http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 39
இதழ் 39 [ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2007 ] இந்த இதழில்.. In this Issue.. |
முன்னுரை
திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டைக் குன்றின் வடபுறத்தில் உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குக் கீழே ஒரு நீண்ட பிளவு உள்ளது. அதன் வழியே போனால் மலையின் மேற்குப்புறம் அமைந்துள்ள இயற்கைக் குகைத்தளத்தைச் சென்றடையலாம். ஆனால் போகும் வழி மிகவும் குறுகலானது. பல இடங்களில் தவழ்ந்துதான் செல்லமுடியும்; சறுக்கினால் செங்குத்தான பாறைச் சரிவிலிருந்து உருண்டு கீழே விழுந்துவிடும் அபாயம் உள்ளது. மழைக்காலத்திலோ, பலத்த காற்று வீசும்போதோ அங்குப்போவதைத் தவிர்க்கவேண்டும். மற்ற நேரங்களில் போகவிரும்பினாலும் கோயில் அலுவலர்களின் அனுமதி பெற்றுத் தகுந்த பாதுகாப்புடன் தான் செல்லவேண்டும். 1961-66 ஆண்டுகளில் நான் முதன்முறையாகக் குகைக் கல்வெட்டுகளை ஆய்வுசெய்தபோது அங்குச் செல்ல அனுமதி கிடைக்கவில்லை. 1937இல் அங்கிருந்து படியெடுக்கப்பட்ட தமிழ்-பிராமிக் கல்வெட்டை(1) நேரில் ஆய்வு செய்யமுடியாமல் அதன் மசிப்படியின் அடிப்படையில் ஒருவாறு முயன்று படித்து என் நூலில் சேர்த்திருந்தேன்(2). ஆயினும் என் வாசிப்பில் எனக்கே திருப்தி ஏற்படாததால் இக்கல்வெட்டை நேரில் கண்டு ஆய்வு செய்யவேண்டும் என்று 1991-95 ஆண்டுகளில் பலமுறை மற்ற ஆய்வாளர்களுடன் அங்குச் சென்று தேடிய பின்பும் அது கிடைக்கவில்லை. ஏற்கனவே மிகவும் தேய்ந்திருந்த அக்கல்வெட்டு கடந்த அறுபது ஆண்டுகளில் முற்றிலுமாக அழிந்துவிட்டது போலும். இத்தகைய அனுபவம் மேலும் பல இடங்களில் எனக்கு ஏற்பட்டிருப்பினும் என் சொந்த ஊராகிய திருச்சிராப்பள்ளியில் இருந்த ஒரே தமிழ்-பிராமிக் கல்வெட்டைக் காணக் கொடுத்துவைக்கவில்லை என்பது தீராக்குறையாகவே இருக்கும். காணாமற்போன கல்வெட்டைத் தேடிப்போன இடத்தில் புதிதாக ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டு கிடைத்ததும், ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு, சரியாக வாசிக்கப்படாமலிருந்த இரு வட்டெழுத்துக் கல்வெட்டுகளை ஆய்வு செய்யும் வாய்ப்பு கிட்டியதும் ஓரளவு மன ஆறுதலையளித்தன. இவ்வட்டெழுத்துக் கல்வெட்டுகளைப் பற்றிச் சுருக்கமாக எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். புதிய கல்வெட்டு 1991ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டைக்கு ஒரு வல்லுநர்க் குழுவுடன் சென்றிருந்தேன். அக்குழுவில் என்னைத்தவிர மையத் தொல்லெழுத்தியல் துறைத்தலைவர் எம்.டி.சம்பத், தமிழ்நாடு தொல்லியல்துறை ஆய்வாளர் என்.ஸ்ரீனிவாசன், மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையக் கல்வெட்டாய்வாளர் மு.நளினி, பொறியாளர் மதகடி தங்கவேலு, நாணயவியல் ஆய்வாளர் அளக்குடி ஆறுமுக சீதாராமன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். காணாமற்போன கல்வெட்டைத் தேடிக் களைத்துப்போன எங்கள் குழுவினர் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், நெடிய பாறைச் சுவரின் மீது சாய்ந்தவண்ணம் காவிரியாற்றைப் பார்த்துக்கொண்டிருந்த நளினி சற்றே திரும்பிப் பார்த்து, 'இதோ இங்கு ஒரு கல்வெட்டு இருக்கிறதே' என்று கூவினார். காணாமற்போன கல்வெட்டாக இருக்குமோ என்று ஆவலுடன் அனைவரும் அங்குச் சென்று உற்றுநோக்கினோம். ஆனால் அது இதுவரை கண்டுபிடிக்கப்படாத ஒரு புதிய வட்டெழுத்துக் கல்வெட்டாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தோம். கல்வெட்டின் வாசகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது(3). எழுத்தமைதியின் அடிப்படையில் இக்கல்வெட்டின் காலம் கி.பி ஐந்தாம் நூற்றாண்டின் இறுதி அல்லது ஆறாம் நூற்றாண்டின் தொடக்கம் என்று கொள்ளலாம். இரு சொற்களின் இறுதி மெய்களிலும் புள்ளிகள் இடப்பட்டுள்ளன. இப்புள்ளிகள் மெய்களுக்கு இடதுபுறத்தில் இடப்பட்டுள்ளமை கவனித்தற்குரியது. அகரம் : அந்தணர் குடியிருப்பு. இச்சொல் 'அக்ரஹாரம்' என்ற வடமொழிச் சொல்லின் மரூஉ என்று பொதுவாகக் கருதப்படுகிறது. ஆயினும், இது தமிழ்ச் சொல்லான நகர் > நகரம் என்பதன் திரிபாகவும் இருக்கலாம். குசலன் : ஒருவனின் பெயர். வடமொழியில் இச்சொல்லுக்கு வல்லுநர் என்று பொருள். திவாகர நிகண்டுவில் இதற்கு 'மிக வல்லோர்' என்று பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. இரு கல்வெட்டுகளின் மீளாய்வு குன்றின் வடபுறமாக உள்ள நீண்ட பிளவின் நடைபாதையில் இரு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் ஒரு கல்வெட்டு அடுத்தடுத்து இருமுறையும், மற்றொரு கல்வெட்டு இடைவெளி விட்டுவிட்டு நான்கு முறையும் பொறிக்கப்பட்டுள்ளன. இப்போதும்கூட மலைக்கோயில்களின் படிக்கட்டுகளில் கொடையாளிகள் தம் பெயர்களைப் பல இடங்களில் வெட்டுவித்துள்ளதைக் காண்கிறோம். இங்கும் சமணர் குகைக்குச் செல்லும் நடைபாதையில், அம்மதத்தினர் தம் பெயர்களைப் பல இடங்களில் மீண்டும் மீண்டும் பொறித்தனர் என்று கொள்ளலாம். இதிலிருந்து தமிழ்-பிராமி காலத்திலிருந்து பல்லவர் ஆட்சித் தொடக்கம் (கி.மு 300 - கி.பி. 700) வரை இங்குச் சமணப்பள்ளி நிலைபெற்றிருந்தது என்று தெரிந்து கொள்ளமுடிகிறது. கல்வெட்டு எண் - 1 இக்கல்வெட்டு ஒருமுறை ஒரே வரியிலும், மற்றொரு முறை இரு வரிகளிலுமாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இதை மையத் தொல்லெழுத்தியல் துறையினர் சேனதண்டன் என்று வாசித்துள்ளனர்(4). பேராசிரியர் டி.வி.மகாலிங்கம் இக்கல்வெட்டை செனாதண்டன், சேனதண்டன், சென்தண்டன் என்று பலவிதமாக வாசித்துள்ளார்(5). கல்வெட்டின் சரியான வாசகம் வருமாறு: இரண்டாவது எழுத்தை 'ந'கரமாகவும் கடைசி எழுத்தை 'ன'கரமாகவும் வாசிக்கவேண்டும். மூன்று மெய்யெழுத்துக்களின் மீதும் புள்ள வைக்கப்பட்டுள்ளது. மேலும் 'செ' என்ற உயிர்மெய் மீதும் குறிகைக் குறிக்கும் வகையில் புள்ளியிடப்பட்டுள்ளது. மெய் எழுத்துக்களுக்கும் எகர, ஒகரக் குறில்களுக்கும் புள்ளியிடவேண்டும் என்ற தொல்காப்பிய சூத்திரத்திற்கு இக்கல்வெட்டு விளக்கமளிக்கிறது. செந்தண்டன் என்பது ஒரு பெயராகும். எழுத்தமைதியிலிருந்து இக்கல்வெட்டின் காலம் கி.பி ஆறாம் நூற்றாண்டு எனக் கணிக்கலாம். கல்வெட்டு எண் - 2 நான்கு இடங்களில் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டை, மையத் தொல்லெழுத்தியல் துறையினர் வடமொழியில், பல்லவ கிரந்த எழுத்துக்களில் உள்ளது என்றும், இது பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனின் விருதாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்(6). ஆயினும் அவர்கள் இக்கல்வெட்டை 'கம்ட்டுஹ' என்று வாசித்திருப்பது வடமொழியில் இல்லாத சொல்லாக உள்ளது. இக்கல்வெட்டை மீளாய்வு செய்த டி.வி.மகாலிங்கம் இது தமிழில், தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது என்று கருத்துத் தெரிவித்து, இதைக் 'கட்டுணா' என்று வாசித்துள்ளார்(7). அவரும் இது மகேந்திரவர்மனின் விருதுகளில் ஒன்றாக இருக்கலாம் என்று கூறுகிறார். ஆனால் இந்த வாசிப்பும் பொருள் சிறக்க அமையவில்லை. மேலும் மகேந்திரவர்மனுக்கு இதுபோன்ற விருது இருந்ததாக வேறு கல்வெட்டுகளிலும் சான்றுகள் இல்லை. அண்மைக்காலத்தில் பல பண்டைய வட்டெழுத்துக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு அவற்றை வாசிக்கும் முறையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இதுவும் தமிழில் ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டாகும். இதன் திருத்திய வாசகம் வருமாறு. முதல் எழுத்தில் பல்லவ கிரந்தத்தின் தாக்கம் தென்படுகிறது. இரண்டாவது எழுத்தின் வலப்புறம் புள்ளியிடப்பட்டுள்ளது. மூன்றாம் எழுத்தின் 'ஆ'காரக் குறியீடு கீழே சேர்க்கப்பட்டுள்ளது. இறுதி எழுத்து வட்டெழுத்து 'ணை' ஆகும். எழுத்தமைதியின் அடிப்படையில் இக்கல்வெட்டு கி.பி ஏழாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தைச் சார்ந்தது என்று கணிக்கலாம். 'கட்டாணை' என்பது ஒரு பெயராகும். சில ஆண்டுகளுக்கு முன்னர் தருமபுரி மாவட்டத்தில் கட்டாணை பருமன் என்ற அரசனைக் குறிப்பிடும் பல நடுகல் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன(8). அக்கல்வெட்டுகளின் எழுத்தமைதியிலிருந்து அவை கி.பி. எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்று கூறப்பட்டுள்ளது. ஆயினும் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டைக் கல்வெட்டுகளில் காணப்படும் கட்டாணை என்ற பெயர் பழந்தமிழகத்தில் வழக்கிலிருந்தது என்ற உண்மையை தருமபுரி நடுகல் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. நன்றி : ஒளிப்படங்கள் மையத் தொல்லெழுத்தியல் துறையினரால் எடுக்கப்பட்டவை. படம்-1 நேரடியாகவும், படங்கள் 2-3 மசிப்படிகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. குறிப்புகள் 1. ARE 139: 1937-38 2. Iravatham Mahadevan, 'Corpus of the Tamil Brahmi Inscriptions', Seminar on Inscriptions, Madras, 1966, No. 68. 3. இக்கல்வெட்டு மிகவும் தேய்ந்த நிலையில் உள்ளது. இதன் மசிப்படத்தை முயன்றும் எடுக்க இயலவில்லை. கல்வெட்டின் மீது சாக் (Chalk) தூளைத் தூவி நேரடியாக எடுத்த ஒளிப்படம் இங்குத் தரப்பட்டுள்ளது. 4. ARE 136: 1937-38 5. T.V.Mahalingam, Early South Indian Palaeography, Madras, 1967, pp. 306-307. 6. ARE 134, 137 & 140: 1937-38 7. T.V.Mahalingam, Op.Cit, pp. 301-05. 8. Natana Kasinathan, 'Kattanai Parumar', South Indian Studies I, Madras, 1978, pp. 82-85. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |