http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 39

இதழ் 39
[ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

வரலாற்று முடிவுகளும் மதநம்பிக்கைகளும்
நல்லூர்ப் பஞ்சரங்கள்
திரும்பிப் பார்க்கிறோம் - 11
பிள்ளையார் வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும்
திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை வட்டெழுத்துக் கல்வெட்டுகள்
அங்கும் இங்கும் (செப். 16 - அக். 15)
The Gajabahu Synchronism
காதலியின் கவலையும் சங்க கால வேட்டையும்
சங்ககாலத்து உணவும் உடையும் - 3
இதழ் எண். 39 > தலையங்கம்
வரலாற்று முடிவுகளும் மதநம்பிக்கைகளும்
ஆசிரியர் குழு
வாசகர்களுக்கு வணக்கம்.

நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் வரலாறு.காமுக்குத் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் இந்நல்ல வேளையில், இரு வாரங்களுக்கு முந்தைய ஆனந்தவிகடன் வார இதழ், தனது 'விகடன் வரவேற்பறை' என்ற பகுதியில் வரலாறு.காம் மின்னிதழை அறிமுகப்படுத்திய எதிர்பாராத இன்ப அதிர்ச்சியையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். சில மாதங்களுக்கு முன் திரு. மதனின் மேம்போக்கான கருத்துக்களைக் கண்டித்து வெளியிட்டிருந்த மடல்களைத் தனிமனிதத் தூற்றலாகக் கருதாமல், கருத்துக்களைக் கருத்துக்களால் மறுத்த ஆக்கபூர்வமான நிகழ்வாகவே விகடன் பார்த்திருக்கிறது என்பதை எண்ணி மனநிறைவு கொள்கிறோம். இவ்வறிமுகம் வாசகர் வட்டத்தை இருமடங்காக்கியிருக்கிறது என்பது கூடுதல் மகிழ்ச்சி.

மானுட வாழ்க்கை எப்போதும் தொடர்ச்சியான இன்ப நிகழ்வுகளை மட்டுமே கொண்டதில்லை என்ற முன்னோர்களின் வாக்குக்கேற்ப, அடுத்த சில நாட்களிலேயே சில வருத்தமான நிகழ்வுகளும் இந்திய அரசியல் அரங்கில் நடந்தேறின. அரசியலில் மதம் மூக்கை நுழைப்பதும் மதத்தில் அரசியல் குறுக்கிடுவதும் எல்லா உலக நாடுகளிலும் நடப்பவைதான் என்றாலும், அவை நாட்டின் வளர்ச்சியைப் பாதிப்பது பெரும்பாலும் ஆசிய நாடுகளில்தான். எதைப்பற்றிக் கூறவருகிறோம் என்பது வாசகர்களுக்கு இந்நேரம் புரிந்திருக்கும். அண்மைக் காலமாக நாள் மற்றும் வார இதழ்களின் பக்கங்களை நிரப்பிவரும் சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றிய சர்ச்சைகளை ஆராய்வது நமது நோக்கமல்ல என்றாலும், அதன் பின்னணியில் இரு தொல்லியல் அதிகாரிகள் பாதிக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல, கண்டனத்துக்குரியதும் கூட. ஓட்டுப் பொறுக்கும் அரசியல் ஆட்டத்தில் தொல்லியல் துறையைப் பலிகடாவாக ஆக்குவது எந்த விதத்தில் நியாயம்?

ஆயிரம் குறைகள் இருந்தாலும், தொல்லியல் துறையின் சேவை நாட்டுக்குக் கட்டாயத் தேவை. இதன் பணிகளில் அரசியல் நுழைந்திருந்தாலும், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலும், அரசுத்துறைகளுக்கே உரிய மெத்தனப்போக்குடன் செயல்பட்டாலும், இத்துறை இல்லாவிட்டால், பல்லாயிரக்கணக்கான நினைவுச் சின்னங்களும் பழங்கோயில்களும் முறையாகப் பராமரிக்கப்படாமல் அழிந்தே போயிருக்கும். தேசிய மற்றும் மாநில அளவில் வரலாறு தொடர்பான சர்ச்சைகள் ஏற்படும்போது ஆதாரபூர்வமான தகவல்களை அளிப்பது இதன் கடமைகளில் ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன் அயோத்தியில் பிரச்சினை ஏற்பட்டபோதும் இத்துறையின் உதவி நாடப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பல்வேறு அரசியல் காரணங்களினால் இம்முடிவுகள் வெளியிடப்படாமலேயே உள்ளன. தற்போது இராமர் பால விவகாரத்திலும் இதன் ஆய்வு முடிவு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் இடையே கடலுக்கடியில் இருக்கும் நிலப்பரப்பு இயற்கையா, செயற்கையா என்று ஆராய்ந்தாலே பிரச்சினை முடிந்துவிடும் எனும்போது, இராமரின் இருப்பைக் கேள்விக்குறியாக்குவது எதற்கு? எனினும், இவ்விவாதம் எழுந்துவிட்ட காரணத்தால், வரலாற்று அடிப்படையிலான முடிவுக்கும் மதரீதியிலான நம்பிக்கைக்கும் உள்ள வேறுபாட்டை உணரவேண்டியது அவசியமாகிறது.

இராமரின் இருப்பு மட்டுமல்ல. எந்த ஒரு ஆய்வுப்பொருளையும் வரலாற்றுச் சிந்தனையுடன் நோக்கும்போது இன, மொழி மற்றும் மதநம்பிக்கைகளைப் புறந்தள்ளி வைத்து, உண்மைக்கு மட்டுமே முதலிடம் தரவேண்டும். ஆய்வாளரின் இறைநம்பிக்கை மற்றும் தாம் சார்ந்த சமூக அரசியல் இயக்கக் கொள்கைகள் வரலாற்று முடிவுகளில் குறுக்கிடலாகாது. அவ்வாறு குறுக்கிட்டால் அவரை நேர்மையான ஆய்வாளர் என்றும் அவர் செய்ததை முறையான ஆய்வு என்றும் ஒத்துக்கொள்ள முடியாது. மத அடிப்படையில் நோக்கும்போது, அறிவியலுக்கு அங்கே வேலையில்லை. இல்லாத ஒரு பொருளை மனிதமனம் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு, அதன்மூலம் சில பல ஆறுதல்களையும் ஊக்கங்களையும் பெறும்போதோ அல்லது சிறுவயதில் நல்வழி காட்டவோ நேர்மறையான அக்கற்பனைக்குத் தடையேதுமில்லை. ஆனால் அது ஒரு இனத்தின் அல்லது நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும்போது, மூடநம்பிக்கை என்ற முத்திரை குத்தித் தூக்கி எறிவதைத் தவிர வேறு வழியில்லை. அறிவியலுக்கு அப்பாற்பட்ட மனிதகுல நம்பிக்கைகளை உடல் உறுப்புகளுடன் ஒப்பிடலாம். கைகளும் கால்களும் மனிதன் செயல்பட உதவுபவை என்றாலும், நீரிழிவு நோயினால் கால்களும் பாதிக்கப்பட்டு, உடலின் பிற உறுப்புகளும் அதனால் பாதிக்கப்படும் என்ற நிலை ஏற்படும்போது, அவற்றை வெட்டி எறியத்தான் வேண்டும். ஆரோக்கியமாக இருந்தபோது நடமாட உதவியவை என்ற நன்றிக்கடனுக்காக அதைக் கைவிடலாகாது என்று எண்ணினால், உடல் முழுவதும் பாதிப்படைவதைத் தடுக்கமுடியாது.

இந்து மதம் கொண்டிருக்கும் வேதங்கள் உருவாக்கப்பட்ட காலகட்டம் பற்றிய ஆராய்ச்சியிலும் இதுபோன்ற சிக்கல்கள் இருக்கின்றன. ஒரு இந்து என்ற முறையில் மதத்தின்மீது கொண்ட அதீதப் பற்றினால் அதன் காலம் மனிதகுலம் தோன்றுவதற்கு முந்தையது என்று நம்பலாம். அது அவரவர் தனிப்பட்ட உரிமை. ஆனால், வரலாற்று நோக்கில் ஆராய்ந்து வெளிக்கொணரப்படும் உண்மைகள் அதற்குப் புறம்பானதாக இருக்கும். இன்னும் சில முடிவுகள் அடிப்படை மதநம்பிக்கைகளைத் தகர்த்தெறிவனவாகக்கூட இருக்கலாம். ஆண்டாண்டு காலமாக நம்பிவரும் ஒரு கருத்தை ஒரு வரலாற்றாய்வு உடைத்தெறியும்போது ஏற்றுக்கொள்ள மனம் சற்றுத் தயங்கத்தான் செய்யும். ஆனால், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகளை உணர்ந்து, தவறான மூடநம்பிக்கைகளைக் களைவதுதானே ஆறறிவு பெற்ற மனிதனுக்கு அழகு? அது இராமராக இருந்தால் என்ன? வேதங்களாக இருந்தால்தான் என்ன? ஓட்டுக்காக மத உணர்வுகளைக் கிளறி விடும் அரசியல் கட்சிகளும் மதத்தின் பெயரால் வயிறு வளர்க்க மதத்தலைவர் என்று சொல்லிக் கொள்பவர்களும் வேண்டுமானால் இவற்றை ஏற்காததுபோல் நடிக்கலாம். ஆனால் உண்மையை அறியவேண்டும் என்ற ஆர்வத்துடன் இருப்பவர்கள் இவற்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

அன்புடன்
ஆசிரியர் குழு
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.