http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 49

இதழ் 49
[ ஜூலை 16 - ஆகஸ்ட் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

ஐந்தாம் ஆண்டை நோக்கி...
வாள் நிறுத்தி வணங்கும் இணையர்
திரும்பிப் பார்க்கிறோம் - 21
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 3
காதல் எதிரிகள் - சில நிகழ்வுகள்
Virtual Tour On Kundrandar Koil - 1
Airavati - Preview of Mahadevan Section
Airavati - Preview of Tamil Section
Airavati - Preview of English Section
அவர் - மூன்றாம் பாகம்
Silpis Corner (Series)
Silpi's Corner-05
திருமணம் = இராமன்?!
இதழ் எண். 49 > இதரவை
அவர் - மூன்றாம் பாகம்
மு. நளினி
தொடர்: அவர்

பழுவூர்க் கோயில்களை நாங்கள் ஆய்வு செய்யத் தொடங்கியபோது பழுவேட்டரையர் மரபுவழியை மட்டும் ஒர் இயலாக உருவாக்கிக் கொள்வது என்றும் அந்த இயல் வளர்மதியின் ஆய்வேட்டில் இடம்பெறுவது என்றும் முடிவு செய்தோம். முதலில் வளர்மதி ஆய்வேட்டிற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட அவனிகந்தர்ப்ப ஈசுவர கிருகத்தை விரிவான அளவில் ஆய்வு செய்தோம். அப்போதுதான், அக்கோயிலின் சிற்பம், கல்வெட்டு, கட்டமைப்பு இவற்றின் வளமை தெளிவாகப் புரிந்தது. அந்த வளாகத்தில் வடவாயில் ஸ்ரீகோயில், தென்வாயில் ஸ்ரீகோயில் எனும் இரண்டு முதன்மைக் கோயில்களும் பல சுற்றாலைக் கோயில்களும் இருந்தன. இரண்டு முதன்மைக் கோயில்களின் சுவர்களிலும் கல்வெட்டுகள் மிக்கிருந்தன. முதல் பயணத்திலேயே நிறைய செய்திகள் கிடைத்தமையால் சிற்பம், கல்வெட்டு, கட்டமைப்பு எனும் தலைப்புகளிலேயே அவ்வளாகம் தொடர்பான வளர்மதியின் ஆய்வேட்டை அமைத்துக் கொள்ளலாம் என்று அவர் கருதினார்.

என் ஆய்வுத் தலைப்பாக அமைந்த சிறுபழுவூர் ஆலந்துறையார் கோயில் வளாகத்தின் சிற்பச் செறிவு, அவனியோடு ஒப்பிட்டபோது குறைவான அளவில் இருந்தமையாலும் கட்டமைப்புச் சிறப்புக் கூறுகள் அதிக அளவில் இல்லாமையாலும் நான் தேர்ந்தெடுத்த சிறுபழுவூர்க் கோயில் ஆய்வேட்டில் பழுவேட்டரையர் மரபுவழியை இணைத்துக் கொள்வதுதான் சரியாக இருக்கும் என்று அவர் எண்ணினார். தம் கருத்துக் குறித்து எங்கள் இருவரிடமும் விரிவாக விவாதித்தார். எங்கள் எண்ணங்களையும் கேட்டறிந்தார். வளர்மதிக்கு பழுவேட்டரையர் மரபுவழி தன்னுடைய ஆய்வேட்டில்தான் இடம்பெறவேண்டும் என்ற ஆவல் இருந்தபோதும், அவருடைய காரண, காரிய விவாதத்திற்குப் பிறகு மாற்றத்திற்கு ஒப்புக்கொண்டார்.

அவர் உளம் ஒப்பி மாற்றத்தை ஏற்றுக் கொண்டதாகவே நானும் அவரும் கருதியிருந்தோம். வளர்மதி முதுகலையிலிருந்து என் நெருக்கமான தோழி. எதையும் என்னிடம் மறைத்தவர் இல்லை. இருந்தபோதும் என்ன காரணத்தாலோ மாற்றம் குறித்த தன்னுடைய உண்மையான எண்ணத்தை அவர் என்னிடம் வெளிப்படுத்தவே இல்லை. ஆய்வுகள் முடிந்து ஆய்வேடுகளைக் கல்லூரியில் ஒப்படைக்கும் வரை விருப்பம் இல்லாமல்தான் வளர்மதி இந்த மாற்றத்திற்கு ஒப்புக் கொண்டார் என்பது எனக்குத் தெரியாது. வளர்மதி என்னிடம் தன் விருப்பத்தை வெளிப்படையாகச் சொல்லியிருந்தால் அவரிடம் கூறி வளர்மதிக்கே அந்த இயல் அமையுமாறு செய்திருப்பேன். அல்லது, "எனக்கு இந்த மாற்றத்தில் ஒப்புதல் இல்லை" என்று வளர்மதியே அவரிடம் நேரடியாகக் கூறியிருக்கலாம். வளர்மதிக்கு வருத்தம் நேராமல் அவர் ஏதாவது செய்திருப்பார். இரண்டும் இல்லாமல், இந்த மாற்றத்தினால் ஏற்பட்ட துன்பத்தை வளர்மதி மனதிலேயே வைத்துக் கொண்டு வருத்தப்பட்டதோடு மட்டுமல்லாமல், ஆய்வேட்டை ஒப்புவித்துத் தேர்வு முடிந்த உடன் என்னுடன் தொடர்பு கொள்வதை நிறுத்திக்கொண்டார். பலமுறை முயன்றும் வளர்மதியின் கருத்து மாறவில்லை. எங்களுக்குள் ஏற்பட்ட நட்பு முறிவை அறிந்த அவர் எனக்காக மிகவும் வருத்தப்பட்டார். ஆனால் அதே சமயம், "ஆய்வேட்டில் ஓர் இயலில் ஏற்பட்ட மாற்றத்திற்காக ஒரு நட்பு முறியுமானால் அது நட்பே அன்று" என்று எனக்கு ஆறுதல் கூறினார்.

அவர் எப்போதும் வெளிப்படையாகப் பேசுபவர். யாருக்கு எது நன்மை தருமோ அதைத் தயங்காமல் கூறி வழிகாட்டுபவர். வேண்டியவர், வேண்டாதவர் என்று இதுநாள்வரை பார்த்தறியாதவர். இவை எல்லாம் அப்போதே எனக்கும் வளர்மதிக்கும் புரிந்திருந்தன. இவை குறித்து நாங்கள் பல முறை பேசியிருக்கிறோம். அவருடைய வெளிப்படையான தன்மை எல்லா அறிஞர்களுக்கும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றுகூட நான் நினைத்ததுண்டு. அவரைப் பற்றி என்னை விட நன்கு புரிந்திருந்தும் என்ன காரணத்தாலோ அவர் எனக்குச் சலுகை காட்டியதாகக் கருதி வளர்மதி என்னிடமிருந்து பிரிந்தார். நெடுங்காலம் அந்தப் பிரிவு என்னை வருத்தியபோதும் அவருடைய வழிகாட்டலும் ஆறுதல் உரைகளும்தான் அந்த வருத்தத்தை என் நெஞ்சிலிருந்து நீக்கின.

பழுவேட்டரையர் மரபுவழியைப் பற்றி விரிவாக எழுதுவதற்கும் காலவரிசைப்படி அதை ஒழுங்குபடுத்துவதற்கும் பழுவூரிலுள்ள அனைத்துக் கோயிகளின் கல்வெட்டுகளையும் நாங்கள் படிக்கவேண்டியிருந்தது. களத்திற்குச் சென்று கல்வெட்டுகளைப் படிப்பதற்கு முன் பழுவூர்க் கல்வெட்டுகள் எந்தெந்த ஆண்டறிக்கைகளில் வெளியிடப்பட்டுள்ளன என்று தேடினோம். நடுவண் அரசு வெளியிட்டுள்ள படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் பட்டியலைப் பார்க்கும்படி அவர் அறிவுறுத்தினார். அந்தப் பட்டியலில் எந்தெந்த ஆண்டுகளில் பழுவூர்க் கோயில்களின் கல்வெட்டுகள் பதிவாகியுள்ளன என்று கவனித்து அவற்றைக் குறித்துக் கொண்டோம். அடுத்து, ஒவ்வொரு கோயிலிலும் எவ்வளவு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன, அவை கோயில்களின் எந்தெந்தப் பகுதிகளில் உள்ளன என்பதையும் தனித்தனியே எழுதிக் கொண்டோம்.

கோயிற் களத்தில், அவர் கட்டக்கலை, சிற்பம் இவை தொடர்பான குறிப்புகள் எடுத்துக் கொண்டிருப்பார். நானும் வளர்மதியும் எங்களுக்குள் கிழக்குச் சுவர், மேற்குச் சுவர் என்று பிரித்துக்கொண்டு கோயிலின் ஒவ்வொரு சுவர்ப்பகுதியிலும் ஒவ்வொரு கல்வெட்டாகப் படித்து, அது எந்த ஆண்டறிக்கையில் எந்த எண்ணின் கீழ்ப் பதிவாகியுள்ளது என்று வரிசையாகக் குறித்துக்கொண்டே வருவோம். நாங்கள் படிக்கும் கல்வெட்டு ஆண்டறிக்கையில் இல்லை என்றால் அது படியெடுக்கப்படாத புதிய கல்வெட்டு என்பதை அறிவோம். அவற்றைக் குறித்துக் கொண்டு உணவு இடைவேளையின்போது அவரிடம் கூறுவோம். ஒவ்வொரு புதிய கல்வெட்டுக்கும் பாராட்டுக் கிடைக்கும். களத்தில் பாராட்டுவதுடன் நின்றுவிடமாட்டார். அடுத்தாற் போல் நாங்கள் சந்திக்கும் அறிஞர்களிடமும் எங்கள் கண்டுபிடிப்புகளைக் கூறி அவர்களும் எங்களைப் பாராட்டுமாறு செய்வார். திரு. மஜீது, திரு. மு. து. சம்பத், திரு. தே. சந்திரன், திரு. எட்மண்ட்ஸ், கல்வெட்டறிஞர் திரு. கே. ஜி. கிருஷ்ணன், திரு. என். சேதுராமன், பேராசிரியர்கள் க. அனுமந்தன், கோ. வேணிதேவி என்று பழுவூர் ஆய்வுகளின்போது எங்களைப் பாராட்டியர்களின் பட்டியல் மிகப் பெரியது.

பழுவூர்க் கல்வெட்டுகள் சிலவற்றின் பாடங்கள் தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 13, 19 இவற்றில் வெளியாகி இருந்தன. தொகுதி 13ல் இராஜகேசரி தொடர்பான கல்வெட்டுகளும் தொகுதி 19ல் பரகேசரி தொடர்பான கல்வெட்டுகளும் இருந்தன. அவை தவிர, பாடம் வெளிவராதிருந்த கல்வெட்டுகள் எல்லாவற்றையும் படிக்கவேண்டியிருந்தது. முதுகலை ஆய்வின்போதே அவரும் திரு. மஜீதும் கல்வெட்டுப் படிக்கும் முறையைக் கற்றுத் தந்திருந்தனர். அதனால், பழுவூர் ஆய்வுகளின்போது நாங்களே முயன்று ஒவ்வோர் எழுத்தாக, ஒவ்வொரு சொல்லாக, ஒவ்வொரு சொற்றொடராக என்று நிதானமாகப் படிக்க ஆரம்பித்தோம். முதுகலையின்போது கல்வெட்டுப் படிப்பது பெரும் தடுமாற்றமாக இருக்கும். அவரைத் திருப்திபடுத்தவேண்டும் என்பதற்காகவே அப்போது படித்தோம். ஆனால், பழுவூர் ஆய்வுகளின்போதுதான் கல்வெட்டு வாசிப்பில் ஆழமான ஈடுபாடு ஏற்பட்டது. தொடக்கக் காலத்தில் அரிதின் முயன்று ஒரு நாளைக்கு ஒன்று, அல்லது இரண்டு கல்வெட்டுகள்தான் படிப்போம். பாடத்தை எழுதி அவரிடம் காட்டுவோம். நாங்கள் எழுதிக் காட்டிய பாடங்களை அந்தந்த கல்வெட்டுகளுடன் ஒப்பிட்டுப் படித்து எங்கள் பிழைகளைச் சுட்டிக்காட்டித் திருத்துவார். திரு. மஜீதுகூட "ஒவ்வொரு கல்வெட்டையும் படிக்கவேண்டுமா? அவர்கள் எழுதும் பாடத்தை அப்படியே வைத்துக் கொள்ளலாமே" என்று கூறுவார். "அவர்கள் எழுதும் பாடத்தை அப்படியே வைத்துக் கொள்ளும் காலம் வரும். அதுவரை ஒப்பிட்டுப் படிப்பதுதான் அவர்களுக்கு நல்லது. வரலாற்றுக்கும் நல்லது" என்று அவர் பதில் சொல்வார். அவருடைய அந்த மறுமொழி என் நெஞ்சில் ஆழமாகப் பதிந்தது. யார், எவர் என்று பார்க்காமல் வரலாற்றுக்கு நல்லதா என்று மட்டுமே பார்த்த அவருடைய சிந்தனை எனக்குப் புதிதாகவும் விருப்பத்திற்கு உரியதாகவும் அமைந்தது. அவருடைய அந்தச் சிந்தனையே வரலாற்றாய்வு மையத்தின் குறிக்கோள் என்பதைக் காலப்போக்கில் நான் உணர்ந்தேன்.

களத்தில் படித்து எழுதும் கல்வெட்டுப் பாடத்தை வீட்டிற்கு வந்து பார்த்தால் அதில் நிறைய சந்தேகங்கள் வரும். அவரிடம் கேட்டால், "அடுத்த முறை கோயிலுக்குச் செல்லும் போது மீண்டும் அந்தக் கல்வெட்டுகளைப் படியுங்கள். ஒரு வாசிப்பில் கல்வெட்டுப் பாடம் முழுமையாகவும் சரியாகவும் அமைந்துவிடாது. எழுத்துக்கள் ஏமாற்றும். புள்ளியில்லாத எழுத்துக்கள், குறில், நெடில் மாற்றம் இல்லாத எழுத்துக்கள் என்பதாலும் பழந்தமிழ்த் தொடர்கள் என்பதாலும் படிக்கும்போது குழப்பங்கள் நேர்வது இயல்பே. கொஞ்சம் இலக்கிய வாசனை இருந்தால் தொடர்கள் எளிதில் வயமாகும். அதனால் அவ்வப்போதேனும் இலக்கியம் படியுங்கள்" என்பார். நாங்களும் அடுத்தாற் போல் கோயிலுக்குச் செல்லும் போது சந்தேகங்ளைச் சரிபார்த்துக் கொண்ட பிறகுதான் அடுத்த கல்வெட்டைப் படிக்கத் தொடங்குவோம். இப்படித்தான் நூற்றுக்கும் மேற்பட்ட பழுவூர்க் கல்வெட்டுகளை ஒன்றரை ஆண்டுகளில் படித்து முடித்தோம்.

எங்கள் கல்வெட்டு வாசிப்பின் தொடக்கக் கால அநுபவங்கள் சுவையானவை. நாங்கள் படித்த கல்வெட்டுகளுள் சில முழுமையற்ற நிலையில் துண்டுக் கல்வெட்டுகளாக இருந்தன. திருப்பணிகளின் காரணமாக அவற்றுள் சில தலைகீழாகப் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றைப் பிற கல்வெட்டுகளைப் படிப்பது போல் படிக்க முடியாது. மசிப்படி எடுத்துப் படிக்கலாம். அல்லது தலைகீழாகக் குனிந்துத்தான் படிக்கவேண்டும். அவர் அடிக்கடி சொல்வார்,"கோயில் ஆய்வு என்பது சுலபமானது அல்ல. நிறைய வித்தைகள் தெரிந்திருக்கவேண்டும். செடி, கொடிகள், முட்புதர்கள் இவற்றைத் தாண்டவும் கட்டமைப்புகளின் காரணமாகக் கல்வெட்டுகள் உள்ள இடம் மிகக் குறுகலான இடமாக மாற்றப்பட்டிருந்தால் அவற்றுள் தவழ்ந்தும் மழைக் காலத்தில் மண்ணின் தன்மையைப் பொருட்படுத்தாமலும் கல்வெட்டுகள் உயரமான இடத்தில் இருந்தால் அப்போது அந்த இடத்தில் என்ன கிடைக்கிறதோ அதைப் பயன்படுத்திக் கொண்டு மேலேறிச் சென்று கல்வெட்டைப் படிக்கவும் நாம் பழகிக் கொள்ளவேண்டும். நம்முடைய வேலைக்குத் தேவையானது என்ன இருக்கிறதோ அதைப் பயன்படுத்திக்கொண்டு நம் கடமையைச் செய்யவேண்டும்".

கல்வெட்டுகள் தலைகீழாக இருந்தால் படிப்பது கடினம்தான். ஆனால் எப்படியாவது படித்தாகவேண்டுமே. தலைகீழாகத் தொங்குவது இயலாதென்பதால் முடிந்தவரை குனிந்து கொண்டுதான் அவற்றைப் படித்தோம். அவர் மருந்துவர் என்பதால் தேவைப்படும்போதெல்லாம் அறிவுரைகள் கூறி எங்கள் உடல் நலத்திற்குத் துன்பம் வராதபடி பார்த்துக்கொள்வார். "தலைகீழாகக் குனிந்து படிப்பதில் தவறில்லை. நமக்குப் பழக்கம் இல்லாமையால்தான் கடினமாக இருக்கிறது. அவ்வப்போது சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு பிறகு படிக்கத் தொடங்கலாம். தொடர்ந்து குனிந்து படிப்பதுதான் கழுத்து வலி உண்டாக்கும். அளவாகக் குனிந்து தேவைப்படும்போது நிமிர்ந்து கழுத்துக்குத் துன்பம் இல்லாமல் கல்வெட்டுப் படிக்கலாம்" என்றெல்லாம் கூறி நாங்கள் கடினம் என்று நினைக்கும் செயல்களையும் கடினமாக இல்லாதவாறு செய்துவிடுவார்.

பொதுவாக தட்சிணாமூர்த்தி, கொற்றவைக் கோட்டங்களின் முன் பிற்காலத்தில் மண்டபங்கள் கட்டி, அந்தக் கோட்டங்களின் கீழுள்ள தாங்குதளப்பகுதியில் தொடரும் கல்வெட்டுகளைப் படிப்பதை கடினமான செயலாக்கிவிடுவர் திருப்பணியாளர்கள். கருந்திட்டைக்குடி வசிஷ்டேசுவரர் கோயில், புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில், திருச்செந்துறை சந்திரசேகரர் கோயில், உடையாளூர்க் கைலாசநாதர் கோயில் இவற்றில் கட்டடப்பகுதிக்குக் கீழ் மறைந்திருந்த கல்வெட்டுகளைக் கண்டுபிடித்ததோடு, அவற்றை அங்கிருந்த மிகச் சிறிய இடைவெளிக்குள் தவழ்ந்து சென்று படித்திருக்கிறோம். அப்படிப் படிக்கும் நேரங்களில் அவர் எந்த வேலை இருந்தாலும்அதை விட்டுவிட்டு வந்து நாங்கள் கல்வெட்டைப் படிக்கப் படிக்க அவர்தான் எழுதுவார். அதற்குக் காரணங்கள் இருந்தன. மிக துன்பப்பட்டுப் படிக்கும்போது அவசரத்தில் ஏதாவது தவறாகப் படித்துவிடுவார்களோ என்பது ஒன்று. அந்தக் கடினமான சூழ்நிலையைப் படிப்பவர் உணராதபடி செய்யவேண்டுமே என்பது மற்றொன்று. ஒவ்வொரு வரியைப் படிக்கும்போதும் உற்சாகப்படுத்தி அடுத்த வரியைப் படிக்கத் தூண்டுவதோடு, வரலாற்றை எழுதுவதற்காகப் படிக்கிறோம் எந்தத் துன்பத்தையும் பொறுத்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் மேலிடும்படி ஏதாவது சொல்லி நம் பணிச் சுமையைக் குறைப்பதில் அவர் வல்லவர்.

நாங்கள் ஆய்வு செய்த காலத்தில் பழுவூர்ப் படைவிடை ஈசுவரத்தின் தாங்குதளப் பகுதி பூமிக்குள் மறைந்திருந்தது. அந்தப் பகுதியில் கல்வெட்டுகள் இருப்பதை கண்டறிந்தும் படிக்கமுடியாத சூழல். ஊர் மக்களிடம் வேண்டி மண்வெட்டி, கடப்பாரை இவற்றை வாங்கி, நாங்களே அந்தப் பகுதி மண்ணை அகற்றிக் கல்வெட்டுகளைப் படித்தோம். சில போதுகளில் கோயில்களின் கட்டமைப்புச் சிற்பச் சிறப்பு இவற்றைக் காண மரம், செடி, கொடிகளுடன் நாங்கள் பேராடுவதைப் பார்த்து ஊர்மக்களே அவற்றை நீக்கி உதவியுள்ளனர்.

குறிப்பாகத் திருப்பட்டூர்க் கோயிலுக்குச் சென்றிருந்தபோது நாங்கள் சிற்பங்களைப் பார்க்க முடியாமல் துன்பப்பட்டதை உணர்ந்த ஊர் இளைஞர்கள் அரிவாளுடன் வந்து செடி, கொடிகளை வெட்டி எங்களுக்கு உதவியது மறக்க முடியாத அனுபவம். அப்படி உதவி செய்தவர்களை அவர் மறக்கமாட்டார். உடனே உதவியவரிடம் உங்கள் பெயர் என்ன? உங்கள் அப்பா பெயர் என்ன என்று விசாரித்து எழுதிக் கொள்வார். அந்த ஊரைப் பற்றிச் செய்தி வெளியிட்டாலோ கட்டுரை எழுதினாலோ அவர்களுடைய பெயர்களைக் கட்டாயம் குறிப்பிடுவார். உதவியவர்களை என்றுமே அவர் மறப்பதில்லை. அதனால்தான் அவர் களப்பணி செய்த எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் கோயிலைச் சேர்ந்தவர்கள் அவரை அன்போடு வரவேற்று வேண்டியன செய்துகொடுக்கிறார்கள். இதை நாங்கள் பலமுறை பார்த்து மகிழ்ந்திருக்கிறோம். மிக எளியவர்களுக்குக்கூட முக்கியத்துவம் தந்து அவர்கள் பணியால்தான் தம்முடைய ஆய்வு தொடர்கிறது என்பதை அவர்கள் உணருமாறு வெளிப்படையாகக் கூறி அவர்களையும் மகிழச்செய்து தாமும்பெருமிதப்படும் அவருடைய உயர்ந்த பண்பு அவரிடம் பயின்ற அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

நாங்கள் பழுவூரில் ஆய்வு செய்த காலத்தில் தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறையின் சார்பில் கீழையூர்க் கோயில்களைப் பராமரித்துக் கொண்டிருந்த திரு. கணேசன் அடிப்படைத் தேவைகள்கூட நிறைவேற்றப்படாத நிலையில் ஏழ்மையில் பரிதவித்துக் கொண்டிருந்தார். தம்முடைய ஒவ்வொரு மாதச் சம்பளத்தையும் வாங்க அவர் திருச்சிராப்பள்ளி செல்ல வேண்டியிருந்தது. கணேசனுக்குச் சம்பளம் மிகமிகக் குறைவு. திருச்சிராப்பள்ளி வந்து செல்லவே சம்பளத்தின் கால்பகுதி செலவாகிவிடும் என்ற சூழ்நிலை. அவருடைய மனைவிக்கு உடல்நலமில்லாமல் இருந்தது. பிள்ளைகளுடன் அவர் கிராமத்தில் இருந்தார். தம்முடைய சொற்ப சம்பளத்தில் கோயிலிலேயே தங்கியிருந்து ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு என்று மிகவும் துன்பப்பட்டுக் கொண்ட்ிருந்த திரு. கணேசனுக்கு அவர்தான் பல மாதங்கள் பேராடித் தலைமை அலுவலகத்திற்கே பல முறை சென்று உரியவர்களிடம் பேசி, திரு. மஜீத், திரு. இராமன், திரு. நடன காசிநாதன், அலுவலகக் கண்காணிப்பாளர் இவர்தம் துணையுடன் திரு. கணேசனுக்கு வரவேண்டிய சம்பள உயர்வுகளைப் பெற்றுத் தந்ததுடன், கணேசனுடைய சம்பளம் பழுவூருக்கே வருமாறு செய்தார். ஒரு காவல் அலுவலர் இவ்வளவு துன்பப்படுகிறாரே என்று மனிதாபிமான அடிப்படையில் கணேசனுக்காக அவர் நிகழ்த்திய அத்தனை உரையாடல்களுக்கும் நான் மெளன சாட்சி. கணேசன் அலுவல் மாற்றமும் சம்பள உயர்வும் பெற்று இடம்மாறிய பிறகு அவரைச் சந்தித்துக் கண்களில் கண்ணீருடன் நன்றி கூறியதை என்னால் மறக்கவே முடியாது.

பழுவூர்க் கல்வெட்டுகளையும் பழுவூர்த் தொடர்பான கட்டுரைகள், புத்தகங்களையும் படித்த நிலையில் பழுவேட்டரையர்களின் மரபுவழியை எழுதத் தொடங்கியபோது நிறையக் குழப்பங்கள் இருந்தன. அவருடன் பேசப்பேச அவை எல்லாம் ஒவ்வொன்றாக நீங்கின. என் ஆய்வேட்டின் முதல் இயலை எழுதிய அந்த அனுபவம் என் வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. வரலாறு எல்லோரும் நினைப்பது போல் வறண்ட விஷயம் அல்ல, உண்மையான வரலாற்றைத் தேடிக் கண்டுபிடிப்பது ஒரு துப்பறியும் நாவல் படிப்பது போல்தான். உண்மைகளுக்கும் பொய்களுக்கும் இடையில் இழந்ததைப் பெறுவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. தேடத் தேடத்தான் பொய்களின் அடையாளம் தெரியும். தேடுவார் உழைப்பிற்கேற்ப உண்மைகள் மேலே வரும். அவர் அடிக்கடி சொல்வார். தட்டாத கதவுகள் திறப்பதில்லை என்று. அது எவ்வளவு உண்மை என்பதை அந்த ஓராண்டின் ஒவ்வொரு நாளும் அனுபவித்து அறிந்தோம்.

முதலில் பழுவேட்டரையர்கள் கேரளத்தில் இருந்து வந்தார்கள் என்பதை உதயேந்திரம், அன்பில் செப்பேடுகளைக் கொண்டு நிறுவினோம். அப்படி நிறுவும்போது ஒவ்வோர் ஆசிரியரும் என்ன கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள், அந்தக் கருத்துக்கள் சரியா? தவறா? சரி என்றால் ஏன் சரி. தவறு என்றால் எதனால் தவறு. உண்மை நிகழ்வு என்ன என்பதை எல்லாம் ஒவ்வொன்றாக எங்களுக்குப் புரியவைத்து, இறுதியில் எங்கள் உரையாடல் அவர் கேள்வி கேட்க நாங்கள் பதில் சொல்லும் படியாக அமையும். அவருடைய கேள்வி, எங்கள் பதில் என்றமைந்த உரையாடல் நாங்களே அந்த குழப்பங்களைத் தீர்த்தது போன்ற உணர்வை எங்களுக்கு ஏற்படுத்தும். ஆனால், உண்மையில் குழப்பங்களைத் தீர்த்தது அவராகத்தான் இருக்கும். எங்கள் முயற்சியாலேயே எல்லாம் நடந்தது என்பது போல எங்களை உணரவைத்து இந்தத் துறையில் வளர்த்தவர் அவர்.

அப்படித்தான் பராந்தகர் மனைவி அருமொழிநங்கை பழுவேட்டரையர் மகள். பழுவேட்டரையர்களான குமரன் கண்டன், குமரன் மறவன், குமரன் மதுராந்தகன் மூவரும் சகோரர்கள். குமரன் மறவனும் நம்பி மறவனும் ஒருவரே. கண்டன் அமுதன் பராந்தகரின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் இறக்கவில்லை; அவர் பராந்தகரின் பதினான்காம் ஆட்சியாண்டுவரை உயிருடன் இருந்தார்; மறவன் கண்டனின் ஆட்சிக் காலம் உத்தமசோழரின் ஒன்பதாம் ஆட்சியாண்டுடன் முடிவடைகிறது;மறவன் கண்டனின் பிள்ளைகள் கண்டன் சத்ருபயங்கரன், கண்டன் சுந்தரசோழன், கண்டன் மறவன்; மறவன்கண்டனுக்குப் பள்ளிப்படைக் கோயில் எடுத்தது கண்டன் மறவன் எனப் பல வரலாற்று உண்மைகளைத் தகுந்த சான்றுகளுடன் நிறுவினோம்.

எந்தக் கட்டுரையாசிரியர் எதைத் தவறாக எழுதி எப்படி மாட்டிக் கொள்ளப்போகிறாரோ என்று நினைத்தபடிதான் ஒவ்வொரு நாளும் நாங்கள் உரையாடலைத் தொடங்குவோம். நாங்கள் நினைத்தவாறே யாராவது ஒருவர் சிக்குவார். அதற்குக் காரணம் அக்கட்டுரையாசிரியர்கள் அல்லது நூலாசிரியர்கள் கல்வெட்டுகள் உள்ள இடங்களுக்கு நேரிடையாகச் சென்று ஆய்வு செய்யாமல் கல்வெட்டுச் சுருக்கத்தையோ அல்லது அவர்களுக்கு முன் எழுதியுள்ளவர்கள் தந்திருக்கும் செய்தியையோ அவை சரியானவையா என்றெல்லாம் ஆராயாமல் நம்பி எழுதுவதால்தான். இரண்டாம் நிலைச் சான்றுகளை ஒருபோதும் நம்பக்கூடாது என்பதை அவர் முதுகலை ஆய்வுகளின் போதே எங்களுக்குப் புரிய வைத்திருந்தபோதும், பழுவூர் ஆய்வுகளின்போதுதான் ஒவ்வோர் ஆசிரியரும் எப்படித் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வரலாற்றை மாற்றி எழுதுகிறார்கள் என்பதை நன்றாக உணர்ந்தோம்.

நக்கன் குமரக்கன் என்பவரைப் பழுவேட்டரையர் மறவன் கண்டனின் மகன் என்று பேராசிரியர் முனைவர் பாலாம்பாள் தம் நூலில் குறித்திருந்தார். நக்கன் குமரக்கனைக் குறிக்கும் கல்வெட்டின் பாடம் வெளியிடப்படவில்லை. கல்வெட்டுச் சுருக்கம் மட்டுமே இருந்தது. அந்தச் சுருக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு நக்கன் குமரக்கன் ஆணா, பெண்ணா என்று கூறமுடியாது. கல்வெட்டின் முழுப்பாடத்யைும் படித்தால்தான் உண்மைச் செய்தியை அறியமுடியும். ஆனால், சுருக்கத்தை மட்டும் வைத்துக்கொண்டு, கல்வெட்டைப் படிக்காத நிலையில் பேராசிரியர் நக்கன் குமரக்கனை பழுவேட்டரைய மன்னராகத் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் அந்தக் கல்வெட்டைப் படித்தபோதுதான் நக்கன் குமரக்கன் என்பவர், கீழையூர்த் தளியில் ஆடல் மகளாக இருந்த மெரிய அரங்கபிரான் என்பவரின் மகள் என்பதை அறிய முடிந்தது. "இத்தளி தேவர் மகள் மெரிய அரங்கபிரான் மகள்" என்பது கல்வெட்டில் தெளிவாக இருந்ததைப் பார்த்தோம். கல்வெட்டுச் சுருக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு கருத்துக் கூறுவது மிகப் பெரும்பிழை என்பதை அன்று நான் உணர்ந்தேன். அவர் ஒரு நாளும் அதைச் செய்யமாட்டார். அனைத்துக் கல்வெட்டுகளையும் படித்த பிறகுதான் ஆய்வில் முழுமையாக ஈடுபடமுடியும். அதனால், ஆய்வேட்டை முடிப்பதற்குச் சிறிது கால தாமதம் ஆகும் என்பதை எல்லாம் எங்கள் ஆய்வுத் தொடக்கத்திலேயே விளக்கமாகக் கூறியிருந்தார்.

அது போல் அவரைத் தேடி ஆய்வு தொடர்பாக வரும் பல ஆர்வலர்களிடம் அவர் வெளிப்படையாக ஆய்வு தொடர்பான நன்மைகளையும்துன்பங்களையும் விளக்க்ிவிடுவார். யார் இவரிடம் கோயில் ஆய்வு செய்வதற்கு உதவி கேட்டு வந்தாலும், முதலில் நிறைய பணம் செலவாகும்; ஏனென்றால் கோயிலுக்குப் பல முறை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும், நிறைய ஒளிப்படங்கள் எடுக்க வேண்டும், ஆய்வு செய்வதற்கு மற்ற ஆய்வேடுகள் போலல்லாமல் காலம் அதிகம் தேவைப்படும், ஆய்வு செய்யும் கோயில் தொடர்பான அனைத்து நூல்களையும் படிக்கவேண்டும். அந்தக் கோயிலுடன் தொடர்புடைய வேறு சில கோயில்களையும் நேரில் சென்று பார்க்கவேண்டும். இவை அனைத்தும் உங்களால் இயலும் என்றால் ஆய்வு மையத்துடன் இணைந்து ஆய்வு செய்வது குறித்து எனக்குத் தடையில்லை என்று விரிவாகப் பேசி அந்த ஆர்வலருக்குக் கோயில் ஆய்வு என்றால் என்ன என்பதைப் புரியவைப்பார். பிறகு, நீங்கள் ஓரிரு வாரங்கள் நன்றாக யோசித்து உங்கள் முடிவைச் சொல்லுங்கள் என்று அவரை அனுப்பி வைப்பார். இதை எல்லாம் கேட்டபிறகு திரும்பிகூடப் பார்க்கமால் சென்றவர்கள் பலர். இப்படித்தான் ஆய்வு செய்யவேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு அவரைப் பின் தொடர்ந்தவர்கள்சிலர்.

(வளரும்)
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.