http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 32

இதழ் 32
[ பிப்ரவரி 15 - மார்ச் 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

தேமதுரத் தமிழோசை
பழுவூர் - 13
தளிச்சேரிக் கல்வெட்டு - வினாக்களும் விளக்கங்களும்
திரும்பிப் பார்க்கிறோம் - 4
சோழதேசத்தில் ஒரு சேரர் கோயில் - 2
சங்ககாலத் தமிழகத்தில் முதல் அறிவொளி இயக்கம் - 2
Links of the Month
சங்கச்சாரல் - 15
இதழ் எண். 32 > கலைக்கோவன் பக்கம்
திரும்பிப் பார்க்கிறோம் - 4
இரா. கலைக்கோவன்
அன்புள்ள வாருணி,

மாடக்கோயில் ஆய்வுகளை நன்கு திட்டமிட்டுச் செய்யத் தொடங்கியதாலும், இவ்வாய்வுகளுக்கு அனைத்துத் தளங்களிலும் என் வாழ்வரசியின் முழு ஒத்துழைப்புக் கிடைத்தமையாலும் என் பணி சுமையாகாமல் சுகமாகவே இருந்தது. எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் முதலில் கோயில் செயல் அலுவலரைப் பார்ப்பதைக் கடமையாகக் கொண்டிருந்தேன். அவர்களிடம் அனுமதி பெற்று வருவதற்குள் என் வாழ்வரசி கோயில் திருச்சுற்றில் வாய்ப்பான இடத்தில் சிற்றுண்டி (வீட்டிலேயே செய்து எடுத்து வந்தது) அருந்த ஏற்பாடு செய்துவிடுவார். சிற்றுண்டி முடிந்ததும் கோயிலின் வரைபடத்தில் அவர் ஆழ்ந்துவிடுவார். வளாகம் முழுவதையும வரைந்து முடிக்க மதியம் ஆகிவிடும். திரு. ஆறுமுகம் என்னுடன் இருப்பார். என் தேவைகளைப் (ஏணி, கயிறு, விளக்கு, அளவை நாடா, ஒலிப்பதிவு, ஒளிப்படமெடுத்தல், இளநீர்) பொறுப்பாகக் கவனித்துக் கொள்வதும், என் பிள்ளைகளை மேற்பார்வையிடுவதும் அவர் பணிகள்.

திரு. ஆறுமுகம் உறவு வகையில் என் துணைவியின் சிறிய தந்தை. என்னினும் பத்தாண்டுகள் மூத்தவராயிருந்தாலும், உள்ளத்தால் என்னினும் பத்தாண்டுகள் இளையவராயிருந்த அவர், என் தொடக்கக் கால ஆய்வுகளின் வேரென்றால் அது மிகையாகாது. அவரிடம், 'இல்லை', 'முடியாது', 'கிடைக்காது' என்ற சொற்களே கிடையாது. எது சொன்னாலும், இந்நாளைய நண்பர் இனியவர் திரு. சு. சீதாராமன் போல், 'செய்துவிடலாம்' என்றுதான் சொல்வார். செய்தும் விடுவார்.

ஒருமுறை, திருவையாறு கோயிலுக்குச் சென்றிருந்தபோது ஒரு மண்டபத்தின் மீதேறிப் படமெடுக்க வேண்டியிருந்தது. 'ஏணி பெற்றுத் தாருங்கள்' என்று கூறிவிட்டு, நான் பிற பணிகளில் மூழ்கிவிட்டேன். சற்று நேரம் கழித்து மண்டபத்திற்கு வந்தபோது ஏணியில்லை. எனக்குச் சினம் ஏற்பட்டது. தொலைவில் என் துணைவிக்கு உதவிக்கொண்டிருந்த திரு. ஆறுமுகம் என்னைக் கண்டதும் ஓடிவந்தார்.

'ஏணி எங்கே?'

'நான்கு வீதியிலும் சுற்றிவிட்டேன். குருக்கள், செயல் அலுவலர் இவர்களிடமும் கேட்டுவிட்டேன் நல்ல ஏணி கிடைக்கவில்லை'.

'அப்படியானால், எப்படி இந்த மண்டபத்தின் மீது ஏறுவது?'

'என் மீது ஏறிப் படமெடுங்கள் உங்களுக்குத் தயக்கமில்லை என்றால் நான் ஏணியாகத் தயார்.'

எனக்குத் திக்கென்றது. அவர் மீது கால்வைத்து ஏற என் உள்ளம் இடம்கொடுக்கவில்லை. ஆனால், தேவையின் அவசியம் கருதிய அவர் என்னை விடுவதாக இல்லை. பலமுறை மறுத்தும், அவருடைய அன்பான வற்புறுத்தல் என் தேவைக்கு விடைகண்டது. அவர் குனிந்துகொள்ள, அவர் முழங்காலில் கால் வைத்துப் பின் தோளில் மறு காலை ஊன்றி மண்டபக் கபோதக் கூட்டைப் பிடித்து ஒரு வழியாக மேலே ஏறிவிட்டேன். ஆய்வுமுடித்துப் படமெடுத்த பின்பு இறங்கவும் அவரே துணையானார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஏணி கிடைக்காத பல கோயிலகளில் அவரே ஏணியாக இருந்து என்னை ஏற்றிவிட்டிருக்கிறார்.

இது போல எனக்கு ஏணியாகி அன்புகாட்டிய இரண்டு உள்ளங்களை இங்கு நான் குறிப்பிடாமல் இருக்கமுடியாது. என தமக்கையார் முனைவர் சிவஅரசியின் மூத்த மகன் திரு.இராஜமுருகன் காஞ்சிபுரத்தில் பொறியியல் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த காலம். 1990 என்று நினைக்கிறேன. நானும் நளினியும் அவர் துணையுடன் காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்களில் ஆய்வு செய்துகொண்டிருந்தோம். திருத்தணி வீரட்டானேசுவரம் கோயிலுக்குச் சென்றபோது விமானத்தின் கிரீவ சிகரத்திலிருந்த சிற்பத்தைப் படமெடுக்க விழைந்தேன். ஏணியேதும் கிடைக்கவில்லை. இராஜமுருகன், 'மாமா, என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்' என்று நன்கு பழகிய யானையைப் போல குனிந்து, வளைந்து மிக எளிதாக என்னை மேலேற்றிவிட்டதை என்றுமே மறக்கமுடியாது.

கருநாடக மாநிலத்தில் பட்டடக்கல் கோயில்களை ஆய்வுசெய்தபோது ஒரு விமானத்தின் மேல் ஏறவேண்டியிருந்தது. உடனிருந்த தொல்லியல்துறைக் காவலர் தன்னையே ஏணியாக்கிக் கொண்டார். அவருடைய உதவியைப் போற்றிப் பணம் கொடுக்க முற்பட்டபோது, 'ஆய்விற்காகச் செய்த உதவி. பணம் பெறுவது தகாது' எனக்கூறி அந்த ஏழை மறுத்தார். பணம்கொடுக்க முற்பட்ட நான் கூனிக் குறுகிப்போனேன்.

இப்படிப் பணம் கொடுக்க முற்பட்டு நான் வெட்கப்பட்டுத் தலை தாழ்ந்த இடங்கள் பல. அவற்றைப் பிறகு பேசுவோம். 'மனிதம்' வாழ்கிறது வாருணி. எங்கோ, எப்படியோ, எல்லாத் தாக்குதல்களுக்கும் தப்பி இந்த மனிதம், இன்றளவும் இது போன்ற இனியவர்களின் வடிவில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. எதுவுமே செய்யாமல், எப்படிப் பணம் பறிக்கலாம் என்பதைச் சிலர் கலையாகவே பயின்று வாழும் கோயில் வளாகங்களில், செய்ய முடியாதவற்றை எல்லாம் மிக எளிதாகச் செய்து முடித்துவிட்டு, எதுவுமே செய்யாதது போல இனிய புன்னகையுடன் ஒதுங்கிக்கொள்ளும் இவர்கள்தான் என் போன்ற ஆய்வாளர்களுக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள்.

திரு. ஆறுமுகம் பள்ளிக் கல்வியினர்தான். என்றாலும், அநுபவக் கல்வியில் பெரியவர். எந்தச் சிக்கலான சூழ்நிலையையும் மிக எளிதாக, இயல்பாக நேர்கொள்வார். ஏறத்தாழப் பத்தாண்டுகள் என்னோடு அவர் துணைவந்தார். அந்தப் பத்தாண்டு ஆய்வு வாழ்க்கையில் அவர் வழி நான் கற்றவையும் பெற்றவையும் ஏராளம். ஆய்வுசெய்கையில் கேள்வி கேட்க வருபவர்களை, தகவல் அறிய விழைபவர்களை, இடையூறாக இருப்பவர்களை அவர் கையாளும் விதத்தை நாளும் இரசிக்கலாம். கோயில் ஆய்வு செய்யும்போது இது போன்ற இடையீட்டாளர்களால் நம் நேரமும் உழைப்பும் பெரிதும் வீணாகும். தொடக்கக் காலங்களில் தொடர்பற்றுப் பேச்சு வளர்க்கும் இத்தகு இடையீட்டாளர்களிடம் நான் இழந்த விலைமதிப்பற்ற காலம் ஈடுசெய்ய முடியாதது. இதைக் காலப்போக்கில் உணர்ந்த ஆறுமுகம் அதற்குப் பிறகு யாரும் என்னை நெருங்கித் தொல்லை தராதபடி பார்த்துக்கொண்டார்.

ஒரு கண்கட்டு வித்தைக்காரர் தம் முன் கூடியிருக்கும் கூட்டத்தை வயப்படுத்துவது போல் வருவாரையெல்லாம் தம்மைச் சுற்றி அமர வைத்துக்கொண்டு, அவரவர் தொழில், ஊர் விவகாரம், கோயில் நடப்புகள் என அனைத்துத் தகவல்களையும் பெற்றுக்கொள்வார். கோயில் பற்றிய கேள்விகளுக்குத் தமக்குத் தெரிந்தவாறு, அறிந்த செய்திகளைப் பகிர்ந்துகொள்வார். என துணைவி படம் வரைவதால், கூட்டம் அவரைப் பின்தொடர முயற்சிக்கும். அவர் எதற்காகப் படம் போடுகிறார், எதை வரைகிறார் என்றெல்லாம் அவர்களுக்கு இவரே விளக்கிக் கூட்டத்தைத் தடுத்தாட்கொள்வார். அவரிடம் ஒலிப்பதிவு கருவி, ஒளிப்படக் கருவி ஆகியன இருந்தமையால், கூட்டத்தைப் பேசவிட்டுப் பதிவுசெய்வது போலவும் சிறுவர்களைப் படமெடுப்பது போலவும் நாடகம் ஆடுவார். அவரிடம் பதிவு செய்தவர்களும் படமெடுத்துக்கொண்டவர்களும் தமிழ்நாடெங்கிலும் உள்ளார்கள். ஆனால், அவர்களில் ஒருவர்கூட அந்தப் பதிவையோ, படத்தையோ கேட்டதுமில்லை, பார்த்துமில்லை.

வாருணி, 'இது ஏமாற்று இல்லையா?' என்று நீ கேட்கலாம். கோயில்களில் ஆய்வு செய்யச் சென்றால்தான் இத்தகு இடையூறுகளின் முழுவீச்சையும் நீ உணரமுடியும். கோயில்களில் ஆய்வுசெய்வது மிகத் துன்பமான அநுபவம். மருத்துவமனைக்கு விடுமுறை விட்டு, பெரும் பொருள் செலவில் பயணம் மேற்கொண்டு ஆய்வுசெய்ய வரும்போது ஒவ்வொரு மணித்துளியும் வைரம்! சிந்தனைத் தொடரை, எண்ண ஒழுங்கை, பார்வையின் கூர்மையை இத்தகு இடையூறுகள் சிதைத்துவிடும். போகின்ற போக்கில் ஆய்வு செய்வாருக்கு இதைப் பற்றிய கவலைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஆய்வைத் தவமாக நினைத்துச் செய்வாருக்கு ஒரு சிறு தொல்லைகூடப் பேரிடர்தான். தகுதிசான்ற அய்யங்கள், நியாயமான கேள்விகள் இவற்றை எதிர்கொள்வதில் எனக்கு எப்போதுமே தயக்கம் இருந்ததில்லை. 'தலவரலாறு' என்ற பெயரில் குப்பைகளையெல்லாம் நம் முன் கொட்டும்போது, அது தொடர்பாகப் பேச்சு வளர்க்கும்போது பொறுமை காப்பது மிகத் துன்பம்.

சில இடங்களில் பாதுகாப்புக்கூடக் கேள்விக்குறியாவதுண்டு. பெரும்பாலும் கோயில்கள் ஆளரவமற்று இருப்பதால், மகளிர் ஆய்வர்களுக்குப் பல தொல்லைகள் நேர வாய்ப்புண்டு. என்னுடன் வந்த ஆய்வாளர்கள் இவை பற்றியெல்லாம் அறிவுறுத்தப் பட்டிருந்தமையால், சிக்கலகளைச் சந்தித்தாலும் துணிவுடன் எதிர்கொள்ளமுடிந்தது. குடிகாரர்கள், கிண்டல் பேச்சுகள், 'கொடும்' பார்வையினர் என இவர்கள் பலரகம். ஆறுமுகம் உடன்வந்தவரையில், இவர்கள் தொல்லைக்கெல்லாம் இடமில்லாதவாறு பார்த்துக்கொண்டார்.

ஆய்வு நாட்களில், மதிய உணவின் போதுதான் நானும் துணைவியும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வோம். அதுவரை அவரவர் வேலையில் முனைப்பாக இருப்போம். அய்யப்பாடுகள், திருத்தங்கள், முடிவுகள் என எல்லாமே மதிய உணவிற்குப் பிறகுதான். அது போலவே, கோயிலை விட்டுப் புறப்படுவதற்கு முன்பும் வளாகத்தில் அமர்ந்து அன்றைய பணிகளை விவாதித்துக் கொள்வோம். ஒவ்வொரு கோயிலிலும் ஏராளமான அய்யங்கள் இருக்கும். ஆனால், அந்த அய்யங்களைத் தீர்ப்பார்தான் இருக்கமாட்டார்கள். பல சிற்பங்களை, அவை யாரை உணர்த்துகின்றன, எக்காலத்தன, எத்தகு அமைப்பில் உள்ளன என்பவையேதும் அறியாத நிலையிலேயே என தொடக்கக் கட்டுரைகளில் வண்ணித்திருக்கிறேன்.

சிறபங்களின் ஆடை, அணிகலன்களைக் கூர்ந்து நோக்கும் பார்வையை எனக்கு உண்டாக்கியவர் என் வாழ்வரசியே. இந்தப் பார்வையும் இதன்வழி நான் மேற்கொண்ட பதிவுகளும் எனக்குப் பல அரிய தரவுகளைத் தந்தன. ஏறத்தாழ ஓராண்டிற்குள் பழஞ்சிற்பங்கள், நாயக்கர் காலச் சிற்பங்கள் இவற்றைப் பிரித்தறியக் கற்றுக்கொண்டேன். என்றாலும், சிற்பவியலில் தெளிவு தேவைப்பட்டது. அப்போதுதான் சிற்பி திரு. வை. கணபதி, 'சிற்பச் செந்நூல்' என்ற பெயரில் ஒரு நூல் வெளியிட்டிருப்பதை அறியமுடிந்தது. இந்த நூலைப் பெறுவது அத்தனை எளிதாக இல்லை. சிராப்பள்ளியின் எந்தக் கல்லூரி நூலகத்திலும் இந்நூல் இல்லை. வழக்கம் போல அரசுவின் உதவியை நாடினேன். அவரும் அரும்பாடுபட்டு முயன்று அந்த நூலைக் கண்டறிந்து எனக்கு வாங்கி அனுப்பினார். இது போன்ற தேவைகளை அரசு நிறைவேற்றாது போயிருந்தால் இந்தத் துறையில் நான் வளர்ந்திருக்கவே முடியாது. என் ஆய்வு வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த கற்பகத் தரு அவர். கேட்டதைக் கொடுத்தவர். கேட்ட போதெல்லாம் கொடுத்தவர்.

சிற்பச் செந்நூல் 1978ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. முப்பத்தாறு இயல்களில் அமைந்த இந்த நூல் படிம வகைகளைப் பற்றியும், அவற்றின் தலைக்கோலங்கள், அணிகலன்கள், ஆடைகள், கருக்கணிகள், கை அமைதிகள், இருக்கை அமைதிகள், நிற்கும் கோலங்கள் இவை பற்றியும் மிக விரிவான தரவுகளைக் கொண்டுள்ளது. 321 பக்க அளவில் அமைந்திருக்கும் இந்த நூலைக் குறைந்தது பத்து முறையாவ்து படித்திருப்பேன். முதல் வாசிப்பில் பல இடங்களில் விளங்கவில்லை. மறு வாசிப்புகள் பயன் தந்தன. முக்கியமான இயல்களை ஒளியச்சுச் செய்து களஆய்வுகளின்போது கொண்டு சென்று, கோயில் சிற்பங்களை அவ்வியல்களின் துணையோடு ஆராய்ந்த போதுதான் முழு விளக்கமும் கிடைத்தது. சிற்பவியலில் ஈடுபட விழைவாருக்கும், கோயிற் சிற்பங்களைப் பற்றிய விரிவான அறிமுகம் பெற விழைவாருக்கும் சிற்பச் செந்நூல் மிக அடிப்படையான ஒரு நூல். திரு. டி. ஏ. கோபிநாதராவின், 'Elements of Hindu Iconography' என்ற நூலைத் தூய வளனார் கல்லூரி நூலகத்தில் பார்த்தேன். அந்நூலும் சிறந்த வழிகாட்டியாகும். எனினும், இவ்விரண்டு நூல்களையுமே அடிப்படை நூல்களாக மட்டுமே கொள்ளமுடியும். இவற்றையும் மீறிய பல நுணுக்கங்களைக் கோயிற் சிற்பங்கள் கொண்டுள்ளன. சிற்பங்களின் கை அமைதிகளில் எனக்கேற்பட்ட பல அய்யங்களை இந்த இரண்டு நூல்களாலுமே தீர்த்து வைக்கக் கூடவில்லை. கை அமைதிகள், உடல்நிலைகள், பாத நிலைகள், ஆடல் தோற்றங்கள் பற்றிய தெளிவான கண்ணோட்டத்தை நாட்டிய சாத்திரமே தந்தது. ஆனால், அதற்குப் பல மாதங்கள் காத்திருக்கச் செய்தது காலம்.

மாடக்கோயில் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த காலத்துத் தாம் உறுப்பினராக இருந்த திருவரங்கம் அரிமா சங்கத்தில் என்னை உறுப்பினராக்கினார் மருத்துவர் சி. கேசவராஜ். எந்த அமைப்பில் இருந்தாலும் அந்த அமைப்பின் கொள்கைகளுக்காக உழைப்பது என் இயல்பு. அரிமா சங்கத்தின் கொள்கைகளைத் திரு. கேசவராஜ் விளக்கியபோது எனக்குப் பிடித்திருந்தது. அதனால்தான் சேர்ந்தேன். அந்த அமைப்பில் இருந்த முதல் ஆண்டில் நான் புதியவன் என்பதால் எந்தப் பொறுப்பும் தராமல் இருந்தார்கள். வாரந்தோறும் நடக்கும் கூட்டங்களுக்கு மட்டும் சென்றுவந்தேன். அந்தக் கூட்டங்களுள் பெரும்பான்மையானவை சுவையற்றவையாய் இருந்தன. இருந்தாலும் தொடர்ந்து சென்றேன்.

இரண்டாம் ஆண்டில், எனனைக் காது, மூக்கு, தொண்டை நலம் காக்கும் திட்டமொன்றின் அமைப்பாளராகப் போட்டார்கள். எனக்கு அது ஏற்புடையதாக இல்லை. நான் கண் மருத்துவன் என்பதை உணர்த்தி, அந்தத் திட்டத்திலிருந்து விலகிக் கொண்டேன். பொதுநலத் திட்டத்தில் உறுப்பினராக்கினார்கள். ஏற்றுக்கொண்டேன். அத்திட்டத்தின் சார்பில் நடந்த ஒரு கூட்டத்தில் நானும் பேசவேண்டியிருந்தது. அந்தக் கூட்ட நிகழ்வை ஒலிப்பதிவு செய்யச் சிராப்பள்ளி வானொலி நிலையத்திலிருந்து திரு. மீ. அரங்கசாமி வந்திருந்தார். வானொலியில் அறிவியல், மருத்துவம், சார்ந்த நிகழ்ச்சிக்கு அவர் பொறுப்பாளராக இருந்தார். என் உரையைப் பதிவு செய்த அவர், நிகழ்ச்சி முடிந்ததும் என்னை அணுகி, என் உரையைப் பாராட்டி மகிழ்ந்தார்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. திருச்சிராப்பள்ளி வானொலியில் கண்மருத்துவம் பற்றி இரண்டு பொழிவுகள் நிகழ்த்தக் கேட்டிருந்தார். ஒப்புக்கொண்டு உரை தயாரித்துச் சென்றிருந்தேன். குரல் சோதனை முடிந்ததும் பதிவு நிகழ்ந்தது. எந்தத் தடங்கலும் இல்லாமல் உரைகள் பதிவானதில் அவருக்கு மெத்த மகிழ்ச்சி. என் குரல் வளத்திலும் செய்திச் செறிவிலும் அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அவருடைய அரவணைப்பின் காரணமாகத் தொடர்ந்து இருபதாண்டுகள் வானொலியில் பேச வாய்த்தது. ஒவ்வோர் ஆண்டும் பல பொழிவுகள் அமைந்தன. இப்பொழிவுகள், சிராப்பள்ளி வானொலி கேட்கப்பட்ட மாவட்டங்களில் எல்லாம் என்னைக் கொண்டு சேர்த்தன. அதனால் எனக்குப் பெரும் பயன் விளைந்தது.

சிக்கல் சிங்காரவேலர் கோயிலை ஆய்வுசெய்யச் சென்றிருந்தபோது கோயில் அலுவலகத்தில் இருந்தவர்கள் செயல் அலுவலரின் அநுமதியைப் பெறவேண்டும் என்றனர். செயல் அலுவலர் வீட்டில் இருப்பதாகவும் பத்து மணிக்குத்தான் அலுவலகம் வருவாரென்றும் அதுவரை காத்திருக்குமாறும் கூறினர். அப்போது காலை மணி எட்டு. இரண்டு மணி நேரம் வீணாவதை விரும்பாத நான், அவர்கள் அநுமதியுடன் செயல் அலுவலர் இல்லம் சென்றேன். அவர் என் பெயரைக் கேட்டதுமே எழுந்து வரவேற்றார். 'உங்கள் குரலை பலமுறை வானொலியில் கேட்டிருக்கிறேன். தெளிவாகவும் வழிகாட்டலாகவும் பேசுகிறீர்கள். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. என்ன வேண்டும் சொல்லுங்கள்' என்றார். அந்த அன்பான வரவேற்பு எனனை மகிழ்வித்தது. சிக்கல் கோயிலை நன்கு ஆய்வுசெய்ய அவர் துணையிருந்தார். சிராப்பள்ளித் திரும்பியதும் நண்பர் திரு. மீ. அரங்கசாமிக்குத் தொலைப்பேசி செய்து செய்தியைக் கூறி அவருக்கு நன்றி கூறினேன். அவரால்தான் அன்று என் பணி எளிதானது எனறு கூறியபோது, அவரும் மகிழ்ந்தார்.

கண்டியூர் வீரட்டானேசுவரர் கோயில் ஆய்வுக்கு மதிய வேளையொன்றில் நான், வாணி, நளினி சென்றிருந்தோம். கோயில் மெய்க்காவல் கதவை உட்புறம் பூட்டிக்கொண்டு படுத்திருந்தார். கோயிற் கதவுகளின் இடைவெளி வழியே அவரைக் காணமுடிந்தது. எங்களைப் போல் இரண்டு குடும்பத்தார் கோயிலைக் காண அங்குக் காத்திருந்தனர். நான், அவரை எழுப்புமாறு போல, இரண்டு மூன்று முறை குரல் கொடுத்தேன். மெய்க்காவல் எழுந்துவந்தார். அப்போது அருகிலிருந்த குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன், 'ந்ீங்கள் டாக்டர் கலைக்கோவனா?' என்றார். எனக்கு வியப்பு மேலிட்டது. 'ஆமாம்' என்றேன். 'என்னை எப்படிக் கண்டுபிடித்தாய்?' எனறு கேட்டபோது, 'உங்கள் குரலைத்தான் வானொலியில் நிறைய கேட்டிருக்கிறோமே, உங்கள் பேச்சு எனக்குப் பிடிக்கும்' என்றார். எனக்கு ஒரு நிமிடம் எதுவும் புரியவில்லை. வானொலியின் மகிமையை, முழுவீச்சை அன்றுதான் முழுவதுமாய் உணர்ந்தேன்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 1991 பிப்ருவரி 2 - 4ல் கல்வெட்டுத் துறையின் சார்பில் பிராமி கருத்தரங்கம் ஒன்று நிகழ்ந்தது. அக்கருத்தரங்கில் நானும் கட்டுரை வாசித்தேன். இலங்கையில் உள்ள பிராமி கல்வெட்டுகளின் மொழி குறித்து மாலத்தீவுகளில் பணியாற்றிக்கொண்டிருந்த அறிஞர் பொன்னம்பலம் இரகுபதி கட்டுரை வாசித்தார். அந்தக் கட்டுரை எனக்குப் பிடித்திருந்தது. அவரை நான் அறியேன். என்றாலும், அக்கட்டுரையில் ஒரு படி பெற விரும்பினேன். அவரை அணுகி என் ஆர்வத்தைத் தெரிவித்தேன். என்னை அன்புடன் எதிர்கொண்டவர், 'உங்களுக்குத்தான் என்னைத் தெரியாது. ஆனால், சிராப்பள்ளி வானொலி வழி உங்களை நான் நன்கறிவேன். அருமையான பொழிவுகள். நிறைய கேட்டிருக்கிறேன்' என்று கூறி, என் பொழிவுகள் பலவற்றை நினைவுகூர்ந்து பேசினார். ஆய்வுக்கட்டுரை முழுவதையும், ஏறத்தாழ 80 பக்கங்கள், எனக்கு ஒளியச்சுச் செய்தளித்தார். அன்றும் வானொலியின் வீச்சு எனனை வியப்படைய வைத்தது.

சிராப்பள்ளி வானொலியில் திரு. விஜய திருவேங்கடம் தமிழப் பொழிவுகளுக்கான நிகழச்சிப் பொறுப்பாளராக இருந்தார். என் அறிவியல் பொழிவுகளைக் கேட்க நேர்ந்த அவர், எனனைப் பொதுத் தலைப்பொன்றின் கீழ்ப் பேசுமாறு அழைத்திருந்தார். 'திரைப்படங்களும் தேசிய உணர்வும்' தொடர்பான தலைப்பு அது. தயக்கத்துடன் அவர் அறையை அடைந்தேன். துணிவூட்டிய அவர், தாம் எதிர்பார்ப்பது பற்றிக் கூறினார். ஆங்கிலப் பேராசிரியர் ஆல்பர்ட், தமிழ்ப் பேராசிரியர் பொன்மதி, நான் உரையாடினோம். அரைமணி நேரக் கலந்துரையாடல். இயல்பாகவும் நன்றாகவும் கருத்துவளத்துடனும் அமைந்த அந்நிகழ்ச்சி குறித்து விஜய திருவேங்கடம் மிகவும் மகிழ்ந்தார். அதுதான் என் முதல் பொது உரை. அதன் வழிச் சிராப்பள்ளி வானொலியின் செல்லப்பிள்ளையானேன். திரு. தே. சந்திரன், திரு. அ. அருளப்பன், திரு. சி. சுந்தரமூர்த்தி, திரு. சீனிவாசராகவன், திரு. இளசை சுந்தரம் என அருமையான நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள் எனக்கு அமைந்தார்கள். அவர்களுடன் எனக்கு நேர்ந்த அநுபவங்கள் ஒவ்வொன்றும் சுவையானவை.

திரு. தே. சந்திரன் இனிமையான மனிதர். தமிழார்வலர். நல்ல நிகழச்சிகளை வானொலியில் வடிவமைத்துத் தரவேண்டும் என்பதைக் குறிக்கோளாய்க் கொண்டிருந்தார். அவருடைய 'இலக்கிய ஏடு' நிகழ்ச்சி வானொலியில் புகழ்பெற்ற நிகழ்ச்சியாய் திங்கட்கிழமை இரவுகளில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த காலம் அது. திரு. விஜய திருவேங்கடத்தின் வாயிலாய் அமைந்த கலந்துரையாடல், என்னைச் சந்திரனுக்கு அறிமுகப்படுத்தியது. இலக்கிய ஏட்டில் ஒரு நிகழ்ச்சி நான் செய்ய வேண்டுமென விழைந்தார். 'இறைக்கோயில்களும் இலக்கியங்களும்' என்ற தலைப்பில் பத்து நிமிட உரைக்கு வாய்ப்பளித்தார். நானும் அவரும் கலந்து பேசியே உரையை வடிவமைத்தோம். அவருடைய ஊடக அநுபவம் என்னை வளப்படுத்தியது. அந்தப் பொழிவு அருமையாக அமைந்ததால், திரு. சந்திரன் எனனைத் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள ஆர்வம் காட்டினார்.

நான் மாடக்கோயில்களில் ஆய்வுசெய்து கொண்டிருப்பது பற்றிக் கூறியதால், அது பற்றி ஓர் உரை நிகழத்தக் கேட்டார். 'மலைக்கவைக்கும் மாடக்கோயில்கள்' என்ற தலைப்பில் உரை அமைந்தது. இவ்வுரை வாய்ப்புகளால் சந்திரனுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பமைந்தது. சந்திரனின் துணைவியார் பெயர் நிலா. அவர்களுக்கு இரண்டு மகன்கள். ஒரு மகள். திரு.சந்திரன் தற்போது சென்னைத் தொலைக்காட்சியில் தலைமைப் பொறுப்பில் உள்ளார். உழைப்பும் உண்மைத்தன்மையும் நிரம்பிய அவரும் நானும் சேர்ந்து சிராப்பள்ளி வானொலியில் பல அருமையான நிகழச்சிகளை அளித்தோம்.

திட்டமிடும்போதுகூட யோசனைகள் கேட்கும் அளவிற்குப் பண்பாளர் திரு. சந்திரன். அவருடன் இணைந்து நான் நிகழ்த்திய அனைத்து நிகழ்ச்சிகளுமே சிறப்பானவை என்றாலும், என்றும் மறக்கமுடியாத நிகழச்சிகள் சிலவுண்டு. அவற்றுள்ளும் குறிப்பிடத்தக்கது, 'சுவடழிந்த கோயில்கள்' என்ற தலைப்பில் அமைந்த என் உரை. கல்வெட்டுகளில் மட்டுமே வாழும் தமிழ்நாட்டுத் திருக்கோயில்களைக் கண்டறிந்து அவற்றின் பிறப்பை, சிறப்பை, மறைவைத் தொகுத்துக் கூறிய அந்த உரை அரை மணிநேர வானொலி உரையாக அமைந்தது. நூற்றுக்கணக்கான வானொலி உரைகளை நான் நிகழத்தியிருந்தபோதும் என் உள்ளத்தில் நிறைந்திருக்கும் உரைகள் சிலவுண்டு. அவற்றுள் 'சுவடழிந்த கோயில்கள்' உரையும் ஒன்று. மக்களின் அலட்சியம் காரணமாக எத்தனை உன்னதமான கோயில்களை இந்த மண் இழந்திருக்கிறது என்பதை நினைக்கும்போதெல்லாம் உள்ளம் வலிக்கிறது.

தமிழ்நாட்டு மக்களில் பலர் இல்லாததைப் பற்றி ஏராளமாகப் பேசுவார்கள். இருப்பதைக் காப்பாற்றக் கருத்துக்கொள்ள மாட்டார்கள். கற்பனைகளிலும் கதைகளிலும் ஆர்வம் காட்டும் இந்த உணர்ச்சிப் பிழம்புகளுக்கு உண்மைகள் கசக்கும். அந்த உண்மைகளைச் சொல்பவர்களை அறவே பிடிக்காது. அறியப்படாத பள்ளிப்படைகளுக்குப் பல்லக்குத் தூக்கும் இவர்களுக்கு இருக்கும் பள்ளிப்படைக் கோயில்களைக் காப்பாற்றும் எண்ணமோ, முயற்சியோ கிஞ்சித்தும் இல்லை. பஞ்சவன் மாதேவியின் கண்ணெதிர்ப் பள்ளிப்படை நலிந்துகொண்டிருப்பதைக் கண்டும் அதைக் காப்பாற்றச் சுண்டுவிரலைக்கூட உயர்த்தாத இந்த உள்ளங்கள், உடையாளூரில் அறியப்படாத ஒரு பள்ளிப்படையை அறியப்பட்டது போல் வெளிச்சமிட எவ்வளவு துடித்துப் பணியாற்றுகின்றனர் என்பதை நினைக்கும்போது வருந்தாமல் இருக்கமுடியவில்லை. வரலாற்றுக் கண்ணோட்டமே இல்லாத இந்த உணர்வுபூர்வமான வெளிப்பாடுகள்தான் தமிழ்ப் பண்பாட்டின் நலப்படுத்தமுடியாத நோய். எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் 'மெய்ப்பொருள்' காணவிழையாத இவர்களால்தான் தமிழநாட்டு வரலாறு தலைதூக்காமல் வீழந்து கிடக்கிறது.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.