச்சியில் நான்கு மூலைகளிலும் சங்கூதும் கணங்கள். அடித்தளத்திலிருந்து மூன்றாம் தளம் வரை சதுரமாக எழும் இவ்விமானத்தின் கிரீவமும் சிகரமும் எண்பட்டை பெற்றுத் திராவிடமாய் உள்ளன. மேலே பதினாறு பட்டைகளுடன் தூபி.

இம்முதல் சிம்மேசுவரத்தின் காவலர் காக்கும் முகமண்டபத்தை அடுத்த கருவறையில், பின்சுவர்ச் சிற்பமாய் சோமஸ்கந்தர் தொகுதி. முன்னால் தரையிலுள்ள பெருங்குழி அங்கு இலிங்கத் திருமேனியொன்று நடப்பட்டிருந்தமைக்குச் சான்றாகிறது. மாமல்லபுரத்து சோமாஸ்கந்தர் தொகுதிகளில் அற்புதமானது இத்தளியின் தொகுதிதான். தேய்ந்து போயிருந்தாலும் எழில் குன்றாத தோற்றம். நான்முகனும் திருமாலும் பக்கத்திற்கொருவராய் இருந்து போற்ற, இடையில் சுகாசனத்தில் சிவபெருமான். அவரின் இடப்புறம் உமை. அன்னையின் மடியில் முருகன்.

நான்குதளப் பெருந்தளி

கடற்கரைக் கோயில் வளாகத்தில் கிழக்கு நோக்கிய கருவறையுடன் செம்மாந்து நிற்கும் பெருந்தளியை அறிஞர் சிலர் சத்திரிய சிம்மேசுவரமாகக் காண்கின்றனர். முதல் தளியைப் போலவே இத்தளியும் கலப்புத் திராவிட வகையைச் சேர்ந்ததுதான். முதல் தளியை விட ஒருதளமே கூடுதலாய்ப் பெற்றிருந்தபோதும், உயர்த்தப்பட்ட தாங்குதளத்தின் உதவியால், இத்தளி அத்தளி போல் அரைமடங்கு கூடுதல் உயரம் பெற்றுச் செம்மாந்து நிற்கிறது. முதல் தளிக்கில்லாத சிறப்புகள் சிலவற்றை இத்தளிக்கு வழங்கியுள்ள சிற்பாசிரியர்கள், இதை அரவணைத்துச் சூழும் தளிச்சுற்றுச் சுவரின் இருபுறத்தையும் சிற்பக் களஞ்சியமாக்கியுள்ளனர். காற்றும் கடலுப்பும் காலமும் காதலோடு தழுவித்தழுவிக் கலைத்திருந்தபோதும், இந்தச் சிற்பங்களுள் சில, இன்னமும் இவற்றைப் படைத்த கைகளின் பெருமைகளை மௌனமாகப் பகிர்ந்துகொள்ளத்தான் செய்கின்றன.

முதல் தளியைப் போலவே பத்மபந்தத் தாங்குதளமும், சுவர்ப்பிரிப்பும் பெற்று உயரும் இவ்விரண்டாம் தளியின் முதல் தளச் சிற்பங்கள் அடையாளம் காணமுடியாத அளவிற்கு அழிந்துள்ளன. வடசுவரில் திரிபுராந்தகர் இருந்திருக்கலாம் என்பதை மட்டுமே ஊகிக்கமுடிகிறது. இங்கும் முதல் தளக் கபோதக் கூடுகளில் காணுமிடமெல்லாம் கணபதியின் காட்சிதான். இரண்டாம், மூன்றாம், நான்காம் தளங்களின் சுவர்களில் நாற்றிசைகளிலும் அற்புதமான சிற்பங்கால் அழகான அளவுகளில் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம், மூன்றாம் தளக்கூரைகளில் மட்டுமே ஆரவரிசை. இந்த ஆரவரிசையின் மேற்கு முகத்தில் இரண்டாம் தளக் குறுநாசிகைகளில் தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் முதன்முறையாக சங்கநிதியும் பதுமநிதியும் அறிமுகமாகின்றனர். முதல் தளத்தின் நான்கு மூலைகளிலும் சிங்கங்கள் அமர, மேற்றளத்தின் நான்கு மூலையிலும் கணங்களின் காட்சி. மேலே திராவிட கிரீடம், சிகரம், இந்திரகாந்தத் தூபி.

கிழக்குப் பார்வையாய் எடுக்கப்பட்டுள்ள இந்த அற்புதத் தளியின் முன்னாலொரு முகமண்டபம். அதற்கென்றே சுற்றுச் சுவரில் கோபுர முகப்பாய்க் கிழக்கில் ஒரு திறப்பு. இந்தத் திறப்பின் வழிக் காலங்காலமாய்க் கடல் அலைகளின் சாரல் துளிகள் கருவறை இலிங்கத்தையும் அதன் பின்னால் சுவர்ச் சிற்பமாய்ப் பரவிநிற்கும் சோமாஸ்கந்தர் தொகுதியையும் திருமுழுக்காட்டி மகிழ்ந்ததைச் சுவர்களும் சிற்பங்களும் சொல்லாமல் சொல்கின்றன. இப்போது கடல் அலைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுப் புல்வெளிகள் முளைத்துள்ளன.

முகமண்டபத்தில் வடக்கிலும் தெற்கிலும் கோட்டங்கள் அமைத்துத் திருமாலும் நான்முகனும் அமர்ந்துள்ளனர். சோமாஸ்கந்தர் தொகுதியிலும் ஒரு சிறப்பு சேர்க்கப்பட்டுள்ளது. பொதுவாக சோமாஸ்கந்தர் தொகுதிகளில் சிவனும் உமையும் முருகனும் அமைய, சிவனின் இருபுறத்தும் போற்றுவார் போல நான்முகனும் திருமாலும் நிற்கின்றனர். இங்கு இந்தக் காட்சியுடன் தொகுதிக்கு வடக்கிலும் கிழக்கிலுமாய் மீண்டும் நான்முகனும் திருமாலும் நின்று போற்றும் நிலையில் காட்டப்பட்டுள்ளனர். தொகுதி முழுமைக்கும் போற்றல் செய்ய வெளியிலும் இவர்கள் இடம்பிடித்தனரெனக் கருதுமாறு சிற்பிகள் படைத்திருக்கும் கற்பனை நயம் வளர்க்கும் அற்புதக் காட்சியிது. பழமைக்கும் புதுமைக்கும் பாலமாய் அமைந்த இச்சிற்பத்தொகுதி, பல்லவர் காலச் சோமாஸ்கந்தர் தொகுதியின் படைப்பு வரலாற்றுக்குச் சரியான சான்றாகும்.

தொடக்க கால சோமாஸ்கந்தர் தொகுதிகளில், நடுவில் சிவன், உமை, முருகன் அமர, அவர்தம் இருபுறத்தும் முழு உருவினராய் நின்று திருமாலும் நான்முகனும் போற்றினர். தர்மராசரதமெனும் அத்யந்தகாமத்தின் மூன்றாம் தளக் கருவறையில் இத்தொகுதி அமைந்துள்ளது. பின்னர் திருமாலும் நான்முகனும் சிவக்குடும்பத்திற்குள்ளேயே கொணரப்பட்டுச் சிவபெருமானின் இருபுறத்தும் இடுப்பளவு உருவினராய் நின்று போற்றுமாறு அமைக்கப்பட்டனர். இத்தொகுதியே இராஜசிம்மர் காலக்கோயில்கள் பெரும்பாலானவற்றில் இடம்பெற்றுள்ளது. சத்திரிய சிம்மேசுவரம், இந்த இரு அமைப்புகளையும் இணைத்துப் பார்த்தவர்கள் படைத்த புதிய சோமாஸ்கந்தர் தொகுதியைப் பெற்றுத் தனித்த பெருமைக்கு ஆளாகியது. இந்த அமைப்பு வேறெந்தப் பல்லவக் கோயிலிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கிலும் கிழக்கிலும் வாயில்கள் பெற்றமைந்த இரண்டு சிம்மேசுவரங்களுக்கும் இடையில் ஒரு தளக் கோயிலொன்று உள்ளது. இது நரபதிசிம்ம விஷ்ணுகிருகம் என்ற பெயரிலமைந்த பெருமாள் கோயிலாகும். மாமல்லபுரத்துக் கடற்கரையில் முதலில் அமைந்த கோயில் இதுதான். கடலோரப் பாறையொன்றையே அடித்தளமாகவும் கருவறைச் சிற்பமாகவும் மாற்றி, உறங்கும் கோலத்தில் திருமாலைப் பள்ளிகொண்டருளிய ஆழ்வாராகப் படைத்து உருவாக்கப்பட்ட ஆதிகோயில் காலப்போக்கில் சிதைவுகளாக, கருவறைச் சிற்பத்தை மாற்றாமல், அதே பாறையின் மீது எடுக்கப்பட்ட கட்டுமானக் கோயில்தான் இப்போது நரபதிசிம்ம விஷ்ணுகிருகமாய்க் காட்சியளிக்கிறது. இப்போதுள்ள கோயிலை அமைத்தவர் இராஜசிம்மப்பல்லவர்.

பழங்கருவறையைச் சுற்றிப் புதிய கட்டுமானத்தைச் சாலைத் தளியாக உருவாக்கிய இராஜசிம்மர் அதற்கொரு முகமண்டபமும் அமைத்துக் கிழக்கில் வாயில் தந்தார். பாறையில் அடித்தளமும் அடுக்கிய கற்களால் சுவரும் கூரையும் பெற்று வளர்ந்த இந்த நரபதிசிம்ம விஷ்ணுகிருகத்தின் மேற்குச் சுவரொட்டி இராஜசிம்மரால் உருவாக்கப்பட்ட முத்தளத் தளியே மேற்கு நோக்கிய கோயிலாய் உருவாகியது. சிவன் கோயிலும் பெருமாள் கோயிலும் ஒன்றன் பின் ஒன்றாய் ஒட்டி அமைந்திருப்பது தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டும்தான். இரண்டு கோயில்களுக்கும் ஒரே பின்சுவர் என்பது கூடுதல் பெருமை. பெருமான் பாறையில் படுத்திருக்கும் ஒரே இடமும் இதுதான். பிற இடங்களில் எல்லாம் அவர் பெற்றிருப்பது பாம்புப் படுக்கையே. படுத்த கோலத்தில் பெருமாள் தனித்து விடப்பட்டிருப்பதும் இங்கு மட்டும்தான். பிற சயனக் கோலங்களில் பொதுவாகத் துணைக்கு ஓரிருவராவது காட்டப்படுவது வழக்கம். தண்டி என்னும் வடமொழி இலக்கிய அறிஞரால் இந்தப் பள்ளிகொண்ட பெருமான் குறிக்கப்பட்டிருப்பது பல்லவக் கைகளுக்குக் கிடைத்த காவியச் சிறப்பு எனலாம்.

காலைக் கதிரின் கனிந்த தீண்டலிலும் மாலை மயங்கும் அந்தியின் தழுவலிலும் இரவில் பூக்கும் முழுமை நிலவின் குளிர்ந்த தடவலிலும் கடற்கரைக் கோயிலில் இருக்க நேர்ந்தால், கலையின் உயிர்ப்பைக் கண்களைப் போலவே உள்ளமும் பருகும். தொட்டும் அணைத்தும் தொலைவில் நின்றும் பேசியும் பேசாமலும் ஆசையாய்ப் பார்த்தால், இந்தக் கற்கட்டுமானங்களின் பின்னிருக்கும் கலைஞர்களின் கனவுக் கண்களைச் சந்திக்கலாம். அந்தக் கண்கள், கலைநீரோட்டத்தில் அழியாக் கவிதைகளாய் அவர்கள் அமைத்த படைப்புகளின் சமுதாயப் பின்புலத்தைக் காட்டுவதுடன், கலையில் கரைந்து கட்டுமானமெங்கும் பரவியிருக்கும் அவர்களின் ஆத்மாவையும் அடையாளப்படுத்தும். ஓயாது வந்து கரைமோதி உடையும் அலைகளும் இந்த இரகசிய செய்திகளைத் தெரிந்து கொள்ளும் ஆவலில்தானே பெருங்குரலெழுப்பிப் பேதலித்துத் திரும்புகின்றன!this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.