http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 36

இதழ் 36
[ ஜூன் 16 - ஜூலை 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

நமக்கு நாமே
அபிமுத்தன் திருமடம்
கதை 10 - மதுரகவி
திரும்பிப் பார்க்கிறோம் - 8
ஆடற்கலை வாயிலாக அறியப்படும் தமிழின் தொன்மையும் தமிழர் பெருமையும்
எவ்வுள் கிடந்தான்
ஜப்பானில் பொ.செ தீம்பார்க் போல
திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக்காசு - 2
Links of the Month
சங்கச்சாரல் - 18
இதழ் எண். 36 > கலையும் ஆய்வும்
ஆடற்கலை வாயிலாக அறியப்படும் தமிழின் தொன்மையும் தமிழர் பெருமையும்
Dr.R.Kalaikkovan and Dr.M.Nalini

ஒரு கலையின் பழைமையும் வளமையும் அது வளர்ந்து செழித்த நாட்டின் பெருமையைக் காட்டும் கண்ணாடிகளாகும். தமிழ்நாட்டில் தொன்றுதொட்டுப் பயிலப்பட்டு வரும் ஆடற்கலை, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே விளங்கியதைச் சான்றுகள் நிறுவுகின்றன. பழங்கால ஓவியங்களில் காணப்படும் மனிதத் தோற்றநிலைகள் சில, அக்காலத்து ஆடல் அமைப்புகளை வெளிப்படுத்துமாறு உள்ளன. வேட்டைக்காரன்மலை, கீழ்வாலை ஓவியங்களில் குழுஆடலைக் காணமுடிகிறது. இவ்வாடல்கள், வேட்டைக் காலச் சிறப்பியல்புகளைக் காட்டுவனவாகவும் இனக்குழு மக்களின் வழிபாட்டுத் தொடர்புடையனவாகவும் இருக்கலாம் என்று இரா. பவுன்துரை கருதுகிறார். தமிழர் நாகரிகமாகக் கருதப்படும் சிந்துவெளிக் காலத்தில் (கி.மு. 2500 - 1500) ஆடற்கலை வளர்ந்திருந்தது. அகழாய்வில் கிடைத்த வெண்கலப் பெண்வடிவத்தின் நின்ற கோலத்தை ஆடற்கோலமாக அடையாளம் கண்டுள்ளனர்.

சங்க காலத்திற்கு முற்பட்டதாகக் கருதப்படும் தொல்காப்பியத்தில் வள்ளி, காந்தள், தேர்க்குரவைகள், அமலை, வெறியாட்டு ஆகிய ஆடல் வடிவங்கள் குறிக்கப்பட்டுள்ளன. கற்பியலில் பாணர், கூத்தர், விறலியர் எனும் தொழிற்சார்ந்த கலைஞர்களைத் தொல்காப்பியர் அறிமுகப்படுத்துகிறார். சிறுசிறு குழுக்களாக அமைந்து வளமை தேடி ஊர்ஊராய்ச் சென்று கலைவளர்த்த இவர்தம் வாழ்க்கைச் சூழல்களும் கலைத்திறனும் சங்க இலக்கியங்களில் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. அகத்திணை இயலில் இடம்பெறும், 'நாடக வழக்கினும்' என்னும் தொடரும் மெய்ப்பாட்டியலின் நூற்பாக்களும் தொல்காப்பியர் கால ஆடற்கலைத் திறனை உணர்த்துவனவாக அமைந்துள்ளன.

கி. மு. நான்காம் நூற்றாண்டு முதல் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையிலான கால இடைவெளியைக் கொண்டதாக அறியப்படும் சங்க காலம் தொட்டுச் சோழர் காலம் வரை ஆடற்கலைத் தரவுகள் மிகுதியாகக் கிடைக்கின்றன. ஆடற்கலையின் கால நிரலான வளர்ச்சி அறிய உதவும் இவற்றை ஆடற்கல்வி, உடன்கூட்டம், ஒப்பனை, அரங்கம், ஆடுநர் வாழ்க்கை எனும் தலைப்புகளின் கீழ் ஆராயலாம்.

1. ஆடற்கல்வி

சங்க கால மக்களின் வாழ்க்கையில் இசையும் கூத்தும் இரண்டறக் கலந்திருந்தன. உணர்வுகளின் வெளிப்பாடாகவும் சடங்குகள், விழாக்கள் இவற்றோடு தொடர்புடையன வாகவும் விளங்கிய இவ்விரு கலைகளும் தொழில்முறையாகவும் வழக்கில் இருந்தன. மக்கள் தமக்குள் மகிழ்ந்தாடிய ஆடல்வகைகள் பெரும்பாலும் குழுஆடல்களாகவே அமைந்தன. இவை கண்டும் கேட்டும் கற்றுக்கொள்ளப்பட்டன. தொழில்முறைக் கலைஞர்கள் மூத்தவர்பால் இக்கலையைப் பயின்று தேர்ந்தனர்.

சங்க இலக்கியங்கள் மனைநூல், மடைநூல், புரவிநூல், தேர்நூல் எனப் பல நூல்களைச் சுட்டுமாறு போல இசைநூல் ஒன்றையும் சுட்டுகின்றன. கி. பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தனவாகக் கருதப்படும் அரச்சலூர்க் கல்வெட்டுகள் ஆடலுக்கான சொற்கட்டுகளைக் கொண்டுள்ளன. இவையும், 'படுகின்ற இயங்களின் கண்ணொலியையும் பாட்டினையும் பயின்று மகளிர் ஆடும் அரங்கம்' எனும் பாடலடியும் ஆடற்கலை முறைப்படியும் பயிற்றுவிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருத வைக்கின்றன.

சங்க கால ஆடல்களைக் குழுஆடல்கள், தனியர் ஆடல்கள் என்றும் அக ஆடல்கள், புற ஆடல்கள் என்றும் மக்கள் ஆடல்கள், தொழில்முறை ஆடல்கள் என்றும் முவ்வேறு வகைப்படுத்தலாம். மக்கள் ஆடல்கள் பால், வயது வேறுபாடின்றிப் பெரும்பாலும் குழு ஆடல்களாக அமைந்தன. அறுவடை, விழாக்கள், போர் வெற்றி, தெய்வம் பரவுதல் இவற்றின் காரணமாகவும் இன்னபிற உணர்வு வெளிப்பாடுகளின் நிமித்தமாகவும் அவை ஆடப்பட்டன. அவற்றுள் தலையாயவை குரவையும் துணங்கையும் ஆகும். இவ்விரண்டும் அவர்தம் அகவாழ்விலும் புறவாழ்விலும் சிறக்க இடம்பெற்றிருந்தன.

செழுநிலை மண்டலக் கடகக் கைக்கோத்து அந்நிலைக்கொப்ப நின்றாடிய குரவை நானிலத்தும் நிகழ்ந்தது. குறிஞ்சிக் குறவர்கள் தேறலும் நறவும் அருந்தித் தம் பெண்டிரொடு குரவையாடினர். சுற்றம் சூழ இறைவனைப் பேணித் தழுவியும் பிணைந்தும் மன்று தோறும் நிகழ்ந்த இக்குரவை, பெரும் ஆரவாரத்துடன் நிகழ்ந்தது. முல்லைக் குரவையில் மரபுளி பாடித் தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவி ஆயரும் ஆய்ச்சியரும் குரவையாடினர். மருதப் பெண்கள் காஞ்சிமரத்தடியில் நீர்க்கொள்ள வந்த குடங்களை வைத்துவிட்டு நிழலில் குரவையாடினர். பாடுபொருளாக அவரவர் கணவர்தம் பரத்தமை அமைந்தது. நெய்தல் பெண்களோ வண்டல் பாவையை நீர் உண்ணும் துறையில் வைத்து ஊதுகொம்பின் இசைக்குக் குரவையாடினர்.

இளைய மகளிர் ஆடலாக அமைந்த துணங்கை விழாநாட்களில் விரும்பி ஆடப்பட்டது. பாண்டில் விளக்கின் ஒளியில் இரவு நேரத்தேயும் நுண்ணிய வேலைப்பாடு அமைந்த அணிகலன்களை அணிந்தவர்களாய் இனிய தாள சுருதியுடன் பெண்கள் துணங்கையாடினர். இம்மகளிர் ஆடலுக்குத் தலைக்கை தருவது ஆடவர் பங்காக இருந்தது. எளியவர் முதல் மன்னர்கள்வரை தலைக்கை தந்துள்ளனர். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் துணங்கைக்கு முதற்கை தந்தமையை நச்செள்ளையார் பாடியுள்ளார்.

சங்க மக்களின் புறவாழ்விலும் துணங்கை பேரிடம் பெற்று விளங்கியது. போர்க்களங்களில் நிகழ்ந்தமையால் போர்த் துணங்கை, வென்றாடு துணங்கை எனக் குறிப்பிடப்பட்ட இது, ஆடவர் துணங்கையாய் அமைந்தது. போரில் வெற்றி பெற்ற அரசர்கள், வீரர்களுடன் இணைந்தாடிய இத்துணங்கையில், தோள்களை உயரத் தூக்கி ஆடும்முறை பின்பற்றப்பட்டமையை, 'திணிதோள் உயர ஓச்சி', 'தோளோச்சிய வென்றாடு துணங்கை' எனும் பாடலடிகள் உணர்த்துகின்றன.

துணங்கை போலவே தோளியும் மகளிர் குழுஆடலாகப் பயிலப்பட்டது. வரிக்கூத்துகளுள் ஒன்றான இதை, முல்லைப் பெண்கள் பிடாமரத்து நிழலில் ஆடி மகிழ்ந்தனர். கை மாண் தோளி என்று இவ்வாடல் சிறப்பிக்கப்படுவதால், தோள்களை அசைத்து இது ஆடப்பட்டதாகக் கருதலாம். வெற்றி பெற்ற மன்னரும் வீரர்களும் போரில் இறந்த வேந்தரின் உடலைச் சூழ நின்று வாள் உயர்த்தி வீரமுழக்கமிட்டு ஆடும் ஒள்வாள் அமலையும் குழுஆடலாகும். பறவைகளின் காவலராக விளங்கிய அதிகனை, மிஞ்ிலி வென்று மகிழ்ந்தாடிய அமலையைப் பரணரும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் வாள்அமலையை நச்செள்ளையாரும் சுட்டுகின்றனர்.

துடியின் ஒலிக்கு ஏற்ற தாளத்தில் தழையுடன் கட்டிய கண்ணியைத் தலையில் சூடி, வெற்றியின் களிப்பில் வீறுகொண்டு மறவர்கள் தோள் அசைத்து நிகழ்த்திய துடியாடல் புறம் சார்ந்ததாகும். அகம் சார்ந்த தனியாடலாகவும் இது நிகழ்த்தப்பட்டது. கொங்கு நாட்டினர் மணிக்கச்சினை இடையில் கட்டிக்கொண்டு, தெருவில் ஆடிய உள்ளிவிழா ஆடலும் குழுஆடலே.

தொழில்முறைக் கலைஞர்கள் ஆடிய ஆடல்களைப் பற்றி நேரடிச் சான்றுகள் இல்லை என்றாலும், தொகையும் பாட்டும் எடுத்துரைக்கும் பேடியாடல், துடியாடல், கழைக்கூத்து, வெறியாடல் இவையும் கலித்தொகையின் கடவுள் வாழ்த்துக் குறிக்கும் கொடுகொட்டி, பண்டரங்கம், கபாலக்கூத்து, பரிபாடல் சுட்டும் குடக்கூத்து, மல்லாடல் இவையும் பெரும்பாணாற்றுப்படை சுட்டும் நாடகமும் இவர்களால் நிகழ்த்தப்பட்டதாகக் கொள்ளலாம்.

சங்க காலத் தொழில்முறைக் கலைஞர்கள் கோடியர், வயிரியர், கண்ணுளர் எனப் பலராய் இருந்தனர். பொருநர் என்றும் அறியப்பட்ட கோடியரைக் குறிக்கும் சங்கப் பாடல்கள் அவர்களைப் பல் ஊர்ப் பெயர்வனராகவும் சுரம் செல் கோடியராகவும் குறிப்பதால், அவர்கள் ஓரிடத்துத் தங்காது ஊர்ஊராய்ச் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி வாழ்க்கை வளர்த்த கலைஞர்கள் என்பது புலப்படும். பெரும் சுற்றத்தோடு விளங்கியமையால், 'இரும்பேர் ஒக்கல் கோடியர்' என்றழைக்கப்பட்ட இவர்கள், பல்வேறு இசைக்கருவிகளை வாசிக்கும் ஆற்றல் பெற்றிருந்தனர். தாம் இசைத்த கருவிகள் அனைத்தையும் பெரிய பையொன்றில் இட்டு ஒருசேரக் கட்டித் தூக்கிச் சென்றமையால் கலப்பையர் என்றும் இவர்கள் அழைக்கப்பட்டனர்.

வயிரியர் என்பாரும் தொழில்முறைக் கலைஞர்களே ஆவர். விழாக்களில் ஆடிப்பாடிய இவர்களும் விழா முடித்துப் பயணப்படும்போது தாம் இசைத்த இசைக்கருவிகளை எல்லாம் ஒருசேரப் பையிலிட்டுக் கட்டி, அதைக் கழையில் தொங்கவிட்டு எடுத்துச் சென்றனர். இதன் காரணமாக வயிரியரும் கலப்பையர் என்று அழைக்கப்பட்டனர். பதிற்றுப்பத்தும் மலைபடுகடாமும் கண்ணுளரைக் குறிக்கின்றன. கண்ணுளரைக் கூத்தர் என்கிறது பிங்கல நிகண்டு. அரும்பத உரைகாரரும் அடியார்க்கு நல்லாரும் இவர்களைச் சாந்திக் கூத்தர் என்பர்.

தொல்காப்பியத்தில் ஊடல் தீர்க்கும் வாயில்களுள் ஒன்றாகக் குறிக்கப்படும் கூத்தர்கள் சங்க காலத்தில் அருகினர் போலும். கோடியர், வயிரியர் பற்றிப் பரக்கப் பேசும் சங்க இலக்கியங்கள், தாமரைப் பூம்போது சிதைந்து விழுமாறு கூத்தர்கள் ஆடுகளத்தில் ஆடிய தகவல் மட்டுமே கூறி அமைதிகாண்பது சிந்திக்கத்தக்கது.

ஆடற்கலைஞர் குழுக்களுடன் இணைத்துப் பேசப்படும் விறலியர் அக்கலைஞர்தம் பெண்டிர் ஆவர். விறல்பட ஆடியதால் விறலியர் என்றும் விழாக் காலங்களில் ஆடியதால் ஆடுகள மகளிர், ஆடுகளப் பாவையர் என்றும் அழைக்கப்பட்ட இவர்கள் பல்வகைப் பண்களைப் பாடவும் பல்வேறு இசைக்கருவிகளை இயக்கவும் ஆற்றல் பெற்றிருந்தனர். 'முறையின் ஆடிய' என்று இவர்தம் ஆடல் விதந்து பேசப்படுவதால், முறைப்படி பயின்று ஆடல்களை நிகழ்த்தினர் எனக் கருத இடமுண்டு.

சங்கம் மருவிய காலம், களப்பிரர் காலம் என்றெல்லாம் அழைக்கப்படும் கி. பி. 250க்கும் கி.பி. 550க்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் நிலவிய ஆடற்கலை அறிய சிலப்பதிகாரம் உதவுகிறது. பல்வேறு வகையான கலைநூல்கள் அக்காலத்தே இருந்தன. நாட்டிய நன்னூல், ஓவியச் செந்நூல் இவற்றுடன் நாடகக் காப்பியங்களும் பயிலப்பட்டன. நகர்ப்புறத்தே ஆடல் கற்பித்த ஆசான்கள் வேத்தியல், பொதுவியல் எனும் இருவகைக் கூத்தின் இலக்கணங்களை அறிந்தவர்களாகவும் புறநடங்களை விலக்குறுப்புகளோடு பொருந்தப் புணர்த்தி ஆடவல்லவர்களாகவும் இருந்தனர். அல்லியம் முதல் கொடுகொட்டி ஈறாக அமைந்த பதினோராடல்களையும் அவ்வாடல்களுக்குரிய பாடல்களையும் அவற்றிற்குரிய வாச்சியக் கூறுகளையும் நூல்களில் விதித்தவழி அவர்கள் அறிந்திருந்தனர்.

நகர்ப்புறங்களில் ஆடல் பயில அகலமான மனைகள் அரங்க அமைப்புகளுடன் இருந்தன. குழந்தைகள் ஐந்து வயது அடைந்தவுடன் ஆடற்கல்வி தொடங்கப்பட்டது. நல்லோரை அமைந்த நன்னாளில் ஆசானின் தாளம் தட்டும் கோலைப்பிடித்துக் கலை கற்கத் தொடங்கிய பிள்ளைகள் ஏழாண்டுகள் பயின்று தேர்ந்தனர். ஆடல் கற்க அழகும் இசையறிவும் அடிப்படைத் தேவைகளாக அமைந்தன. இருவகைக் கூத்துடன் பாட்டு, தூக்கு, தாளவறுதி இவை கற்றுத்தரப்பட்டன. அகநாடகங்களுக்கும் புறநாடகங்களுக்கும் உரிய பாடல்கள், யாழ், தண்ணுமை, குழல் முதலிய இசைக்கருவிகள் பற்றிய அறிவு ஊட்டப்பெற்றதுடன் ஒப்பனை, ஓவியம் இவையும் கற்றுத்தரப்பட்டன. நான்கென முறைப்படுத்தப்பட்டிருந்த அவிநயக் களங்களிலும் குரல் முதலான ஏழ் நிலத்திலும் பொருந்த ஆடிடும் திறன் பயிற்றுவிக்கப்பட்டது. ஏழாண்டுகள் பயின்று தேர்ந்தவரையே அரங்கேறச் செய்தனர்.

ஊர்ப்புறத்தே நூல் முறைப்படி ஆடல் பயிற்றுவித்தமைக்குக் குறிப்புகள் இல்லை என்றாலும், முன்னோர் வழக்கே தம் வழக்காய் மக்கள் கண்டும் கேட்டும் ஆடலைக் கற்றனர் எனக் கருதலாம். 'ஆடவர் காண நல் அரங்கேறி ஆடலும் பாடலும் அழகும் காட்டிக் கண்டோர் நெஞ்சம் கொண்டு' அவரால் பயன் பல பெறுதல் நோக்கம் என்பதால், பொதுமகளிர் தம் குல மரபுப்படி ஆடலைக் கருத்தாய்ப் பயின்றனர். அவர்தம் இல்லங்களே பயிற்சிக் களங்களாய், பயில்விக்கும் இடங்களாய் விளங்கின.

அரசர்க்காடும் கூத்து, எல்லார்க்கும் ஒப்ப ஆடும் கூத்து எனத் தொழில்முறை ஆடல் இருதிறத்ததாய் அமைந்தது. இவ்விரண்டிற்கும் நாட்டிய நன்னூல்கள் இருந்தன. அடியார்க்கு நல்லார் இருவகைக் கூத்துகளாய்ச் சாந்தியையும் விநோதத்தையும் குறிப்பதுடன், அவ்விரண்டையுமே அகக்கூத்துகளாய்க் காட்டுவார். நாயகன் சாந்தமாக ஆடிய கூத்து சாந்திக் கூத்து எனப்பட்டது. இது சொக்கம், மெய், அவிநயம், நாடகம் என நால்வகைக் கூத்தாய் அமைந்தது.

நூற்றெட்டுக் கரணமுடைய சொக்கம் சுத்தநிருத்தம் என்றும் அறியப்பட்டது. மெய்க்கூத்து தேசி, வடுகு, சிங்களம் எனும் மூன்று உட்பிரிவுகளைக் கொண்டிருந்தது. இவை அகச்சுவை பற்றி அமைந்திருந்தமையால் அகமார்க்கம் என நிகழ்த்தப்பட்டன. கதை தழுவாது வந்த பாட்டின் பொருளுக்குக் கைகாட்டி விளக்கம் செய்த பல்வகைக் கூத்தும் அவிநயக் கூத்துள் அடங்கின. கதை தழுவி வந்த கூத்து நாடகம் எனப்பட்டது.

குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை எனும் ஆறுவகைக் கூத்துக்களையும் உள்ளடக்கி அமைந்தது விநோதக்கூத்து. தெய்வம் பரவியும் மகிழ்ச்சி மேலிட்டும் சங்க காலத்தில் ஆடப்பெற்ற குரவை, சங்கம் மருவிய காலத்தில் இறைத் தொடர்புடையதாயிற்று. குறிஞ்சி, முல்லை, பாலை நில வாழ் மக்கள் இக்குரவையினை பல்வகைப் பாடல்களுடன் நிகழ்த்தி மகிழ்ந்தனர். அவ்வந் நிலஞ்சார்ந்த தெய்வங்களின் தோற்ற வண்ணனைகளும் வீரச் செயல்களும் பாடு பொருள்களாயின.

விநோதக்கூத்துள் இரண்டாவதான கலிநடம் கழைக்கூத்தைக் குறித்தது. குடக்கூத்து பதினோராடல்களில் ஒன்றாய் அமைந்த மாயவன் ஆடலாகும். கரணம் படிந்த ஆடல். தோலால் பாவை செய்து ஆட்டுவிப்பது தோற்பாவைக் கூத்தாயிற்று. இவை தவிர, விதூடகக்கூத்து, வெறியாட்டு என்பனவும்கூட விநோதக்கூத்தின் உட்பிரிவுகளாய் இருந்தன. வெறியாட்டு தெய்வமுற்று ஆடும் ஆடலாகும். சங்கம் மருவிய காலத்தில் பாலை நில மக்களிடையே வெறியாட்டு நிகழ்ந்தது. இதில் வெறியாடியவர் மீது கொற்றவை வந்துற்றதாகக் கொள்ளப் பட்டது. இவ்வெறியாடலை எயினர் குலப் பெண்ணான சாலினி செய்தார்.

பல்வகைக் கூத்துகளான புறக்கூத்துகளுள் வசைக்கூத்தும் வென்றிக்கூத்தும் சிறப்பிடம் பெற்றன. தேர்க்குரவைகள் சங்கம் மருவிய காலத்தில் வழக்கிலிருந்தன. பதினோராடல்களாக அடியார்க்கு நல்லார் குறிக்கும் கொடுகொட்டி, பாண்டரங்கம், அல்லியத்தொகுதி, மல்லாடல், துடியாடல், குடையாடல், குடக்கூத்து, பேடியாடல், மரக்கால் ஆடல், பாவை, கடையம் என்பன விழாக்காலங்களில் மக்கள் உள்ளம் மகிழும் வண்ணம் ஆடிக் காட்டப்பெற்றன. ஆடிய நிலைக்கேற்ப இவை நின்றாடிய, வீழ்ந்தாடிய ஆடல்களாய் இருவகைத்தாயின.

நாடகக் கணிகையர், கூத்தர், கூத்தியர், தோரிய மடந்தையர் என்பார் தொழில்முறை ஆடற் கலைஞர்களாய் அமைந்தனர். சங்க காலத்தில் விறலி என்ற பெயரில் அறியப்பட்ட ஆடுமகள் இக்காலத்தே ஆடற்கூத்தி என அழைக்கப்பட்டார். ஆடற்பரத்தையர் நாடகக் கணிகையராயினர். கோடியர், வயிரியர் அருகினர்.

சாக்கைக் கூத்தன், சாலினி

(தொடரும்)
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.