![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 36
![]() இதழ் 36 [ ஜூன் 16 - ஜூலை 15, 2007 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
"பொன்னியின் செல்வன் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட தீம் பார்க். கட்டணம் செலுத்தினால், கதையில் நாம் விரும்பும் பாத்திரமாக நம்மை மாற்றி உள்ளே அனுப்பி வைப்பார்கள். 24 மணி நேரம் நாம் அந்த உலகத்தில் அந்தப் பாத்திரமாக வாழ்ந்து விட்டு வரலாம். தமிழர்களின் பொழுது போக்கிற்காக உருவாக்கப்பட்டுள்ள மூன்று தீம் பார்க்குகளில் இது ஒன்று. (கொஞ்சம் குஜால் பேர்வழிகளுக்கானது 'கடல்புறா தீம் பார்க்'. கொஞ்சம் வசதி குறைந்தவர்களுக்கானது 'கன்னித் தீவு தீம் பார்க்'.)"
மீனாட்சிசங்கரின் இந்த வரிகளைப் படிக்கும்போதே எல்லையில்லாத கற்பனை சுகம் கண்முன் விரிகிறதே! உண்மையிலேயே இப்படியொரு பூங்கா இருந்தால் எப்படி இருக்கும்? தமிழர்களுக்குக் கிடைக்காத இத்தகைய பேறு ஜப்பானியர்களுக்கு வாய்த்திருக்கிறது. வாழ்க்கையை அனுபவிக்கவென்றே பிறந்திருக்கும் இவர்களை மகிழ்விக்க எத்தனையெத்தனை விதமான பூங்காக்கள், சுற்றுலாத் தலங்கள்!! சராசரி இந்தியனால் அனுபவிக்க இயலாத எத்தனையோ இன்பங்களை ஜப்பானில் பிறந்தவர்கள் என்ற ஒரே காரணத்தால் இவர்களுக்கு இது சாத்தியமாகியிருக்கிறது. இதுபோன்ற வித்தியாசங்களை நினைத்து நினைத்துப் பார்த்தால் ஆற்றாமையே மிஞ்சுகிறது. இந்தியாவில் சினிமாவையும் கிரிக்கெட்டையும் மெகாசீரியலையும் பொழுதுபோக்காகக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் பொழுது போவதே தெரியாமல் போக்க முடியும். மற்றவர்கள் தங்கள் விருப்பமான படி பொழுதைப் போக்குவதற்கு மிகவும் சிரமப்படவேண்டும். அதிலும் இந்த வரலாற்றின் மீது தப்பித்தவறி ஆர்வம் வந்துவிட்டால், சோழர்காலக் கோயில் சுவர்களில் இருக்கும் கல்வெட்டுகளைப் பார்த்துக் கண்ணைச் சுருக்கி விரித்து ஏற்படும் வலியினால் கண் மருத்துவரிடம் விரைய வேண்டியதுதான். விருப்பமுள்ளவர்கள் எங்களைப்போல் திருச்சியிலிருக்கும் கண் மருத்துவரிடம் (?!) கூடச் செல்லலாம். ஆனால் ஜப்பானியர்களுக்கு அந்தக் குறையே இல்லை. எத்தகைய பொழுதுபோக்காக இருந்தாலும் அதற்கென்று ஒரு இடம், அதே விருப்பமுடைய சில மக்கள், ஒரு இணையதளம், ஒரு அருங்காட்சியகம் என எல்லா வசதிகளும் உண்டு. சாதாரணப் பொழுதுபோக்குதான் என்றில்லை. கொஞ்சம் வசதி படைத்தவராக இருந்து, விண்வெளியில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை கொண்டிருந்தால்கூட, Space Travel Dreamers Association என்ற அமைப்பில் சேர்ந்து தங்கள் வாழ்நாள் முழுக்க இதுபற்றிய விவரங்களைத் தோண்டித் துருவிக் கொண்டிருக்கலாம். ஒன்றுமே செய்யாமல் நேரத்தை ஓட்ட விரும்புபவர்களும் கூடத் தனிமையில் தவிக்காமல், ஒத்த விருப்பத்தையுடைய 'அய்த்தே இரு ஹித்தோ கிளப்' அதாவது 'சும்மா இருப்போர் சங்க'த்தில் சேர்ந்து பயன்பெறலாம். நிலைமை இப்படியிருக்க, வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்களுக்கா கவலை? நானூறு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஷோகுன் வம்சத்தின் கீழிருந்த ஒரு ஜப்பானிய கிராமத்தை அப்படியே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அந்தக்கால சமுராய்களையும் கெய்ஷாக்களையும் கூடச் சந்திக்கலாம். சமுராய்கள் தொடர்பான திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களையும் இங்குதான் படமாக்குகின்றனர். மேலோட்டமாகப் பார்த்தால் சென்னையிலிருக்கும் எம்.ஜி.ஆர் திரைப்பட நகர் போலத்தான். ஆனால் இங்கு வரலாற்றுப் படங்களுக்கு மட்டுமே அனுமதி. செயற்கைத்தன்மை சிறிதும் உறுத்தாமல், உண்மையான கிராமம் போலவே காட்சியளிக்கிறது. என்னைப்போலவே வரலாற்றில் ஆர்வமுள்ள ஒரு ஜப்பானிய நண்பரிடம் சமுராய்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோதுதான் இதைப்பற்றிச் சொன்னார். இதுபோல் ஜப்பான் முழுவதும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றனவாம். எனவே, கியோட்டோவில் இருக்கும் கிராமத்துக்குச் செல்ல முடிவு செய்தோம். இதுபற்றிப் பேசிய இரண்டு நாட்களுக்குள்ளேயே ஒரு ஞாயிற்றுக்கிழமை வர, அன்றே சென்றுவிட்டோம். இப்போது இருக்கும் ஜப்பானை மாதிரியாகக் கொண்டு, ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய கிராமத்தைக் கற்பனை செய்து கொண்டிருந்தேன். ஆனால் உள்ளே நுழைந்ததும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். எதிர்பார்த்தபடி இல்லாமல் முற்றிலும் வேறாக மட்டும் இருந்திருந்தால்கூட அவ்வளவு அதிர்ச்சியாக இருந்திருக்காது. அச்சு அசலாக அப்படியே தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தின் அத்தனை அம்சங்களையும் கொண்டிருந்ததுதான். ஒருமுறை நுழைவாயிலுக்கு மீண்டும் வந்து, தமிழகக் கிராமமா, ஜப்பானியக் கிராமமா என்ற சந்தேகத்தைப் போக்கிக் கொண்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!! இரண்டுக்கும் பல விஷயங்கள் பொதுவாக இருந்தன. ![]() வீடுகள் மரத்தால் செய்யப்படாமல், செங்கல், சிமெண்டால் கட்டப்பட்டிருந்தால், நுழைவாயிலுக்குச் சென்று உறுதிப்படுத்தியிருக்கக்கூட மாட்டேன். இங்கு வீடு கட்டும் முறையே முற்றிலும் வேறானது. அஸ்திவாரம் மட்டும் கான்கிரீட்டால் கட்டிவிட்டு, அதற்குமேல் இரும்பு ஃப்ரேம்களை வைத்து, மரப்பலகைகளால் மூடிவிடுகிறார்கள். கட்டுமானச் செலவு சற்று அதிகம்தான் (ஒரு சதுர அடிக்கு சுமார் 6000 ரூபாய்) என்றாலும் வெகுசீக்கிரமாகக் கட்டி முடித்து விடலாம். எங்கள் அலுவலகத்தின் விரிவாக்கத்தின்போது இதைக் கண்கூடாகக் காணமுடிந்தது. சுமார் 200 பேர் அமரக்கூடிய கணிணி அலுவலகத்தை எண்ணி நாற்பதே நாட்களில் கட்டிமுடித்துவிட்டார்கள். Plan approval வாங்கிய 40வது நாள் திறப்புவிழா நடந்துவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இப்போதுதான் இரும்பு ஃப்ரேம்களைப் பயன்படுத்துகிறார்கள் என்றாலும், சில நூற்றாண்டுகளுக்கு முன்வரை மரச்சட்டங்களையே இதற்கும் உபயோகப் படுத்தினர். இன்றும் பழமையைப் பாதுகாக்க விரும்பும் மக்கள் முற்றிலும் மரத்தாலான வீடுகளைக் கட்டிக் கொள்கிறார்கள். கீழே உள்ள படத்தைப்போல. ![]() ![]() குளியல் தொட்டிகூட மரத்தாலானதுதான். இன்னொரு வியப்பான செய்தி என்ன தெரியுமா? முன்பு நம்மூரைப் போலவே வீட்டுக்குவீடு கிணறு இருந்ததுதான். ![]() உருளையைத் தவிரக் கைப்பிடிச் சுவரும் வாளியும்கூட மரம்தானா? அடப்போங்கப்பா!!! இப்படியே வியந்து வியந்து சலிப்புதான் ஏற்பட்டது. சரி, 'எங்கெங்கு காணினும் மரங்களடா' என்பதுபோல் அதிகளவு மரத்தைப் பயன்படுத்தியும், எப்படி இன்னும் நாடு பசுமையாகவே இருக்கிறது? மழைவளம் குன்றாமல் இருக்கிறது? இதற்கான ஒரு தீர்வுதான் 'போன்சாய்' எனப்படும் மரக்குட்டிகள் (?!). மழைக்குத்தேவை நிறைய இலைகள் நிறைந்த தாவரம்தானே? அது மிகப்பெரிய மரமாகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லையே!! என்ற Out of box thinking தான். பாலங்களும் கூட மரத்தாலானவைதான். ![]() ![]() சரி! முக்கியமான விஷயத்துக்கு வருவோம். இந்த சமுராய் கிராமத்தில் நம் ஊரைப்போலவே அப்படி என்னதான் இருந்தது? கீழே உள்ள படங்களைப் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்களேன். ![]() இன்றைய சீராக ஒழுங்குபடுத்தப்பட்ட காய்கறி அங்காடிகள் எங்கே? கோயம்பேடு மார்க்கெட்டை அப்படியே உரித்து வைத்திருக்கும் இந்தப் பழங்காலக் கடை எங்கே? ![]() இதற்கு விளக்கம் தேவையா என்ன? ஆனால் கால்நடைகளை வீட்டில் வளர்க்கும் வழக்கமில்லாத இவர்கள் இந்த வைக்கோலையும் மாட்டுவண்டியையும் எதற்காகப் பயன்படுத்தினார்கள் என்றுதான் தெரியவில்லை. ![]() நம் இலக்கியங்களில் திணைப்புனங்களையும் இன்றைக்கு சோளக்கொல்லைகளிலும் காவலுக்கு இருப்போர் பயன்படுத்தும் பரண் போலில்லை? குளிர்காலங்களில் அறைக்கு நடுவிலிருக்கும் அடுப்பில் நெருப்பை மூட்டிவிட்டு, சுற்றிலும் படுக்கைகளைக் கட்டித் தொங்கவிட்டுப் படுத்துக் கொள்வார்களாம். அப்போது வாழ்ந்த மனிதர்கள் எப்படி இருந்தார்கள்? நிச்சயம் இன்றுபோல் பேண்ட், சட்டையுடன் இல்லை. ஆண்கள் யுகத்தா எனப்படும் உடையுடனும், பெண்கள் கிமோனோ எனப்படும் பாரம்பரிய உடையுடனும் நடமாடுகிறார்கள். ![]() ![]() இந்த கிமோனோவை அணிவது நம் புடைவையைவிடக் கடினமானது. எல்லோருக்கும் இது தெரிவதில்லை. இதற்கென்று தனியாகப் பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கென்று பயிற்சிகளும் படிப்புகளும் இருக்கின்றன. இந்தநிலை நம் சேலைக்கும் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒவ்வொரு ஜப்பானியப் பெண்ணும் தனது 20வது பிறந்தநாளன்று இதைக் கட்டாயம் அணிந்தாகவேண்டும். அன்று நடக்கும் சடங்கில் கலந்துகொள்ளும் பெரும்பாலான பெண்கள் கிமோனோ அணிந்து கோயிலுக்குச் சென்று திரும்பி வருவார்கள். அந்தத் தெருவே கண்கொள்ளாக் காட்சியாக இருக்குமாம். ஆனால் இதன் எண்ணிக்கை இன்று படிப்படியாகக் குறைந்து வருகிறதாம். ![]() கியோட்டோவிலிருந்த ஒரு பயிற்சியாளர் என் மனைவிக்கும் அம்மாவுக்கும் கிமோனோவை அணிவிக்க சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலானது. ![]() ஆண்களுக்கு வழக்கம்போல இந்தப் பிரச்சினைகளெல்லாம் இல்லை. 'கவுன்' போல இருக்கும் ஒரு அங்கியை மாட்டிக்கொண்டு வேட்டி போலிருக்கும் இடையாடையை ஒரு சுற்றிக் கொண்டால் முடிந்துவிட்டது. இந்த உடையை எனக்கு அணிவிக்க ஆன நேரம் ஐந்து நிமிடங்களுக்கும் குறைவே. ![]() உடைகள் மட்டுமல்ல. அந்தக்காலச் சமுதாயத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளையும் கூத்துப்போல நடித்துக் காட்டுகிறார்கள். அரங்குகளும் உண்டு. திறந்தவெளி நாடகங்களும் உண்டு. ஒவ்வொரு தெருவிலும் ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டுதான் இருக்கிறது. நீதிமன்றங்களும் தண்டனை முறைகளும்கூட இதில் அடக்கம். ஓஸகாவில் நடைபெற்ற ஒரு சதித்திட்டமும் அதைத் தொடர்ந்த போரும் அதனால் ஜப்பானில் ஏற்பட்ட சமுதாய மாற்றங்களும் தத்ரூபமாக நடித்துக் காட்டப்பட்டன. கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் நடந்த சதித்திட்டமும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும்தான் நினைவுக்கு வந்தன. ![]() ![]() ![]() இந்த நாடகம் நடந்தது கீழே உள்ள தியேட்டரில்தான். வளர்ந்த நாடுகளில் இன்று வழக்கத்தில் இல்லாத 'மூங்கில் தட்டி'களில் சினிமா படப் போஸ்டர்களை ஒட்டி வைத்திருப்பது அப்போது இருந்திருக்கிறது. இதை இன்றும் நம் கிராமங்களில் இருக்கும் திரையரங்குகளில் காணலாம். ![]() ![]() ![]() முக்கிய நிகழ்வுகள் என்றால் போர்களும் அரசியல் நிகழ்வுகளும் மட்டுமல்ல. சமுதாயப் பழக்க வழக்கங்கள், கலை மற்றும் பண்பாட்டுக்கூறுகள் ஆகியவையும் அடக்கம். 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற சூனியக்காரி ஒருத்தியின் வீடும் இருக்கிறது. உள்ளே போனால் சூனியம் வைக்கும் மந்திர ஓசைகளும் பேய்கள் நடமாடும் சத்தமும் கேட்கும். மல்லிகைப்பூ வாசனை வந்ததா என்று கேட்காதீர்கள். இங்கிருக்கும் பேய்களுக்குத் தாங்கள் ராத்திரி 12 மணிக்கு மல்லிகைப்பூவைச் சூடிக்கொண்டு கொலுசுச் சத்தத்துடன் பலத்த காற்றுக்கிடையே நடமாடவேண்டும் என்று யாரும் சொல்லித்தரவில்லை. ![]() ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் சிரத்தையுடன் வடிவமைத்திருக்கிறார்கள். சுமார் ஆயிரம் ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலித்தாலும் வெளியே வரும்போது செலவை மீறிய ஒரு நிறைவு ஏற்படுவது என்னவோ நிஜம். நம் ஊரிலும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பழம்பெருமை பேசும் பொருட்களை இதுபோல் ஒரு கருவை மையமாக வைத்துச் சுவாரசியமான வகையில் காட்சிப்படுத்தினால், பார்ப்பவர்களுக்கும் ஒரு ஆர்வம் வரும். கல்வித்துறையின் கட்டளையால் அருங்காட்சியகத்துக்கு இழுத்து வரப்படும் பள்ளிக் குழந்தைகளிடம் வெறுமனே ஒரு மட்பாண்டத்தில் இருக்கும் எழுத்தைக்காட்டி, 'இது கிறிஸ்து பிறப்பதற்கு முன் தமிழர்கள் எழுதிய எழுத்து' என்று சொன்னால், அந்த அருங்காட்சியகத்தை விட்டு வெளியேறும் முன்னரே அதை மறந்துவிடும். மாறாக, கி.முவில் மற்ற நாடுகள் இருந்த நிலை, தமிழகம் பெற்றிருந்த வளர்ச்சிகள், எழுத்தறிவு பெற்றிருந்த பெருமை போன்றவற்றைச் செயல்முறையாகக் காண்பித்தால் நிச்சயம் மனதில் பதியும். மக்களும் அருங்காட்சியகங்களை 'செத்த காலேஜ்' என்று புறந்தள்ளாமலிருக்க வழியேற்படும். குறைந்த பட்சம் பயனுள்ள வகையில் பொழுதைப் போக்கவேண்டும் என்று எண்ணுபவர்களாவது வருவார்கள். இவையெல்லாம் சொல்வதற்கு எளிதாகத்தான் இருக்கின்றன. செயல்படுத்துவதற்கு? கொஞ்சம் செலவு பிடிக்கும் விஷயம்தான். என்ன செய்வது? பணம் என்று வரும்போது, அதைத் தானமாகக் கொடுப்பதற்கு யாரும் முன்வருவதில்லை. முதலீடாகத்தான் பெற்றாக வேண்டும். முதலீடு என்றாலே அதன் கூடப்பிறந்த சகோதரனான லாபத்தையும் நிச்சயம் செய்துகொண்டுதான் தருகிறார்கள். போட்ட பணத்தை எப்படி எடுக்கலாம் என்பதையே யோசித்து யோசித்துச் செய்தால் கலை வியாபாரமாகித் தன் உண்மை உருவத்தை இழந்து விடுகிறது. அரசுத் தரப்பில் இலவசமாகச் செய்யலாமே என்றால், அரசு ஊழியம் என்று சொல்லும்போதே அதன் உடன்பிறவாச் சகோதரர்களான மெத்தனமும் அலட்சியப்போக்கும் சீதனமாக வந்துவிடுகின்றன. இதற்கு என்னதான் வழி? எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்!!! this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |