http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 4

இதழ் 4
[ நவம்பர் 15 - டிஸம்பர் 14, 2004 ]


இந்த இதழில்..
In this Issue..

தரவுகளைத் தொகுப்போம்
மத்தவிலாச அங்கதம் - 2
கதை 3 - கண்டன்
தட்டப்படாத கதவுகள் திறப்பதில்லை
கல்வெட்டாய்வு - 3
ஆத்மாவின் அடையாளங்கள்
கட்டடக்கலை ஆய்வு - 4
இராஜசிம்மன் இரதம்
Rare Karana Sculptures from Thirumalapadi
இராகமாலிகை - 3
சங்கச்சாரல் - 4
கோச்செங்கணான் யார் - 2
இதழ் எண். 4 > இலக்கியச் சுவை
கோச்செங்கணான் யார் - 2
இரா. கலைக்கோவன்
அத்தியாயம் 3
கோச்செங்கணான் காலம்


சோழனோடு போரிட்ட இச்சேரமன்னன் யாராக இருக்க முடியும் என்பதைத் தெளிவுபடுத்துவதற்கு முன், இம்மன்னன் சோழனால் சிறைப்படுத்தப்பட்ட செய்தி உண்மைதானா என்பதையும், அப்படிச் சிறைப்படுத்தப்பட்டிருந்தால், சிறைக்கூடத்திலிருந்தபடி இம்மன்னன் பாடியதுதான் புறநானூற்றில் 74ஆம் பாடலாக மலர்ந்துள்ளதா என்பதையும், இவனை மீட்கத்தான் பொய்கையார் களவழி பாடினாரா என்பதையும், இவன் சிறையில் இறந்தானா அல்லது சிறைமீட்கப்பட்டானா என்பதையும் ஆய்ந்தறிவது நன்று.

"அரசர் பிணங்கான்ற நெய்த்தோர் முரசொடு
முத்துடைக் கோட்டக் களிறீர்ப்ப - எத்திசையும்
பெளவம் புணரம்பி போன்ற புனனாடன்
தெவ்வரை அட்ட களத்து" (31)

என்ற களவழி நாற்பது பாடலின் முதல்வரியில் காணப்படும் 'அரசர் பிணங்கான்ற' என்ற தொடருக்கு 'அரசரின் உடல் மறிந்து கிடப்பதனை' என்று நாட்டாரவர்கள் பொருள் எழுதுகிறார்கள்.

'நீர்நாட்டையுடைய கோச்செங்கட்சோழன் பகைவரைக் கொன்ற போர்க்களத்தில், அரசர் பிணங்கள் சிந்திய உதிர வெள்ளங்கள் எல்லாத் திசைகளிலும் முரசினோடு, முத்தினையுடைய கொம்புகளையுடைய யானைகளை இழுப்ப, அவை கடலையும், அக்கடலைச் சார்ந்த மரக்கலங்களையும் ஒத்தன', என்று மேற்கண்ட பாடலுக்கு நாட்டாரவர்கள் உரையெழுதுகிறார்கள். (32)

களவழி நாற்பது முப்பத்தைந்தாம் பாடலில்,

'உரைசால் உடம்பிடி மூழ்க அரசோ(டு)
அரசுவா வீழ்ந்த களத்து'

என்ற வரிகளும் ஈண்டு கவனிக்கத்தக்கன. இதற்குப் பொருள் கூறும்போது, 'புகழமைந்த வேல்கள் குளிப்ப அரசரோடு பட்டத்து யானை மறிந்து வீழ்ந்த களத்தின்கண்' என்று நாட்டாரவர்கள் குறிப்பிடுகிறார்கள். (33)

களவழி நாற்பது முப்பத்தொன்பதாம் பாடலின் கடைசி வரியில் 'வஞ்சிக்கோ அட்ட களத்து' என்று புலவர் குறிப்பிடுவதை, 'வஞ்சி அரசனாகிய சேரனைக் கொன்ற போர்க்களத்திலே' என்று உரை விளக்கம் செய்கிறார் நாட்டாரவர்கள், (34)

வேல்பட்டு பட்டத்து யானையும் அரசனும் வீழ்வதாக முப்பத்தைந்தாம் பாடலிலும், அரசனது பிணத்திலிருந்து சிதறிய குருதி வெள்ளத்தில் யானை, முரசு முதலியன இழுபட்டுச் செல்வதாக முப்பத்தேழாம் பாடலிலும், வஞ்சியரசனாகிய சேரனைக் கொன்ற போர்க்களமென்று முப்பத்தொன்பதாம் பாடலிலும் புலவர் மிகத்தெளிவாகச் செய்திகளைச் சொல்லியிருக்கின்றார். எனவே, இம்மூன்று பாடல்களின் தெளிவான அடிப்படையில், சோழமன்னனோடு போரிட்ட சேரவேந்தன், அவன் யாராக இருந்த போதும், போர்க்களத்தில் மடிந்ததாகக் கொள்வதே பொருத்தமுடையதாகும். களவழி பாடிய புலவரே வஞ்சியரசன் போர்க்களத்தில் மடிந்த செய்தியைத் தெளிவாக்கி விடுவதால், அம்மன்னன் சோழனால் சிறைகொள்ளப்பட்டதும், அவனை விடுவிக்கும் பொருட்டே களவழி பாடப்பட்டதென்பதும், அது கேட்டுச் சோழன் சேரனுக்கு அரசளித்தான் என்பதும் பொருந்தாமை காண்க.

ஒட்டக்கூத்தர் உலாவும் சயங்கொண்டாரின் பரணியும் காலத்தால் மிகவும் பிற்பட்ட நூல்கள். அவர்தம் நூல்களின் வழிவழி வரலாறு கூறும் பகுதியில், வழங்கிவந்த செய்திகள் பல இணைக்கப்பட்டுள்ளமை கண்கூடு. அவற்றுள் ஒன்றாகவே செங்கணான் களவழிக்குச் சேரனைத் தளைவிடுத்த செய்தியைக் கொள்வோமானால், களவழி நாற்பது சோழனின் வெற்றியைப் போற்றிப் பாடப்பட்டதே அன்றி, சேரனின் விடுதலை வேண்டிப் பாடப்பட்டதன்று என்பது புலப்படும்.

புறநானூற்றின் 74ஆம் பாடல், நற்றிணையின் 18ஆம் பாடல் இரண்டிலுமே சேரவேந்தனின் பெயர் குறிக்கப்படவில்லை. நற்றிணை 18ஆம் பாடலில், 'பொறையன்' என்ற பெயரே குறிக்கப்படுகின்றது. பொய்கையார், கோக்கோதை மார்பன் என்ற சேரமன்னனைப் பாடிய பாடல்கள் இரண்டு புறநானூற்றில் உள்ளன. அவற்றுள் ஒன்றில்,

'கண்ணா லும்மே கானலந் தொண்டி
அஃதெம் மூரே அவனெம் இறைவன்' (35)

என்று குறிப்பிடுகிறார். இன்னொன்றில்,

'நாடன் என்கோ ஊரன் என்கோ
பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ
யாங்கன மொழிகோ வோங்குவாள் கோதையை' (36)

என்று குறிப்பிடுகிறார். இவற்றை நோக்கப் பொய்கையாரின் தலைவனாக அவர் காலத்தில், சேரநாட்டையாண்டது கோக்கோதை மார்பனே என்பது தெளிவுபடும். நற்றிணை பதினெட்டாம் பாடலில், 'பொறையன்' என்று குறிக்கப்படுவதும் இக்கோக்கோதை மார்பனாகத்தான் இருத்தல் வேண்டும் என்று கொள்வதே சால்புடையது. கோச்செங்கணானைப் பாடிக் களவழி இயற்றிய பொய்கையாரும், இக்கோக்கோதை மார்பனைப் பாடிய பொய்கையாரும் ஒருவராக இருக்கும் நிலையில், சோழனுடன் கழுமலத்திலும் வெண்ணியிலும் போரிட்டது இக்கோக்கோதை மார்பனாகவே இருத்தல் வேண்டும். வேறு தெளிவான சான்றுகள் புலப்படும் வரையில் இப்படிக் கொள்வதே ஏற்றமுள்ளதாக அமையும். புறநானூற்றுப் பாடல்கள் பிற்காலத்தில் தொகுக்கப்பட்டன. அதனால் சங்ககாலப் பாடல்களுடன் சங்கத்துக்குப் பிற்பட்ட காலகட்டத்தில் பாடப்பட்ட சில பாடல்களும் சேர்க்கப்பட்டு, புறநானூறு உருவாகியிருக்கலாம். கோக்கோதை மார்பனைப் பற்றிய பொய்கையாரின் பாடல்கள் புறநானூற்றுள் இடம்பெற்றமைக்கு இதுவே ஒரு காரணமாகலாம். எனவே இதுவரை கண்ட சான்றுகளைக் கொண்டு சோழன் கோச்செங்கணான், சேரன் கோக்கோதை மார்பன், புலவர் பெருமான் பொய்கையார் மூவரும் சங்ககாலத்திற்குப் பிற்பட்டவர்களே என்ற முடிவுக்கு வருவதில் யாதொரு தடையுமில்லை.

சோழன் கோச்செங்கணானின் காலத்தை நிறுவுவதில் திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியும், திருமுறைகளும் பெரிதும் உதவுகின்றன. திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் மூன்றாம் திருநறையூர்ப் பதிகத்தில் பத்துப்பதிகப் பாடல்களிலும் கோச்செங்கணானைப் பாடிப் பரவியுள்ளார். அவர் குறிப்பிடும் வெண்ணிப் போரைப்பற்றி முன்பே கண்டோம். இளந்தைவேள் என்ற வேளிர்குல மன்னன் செங்கணானுக்குப் பகைவனாக இருந்தான் என்பதும், அவனைப் போரொன்றிலே தன் வேலைச் செலுத்தி அழித்த பெருவேந்தன் கோச்செங்கணான் என்பதும்,

'மின்னாடு வேலேந்து விளந்தை வேளை
விண்ணேறத் தனிவேலுய்த் துலகமாண்ட
தென்னாடன் குடகொங்கன்' (37)

என்ற ஆழ்வாரின் பாடல் வரிகளால் அறியக் கிடக்கின்றன. கோச்செங்கணான் அழுந்தையில் செய்த போரைப்பற்றி,

'பாராளர் அவர்இவரென் றழுந்தை யேற்ற
படைமன்னர் உடல்துணியப் பரிமா வுய்த்த
தேராளன் கோச்சோழன்' (38)

எனவரும் வரிகள் மேலும் விளக்குகின்றன. கோச்செங்கணானைக் குறிக்கும்போது, தெய்வவாள் வலம்கொண்ட சோழன், தென் தமிழன் வடபுலக்கோன் சோழன், உலகமாண்ட தென்னாடன் குடகொங்கன் சோழன், தேராலின் கோச்சோழன் என்று பல மொழிகளால் சிறப்புச் செய்யப்படுகிறான். சோழவேந்தனோடு போரிட்ட வேந்தர்களும் கழல் மன்னர், விறல் மன்னர், படை மன்னர் என்று சிறப்பிக்கப்படுகின்றனர். இப்பாடல்களிலிருந்து சோழன் பல போர்களைக் கண்ட பெருவீரன் என்பதும், பெரும்படை போற்றிய மன்னர் பலரை வென்றவன் என்பதும், தென்னவனாய் உலகமாண்ட மாமன்னன் என்பதும் புலனாகின்றன. திருஞானசம்பந்தரும் மூன்றாம் திருமுறையில்,

'திறையுடைய நிறைசெல்வன்' (39)

என்று கோச்செங்கணானைக் குறிப்பதால், பல மன்னர்களை வென்று திறைபெற்ற பெருவேந்தன் இப்பேரரசன் என்பது பெறப்படுகின்றது. 'வடபுலக்கோன்' என்று இம்மன்னனைத் திருமங்கையாழ்வார் குறிக்கக் காரணம் இருத்தல் வேண்டும் என்பதை டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள் தம் சோழர் வரலாற்றில் மிகத் தெளிவாக ஆய்ந்து விளக்குகிறார்கள். (40)

கோச்செங்கணான் சங்க காலத்து மன்னனாக வாழ்ந்திருப்பின், இப்பெரும் போர்களில் ஏதேனும் ஒன்றைப்பற்றிய குறிப்பேனும் ஏதாவது ஒரு சங்கப்பாடலில் இடம் பெற்றிருக்கும். இம்மன்னன் பெருவேந்தனாக, மன்னர் பலரைப் பொருது வென்றவனாகத் திருமங்கையாழ்வாராலும், சம்பந்தராலும் குறிக்கப்பெறுவது போல வேறெந்தப் புலவர்களாலும் குறிக்கப்படவில்லை. சங்க நூல்களில் எங்குமே கோச்செங்கணான் குறிப்பிடப்படாத நிலையொன்றே இம்மன்னன் சங்க காலத்திற்குப் பிற்பட்டு வாழ்ந்தவன் என்று துணியப் போதுமானதாகும். சங்க காலத்திற்குப் பிற்பட்டும், சிம்ம விஷ்ணுவின் பல்லவப் பேரரசு அமைவதற்கு முற்பட்டும் அமைந்த ஒரு காலகட்டத்தில் (கி.பி. 300 - கி.பி. 600) இம்மன்னன் வாழ்ந்ததாகக் கொள்வதே எவ்வழியினும் பொருத்தமுடையதாகும்.



அத்தியாயம் 4
கோச்செங்கணானின் கலைப்பாணியும் இறைத்தொண்டும்


இம்மன்னனின் கலைப்பாணியும், இறைத்தொண்டும் சிறப்புக்குரியன. மாடக்கோயில்கள் எழுப்பிய முதல் மன்னன் இப்பெருமகனே.

'இருக்கிலங்கு திருமொழிவாய் எண்தோள் ஈசற்கு
எழில்மாடம் எழுபதுசெய்(து) உலகம் ஆண்ட
திருக்குலத்து வளச்சோழன்' (41)

எனவரும் பெரிய திருமொழிப் பாசுர வரிகள், இப்பெருமான் எழுபது மாடக்கோயில்களை எழுப்பிய செய்தியைத் தெரிவிக்கின்றன. இத்தகைய இறைபணி செய்த இம்மன்னன் சங்க காலத்தவனாய் இருந்திருப்பின் யாரேனும் ஒரு புலவராவது ஒரு பாடலிலாவது இச்செய்தியைக் கோடிகாட்டாது விட்டிரார். இம்மன்னன் சங்ககாலத்தவன் அல்லன் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

இனி இம்மன்னன் எழுப்பித்த எழுபது மாடக்கோயில்களும் சிவபெருமானுக்கா அல்லது திருமாலுக்கா அல்லது இருவருக்குமா என்பது பற்றிக் காண்போம்.

'ஈசன்' என்னும் சொல் சிவபெருமானைத்தான் குறிக்கும் என்பதால், இக்கோயில்கள் எழுபதும் ஈசுவரனான சிவபெருமானுக்கே எடுப்பிக்கப்பட்டதாகப் பலரும் கருதினர். ஆனால் பெரிய திருமொழியில் பதினொரு இடங்களில் 'ஈசன்' என்ற சொல்லால் திருமங்கையாழ்வார் திருமாலைக் குறிப்பிடுகிறார். பெரிய திருமடலிலும், 'என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை' (42) என்று குறிப்பிடுகிறார்.

கோச்செங்கணானைப் பற்றிப்பாடும் திருநறையூர்ப் பதிகத்திலேயே,

'கொழுங்கயிலாயப் பெருவெள்ளம் கொண்டகாலம்
குலவரையின் மீதோடி அண்டத் தப்பால்
எழுந்தினிது விளையாடும் ஈசன் எந்தை
இணையடிக்கீழ் இனிதிருப்பீர்' (43)

என்று திருமாலை 'ஈசன்' என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.

சிலர் 'எண்டோள் ஈசன்' என்பதால், அது சிவபெருமானைத்தான் குறிக்கிறது என்பார்கள்.

'நிணம்புல்கு சூலத்தார் நீல கண்டர்
எண்டோளர் எண்ணிறந்த குணத்தினாலே
கணம்புல்லன் கருத்துகந்தார்' (44)

என்ற வரிகளையும்,

எண்டோள் வீசிநின் றாடும்பி ராந்தன்னைக்
கண்காள் காண்மின்களோ' (45)

என்ற வரிகளையும் அதற்கு மேற்கோளாய்க் காட்டுவார்கள். அப்பர் பெருமான் சிவபெருமானை எண்டோள் ஈசனாக விளித்து வழிபட்டிருப்பது போலவே, திருமங்கையாழ்வார் கோச்செங்கணானைப் பாடும் அதே மூன்றாம் திருநறையூர்ப் பதிகத்தில்,

'பவ்வநீர் உடைஆடை யாகச் சுற்றிப்
பாரகலம் திருவடியாய்ப் பவனம் மெய்யா
செவ்விமா திரமெட்டும் தோளா அண்டம்
திருமுடியா நின்றான்பால் செல்ல கிற்பீர்' (46)

என்று திருமாலைத் திசையெட்டும் தோளாய்க் கொண்ட எண்தோள் ஈசனாகக் குறிப்பிடுகிறார். அப்பர் அடிகள் சிவபெருமானை எண்தோள் ஈசனாகப் பாடியிருக்கலாம். ஆனால் கோச்செங்கணான் எண்தோள் ஈசற்குக் கோயில்கள் எழுபது செய்தமை குறித்துப் பாடியது திருமங்கையாழ்வார்தாமே தவிர, அப்பர் அடிகள் அல்லரே! அதனால் திருமங்கையாழ்வார் எண்தோள் ஈசனாக யாரைக் கருதினார் என்பதே இங்கு நினைக்கத் தகுந்தது, வேறு ஏதேனும் பதிகத்தில் எண்தோள் ஈசனாகத் திருமாலைக் குறித்திருந்தாலும் பரவாயில்லை. அதே பதிகத்தில் மூன்றாம் பாடலில் திசையெட்டும் தோளாய்க் கொண்டவன் திருமாலே என்று கூறுகிறார். அத்திருமாலே ஈசன் எந்தை என்று இரண்டாம் பாடலில் குறிப்பிடப்படுகிறார். இவ்விரண்டு சான்றுகளையும் நோக்கும்போது கோச்செங்கணான் எழுபது மாடக்கோயில்கள் எழுப்பியது திருமாலுக்கே என்றாகும்.

இதையே பல்லவர் சரித்திரம் என்னும் நூலில், 'இருக்கு வேதத்தைக் கூறும் திருமாலுக்கு எழுபது ஆலயங்கள் செய்துள்ள சோழர் குலத்துச் செங்கணான் செய்த திருநறையூர்க் கோயிலைச் சேருங்கள்' என்று திருநறையூர்ப் பதிகத்தின் எட்டாம் பாடலின் இறுதி வரிகளுக்குப் பொருள் விளக்கம் தருகிறார் வரலாற்றுப் பேராசிரியர் பி.தி.சீனிவாச அய்யங்கார் அவர்கள். (47)

'எண்தோள் ஈசன்' என்று திருமங்கை மன்னன் குறிப்பிடப்படுவது சிவபெருமானையல்ல என்பதற்கு மேலும் சில சான்றுகள் காட்டலாம். முதலாழ்வார்கள் மூவர் காலத்தும் இருந்தது போல் திருமங்கையாழ்வார் காலத்தில் சைவத்தைப் போற்றும் மனப்பாங்கு வைணவர்களிடத்து இல்லை. மாறாகச் சைவக்கடவுளான சிவபெருமானை இழித்தும் பழித்தும் கூறுவதே இயல்பாய் இருந்து வந்தது. இதை,

'வள்ளி கொழுநன் முதலாய
மக்களொடு முக்கண்ணான்
வெள்கி ஓட' (48)

என்ற வரிகளாலும்,

'ஆறும் பிறையும் அரவமும்
அடம்பும் சடைமேல் அணிந்து உடலம்
நீறும் பூசி ஏறும் ஊரும்
இறையோன் சென்று குறையிரப்ப' (49)

என்ற வரிகளாகும் நன்கு உணரலாம்,

திருமாலே அனைத்துக் கடவுளரிலும் பெரியவர் என்பதை,

'நிறையார வான்மூடும் நீள்செல்வத் திருநறையூர்
பிறையாடும் சடையானும் பிரமனுமுன் தொழுதேத்த
இறையாகி நின்றான் தன் இணையடியே அடைநெஞ்சே' (50)

என்ற வரிகளாலும்,

'மூவரில் முன் முதல்வன்' (51)

'முனைவனை மூவுலகும் படைத்த முதல் மூர்த்திதன்னை' (52)

என்ற வரிகளாலும் திருமங்கையாழ்வாரே உணர்த்துதலைக் காணலாம். இவ்வாறு திருமாலை உயர்த்தியும், சிவபெருமானைப் பழித்தும் இழித்தும் கூறும் திருமங்கையாழ்வார் தம் பாடலில் 'இருக்கிலங்கு திருமொழிவாய் எண்தோள் ஈசற்கு' என்று சிவபெருமானைக் குறிப்பாரா?

'எண்தோள் ஈசன்' என்ற பெயரால் திருமாலைத் திருமங்கை மன்னன் பாடியிருப்பது போலவே, 'கூத்தன்' என்றும், 'பரமன்' என்றும் கூட திருமாலை விளித்துப் பாடியிருக்கிறார்.

'பரிமுகமாய் அருளியஎம் பரமன் காண்மின்' (53)

'பன்றியாய் மீனாகி அரியாய்ப் பாரைப்
படைத்துக் காத்(து) உண்டுமிழ்ந்த பரமன் தன்னை' (54)

'பாலகனாய் ஆலிலையில் பள்ளி கொள்ளும் பரமன் இடம்' (55)

'பறவைமுன் உயர்த்துப் பாற்கடல் துயின்ற
பரமனார் பள்ளி கொள் கோயில்' (56)

'குறிய மாணி உருவாய
கூத்தன் மன்னி அமரும் இடம்' (57)

'கொம்பதனைப் பறித்தெறிந்த கூத்தன் அமர்ந்துறையும் இடம்' (58)

என்னும் வரிகள் இதற்குச் சான்றுகளாம். இவற்றையெல்லாம் நோக்கும்போது கோச்செங்கணான் எழுப்பிய எழுபது மாடக்கோயில்களும் திருமாலுக்கே என்றுதான் திருமங்கையாழ்வார் சொல்வதாகக் கொள்ள நேரிடும்.

அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் கோச்செங்கணான் கட்டிய சிவன் கோயில்களைப் பாடியுள்ளமை இங்கு எண்ணத்தக்கது. அப்பர் அடிகள் தம்முடைய அடைவுத் திருத்தாண்டகத்தில்,

'பெருக்காது சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோ(டு) எட்டும் மற்றும்' (59)

என்று குறித்திருப்பது, சிவபெருமானுக்கான பெருங்கோயில்கள் அவர் காலத்தில் எழுபத்தெட்டு இருந்தமையைப் புலப்படுத்துகின்றன. அப்பர் அடிகள் இந்த எழுபத்தெட்டு கோயில்களையும் எழுப்பியது யாரென்று குறிக்கவில்லை. பெருங்கோயில் என்று அப்பர் அடிகள் குறிப்பதும், மாடக்கோயில் என்று திருமங்கையாழ்வார் குறிப்பதும் ஒன்றே என்பது கலைவரலாற்று அறிஞர்கள் ஒப்புக்கொள்ளும் செய்தியாகும். கோச்செங்கணான் எழுப்பியதாகச் சில மாடக்கோயில்களைச் சம்பந்தரும் சுந்தரரும் தங்கள் தேவாரப்பதிகங்களில் குறிப்பிடுகின்றார்கள்.

'வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச்
செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே' (60)

'மடவனம் நடைபயில் வைகல் மாநகர்க்
குடதிசை நிலவிய மாடக் கோயிலே' (61)

என்று சம்பந்தர் பெருமான் திருவைகன் மாடக்கோயில் இறைவனைப் பாடும்போது, கோச்செங்கணானே அக்கோயிலை எழுப்பியதாகக் கூறுகிறார்.

'ஐயநன் பொருபுனல் அம்பர்ச் செம்பியர்
செய்யகண் சிறைசெய்த கோயில் சேர்வரே' (62)

'அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்
குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே' (63)

என்ற சம்பந்தரின் வரிகளால், திரு அம்பர்ப் பெருந்திருக்கோயிலைக் கட்டியவன் சோழன் கோச்செங்கணானே என்பது பெறப்படுகின்றது.

(தொடரும்)



அடிக்குறிப்புக்கள் :

31. களவழி நாற்பது - கழகப்பதிப்பு, செய்யுள் 37.
32. களவழி நாற்பது - கழகப்பதிப்பு, பக்கம் 28.
33. களவழி நாற்பது - கழகப்பதிப்பு, பக்கம் 27.
34. களவழி நாற்பது - கழகப்பதிப்பு, பக்கம் 29.
35. புறநானூறு - உ.வே.சாமிநாதய்யர் பதிப்பு, செய்யுள் 48.
36. புறநானூறு - உ.வே.சாமிநாதய்யர் பதிப்பு, செய்யுள் 49.
37. பெரிய திருமொழி, திருநறையூர்ப் பதிகம், பக்கம் 145, பாடல் எண் 6, திருவேங்கடத்தான் திருமன்றப் பதிப்பு.
38. பெரிய திருமொழி, திருநறையூர்ப் பதிகம், பக்கம் 146, பாடல் எண் 9, திருவேங்கடத்தான் திருமன்றப் பதிப்பு.
39. மூன்றாம் திருமுறை - தருமபுர ஆதீனப் பதிப்பு, திருவைகல் மாடக்கோயில், பக்கம் 85, பாடல் எண் 6.
40. சோழர் வரலாறு - டாக்டர் மா. இராசமாணிக்கனார், பக்கம் 13.
41. பெரிய திருமொழி - திருநறையூர்ப் பதிகம், பக்கம் 146, பாடல் எண் 8.
42. பெரிய திருமடல், பக்கம் 102, வரி 119.
43. பெரிய திருமொழி, மூன்றாம் திருநறையூர்ப் பதிகம் பக்கம் 144, பாடல் எண் 2.
44. ஆறாம் திருமுறை - திருநாவுக்கரசர், தருமபுர ஆதீனப் பதிப்பு, பக்கம் 95, செய்யுள் எண் 7.
45. நான்காம் திருமுறை - திருநாவுக்கரசர், தருமபுர ஆதீனப் பதிப்பு, பக்கம் 78, செய்யுள் எண் 83.
46. பெரிய திருமொழி - திருநறையூர்ப் பதிகம், பக்கம் 144, செய்யுள் எண் 3.
47. பல்லவர் சரித்திரம் - பி.தி.சீனிவாச அய்யங்கார், பக்கம் 114.
48. பெரிய திருமொழி, திருவேங்கடத்தான் திருமன்றப் பதிப்பு, பக்கம் 148, செய்யுள் எண் 6.
49. பெரிய திருமொழி, திருநறையூர்ப் பதிகம் 4, பக்கம் 148, செய்யுள் எண் 6.
50. பெரிய திருமொழி, திருநறையூர்ப் பதிகம் 6, பக்கம் 153, செய்யுள் எண் 9.
51. பெரிய திருமொழி, திருமாலிருஞ்சோலை 2, பக்கம் 227, செய்யுள் எண் 1.
52. பெரிய திருமொழி, திருமாலிருஞ்சோலை 2, பக்கம் 227, செய்யுள் எண் 2.
53. பெரிய திருமொழி, திருவழுந்தூர் 4, பக்கம் 174, செய்யுள் எண் 2.
54. பெரிய திருமொழி, திருவழுந்தூர் 4, பக்கம் 176, செய்யுள் எண் 10.
55. பெரிய திருமொழி, திருத்தேவனார் தொகை, பக்கம் 81, செய்யுள் எண் 6.
56. பெரிய திருமொழி, திருவெள்ளியங்குடி, பக்கம் 105, செய்யுள் எண் 4.
57. பெரிய திருமொழி, திருப்புள்ளம் பூதங்குடி, பக்கம் 107, செய்யுள் எண் 1.
58. பெரிய திருமொழி, திருத்தேவனார் தொகை, பக்கம் 81, செய்யுள் எண் 9.
59. ஆறாம் திருமுறை, அடைவுத் திருத்தாண்டகம், பக்கம் 521.
60. மூன்றாம் திருமுறை - தருமபுர ஆதீன வெளியீடு, திருவைகல் மாடக்கோயில், பக்கம் 84.
61. மூன்றாம் திருமுறை - தருமபுர ஆதீன வெளியீடு, திருவைகல் மாடக்கோயில், பக்கம் 84.
62. மூன்றாம் திருமுறை - தருமபுர ஆதீன வெளியீடு, திருஅம்பர்பெருந்திருக்கோயில், பக்கம் 87.
63. மூன்றாம் திருமுறை - தருமபுர ஆதீன வெளியீடு, திருஅம்பர்பெருந்திருக்கோயில், பக்கம் 87.

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.