http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 32
இதழ் 32 [ பிப்ரவரி 15 - மார்ச் 15, 2007 ] இந்த இதழில்.. In this Issue.. |
டாக்டர். மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் வெளியீடான வரலாறு ஆய்விதழ் - 6 இல் வெளியாகியுள்ள இக்கட்டுரையை, அறிஞர்கள் தங்களுக்குள் ஏற்படும் ஐயங்களைப் பிற ஆய்வாளர்களுடன் எவ்வாறு கலந்தாலோசித்து விடை காண்கிறார்கள் என்றும், ஒரே கல்வெட்டுச் சொல்லைப் பல்வேறு ஆய்வாளர்கள் எப்படி வெவ்வேறு விதமாகப் பொருள் கொள்கிறார்கள் என்றும் வரலாறு.காம் வாசகர்களுக்கு விளக்கும் பொருட்டு இங்கே மீள்பதிப்பு செய்கிறோம்.
வரலாறு ஐந்தாம் இதழில் தஞ்சை இராஜராஜீசுவரம் திருக்கோயிலின் தளிச்சேரிக் கல்வெட்டு விரிவான கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் பயிலப்பட்டிருக்கும் சில சொற்களுக்கான சரியான பொருள்விளக்கங்களை அறியமுடியாமலிருந்ததால் கல்வெட்டு மற்றும் தமிழியல்துறை அறிஞர்களின் உதவியை நாடினோம். பேரா. முனைவர் எ.சுப்பராயலு, திரு.ஐராவதம் மகாதேவன், பேரா. முனைவர் செ.இராசு, முனைவர் மு.து.சம்பத், முனைவர் சு.இராசகோபால், பேரா. முனைவர் தமிழண்ணல், பேரா. முனைவர் அ.மா.பரிமணம் ஆகிய அறிஞர்கட்கு விளக்கங்கள் வேண்டி மடல்கள் அனுப்பப்பட்டன. மையத்தின் வேண்டுகோளை மதித்துப் பேரா. முனைவர் செ.இராசு, பேரா. முனைவர் அ.மா.பரிமணம், பேரா.முனைவர் எ.சுப்பராயலு ஆகிய அறிஞர்கள் மறுமொழி அனுப்பி உதவியுள்ளனர். திரு. ஐராவதம் மகாதேவன், முனைவர் சு.இராசகோபால் ஆகிய இருவரும் நேரில் இது குறித்து உரையாடினர். திரு. ஐராவதம் மகாதேவன் இது தம்முடைய ஆய்வெல்லைக்குள் வராமையால் தாம் கருத்துத் தெரிவிக்கக்கூடவில்லை என்று கூறியிருக்கிறார். முனைவர் சு.இராசகோபால், பேரா. முனைவர் எ.சுப்பராயலு எழுதியிருக்கும் மருத்துவர் பற்றிய கட்டுரையைக் குறிப்பிட்டுச் சில விளக்கங்கள் தந்தார். சிக்கலான சில கல்வெட்டுச் சொற்களின் உட்பொருளை அறிந்து, மக்களுடன் அதைப் பகிர்ந்து கொள்வதில் வரலாறு இதழ் மேற்கொண்ட இம்முயற்சிக்குப் பேரன்புடன் ஒத்துழைப்பு நல்கித் துணைநின்ற அறிஞர் பெருமக்களுக்கு வரலாறு இரு கை கூப்பி நன்றி தெரிவித்து மகிழ்கிறது. இது போன்ற சிக்கலான நிலைகளில் அறிஞர்களின் கலந்துரையே தெளிவேற்படுத்தமுடியும். பல விளக்கங்கள் வரினும் அவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து ஒரு முடிவுக்கு வர வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில் வரலாறு மேற்கொண்ட இந்த முயற்சிக்குத் தங்களின் பல்வேறு பணிகளுக்கிடையில் ஒத்துழைப்பு நல்கிய அறிஞர் பெருந்தகைகள் பாராட்டிற்கும் தமிழக மக்களின் நன்றிக்கும் உரியவர்கள். அறிஞர்களின் விளக்கவுரைகள் 1. பேரா. முனைவர் செ.இராசு, தலைவர், கல்வெட்டியல்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613005. (7-12-1995) தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயில் கல்வெட்டில் விளக்கம் பெறாச் சொற்களுக்கு விளக்கம் பெறும் முயற்சி நன்முயற்சி. பாராட்டுதல்கள். காவிதிமை காவிதி என்பது நடுநிலையுடன் மேற்பார்வை செய்யும் பணியாளர்கட்கும் மத்யஸ்தர்கட்கும் அளிக்கும் பட்டம். முதலில் மதுரைக்காஞ்சியில் இச்சொல் பயின்றுவருகிறது. 'செம்மை சான்ற காவிதி மக்கள்' (499) என்பது மதுரைக்காஞ்சித் தொடர். கணக்கரும், கீழ்க்கணக்கரும் கணக்கு எழுதுபவர்களும், எழுதிய கணக்கைப் பாதுகாப்பவரும் ஆவர். காவிதிமை செய்வார் என்பவர், இன்னார், இனியார் என்று பாராமல் நடுநிலையுடன் வரி தண்டும் பணிமக்கள் ஆவர். புலவர் வே. மகாதேவன் காவிக்கல் வேலை செய்பவர் என்று கூறுகிறார். சா. கணேசன் அவர்கள் காவிதிமை செய்ய என்பதற்குக் "காவிக்கல் கல்லி எடுக்க" என்று பொருள் கொள்கிறார். கோலினமை இச்சொல்லிற்குக் கோயின்மை, கோயினமை என்று நீங்கள் பாடம் கொண்டது தவறாகத் தோன்றுகிறது. எல்லோரும் கோலினமை என்றே பாடம் கொண்டுள்ளனர். பெருவுடையார் கோயிலில் கோலினமை செய்தவர் இருவர் பெயர்கள் அரையன் பவருத்திரன் ஆன பஞ்சவன் மங்கலப் பேரையன், அம்பட்டன் கோன் சடங்கவி ஆன ராஜராஜப் பிரயோகதரையன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. இங்குக் குறிக்கப்பட்ட அம்பட்டன் என்பது தனியான தொழிற்பெயர் அல்ல; கோலினமை செய்தாரின் குலப்பெயர் ஆகும். மங்கலன், பிரயோகன் என்பன வைத்தியருக்குரிய பெயர்கள். நாவிதர்கள் இப்பெயரோடு பெரிய வைத்தியர்களாக விளங்கியமையை பேரா.எ.சுப்பராயலு அவர்கள் தம் கட்டுரையொன்றில் விளக்கியுள்ளார். கோலினமை செய்வார் மருத்துவத்தில் வல்ல கத்திரிக்கோல் உருவாக்கிப் பராமரிப்பவர்கள் ஆவர். நாவிசர், அம்பட்டர் நாவிசம் செய்யும் நாவிசரும் அம்பட்டரும் ஒருவரே. பெருவுடையார் கோயில் கல்வெட்டில் நாவிசம் செய்வார் மட்டுமே குறிக்கப்பட்டுள்ளனர். இங்குக் குறிக்கப்பட்டுள்ள அம்பட்டன் கோலினமை செய்வாருள் இரண்டாமவன். கல்வெட்டமைதியை நன்கு கவனிக்கவும். சன்னாலியள் சன்னாலிகள் என்ற சொல்லே இங்குச் சன்னாலியள் என்று எழுதப்பட்டுள்ளது. சா.கணேசன் அவர்கள் கோலப்பொடி தயாரிப்பவன், விபூதி தயாரிப்பவன் அல்லது சுண்ணாம்பு நீற்றை வடிகட்டித் தருபவன் என்று பொருள் கொள்கிறார். வே.மகாதேவன் இதில் இறுதிப் பொருளை மட்டும் எடுத்துக்கொள்கிறார். சன்னம் என்பது குழைந்த காரையைக் குறிக்கும். காரையை அரைத்துத் தயாரித்துப் பூசும் பணிபுரிபவன் சன்னாலியன் ஆகலாம். 2. பேரா. முனைவர் அ.மா.பரிமணம், தமிழ்ப் பேராசிரியர், C151, நகராட்சிக் குடியிருப்பு, தஞ்சாவூர் - 613007. (8-12-1995) கோயின்மை கோயிலின் தன்மை என்பது வழக்கில் விகாரமுற்று கோயின்மை என அமையலாம். அதனால் குறிக்கப்படும் பணியின் இயல்பினை அறியக்கூடவில்லை. முன்னும் பின்னும் நன்கு அறியப்பட்ட தெளிவான பணிகள் சுட்டப்பட்டுள்ளபோது இதற்குக் 'கோயிலின் இயல்பு தொடர்பான பணி' என்று பொதுப்பொருள் கொள்வது ஏற்புடைமையாகுமா? இராசராசப் பேரரசன் தன் உள்ளம் போல உயர்ந்ததும் பெரியதும் புதியதுமான திருக்கோயிலை உருவாக்கியதனால், அதன் இயல்புக்கு ஏற்பப் பல்வேறு புதுப்புதுப் பணிகளைத் தோற்றுவித்துப் பணியாளர்களை நிரப்பியிருக்கலாம். காலப்போக்கில் கோயிலின் நடப்புகள் குறைந்தும் மறைந்தும் விட்ட நிலையில், சில பணிகளைப் படித்தறியவும் கேட்டறியவும் வாய்ப்பில்லாது போயிற்று. பிற கோயில்கள் எல்லாம் சிறிய அளவினவாதலால் இத்துணை விரிவான அளவில் பணிநிலைகள் இருந்திருக்கமுடியாது. இருந்திருந்தாலும் இக்கல்வெட்டினைப் போலக் குறித்து வைத்திருந்தால்தானே அறியமுடியும்? சன்னாலியள் 'சென்னை' என்றொரு இசைக்கருவியின் பெயர் கூறப்படுகிறது. அது 'சன்னா' என்றும் வழக்கில் இடம்பெறலாம். 'சென்னை' என்னும் சொற்குப் பொருள் கூறுங்கால் 'கோயில் மூர்த்தியின் புறப்பாடு அறிவிக்கும் மேளம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நினைவிற்கொண்டு பார்த்தோமாயின், 'சன்னாலியள்' அக்கருவியைக் கையாள்பவன் என்று கொள்ளலாமா என எண்ணுகின்றேன். பணியாளர் வரிசையில், இவ்விடத்தில் இது மட்டுமே இசைக்கருவி இயக்குபவன் பற்றியதாக அமைகிறது. அது பொருத்தமாகுமா என்பதனைச் சிந்திக்க வேண்டுகிறேன். நாவிசர், அம்பட்டர் இவ்விரு சொற்களுமே முடியகற்றும் பணியாளரைக் குறிப்பனவாக, இன்றும் கிராமப்பகுதியில் வழங்கக் காணலாம். தாங்கள் குறிப்பிட்டுள்லது போல, அகராதிகள் இவற்றை ஒருபொருட் பன்மொழியாகவே குறிப்பிடுகின்றன. அவ்வாறு குறிப்பிடுவது ஓரளவிற்குப் பொருந்தும். தொடக்கநிலையில் நாவிசர்/அம்பட்டர், மயிர் குறை/மழிவினை செய்துவந்தனர் என்றும் பின்னர் இசைநலம் பெற்றவராய்ச் சமுதாய நலம், தீங்கு நிகழ்ச்சிகளில் இசைத்தொண்டும் புரிந்தனர் என்றும் கூறப்படுகின்றது. பின்னாளில் மூன்று தொழில்களிலும் ஒருங்கே ஈடுபட்டுள்ளமையினையும் காணலாம். சொற்பிறப்பும் பொருளும் நாசுவன் - அம்பட்டன் - அம்பஷ்டன் (Ambastha) - Winslow. அம்பட்டர் - தமிழ்நாட்டுச் சவரத் தொழிலாளி; நாட்டுப்புற அறுவைச் சிகிச்சையாளர். அம்பா - பக்கம்; ஸ்தா - இருப்பவன், பக்கத்திலிருப்பவன் என்னும் பொருளில் அம்பஸ்தன் - அம்பட்டன் வந்ததாகலாம். 1. மயிர் நீக்கும்போது நீக்கப்படுபவனின் அருகிலிருப்பவன் 2. அறுவை சிகிச்சை செய்யும்போது அருகிலிருப்பவன். இரு தொழிலிலும் இவர் அருகில் (பக்கத்தில்) இருப்பவராவர். பக்கத்திலிருப்பவன் என்னும் பொருளில், சவரத் தொழிலாளி, மலையாளத்தில் 'அடுத்தோன்' என்று கூறப்படுகின்றானாம். என்றாலும் இவ்விரு சொற்களையும் அவற்றின் பொருள் அடிப்படையில் பார்த்தால் சற்றே வேறுபாடு தோன்றக் காணலாம். செயலில், அந்தஸ்தில், சமூக அளவில் சிறிது வேறுபாடு இருந்துள்ளது என்று எண்ணத் தோன்றுகிறது. ஒருகால் நாவிசர் முடி அகற்றும் தொழிலோடு நின்றவர் என்றும், அம்பட்டர் மருத்துவம், இசை போன்றவற்றிலும் பணியாற்றியவர் என்றும் கொள்ளலாம். பிற்காலத்தில் மறைந்துவிட்ட இந்த வேறுபாடு இராசராசன் காலத்தில் தெளிவாக இருந்திருக்கக் கூடும். அதனால் அவ்வேறுபாடு தோன்ற நாவிசம் செய்யத் தனிப் பணியாளரும், சார்புடைய பிறபணிசெய்ய அம்பட்டரும் தனித்தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கருதலாம். 3. பேரா. முனைவர்.எ.சுப்பராயலு, கல்வெட்டியல்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613005. (22-1-96) உங்கள் 28-11-95 கடிதத்தில் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு இதுநாள் வரை விடையெழுதாமைக்கு மன்னிக்கவும். பல சிறுசிறு வேலையிடையூறுகளினால் உரிய நேரம் கிடைக்கவில்லை. ஆயினும் இதைக் குறித்த சில செய்திகளைப் புலவர் செ.இராசு அவர்களிடம் விவாதித்துள்ளேன். அவர் உங்களுக்குக் கடிதம் எழுதியிருப்பார். மேற்கொண்டு எழுத நிறைவான பதில் என்னிடம் இல்லை. முடிவுரை இராஜராஜீசுவரத்துத் தளிச்சேரிக் கல்வெட்டு குறிக்கும் 'காவிதிமை' மத்தியஸ்தர் பணியையே குறிக்கும் என்பதைக் கட்டுரையிலேயே தக்க சான்றுகளுடன் நிறுவியுள்ளோம் (வரலாறு 5, பக் 96, அடிக்குறிப்பு எண் 130). கோயின்மை என்பது தவறான பாடம் என்று பேரா.செ.இராசு குறிப்பிட்டுள்ளார். கல்வெட்டில் கோயின்மை என்றுதான் உள்ளது. அச்சொல்லை மசிப்படி எடுத்துக் கல்வெட்டறிஞர்கள் பேரா.செ.இராசு, பேரா.எ.சுப்பராயலு இருவருக்குமே காட்டினோம். கோயின்மை அல்லது கோயினமை என்றுதான் அச்சொல்லைக் கொள்ளமுடியும். கோலினமை என்ற பழைய பாடம் சரியன்று. கோயின்மை சுட்டும் பணி எதுவென்று அறியக்கூடவில்லை. நாவிசர், அம்பட்டர் இரண்டுமே வேறுபட்ட பணிகளைக் குறிக்கும் சொற்களாகவே இருக்கவேண்டும். இது குறித்துப் பேரா.அ.மா.பரிமணம் தெரிவித்திருக்கும் கருத்துகள் ஏற்புடையனவாக உள்ளன. எனினும் இது குறித்து மேலும் ஆராயவேண்டியுள்ளது. சன்னாலியள் குறித்துப் பேரா.செ.இராசு தெரிவித்திருக்கும் கருத்து சிந்தனைக்குரியது. சன்னம் ஆள்பவன் 'சன்னாளன்' ஆகலாம். கல்வெட்டு சன்னாலி என்று குறிப்பிடுவதால் இச்சொல் குறித்து மேலும் தெளிவு தேவைப்படுகிறது. 'காண பாட' என்று தளிச்சேரிக் கல்வெட்டு தெளிவாகக் குறிப்பிடுவதைக் கட்டுரையிலேயே சுட்டியுள்ளோம். பேரா.செ.இராசு இராஜராஜீசுவரத்தில் நிகழ்ந்த சதயத் திருநாள் விழாவில் (21-10-95) இச்சொல்லைக் 'கானபாடி' என்றே குறிப்பிட்டார். அதனால் இச்சொல்லையும் மசிப்படி எடுத்துப் பேரா.செ.இராசுவிடம் காட்டினோம். பேரா.அ.மா.பரிமணம் அவர்கள் தம் மடலில், 'தாங்கள் படித்ததும் பதிப்பித்ததும் சரிதானா என்பதை உணர்த்த ஓர் உபாயம் செய்திருக்கலாம். அது செலவுமிக்க ஒன்றுதான். என்றாலும், அது இக்கால 'Decision of thte third umpire in the test cricket play' போல மறுக்கமுடியாத, யாவரும் நேரே கண்டு தெளியத்தக்கச் சான்றாக அமையும். வேறுபட்ட இடங்களில் சிலவற்றைப் (காலியாக விடப்பட்ட இடம், மாற்றிப்படித்த இடம் போன்ற சிலவற்றை) படம் எடுத்து, அந்தச்சொல் அல்லது தொடர்களைப் பெரிதாக்கி (enlarge) பதிப்பித்துக் காட்டினால் எல்லோரும் ஐயமின்றித் தெளிவு பெற ஏதுவாகும். ஒரு கட்டுரையில் இப்படிச் செய்துகாட்டிவிட்டால், இனிக் காட்டவிருக்கும் இதுபோலும் மாறுபாடுகளை உணர்த்தும்போது ஐயமின்றி வாசகர்கள் ஏற்பர். சற்றே செலவாயினும் ஒருமுறையாவது அப்படிக்காட்ட முயலுமாறு வேண்டுகிறேன்." என்று குறிப்பிட்டிருந்தார். பேராசிரியரின் விருப்பத்தை இவ்விதழில் நிறைவேற்றியுள்ளோம். "காண பாட", "கோயின்மை", "வடுகக் காந்தர்வ்வரில்", "மெராவியம்" என்னும் கல்வெட்டுச் சொற்களை மசிப்படியெடுத்து ஒளிப்படமாக்கி இங்குத் தந்துள்ளோம். அனைத்துப் பாடவேறுபாடுகளையும் மசிப்படியெடுத்துப் படமெடுத்து வெளியிட பொருளாதாரச் சூழல்கள் இடம்தரவில்லை. 'கோயின்மை' என்ற இச்சொல் தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதியில் 'கொலினமை' என்று பதிப்பிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் 'யி' தெளிவாக வெட்டப்பட்டிருப்பதைப் படத்தில் பார்க்கலாம். இதனுடன் 'லி'யை ஒப்பிட்டுக் காண விரும்புவோர், 'காண பாட' சொல்லின் ஒளிப்படத்தைப் பார்க்கவும். அதில் மழலைச் சிலம்பு என்ற பெயரில் லகரம் இரண்டு இடங்களில் இடம்பெற்றுள்ளது. லகரத்திற்கும் இக்கல்வெட்டிலுள்ள யிகரத்துக்கும் உள்ள வேறுபாடு உள்ளங்கைக் கனியாகும். 'காண பாட' என்ற இச்சொல் தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதியில் 'கானபாடி' என்று பதிப்பிக்கப்பட்டுள்ளது. டகரம். ணகரம் ஆகிய இரண்டு எழுத்துக்களும் கல்வெட்டில் தெளிவாக வெட்டப்பட்டிருப்பதைப் படத்தில் பார்க்கலாம். மெராவியம் என்ற சொல் தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதியில் [மெ] . . [வியம்] என்று பதிப்பிக்கப்பட்டுள்ளது. அடைப்புக்குறிக்குள் குறிக்கப்பட்டிருக்கும் 'மெ', 'வியம்' என்னும் எழுத்துக்கள் கல்வெட்டில் தெளிவாக இருப்பதையும் புள்ளியிடப் பட்டிருக்கும் இடங்களில் ரகரமும், துணையெழுத்தும் இடம்பெற்று இருப்பதையும் படத்தில் காணலாம். தளிச்சேரிக் கல்வெட்டில் ரகரமும் துணையெழுத்தும் மேற்கோடு ஒன்றால் வேறுபடுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 'வடுகக் காந்தர்வ்வரில்' என்னும் சொற்றொடர் தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதியில், 'வடுகக் காலவரில்' என்று பதிப்பிக்கப் பெற்றுள்ளது. 'காந்தர்வ்வரில்' எனும் சொல் தெளிவாக வெட்டப்பட்டிருப்பதைப் படத்தில் பார்க்கலாம். 617 கோயிற்பணியாளர்களைப் பற்றிப் பேசும் இத்தளிச்சேரிக் கல்வெட்டுள்ள ராஜராஜீசுவரத்தின் வடவளாகம் மிகத் துன்பமான நிலையில் உள்ளது. உலக மரபுரிமை நினைவிடங்களுள் ஒன்றாக அமைந்துள்ள இத்திருக்கோயிலின் வடவளாகச் சுவர்களில்தான் புகழ்பெற்ற கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவற்றைப் படித்தறியக் கூசும் நிலையில் இப்பகுதி வளாகங்களைத் தோட்டமாக்கிப் புரக்கும் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை இவ்வடவளாகத்தைத் தோட்டமாக்கிக் காக்கும் நாள் என்று வருமோ தெரியவில்லை. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |