http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 39
இதழ் 39 [ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2007 ] இந்த இதழில்.. In this Issue.. |
கபிலரை அறியாதவர்கள் இருக்க முடியாது. தந்தையை இழந்த பாரி மகளிருக்குத் துணை நின்ற அந்தப் பழந்தமிழ்ப் புலவரின் பாடல்களுள் ஒன்று (318) அகநானூற்றில் காதலி ஒருத்தியின் கவலையைப் படம் பிடிப்பதாய் அமைந்துள்ளது. அவள் உள்ளம் கவர்ந்தவன் மலை நாட்டவன். முழவொலி போல அருவி கொட்ட, அதன் வளத்தால் வளர்ந்து செழித்திருக்கும் செடி, கொடிகளின் பூப்பரவலில் வண்டுகள் மொய்த்தொலிப்பது யாழென ஒலிக்கும் வளநாடு அவனுடையது. காதலியைக் கண்டு மகிழ நாள் தவறாமல் அவள் வாழிடம் வந்து செல்ல அவன் பயன்படுத்திய பாதை பகலிலேயே பாம்புகள் மேயும் காட்டுப்பாதை. புலிகளின் உறுமலும் யானைகளின் ஒலியும் நிறைந்த ஆபத்தான வழி. இந்தத் துன்பங்கள் எவற்றிற்கும் அஞ்சாது காதலியோடு இருக்கும் மகிழ்வையே பெரிதாய்க் கருதி இரவுப்போதுகளில் இப்பாதை வழியே அவன் தனியே வந்து செல்வது காதலிக்குக் கவலை வளர்த்தது. 'திருமணம் செய்து கொள்வோமே' என்று சொல்லிப் பார்த்தாள். அவனோ காதலை நீட்டிப்பதிலேயே கவனமாக இருந்தான். அவள் மீண்டும் சொன்னாள், 'மணம் செய்து கொள்வோம். அதின் உனக்கு நாட்டம் இல்லையாயின் இனி வராதே!' அவளுக்கே தெரியும், அவன் வராமல் இருக்கமாட்டான் என்பது. அவள் விரும்பவும் செய்தாள் அவன் வரவேண்டுமென்று. அதனால், தொடர்ந்து சொன்னாள், 'அப்படி வருவாய் என்றால், அன்பனே, உன் நண்பர்களுடன் நாய்களைத் துணைக்குக் கொண்டு வேட்டைக்குச் செல்லும் போது காட்டு வழியில் திசைமாறிப் போய்விடும் சூழல்களில் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளவும் விலங்குகளைத் துரத்திச் செல்லும் நாய்களை மீள அழைக்கவும் குறிப்பொலி செய்யப் பயன்படுத்துகிறீர்களே ஓர் ஊது கொம்பு, அதை நீ ஊர்த் திரும்பியதும் கொஞ்சம் ஊதி, அந்த ஊதல் ஒலியால் நீ நலம்படத் திரும்பிவிட்டாய் என்பதை எனக்கு அறிவித்திடல் வேண்டும்!' காதலியின் கவலைகளில்கூட வரலாற்றைத் தோய்த்துத் தந்திருக்கும் கவிஞர்கள் பிறந்த நாட்டில், வரலாறு எழுதத் தரவுகள் இல்லை என்பாரும் பிறந்துள்ளனரே அதுதான் துன்பம். this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |