http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 46
இதழ் 46 [ ஏப்ரல் 21, 2008 ] இரா.கலைக்கோவன் மணிவிழா சிறப்பிதழ் இந்த இதழில்.. In this Issue.. |
டாக்டர் இரா. கலைக்கோவன். இப்பெயர் திருச்சி மக்கள், தமிழக மருத்துவர்கள், வரலாற்று உணர்வு பெற்றவர்கள் ஆகிய இவர்களில் பெரும்பாலோருக்கும் தெரிந்த பெயர். எழுத்து, பேச்சு, கல்வெட்டு, கோயில் கட்டடக்கலை, சிற்பம், மருத்துவம் போன்ற எண்ணற்ற கலைகள் எல்லாம் ஒன்று திரண்டு கலைமகளாய் உருவெடுத்துக் குடிகொண்ட இக்கலைக்கோவைப்பற்றியும் அவருடைய புத்தகங்கள் பற்றியும் அவருடன் ஏற்பட்ட வரலாறு தொடர்பான பயணங்கள் பற்றியும் நிறைய எழுதலாம். இவர் அரிய மனிதர் என்று சொல்லும் அளவிற்கு மனிதனுக்குத் தேவையான அடிப்படைக் குணங்கள் ஒருங்கே அமையப்பெற்ற குணாளராய்க் காணப்படுகிறார்.
வலஞ்சுழி வளாகத்தில் இவருடன் வலம் வரும் போது ஏற்பட்ட நட்புணர்வு, இவரின் அன்பு, பண்பு, பாசம், நேசம், எளிமை, அடக்கம், நடுநிலைமை, இனியவை பேசல் என்று ஒவ்வொன்றாய்க் கண்டு வியந்து, குறளை நினைவூட்டும் விதமாய் அமைந்திருக்கிறது. எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொண்ட இக்கலைஞர் வலஞ்சுழியில் ஆருயிர் அன்பர் திரு. சீத்தாராமனின் பணியாளர் திரு.ரவி என்பவர் புகையிலை உபயோகப்படுத்துவதைப் பார்த்த டாக்டர் "ரவி இப்பழக்கத்தை உடனே நிறுத்திவிடுங்கள், இப்பழக்கம் உங்கள் உடலை கொஞ்சம் கொஞ்சமாய் நஞ்சாக்கிவிடும், உங்களை நம்பி உங்கள் அன்புக்குடும்பம் உள்ளது" என்று அறிவுறுத்தினார். புகையிலை உபயோகப்பவர்கள் எல்லார்க்கும் இப்பழக்கம் கெடுதல் என்று தெரியும். இருந்தபோதிலும் இவரும் இவர் குடும்பமும் நல்ல நிலையில் இருக்கவேண்டும் என்ற நினைவோடு, பணியாளர்தானே? நமக்கென்ன? என்று இராமல் ரவியிடம் அறிவுறுத்திய இவரின் அன்பு அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு என்ற குறளை நினைவுபடுத்துகிறது. திருச்சி மாவட்டம் பட்டூர் என்ற ஊரில் உள்ள கோயிலின் காவலர் திரு.நாகராஜன் என்பவர் உடல் நலக்கோளாறினால் கை கால்கள் சரிவரச் செயல்படாத நிலையில் வாழ்க்கையை வறுமையோடு நகர்த்தி வந்தார். கோயில் ஆய்விற்காக இக்கோயிலுக்குச் சென்றபோது இவரின் நிலை கண்டு இரங்கிப் பொருளுதவி செய்து, இவரைத்தன் மருத்துவமனைக்கு அழைத்துவந்து காவலராக வேலை கொடுத்தும் இவர் குடும்பத்தினரைத் தன் மருத்துவமனை வளாகத்தில் குடியமர்த்தியும் அவரின் இரண்டு குழந்தைகளின் கல்விக்கும் ஏற்பாடு செய்த கல்விக்காவலர். இக்குழந்தைகளின் கல்விச்சான்று பெறப் பிரச்சினை எழுந்தபோது பிறர் உதவி கொண்டு அச்சான்றினைப் பெற்றுத்தந்த பெருந்தகையாளர். அவ்வப்போது பொருளுதவி செய்யும் இவரின் ஈகை குணம் ஈத்துவக்கும் இன்பம் அரியார்கொல் தாமுடைமை வைதிழக்கும் வண்க ணவர் என்ற குறளை நினைவுபடுத்துகிறது. திருச்சி மாவட்டம் கீழையூர் அவனி கந்தர்ப்ப ஈஸ்வரகிரகம் என்ற கோயிலுக்கு ஆராய்ச்சி நிமித்தமாகப் பலமுறை சென்றபோது அக்கோயிலின் காவலர் திரு. கணேசன் என்பவர் அவ்வப்போது சிறு சிறு உதவிகளை டாக்டருக்குச் செய்து வந்தார். இக்காவலருக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்காமல் கால தாமதமாகி வருவதை அறிந்து தனது முயற்சியினால் அக்காவலருக்குப் பதவி உயர்வு பெற்றுக்கொடுத்த செய்நன்றியறிதல் திணைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயந்தெரி வார் என்ற குறளை நினைவுபடுத்துகிறது. தன்னைப்பற்றியோ தன் கருத்துக்களைப்பற்றியோ தவறாக விமர்சிப்பவர்களிடம் நேரிலோ அல்லது அவர்களைப்பற்றி மற்றவர்களிடம் பேசும் போதோ சிறிதும் மனத்தளர்ச்சி அடையாமல் எதையும் பொருட்படுத்தாமல் இனிதாகப்பேசும் இவரின் பொறையுடைமை அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை என்ற குறளை நினைவுபடுத்துகிறது. வலஞ்சுழியில் கல்வெட்டுப் படிப்புப் பணியில் இருந்த போது இக்கோயில் திருப்பணி தொடர்பான ஆய்விற்கு வருகை புரிந்த இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆணையாளர் இவர் இருக்குமிடம் தேடி வந்து, நான் உங்கள் தீவிர ரசிகன். உங்கள் புத்தகங்கள் என்னைக் கவர்ந்துள்ளன. இங்கு உங்களுக்கு என்ன தேவையோ அதை இக்கோயிலிலுள்ளோர் செய்வர் என்று கூறும் அளவிற்குச் செல்வாக்குப் படைத்திருந்தும் அச்செல்வாக்கினைப் பலநிலைகளில் தனக்காகப் பயன்படுத்த வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டும், ஒருபோதும் பயன்படுத்தாமல் இருக்கும் இவரது அடக்கமுடைமை அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் என்ற குறளை நினைவுபடுத்துகிறது. விருந்தோம்பல் என்பது சிலரின் வீட்டில்தான் சிறக்கும். இவரின் வீட்டில் சாப்பிட்டுச் செல்லாத வரலாற்று அறிஞர்களோ, ஆர்வலர்களோ இல்லை என்று சொல்லலாம். இவரது விருந்தோம்பல் வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று என்ற குறளை நினைவுபடுத்துகிறது. தான் பெரிதும் மதிக்கும் மற்றும் போற்றும் கல்வெட்டு அறிஞர் திரு கூ.இரா.சீனிவாசன் அவர்களின் ஆய்வில் உள்ள பிழைகளைக் கண்டபோது அது தவறு எனத் தயங்காமல் சுட்டிக்காட்டிய இவரது நடுவுநிலைமை தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின் என்ற குறளை நினைவுபடுத்துகிறது. இப்படி இவரின் குணங்களை ஒவ்வொன்றாகச் சொல்லச்சொல்ல இக்கட்டுரை நீளும். கலைமகளின் தலைமகனாக விளங்கும் கலைக்கோ குறள் வழி வாழும் குணாளராக வாழும் இவரது வாழ்க்கை குறைவில்லா வளம் பெற்று நீண்டநாள் வாழ இறைவன் அருள்வானாக. அன்புடன் பால.பத்மநாபன் this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |