http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 32
இதழ் 32 [ பிப்ரவரி 15 - மார்ச் 15, 2007 ] இந்த இதழில்.. In this Issue.. |
வாசகர்களுக்கு வணக்கம்.
ஏற்றமுறச் செய்வதுவும் மாற்றமுற வைப்பதுவும் ஏடே யாகும்! தோற்றுபுது நிலையுணர்ந்து தோன்றாத வழிகூறித் துணை புரிந்து சேற்றிலுயர் தாமரைபோல் திருநாட்டின் உளங்கவர்ந்து தீந்த மிழ்த்தொண் டாற்றுந்தாள் அங்கங்கே அழகழகாய் அறிஞர்களால் அமைத்தல் வேண்டும்! - பாவேந்தர் பாரதிதாசன் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவவேண்டுமானால், தீந்தமிழ் நூல்கள் அறிஞர்களால் வடிக்கப்பட்டால் மட்டும் போதாது. அவற்றைப் படித்து வாழ்க்கையைப் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ளவும் உலகத் தமிழர்கள் முன்வரவேண்டும். ஒரு மொழியின் இலக்கியம் வளம்பெற அந்நாட்டில் புலவர்கள் இருந்தால் மட்டும் போதாது. அவர்களை ஊக்குவிக்கும் புரவலர்களும் தேவை. கடந்த மாதம் நடந்த புத்தகக் கண்காட்சியில் கலந்துகொண்ட கூட்டத்தைக் கண்டு, வாசிக்கும் ஆர்வம் மக்களிடம் பரவிவிட்டதே என்று ஒரு புறம் அகமகிழ்ந்தாலும், அப்படி எந்தப் புத்தகத்தைத்தான் படிக்கிறார்கள் என்று பார்த்து மனம் களிப்பற்று, சலிப்புற்று, வெறுப்புற்றுப் போனது. படித்தால் மட்டும் போதாது. எதைப் படிக்கவேண்டும், எதை விடுக்க வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். கல்லாக இருக்கும் மனதைச் சிற்பமாகச் செதுக்குபவை அவரவர் படிக்கும் புத்தகங்கள்தான். அது பல்லவர் காலத்து இயல்பான சிற்பமா, முற்சோழர் எழிலார்ந்த காலத்து சிற்பமா, நாயக்கர் காலத்துச் சுதைச் சிற்பமா என்பதைத் தீர்மானிப்பதும் அவரவர் படிக்கும் புத்தகங்கள்தான். ஆனால் எத்தனை பேரால் தாம் விரும்பும் புத்தகங்களை விரும்பியவுடன் வாங்கிப் படித்துவிட முடிகிறது? முக்கியமான இரண்டு காரணிகள் தடையுத்தரவு பிறப்பிக்கின்றன. முதலாவது பொருளாதாரம். அறுபது வருட சராசரி இந்திய வாழ்க்கையில் முதல் பாதி பொருளாதாரத்தை உயர்த்துவதிலேயே செலவாகி விடுகிறது. பணத்தை நோக்கிய பந்தயத்தில் படிக்கும் பழக்கம் மனதின் ஒரு மூலையில் பதுங்கிக் கொள்கிறது. ஓரளவிற்கு வசதிகள் வாய்த்த பிறகு படிக்காமல் தவற விட்டவைகளைப் படிக்கலாம் என்று ஓர் எண்னம் தோன்றுகிறது. இந்த எண்ணத்துக்கு முட்டுக்கட்டை போடுவது அடுத்த காரணி. அதுதான் Availability. கடந்த மாதக் கண்காட்சியில் 400 பதிப்பகங்கள் பங்கேற்றிருந்தபோதும், ஒவ்வொரு பதிப்பகமும் தனித்தனியே விலைப்பட்டியலை வெளியிட்டிருந்தனவேயன்றி, அனைத்து நூல்களுக்கும் ஒரே பட்டியல் இருந்திருந்தால், வாங்குபவர்களுக்கு எளிதாக இருந்திருக்கும். கண்காட்சியைத் தவறவிட்டவர்களுக்கும் வாங்குதல் எளிமையாகும். ஒரு தனியார் நிறுவனம் இப்பணியை மேற்கொண்டு வருவதாக அறிகிறோம். வெளியிட்டால் மகிழ்ச்சியே. சென்னையில் இருப்பவர்கள் அந்தந்தப் பதிப்பகங்களுக்கே நேரில் சென்று வாங்கமுடிகிறது. வெளியூரிலிருப்பவர்கள் பாடுதான் திண்டாட்டம். அஞ்சல்/இணையம் மூலம் பெறமுடியும் என்றாலும், அதிலும் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. இவையனைத்துக்கும் ஒரே தீர்வு நூலகங்கள்தான். தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பொதுநூலகத்துக்கு வருகை தருபவர்கள் மற்றும் அவ்வூரின் மக்கள்தொகையின் சதவீதங்களுக்கிடையே மிகப்பெரும் வேறுபாடு இருப்பதாகத் தெரிவிக்கிறது ஒரு தனியார் நிறுவனத்தின் அண்மைக்காலப் புள்ளிவிவரம். இருப்பினும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் முனைவர் பட்ட மாணவர்களுக்கும் புகலிடமாகத் திகழ்வதில் நூலகங்களே முதலிடம் வகிக்கின்றன. அத்தகைய நூலகங்களில் தேவைப்படும் முக்கிய நூல்கள் கிடைக்கின்றனவா என்றால், விடை கேள்விக்குறியே. சென்னையில் ரோஜா முத்தையா நிலையம் இருப்பதுபோல் மாநகருக்கு ஒன்று என்று வரவேண்டும். மற்ற பொது நூலகங்களில் இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படவேண்டும். இந்த நிலையில், கடந்த வாரம் பாராட்டத்தக்கதொரு அறிவிப்பினை வெளியிட்டு, தனது தமிழ் வளர்ச்சி முயற்சிகள் என்னும் மகுடத்தில் இன்னொரு இறகைச் சேர்த்துக் கொண்டார் தமிழக முதல்வர் கலைஞர். 14 தமிழ் மற்றும் வரலாற்று அறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவ்வறிஞர்களின் குடும்பங்களுக்குப் பரிவுத்தொகையையும் வழங்கியுள்ளது. இதனால் அனைத்துத் தரப்பினருக்கும் பயன்கள் உண்டு. மொழிக்கும் வரலாற்றுக்குமே தம் வாழ்க்கையை அர்ப்பணித்து, ஆய்வுக்கட்டுரைகள் என்னும் கற்கள் கொண்டு இலக்கிய வரலாற்றுக் கோட்டை கட்டிய அறிஞர்களில் பெரும்பான்மையோர் தம் குடும்பத்துக்கான பொருளாதாரக் கோட்டையைக் கட்ட முடியாமல் போய், 'பிழைக்கத் தெரியாதவர்கள்' என்ற பட்டத்தைத் தம் வாழ்நாளிலேயே பெற்றது தமிழக வரலாற்றில் புதிதல்ல. இதுபோல் வறுமையில் வாடும் தி.ஜ.ரங்கநாதன் போன்ற அறிஞர்களின் குடும்பங்கள் இப்பரிவுத் தொகையால் வளம்பெறும் என்றாலும், அந்த அறிஞர்களின் உழைப்பு அங்கீகரிக்கப்பட்டு, அவரது கருத்துக்கள் பலரைச் சென்றடைகிறது என்ற செய்தியே மிகுந்த பெருமை தரத்தக்கதாகும். ஒரு மேதையின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்படும்போது, காப்புரிமை, பதிப்புரிமைச் சிக்கல்கள் களையப்பட்டு, யார் வேண்டுமானாலும் பதிப்பிக்கலாம் என்ற நிலை ஏற்படுகிறது. மலிவுவிலைப் பதிப்புகள் வர வாய்ப்பு உருவாகிறது. அதே சமயம், இதில் தீமைகளும் இல்லாமல் இல்லை. அமரர் கல்கியின் படைப்புகள் அரசுடைமையாக்கப்பட்டதால், சென்னையிலிருக்கும் பெரும்பாலான பதிப்பகங்கள் பொன்னியின் செல்வனை 200 ரூபாயில் மலிவாக வெளியிட்டன. ஆனால், காலம் கடந்து நிற்கும் அவரது படைப்புகளின் பெயர்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் இதனால் தடுக்கவியலாமல் போகிறது. கல்கியுடன் துளிகூடத் தொடர்பில்லாமல், பார்த்திபன் கனவு, கள்வனின் காதலி போன்ற திரைப்படங்களுக்குப் பெயர் வைப்பதையும் தடுக்க முடியவில்லை. அடுத்த தலைமுறைக்கு பார்த்திபன் கனவு என்று சொன்னால், படத்தின் பெயர்தான் நினைவுக்கு வரும் நிலை ஏற்பட்டாலும் வியப்படைவதற்கில்லை. மலிவுவிலைப் பதிப்புகள் வெளியிடுவது வாசகர்களை முதல் காரணியின் பாதிப்பிலிருந்து மீட்கும் என்றாலும், இரண்டாம் காரணியின் நிலை அப்படியேதான் இருக்கும். பெரும்பாலான நூலாசிரியர்களும் பதிப்பகங்களும் ஆராய்ச்சிப் புத்தகங்களை வெளியிடுவது நூலகப்பிரதிகளை நம்பித்தான். ஆண்டுதோறும் புதிதாக வெளியிடப்படும் 1000 நூல்கள் பொது மற்றும் பல்கலைக்கழக நூலகங்களுக்காக அரசின் நூலகத்துறையால் வாங்கப்படுகின்றன. ஆனால், நாட்டுடைமையாக்கப்பட்ட அறிஞரின் நூல்களை நூலகத்துறை வாங்குவதில்லை என்று கேள்விப்படுகிறோம். இது உண்மையென்றால், இந்த விஷயத்தில் அரசின் அணுகுமுறை சற்றுக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஒரு அறிஞரின் உழைப்பையும் ஈடுபாட்டையும் மதித்து, அவரது படைப்புகள் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில்தானே நாட்டுடைமையாக்கப்படுகின்றன? நூலகங்கள் வாங்காவிட்டால், எந்தப் பதிப்பகத்தார்தான் இவ்வறிஞர்களின் நூல்களை வெளியிட முன்வருவார்கள்? நாவல்கள், கதைகள், கவிதைகள் போன்றவை வேண்டுமானால் நூலகங்களை நம்பிப் பதிப்பிக்கப்பட வேண்டியதில்லை. ஆனால், சங்க இலக்கிய ஆராய்ச்சி நூல்களைத் தமிழக மக்களை நம்பி வெளியிட முடியுமா? இத்தகைய முரண்பாடான திட்டத்தால் அரசுடைமை என்ற நோக்கமே அடிபட்டுப் போகிறது. தி.வை.சதாசிவ பண்டாரத்தார் உள்ளிட்ட பல்வேறு தமிழ் மற்றும் வரலாற்று அறிஞர்களின் படைப்புகளுக்குக் கிடைத்த அங்கீகாரத்தால் உளம் பூரித்திருக்கும் வரலாறு.காம், இம்முடிவையெடுத்த முதல்வருக்கு நன்றி கலந்த பாராட்டுக்களையும், டாக்டர் மா.இராசமாணிக்கனார் அவர்களின் நூல்கள் அரசுடைமையாக்கப்பட்டதற்காக, அவர் பெயரில் இயங்கும் வரலாற்றாய்வு மையத்திற்கும் இதழியல் ஆய்வு மையத்திற்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களையும் நூலகப் பிரதிகள் பட்டியலில் இணைத்துக் கொள்ளுமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கிறது. நன்றி. அன்புடன் ஆசிரியர் குழு. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |