![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 46
![]() இதழ் 46 [ ஏப்ரல் 21, 2008 ] இரா.கலைக்கோவன் மணிவிழா சிறப்பிதழ் ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
ஏப்ரல் முதல் நாள் நானும் டாக்டரும் திருச்சிராப்பள்ளியிலிருந்து காலை 6.30 மணிக்குப் புறப்பட்டோம். தஞ்சாவூரில் இசையாசிரியை லலிதாம்பாள் வீட்டில் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு அவருடன் வலஞ்சுழி சென்றடைந்தோம். வாசலிலேயே பத்மநாபன் எங்கள் வரவை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார். இரண்டாண்டுகளுக்கு முன் சேத்ரபாலர் கோயிலில் நாங்கள் கல்வெட்டுப் படித்தபோது சுற்றிலும் மேடாக இருந்தது. ஓர் ஆள் நிற்கும் அளவு பள்ளத்தில் கோயில் இருந்தது. அந்தப் பள்ளத்தில் இறங்கிப் பாடாய்ப்பட்டுக் கல்வெட்டுகளைப் படித்தமை நினைவிற்கு வந்தது. இப்போது கோயிலைச் சுற்றியிருந்த மேடு அகற்றப்பட்டுச் சுற்றுப்புறமும் கோயிலும் சமநிலையில் உள்ளன. கல்வெட்டுப் படித்த காலத்தில் இப்போது போல் இருந்திருந்தால் எவ்வளவு எளிதாகக் கல்வெட்டுகளைப் படித்திருக்கலாம் என்ற எண்ண அலைகளுடன் கோயிலை வலம் வந்தோம்.
'தீவணச் சாம்பர் பூசித் திருவுரு இருந்தவாறும்' என்ற அப்பரின் பாடலடியை, கல்வெட்டுப் படித்த காலத்தில் தலையெல்லாம் மண் துகளும் உடலெல்லாம் மண்பூச்சுமாய் இருந்த என் தோற்றத்தோடு ஒப்பிட்டு டாக்டர் எழுதியிருந்த கட்டுரை நினைவிற்கு வந்தது. 'பூச்சுக்களும் பூண்டவைகளுமாய் இருந்த இறைவனின் திருக்கோலத்தை யாவரே எழுதுவாரே என்று அதிசயிக்கிறார் அப்பர். வியர்வைக் குளியலும் மண்பூச்சுமாய்த் தூசுப் பிழம்பாய் வெளிவரும் நளினியின் உழைப்புக் கோலத்தை யாவரை எழுதுவாரே என்றுதான் நான் அதிசயிக்கிறேன்' என்ற அந்த வரிகளைப் பெற என்ன தவம் செய்தோம் என உளம் மகிழ்ந்தேன். குடமுழுக்கு விழாவிற்குப் பிறகு இப்போதுதான் அங்குச் செல்கிறோம். அதனால், நிறைய மாற்றங்கள் தென்பட்டன. சேத்ரபாலர் கோயிலில் சேத்ரபாலர் புராணக்கதை விளக்கச் சிற்றுருவச் சிற்பங்களையும் தேவகோட்டப் பிள்ளையாரையும் டாக்டர் ஒளிப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது கோயிலின் துணை ஆணையர் திரு. ச. இலட்சுமணன் அங்கு வந்தார். அவர் குடமுழுக்கு விழா பற்றி விரிவாக டாக்டருடன் பேசிக்கொண்டிருந்தார். பிறகு கோயிலார் வரவேற்க உள்ளே சென்றோம். வெள்ளைப்பிள்ளையாரை வணங்கிவிட்டு, கோட்டங்களில் இருந்த சிற்பங்களைப் படமெடுத்துக் கொண்டோம். வலஞ்சுழி வாணரை வணங்கி நூல் சிறந்த முறையில் முடிந்தமைக்கு நன்றி தெரிவித்து, அந்த நூல் அமையப் பின்புலமாக நின்ற இனிய நண்பர் திரு. சு. சுந்தர் பரத்வாஜின் அன்பையும் பேருள்ளத்தையும் நினைத்தவாறே வெளிவந்தோம். கிழக்குப் பெருமண்டபத்தில் சிவபாதசேகரரான முதலாம் இராஜராஜர், சிவசரணரான முதலாம் இராஜேந்திரர் கல்வெட்டுகள் கண்ணில் பட்டன. அவற்றைப் படித்த நாட்களை அசைபோட்டபடி, வடக்கு வாயில் அருகே வந்தபோது குலோத்துங்கர் கல்வெட்டைக் கண்டோம். நண்பர் சீதாராமன் வரவழைத்த கோக்காலியில் அமர்ந்து குலோத்துங்கரின் பட்டத்தரசி நாராயணன் தீனசிந்தாமணியான புவனமுழுதுடையார் இக்கோயிலில் இருந்த இராஜேந்திர சோழன் மடத்திற்கு நிலக்கொடை அளித்த தகவலை வியர்வையில் குளித்தபடி படித்ததைப் பற்றிப் பேசிக்கொண்டே வெளியில் வந்தோம். வலஞ்சுழி வாணர் கோயிலின் தென்பக்கத்து எழுந்தருளியிருந்த ஏகவீரியின் திருமுன்னைக் கண்டோம். கற்கள் பிரித்துப் போட்ட நிலையிலேயே இருந்தன. இந்தத் திருமுன்னைக் கட்டுவதில் உள்ள சிக்கல்களை விளக்கித் துணை ஆணையர் வருந்தினார். அங்கும் சில ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டு, ஏகவீரி என்றைக்கு இங்கு வந்து அமர நினைத்திருக்கிறாரோ அன்றைக்கு அவரே வருவார், காத்திருப்போம் என்று நினைத்தவாறு ஏகவீரியிடம் முறையிடச் சென்றோம். எங்கள் எண்ணம் அறிந்தவர் போல் 'விரைவில் என் இருப்பிடத்திற்குச் சென்றுவிடுவேன்' எனப் புன்னகைத்த ஏகவீரி அன்றைய நிகழ்வுகள் அனைத்தும் சிறக்க நடக்க வாழ்த்தினார். ![]() பத்மநாபன் கைப்பேசி அடிக்கடி ஒலித்துக்கொண்டிருந்தது. அங்கிருந்து புறப்பட்டதும் பத்மநாபன் மெதுவாக, டாக்டரிடம், 'சீதாராமன் நான்கு முறை தொலைப்பேசியில் அழைத்துவிட்டார்' என்றார். விரைவில் அவரைப் பார்ப்போம் என்றவாறு வெள்ளைப் பிள்ளையாரை நெருங்கினோம். துணை ஆணையர் திரு. ச. இலட்சுமணன் அன்போடு பிரசாதங்கள் தந்தார். பொறுமையோடும் திறமையோடும் வலஞ்சுழிக் கோயிலைப் புதுப்பித்திருக்கும் அவரது பணிச் செம்மையைப் பெரிதும் போற்றியவாறே விடைபெற்றோம். 'அவர் அன்பணைப்பினால்தான் வலஞ்சுழி வாணர் நூல் மக்களைச் சென்றடைகிறது. அந்த வருவாய் பல களஆய்வுகளுக்கு வித்திடுகிறது. தொடர்ந்து உதவி வரும் அப்பெருந்தகைக்கு வரலாறு நன்றிக்கடன் பட்டுள்ளது' என்றார் டாக்டர். அடுத்த பத்தாவது நிமிடம் பஞ்சவன் மாதேவீசுவரத்தை அடைந்தோம். வாசலிலேயே சீதாராமன் காத்திருந்தார். உள்ளே சென்றதும் முதலில் தட்சிணாமூர்த்தியைத்தான் பார்த்தோம். தட்சிணாமூர்த்தி, அவருக்கு முன்னிருந்த அவலட்சணமான மண்டபத்தை நீக்கிய மகிழ்ச்சியில் புன்னகைத்தார். இந்தத் திருப்பணிக்கு உதவிய கரூர் அன்பர் திரு. கே. என். பாலுசாமியின் பேருள்ளத்தைப் போற்றிய டாக்டர், அவரால்தான் இராஜேந்திரரின் கல்வெட்டிற்கு விடுதலை கிடைத்துள்ளது என்று கூறி மகிழ்ந்தார். தோழர் ரவி எப்பொழுதும் போல் செடி, கொடிகளை அகற்றிக் கல்வெட்டைப் படிப்பதற்கு வழியமைத்துக் கொண்டிருந்தார். தட்சிணாமூர்த்தி முன்பிருந்த மண்டபத்தை நீக்கியபோதே சீதாராமன் பஞ்சவன் மாதேவீசுவரத்துப் பள்ளிப்படை பற்றிய முதலாம் இராஜேந்திரரின் கல்வெட்டை முழுவதுமாக டிஜிட்டல் கேமராவில் படமெடுத்துக் குறுந்தகட்டில் பதிவுசெய்து அனுப்பியிருந்தார். திரு. மஜீதின் உதவியுடன் முன்பே படித்திருந்த கல்வெட்டுப் பாடத்துடன் ஒளிப்படங்களைக் கொண்டு ஒப்பீடு செய்து ஆங்காங்கே விட்டுப்போயிருந்த பகுதிகளை நிறைவு செய்தோம். ஆனாலும் கல்வெட்டை முழுமையாகப் படிக்கமுடியவில்லை. அதனால்தான் இந்தப் பயணத்தின் போது இராஜேந்திரரின் கல்வெட்டை முழுமை செய்வதென்று முடிவெடுத்து இங்கு வந்தோம். ![]() ஒளிப்படங்கள் மட்டும் கொண்டு கல்வெட்டுகளை முழுமையாகப் படிப்பது முடியாது. கல்வெட்டு வெட்டப்பட்டுள்ள கல்லின் தன்மை, படமெடுக்கப் பயன்படும் இயற்கை, செயற்கை ஒளி இவற்றைப் பொருத்தே ஒளிப்படங்கள் அமையும். அதனால், ஒளிப்படங்கள் ஓரளவிற்குதான் கல்வெட்டுப் படிப்பதில் உதவமுடியும். நேரில் பார்த்துப் படித்தால்தான் கல்வெட்டுப் படிப்பதில் முழுமை ஏற்படும். நேரில் படித்தபோது பல செய்திகளைக் கண்டறியமுடிந்தது. கொடை கொடுக்கப்பட்ட ஊரின் பெயரான சிற்றாடி, நிவந்தக்காரர்களுக்கு கொடுக்கப்பட்ட நெல் அளவுகள், சில தொழிலர் பெயர்கள் இவற்றை முழுமையாகப் படித்தறிய முடிந்தது. பொரிந்துள்ள சில பகுதிகளைத் தவிர அனைத்தையும் முழுமையாகப் படித்து முடித்தபோது, கும்பகோணம் மாமி மெஸ்ஸிலிருந்து மதிய உணவுடன் சீதாராமனும் பத்மநாபனும் வந்திருந்தனர். (கல்வெட்டின் முழுப்பாடமும் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளது.) உணவருந்தி ஓய்வெடுத்த நேரத்தில், வரலாறு டாட் காமில் ஒரு நேயர், 'கோயில்களின் அளவுகள் முக்கியமா? அதனால் தமிழனுக்கு என்ன லாபம்? கோயிலைக் கட்டியவன் யார் என்பது தெரிந்தாலாவது ஏதேனும் பயனுண்டு. வெறும் அளவுகளும் வண்ணனைகளும் என்ன பயன் தந்துவிடும்?' என்பது போல எழுதியிருந்தமை குறித்து டாக்டரின் கருத்தறிய விரும்பி வினவினேன். இசை ஆசிரியை இலலிதாம்பாளும் இது குறித்த டாக்டரின் விளக்கத்தை ஆவலோடு எதிர்நோக்கி இருந்தார். "ஆய்வில் அளவுகளின் முக்கியத்துவம் பற்றி விரிவான அளவில் ஒரு கட்டுரையே எழுதலாம். அளவுகள் இல்லாமல் பதிவுகள் இல்லை. அளவுகளே ஒப்பீட்டிற்கும் காலநிர்ணயத்திற்கும் அமைப்புகளைச் செய்தவர்களை அல்லது உருவாக்கியவர்களை ஓரளவிற்கேனும் ஊகிப்பதற்கும் உதவுகின்றன. அகழ்வாய்வு, கோயிற்கலை ஆய்வுகள், கல்வெட்டாய்வுகள் என எல்லாவற்றிலுமே அளவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. எந்த அளவு ஆழத்தில் பொருட்கள் கிடைக்கின்றன என்பதைப் பொருத்தே அகழ்வாய்வில் கிடைக்கும் பொருட்களின் காலம் கணிக்கப்படுகிறது. குடைவரைகளின் அளவுகளே அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கவும் அவற்றை அமைத்தவர்களைப் பற்றி ஊகிக்கவும் அக்குடைவரைகளின் சிறப்பியல்புகள் பற்றி விரிவான அளவில் சிந்திக்கவும் துணைநிற்கின்றன. நார்த்தாமலையில் காணப்படும் பதினெண்பூமி விண்ணகர் குடைவரையின் நீள, அகலங்களே அது பின்னாளில் விரிவு செய்யப்பட்டமையை உணர்ந்துகொள்ள உதவின. இக்குடைவரையின் கருவறையில் சிதைக்கப்பட்ட இலிங்கமும் முகமண்டபத்தில் பன்னிரண்டு விஷ்ணு திருமேனிகளும் உள்ளன. கல்வெட்டுகள் முதல் குலோத்துங்கர் காலத்திலிருந்து இக்கோயிலைத் திருமேற்கோயில் என்றும் பதினெண்பூமி விண்ணகர் என்றும் அழைக்கின்றன. பெருமாள் கோயில் கருவறையில் சிவலிங்கத்திற்கு வாய்ப்பில்லை. ஆனால், இக்கோயிலில் உள்ளது. இந்த மாறுபாடான சூழ்நிலையைப் புரிந்துகொள்ளவும் இக்கோயிலின் வரலாற்றை அறியவும் இவ்விண்ணகரின் அளவுகளே பெருமளவிற்கு உதவின. பல நேரங்களில் அளவுகளே கட்டமைப்பு, சிற்பம் இவற்றின் காலத்தை நிர்ணயிக்க துணைநிற்கின்றன. தென்திருப்பரங்குன்றம் குடைவரை சமணக் குடைவரையாக இருந்து பிற்காலத்தில் சைவக் கோயிலாக மாற்றப்பட்டது என்ற அறிஞர்களின் பரவலான கருத்தைத் தவறு என்று நிறுவப் பல கோயில்களில் நாம் எடுத்திருந்த கோட்ட அளவுகளே பயன்பட்டன என்பது நினைவில்லையா? மதுரை மாட்டக் குடைவரைகள் நூலில் இது குறித்து மிக விரிவாக விவாதித்திருக்கிறோமே! ஒரு கட்டமைப்பை யார் உருவாக்கினார்கள் என்பதைக் கண்டறிய கல்வெட்டுகள் மட்டுமே உதவ முடியும். கல்வெட்டுகள் இல்லாத சூழல்களில் கட்டமைப்பின் அளவுகள், அமைவுகள் கொண்டே அக்கட்டமைப்பு எந்த அரச மரபின் காலத்தில் ஏற்பட்டிருக்கலாம் என்பதை ஓரளவிற்கு ஊகிக்கமுடியும். கூத்தம்பூண்டியான் வலசுக் குடைவரைகள் தொடக்க நிலையிலேயே கைவிடப்பட்டவை. அங்கு அளவுகள் தவிர வேறெந்தத் தடயங்களும் இல்லை. அதனால்தான் அதை எந்த அரச மரபு உருவாக்கியிருக்க முடியும் என்பது பற்றி ஏதும் கூறக்கூடவில்லை. இதையெல்லாம் அந்த அன்பர் புரிந்துகொள்ளவேண்டும். அறிவியல் முறையிலான ஆய்வுகள் இல்லாது போனதால்தான் இன்றளவும் தமிழர்களின் வரலாறும் அவர்தம் அறிவியல் திறமும் உலக அரங்கில் அழுத்தமாகப் பதிவாகாமல் போய்விட்டன. தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் விமானம் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக உயர்ந்த பழங் கட்டுமானம் என்பதை அளவுகளின்றி எப்படி நிறுவமுடியும்? கால அளவுகளை முறையாகப் பதிவுசெய்யாமல் போனதால்தானே திரு. மதன் போன்றவர்கள் தமிழனுக்கு அந்த நூற்றாண்டிற்கு முன் வரலாறு இல்லை, இந்த நூற்றாண்டிற்கு முன் வரலாறு இல்லை என்றெல்லாம் எழுத முடிகிறது! கால நிரலான தமிழனின் வரலாற்றை எழுதுவதற்கு இலக்கியங்களையும் கோயில்களையும் விட்டால் வேறு வழியில்லை. தமிழனுக்கு வரலாறே கூடாது என்று நினைப்பவர்கள்தான் குடமுழுக்குகள் என்ற போர்வையில் கோயில்களில் உள்ள தமிழன் வரலாற்றை நாள்தோறும் அழித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் எஞ்சியிருக்கும் வரலாற்றுச் சுவடுகளையாவது அறிவியல் பின்னணியில் பதிவுசெய்வது நம் கடமை. அளவுகள் பற்றி எழுதியிருக்கும் அந்த அன்பர் அவற்றின் பின்னுள்ள முக்கியத்துவம் தெரியாமையினால்தான் அவ்வாறு எழுதியுள்ளார். அளவுகள் இல்லாமல் உண்மைகள் இல்லை, உண்மைகள் இல்லாமல் வரலாறு இல்லை என்பதை என்றேனும் ஒரு நாள் நம் நண்பர் விளங்கிக் கொள்வார். தலைப்பெழுத்துக்கள் இல்லாவிட்டால் எந்த மனிதனுக்கும் அடையாளம் இல்லை. அளவுகளும் அப்படித்தான். அவை இல்லாவிட்டால் வரலாற்றுக்கு அறிவியல் முகமே இல்லாமல் போய்விடும்" என்று முடித்த டாக்டர் மெலிதாகப் புன்னகைத்தார். எனக்கும் இலலிதாம்பாளுக்கும் டாக்டரின் துன்பம் புரிந்தது. நேரமாகிவிட்டதால் எஞ்சியிருந்த பணிகளை முடித்துக்கொண்டு சீதாராமன் வீட்டிற்குச் சென்றோம். சீதாராமனின் துணைவியாரும் அன்னையாரும் அன்போடு தந்த சிற்றுண்டியை அருந்தி, திருவாவடுதுறை நோக்கிப் பயணமானோம். திருவாவடுதுறை கோயிலைப் பார்த்துக்கொண்டே மடத்தை அடைந்தோம். 23ஆவது குருமகாசன்னிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் திருவுளப்பாங்கினால் பங்குனி-திருவோணம் குருபூசைக்காக திருவாவடுதுறை மடம் விழாக்கோலம் பூண்டிருந்தது. உள்ளே நுழைந்தபோது தேவாரம் ஒலித்துக்கொண்டிருந்தது. எங்கள் வருகையைத் திரு. செந்திலிடம் தெரிவிக்க, அவர், வரவேற்பறையில் அமர வைத்தார். அப்போது திரு. எஸ். நாராணயசாமி என்னிடம் வந்து, 'கண்ணாடி அணிந்து அமர்ந்திருக்கிறாரே அவர்தான் டாக்டர் கலைக்கோவனா?' என்று கேட்டார். 'ஆமாம்' என்றேன். 'பார்த்து வெகுநாட்களாகிவிட்டது அடையாளம் தெரியவில்லை' என்று கூறிக்கொண்டே டாக்டரை நெருங்கிப் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய வெளியீடுகள் பற்றி விரிவாகப் பேசியவர், விழாவில் வெளியிடப்படவிருக்கும் அவருடைய நூலான 'மங்கலம் அருளும் மகாகாளி' பற்றிப் பேசும் போது, 'என்னுடைய பணி ஒரு தொகுப்புதான்; அதில் ஆய்வுச் சிந்தனைகள் இருக்காது. உங்களைப் போன்றவர்கள்தான் விரிவாக ஆய்வு செய்யவேண்டும்' என்ற வேண்டுகோளை வைத்து விடைபெற்றுச் சென்றார். குருமகாசன்னிதானத்தைச் சந்திக்க எங்களை அழைத்துச் சென்றனர். அவர் எங்கள் எல்லோருக்கும் ஆசி கூறி வாழ்த்தினார். டாக்டரிடம் அவர் மனைவி, குழந்தைகள் பற்றி நலம் விசாரித்தார். பத்து வருடங்களுக்கு முன்பு குடும்பத்துடன் டாக்டர் அங்கு வந்திருந்ததை நினைவுகூர்ந்தார். பெண்தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் டாக்டர் 30 மணித் துளிகள் உரை நிகழ்த்தினார். பெண்தெய்வ வழிபாடு சிந்துவெளிக் காலத்தில் வளர்ந்திருந்தமைக்கான ஆதாரங்களை விளக்கி, சங்க காலத்தில் கொற்றவை பெற்றிருந்த சிறப்புகளையும் சிலப்பதிகாரத்தில் கொற்றவையின் தோற்றப் பொலிவு வண்ணிக்கப்பட்டிருப்பது பற்றியும் விரிவாகப் பேசியதோடு, உமையின் வருகையால் பல்லவர் காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் சோழர் காலத்தில் கொற்றவை தனி இடம்பெற்றுச் சிறந்து விளங்கியமையையும் விவரித்துக் கூறினார். ![]() சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் பட்டம் ஏற்று இருபத்தைந்து ஆண்டுகள் அன்று நிறைவுறுவதால், அந்த குருபூசை நாளில் பதின்மூன்று அறிஞர் பெருமக்களை, அவரவர் துறைகளில் அவர்கள் சிறந்து விளங்குவதைப் பாராட்டி, வாழ்த்தி விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கும் நிகழ்ச்சி இரவு ஒன்பது மணிக்கு அமைந்தது. திருமடவளாகத்தில் கோயில் கொண்டுள்ள குருமூர்த்தத்தின் திருமுன் முன்பு இவ்விழா நடந்தேறியது. அதில் நமது டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்களுக்குப் பட்டாடையும் உருத்திராக்க மாலையும் அணிவித்து, 'தொல்லியல் தோன்றலார்' என்ற விருது வழங்கிச் சிறப்பித்தார் குருமகாசன்னிதானம். இது டாக்டரின் உழைப்பிற்கும் உண்மைத்தன்மைக்கும் கிடைத்த இருபத்தெட்டாவது விருதாகும். ஏப்ரல் 21 அன்று அறுபது வயது நிறைவு பெறும் டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்கள் மேலும் பல உயர்ந்த, சிறந்த விருதுகளைப் பெற்றுப் பல்லாண்டு வாழ வாழ்த்துவோம். 1 ஸ்வஸ்திஸ்ரீ ராஜேந்த்ர ராஜஷ்ய மகுடச்ரேணி ரத்நேசு ஸாஸனம் ஏதத் ராஜேந்த்ர சோளஸ்ய பரகேஸரிவர்ம்மண: திருமன்னி வளர இருநிலமடந்தையுங் போர் செயப்பாவையுஞ் சீர்தனிச் செல்வியுந் தன்பெருந்தேவியராகி இன்புற நெடிதிய 2 லூழியு ளிடைதுறைநாடுந் துடர்வனவேலிப் படர் வனவாசியுஞ் சுள்ளிச் சூழ்மதிட் கொள்ளிப்பாக்கையுநண்ணற் கருமுரண் மண்ணைக் கடக்கமும் பொருகடலீழத்தரையர் தம் முடியும் ஆங்கவன்றேவியரோங்கெழில் 3 முடியும் முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த சுந்தரமுடியும் இந்திரனாரமுந் தெண்டிரை ஈழமண்டல முழுவதும் எறிபடைக் கேரளன் முறைமயிற்ச் சூடும் குலதனமாகிய பலர் புகழ் முடியுஞ் செங்கதிற் மா 4 லையுஞ் சங்கதிர் வேலைத் தொல்பெருங்காவல் பல்பழந் தீவுந் மாப்பெருந் தண்டாற் கொண்ட கோப்பரகேஸரிவர்ம்மரான ஸ்ரீராஜேந்த்ர சோழ தேவர்க்கு யாண்டு ஏழாவது கஷத்ரியசிகாமணி வளநாட்டு திருநறைஊர் நாட்டு பழை 5 யாறான முடிகொண்ட சோழபுரத்து பள்ளிப்படை பஞ்சவன் மாதேவி ஈசுவரத்து மாதேவர்க்கும் இத்தேவர் பலபணி நிவந்தக்காறர்க்கும் வேண்டும் நிவந்தங்களுக்கு இட்ட இன்னாட்டு சிற்றாடி திருவுலகளந்தப 6 டி நிலன் ஐம்பத்தேழேய் முக்காலேய் ஒருமாவரைக் காணிக் கீழ் இருமாவரை அரைக்காணிக் கீழ் மூன்றுமாவினால்க் காணிக்கடன் இராஜகேசரியால் னெல்லு ஐயாயிரத்து நானூற்றிருபத்தெண்கலனேய் இருதூணிப் பதக்கு முன்னா 7 ழி ஆழாக்கு இது நிச்சயித்து நிவந்தம் செய்த னெல் மூவாயிரத்து நானூற்று அறுபத்தெண்கலனே ஐங்குறுணியும் இத்தேவர்க்கும் இத்தேவர் பலபணி நிவந்தக்காரர்க்கு நிவந்தஞ் செய்தபடி பங்கு ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு நெல்லுப் பதக்காக பங்கு ஒன்றுக்குத் திருஉலகளந்தபடி நிலன் வேலியாக 8 பங்கு வழி கல்லில் வெட்டுவிக்கவென்று உய்யக்கொண்டார் வளநாட்டு வெண்ணாட்டுக் கேரளாந்தக சருப்பேதிமங்கலத்து மாராயன் அருமொழியான உத்தமசோழ பிரஹ்மமாராயன் சொல்ல இத்தேவர்க்கு ஸ்ரீகாரியஞ் செய்கின்ற கஷத்ரியசிகாமணி வளநாட்டுச் செற்றூர்க் கூற்றத்து மருதத்தூ 9 ருடையான் வெண்காடன் கோவந்தையும் இம்மடபதி லகுளீஸ்வர பண்டிதரும் கண்காணியாக கல்லில் வெட்டியது உடையார்க்கு மூன்று சந்திக்கும் திருவமுது அரிசி குறுணி நானாழியும் அத்தைச்சாமத்துக்கு அரிசி நானாழியும் உமாசகிதர்க்கு மூன்று ஸந்திக்குந் திருவமுது அரிசி அறுநாழியும் கண 10 வதியார்க்கு சந்தி ஒன்றுக்கு திருவமுது அரிசி ஒரு நாழியும் சந்திரசேகர தேவர்க்கு சந்தி ஒன்றுக்கு திருவமுது அரிசி இருநாழியும் பெலிக்கு அரிசி நாழியும் ஆக நாள் 1க்கு அரிசி முக்குறுணி முன்னாழிக்கு ஐஞ்சிரண்டு வண்ணத்தால் குறுகூலி உள்ப்பட நெல்லு இருதூணி முன்னாழி உரியும் நெ 11 ய்யமுது உடையார்க்கு உழக்காழாக்கே இருசெவிடரையும் உமாசகிதர்க்கு முச்செவிடே முக்காலும் சந்திரசேகர தேவர்க்கு அரையே அரைக்கால் செவிடும் கணவதியார்க்கு அரையே அரைக்கால் செவிடும் ஆக நாள் 1க்கு நெயமுது உரியே ஒரு செவிடரைக்கு நெய் நாழிக்கு நெல் . ஆக நெல் பதக்கிருநா 12 ழியும் பருப்பமுது உடையார்க்கு முழக்கேய் ஆழாக்கும் உமாசகிதர்க்கு உழக்காழாக்கும் சந்திரசேகர தேவர்க்கு ஆழாக்கும் கணவதியார்க்கு ஆழாக்கும் பருப்பமுது நாழி உரிக்கு பருப்பு நாழிக்கும் நெல் முன்னாழியாக நானாழி உரியும் கறியமுது உடையார்க்கு நெல் முன்னாழி உரியும் உமாசகிதர்க்கு நெல் மேற்கு 13 நாழி உரியும் சந்திரசேகர தேவர்க்கு நாழி உரியும் கணவதியார்க்கு நெல்லு உரியும் ஆக கறியமுதுக்கு நெல் அ - - தயிரமுது உடையார்க்கு நாழிமுழாக்கும் உமாசகிதர்க்கு முழாக்கும் சந்திரசேகர தேவர்க்கு உழக்கும் கணவதியார்க்கு உழக்கும் ஆக தயிர 14 முது முன்னாழிக்கு இரட்டிநாழி நெல் அறுநாழியும் திருவமுதட விறகுக்கு உடையார்க்கு நெல் ஐஞ்நாழி உழக்கு உமாசகிதர்க்கு நெல் இருநாழி உழக்கும் சந்திரசேகர தேவர்க்கு நெல் முழக்கும் கணவதியார்க்கு நெல் முழக்கும் ஆக விறகுக்கு நெல் குறுணி ஒரு நாழியும் அடைக்காய் அமுது உடை 15 யார்க்கு இருவது வெற்றிலை நாற்பதும் உமாசகிதர்க்கு பன்னிரண்டு வெற்றிலை இருபத்து நாலும் சந்திரசேகரதேவர்க்கு ஆறும் வெற்றிலை பன்னிரண்டும் கணவதியார்க்கு ஆறு வெற்றிலை பன்னிரண்டும் ஆக வெறுங்காய் நாற்பத்து நாலுக்கும் வெற்றிலை எண் 16 பத்தெட்டுக்கும் நெல் அறுநாழி உரியும் கறியமுதுக்கு மிளகு இரு செவிடரைக்கு நெல் இரு நாழியும் உப்பமுதுக்கு நாள் 1க்கு நெல் உரியும் திருநொந்தாவிளக்கு மூன்றுக்கு எண்ணெய் முழக்கும் ஸந்தி விளக்கு சிறுகாலை எட்டும் உச்சம்போது எட்டும் இராபதினாறும் ஆக ஸ 17 ந்தி விளக்கு முப்பத்திரண்டுக்கு எண்ணை நாழியும் ஸ்ரீபலிக்கு மூன்று சந்தியும் எரியுங் கைவிளக்கு எட்டுக்கு எண்ணை உரியும் திருமஞ்சனபாட்டுக்கும் திருவோலக்கத்துக்கும் இரவு எரியும் பந்த விளக்கு 2க்கு எண்ணை உழக்கும் ஆக எண்ணை இருநாழி உரிக்கு எண் 18 ணை நாழிக்கு நெல் தூணியாக நெல் இருதூணிப்பதக்கும் ஆக நாள் 1க்கு நெல்லு இருகலனே குறுணியாக நாள் முன்னூற்றருபதுக்கு நெல் எழுநூற்றைம்பதின் கலம் திருமெய்ப்பூச்சுக்கு நாள் ஒன்றுக்கு சந்தணம் அரைப்பலமாக எழுனூற்றறுபதுக்கு சந்தணம் நூற்றெண்பதி தெற்கு 19 ன் பலம் இது காசு 1க்கு சந்தணம் முப்பதின் பலமாக காசு ஆறுக்கு காசு 1க்கு நெல்லு நாற்கலமாக நெல்லு இருபத்துநாற் கலம் திருப்புகைக்கு நாள் 1க்கு குங்குலியம் கைசாக நாள் 360க்கு குங்குலியம் தொண்ணூற்று பலத்தால் காசு காலுக்கு நெல்க் கலம் சங்கிரா 20 ந்தி 1க்கு படிமேலேற்றம் திருவமுது திருவிளக்கு நெய் தயிர் கறி விறகு அடைக்காயமுதுக்கும் ஸ்நபந த்ரவ்யமும் புடவையும் உள்ளிட்ட பல விசத்துக்கு நெல் நாற்கலனே ஐங்குறுணி உழக்காக ஆண்டுவரை சங்கிராந்திக்கு நெல் ஐம்பத்து முக்கலனே மு 21 ன்னாழியும் உடையார் ஸ்ரீஇராஜேந்த்ர சோழதேவர் திருநாளான திருவாதிரை திருநாள் 1க்கு திருவிழா எழுந்தருள திருப்பள்ளித்தாமமும் திருவமுது திருவிளக்கெண்ணையும் திருப்பள்ளிச்சிவிகை காவுவார்க்கு - - நெல் இருகலனேஇருநாழி உழக் 22காக ஆண்டுவரை திருவாதிரை திருநாள் 12ம் நம்பிராட்டியார் இரைவதி திருநாள் 12ம் ஆகத் திருநாள் 24க்கு நெல் நாற்பத்தெண்கலனேதூணிப்பதக்கு அறுநாழியும் புதியிதமுது செய்யவும் அ - - க்கு நெல் பதினைங் 23 கலம் கார்த்திகைக் கார்த்திகை விளக்கீட்டுக்கு எண்ணைக்கும் திருவிளக்குச் சீலைக்கும் நெல்லு பதினாற் கலமும் திருப்பரிசட்டத்துக்குந் தருநமனிகைக்குந் திருவுத்திரியத்துக்குந் திருமேற்கட்டிக்கும் திருவிதானத்துக்கும் திருப்பள்ளித்தாமத்துக்கும் ஆண்டு 24வரை நெல் ஐம்பதின் கலம் திருவிழாவுக்கு கண்டு காட்சியால் அழிவு நெல் இருநூற்றுக் கலம் புதுக்குப்புறத்துக்கு ஐஞ்ஞ்ூற்று நாற்பத்தைங்கலனே எழு குறுணி ஐஞ்ஞாழி உழக்கு ஆக திருமுற்றத்து அழியும் நெல் ஆயிரத்து முன்னூற்றெ h 25 ரு கலனே பதக்கறுநாழி உழக்கும் இவையிற்றுக்குக் கலத்துவாய் குறுணியாக சுமைகூலி நெல் நூற்றெண்கலனே ஐங்குறுணி ஒருநாழி முழக்கும் ஆக சுமை கூலி ஏற்றி நெல் ஆயிரத்து நானூற்றைம்பதின் கலனே இருதூணியினால் பங்கு இருபத்து மூன்றே ஒன்பது மா முக்காணி அரைக்கா 26 ணிக் கீழ் ஒருமாவரை அரைக்காணிக் கீழ் மூன்று மா சத்தாத்துண்ணும் மகாவ்ரதி 1 வனுக்கு பூஸ்வரண அபராணம் உண்ண நாள் 1க்கு நெல் குறுணி நானாழியாக பிடாரர்கள் ஐவர்க்கு நாள் 1க்கு நெல் எழு குறுணி நானாழியாக ஆண்டுவரை நெல் இருநூற்றிருபத்தைங் கலமும் இவையிற்றுக்கு இக்கலத்துவாய் 27 காணியாக சுமை கூலி நெல் பதினெண் கலனே இருதூணிக் குறுணியும் ஆக சுமை கூலி ஏற்றி நெல் இருநூற்று நாற்பத்து முக்கலனே இருதூணி குறுணியினால் பங்கு நாலே மாகாணி மடமுடைய லகுளீசுவர பண்டிதற்கு ஆசார்ய்யபோகம் நாள் 1க்கு நெல் தூணியாக ஆண்டுவரை நெல் நூற்றிருபதின் கலத்தால் 28 பங்கு இரண்டு திருவாராதினை செய்யும் பிடாரன் 1வனுக்கு நாள் 1க்கு நெல் பதக்கு நானாழியாக ஆண்டுவரை நெல் எழுபத்தைங்கலத்தால் பங்கு ஒன்றேகால் சிவபிராமணன் கெளசிகன் பரதன் திரிபுராந்தகன் மாண் இரண்டரையும் கெளசிகன் பரதன் நாராயணன் மாண் இரண்டரையும் ஆக 29 மாண் அஞ்சுக்கு நிச்சம் நெல் ஐங்குறுணியாக ஆண்டுவரை நெல் 150 கலத்துக்கு பங்கு இரண்டரையும் கணக்கு அரையன் மதுராந்தகனான சோழப் பெருங்காவிதிக்கு நாள் 1க்கு நெல் முக்குறுணியாக ஆண்டுவரை நெல் 90 கலத்துக்கு பங்கு ஒன்றரையும் பண்டாரி மருத்தூருடையான் வெண்காடன் கோவந்தை 30 க்கு நாள் 1க்கு நெல் நாள் 1க்கு குறுணி ஆக ஆண்டுவரை நெல் 90 கலத்துக்கு பங்கு ஒன்றரையும் திருமெய்க்காவல் வெண்காடன் பொன்னம்பலத்துக்கு நாள் 1க்கு நெல் முக்குறுணியாக ஆண்டுவரை நெல் 90 கலத்துக்கு ஆக பங்கு ஒன்றரையும் ஸிவண்ணன் சாண்டில்யன் நாராயணன் பட்டாதித்தநுக்கு நாள் 1க்கு நெல் தூணியாக ஆண்டுவரை நெல் 90 கலத்துக்கு 31 - - னுக்கு நிசதம் . . . . பதக்கு ஆக ஆண்டுவரை நெல்லு பதின் கலத்துக்கு தொறம் பங்கு ஒன்றும் உவச்சுக் கூத்தன் (ஒற்றிக்கு) ஆள் ஒன்றுக்கு நெல் ஐங்குறுணியாக உவச்சு கொட்டும் ஆள் ஆறுக்கு நிசதம் நெல்லுத் தூணி 32 ப் பதக்கு ஆக ஆண்டுவரை நெல்லு இருநூற்றெண்பதின் கலத்துக்குப் பங்கு மூன்றும் உவச்சு அரவணையான் ஏகவீர(னுக்கு ஆள் ஒன்று)க்கு நெல்லு குறுணியாக உவச்சு கொட்டும் ஆள் ஆறினுக்கு நிசதம் நெல்லு குறுணி பதக்காக ஆண்டுவரை நெல்லு நூற்றெண்பதின் கலனுக்கு பங்கு மூன்று 33 ம் அரையன் மதுராந்தகனான சோழப் பெருங்காவிதிக்கு காவிதிமை செய்வான் 1க்கு நெல் குறுணி ஆக ஆண்டுவரை - - பங்கு அரையும் குசவன் கண்ணன் திருவடிகளுக்கு நாள் ஒன்றுக்கு நெல்லு பதக்கு ஆக ஆண்டுவரை நெல்லு அறுபதின் கலனுக்கு பங்கு ஒன்றும் 34 திருவலகு திருமெழுக்கு இட பரதன் திரிபுராந்தகனும் பரதன் நாராயணனும் மாண் ஒன்றுக்கு நிசதம் நெல்லு குறுணி ஆக ஆண்டுவரை நெல்லு முப்பதின் கலத்துக்கு பங்கு அரையும் (கல்வெட்டு முற்றுப்பெறவில்லை) this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |