![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 36
![]() இதழ் 36 [ ஜூன் 16 - ஜூலை 15, 2007 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
சென்னை நகருக்கு வடக்கே 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஊர் திருவள்ளூர். இக்காலத்தில் வைத்ய வீரராகவ பெருமாள் என்று பிரபலமாக விளங்கி வரும் 'எவ்வுள் கிடந்தானைக்' காண ஜூலை 3-ஆம் நாள் திருவள்ளூர் சென்றிருந்தோம். சென்னையிலிருந்து ரயில் மார்க்கமாக திருவள்ளூர் ரயில் நிலையத்தை அடைந்து, அங்கிருந்து நிமிடத்துக்கொருமுறை புறப்படும் 'ரயிலடி-தேரடி' பேருந்தில் பயணித்து கோயிலை அடைவதற்கும், மணி ஏழரை அடிப்பதற்கும் சரியாக இருந்தது. பன்னெடுங்காலமாய் பாம்பணையில் படுத்துறங்கும் பரமனைக் காண வேண்டி, முதலில் கண்ணில் பட்ட 'இக்கால முன்மண்டபத்தையும்', 'பல நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கும் கோபுர வாயிலையும்' வேகமாகக் கடந்து சென்ற எங்களை இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்ட வாயிலும், அதன் வாயை அடைத்த வண்ணம் நின்றிருந்த வாயிற்காப்போனும் வரவேற்றனர்.
நந்தகோபன் வீட்டின் வாயிலில் 'கொடித் தோன்றும் தோரண வாயில்காப்போனே! மணிக் கதவம் தாழ் திறவாய்' என்று கெஞ்சிய ஆண்டாளைப் போல் நாங்களும் 'grill கதவம் தாழ் திறவாய்' என்று இறைஞ்சினோம். 'அலங்கார ப்ரியரான' பெருமாளுக்குச் சாற்றுப்படி முடிய இன்னம் இரண்டு மணி நேரமாவது ஆகும், அதுவரை கதவம் திறவாது என்ற வாயில்காப்போனிடம், 'பெருமாளைக் காணக் காத்திருக்கிறோம். காத்திருக்கும் அவ்வேளையில், கோயில் விமானத்தைப் பார்த்து, குறிப்பெடுத்துக் கொண்டால், சூரிய பகவானின் சுட்டெரிக்கும் கோபத்தினின்று சற்றே தப்பித்துக் கொள்வோம்' என்றோம். 'அப்படியெல்லாம் அனுமதிக்க முடியாது. வேண்டுமானால் ஆபீஸிலிருந்து அனுமதி வாங்கி வாருங்கள்' என்று எங்களை திசை திருப்பினார். கோயிலின் வட மேற்கு மூலையில் அமைந்திருந்த ஆபீசில் நுழைந்து, நாங்கள் யார், எங்கிருந்து வருகிறோம், எதற்காக வந்துள்ளோம், என்றெல்லாம் கூறியும் எழுதியும் கொடுத்த பின், 'புகைப்படம் எடுக்கக்கூடாது' என்ற கடுமையான எச்சரிக்கை வந்தது. 'சரி, நம்மை ஒருவழியாக கோயிலினுள் விட்டுவிடுவார்கள்' என்று நினைத்தால், 'அனுமதிக்கலாமா வேண்டாமா' என்று ஆங்கோர் பட்டிமண்டபமே நடந்தது. இவர்கள் பேசி முடிப்பதற்குள், கோயிலின் அமைப்பையும், கோபுரத்தின் கட்டிடக்கலைக் கூறுகளையும் குறிப்பெடுக்கலாம் என்று அவ்வலுவலகத்தை நீங்கினோம். கோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோயிலின் முற்பகுதியில் நம்மை வரவேற்பது, சமீப காலத்தினதாகத் தோன்றும் ஒரு மண்டபம். அம்மண்டபத்தை ஒட்டி அமைந்துள்ள ராஜ கோபுரம், அறுதள சாலா விமானமாக அமைந்துள்ளது. மஹா வாஜனம், கண்டம், கபோதம் போன்ற உறுப்புக்களுடன், சுமார் ஆறடி உயரத்துக்கு அமைந்துள்ள உபபீடம், கோபுரத்தின் அமைப்பைப் பிரம்மாண்டமாகக் காட்டுகிறது. அதற்கு மேல் அமைந்துள்ள தாங்குதளம் வர்க பேதமாக அமைந்துள்ளது. வர்க பேதமாக அமைந்துள்ள அதிஷ்டானத்தில் ஐந்து வகை அதிஷ்டானங்கள் காட்டப்பட்டுள்ளன. கோபுர வாயிலுக்குக் கிழக்கே, இடமிருந்து வலமாக நோக்கின், முதலில் தெரியும் தாங்குதளத்தில் பட்டிகையை ஒத்த ஓர் உபானமும், அதன் மேல் பத்ம உபானமும், அதன் மேல் ஜகதி, எண்பட்டைக் குமுதம், கண்டம், பட்டிகை, வேதிகண்டம், வேதிகை ஆகிய உறுப்புகள் கொண்டு பாத பந்தத் தாங்குதளமாக அமைந்துள்ளது. ஒடுக்கமாக அமைந்துள்ள அடுத்த தொகுதி உருள் குமுதமும், வேதிகைக்கு பதில் கபோதமும் பெற்று, முதல் தொகுதியிலிருந்து மாறுபட்டு, கபோத பந்த தாங்குதளமாக அமைந்துள்ளது. மூன்றாம் தொகுதி, உபபீடத்துக்கு மேல், ஜகதியைப் போன்ற உறுப்பைப் பெற்றுள்ளது. அதற்கு மேல் மஹா பத்மம் காட்டப்பட்டுள்ளதால், ஜகதி போன்ற அமைப்பை மற்றொரு உபபீடமாகக் கொள்ளலாம். அத்தொகுதியின் குமுதம் கடகமாக அமைந்துள்ளது. குமுதத்துக்கு மேல் கண்டம், கபோதம், வேதிக் கண்டம், வேதிகை ஆகிய உறுப்புக்களும் அமைந்து கபோத பந்த தாங்குதளத்தின் வேறொரு வகையைக் காட்டுகிறன. ஒடுக்கமாக அமைந்துள்ள நான்காம் தொகுதி, இரண்டாம் தொகுதியைப் போலவே கபோத பந்த தாங்குதளமாக அமைந்துள்ளது. ஐந்தாம் தொகுதி, முதல் தொகுதியில் அமைந்துள்ள உபானங்களையும் ஜகதியையும் பெற்றுள்ளது. ஜகதிக்கு மேல் கண்டம் பெற்று, இந்திர காந்த குமுதம், கண்டம், பட்டிகை, வேதிக் கண்டம், வேதிகை ஆகிய உறுப்புகள் பெற்று, பாதபந்த தாங்குதளமாக அமைந்துள்ளது. தாங்குதளத்துக்கு மேல் எழும் சுவரில் சதுரபாதம் பெற்ற எண்முக அரைத் தூண்கள், மாலைத் தொங்கல், தாமரைக் கட்டு, கலசம், தாடி, கும்பம், தாமரை இதழ்கள் கொண்ட பாலி, பலகை ஆகிய உறுப்புகள் பெற்றுள்ளன. சதுர பாதத்தின் மேல் பகுதியில் அளவில் சிறியதான நாக பந்தங்கள் அமைந்துள்ளன. இத்தூண்களில் மேலமர்ந்துள்ள சிறிய மொட்டுக்களடனான போதிகை உத்திரத்தைத் தாங்குகிறது. மேலே, வாஜனம், தாமரை வரியோடும் வலபி, கபோதம் ஆகிய உறுப்புகள் உள்ளன. ஆதி தள கூரை மேல் ஆரம், முறையே -- கர்ணகூடு, சிறிய சாலை, பத்ர சாலை, சிறிய சாலை, கர்ண கூடு, என்று அமைந்துள்ளது. நடுவில் அமைந்துள்ள பத்ர சாலை உயர்த்தப்பட்ட நிலையில் இரண்டாம் தள கபோதத்துடன் இணைக்கப்பட்டு, அதன் நடுப்பகுதி துவாரமாக அமைந்துள்ளது. ஆதி தள ஆராந்திரத்தில் பாதம் பதிக்கும் கூரை தாங்கிகள், இரண்டாம் தள கபோதத்தைத் தாங்குகின்றனர். இரண்டாம், மூன்றாம், நான்காம் தளங்களின் ஆர உறுப்புகள் முதல் தள ஆர உறுப்பை (கூரை தாங்கிகள் தவிர) ஒத்தே அமைந்துள்ளன. சுவர் பகுதிகளிலும், அரமியத்திலும் கருடன், அனுமன், நாரயணன் போன்ற தெய்வச் சிற்பங்கள் தென்படுகின்றன. ஐந்தாம் தள கபோதத்தின் மேல் அமைந்துள்ள கிரீவத்தில் விஷ்ணுவின் அவதாரங்கள் சுதை உருவங்களாகக் காட்டப்பட்டுள்ளன. கிரீவத்தின் இரு முனைகளிலும் சிகரம் தாங்கிகள், சாலா சிகரத்தைத் தாங்குகின்றனர். சிகரத்தின் உச்சியில் ஏழு ஸ்தூபிகள் வான் நோக்குகின்றன. கோபுரத்தைப் பற்றி குறிப்பெடுப்பதற்கும், எங்களுக்கு கோயிலுக்குள் செல்ல அனுமதி கிடைப்பதற்கும் சரியாக இருந்தது. வீரராகவப் பெருமாள் கோயில் இக்காலத்தில் 'வைத்திய வீரராகவப் பெருமாள்' என்று பிரபலமாக விளங்கும் எவ்வுள் கிடந்தானைக் காண வேண்டுமெனில், நாயக்கர் கால மண்டபத்தின் தெற்கில் இக்காலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வாயில் வழியாக நுழைய வேண்டும். அதற்கடுத்தாற் போல், கிழக்குப் பார்வையில் அமைந்திருக்கும் வாயிலில் நுழைந்தால், கோயிலின் திருச்சுற்று மாளிகையை அடையலாம். அதற்கடுத்த வாயிலின் வழியாக, பிற்காலத்தில் அமைக்கப்பட்டதாகத் தோன்றும் பெரு மண்டபத்தினுள் நுழையலாம். பெரு மண்டபத்தைக் கடந்து, கோயில் கட்டுமானத்துக்குச் சமகாலத்தினதாய் தோன்றும் முக மண்டபத்தில் நுழைந்தால், கருவறையில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனைக் காணலாம். 'எவ்வுள் கிடந்தானைக்' கண்ட திருமங்கை ஆழ்வார், 'தோள்மடவார் வெண்ணையுண்டான் இவனென்று ஏச நின்ற எம்பெருமான் - எவ்வுள் கிடந்தானே' என்று பாடியுள்ளார். நமக்கோ, 'சீக்கிரம்! ஆகட்டும்! இடத்தை விட்டு நகருங்க. வெளிய போங்க' என்று நம்மை விரட்டிய கோயில் பணியாளரின் பேச்சைக் கேட்டும் நித்திரையில் ஆழ்ந்திருந்த பெருமானைக் கண்ட போது, 'ஏச நின்ற எம்பெருமான்' என்ற பதத்திற்கு புதிய அர்த்தங்கள் எல்லாம் தோன்ற ஆரம்பித்தன. 40 நொடிகளுக்கும் குறைவான காலத்தில் பார்த்த வரை, துயிலிருக்கும் பேருருவத்தையும், அவர் தலை அருகில் அமர்ந்திருக்கும் ஒரு முனிவரை மட்டுமே காண முடிந்தது. வெளியில் இருக்கும் படக்கடையில்தான், கருவறையில் பிரம்மனும் இருப்பது தெரிய வந்தது. கோயில் தல வரலாறு அம்முனிவரை சாலிஹோத்ர முனிவர் என்று அடையாளம் காண்கிறது. இருதள சாலா விமானமாக அமைந்துள்ள கட்டிடத்தின் தாங்குதளம், உபானம், பத்ம உபானம், கம்பு, மேற்பகுதியில் தாமரை வரியோடும் ஜகதி, தாமரை வரி தழுவிய உருள் குமுதம், கம்புகளின் தழுவலில் பாதங்களுடனான கண்டம், பட்டிகை, வேதிக்கண்டம், தாமரை வரியால் தழுவப் பெற்ற வேதிகை, மேற்கம்பு ஆகிய உறுப்புகள் பெற்று பாதபந்தத் தாங்குதளமாக அமைந்துள்ளது. மேலெழும் விமானச் சுவரை, சதுர பாதம் பெற்ற எண்பட்டைத் அரைத் தூண்கள் தாங்குகின்றன. அலங்கரிக்கப்பட்ட சதுர பாதங்களின் தலையில் சிறிய நாக பந்தங்கள் தென்படுகின்றன. தொங்கல், தானம், தாமரைக்கட்டு, கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை, வீரகண்டம் பெற்று எழிலுற அமைந்திருக்கும் இத்தூண்களின் மீதமர்ந்துள்ள போதிகைகள் சிறிய பூமொட்டுடன் காணப்படுகின்றன. இப்போதிகையின் அமைப்பும், தென்திசையில் தென்படும் குலோத்துங்க சோழனின் கல்வெட்டும், இக்கட்டுமானத்தைப் பிற்காலச் சோழர் கட்டுமானம் என்று உறுதி செய்கின்றன. போதிகைக்கு மேல் தாமரை வரியோடும் வலபியும், கபோதமும் அமைந்துள்ளன. கபோதத்தில், அலங்கரிக்கப்பட்ட கூடுகளும், முனையில் கொடிக்கருக்குகளும் தென்படுகின்றன. கபோதத்திற்கு மேல் பூமிதேசம் காட்டப்பட்டுள்ளது. கட்டுமானத்தின் கர்ணப்பத்திகள் சற்றே முன்னிழுக்கப்பட்டுள்ளன. அவற்றை சுவர் தூண்கள் அணைவு செய்துள்ளன. இரு கர்ண பத்திகளுக்கு இடையில் இருக்கும் இரு சாலைப் பத்திகளுள் ஒன்றில் கோட்ட பஞ்சரமும், மற்றொன்றில் குட பஞ்சரமும் அமைந்துள்ளன. இரண்டு எண்பட்டை அரைத்தூண்கள் தழுவிய கோட்டத்திற்கு மேல், மகர தோரணம் வரும் இடத்தில், சாலை போன்ற அமைப்பு காட்டப்பட்டுள்ளது. கோட்டத்திலோ, அல்லது விமானத்தின் வேறு பகுதிகளிலோ தெய்வச் சிற்பங்கள் காணக்கிடைக்கவில்லை. (கிரீவப் பகுதியில் காணக் கிடைக்கும் சிற்பங்கள் சமீபத்தில் அமைக்கப்பட்டவையாகத் தோன்றுகிறது). முதல் தள கூ¨ரைக்கு மேற்பட்டப் பகுதிகள் செங்கல் கட்டுமானமாகவும், தற்காலத்தினதாகவும் தோன்றுகின்றன. விமானத்தின் ஓரத்தில் கர்ணகூடுகளும், நடுவில் இரு சாலைகளும் ஆர உறுப்புகளாக அமைந்துள்ளன. அவ்வுறுப்புகளுக்கு பின் அமைந்திருக்கும் இரண்டாம் தள சுவரில் எண்பட்டைத் தூண்கள் அணைவு செய்யப்பட்டு, அவற்றின் மேல் வெட்டுப் போதிகைகள் காட்டப்பட்டுள்ளன. இரண்டாவது தளக் கபோதத்தின் மேல் கிரீவமும், சாலா சிகரமும் அமைக்கப்பட்டு, அச் சிகரத்தின் மேல் ஐந்து கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிற்காலத்தில் எழுப்பபட்டு முக மண்டபத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் பெரு மண்டபத்தில், (சுவர் தவிர) கட்டட உறுப்புகள் ஏதுமில்லை. விமானத்தைச் சுற்றி திருச்சுற்று அமைக்கப்பட்டுள்ளதால், விமானத்தின் அதிஷ்டானப் பகுதி பள்ளத்தில் இருப்பது போலத் தோன்றுகிறது. திருச்சுற்றின் கூரையும், விமானத்தின் ஆதிதளக் கூரையும் இணைக்கப்பெற்றுள்ளதால், விமானமே இருளில் மூழ்கியுள்ளது. திருச்சுற்றில் உள்ள தூண்களில் சில, சதுரபாதம் கொண்ட உருளைத் தூண்களாக அமைந்துள்ளன. அவற்றின் மேல் எழும்பும் வெட்டுப் போதிகை கூரையைத் தாங்குகின்றது. மற்ற தூண்கள், சதுரம் - உருளை - சதுரம் என்ற அமைப்பில் உள்ளன. தொங்கல், தானம் முதலான உறுப்புக்களை இத்தூண்கள் பெறவில்லை. இத்தூண்களின் வித்தியாசமான அமைப்பு, இத்திருச்சுற்றின் காலத்தைக் கேள்விக்குறியாக்குகின்றது. தாயார் திருமுன் எவ்வுள் கிடந்த பெருமாள் திருமுன்னுக்கு மேற்கே (கனகவல்லித்) தாயார் திருமுன் அமைந்துள்ளது. நாயக்கர் காலக் கட்டுமானமாகத் தோன்றும் மண்டபம், பெருமாள் கோயிலின் வெளிப்புறச் சுவரில் தொடங்கி, கோயிலின் தென்திசை மதில் சுவர் வரை நீள்கிறது. மஹா மண்டபத்தைக் கடந்து தாயார் சன்னதிக்குச் செல்வோமெனில், சுவரின் எந்த ஒரு விமான உறுப்பும் இல்லாத அர்த்த மண்டபத்தை அடையலாம். அர்த்த மண்டபத்தைக் கடந்தால், முக மண்டபத்தையும், அதனைத் தொடர்ந்து கருவறையையும் காணலாம். விமானமும் முக மண்டபமும், உபபீடம், உபானம், பத்ம உபானம், கம்பு, ஜகதி, எண்பட்டைக் குமுதம், கண்டம், பட்டிகை, வேதிக் கண்டம், வேதிகை ஆகிய உறுப்புகள் பெற்று பாத பந்த அதிஷ்டானத்துடன் அமைந்துள்ளன. தூண்களின் மேல் காணப்படும் தரங்க வெட்டுப் போதிகை, இக்கட்டடம் பெருமாள் கோயிலுக்குக் காலத்தால் பிற்பட்டதென்பதை உணர்த்துகிறது. இதரவை தாயார் சன்னதிக்கு வடக்கே திருமாமணி மண்டபம் அமைந்துள்ளது, அதற்கு வடக்கே ராமர் சன்னதியும், ராமர் சன்னதிக்குக் கிழக்கே வேணுகோபாலன் சன்னதியும், அதற்கு வடக்கே தேசிகன் சன்னதி, நம்மாழ்வார் சன்னதி, ஆண்டாள் சன்னதி ஆகிய திருமுன்களும் அமைந்துள்ளன. இவை அனைத்தும் நாயக்கர் காலக் கட்டுமானங்களாகவே தோன்றுகின்றன. கோயிலின் வடகிழக்கில், யாக சாலை, ராமானுஜர் சன்னதி அமைந்துள்ளன. யாகசாலை மண்டபத்தின் கண்டப்பகுதியில் ஒரு நெடிய சிற்பத் தொகுதியில் கோலாட்டக் காட்சி விரிவாகக் காட்டப்பட்டுள்ளது. பலர் ஆடும் கோலாட்டங்களுக்கிடையே, ஒருவர் பறை இசைக்க, ஓர் ஆணும், பெண்ணும் துணியை வைத்து ஊரக நடனம் ஆடும் காட்சியும் இத்தொகுதியில் அமைந்துள்ளது. ![]() வீர ராகவப் பெருமாள் திருமுன் இருளோவென்று இருப்பதால் கல்வெட்டுகள் இருப்பது தெரிந்தாலும் படிக்கின்ற வகையில் இல்லை. திருச்சுற்றில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி உண்டு. திருச்சுற்றுக்கும் விமானத்தின் வெளிப்புறத்துக்கும் இடைப்பட்ட பகுதிக்கு செல்ல அனுமதி கிடையாது என்று கூறப்பட்டதால் கல்வெட்டுகளைப் பக்கத்திலிருந்து கூடப் பார்க்க முடியவில்லை. கோயில் அதிகாரிகளின் இதே கொள்கையினால், விமானத்தின் வெளிப்புறம் முழுவதும் தூசி படர்ந்து, ஒட்டடையின் சரணாலயமாக அமைந்துள்ளது. கல்வெட்டு, கோயில் கருவறை தெய்வத்தை எபப்டிக் குறிப்பிடுகிறது? படுத்துக் கிடக்கும் விஷ்ணுவிற்கும், வீர ராகவன் என்ற பெயருக்கும் என்ன தொடர்பு?, என்று எண்ணியபடியே கோயிலை நீங்கினோம். கோயில் வளாக அமைப்பு ![]() |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |